Nimir EPisode 16
நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காலை 8 மணிக்கு வீட்டு போன் அடித்தது. லலிதா போனை எடுத்தார்.
கவிதா தான் பேசினாள். “வெண்மதி இருக்காளா?” என்று கேட்க
Advertisement
லலிதா “நல்லா எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு இருக்கா.” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே லட்சுமி வெண்மதியை அவள் அறைக்குள் சென்று எழுப்பினார்.
பதறி எழுந்தவள் திரும்ப போனை எடுத்து பார்த்தாள். அது பேட்டரி இல்லாமல் அணைந்து போயிருந்தது.
“கவிதா போன்ல இருக்கா.” என்று லட்சுமி கூறவும் எழுந்து வேகமாக போனை நோக்கி ஓடினாள். அப்போது அவர் முன்பு வந்த பெரியம்மா மீது மோதி விட்டாள்
Advertisement
“வெள்ளிக்கிழமை அதுவுமா எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு குளிக்காம கொள்ளாம தலை குளிச்சிட்டு வர்ற என்மேல இடிக்கிறாயா?” என்று பெரியம்மா கத்த தொடங்க….
Advertisement
அது அவள் காதில் விழவே இல்லை. தொடர்ந்து ஓடி சென்று போனை எடுத்தாள்.
“என்ன மதி? அப்பாயின்மென்ட் ஆர்டர் ஈமெயில் வந்துச்சா?”
“இல்லடி நேத்து மூணு மணி வரைக்கும் பார்த்தேன். வரல.”
Advertisement
“நேத்து நைட் ஒழுங்கா தூங்குனியா மதி?”
“எங்கடி தூக்கமே வரல. காலையில மூணு மணிக்கு தான் எனக்கே தெரியாம தூங்கிட்டேன்.”
“ஏண்டி இப்படி தூங்காம சாப்பிடாம உடம்பை எடுத்துக்கிற? முதல்ல நீ போய் குளிச்சிட்டு சாப்பிடு. அப்புறமா ஈமெயில் செக் பண்ணு. ஒன்பது மணிக்கு மேல தான் இமெயில் வரும். எவன்டி நைட்டெல்லாம் உக்காந்து இனிமேல் போட்டு கிட்டு இருக்கான்? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு” என்று அக்கறையுடன் திட்டினாள் கவிதா.
“சரி. சரி. நான் குளிக்க தான் போறேன்.” என்று கூறியவள் மறக்காமல் வந்து போனை சார்ஜ் இல் போட்டு விட்டு குளிக்க சென்றாள். குளித்து முடித்த பின் பெயருக்கு இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு மீண்டும் இமெயில் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த கம்பெனிக்கு போன் செய்து கேட்டுப் பார்த்தாள் சரியான பதில் இல்லை. இப்படியே 5 நாட்கள் சென்றது.
கவிதாவின் வீட்டில் தந்தை “கவி திங்கட்கிழமை நீ ஜாப்ல ஜாயின் பண்ணனும். எல்லாம் ரெடியா வச்சிருக்கியா?”
“வச்சிருக்கேன் அப்பா.”
“அப்புறம் என்னோட பிரண்ட் ஒரு நல்ல ஹாஸ்டல்
சொல்லியிருக்கிறார். நாம போய் விசாரிச்சு பார்க்கலாம். நல்லா இருந்துச்சுன்னா அங்கேயே தங்கி நீ வேலைக்கு போயிட்டு வா.”
“அப்பா நான், வெண்மதி, வெண்மதி அம்மா மூணு பேரும் ஒரு வீடு எடுத்து தங்கி வேலைக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்.” “தெரியும் கவி. ஆனா வெண்மதிக்கு இன்னும் அப்பாயின்மென்ட் ஆர்டர் வரல இல்லையா?”
“அப்பா நீங்களே இப்படி பேசினா எப்படி?”
“இல்லம்மா. இப்போதைக்கு நீ இந்த ஹாஸ்டலில் தங்கி இரு. மதிக்கு வேலை கிடைத்ததும் நீங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்ட்ல வாடகைக்கு இருக்கலாம். அதுக்கு தான் சொன்ன.”
“சரி அப்பா.” என்று அரைமனதாக வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாள் கவிதா.
முன் தினம், வெண்மதி இடம் சொல்லி விட்டு செல்லலாம் என்று அவள் வீட்டுக்கு சென்றாள் கவிதா .
“மதி நான் சென்னைக்கு கிளம்பறேன்.”
“பெஸ்ட் விஷஸ் கவி.” என்று வரவழைத்த புன்னகையுடன் கூறினாள் வெண்மதி.
“மதி உனக்கு ஏதாவது மெசேஜ் வந்ததா?”
“இல்லை கவி. இதுவரைக்கும் எதுவும் வரலை.”
“பேசாம நீயும் என் கூட வா. நேரிலேயே போய் கேட்டுப் பார்ப்போம்.”
“நல்ல ஐடியா தான், சரி நானும் வரேன்.”
“நாளைக்கு 3 மணி பஸ்ஸில் கிளம்பலாம். எங்க வீட்டுக்கு வந்துடு.”
“சரி கவி.”
வெண்மதி லட்சுமியிடம்
“நாளைக்கு வேலை விஷயமா நான் கவி கூட சென்னைக்கு போக வேண்டி இருக்கு. நான் போய்ட்டு வந்துடறேன் அம்மா.” என்று கூறினாள்.
மகளின் முகத்தில் சோகத்தை கவனித்த லட்சுமி “ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டார்.
அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா “எனக்கு இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரல. ஒரு சிலருக்கு கொஞ்சம் லேட்டா வரும்னு நினைக்கிறேன். அதான் குழப்பமா இருக்கு. நேர்ல போய் பேசிட்டு வரலாம்னு நினைக்கிறேன்.”
“சரிமா போயிட்டு வா. அப்பா கிட்ட நான் சொல்லிக்கிறேன். என்று லட்சுமி கூறினார்.
அடுத்தநாள் கோவிந்தன் தன் டிவிஎஸ்50ல் வெண்மதியை கவிதா வீட்டில் விட்டார். கவிதா, வெண்மதி, கவிதாவின் தந்தை அருணாசலம் மூன்று பேரும் பேருந்தில் ஏறி சென்னை நோக்கி புறப்பட்டனர்.
அந்த பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மூவரும் ஆட்டோவில் வந்து இறங்கினர்.
அருணாச்சலம் “கவி நான் ஹாஸ்டலுக்கு போய் விசாரிச்சுட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் உள்ள போங்க.” என்று கூறிவிட்டு அதே ஆட்டோவில் சென்றார்.
கவிதா, வெண்மதி இருவரும் அந்த பெரிய கட்டிடத்துக்குள் நுழைந்தனர். இருவரும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் லிப்டுக்குள் நுழைந்தனர். “வெண்மதி நான் இன்னைக்கு டியூட்டில்ல ஜாயின் பண்ற. நீ உன்னோட வேலையை பத்தி விசாரிச்சு பாரு.”
“சரி ஆல் த பெஸ்ட் கவி.” என்று கூறிவிட்டு ரிசப்ஷனில் காத்திருந்தாள் வெண்மதி.
கவிதா தன்னிடமிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை காண்பித்து உள்ளே சென்றாள்.
வெண்மதி ரிசப்ஷனிஸ்ட் இடம் “நான் விழுப்புரம் இன்ஜினியரிங் காலேஜ்ல இருந்து வரேன். நான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி இருந்தேன். ஆனா இதுவரைக்கும் எனக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரல. அதான் என்ன ஆச்சுன்னு கேக்கலாம்னு வந்தேன்.” என்று அவள் வந்த விபரத்தை கூறினாள்.
ரிசப்ஷனிஸ்ட் யாரிடமோ போன் பேசிவிட்டு நீங்க
“ஈவினிங் வந்தீங்கன்னா ஹெச் ஆர் ரகுவை பார்க்கலாம். இப்போ அவர் கொஞ்சம் பிஸி.”
“சரி” என்று விட்டு கவிதாவுக்கு போன் செய்து விபரத்தை கூறி விட்டு அங்கிருந்து மூவரும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றாள் வெண்மதி.
ஒரு நொடி ஒரு யுகம் போல கழிந்தது.
கவிதா வெண்மதிக்கு போன் செய்தாள்.
“சாப்டியா மதி?” என்றாள்.
“சுத்தமா பசிக்கல.”
“இப்போ நீ இருக்கிற நிலைமையில பசி எல்லாம் உனக்கு தெரியாது. ஒழுங்கா ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடு. அப்பதான் தெம்பா ஹெச் ஆர் கிட்ட பேச முடியும்.”
“சரிடி கவி.” என்று கூறிவிட்டு போனை வைத்த வெண்மதி. வெஜிடபிள் ரைஸ் அறைக்கு வரவழைத்து இயந்திரத்தனமாக சாப்பிட்டு முடித்தாள். மாலை 4 மணிக்கு ஆட்டோ பிடித்து மீண்டும் அந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு வந்தாள் வெண்மதி. ரிசப்ஷனிஸ்ட் இடம் வந்து காலை வந்ததை ஞாபகப்படுத்தினாள். ரிசப்ஷனிஸ்ட்
“இங்கயே வெயிட் பண்ணுங்க. ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்ல இருந்து ரகு வந்து பேசுவார்.” என்று கூற
வெண்மதி அந்த இடத்திலேயே காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து அங்கு 40 வயது மதிக்கத்தக்க ரகு வந்தார்.
“என்னமா என்ன விஷயம் ?”என்று விசாரித்தார்.
“என் பெயர் வெண்மதி” என்று தொடங்கி எல்லாவற்றையும் திரும்ப கூறினாள்.
“இதோ உங்களோட காலேஜிலிருந்து நாங்க செலக்ட் பண்ண ஸ்டூடன்ட் லிஸ்ட். இதுல உங்க பேர் இருக்கு. ஆனா பைனல் லிஸ்ட்ல உங்க பேர் இல்லை.”
“அதனால என்று வேகமாக துடிக்கும் இதயத்தோடு கேட்டாள் வெண்மதி.
“அதனால உங்களுக்கு வேலை கிடையாது. சாரி.” என்று சாதாரணமாக கூறினார்.
“சார் என்ன சார் சொல்றீங்க” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
“ ஏன் எனக்கு வேலை இல்லை?” என்று கேட்டாள் வெண்மதி.
அவர் அமைதியாக இருக்க இவள்
“சார் என்ன ரீசன்? நான் தெரிஞ்சுக்கணும்.” என்று அழுத்தம் திருத்தமாக கூற
“என்னமா? ரீசன் சொன்னாதான் போவீங்களா?”
“ஆமாம் சார் ப்ளீஸ் சொல்லுங்க.” என்று பணிவாகவே கேட்டாள்.
“உங்களை விட பெட்டர் கேண்டிடேட் எங்களுக்கு கிடைச்சுடுச்சு. இதுதான் ரீசன். நீங்க கிளம்பலாம்.” என்று கறாராக கூறினார் அவர்.
அந்த ஏசி அறையிலும் வியர்த்தது வெண்மதிக்கு. கனத்த இதயத்துடன் வெண்மதி வேறுவழியின்றி எழுந்து வெளியே சென்று கொண்டிருந்தாள்.
அதே நேரம் கவிதா வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். வெண்மதியை பார்த்தாள்.
“மதி” என்று கூப்பிட்டாள்.
வெண்மதியின் காதில் அது விழவில்லை. அவள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள்.
கவிதா வேகமாக சென்று அவள் கையை பிடித்து “மதி நான் கூப்பிட்டுகிட்டு இருக்கேன். நீ போயிட்டு இருக்க.” என்று கேட்ட படியே அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள். அதிர்ந்தாள். அவள் கண்கள் கண்களில் நீர் தேங்கி இருக்க சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள். விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்த்து வழிந்து கொண்டிருந்தது.
கவிதாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஓரளவுக்கு புரிந்தது. எனினும் நம்பமுடியாமல் கேட்டாள். ஒருவேளை அவள் நினைத்தது தவறாக இருந்து வெண்மதிக்கு வேலை கிடைத்திருக்கலாம்.
“மதி வேலை” என்று தயங்கியபடியே கேட்டால் கவிதா.
“நீ நினைக்கிறது கரெக்ட்டு தான் கவி. எனக்கு வேலை கிடைக்கல.” என்று கவிதாவின் முகத்தை பார்த்து அவள் மனதை படித்த வெண்மதி கூறினாள்.
அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. கவிதா அவள் கண்களை துடைத்து விட்டாள்.
“மதி கன்ட்ரோல் யுவர்செல்ப்.” என்று கூறியபடியே ரோட்டில் ஒரு ஆட்டோவை பிடித்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தனர்.
