Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 27.2

“சரிமா நேரமாகுது நாங்க கிளம்புறோம்.” என்று கூறிவிட்டு கவிதாவும் கலைவாணியும் வீட்டுக்கு திரும்ப வசந்த

“இருங்க நான் ஆட்டோவில் வந்தேன்.  என்கிட்ட ஒரு ஆட்டோ நம்பர் இருக்கு.  நான் அவருக்கு கால் பண்றேன்.  அவர் வந்ததும் உங்களை விட்டுட்டு  நான்  வீட்டுக்கு போறேன்.” என்று கூறி இருவரையும் நிறுத்தினான். பிறகு அந்த ஆட்டோவிற்கு போன் செய்தான்.  அவர் பத்தாவது நிமிடத்தில் அங்கு வந்தார்.

கலைவாணி கவிதா வசந்த் மூவரும் அந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டனர்.  கவிதா வசந்தை ஆழம் பார்க்க விரும்பினாள்.  எனவே அவனிடம்

“வசந்த் நீங்க எடுத்த போட்டோஸ், வீடியோஸ் காட்டுங்க.” என்று கேட்டாள். அவன் எடுத்து ஒவ்வொன்றாக காண்பித்துக் கொண்டிருந்தான்.



Advertisement

 

அப்பொழுது கவிதா “எதுக்கு உங்களுக்கு கஷ்டம் நான் பார்த்துக்கிறேன். எங்க வீடு பக்கத்துலதான் இருக்கு.  சீக்கிரம் வந்துவிடும். நான் என்னோட மொபைலுக்கு  போட்டோஸ் எல்லாத்தையும்  ஷேர் பண்ணிக்கிட்டு வீட்ல பொறுமையா பாத்துக்கிறேன்.” என்று அவனிடமிருந்து மொபைலை வாங்கி அன்று எடுத்திருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் தன்னுடைய மொபைலுக்கு அனுப்பிக் கொண்டாள்.

 

Advertisement

சிறிது நேரத்தில் வீடு வந்துவிட கலைவாணியும் கவிதாவும் இறங்கினர்.

Advertisement

“ ஓகே தேங்க்ஸ் வசந்த். அப்புறம் பார்க்கலாம்.” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.

வசந்த் கவிதாவுக்கு கையசைத்து விட்டு  அதே ஆட்டோவில் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான்.

போகும் வழியிலேயே அவன் எடுத்திருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

Advertisement

வீட்டுக்குள் நுழைந்த கவிதா உடையை மாற்றிக்கொண்டு படுக்கையில் படுத்தாள் படுத்துக்கொண்டே அன்று எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த  புகைப்படங்கள் எல்லாவற்றிலும் வெண்மதி இருந்தாள். வசந்தின் பார்வை வெண்மதி மீது  இருப்பதை ஓரளவு கணித்து இருந்தாள் கவிதா. இந்த புகைப்படங்களை  பார்த்ததும் வசந்தின் மனதை புரிந்து கொண்டாள் கவிதா.

வசந்த் மீது கவிதாவிற்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது. எனவே வெண்மதி வசந்தை மணந்து கொண்டால் அவளது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

————–

இரவு சமையலறையில் இட்லி பாத்திரத்தில்  இருந்து இட்லியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டிருந்தார் லட்சுமி. சமையலறை உள்ளே நுழைந்த வெண்மதி

“இன்னிக்கு என்னம்மா டிபன்?” என்று கேட்டாள்.

“இட்லியும்  தக்காளி சட்னியும் பண்ணியிருக்கேன்.”

“ஓ சூப்பரா இருக்கும்.” என்று கூறியவள்  தாய்க்கு உதவினாள் .

அவர்கள்  தரையில் அமர்ந்து உணவு உட்கொள்வது வழக்கம். எனவே உட்காருவதற்கு வசதியாக அந்த சின்ன பாயை விரித்தாள். பிறகு இட்லி சட்னி இரண்டையும் எடுத்து வந்து தரையில் வைத்தாள் வெண்மதி. லட்சுமி மூன்று பேருக்கும் தண்ணீர் சொம்பில் எடுத்து வந்தார்.

“சரிம்மா நான் போய் அப்பாவையும்  கார்த்திக்கையும் கூட்டிட்டு  வர்றேன்.”  என்றாள் பெண்மதி.

அதே நேரம் கார்த்திகேயன் அங்கு வந்தான்.

“அதெல்லாம் நீங்க கூப்பிடவே வேண்டாம். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் நான் முன்னாடி வந்து நிற்பேன்.” என்று வந்து அந்த பாயில் உட்கார்ந்தான்.

லட்சுமி ஏதோ யோசனையாகவே இருந்தார்.

வெண்மதி கோவிந்தனை அழைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். லட்சுமியும் அமர்ந்தார்.

வெண்மதி நால்வருக்கும் தட்டு எடுத்து வைத்து அதில்  இரண்டு இட்லியை வைத்து கூடவே சட்னியையும் பரிமாறினாள்.

“தக்காளி சட்னியா? இன்னிக்கி ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான். சித்தி நிறைய இட்லி இருக்கா? அப்புறம் நான் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இல்லைன்னு சொல்ல போறீங்க.” என்று முன்னெச்சரிக்கையாக கூறிவிட்டு  இட்லியை பிட்டு சட்னியை தொட்டு வாயில் வைத்தான்.

“ஆகா ஓகோ” என்று புகழ போகிறான் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வெண்மதி அவன் எதுவும் கூறாமல்  அமைதியாக சாப்பிடவும் ஆச்சரியம் ஆனாள்.

“என்ன கார்த்திக் பேச்சையே காணோம்? தக்காளி சட்னி உனக்கு ரொம்ப பிடிக்குமே. எதுவுமே சொல்லாம சாப்பிடற?” என்று அவனை விசாரித்தாள்.

“அக்கா நீங்களும் சாப்பிடுங்க.  அப்பதான் தெரியும்.” என்று கூறி அவளுக்கு ஒரு வாய் ஊட்டினான் . அதனை  சாப்பிட்ட அவளுக்கு புரிந்து போயிற்று. அதில் காரமும் உப்பும் மிகக்குறைவாக இருந்தது.  கார்த்திகேயன் சிறிது ஏமாற்றத்துடன் வெண்மதியை பார்க்க வெண்மதி தாயை கவனித்தாள்.

தாய் இங்கு நடந்த எதையும் கவனிக்காமல் எதையோ நினைத்துக் கொண்டு இருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்த கோவிந்தன் தன் தட்டில் இருந்த இட்லியை சட்னியுடன் சாப்பிட அவருக்கும் புரிந்து போயிற்று.

“அம்மா” என்று வெண்மதி அழைக்க அது லட்சுமியின் காதுகளில் விழவே இல்லை.

அவர் எதையோ யோசித்தபடி சாப்பிடாமல் அமர்ந்திருந்தார்.

கோவிந்தன், கார்த்திகேயன், வெண்மதி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கார்த்திகேயன் “சித்தி” என்று கூப்பிட அப்பொழுதும் லட்சுமி கவனிக்கவில்லை.

கோவிந்தன் “லட்சுமி” என்று அவள் தோளை தொட்டு குலுக்கினார். அப்பொழுதுதான் லட்சுமி

“என்னங்க என்ன?” என்று கேட்டார்.

வெண்மதி “என்னமா ஏதோ யோசனையா இருக்கீங்க போல இருக்கு.” என்று அவரை கூர்ந்து கவனித்தபடி கேட்டாள்.

அதற்கு லட்சுமி  “ஆமா. ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன். சரி சாப்பிடலாம்.”  என்று சமாளித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.

 

ஒருவாய் சாப்பிட்ட அவர்  தக்காளி சட்னியின் சுவை  குறைந்து இருப்பதை உணர்ந்து பதறினார்.

“ஐயையோ  தக்காளி சட்னி உப்பு சப்பு இல்லாம இருக்கே. கொஞ்சம் இருங்க.  நான் போய் உப்பு, காரம் போட்டு கொதிக்க வச்சி எடுத்துட்டு வர்றேன்.” என்று அவசரஅவசரமாக தக்காளி சட்னியை  எடுக்க முயன்றார்.

 

அப்போது கோவிந்தன் அவரை தடுத்தார்.

“லட்சுமி சட்னியில் உப்பு காரம் கம்மியா இருந்தா பரவாயில்லை. அது எங்கள் பிரச்சனை இல்லை.  நீ ஏன் டல்லா இருக்க? உனக்கு என்ன பிரச்சனை? அதை முதல்ல சொல்லு.” என்று லட்சுமியின் முகத்தை பார்த்தே அவர் மனதை படித்த கோவிந்தன் அக்கறையாக விசாரித்தார்.

 

“ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க சாப்பிடுங்க நான் இட்லிபொடி எடுத்துட்டு வரேன்.” என்று எழுந்திருக்க முயன்றார்.

“இல்லை ஏதோ பிரச்சனை இருக்கு சொல்லுங்கம்மா.” என்று வெண்மதி கேட்க

கார்த்திகேயன் “சொல்லுங்க சித்தி.  சித்தப்பாவும் அக்காவும் கேட்கிறாங்க இல்ல சொல்லுங்க.” என்று வற்புறுத்தினான்.

 

“கார்த்தி முதல்ல சாப்பிடுவோம். அதுக்கு அப்புறம் பேசுவோம்.” என்று லட்சுமி கூற அனைவரும் அமைதியாக இட்லிபொடி தொட்டுக்கொண்டு சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்த கையோடு கோவிந்தன் ஆரம்பித்தார்.

“சரி இப்போ எல்லாரும் சாப்பிட்டாச்சு. நீ விஷயத்தை சொல்லு. என்ன பிரச்சனை?” என்று கேட்க

லட்சுமி “என்னன்னே தெரியல ரெண்டு நாளா வேலைக்கு வரவேண்டிய பசங்க வரல. நானும் அந்த பசங்களுக்கு போன்  பண்ணி பார்த்தேன். ஆனால் இரண்டு பேருமே சொல்லி வச்ச மாதிரி  போனை எடுக்கவே இல்லை. இன்னும் இரண்டு நாளில் நான்  ஸ்வீட் கொடுக்கணும். நாளைக்கே ஆரம்பிச்சா  தான் என்னால் செஞ்சு கொடுக்க முடியும். ஆனா இவங்க நாளைக்கு வருவாங்களான்னு தெரியல அதான் ஒரே குழப்பமா இருக்கு.”

“ஓ இதுதான் பிரச்சனையா? மழை பெய்தது இல்லையா. அதனால உடம்புக்கு ஏதாவது வந்திருக்கும். நாளைக்கு ஒரு நாள் பாக்கலாம் நாளைக்கு வரலைன்னா.  என்ன பண்ணலாம்னு யோசிச்சி முடிவு பண்ணலாம் நீ இதுக்கு எல்லாம் கவலை படாம நிம்மதியா தூங்கு.” என்றார் கோவிந்தன்.

லட்சுமி “சரிங்க நாளைக்கு ஒரு நாள் பார்க்கலாம்.” என்று அரை மனதாக ஒப்புக் கொண்டார். வெண்மதிக்கு  ஏதோ நெருடியது.

 

அடுத்த நாள் காலை வழக்கம்போல வேலைக்கு  கிளம்பிக் கொண்டிருந்தாள் வெண்மதி.

அப்பொழுது லட்சுமி

“ஏன்மா மதி நான் முல்லையை கூட்டிக்கிட்டு அந்த பசங்க வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரட்டுமா?” என்று மெதுவாக ஆரம்பித்தார்.

“வேண்டாம்மா நீங்க தனியா போகாதீங்க. சாயந்தரம் வரைக்கும் வெயிட் பண்ணி பாருங்க. வரலைனா  நீங்க, நான், முல்லை அக்கா மூணு பேரும் சேர்ந்து போய் பார்த்துட்டு வரலாம்.  நீங்க எந்த வேலையையும் தனியா செய்யாதீங்க. உங்களால அந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாது. சாயந்திரம் வரைக்கும் பொறுமையா இருங்க.

என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு ஒரு முடிவு எடுப்போம்.

எப்பவுமே வேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க. இந்த ரெண்டு மூணு நாளாவது ரெஸ்ட் எடுங்க.” என்றாள் வெண்மதி.

அலுவலகம் அடைந்த வெண்மதி அன்று இருந்த வேலை சுமையினால் மற்ற அனைத்தையும் மறந்து வேலையில் ஆழ்ந்தாள். மதிய உணவு இடைவேளையின் பொழுது தாய்க்கு போன் செய்தாள்.

“என்னம்மா வந்துட்டாங்களா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“இல்லம்மா இன்னைக்கும் வரல. இன்னும் ஒரு நாள்ல நான் ஸ்வீட் கொடுக்கணும். எப்படி செய்யப் போறேன்னு எனக்கே தெரியல.” என்று குழப்பமான மனநிலையுடன்  பேசினார் லட்சுமி.

 

“அம்மா நீங்க எதையும் யோசித்து குழப்பிக்காதீங்க. சாய்ந்தரம் நாம என்ன செய்யலாம்னு யோசிச்சு செய்யலாம்.” என்று ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்துவிட்டு சாப்பிட்டு முடித்தவள் மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!