Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 10.1

அத்தியாயம் 10(1)

தேஜாவின் பிறந்தநாள் முடிந்து நாட்கள் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஆராவின் குடும்பம் அங்கே குடிவந்து கிட்டத்தட்ட பத்து மாதத்திற்கு மேல் ஆகி இருந்தது. எப்பொழுதாவது பார்த்தால் சின்னப் புன்னகையுடன் இருந்த கெளதம் மிருதுளா நட்பு, அன்றைய மருத்துவமனை நிகழ்வுக்குப் பிறகு சிறுசிறு பேச்சுகள், உதவிகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற ஆரம்பித்தது.

சில நேரங்களில் கெளதம் வெளியில் புறப்படும்போது, மிருதுளா எங்கையாவது கிளம்ப நேர்ந்தால், தனது காரிலேயே அவளை அழைத்துச் சென்று அவள் போக வேண்டிய இடத்துக்குச் சென்று விடுவதும், சில சமயங்களில் தெருவில் அவள் நடந்து வந்து கொண்டிருந்தால், அவளை அழைத்துவருவதுமாகச் சில சில உதவிகளைத் தானே முன்வந்து செய்தான் கெளதம்.

அன்றொரு நாள் அப்படிதான், மாடியில் செடி வைக்கவென்று கடைக்குச் சென்று செடிகள், தொட்டிகள், மண், உரம் என்று தேவையான பொருட்களை வாங்கி வந்திருந்த மிருதுளா, அவற்றை மொட்டை மாடியில் வைக்கவென்று, ஒவ்வொரு தொட்டியாகத் தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். கூட ஆராவும் உதவி செய்து கொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்த கெளதம் குழந்தையை ஆராவிடம் கொடுத்துவிட்டு, மிருதுளாவுடன் சேர்ந்து அனைத்து தொட்டிகளையும் மேலே கொண்டு சென்று அவள் சொன்ன இடத்தில அடிக்கி வைத்தவன், அவளுடன் சேர்ந்து தொட்டிகளில் மண்ணை நிரப்பி, செடிகளை நட்டு என்று அனைத்து வேலைகளையும் செய்தான். எல்லா வேலைகளையும் முடித்ததும் மிருதுளா கௌதமிடம், தனது நன்றிகளைத் தெரிவிக்க, “இதுக்கு எதுக்குங்க தேங்க்ஸ். இட்ஸ் ஓகே.” என்றவன் அவளிடம் “உங்களுக்குத் தோட்டம் வைக்கிறதுன்னா பிடிக்குமா?” என்று கேட்க,



Advertisement

“ஹம்! ரொம்பப் பிடிக்கும். சென்னைல தனி வீடு. வீட்டில சும்மா இருக்கப் போர் அடிக்கும்னு தோட்டம் போடலாம்னு முடிவு செஞ்சு, வீட்டுக்கு பின்னாடியும் முன்னாடியும் தோட்டம் வச்சோம். அப்போ இருந்து தோட்டம், செடி எல்லாம் ரொம்ப இன்ட்ரெஸ்ட் உண்டு. இங்க அபார்ட்மென்ட்ன்றதால வைக்கமுடியல இப்போதான் மாடிதோட்டம் பத்தி தெரிஞ்சிகிட்டேன். அதான் ட்ரை பண்ணலாம்ன்னு ஒரு ஐடியா.” என்று பதிலளித்தாள். அவளிடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தவன், தொட்டிகளை அடுக்கிய விதம், பார்க்க அழகாக இருப்பதாகக் கூறினான்.

மற்றொருநாள், கெளதம் அலுவலகத்தில் அன்றையதினம் அவனுக்கு வருடவிடுப்புக் கொடுக்கபட்டிருக்க, அன்று வீட்டில் தான் அவன் இருந்தான். ஆகையால் குழந்தை அவனிடமே அன்று இருந்தது. மாலை நேரம், வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த மிருதுளா, தேஜாவின் விளையாட்டுப் பொருட்கள், இன்னபிற சாமான்கள் குறிப்பாக அவளின் பேவரிட் பொம்மையையை அறையிலேயே அவள் விட்டுவிட்டு சென்றிருப்பதைப் பார்க்க, அந்தப் பொம்மை இல்லாமல் அவள் தூங்க மாட்டாள் என்பதால் அவளின் பொருட்களை எல்லாம் பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு, கௌதமின் வீட்டிற்கு அவள் செல்ல, அங்கே கதவு அடைக்கபட்டிருந்தது. காலிங் பெல்லை அடித்துவிட்டு, இவள் காத்திருக்க, சில நிமிடங்கள் கழித்து வந்து கதவை திறந்தான் கெளதம். அவனின் தோற்றத்தை பார்த்த மிருதுளாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.

ஸ்போர்ட்ஸ் பேண்ட் மற்றும் உள்பனியனுடன் அவன் நின்றிருக்க, அவனது இரண்டு கைகளிலும் சோப்புநுறை மூடி இருக்க, முகம் மற்றும் தலைமுடியிலும் சோப்பு நுறை பரவியிருக்க, இவற்றுக்கு எல்லாம் மேலாக அவனது மூக்கு நுனியில் சோப்பு நுறை clown nose போலக் காட்சியளித்தது.

Advertisement

கெளதமோ மிருதுளாவை அந்த நேரம் அங்குச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெளியே சென்றிருந்த தந்தை தான் திரும்பி வந்துவிட்டார் என்று நினைத்தவன் தேஜாவை குளிக்க வைத்துக்கொண்டிருந்த கையோடு வந்து கதவை திறந்தான். மிருதுளா சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், இவனுக்கும் லேசாகச் சிரிப்பு வர, “பாப்பாவை குளிக்கவச்சுட்டு இருக்கேன். அதான் இந்த நுறை அபிஷேகம்.” என்றவன், “உள்ள வாங்க. ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க?!” என்று அவளுக்கு வழிவிட, இவளோ போகவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, அதற்குள் ஏதோ கீழே விழும் சத்தமும் குழந்தை அழும் சத்தமும் கேட்க, கெளதம் அவசரமாக அவனது அறைக்குள் விரைய, அவன் பின்னோடு மிருதுளாவும் உள்ளே சென்றாள்.

Advertisement

கௌதமின் அறையில் உள்ள அட்டாச் பாத்ரூமில் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் தலைகுப்புற தேஜா மல்லாந்து விழுந்துகிடக்க, அவளைக் குளிப்பாட்டவென்று பக்கத்தில் வைக்கபட்டிருந்த ஜக், விளையாட்டுப் பொம்மை எல்லாம் சாய்ந்து கிடந்தது. குழந்தை இருந்த நிலையைப் பார்த்து பதறியபடி கெளதம் குழந்தையைத் தூக்க அவனிடம் இருந்து குழந்தையை வாங்கிய மிருதுளா குழந்தையின் நெஞ்சிலும் முதுகிலும் தட்டிகொடுத்து அவளின் மூக்கில் இருந்த தண்ணீரை வெளியே வர செய்தாள். தண்ணீர் மூக்குக்குள் போனதில் ஏற்பட்ட எரிச்சலில் குழந்தை இருமிக்கொண்டே இருந்தாள். அதற்குள் கெளதம் கீழே கிடந்த பொருட்களை எல்லாம் ஒழுங்காக எடுத்துவைத்துவிட்டு இவளிடம் வந்தவன். “எப்படி விழுந்தா தெரியலையே!” என்று கவலையுடன் சொல்ல, இவளோ, கெளதம் கதவை திறக்க வரும்பொழுது குழந்தையை எப்படி விட்டுவிட்டு வந்ததாகக் கேட்க, அவன் பதில் சொல்ல, அதில் இருந்து குழந்தை எப்படி விழுந்தாள் என்பதைப் புறிந்துகொண்டாள். அதாவது, பக்கெட்டின் விலும்பை பிடித்தபடி, உள்ளே கைகளை விட்டுத் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த தேஜா, ஒரு கட்டத்தில் காலுக்கு அருகில் இருந்த சோப்பு வழுக்கி தலைக்குப்புற உள்ளே விழுந்திருக்கிறாள்.

இதைக் கௌதமிடம் மிருதுளா எடுத்துச்சொல்ல, “ஒஹ்! நான் எப்பவும் இப்படிதான் குளிப்பாட்டுவேன். இதுவரை இந்த மாதிரி ஆனதில்லை.” என்றான் குழப்பமாக. அதற்கு மிருதுளா, “நீங்க பக்கத்தில பிடிச்சிட்டு இருக்கும்போது ப்ராப்ளம் இல்லை. பட் அவளைத் தனியா விட்டுட்டு வந்தீங்க, அதான் விளையாட்டு ஆர்வத்தில பக்கெட்குள்ள நல்லா குனிஞ்சு விளையாடிட்டு இருந்திருப்பா.” என்றவள், “குழந்தையை இந்த மாதிரி குளிப்பாட்டாதீங்க. ஒரு சின்ன ரௌன்ட் டப், அதுக்குள்ள உட்கார வச்சு குளிக்க வைங்க.” என்றவள் சிறிது நேரம் கழித்து, குழந்தை சரி ஆனதும், வீட்டில் இருந்த வெற்று டப்பை எடுத்துவர சொல்லி, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டவேண்டும் என்பதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

டப்பில் பாதியளவு தண்ணீரை நிரப்பி, குழந்தையை உள்ளே உட்கார வைத்தவள், வெதுவெதுப்பான தண்ணீரரை ஜக்கில் எடுத்து அவளது கண்களில் படாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடம்பில் ஊற்றி குளிப்பாட்டினாள். அதுவரை அழுது கொண்டிருந்த தேஜா, திரும்பவும் தண்ணீரை பார்த்த மகிழ்ச்சியில் கைகாளால் சுற்றி இருந்த தண்ணீரில் அடித்து விளையாட, பக்கத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மேலேயும் சோப்புத் தண்ணீர் தெளித்தது. “அம்முகுட்டி இப்படிலாம் விளையாட கூடாது. பாரு அவங்க மேல எல்லாம் தண்ணீ.” என்று கெளதம் தேஜாவிடம் சொல், “பரவாலங்க, குட்டி குழந்தைங்கன்னா அப்படிதான் இருப்பாங்க.” என்று புன்னகையுடன் மிருதுளா சொல்ல, எல்லா நாட்களிலும் அவள்தான் தேஜாவை குளிப்பாட்டி விடுவாள் என்பது அவனுக்கு நியாபகம் வர, அவளுக்குப் போய் நாம் சொல்கிறோமே என்ற எண்ணத்தில் அசடுவழிந்தான்.

Advertisement

பல மணிநேரம் கழித்து ஒருவழியாகக் குளியல் முடிய, தேஜா செய்த சேட்டையில் இவர்கள் இருவரும் குளிக்காமலே குளித்திருந்தனர். இருவர் ஆடையும் முழுவதுமாக நனைந்திருந்தது. மிருதுளா ஆடை ஈரமாக இருப்பதைப் பார்த்து, கெளதம் தன்னுடைய கப்போர்டில் இருந்து துண்டை எடுத்துவந்து மிருதுளாவிடம் துவட்ட கொடுக்க, “பரவாலங்க. பக்கத்தில தான வீடு. வீட்டில போய்த் துவட்டிகிறேன்.” என்றவள், “பாப்பாவோட திங்க்ஸ் ஹால் சோபாவில இருக்கு. அந்தப் பொம்மை இல்லாம அவ தூங்கமாட்டா. கொடுத்துடுங்க.” என்றுவிட்டு குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு நகரபோக, அவளின் சேலையைப் பிடித்து இழுத்தாள் அந்தப் பட்டுகுட்டி.

எதிர்பாராத நேரம் குழந்தை இழுத்ததில் இவளின் முந்தானை பாதிக் கீழே சரிய, சட்டென்று குழந்தையின் கையை எடுத்துவிட்ட கெளதம், அவளின் முகத்தைப் பார்க்காமல் “சாரிங்க,” என்று சொல்ல அதற்குள் தன்னைச் சரிபடுத்திக் கொண்டவள், “பராவாலங்க, பாப்பாதான. நான் வரேன்.” என்று சொன்னவள் குழந்தையிடம் டாட்டா காட்டிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றாள்.

இப்படியாகக் கெளதம் மிருதுளாவின் நட்பு தேஜா என்ற இழுவிசையால் நெருங்கிக்கொண்டே செல்ல, இங்கே ஆரா – ஜெய் காதல் தான் கிணற்றில் போட்ட கல்போல அப்படியே இருந்தது. இரண்டு முறை தன் காதலை ஜெய் சொன்னபிறகும், ஆராவிடம் இருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இது நாள்வரை வரவில்லை.

புன்னகைப்பதும், நன்றாகப் பேசுவதவமாக இருக்கும் ஆரா, ஜெய்யின் காதலை தெரிந்து கொண்டதை போலக் காட்டிக் கொள்ளவில்லை. அது ஏன் என்று இவனுக்குக் குழப்பமாகவே இருந்தது. விருப்பம் இருக்கா இல்லையா என்பதை வெளிப்படையாகச் சொல்லிட வேண்டியதுதானே, அதை விட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் இருப்பது அவனுக்குள் இருக்கும் காதலை மேலும் தீவிரப்படுத்தியது. ‘அவ வேண்டாம் சொல்லிட்டா உனக்கு ஓகே வா?!’ என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்கும்போது, ஏனோ மனம் சுனங்கதான் செய்யும். இருந்தும் ஆராவிற்காகப் பொறுமை காத்தான். ஆனால் கூடிய விரைவில் அவளிடம் ஏற்படப் போகும் மாற்றத்தால் தன்னுடைய பொறுமை காற்றில் பறக்க போகிறது என்று அப்பொழுது அவனுக்குத் தெரியாது.

இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒரு விடுமுறை நாளில், அபார்ட்மென்ட் முன்பு இருக்கும் சின்னப் பார்க்கில் தேஜாவுடன் அமர்ந்து தன் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த கெளதம், அவன் அழைத்ததின் பேரில் குழந்தையை மற்ற சிறுவர்களுடன் விட்டுவிட்டு எழுந்து சென்றான். பிறகு சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி வந்து பார்க்க, விட்டு சென்ற இடத்தில் குழந்தை இல்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!