Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 10.2

அத்தியாயம் 10(2)

அதிர்ச்சி அடைந்த கெளதம், சுற்றும் முற்றும் பார்க்க, எங்கும் குழந்தை இருப்பதாகத் தெரியவில்லை. சற்று முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் கண்ணாம்பூச்சி விளையாடவென வேறெங்கோ சென்றிருந்தனர். அதில் ஒரு சிறுவன் அந்தப் பக்கமாக வர, அவனிடம் குழந்தையைப் பற்றிக் கெளதம் விசாரிக்க, அந்தச் சிறுவனோ, “ஒரு ஆண்டி வந்து தூக்கிட்டு போனாங்க அங்கிள்.” என்று கூறிவிட்டு நண்பனை பிடிக்கும் ஆர்வத்தில் ஓடிவிட, இவனுக்கோ, ஒருவேளை மிருதுளா இல்லை ஆராவை சொல்கிறானோ என்று நினைத்தவன், வேகமாகப் படிகளில் ஏறி அவர்கள் வீட்டிற்குச் சென்றவன், வாசலில் நின்றுகொண்டிருந்த பார்வதியிடம் குழந்தையைப் பற்றிக் கேட்க, அவரோ, “இல்லையே தம்பி, அவங்க யாரும் தூக்கிட்டு வரலையே. என்ன ஆச்சு தம்பி?! குழந்தை எங்க?!” என்று கேட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் வெளியே வந்த மிருதுளா காதில், இவர்கள் பேச்சு விழ, குழம்பியவள் கெளதம் என்ன சொல்கிறான் என்று கூர்ந்து கவனிக்க, அடுத்து அவன், “குழந்தையோட கீழ பார்க்ல விளையாடிட்டு இருந்தேன். பிரன்ட் கூப்பிட்டான்னு அப்படிப் போயிட்டு வர்றதுக்குள்ள, விளையாடிட்டு இருந்த குழந்தையைக் காணோம்.” என்று கலக்கத்துடன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த மிருதுளா, “என்ன சொல்றீங்க?! பாப்பாவை காணோமா!!” என்றவளுக்குக் குரல் கரகரத்தது. வருத்ததுடன் அவளிடம் ஆம் என்பது போல இவன் தலை அசைக்க, “பாப்பாவை எங்க விட்டு இருந்தீங்க?!” என்று கேட்டவள் அவன் சொன்னதும் குழந்தையைத் தேடவென்று விறுவிறுவெனப் படிகளில் இறங்கி செல்ல, அவள் பின்னோடு கௌதமும் படிகளில் இறங்கி கிட்டத்தட்ட ஓடினான்.

கீழே வந்தவள், கெளதம் சொன்ன இடத்தில் தானும் ஒருமுறை நன்றாகத் தேட, அவளுடன் கௌதமும் சேர்ந்து எல்லா இடங்களிலும் தேடினான். பின்பக்கம் இருந்த கார் பார்க்கில், அங்கிருந்த சுப்பர் மார்க்கெட் என்று எல்லா இடங்களிலும் தேடியவர்கள், தங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் வீடுகளில் சென்று விசாரித்தனர். யாருமே தாங்கள் குழந்தையைப் பார்க்கவில்லை என்று சொல்ல, அவர்கள் இருவருக்கும் நெஞ்சுக்குள் பயம் தொற்றிக்கொண்டது. அடுத்து வாட்ச்மேனிடம் சென்று கிட்டத்தட்ட சண்டையிடாத குறையாகக் கேட்க, அவனோ வயிறு சரி இல்லாத காரணத்தால் தான் இப்பொழுதுதான் பாத்ரூம் சென்று வந்ததாகச் சொல்ல, மேற்கொண்டு அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் போய்விட்டது.

அதற்குள் இந்த விஷயம் கௌதம், மிருதுளாவின் வீடுகளிலும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தெரியவந்தது. விஷயம் கேள்விப்பட்டுச் சேகர், ஆரா, ஜெய் மூவரும் கீழே இறங்கி வந்து அவர்களும் அனைத்து இடங்களிலும் தேடியும் ஒரு பலனும் இல்லை. வாட்ச்மேனும் தெருவில் சற்றுத் தூரம் வரை சென்று தேடிவிட்டு வந்தான். எங்கும் குழந்தை தென்படவில்லை. குழந்தை எங்கும் கிடைக்கவில்லை என்ற கவலையும், இப்படிக் குழந்தையைப் பொறுப்பில்லாமல் விட்டு சென்ற கோபத்திலும் மிருதுளா கௌதமிடம், “இப்படியா குழந்தையைத் தனியா விட்டுட்டு போவீங்க?! எத்தனை தடவை சொல்றது, குழந்தையைக் கவனமா பார்த்துகோங்கன்னு. இப்படியா கேர்லெஸா இருப்பீங்க.” என்று அழுகையும் கோபமும் கலந்த ஆற்றாமையில் கத்த ஆரம்பிக்க, ஆராதான் “அக்கா ஏன் இப்படிக் கத்துற. கொஞ்சம் பொறுமையா இரு.” என்று சமாதனம் செய்ய, அவளையும் பிடித்து வாங்கிவிட்டாள். மிருதுளாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தான் கெளதம்.



Advertisement

அதற்குள் அக்கம்பக்கத்தினர், அந்தச் சிறுவன் சொன்னதுபோல யாராவது பிள்ளையைக் கடத்துபவர்கள் தூக்கி சென்றிருக்கலாம் என்று தங்களது பங்கிற்குப் பீதியை கிளப்பிவிட, அதற்குமேல் அமைதியாக நிற்க முடியவில்லை மிருதுளாவால். யாருடைய அழைப்பையும் கேட்காமல் குழந்தையைத் தேடி வேகமாகத் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, கெளதம் தான் தனது காரை எடுத்துக்கொண்டு அவள் பின்னாடி சென்றான். இங்கே ஜெய்யோ சேகரிடம் சொல்லிக்கொண்டு தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப, அவனுடம் சேர்ந்துகொண்டாள் ஆரா. இரு வாகனங்களும் எதிரெதிர் திசைகளில் தங்களது தேடல்களைத் தொடங்கியது.

காரை எடுத்துக்கொண்டு கெளதம் வருவதற்குள், மிருதுளா அந்தத் தெருவின் முடிவில் திருப்பத்திற்குச் சென்றிருக்க, வேகமாகக் காரை செலுத்தியவன், அவள் முன் பிரேக் அடித்து நிறுத்திவிட்டு அவளைக் காரில் ஏறும்படி சொல்ல, அவளோ இவனை ஒரு முறை முறைத்துவிட்டு தனது நடையைத் தொடர, இன்னும் அவள் அருகில் நெருங்கி காரை நிறுத்தியவன், கீழே இறங்கி, “சொன்ன கேளு மிருதுளா. இப்படியே நடந்து எங்க போய்த் தேடுவ. அதுவும் தனியா. மொதல்ல வண்டில ஏறு.” என்று கோபமாகச் சொல்ல, “விடுங்க நானே போய்த் தேடுறேன்.” என்று அவள் அடம்பிடிக்க, அவளது கையைப் பிடித்து இழுத்துக் காரில் முன்பக்க இருக்கையில் உட்கார வைத்து லாக் போட்டவன், அந்தப் பக்கம் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை கிளப்பினான்.

எங்கே செல்வது என்று தெரியாமல் கண்ணில்பட்ட தெருக்களில் எல்லாம் கெளதம் காரை ஓட்டிக்கொண்டிருக்க, பக்கத்தில் அமர்ந்திருந்த மிருதுளாவோ, ஜன்னல் வழியே தேடலுடன் கண்களை அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு வர, செய்திகளில், தொலைகாட்சியில் வந்திருந்த சம்பவங்களின் தாக்கத்தில், அவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீர் வந்து கொண்டிருந்தது. கண்ணீர் பார்வையை மங்கலாக்க, புறங்கையால் வேகமாக அவள் துடைத்துக்கொள்ள, துடைக்கத் துடைக்க மீண்டும் மீண்டும் கண்ணீர் வழிந்தோடியது. வாய்விட்டு அவள் அழவில்லை என்றாலும், அவளிடம் இருந்து விசும்பல் சத்தம் வந்து கொண்டிருந்தது.

Advertisement

திரும்பி மிருதுளாவை பார்த்த கௌதமிற்கே, அவளின் அழுகை இன்னும் பயத்தைக் கொடுக்க, வேகமாக வண்டியை செலுத்தினான். தெரிந்த தூரம்வரை தெரு தெருவாகச் சுற்றியவர்கள், கண்ணில் பார்ப்பவர்கள் அனைவரிடமும், “இந்தப் பக்கம் யாராவது லேடி குழந்தையைத் தூக்கிட்டு போனாங்களா?!” என்று கேட்க யாரிடமும் பதில் கிடைக்கவில்லை. எங்கும் குழந்தையைக் காணவில்லை. நேரம் தான் இரவை நெருங்கிவிட்டது. சோர்வுடன் ஒரு ஓரத்தில் காரை நிறுத்தியவன், மனதில் இருந்த பாரத்தில் கலங்கிய தன் கண்களை அந்தபக்கம் திரும்பி துடைத்துக்கொள்ள, அதற்குள் மிருதுளா அழும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்க்க, அவளோ முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

Advertisement

அதில் பதறியவன், “மிருதுளா அழாதீங்க. ப்ளீஸ். பாப்பா கிடைச்சிடுவா. நீங்க கவலைபடாதீங்க.” என்று தனக்கே இல்லாத நம்பிக்கையை அவளுக்குக் கொடுக்க முயற்சிக்க, அவளுடைய அழுகை குறைவதாக இல்லை. இவன் மீண்டும் மீண்டும் தனது கவலையை மறைத்துக்கொண்டு அவளைச் சமாதன படுத்த முயல, ஒருகட்டத்தில் நிமிர்ந்தவள், அழுகையுடன், கெளதம் பக்கம் திரும்பி, “ஏன் இப்படிச் செஞ்சீங்க?! குழந்தையை இப்படியா கேர்லெஸ்ஸா விடுவீங்க. கொஞ்சம்கூட உங்களுக்கு அறிவு இல்லையா?! இப்படிதான் பாப்பாவ பார்த்துப்பீங்களா?! அவ உங்க பொண்ணுதான!” என்று கோபத்தில் கத்தியவள் அவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “எனக்குத் தேஜா வேணும். என் பாப்பா எனக்கு வேணும். அவளுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது. அவ இல்லாம என்னால இருக்க முடியாது. இப்போ என் அம்முகுட்டி எங்க இருக்காளோ?! என்ன கஷ்டபடுறாளோ?!” என்று கோபத்தில் ஆரம்பித்து இறுதியில் அழுகையுடன் கௌதமின் நெஞ்சில் சாய்ந்து கதற ஆரம்பித்துவிட்டாள்.

வேறொரு ஆடவனின் நெஞ்சில், தான் சாய்ந்திருக்கிறோம் என்று அவளுக்கோ, வேறொரு பெண் தன்னைக் கேள்வி கேட்கிறாள் என்று கௌதமிற்கோ துளிகூட எண்ணம் இல்லை. அந்தச் சூழ்நிலையும் அவர்களை நினைக்க விடவில்லை. இருவரின் மனதில் இருப்பதெல்லாம் தேஜா தேஜா தேஜா மட்டுமே. மிருதுளா பாட்டுக்கு அழுது கொண்டிருக்க கௌதமிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அமைதியாக அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவனைக் கலைத்தது அவனின் செல்போன் ஒலி. அதன் ஓசையில் அவசரமாக நிமிர்ந்த மிருதுளா, குழந்தை கிடைத்துவிட்டால் என்ற நல்ல செய்தி கிடைக்குமா என்ற நப்பாசையில் போனையே பார்க்க, பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து பார்த்த கெளதம், ஜெய் அழைப்பதை பார்த்ததும், சட்டென்று கால்லை அட்டென்ட் செய்து பேச, “ஹலோ! சொல்லு ஜெய். பாப்பா கிடைச்சுட்டாளா?” என்று ஆர்வமாகக் கேட்க, அந்தப் பக்கம் ஜெய்யோ சோர்வுடன், “இல்லண்ணா. பாப்பா கிடைக்கல. நானும் ஆராவும் பைக்கிலப் போய்த் தெரிஞ்ச இடம் எல்லாம் தேடிட்டோம். எங்கையும் பாப்பா கிடைக்கல.” என்று சொல்லி நிறுத்தியவன், “நீங்க எங்கையாவது பாப்பாவை பார்த்தீங்களா?” என்று ஆர்வமாகக் கேட்க, “இல்லை ஜெய். தெரு தெருவா போய்ப் பார்த்துட்டோம். எங்கயும் காணோம். என்ன செய்றதுன்னு தெரியல. ரொம்பப் பயமா இருக்குடா.” என்று சொன்னவனின் குரல் கரகரக்க, “கவலைபடாதண்ணா ப்ளீஸ். பாப்பா கிடைச்சிடுவா. பேசாம போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் ண்ணா. இப்போ அதைவிட்டா வேற வழியில்லை.” என்று ஜெய் தயக்கத்துடன் சொல்ல, இங்கே கௌதமிற்கோ, குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல், போலிஸ் போகும் அளவிற்குச் சூழ்நிலை வந்துவிட்டதே என்றதும், கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது.

பதில் பேசாமல் அமைதியாக இவன் இருக்க, ஜெய்யின் இரண்டு மூன்று அழைப்பிற்குப் பின்பே, “சரி ஜெய். நான் போலிஸ் ஸ்டேஷன் போய்க் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

Advertisement

கெளதம் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, போலிஸ் என்றதுமே நெஞ்சுக்குள் இன்னும் கலக்கம் கூடியது. செய்தித் தாள்களில் படித்த, குழந்தை கடத்தல் சம்பந்தமான செய்திகள் எல்லாம் நினைவு வர, உடலில் ஒரு நடுக்கம் உண்டானது.

போன் பேசிவிட்டு மிருதுளா பக்கம் திரும்பியவன், ஜெய் சொன்னதைச் சொல்லி, “அவன் சொல்றபடி ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம். உங்களைப் போய் வீட்டுல விட்டுட்டு நானும் ஜெய்யும் போலிஸ் ஸ்டேஷன் போறோம்.” என்று சொல்ல, அவளோ “இல்லை வீட்டுக்கு போக வேண்டாம். அதுக்கெல்லாம் இப்போ டைம் இல்லை. இப்போவே நானும் நீங்களும் போலிஸ் ஸ்டேஷன் போகலாம்.” என்று உறுதியாகச் சொல்ல, அவனோ பெண்ணாக அவளை எப்படி அழைத்துக்கொண்டு ஸ்டேஷன் போவது என்ற தனது என்னத்தைச் சொல்ல, மிருதுளாவோ, “அதான் நீங்க இருக்கீங்கள்ள. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.” என்று முடிவாகச் சொல்லிவிட, அவளின் மேல் இருந்த வியப்பு இவனுக்கு இன்னுமே அதிகமானது. மூன்றாம் மனிதனான தன்னை இவ்வளவு நம்புகிறாளே! என்று.

அடுத்து ஜெய்யிற்கு அழைத்தவன், மிருதுளாவுடன் ஸ்டேஷன் செல்வதாகச் சொல்ல, அவனுமே தனது ஆட்சேபனையைத் தெரிவிக்க, ஒருவழியாகப் பேசி சமாதனம் செய்துவிட்டு வைத்தவன், வண்டியை தங்களது பகுதி காவல் நிலையத்தை நோக்கி செலுத்தினான். கெளதம் காவல் நிலையம் போய்ச் சேர்வதற்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தான் ஜெய். ஏன் என்று கேட்க, அவர்களைத் தனியாக அனுப்ப மனமில்லாமல் வந்துவிட்டதாகப் பதிலளித்தான். அடுத்து மூவரும் ஸ்டேஷனுக்குள் போக, காவல் ஆய்வாளர் வெளியே சென்றிருந்ததால் சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தனர். பத்து நிமிடம் கழித்து ஆய்வாளர் வந்ததும், மூவரையும் உள்ளே போகச் சொன்னார் கான்ஸ்டபிள்.

ஆய்வாளரிடம் நடந்த விவரத்தை கெளதம் சொல்ல, அவரோ, “என்ன சர். படிச்சவங்களா இருக்கீங்க?! கவனமா இருக்க வேண்டாமா? நியுஸ்ல எவ்வளவு செய்தி வருது.” என்று அறிவுரை வழங்கிக்கொண்டே தாளில் விவரங்களை எழுத, கெளதமோ, “அபார்ட்மெண்ட் உள்ள தான் சர் இருந்தேன். பக்கத்தில் இருந்த வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள பாப்பாவை காணோம்.” என்று வருத்ததுடன் கூற, “கைல வச்சுட்டு இருந்ததாலே எதாவது பொய் சொல்லி கடத்திட்டு போயடுறாளுங்க. போன வாரம் கூட, ஹாஸ்பிட்டல்ல குழந்தை பிறந்த பொண்ணுகிட்ட ஆயான்னு பொய் சொல்லி குழந்தையை கடத்திட்டு போய்ட்டாளுங்க. நீங்க என்னடானா?!! இந்தக் காலத்தில குழந்தை கூட ஒரு பொருள் மாதிரி ஆகிடுச்சு. திருடிட்டுப் போய்க் குழந்தை இல்லாத பணக்காரன்கிட்டையோ, இல்லை எதாவது தப்பான கேங்கிட்டையோ பணத்துக்கு வித்துடுறாங்க. இப்படி இருக்கச்ச, நாம உஷாரா இருக்க வேண்டாமா சர்.” என்று அவர் மேலும் பயத்தைக் கொடுக்க, மூவருக்கும் வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது. கவலையுடன் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டனர். மிருதுளாவிற்கோ அதுவரை இருந்த சிறு நம்பிக்கையும் அடிபட்டது போல இருக்க, மொளுக்கென்று கண்களில் நீர் நிறைந்தது.

பேசிக்கொண்டே எழுதிமுடித்த ஆய்வாளர், குழந்தையின் அங்க அடையாளங்களைக் குறித்துக்கொள்ளவேண்டி, “குழந்தை என்ன ட்ரெஸ் போடிருந்தது?!” என்று கேட்க, “அதுவந்து, …” என்று கெளதம் யோசிப்பதற்குள், “கருப்பு கலர் பிராக்கில வெள்ளை கலர் பூ போட்டிருக்கும் சர்.” என்று சட்டென்று பதில் சொன்னாள் மிருதுளா. அடுத்து ஏதாவது நகை அணிந்து இருந்தாளா என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், “ஒன்னும் போடல சர்.” என்று மிருதுளாவே பதில் அளிக்க, நிமிர்ந்து இவர்களைப் பார்த்த ஆய்வாளர், மிருதுளாவாய் பற்றி விசாரிக்க, எதிர் வீடு என்று பதிலளித்தான் கெளதம். நம்பமாட்டாமல் அவளை ஒரு பார்வை பார்த்த அதிகாரி, அடுத்து எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு குழந்தையின் புகைப்படத்தையும் பெற்றுக்கொண்டு, புகர் பதிவு செய்யப்பட்டதிற்கான ரசீதை கொடுத்து, தகவல் தெரிந்தால் சொல்லி அனுப்புவதாகக் கூறி அனுப்பிவைத்தார்.

வெளியே வந்தவர்களுக்கோ, அவர் கடைசியாகச் சொன்ன, “குழந்தை கழுத்துல நகை போடாததால, ஒன்னு எங்கையாவது கேங்கிட்ட வித்து இருப்பாங்க, இல்லை குழந்தை இல்லாதவங்ககிட்ட விக்க ட்ரை பண்ணலாம்.” என்று கூறியதே, மனதுக்குள் ஓடி மேலும் பயத்தை உண்டாக்கியது. அதன் பிறகு ஜெய் தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப, மிருதுளாவும் கௌதமும் காரில் கிளம்பி சென்றனர். காவல் அதிகாரி சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தில், ஜன்னல் பக்கம் திரும்பி இருந்த மிருதுளா சத்தமில்லாமல் அழுது கொண்டிருக்க, அவளைக் கவனித்த கௌதமிற்கும், ஒரு தந்தையாகக் குழந்தையை நினைத்து உள்ளுக்குள் பயமாக இருந்தது.

குழந்தை கிடைப்பாளா? அதன்பின் இவர்கள் வாழ்வில் நடக்கபோகும் மாற்றங்கள் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!