Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 12.2

அத்தியாயம் 12(2)

பொன்னம்மா சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கௌதமிற்கு, அவர் சொல்வது நிதர்சனமான உண்மை என்று புரிந்தது. ஆண் பிள்ளைகள் அம்மா இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் பெண் பிள்ளைகளுக்கு அம்மா என்ற உறவு நிச்சயம் வேண்டும் என்பதை இவன் நன்கு அறிவான். ஆனால் ‘நான் எப்படி வேறொரு கல்யாணம்?! அதுவும் மிருதுளாவை?! என்ற கேள்வி எல்லாவற்றுக்கும் முன்வந்து நின்று அவனை யோசிக்கவிடாமல் செய்தது.

யோசனையுடன் நின்று கொண்டிருந்த மகனிடம் வந்த சேகர், “பொன்னம்மா சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ப்பா. நமக்கு ஒரு துணை இல்லாம கூட இருந்திடலாம், ஆனா புள்ளைங்களுக்குப் பெத்தவங்க ரெண்டு பெரும் வேணுமப்பா. நம்ம காதலுக்கு, அன்புக்குத் துரோகம் செய்யகூடாதுன்னு நினைச்சுக் கல்யாணம் செஞ்சுக்கமா இருந்தாலும், நாளைக்கு வயசான பிறகு உன் வாழ்கையைத் திரும்பி பார்க்கும்போதும், பிள்ளைங்க நிலைமையைப் பார்க்கும்போதும் அவங்களுக்காகவாவது கல்யாணம் செஞ்சுருக்கனுமோன்னு நினைக்கத் தோணும். அதுலையும் பொன்னமா சொல்றது ரொம்பச் சரி கெளதம். பெண் பிள்ளைங்களுக்கு அம்மா கண்டிப்பா வேணும். மிருதுளா நம்ம தேஜா மேல ரொம்பப் பாசமா இருக்கா. நேத்து அந்தப் பொண்ணு பேசுனதை கேக்கும்போது, தேஜாக்கு எவ்வளவு முக்கியத்துவம் அந்தப் பொண்ணு கொடுக்கிறான்னு புரிஞ்சிக்க முடியுது. மிருதுளா மாதிரி ஒரு பொண்ணு நம்ம தேஜாக்கு அம்மாவா வந்தா ரொம்பச் சந்தோஷமா இருக்கும் ப்பா. கடைசிக் காலத்தில, எனக்கும் என் பேத்திய நினைச்சு எந்தக் கவலையும் இருக்காது.” என்றவர், “எனக்கும் இந்தக் கல்யாணத்தில முழுச் சம்மதம் கெளதம். நீ சரி சொன்னா நான் அவங்க பாட்டிகிட்ட பேசுறேன்.” என்று சொல்ல,

“எல்லாரும் தேஜாவை பத்தியே பேசுறீங்களே, என்னை நினைச்சு பார்த்தீங்களா? அதெப்படிப்பா யாழினியை மறந்துட்டு என்னால இன்னொரு வாழ்க்கை வாழ முடியும். அவ தான ப்பா என்னோட வாழ்கையே!!” என்று கேட்டவனின் குரல் உடைந்திருக்க,



Advertisement

“இதையே நானும் கேக்கலாமே கெளதம். உன்னை மட்டுமே நினைச்சு பார்க்குறியே. உன் பொண்ணு தேஜாவை பத்தி நினைச்சு பாரு. என் மருமக யாழினியை நான் மறக்கல கெளதம். அவ எனக்கு மருமகளா இருந்ததை விட மகளா தான் இருந்தா. அதில நான் என்னைக்குமே அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன். உனக்கும் அவளை அவ்வளவு சுலமபமா மறக்க முடியாது. ஆனா அதுக்காக அவளையே நினைச்சிட்டு தேஜாவோட லைப்ப ஸ்பாயில் செஞ்சுடாத ப்பா. யாழினி இருந்திருந்தா தேஜாவை பத்தி எனக்குக் கவலையே இருக்காது. ஆனா அவ இல்லை. ஆனா அதுக்காகத் தேஜாவுக்கு அம்மா இல்லாம இருக்கனுமா? நீ மட்டும் போதுமா கெளதம்? பொன்னம்மா சொல்ற மாதிரி பொண்ணுங்களுக்கு அம்மா வேணும் கெளதம். அந்த விஷயத்தில எந்தக் காம்ப்ரமைஸ்சும் நாம செய்ய முடியாது. அப்பான்ற உறவும் அம்மான்ற உறவும் வேற வேற பாதிப்பை பிள்ளைங்க மேல கொடுக்கும். நாமளே எத்தனையோ குழந்தைங்களைப் பார்க்கலையா, அம்மாவோ அப்பாவோ இல்லைன்னு எவ்வளவு கஷ்டபடுறாங்க. இப்பவே குழந்தையைப் பார்த்துக்க நாம கஷ்டபடுறோம். நீயும் ஆஃபீஸ் போயிட்டு வர. நாளைக்குத் தேஜா கொஞ்சம் வளர்ந்ததும், உன்னால அவளைக் கவனமா பார்த்துக்க முடியுமான்னு யோசிச்சுபாரு கெளதம். உன்னோட வொர்க் லோடில, அவளைக் கவனிக்காம விட்டா, அவ பாதை மாறிப்போகக் கூட வழி இருக்கு. இதை நான் உனக்குப் பயத்தைக் கொடுக்கச் சொல்லல. இப்போ இருக்கிற சமூகத்தில, அதுதான் உண்மை. குழந்தைங்கள வளர்க்கிறது ஒருநாள் ரெண்டு நாள் விஷயம் இல்லை ப்பா. அது வாழ்நாள் ஒப்பந்தம் மாதிரி. பெத்தவங்க இருக்கிற வரைக்கும் அவங்க பிள்ளைங்களுக்கு ஒவ்வொரு நேரத்தில ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கிறாங்க. நான் இருக்கிற வரைக்கும் நான் தேஜாவை பார்த்துப்பேன். ஆனா அதுக்கபுறம்?! எல்லா நேரத்திலையும் உன்னால் பொண்ணு கூட இருக்க முடியாது ப்பா. அவளோட எல்லா உணர்வுகளையும் உன்னால புரிஞ்சிக்க முடியாது கெளதம். குழந்தைக்காகவாவது நீ கல்யாணம் செஞ்சுக்கத் தான் வேணும் கெளதம். பல மாசமாவே மிருதுளாவை பார்த்துட்டு தான் இருக்கேன். அப்படிப்பட்ட ஒரு பொண்ணை இழக்க நான் விரும்பல. நம்ம வீட்டுக்கு அந்தப் பொண்ணு மருமகளா வந்தா நான் ரொம்பச் சந்தோஷபடுவேன்.” என்று பதிலளித்தார்.

சொல்லி வைத்ததுபோல எல்லோரும் ஒரே நேரத்தில் திருமணத்தைப் பற்றிப் பேசவும் சற்றே எரிச்சல் அடைந்த கெளதம், “எல்லாரும் என்னைக் கார்னர் பண்றமாதிரி இருக்குப்பா. ப்ளீஸ் எனக்குக் கொஞ்சம் யோசிக்கவாவது டைம் கொடுங்க.” என்று கெஞ்ச, “சரி கெளதம். நல்லா யோசி. ஒரு நாள் இல்லை ஒரு வாரம்னாலும் எடுத்துக்கோ, ஆனா இந்த விஷயத்தில இருக்கிற எல்லாத்தையும் யோசிச்சு ஒரு நல்ல முடிவை எடு. உன்னோட நினைப்புல தேஜாவை மறந்திடாத.” என்று பதில் சொன்ன சேகர் தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார். கௌதமிற்குத் தான் மண்டை குடைந்தது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான். அவனது தந்தையும் பொன்னம்மாவும் சொன்ன விஷயங்களை அவன் மனம் அசைபோட ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் அவன் மனம், யாழினியை நினைத்து முரண்பட்டாலும், தேஜாவை நினைக்கும்பொழுது அவர்கள் சொல்வது சரி என்று தோன்றியது. ஆனால் அந்தச் சரியை தான் அவன் காதல் கொண்ட மனம் யோசிக்கவிடாமல் செய்தது. ஏனோ இரண்டாம் திருமணம் செய்வது, யாழினிக்கு செய்யும் துரோகம் போல அவன் மனம் கற்பனை செய்தது. அதே நேரம் தேஜாவிற்கு மிருதுளா போல ஒரு அம்மா கிடைப்பது அவனைப் பொறுத்தவரை நிம்மதியான விஷயமாகத் தான் தெரிந்தது. பல மாதங்களாகவே மிருதுளாவின் நடவடிக்கைகளை, முக்கியமாகத் தேஜா விஷயத்தில், பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான். நாம் சில சமயம் அஜாக்கிரதையாக இருந்தாலும் அவள் அப்படி இருப்பது இல்லை. அதிலும் அன்று குழந்தைக்கு உடம்பு சரி இல்லாத பொழுதும், குழந்தை காணமல் போனபொழுதும் எப்படித் துடித்துப் போய்விட்டாள். குழந்தைக்கு ஒன்று என்றதும் என்னைக் கூட அவள் எப்படி முறைத்தாள் என்று தற்பொழுது நினைக்கையில், லேசாக புன்னகை அரும்பியது அவன் இதழில்.

Advertisement

இப்படி ஒரு சூழ்நிலையே வேறு ஒருவருக்கு வந்திருந்தால், நிச்சயம் மிருதுளா போன்ற ஒரு பெண்ணைக் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, கௌதமே சொல்லி இருப்பான். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை தனக்கு என்று வரும்போது, எதுவோ ஒன்று அவனைத் தடுத்து. அது யாழினி என்று நிச்சயம் அவனுக்குத் தெரியும்.

Advertisement

இவன் பாட்டுக்கு யோசித்துக் கொண்டிருக்க, அவன் அருகில் விளையாடி கொண்டிருந்த தேஜா, தவழ்ந்து தந்தையின் அருகில் வந்தவள் தன் கையில் இருக்கும் பொம்மையை அவனிடம் நீட்ட, மகள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பிய கெளதம், அவளிடம் இருந்து பொம்மையை வாங்கிகொண்டு அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள, அவளோ அவனது முடியை பிடித்து விளையாட ஆரம்பித்தாள். அதில் வலிப்பது போலப் பாவனைச் செய்தவன், “ஆஆ! அப்பாக்கு வலிக்குது செல்ல குட்டி.” என்று முகத்தைச் சுருக்க, குழந்தைக்கு என்ன புரிந்ததோ, அவன் முடியை விட்டுவிட்டு, வலித்த இடத்தை மெதுவாகத் தடவி கொடுத்தாள். அதில் நெகிழ்ந்து போனவன், அந்தப் பிஞ்சு கைகளைப் பிடித்து அதன் உள்ளங்கையில் முத்தம் வைக்க, அவள் மகளோ அழகாகச் சிரித்தாள்.

குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மிருதுளவின் முகம் கண்முன் வந்தது. அதிலும் நேற்று, “இனிமே தேஜா விஷயத்தில நான் தலையிட மாட்டேன்.” என்று சொல்லும்போது அவள் மனம் எவ்வளவு வேதனைப்பட்டது என்பதை இவனால் நன்றாக உணரமுடிந்தது. தேஜாவை பிரிந்து மிருதுளாவால் இருக்க முடியுமா? என்றாள் அதற்கு விடை நிச்சயம் இல்லை. இப்பொழுது இதை எல்லாம் நினைக்கும்போது, நேற்று காவல் நிலைய வாசலில் வைத்து, மிருதுளாவை பற்றியும் அவள் வாழ்க்கைக்குத் தேஜா இடையூறாக இருக்கவும் கூடாது என்று எடுத்த முடிவெல்லாம், இப்பொழுது பின்னுக்குச் சென்றது. மிருதுளாவின் தாய்மை உணர்வை தவிர்க்க இவனால் முடியவில்லை. அப்படிச் செய்தால் அவள் எவ்வளவு கஷ்டபடுவாள் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

இங்கே மிருதுளா வீட்டிலோ, அன்று இரவு உணவின்போது, “ஆரா, பக்கத்தில் ரெண்டு தெரு தள்ளி ஒரு லேடிஸ் ஹாஸ்டல் இருக்கு. அங்க போய் நான் பேசிட்டேன். நாளைக்கே நீ அங்க ஸ்டே செஞ்சுக்கலாம். நானும் ஆச்சியும் நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம். நிரந்தரமா. மறுபடியும் இங்க வரமாட்டோம். அப்புறம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ உங்க ஆபீஸ்ல சொல்லி சென்னைக்கு ட்ரேன்ஸ்பர் வாங்க பாரு….” என்று மிருதுளா சொல்லிக்கொண்டு போக, ஆராவிற்குச் சட்டென்று புரையேறியது.

Advertisement

இருமிக்கொண்டே, “என்னக்கா திடீர்ன்னு?!!!” என்று ஆரா விழிகளை விரிக்க, “நல்லா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்து இருக்கேன் ஆரா. நமக்கு இந்தப் பெங்களூர் வேண்டாம். சென்னைக்குப் போறது தான் எல்லாருக்கும் நல்லது.” என்று சொல்லிவிட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு செல்ல, அவள் பின்னோடு சென்ற ஆரா, “உனக்கு நல்லதுன்னு சொல்றியா அக்கா!” என்று அவளைப் பார்த்துக்கொண்டு கேட்க, மிருதுளாவோ இவள் முகத்தைப் பார்க்காமல், ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டவள், “அதெல்லாம் ஒன்னும் இல்லை. உன்னோட வேலைக்காகத் தான் இங்க வந்தோம். இப்படியே எத்தனை நாளுக்கு இங்க இருக்கிறது. அப்பா அம்மா அங்க தனியா இருக்காங்க. அவங்க சொல்றதையும் நினைச்சு பார்க்கணும். உனக்கும் வயசாகுது. சீக்கிரம் கல்யாணம் செய்யணும். எல்லாம் நினைச்சுதான் இப்படிச் சொல்றேன்.” என்று சொன்னவளை இடைமறித்த ஆரா, “எனக்கு இப்போ கல்யணம் வேண்டாம். நீ மொதல்ல சொல்லு. தேஜாவை நினைச்சு தான இங்க இருந்து போகணும்ன்னு சொல்ற?” என்று சரியாகப் பாயிண்ட்டை பிடிக்க, அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த மிருதுளா ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று தனது அறைக்குள் சென்றாள். பார்வதி தான் ‘இங்க என்ன நடக்குது?!’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆராவிற்குத் தான், தனது ஆசை எல்லாம் தவிடுபொடி ஆனது போல இருந்தது. ‘இந்த அக்கா ஏன் இப்படிச் செய்றா?!’ என்று நினைத்து பல்லை கடித்தாள். “இவகூடப் போராடுறதே எனக்கு வேலையா போச்சு. ஐயோ கடவுளே! இப்போ நான் என்ன செய்வேன். எதாவது செஞ்சு, அக்காவை போகவிடாம எப்படியாவது தடுக்கனுமே. என்ன செய்யலாம். எதாவது யோசிப்போம்.” என்று மண்டையைத் தட்டிக்கொண்டே உறங்க சென்றாள்.

அடுத்த நாள் மீண்டும் மிருதுளாவிடம் ஆரா பேசிப் பார்க்க, அவளோ தன் முடிவில் உறுதியாக இருந்தாள். வேறு வழியில்லாமல் தங்கள் பெற்றவர்களிடம் ஆரா பேச, அவர்களோ எப்போதடா இங்கு வருவார்கள் என்று காத்துக்கொண்டிருக்க, இந்தச் சந்தர்ப்பத்தை விடுவார்களா? ஆராவை நன்றாக டோஸ் விட்டவர்கள், மிருதுளா சொல்வது சரி, அதனால் அவள் சொல்வதுபோலச் செய்யும்படி சொல்லிவிட்டு மேற்கொண்டு இவள் பேச இடம் கொடுக்காமல் வைத்துவிட்டனர்.

மிருதுளாவின் உறுதியை பார்க்கும்பொழுது, அவள் சொன்னபடி செய்துவிடுவாளோ, தான் நினைத்தது நடக்காமல் அவள் இப்படியே தனியாக இருந்துவிடுவாளோ? என்ற எண்ணங்கள் எல்லாம் வர, வேறு வழியில்லாமல் கௌதமை தேடி சென்றாள் ஒரு முடிவோடு.

மாலை பார்வதியும், மிருதுளாவும் கிளம்பத் தயாராக, ஆராவும் சரியாக அந்த நேரம் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். வரும்பொழுது இவள் பார்வை வழக்கபோல எதிர்வீட்டு மேல் தான். அதற்குள் மிருதுளா இவளை அழைக்கவும் வீட்டுக்குள் சென்றுவிட்டாள். அடுத்து ஒரு மணிநேரத்தில் அனைவரும் கிளம்ப, பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த மிருதுளா எதிரில் நின்றிருந்த நபரை பார்த்து அதிர்ச்சியில் தனது கைகளில் இருந்த பெட்டிகளை நழுவவிட்டாள். அவள் பின்னால் நின்றிருந்த ஆராவோ, மனதுக்குள் ‘யாஹூ!!’ என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!