Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 23

அத்தியாயம் 23

சந்துரு, மிருதுளா இருவரும் திருமணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு ஊருக்கு வந்து சேர்ந்தனர். மணப்பெண்ணிற்கு, நலங்கு வைக்கும்பொழுது, மரியாதைக்காக மிருதுளாவும் பெண்ணுக்கு நலங்கு வைக்கப் போக, பெண்ணின் தாயோ, இவளை செய்யவேண்டாம் என்று பட்டென்று சொல்லிவிட, வருத்ததுடன் இவள் நிமிர்ந்து மீனாட்சியைப் பார்க்க, அவரோ யாரையோ சொல்வது போலப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, அங்கிருக்கும் பெண்கள் அனைவரும் தன்னைப் பற்றி அவர்களுக்குள் கிசுகிசுப்பது போல இவளுக்குத் தெரிய, அவமானத்தில் கண்கள் கலங்க, அதை வெளிகாட்டி கொள்ளாமல், அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள், மேலே தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

சந்துரு கூட விஷயம் அறிந்தும், இவளுக்கு ஆதரவாக ஒன்றும் சொல்லவில்லை. யாரையோ சொல்வது போலச் சுற்றித் திரிந்தான். கிட்டத்தட்ட காட்டுக்குள் அனாதையாக விடப்பட்டது போலத் தான், மிருதுளாவின் நிலைமை இருந்தது. எப்போதடா இங்கிருந்து கிளம்பப் போகிறோம் என்று தான் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

இப்படி நாட்கள் சென்று, ஒரு வழியாகத் திருமணம், மறுவீடு என்று எல்லாம் முடிந்திருந்தது. அன்றொரு நாள், தன் அறையில் இருந்த மிருதுளாவை தேடி வந்தார் மீனாட்சி. வந்தவர், சந்துரு இல்லையா என்று கேட்க, “இல்லை அத்தை, அவர் எங்கேயோ வெளிய போயிருக்கார். என்ன விஷயம் அத்தை?” என்று இவள் பதில் கேள்வி கேட்க, அவரோ, சில நொடிகள் யோசனையில் இருந்தவர், “சரி அவன் இல்லாததும் நல்லது தான்.” என்று தனக்குள் சொல்லி கொண்டவர், அவளிடம், “நீயும் நானும் வெளிய போகணும். சீக்கிரம் ரெடி ஆகி, பத்து நிமிஷத்தில கீழே வா.” என்று கூறிவிட்டு செல்ல போக, “எங்க அத்தை போகணும்.” என்று கேட்டால் மிருதுளா.



Advertisement

மிருதுளா கேட்டதும் நின்று அவளை முறைத்தவர், “ம்ம், எங்க போறோம்னு சொன்னாதான் வருவியா?” என்று கோபமாகச் சொல்ல, “இல்லைத்தா, அது வந்து…” என்று தயங்கியவளிடம், “அங்க போய்ச் சொல்றேன். மொதல்ல சீக்கிரம் கிளம்புற வழியா பாரு.” என்று வெட்டுவது போலக் கூறிவிட்டு விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

‘இப்போ எதுக்கு இவ்ளோ கோபப்படுறாங்க அத்தை.’ என்று நினைத்தவள், ‘ஒருவேளை கல்யணம் சம்பந்தமா எதாவது இருக்கும்.’ என்ற எண்ணத்துடன், பத்து நிமிடத்தில் கிளம்பி கீழே வந்தாள். அதே நேரம் மீனாட்சியும் தயாராகி வந்தவர், மிருதுளாவை அழைத்துக்கொண்டு ஆட்டோ பிடித்துப் புறப்பட்டார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலான பயணத்துக்குப் பின், ஆட்டோ நிற்க, “வரவேண்டிய இடம் வந்தாச்சு. கீழே இறங்கு,” என்று சொல்லிவிட்டு ஆட்டோகாரனுக்குப் பணம் கொடுத்துவிட்டு இருவரும் இறங்க, அந்தக் கட்டிடத்தை நிமிர்ந்த பார்த்த மிருதுளா அதிர்ந்தாள். அவர்கள் வந்திருப்பது, மதுரையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை.

Advertisement

போர்டில் உள்ள எழுத்தை பார்த்ததுமே, உள்ளுக்குள் அதிர்ச்சியான மிருதுளா, ‘அத்தை இங்க எதுக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க? ஒருவேளை அவங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையோ?!’ என்று யோசனையுடனே, மீனாட்சியுடன் மருத்துவமனைக்குள் சென்றவளுக்கு என்னவென்று தெரியாமல் மனம் கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

Advertisement

உள்ளே சென்றவர், எதிர்பட்ட நர்சிடம், மருத்துவர் பெயரை சொல்லி கேட்க, நற்சோ, “உள்ள பேஷன்ட்ட பார்த்துட்டு இருக்காங்க. அப்படி உட்காருங்க.’ என்று சொல்லிவிட்டு செல்ல, மிருதுளாவுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார். எதிரில் சுவற்றில் இருந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்ததும், மிருதுளாவுக்குள் சந்தேகம் வர, “அத்தை, எதுக்கு இப்போ இங்க வந்திருக்கோம்?” என்று கொஞ்சம் பயத்துடன் மீனாட்சியிடம் கேட்க, திரும்பி இவளை பார்த்து முறைத்தவர், “உள்ள டாக்டரை பார்க்கும்போது புரியும்.“ என்று கூறியவர், செவிலியரிடம் ஏதோ கேட்கவென எழுந்து சென்றுவிட்டார்.

மீனாட்சி கோபமாகவும் அலட்சியமாகவும் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, ஓர் அளவுக்கு விஷயத்தை யூகித்த மிருதுளாவிற்கு அதிர்ச்சியும் அவமானமாகவும் இருக்க, அவரிடம் எதிர்த்து கேட்க என்று இவள் எழுந்து அவரை நோக்கி போக, அதற்குள் நர்ஸ் வந்து இருவரையும் உள்ளே அழைக்க, மிருதுளாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவரின் அறைக்குள் சென்றுவிட்டார் மீனாட்சி.

கூனிகுருகி போனது போல உணர்ந்த மிருதுளா, மீனாட்சியின் கட்டாயத்தில் கிட்டத்தட்ட இழுத்து வரபட, டாக்டர் முன் அமைதியாகச் சேரில் அமர்ந்தவள், தன் முகத்தை நிமிர்த்தவே இல்லை. “என்ன ப்ராப்ளம்?!” என்று மருத்துவர் கேட்டதும், மீனாட்சியோ, “என் மருமக, கல்யணம் ஆகி ரெண்டு வருஷம் மேல ஆகுது. இன்னும் குழந்தை உண்டாகல. அதான் இவளுக்கு எதுவும் குறை இருக்கான்னு செக்கு செஞ்சுட்டு போலாம்ன்னு வந்தோம் டாக்டர்.” என்று படபடவெனச் சொல்லிவிட, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும், நெருப்பில் குளித்தது போல உணர்ந்தாள் மிருதுளா.

Advertisement

மீனாட்சி சொன்னதும் மிருதுளாவை திரும்பி பார்த்த டாக்டர், “இவங்க சொல்றது உண்மையா மா?! இவங்க உங்க மாமியாரா?!” என்று டாக்டர் கேட்க, “நான் என்ன பொய்யா சொல்றேன். அவகிட்ட போய்க் கேட்டுட்டு இருக்கீங்க.” என்று மீனாட்சி இடைபுக, அவரை அமைதியாக இருக்கச் சொன்னவர், மிருதுளாவிடம் மீண்டும் கேட்க, அவள் ‘ஆமாம்’ எனபது போலத் தலையாட்டினாள்.

மிருதுளாவின் வயது, கணவனின் வயது போன்ற சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டவர், “ரெண்டு வருஷம்லாம் கவலை படுற அளவுக்குப் பெரிய பிரச்சனைலாம் இல்லை மா. ரெண்டு பேருக்கும் சின்ன வயசுதான். இப்போ இல்லாட்டி என்ன, கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கும். பயப்பட வேண்டாம்.” என்று பொறுமையாகச் சொல்ல, மீனாட்சியோ, “என்ன டாக்டர் நீங்க, கல்யணம் ஆகி ரெண்டு வருஷம் மேல ஆகுது. இத்தனை மாசமா ரெண்டு பெரும் ஒரே ரூம்ல தான் தூங்குறாங்க. இவளால பெத்துக முடிஞ்சா, எப்பவோ உண்டாகி இருந்திருக்க மாட்டாளா. நீங்க எதுக்கும் இவளை செக் செஞ்சு சொல்லிடுங்க.” என்று மிருதுளாவின் அந்தரங்கத்தைக் கடைவிரிக்க, அவளோ நொடிக்கு நொடி மனதளவில் இறந்து கொண்டிருந்தாள்.

மிருதுளாவின் முகத்தைப் பார்த்தே, அவளின் நிலைமையையும் அவளது உணர்வுகளையும் புரிந்துகொண்ட மருத்துவர், “இதுக்கு எதுக்கு இப்படிப் பேசுறீங்க மா. இப்போலாம் சர்வ சாதாரணமா மூணு வருஷம், அஞ்சு வருஷம் கழிச்சு கூடச் சிலருக்கு குழந்தை பிறக்குது. இதெல்லாம் பிரச்சையே இல்லை. நான் சில மருந்து மாத்திரை எழுதி கொடுக்கிறேன். எல்லாம் சரி ஆகிடும்.” என்று அவளுக்கு ஆதரவாகப் பேச, மீனாட்சியோ, கிட்டத்தட்ட அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், ஒரு கட்டத்தில், “நாங்க சொல்றதை தான நீங்க செய்யணும். அதுக்குத் தான இங்க டாக்டரா இருக்கீங்க. இப்போ நான் சொன்னதைச் செய்யபோரீங்களா இல்லையா. முடியலனா சொல்லுங்க நாங்க வேற ஹாஸ்பிட்டல் போறோம்..” என்று சண்டை போட்டவர், எழுந்துகொண்டு மிருதுளாவின் கையைப் பிடித்தும் எழுப்ப முயற்சிக்க, பயந்துபோன மருத்துவர், எங்கே இவர்களால், மானேஜ்மெண்ட்டில் தான் திட்டு வாங்க வேண்டுமோ என்று நினைத்தவர், மீனாட்சியைச் சமாதனம் செய்து அமரவைத்தவர், அவர் சொல்வது போலச் செய்வதாகச் சொல்லவும் தான், அமைதியானார். இவ்வளவு நடந்து கொண்டிருந்தும், மிருதுளா அமைதியாகத் தான் அமர்ந்திருந்தாள்.

அதன் பின் அந்த மருத்துவர், டெஸ்ட் செய்வதற்க்கான அப்ப்ளிகேஷன் பார்மை அவரிடம் கொடுத்தவர், ஒரு நர்சை அழைத்து, மிருதுளாவிடம் ஃபார்ம் பில் செய்து வாங்கிவிட்டு, டேட் அப்பாயின்ட் செய்து கொடுக்கும்படி சொல்லிவிட, இருவரும் நர்சை பின்தொடர்ந்து மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்தனர். போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர், “இப்படியும் ஒரு பொம்பளையா? இங்கயே இந்தக் கத்து கத்துதே. வீட்டில் அந்தப் பொண்ணை என்ன பாடு படுத்துதோ. எந்த விஷயத்தில பொம்பளைங்களுக்குப் பொம்பளை உறுதுணையா இருக்கணுமோ, அந்த விஷயத்தில தான் பொம்பளைங்களுக்குப் பொம்பளைங்க எதிரியா இருக்காங்க. குழந்தை லேட் ஆச்சுனா, ஒரு பெண்ணா, மாமியார் தான் மருமகளோட உணர்வுகளைப் புரிஞ்சு அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதைவிட்டுட்டு அவங்களே அவங்களை வீட்டுக்குள்ள கஷ்டபடுத்துறதும் இல்லாம, வெளியவும் அவமான படுத்துறாங்க. ஆக மொத்தம் பொம்பளைங்களுக்குப் பொம்பளைங்க தான் சில விஷயத்தில எதிரி.” என்று மனதுக்குள் நொந்து கொண்டார் அந்த மருத்துவர்.

வெளியே வந்ததும், ஃபார்ம் பில் செய்து நர்சிடம் கொடுத்தும், மனபாரத்தில், உடல் அசதியாக இருக்க, நர்சிடம் விவரத்தை சொல்லிக்கொண்டு ரிஷப்ஷனில் இருந்த இருக்கையில் சென்று மிருதுளா அமர்ந்துகொள்ள, இங்கே நர்சோ கம்ப்யூட்டரில் இவர்களுக்கான் தேதியை பார்த்தார். ஒரு குறிப்பிட்ட தேதியை சொன்னவர், கணவன் மனைவி இருவரும் வரவேண்டும் என்று சொல்லவும், “இதுக்கு எதுக்கு என் பையன் வரணும். அதெல்லாம் வர மாட்டான். அவனுக்கென்ன?” என்று அந்த நர்சிடம் மீனாட்சி வாக்குவததில் ஈடுபட, அவரோ, “இல்லை ம்மா. ரெண்டு பேரையும் தான் டெஸ்ட் பண்ணனும். அப்போதான் என்ன ப்ராப்ளம்ன்னு தெரியும். இது எங்க ஹாஸ்பிட்டல் ரூல்ஸ். புரிஞ்சுகோங்க.” என்று பதிலுக்குப் புரியவைக்க முயல, இதையெல்லாம் மீனாட்சி கேட்டால் தானே, அவர் பிடியில் நின்று கொண்டிருக்க, அப்பொழுது “இங்க என்ன சத்தம்?” என்ற குரல் பின்னால் இருந்து கேட்கவும், திரும்பிய மீனாட்சி ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார்.

எதிரில் நின்றிருந்தவளை பார்த்து, “சரண்யா கண்ணு!! எப்படி டா இருக்க?!!” என்று அவர் ஆசையுடன் அழைக்க, “நான் நல்லா இருக்கேன். அத்தை.” என்று பதிலுக்குக் கூறினாள் மீனாட்சியின் தம்பி மகள் சரண்யா. “ஒரு நிமிஷம் அத்தை.” என்றவள் நர்சிடம் திரும்பி என்ன விஷயம் என்று கேட்டு கொண்டவள், அந்தப் பார்மை வாங்கிகொண்டு, “என்னோட ரிலேட்டிவ் தான். நீ போ. நான் பார்த்துகிறேன்.” என்று அந்த நர்சை அனுப்பியவள், மீனாட்சியிடம் திரும்பி, “என்ன அத்தை இப்படி இளைச்சி போயிட்டீங்க? வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று நலம் விசாரித்தாள்.

“இங்க என்ன எல்லாரும் நல்ல இருக்கோம். என் தம்பி எப்படி இருக்கான்?”

“அப்பா நல்ல இருக்காங்க அத்தை.” என்றவள் பார்மில் தன் பார்வையைப் பதிக்க, “வயசுக்கு வந்தப்போ உன்னைப் பார்த்தது. அதுக்கு அப்புறம் இப்போதான் பார்க்கிறேன். என்ன உசரமா வளர்ந்திட்ட டா. ஹம்!! அன்னைக்கு ஏதோ சண்டை, உன் அப்பன் உங்களைக் கூட்டிகிட்டு, வீட்டை விட்டு வெளிய போய்ட்டான். அதுக்கு அப்புறம், நீயாவது என்னைப் பார்க்க வந்திருக்கக் கூடாதா கண்ணு?” என்று மீனாட்சி கேட்கவும், நிமிர்ந்து அவரைப் பார்த்தவளின் கண்களில் என்ன இருந்ததோ, ஆனால் குரலில் அன்பு அதிகமாகவே இழையோடியது. “நாங்க என்ன அத்தை பண்றது, அன்னைக்குப் ஃபுள்ளா உங்களைப் பார்க்கணும்னு, நான் எப்படி அழுதேன்னு தெரியுமா. ஆனால் அப்பா விடேவே இல்லை. அதுக்கு அப்புறம் நாங்க வெளியூர் போய்ட்டோம். பிறகு ஸ்க்கூல், காலேஜ், வேலைன்னு அப்படியே டைம் போய்டுச்சு அத்தை.” என்றாள் சோகத்துடன்.

“அழாத டா. ஏதோ தெரியாம அப்படிச் சொல்லிட்டேன். அதுக்கு இப்படியா உங்கப்பன் பொசுக்குனு கோச்சிகிட்டு போவான். எல்லாம் உங்க அம்மா வேலையா தான் இருக்கும். அவ தான் எதாவது சொல்லி கொடுத்திருப்பா.”

“அப்படிலாம் இல்லை அத்தை. என்ன இருந்தாலும் அப்பாவை பார்த்து நீங்க வெளிய போன்னு சொல்லி இருக்கக் கூடாது. யாரா இருந்தாலும் கோவம் வரதான செய்யும்.”

“ஹம்! அன்னைக்கு என் நாக்குல என்ன இருந்ததோ! இனி பழைய விஷயத்தைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம். அதை விடு கண்ணு. நான் கூடிய சீக்கிரத்தில வீட்டுக்கு வரேன்.“ என்றவர் தற்பொழுது மருத்துவமனைக்கு வந்திருக்கும் காரணத்தையும், நர்சிடம் பேசி கொண்டிருந்த விஷயத்தையும் சொன்னவர், “நீ சொல்லு டா மா. இந்த டெஸ்டு செய்றதுக்கு எதுக்கு என் மவன் வரணும். அவனுக்கு என்ன, சிங்கம். குறை எல்லாம் இவகிட்ட தான் இருக்கும். நீ ஒருவார்த்தை அந்த நர்சுகிட்ட சொல்லு கண்ணு.” என்று கூற,

“இல்லை அத்தை, இது எங்க ஹாஸ்பிட்டல் ரூல்ஸ். நாங்க அதை மீற முடியாது. மீறி எதாவது செஞ்சு அது பிரச்சனை ஆச்சுனா, முதலாளிக்கு தெரிஞ்சிது, வேலையை விட்டு தூக்கிடுவாரு. நீங்க கவலை படாதீங்க அத்தை. அத்தான வர சொல்லுங்க. நான் பார்த்துகிறேன்.”

“அப்படியா மா. சரி டா, நான் அவனையும் வர சொல்றேன். நீ பார்த்துக்கோ.”

“நீங்க கவலை படாதீங்க அத்தை. எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன். சரி உங்க மருமக எங்க?”

“அவளா, அங்க முன்னாடி உட்கார்ந்து இருக்கா.” என்றவர், “உன்னைத் தான் என் மவனுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கணும்ன்னு ஆசையா இருந்தேன். அதுக்குள்ள என்னனமோ நடந்து, இப்போ எவளோ ஒருத்தியை கல்யாணம் செஞ்சுக்கணும்னு என் மவனுக்குத் தலையெழுத்து.“ என்று இவர் பேசிக்கொண்டே வர, ரிஷப்ஷன் ஏரியா வரவும், அங்கே அமர்ந்திருந்த மிருதுளாவை காட்டி, “இவ தான் சந்துரு பொண்டாட்டி. பேரு மிருதுளா.” என்று அறிமுகம் செய்யவும், தன்னைக் கேள்வியாகப் பார்த்துக்கொண்டிருந்த மிருதுளாவின் முன் கையை நீட்டியவள், “ஹாய் மிருதுளா! ஐயம் சரண்யா. இவங்க தம்பி பொண்ணு.” என்று புன்னகையுடன் சொல்ல, தயக்கத்துடன் அவளது கரங்களைப் பற்றிய மிருதுளா, பதிலுக்கு ஹாய் சொல்ல, சிநேகமாகச் சில நிமிடங்கள் அவள் பேச, அப்பொழுது மீனாட்சி, சரண்யாவை தான் தன் மகனுக்கு மனம் முடிக்க நினைத்திருந்ததைச் சொல்லி மேலும் மிருதுளாவின் மனதை புண்படுத்தினார்.

ஒருவழியாகப் பேசி முடித்துவிட்டு இருவரும் ஆட்டோவில் கிளம்பி செல்ல, போகும் அவர்களையே பார்த்திருந்த சரண்யாவின் கண்களில் குரோதம். ‘நாட்டமை வீட்டுக்கு மருமக ஆகிட்டா, அதிகார பலம் இருக்குன்னு, என்னவேனா பேசுவியா! உங்கவீட்டுக்கு நாங்க எந்த வகையில குறஞ்சிட்டோம். அன்னைக்கு நடந்ததை நான் இன்னும் மறக்கல. உன்னை என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். பலவருஷம் கழிச்சு இப்போ தான் எனக்குச் சான்ஸ் கிடைச்சிருக்கு. இனி என்ன பண்றேன்னு பாரு.‘ என்று மனதுக்குள் கருவி கொண்டவள் தனது வேலையைப் பார்க்க சென்றாள்.

மீனாட்சியும் மிருதுளாவும் வீட்டிற்குத் திரும்பி வந்த நேரம், சந்துருவும் வர, இரவு உணவு முடிந்ததும், மீனாட்சி விவரத்தை தன் மகனிடம் கூறிவும் அவனுக்குள் ஒரு நொடி திக் என்று இருந்தது. “இப்போ எதுக்கு மா இந்த வேலையெல்லாம். குழந்தை உண்டாகும்போது உண்டாகட்டும். எப்போ பாரு எதுக்கு இதையே பேசிட்டு இருக்கீங்க.” என்று எறிந்து விழுந்தான்.

“என்னடா இப்படிச் சொல்ற, ஊருக்குள்ள அவனவன் கல்யாணம் ஆகி, அடுத்தப் பத்து மாசத்தில புள்ளைய பெத்துகிறான். இங்க என்னடான்னா….” என்றவர் பேசிப் பேசியே ஒருவழியாக அவனைச் சம்மதிக்க வைத்தவர், அவர்கள் போக வேண்டிய தேதிய தெரிவித்துவிட்டு சரண்யாவை அங்குப் பார்த்ததைப் பற்றியும் சொல்ல, அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டவனிடம், மேலும் சில நிமிடம் பேசிவிட்டு சென்றார்.

நர்ஸ் குறித்துக் கொடுத்திருந்த நாளில், மிருதுளாவும் சந்துருவும் மருத்துவமனை சென்றனர். சரண்யாவிற்கு ஏற்கனவே தொலைபேசியில் விவரம் தெரிவிக்கபட்டதால், இவர்கள் வரவும் வாசலுக்குச் சென்று அழைத்து வந்தவள், தன்னுடைய பிரத்யேக அறைக்குச் சென்று உட்கார வைத்தாள். அவர்களுக்குக் குடிக்கச் சொல்லிவிட்டு, “அப்புறம் அத்தான் எப்படி இருக்கீங்க?” என்று புன்னகையுடன் சரண்யா கேட்க, “நான் நல்ல இருக்கேன் டா. நீ எப்படி இருக்க? வீட்டில மாமா அத்தை எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று பதிலுக்குக் கேட்டவனிடம் மேற்கொண்டு பொதுவாக நல விசாரிப்புகளைப் பேசிக் கொண்டிருந்தவள், அவனின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து, “எதுக்கு அத்தான் இப்படி டென்ஷனா இருக்கீங்க. கூல். ரிலாக்ஸா இருங்க. ஒன்னும் ப்ரோப்ளம் இருக்காது.” என்றாள் ஆறுதலாக.

தன் ஒரே தம்பியின் மகளைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்து, பிறந்தவீடு சொத்தை கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக, சரண்யாவை சந்த்ருவிற்குத் திருமணம் செய்ய மீனாட்சி ஆசைப் பட்டிருக்க, இவளுக்கோ, சிறு வயது முதல் பார்த்து பழகி, பிரமித்த ஆத்தானின் அழகில் மயங்கி, அந்த வயதில் அவன் மேல உள்ள க்ரேசில் கல்யாணம் செய்துகொள்ள நினைத்திருந்தாள். ஆனால் இரண்டு பேர் நினைத்தும் நடக்கவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கும் சரண்யாவிற்கு, காதலை விட, பழிவாங்கும் வெறிதான் அதிகமாக இருந்தது. அதை எந்த வகையிலாவது தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கவும், நர்ஸ் வந்து டெஸ்டிற்கு அழைக்க, அடுத்தச் சில மணிநேரத்தில் இருவருக்கும் டெஸ்ட் எடுத்து முடிக்கப்பட்டது. ரிசல்ட் வர ஒருவாரம் ஆகும் என்பதால், “அவ்வளோதான் முடிஞ்சது. ரிசல்ட் வர ஒரு வாரம் ஆகும். வந்ததும் நானே கால் பண்ணி சொல்றேன் அத்தான்.” என்று சரண்யா சொல்ல, சரி என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

இதோ ஒருவாரம் கடந்தது. அவசர வேலையாகச் சந்துரு சென்னை கிளம்பி சென்று விட்டதால், மிருதுளாவும் மீனாட்சியும் தான் மருத்துவமனைக்குச் சென்றனர். ரிசல்ட் வந்ததுமே டாக்டரை சென்று பார்த்து விஷயத்தைத் தெரிந்துகொண்ட சரண்யா, இதுபற்றி அவர்களிடம் பக்குவமாகப் பேசிக் கொள்வதாகக் கூறி, அந்த ரிபோர்ட்டை வாங்கிக்கொண்டு தன் அறையில் காத்திருக்க, இருவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.

தன் முன் கலக்கத்துடன் அமர்ந்திருக்கும், மிருதுளாவை சோகமாகப் பார்த்த சரண்யா, “ரெண்டு பேருக்கும் மேஜரா எதுவும் பிரச்சனை இல்லை மிருதுளா. பட், உங்களுக்கு fallopian tubes ல அடைப்பு இருக்கலாம்னு ஒரு டவுட் இருக்கு. அதுக்கு ஒரு சின்ன டெஸ்ட் செய்ய வேண்டி இருக்கு. அதுல பிளாக் இருக்கிறது கண்பிர்ம் ஆச்சுனா, அதுக்கு அப்புறம் ட்ரீட்மென்ட் போகலாம்.” என்று சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு, மீனாட்சி சொல்வது போலத் தப்பு நம் மேல் தானா என்று நினைக்கையில் கொஞ்சம் கலக்கமும், எல்லாம் சரி ஆகிட வேண்டும் என்ற பயமும் ஏற்பட்டது.

ஆனால் மீனாட்சியோ, சரண்யா சொன்னதைக் கேட்டதும், “நினைச்சேன், இவளுக்குத் தான் எதாவது குறை இருக்குன்னு. இப்படி உடம்புல குறைய வச்சுக்கிட்டு தான், அதை மறைச்சு என் பையன் தலையில கட்டி வச்சுட்டீங்களா. இப்படி அநியாயமா ஏமாத்திட்டீங்களே டி.” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, “அத்தை ப்ளீஸ் கத்தாதீங்க. இது ஹாஸ்பிட்டல். இதெல்லாம் பெரிய குறையே இல்லை. சரி பண்ணிடலாம்.“ என்று அவரைப் போராடி சமாதனம் செய்தவள் “நீங்க கொஞ்சம் வெளிய இருங்க. இல்லன்னா என்னைத் தெளிவா சொல்ல விட மாட்டீங்க.” என்று அவரை வெளியே அனுப்பி வைத்தாள்.

மீனாட்சி வெளியே போனதும், “அத்தை சொன்னதை எல்லாம், மனசில போட்டுக்காதீங்க மிருதுளா. இந்தக் காலத்தில இதெல்லாம் பயப்படுற அளவுக்குப் பெரிய விஷயம் இல்லை. ஒரு சின்ன ட்ரீட்மென்ட் செஞ்சா போதும், அப்புறம் நீங்க உடனே கன்சீவ் ஆகலாம்.” என்று சரண்யா சொல்ல, கலங்கிய தன் கண்களைத் துடைத்து கொண்டவள், முழு விவரத்தை கேட்கவும், “fallopian tubes தான் உங்க uterus and ovaries ah connect பண்ணுது. அதுவழியா தான், egg, travel செஞ்சு உங்க கர்ப்பபைக்கு வரும். அதுமட்டுமில்லாம, sperm – egg fertilization அந்த tubeல தான் நடக்குது. Sperm, egg ah மீட் பண்ண, அந்த tubeல அடைப்பு இருக்ககூடாது. இருந்தா fertilization நடக்காது. Fallopian tubeல பிளாக் இருக்கான்னு கண்டுபுடிக்க, hysterosalpingographyன்னு ஒரு டெஸ்ட் பண்ணுவாங்க. அடைப்பு இருக்கிறது கண்பிர்ம் ஆச்சுனா, selective salpingography procedure பண்ணுவாங்க.” என்று விளக்கமாகச் சரண்யா கூற,

மிருதுளா தயக்கமாக, “இது மேஜர் இல்லை மைனர் ஆபரேஷன்னா?” என்று கொஞ்சம் மிரட்சியுடன் கேட்க, அவள் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து, “நீங்க பயபடுற மாதிரி, மேஜர் ஆபரேஷன்லாம் இல்லை. Laproscopy மாதிரி சின்னது தான். Catheter ன்னு ஒரு சின்ன ட்யுப்பை உங்க vagina வழியா இன்சர்ட் பண்ணுவாங்க. மோஸ்ட்லி வலி இருக்காது. சில சமயம் சின்னதா இருக்கலாம். ஒரு அரைமணிநேர procedure அவ்ளோதான். டோன்ட் பேணிக் மிருதுளா.“ என்று அவளைச் சமாதனம் செய்தவள், மருத்துவராக மேலும் சில அறிவுரைகளைக் கூறினாள். அடுத்து அவளிடம் சில ஃபார்ம்ஸ்களில் கையெழுத்து வாங்கிகொண்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனைக்கு வர சொல்லி அனுப்பிவைத்தாள். இதில் இருக்கும் சூழ்ச்சி தெரியாமல், மருத்துவர் என்று அவளை நம்பி, நம்பிக்கையுடன் கிளம்பி சென்றாள் மிருதுளா.

ஊருக்குச் சென்றிருந்த சந்துரு, திரும்பி வந்திருக்க, அவனிடம் சரண்யா சொன்ன விவரங்களை மீனாட்சி சொல்லவும், அவனோ, பக்கத்தில் நின்றிருந்த மிருதுளாவை திரும்பி குற்ற பார்வை பார்க்க, அவள் தலையைக் குனிந்துகொண்டாள். மேலும், சரண்யா சொன்ன ட்ரீட்மெண்டை பற்றியும் எடுத்து சொல்லவும், சரி என்று சம்மதம் சொன்னான் அவன். சரண்யா தனிமையில் சொன்ன விஷயங்களையும் சந்துருவிடம் பகிர்ந்து கொண்டாள் மிருதுளா.

அத்தோடு தனது பெற்றோரிடமும் விஷயத்தைக் கூறினாள். அதைக் கேட்டு சித்ரா அதிர்ச்சியும் கலக்கமும் அடைய, “பெரிய ப்ரோப்ளம் இல்லைன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க ம்மா. எல்லாம் சரி ஆகிடும்.” என்று மிருதுளா சமாதனம் சொல்ல, “நம்ம குலதெய்வத்துக்கு ஒரு வேண்டுதல் வச்சுடறேன். எல்லாம் சரி ஆகி சீக்கிரம் நீ உண்டாகணும் டா. நானும் அப்பாவும் அங்க கிளம்பி வரோம்.” என்று பேசி விட்டு வைத்தவர், உடனடியாக ஆராவை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று தன் மகளின் நிலையைக் கூறி, மனமுருக வேண்டுதல் வைத்தார்.

அடுத்து ஒரு சில வாரங்களில், சரண்யா மிருதுளாவை சிகிச்சைக்கு வரச் சொல்ல, சித்ராவையும், மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றாள். அங்கே சென்றதும், அன்றைக்குப் பார்த்த அந்த டாக்டர், “உனக்கு எல்லாம் ஓகே தான மா?” என்று கேட்கவும், அவர் எதற்குக் கேட்கிறார் என்று தெரியாமல் இவள் “ஓகே டாக்டர்.” என்று சொல்ல, அவர் மிருதுளாவிடம் சில ஃபார்ம்ஸ்களைக் கொடுத்துப் பில் பண்ண சொல்ல, பக்கத்தில் நின்றிருந்த சரண்யா, தானே அதை வாங்கிப் ஃபில் செய்து கொடுத்தாள். சரண்யாவை முழுவதுமாக நம்பி அடிமுட்டாள் தனம் செய்தாள் மிருதுளா.

மிருதுளாவுக்கு உள்ளே ட்ரீட்மென்ட் நடந்துகொண்டிருக்க, பயத்துடன் வெளிய சித்ரா அமர்ந்திருக்க, அவரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை மீனாட்சி. கிட்டத்தட்ட அரைமணிநேரம் கழித்து, வெளியே வந்த சரண்யா, சிறிது நேரத்தில், மிருதுளாவை அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல, அடுத்த ஒரு மணிநேரம் கழித்து மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

அடுத்த ஒரு வாரத்தில், செக் செய்யவேண்டும் என்று மீண்டும் மருத்துவமனை சென்று வந்தாள் மிருதுளா. இவர்களின் சிகிச்சையாலோ, இல்லை, கடவுளின் ஆசியாலோ, சிகிச்சை முடிந்த ஒரு மாதத்தில், மிருதுளா கருவுற்றாள்.

மருத்துவர் என்ற முறையில் சரண்யாவை அவள் முழுவதும் நம்ப, பின்னாளில் இந்த முட்டாள் தனமே இவளின் திருமண வாழ்கையை முடிக்க காரணமாகப் போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!