Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thalaivanin Kaathali

அத்தியாயம் 4.2 : தலைவனின் காதலி!!!

இவர்களே அவளை துரத்தி பிடித்து விடுவார்கள். அப்படி இல்லை என்றால் ரெட்டி போன்ற ஆட்கள் கையில் சிக்கினால் நிலைமை அதை விட மோசமாக ஆகி விடும்.

 

சரியான தருணத்துக்காக காத்திருந்தாள் சுசீலா.

 



Advertisement

சுசீலா மேல் ஒரு கண் வைக்கும் படி தன்னுடைய காவலாளிகளிடம் சொல்லியிருந்தான் யுவன். சாருவை எப்போதும் கவனித்துக் கொள்ளும் சுசீலா இப்போது தன்னுடைய அறைக்குள்ளே முடங்கிக் கிடந்தாள்.

 

“யுவன், சுசீலாக்கு என்ன ஆச்சுப்பா? என்னைப் பாக்கவே வரலை?

Advertisement

நானும் பாக்க போனாக் கூட கதவை திறக்குறது இல்லை. சாப்பாடு கூட எப்ப சாப்பிடுறான்னே தெரியலை. மாயா கிட்டயும் சரியா பேசுறது இல்லையாம். அருமையான பொண்ணுப்பா அவ. கொஞ்சம் விசாரியேன்”, என்றாள் சாரு.

Advertisement

 

“உடம்பு சரியில்லாம போனதுல இருந்து அவளுக்கு அம்மா அப்பா நினைவு வந்துருக்கும் போல மா? நான் என்னன்னு பாக்குறேன். நீங்க டென்ஷன் ஆகாதீங்க”, என்று சொல்லி விட்டு சுசீலா அறைக்குச் சென்றான்.

 

Advertisement

கதவைத் தட்டுவது அவன் என்று தெரிந்தும் கதவைத் திறக்காமல் இருந்தாள் சுசீலா. அவனுக்கு அது கதவைத் திறக்காமல் அடம் பிடிக்கும் சிறு குழந்தையின் செயலாக தான் தெரிந்தது.

 

“ஏய் மாமி, நீ இப்ப திறக்கலைன்னா இந்த ரூமோட வேற சாவி போட்டு திறந்து உள்ள வருவேன். எப்படி வசதி?”, என்று சிறு புன்னகையுடன் கேட்டான் யுவன்.

 

அடுத்த நொடி பட்டென்று கதவைத் திறந்த சுசீலா அவன் முகம் பார்க்க பிடிக்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

“பயங்கர கோபம் போல?”

 

….

 

“சுசீ உன்கிட்ட தான் பேசுறேன். எதுக்கு அம்மாவைக் கூட நீ பாக்க போகலை? உனக்கு என் மேல தானே கோபம்? அவங்க என்ன செஞ்சாங்க? மாயா கிட்டயும் நீ சரியா பேசுறது இல்லையாம்? அம்மாவை பாத்துக்குவேன்னு சொன்ன நீ, இப்படி மாறுவேன்னு நான் நினைச்சு பாக்கலை”

 

“நான் கூட தான் உங்களை ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சேன். காப்பாத்துன நீங்களே இப்படி அடிமையா அடைச்சு வைப்பீங்கன்னு கனவா கண்டேன்? அப்புறம் இனி உங்க அம்மாவை எல்லாம் என்னால பாத்துக்க முடியாது. அவங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை தான். ஆனால் முடியாது”

 

“அதான் ஏன்?”

 

“ஏன்னா,. என்னோட வாழ்க்கையே இங்க எப்படி எப்படியோ இருக்கு. இதுல அடுத்தவங்களை பாத்துக்குறது தான் என் வேலையா? வேலைக்காரியா தானே என்னை இங்க இருக்க சொன்னீங்க? இனி நான் வேலை செய்ய மாட்டேன். வேணும்னா என்னை இங்க இருந்து அனுப்புங்க”

 

“இதை தவிர வேற ஏதாவது கேளு”

 

“அப்படின்னா என்னோட இஷ்டத்துக்கு இருக்க விடுங்க. சும்மா அவங்க கிட்ட பேசலை, இவங்க கிட்ட பேசலைன்னு வந்து குறை சொல்லிட்டு இருக்காதீங்க”

 

“உனக்கு இங்க தான் சுசீ பாதுகாப்பு”

 

“அதை நான் தான் முடிவு பண்ணனும். நீங்களா சொல்லக் கூடாது”

 

“நீ சொன்னாலும் உன்னை என்னால வெளிய விட முடியாது”

 

“அப்ப என்னோட இஷ்டத்துக்கு தான் இருப்பேன்”, என்று முகத்தில் அடிப்பது போல சொன்னதும் அங்கிருந்து சென்று விட்டான்.

 

அறைக்குள்ளே அடைந்து கிடப்பது அவளுக்கே ஒரு மாதிரி இருக்க அறையை விட்டு வெளியே வந்து பால்கனிக்குச் சென்றாள்.

 

அவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு கார் வந்து நின்றது.

 

“யார் வாரா?”, என்று எண்ணி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சுமனும் கேசவும் சேர்ந்து கை கால்கள் கட்டப்பட்ட ஒரு ஆளை கீழே இறக்கினார்கள்.

 

“கொலை செய்யுறதுக்கு அடுத்த ஆளை பிடிச்சிட்டு வந்துட்டீங்களா

டா?”, என்று எண்ணிக் கொண்டு வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுசீலா.

 

கை கால்கள் கட்ட பட்ட அந்த ஆள் முழுமையாக வெளிய வந்த பின்னர் தான் தெரிந்தது அது ஒரு பெண் என்று. திக்கென்று அதிர்ந்து அவர்களையே பார்த்தாள் சுசீலா.

 

அதே சுரங்கப் பாதைக்கு தான் அந்த பெண்ணை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் பின்னேயே ஓடினாள் சுசீலா.

 

அந்த பெண்ணை சுரங்கப் பாதைக்குள் தான் கொண்டு சென்றார்கள். சுரங்கப் பாதையை நெருங்கினாள். “இந்த பெண்ணையும் கொலை செய்ய போகிறார்களா?”, என்று அவள் மனம் பதைத்தது.

 

சிறிது நேரத்தில் அந்த பெண்ணை அடிக்கும் சவுக்கடி சத்தமும் அந்த பெண் அலறும் சத்தமும் கேட்டது. அதைக் கேட்டு நெஞ்சம் நடுங்க அவள் அறைக்கு ஓடி வந்து விட்டாள்.

 

கால்களை குறுக்கி வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவள் கண்களை உறக்கம் தழுவ அப்படியே தூங்கிப் போனாள்.

 

தூக்கத்தில் பயங்கரமான கனவு வந்தது. அடர்ந்த காட்டுக்குள் அவள் மட்டும் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது மனித உருவத்தில் விகாரமான மிருங்கங்கள் அவளை துரத்துகின்றன. வழி நெடுகிலும் ரத்தமும் சதையுமாக கிடந்தது. பாம்பு, பல்லி என்று அதன் மீது காலை வைத்து ஓடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் உடையில் நெருப்பு பற்றியது. விகாரமான தீயில் அலறித் துடித்தாள்.

 

உடைகளை எல்லாம் கழற்றி எரிந்தவள் “காப்பாத்துங்க காப்பாத்துங்க”, என்று கத்தினாள். அலறினாள், துடித்தாள். அப்போது யுவன் முகம் கண்களுக்கு தெரிய அடுத்த நொடி தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்து விட்டாள்.

 

கனவு என்றதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. தலை பாரமாக கணக்க கையை வைத்து பிடித்துக் கொண்டாள்.

 

“இந்த கனவுக்கு என்ன அர்த்தம்? யுவன் தான் எனக்கு ஆபத்து விளைவிக்க போறானா? இல்லை ஆபத்தில் இருந்து அவன் தான் காப்பாற்றப் போறானா?”, என்று குழம்பி போனாள்.

 

அதே நேரம் யுவனும் அவளைப் பற்றிய ஆராய்ச்சியில் தான் இருந்தான். அவளுடைய பயம் அவனை வெகுவாக சோதித்தது. “நான் அவளை இங்கயே இருக்க வைக்கணும்னு நினைக்கிறேன். அவ என்னடான்னா ஜெயில் கைதி மாதிரி இருக்காளே? எல்லா விசயத்திலயும் தெளிவா இருக்கேன். ஆனா இவ விசயத்துல என்னால எந்த முடிவும் எடுக்க முடியலையே? இவ என்னை ரொம்ப பலவீனப் படுத்துறா”, என்று எண்ணி அவள் நினைவுகளை ஒதுக்க முயன்றான்.

 

அடுத்த வேலையைச் செய்ய முடியாமல் அவன் மூளை சண்டித்தனம் செய்ய உடனடியாக அவளைக் காண அவள் அறைக்குச் சென்றான்.

 

அறைக் கதவு மூடியிருந்ததால் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான். கை கால்களைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள் சுசீலா. மிகவும் பயந்து போய் இருக்கிறாள் என்று புரிந்தது. அவளுடைய பயமும் நிராதரவான தோற்றமும் அவனை வருத்தியது.

 

அவளை தன்னுடைய கைக்குள் அடக்கி உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் போல் ஆவல் எழுந்தது. அந்த நினைப்பு அவன் உதடுகளில் ஒரு அழகான முறுவலைக் கொண்டு வந்தது.

 

சிறிது நேரம் அவளுடைய கள்ளம் கபடமற்ற முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். மனதில் மிகப் பெரிய போராட்டம் இருக்கிறது. ஆனால் அவள் முகத்தைப் பார்த்ததும் ஒரு அமைதி கிடைப்பதை உணர்ந்தான்.

 

ஒருவன் தன்னைப் பற்றி சிந்தித்து மனதுக்குள் போராடிக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் நிம்மதியான தூக்கதில் இருந்தாள் சுசீலா.

 

அவன் ஒரு போராளி, இப்போது நேற்று அல்ல நிறைய வருஷமாக போராடிக் கொண்டு தான் இருக்கிறான்.  அவன் இருப்பது நிழல் உலகம். அதில் இருந்து அவன் வெளியே வரலாம். இல்லை என்றால் வர முடியாமலும் போகலாம். ஆனால் அவன் போராடித் தான் ஆக வேண்டும். அவனுடைய லட்சியத்தை அடைந்து விட்டால் அவன் அந்த உலகில் இருந்து வெளியே வந்து விடலாம் தான். ஆனால் அந்த லட்சியத்தை அவன் அடைந்த பின் அந்த உலகமே அவனை வெளியே விடாது.

 

ஒன்று அவன் அதை தொடர வேண்டும். இல்லை என்றால் இந்த உலகை விட்டே அவன் செல்ல வேண்டும். இப்படிப் பட்ட உலகத்துக்குள் புதிதாக வந்து விட்டவள் தான் சுசீலா.

 

அவளுடைய மென்மையான முகமும் சாந்தமான குணமும் அவனை அவளை இங்கே இருந்து அனுப்ப விடாமல் செய்கிறது.

 

உண்மையை அவள் வெளியே சொல்லி விடுவாள். வெளியே அவளுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்த கோட்டைக்குள் இருந்தால் தான் அவளுக்கு பாதுகாப்பு என்று அவன் வாய் வார்த்தையாக சொன்னாலும் உண்மையிலே இந்த காரணங்கள் இல்லாமல் இருந்தாலும் அவளை அனுப்ப அவனுக்கு மனது வந்திருக்காது.

 

அவளைக் கண்டாலே அவனுக்குள் ஒரு இதம் பரவுகிறது. மாயாவிடம் வாயடிக்கும் போது, சாருவிடம் பாசமாக பேசும் போதும் அவள் அவனை கொள்ளை கொண்டாள். அவளால் உருவாகும் இதத்தை அனுபவிக்க அவனுக்கு உரிமை இல்லை தான். ஆனால் அவனால் அவளை விட முடியாது.

 

இப்போது யாருடனும் பேசாமல் அவளையே தனிமை படுத்திக் கொண்டாள். அதுவும் அவனுக்கு வலிக்க தான் செய்தது.

 

ஒரு நொடி அவன் யோசித்தால் போதும். அவளை இங்கே இருந்து அவளுக்கு விருப்பமான இடத்துக்கு அனுப்பி விடலாம். ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்து அவளுக்கு பாதுகாப்பையும் அவனால் ஏற்படுத்த முடியும். ஆனால் அவள் தன்னுடைய கண் முன்னே இருப்பதை தான் அவன் மனது விரும்பியது.

 

கூடிய  சீக்கிரம் அவள் சரியாகி விடுவாள் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.

 

அப்போது யுவனின் போன் அடித்தது. எடுத்து பார்த்தான். அவனுடைய விசுவாசி தான் அழைத்திருந்தான்.

 

“சொல்லு வினித், ஏதாவது தகவல் இருக்கா?”

 

“ரெட்டி நிறைய பொண்ணுங்களை தூக்கப் போறான் பையா”

 

“அப்படியா?”

“ஆமா பையா, இது உபயோகமான தகவலான்னு தெரியாது. ஆனா நீங்க எல்லாமே சொல்ல சொன்னதுனால தான் சொல்றேன்”

 

“இது சாதாரண தகவல் கிடையாது. அவனை பிடிக்க பெரிய வழி இது தான்”

 

“இதுல என்ன செய்ய முடியும் பையா? அடியாட்களை எடுத்தாக் கூட நம்ம ஆளை உள்ள நுழைக்கலாம். ஆனா அவன் பொண்ணுங்களை விலை பேசுறான்”

 

“இப்பவும் நம்ம ஆட்களை நுழைக்கலாம். நம்ம கிட்ட தான்  நிறைய பெண் கொலையாளிகள் இருக்காங்களே? அவங்களை அனுப்பலாம் தானே?”

 

“சூப்பர் ஐடியா பையா. இதை நான் யோசிக்கலை. சரி நான் வேற தகவல் தெரிஞ்சா சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

 

அதே நேரம் அந்த சுரங்கப் பாதைக்குள் மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுசீலா. கை கால்கள் எல்லாம் நடுங்க தான் செய்தது. ஆனாலும் படிபடியாக முன்னேறினாள்.

 

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!