Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

nizhalae ennai thalli pogaathae

Nizhalae Ennai Thalli Pogaathae 9

தள்ளிபோகாதே – 9

மறுநாள் காலை (விவாகரத்து நாளன்று)

சூரியா மற்றும் தேவிகாவின் அழகான வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிவுக்கு வரும் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். அவர்கள் ஒன்று நினைக்கையில் அதையும் தாண்டி அவர்களின் விதி என்ன விளையாட்டை காட்டினது என்று பார்ப்போம்.

அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சூரியா  பைக்கில் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அவனுடைய பைக் எதிரில் வந்த காரில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவனை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இந்த செய்தி குடும்பத்தாருக்கு தெரிய வர, தேவிகாவும் அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனைகுள் நுழைந்தாள்.  அவனுக்கு முதுகு தண்டு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டபோதிலும் யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை, நல்ல வேளை எலும்பு முறிவு ஏற்படவில்லை. வலதுபுறம் முகம், கை, கால் என லேசான காயங்களோடு தப்பித்துவிட்டான். மருத்துவர்கள் அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் குடும்பத்தினரை, பார்க்க சம்மதித்தனர்.



Advertisement

அவனுடைய பெற்றோர் சென்று பார்த்த பின், கௌதம் தேவிகாவை போக சொல்ல, தேவி கதறி அழுதுக்கொண்டே சூர்யாவின் அருகில் சென்றாள். சூரியாவின் இந்த நிலைமைக்கு அவள் தான் காரணமென்று அவன் முன் கை கூப்பி நின்றாள்.

அவனின் இந்த நிலைமை பார்த்த அவளால் காதலை மறைக்க இயலாமல் “சூர்யா,” என்று கதறி அழுதாள். அவனோ முகத்தில் சின்ன புன்னகை மலர, கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். ‘கடவுளே! நீ எனக்கு இந்த விபத்து நேரிடவைத்து என் மனைவியை என்னிடம் சேர்த்துவிட்டாய். அவளது கண்ணீர் துளிகளில் எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை  நான் கண்டேன்,” என்று மனதினுள்ளே தன் குல தெய்வத்திற்கு  நன்றி தெரிவித்தான்.

அவளின் கண்ணீர் ஓய்ந்த அந்த தருணத்தில், சூர்யா தேவிகாவிடம் “இப்போதாவது ஒரு ஐந்து நிமிடம் நான் சொல்வதைக் கேட்பாயா?” என்று பாவமாக கேட்டான்.

Advertisement

அவளோ சூர்யாவை பார்த்து விம்மிக் கொண்டு, “நீங்க என்ன சொல்லவரீங்கன்னு எனக்கு எல்லாமே தெரியும் ,” என்றாள்.
(சூர்யாவுக்கு தெரிந்தவரை அன்று, தேவிகா ஆதிராவின் பாட்டு போட்டி முடிந்தபின் சூர்யாவுடனே பணிப்புரியும் கங்காவிடம் ஜீவிதாவை பற்றி விசாரித்ததுவரை தான். அந்தப் பெண் இரண்டு நாட்கள் கழித்து சூரியாவிடம் கூறினாள். அதற்குள் தேவிகா தன் அண்ணணோடு கிளம்பிவிட்டாள். அதனால் தேவிகா தன்னை எண்ணி பிரிய முயற்சித்திருக்க கூடும் என்று தான் நினைத்தான் ஆனால் அவள் கூறிய பதில் அவனை அதிர்ச்சியுற செய்தது.)

Advertisement

“சூரியா, ஜீவிதாவுடனே நீங்கள் உங்கள் வாழ்க்கையை தொடர வேண்டும் .  நீங்கள் உங்கள் முதல் காதலை இழந்து எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் காதலை மறுபடியும் உங்களுக்கே தர வேண்டும் என்று தான் நான் உங்களை விட்டு பிரிய முடிவெடுத்தேன்…. …….” என்று சொல்லியவளை ஒரு மாதிரியாக வியந்து பார்த்தான், சூர்யா.

“என்ன தேவிகா நீ சொல்கிறாய்? எனக்கு இப்போது ஜீவிதா மீது எந்த காதலும் இல்லை. ஒருகாலத்தில் இருந்தது உண்மை தான் ஆனால் அதை அப்போதே முடித்து விட்டேன் என்பது உனக்கு தெரியாதா? நீ என்னை தவறாக புரிந்து கொண்டு தான் இந்த முடிவுக்கு வந்தாயா?” என்று வினவினான் குழப்பத்தோடே. தேவிகா, ஏன் இந்த முடிவிற்கு வந்தாள் என்பதை பார்ப்போம்.

“ஆதிராவின் பாட்டு போட்டி அன்று ஆதிராவுக்கு முதல் பரிசும். நிஷாந்த் என்ற சிறுவனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற ஆதிராவை பாராட்டினதை விட அந்த சிறுவனயே அனேகமான பேர் பாராட்ட, தேவிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் அவனை மிகவும் பாதுகாப்பாகவே பார்த்தனர். அப்போது, அந்த நேரத்தில் ஜீவிதா எங்கிருந்தோ வந்தவள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்த குழந்தையை தூக்கி சென்றாள். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்த ஆசிரியர்கள் அவனது உடல் பலவீனத்தை பற்றி கூறினார்கள். தேவிகா, அவனைப் பற்றி பக்கத்திலிருந்த ஆசிரியரிடம்  விசாரித்தபோது, அந்த பையனுக்கு  இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதாகவும் அவனுக்குள் இவ்வளவு திறமை இருப்பதையும் விளக்கினார்”

Advertisement

ஆதிராவை வழி அனுப்பிய பின், தேவிகாவின் மனம் பல போராட்டங்களை ஒருசேர நடத்தியது. ஒருவேளை சூரியா இதற்காகத்தான் ஜீவிதாவிடம் மறுபடியும் பேசி இருக்க கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்தது. இதைப் பற்றி சூர்யாவுடன் பணிபுரியும் கங்காவிடம் விசாரித்தாள்.

கங்கா கூறியதாவது, “ஜீவிதா இங்கே வந்து சேர்ந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. அவளின் கணவன் அவளை விட்டு இன்னொரு பெண்ணுடன் சென்றதாகவும் அவள் குழந்தை மருத்துவ செலவிற்காக அவள் மீண்டும் வேலைக்கு சேர்ந்ததாக கூறினாள்,”

“ஜீவிதா பற்றி விசாரித்தது சூரியாவிற்கு தெரிய வேண்டாம்,” என்று கூறி வீட்டிற்கு வந்தாள் தேவிகா. முன் பின் தெரியாதா தேவிகாவுக்கே ஜீவிதாவின் சோக கதையை கேட்டும் போது மனசு லேசாக இளகியது அப்போது அவளை காதலித்த சூரியாவிற்கு எப்படி இருக்கும் என்று பல மணி நேரமாக யோசித்தாள். கண்களில் கண்ணீர் சூழ்ந்து கொள்ள, உடம்பெல்லாம் நடுங்க, ஜீவிதாவின் மீதுள்ள கருணையில் தான் தன்னிடம் சூரியா இதை மறைத்து விட்டதாக யூகித்தாள். சூரியா வாழ நினைத்த வாழ்க்கையை அவனுக்கே கொடுத்துவிட்டு கிளம்ப முடிவு செய்தாள். இவ்வாறு சூரியாவிடம் தேவிகா கூறினாள்.

“நீ கர்ப்பமுற்று இருந்ததனால் தானே உன் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கித்தையும் கருத்தில் கொண்டு நான் எதுவும் கூறவில்லை. ஜீவிதா என்று இல்லை அந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் நான் இதே உதவி தான் செய்திருப்பேன். எனக்கு உன் மீது தான் முழுக்க முழுக்க காதல் அதை ஏன் தேவிகா நீ புரிந்து கொள்ளவில்லை?” என்றவனின் கூற்று அவனது காதலை அவளுக்கு விளங்க செய்ததது.

அவள் பதில் பேசாமல் நிற்க அவன் தொடர்ந்தான், “நீ என்னை விட்டு பிரிந்து வந்த அந்த ஒருவாரத்திலேயே எனக்கு வேலை இடமாற்றம் கிடைத்தது.  நான் இங்கே வந்துவிட்டேன். நான் உன்னை பார்க்காமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று நீ அறிவாயா? என்னை விட்டு பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது? உன்னிடம் சொல்லாதது என் தவறு தான் அதற்காக ஒரு ஐந்து நிமிடம் கூட எனக்கு நீ தர மறுத்தது ஏன் தேவிகா?” என்றவனின் கண்ணீர் கண்களின் ஓரத்தை தொட்டது.

அவனின் கண்ணீரை துடைத்தவள், “அந்த ஐந்து நிமிடத்தில், என் மனதை நீங்கள் மாறிவிடுவீர்களே! ஐந்து நிமிடங்கள் உங்கள் கண்ணை பார்த்து என்னால் என் காதலை மறைத்து பேச முடியாது அல்லவா? அந்த ஐந்து நிமிடம் நீங்கள் பேசும் தருவாயில் நான் என்னை மறந்து உங்களை கட்டி அணைத்து விடுவேனோ? அந்த ஐந்து நிமிடத்தில் என் மன தைரித்தை இழந்துவிடுவேனோ? என்று தான் உங்களை நான் தட்டிக் கழித்துக் கொண்டேன்,” என்று கண்ணீர் மல்க கூறியவளை அவனோடு அணைத்துக் கொண்டான்.

“இனி ஒரு போதும் என்னை விட்டு நீ பிரிய கூட நினைக்கக்கூடாது, தேவிகா. அப்படி  நீ நினைத்தாயேயானால் நான் இதை விட மோசமான நிலையை தான் அடைவேன். நீ தான் என் காதல் மனைவி,” என்றான் காதலோடு.

“நிச்சயமாக நான் செல்லமாட்டேன்!!!! நான் உங்களை விட்டுப் பிரியேன். நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இனி இருக்கக்கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள்,” என்றாள் இதழ் விரித்து.

“கண்டிப்பாக, நீயும் என்னை மன்னித்துவிடு தேவி,” என்றான் அவன்.

“சாரா குட்டி எப்படி இருக்கிறாள்? நீ அவளை கூட என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. சரியான கொடும்பாவி!” என்றவாறு முகத்தை திருப்பி கொண்டான்.

“அவளை வீட்டில் அம்மாவிடம் விட்டு வந்தேன். சாராவுக்குகாகவும் என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் அன்பின் ஆழத்தை புரிந்தும் சூழ்நிலையினால் இப்படி நடந்துவிட்டேன்,”

“ம்ம்ம்….எனக்கு விபத்து நேர்ந்த அந்த நொடியில் இனி சாராவை மறுபடியும் பார்ப்பேனா? உன்னுடன் சேர்ந்து வாழ முடியாமல் போய் விடுவேனா? ஒருவேளை இந்த விபத்து நேராவிட்டால் நீ என்னோடு சேர்ந்திருக்க மாட்டாயா?” என்றே ஏங்கியது மனது.

“நம் காதல் நம்மை சேர்த்துவிடாதா?”

அவளை பார்த்து சிரித்தவன். சற்று யோசித்தவாறே ,  “எனக்கு எப்போதுமே ஒரே ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா?”

“சரி, கேளுங்க”என்றாள்

“நம்மிடையே காதல் மலர்ந்த போது, ஜீவிதாவை பற்றிய பேச்சு வராததால் நான் இதைப்பற்றி கேட்காமலேயே விட்டு விட்டேன். சரி, இப்போது அதைப்பற்றி கேட்க சரியான தருணம் இதுவே. நான் நம் திருமணம் முடிந்த முதல் நாளன்று என்னுடைய காதலை பற்றி சொன்னேனே, அப்போது நீ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையே, ஏன்?” தன் சந்தேகத்தை முன்வைத்தான் சின்ன முன்னகை மலர.

அவளும் வாயை மூடி சிரித்தாள், “நான் சொல்ல மாட்டேன்,” என்றாள் முகத்தில் வெட்கத்தோடு.

அந்த நேரம் உள்ளே வந்த செவிலியர், “யம்மா! எவ்வளவு நேரம் தான் பேசுவ? நோயாளியை தொந்தரவு பண்ணாமல் மீதியை வீட்டில் போயி பேசுங்கள்,” என்றவளின் ஓசை, தேவிகாவையும் சூரியாவையும் புன்னகை பூக்க செய்தது.

அன்று, தேவிகாவின் பெற்றோர் சாராவுடன் வந்து சூரியாவை பார்த்தனர். சாராவை தூக்கி கொஞ்ச முடியாத நிலையிலும் சூரியா சாராவை தன் மார்போடு அணைத்துக்கொண்டான்.

தேவிகா அண்ணணிடம் நடந்தது அனைத்தையும் கூறினாள். பின், தேவிகாவின் அண்ணன் சூரியாவிடம் மன்னிப்பு கோரினான்.
சூரியாவோ, “பரவாயில்லை!! தங்கச்சிக்காக இப்படி ஒரு அண்ணன் இருப்பது எனக்கு பெருமையே,” என்றான் அவனிடம்.

நாளடைவில், விவாகரத்தும் ரத்தானது. சூரியாவின் உடல் நலத்திலும் நல்ல முன்னேற்றம் அடைந்தது. சூரியாவிற்கு இப்போது வீட்டிலிருந்தே வேலைக்கு சென்றால் போதும் என்ற நிலையில் அனைவரோடும் தேவிகா அன்போடும் ஒற்றுமையோடும் நடந்துக்கொண்டாள்.

அன்று இரவில் குளிந்த பால் நிலவையும் அதை சுற்றியுள்ள நட்சத்திரங்களின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர் அந்த தம்பதியினர். சூரியா, சாராவை தன் தோளில் போட்டு தட்டிக் கொண்டிருந்தான்.

சூர்யாவோ தேவியை பார்த்து, “நீ அன்று நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வில்லையே! உனக்கு நினைவிருக்கிறாதா?”

முகத்தில் புன்னகை தழும்ப, “அதுவா!!! அதோ இருக்கிறது அல்லவா நிலா! அந்த நிலவிடம் நான் பல நாள் ஒரு வரம் கேட்டுக்கொண்டிருந்தேன்,” என்று கூறிகொண்டே நிலவின் மேல் செலுத்திய பார்வையை சூரியாவின் மேல் செலுத்தினாள்.

அவனும் அவளை பார்த்து ஒன்றும் புரியாதவனாய், “என்ன வரம் கேட்டாய்?” என்றான்.

எனக்கு  காதலில் தோல்வியுற்ற ஒரு நல்ல மணவாளனை கொடு என்றேன். இந்த நிலவோ! சரி தேவிகா பல நாள் ஆசைப்பட்டு கேட்கிறாளே என்று என் வாழ்வின் சூரியனான என் சூரியாவை கொடுத்தது. நான் நினைத்தது போலவே நீங்கள் என் மீது மிகவும் பாசமாக இருக்கிறீர்கள்,” அவளின் எதிர்பாராத பதிலை கேட்டு வியந்தவனாய் அவளை தன் தோள் மீது சாய்த்து கொண்டு பால் நிலவை ரசிக்கலானார்கள்.

தேவிகா என்ற நிழல் சூரியாவை ஒருபோதும் தள்ளிப்போகாது..

முற்றும்….

*****
சுபம்… உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பர்களே! என்றும் அன்புடன், உதயா விவேக்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!