Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaaval neethaanae kaavalanae

Kaathal Neethaane Kaavalane..! – 4

காவல் 4:

 

போனைப் பேசிவிட்டு சக்தியைப் பார்த்துக் கொண்டிருந்த வருணின் மூளைக்குள் ஓடியது எல்லாம் சற்று முன்பு கேள்விப்பட்ட செய்திதான். அவனுடைய கணிப்பு சரியாகிப் போனதில் அவனுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை.

என்ன எதிர்பார்த்தான் சக்தியிடம்..? ஒரு இரவில் பார்த்த பெண்ணிற்காக இவ்வளவு ஏன் செய்தான் வருண்..? என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் அவன் போலீசாக யோசித்ததால் தான் கிடைத்திருக்கிறது..



Advertisement

சக்தியின் தோழி ஷிவானியின் வீட்டிற்கு செல்லும் வரை அவனுக்கும் சக்தி மேல் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலை கண்டு குழம்பித்தான் போனான் வருண்.

பிரச்சனையைத் தேடி சக்தி போனாளா..? இல்லை பிரச்சனை அவளைத் தேடி வருகிறதா..? என்ற கோணத்தில் எல்லாம் அவன் மூளை யோசிக்க, சற்றும் யோசிக்காமல் ஷிவானியைப் பற்றியும், சக்தியைப் பற்றியும்.. முழு விபரங்களைச் சேகரித்து, தன்னிடம் கூறுமாறு கூறியிருந்தான் வருண்.

அந்தத் தகவலை சொல்வதற்காக வந்த போன் தான் அது. அதனால் தான் அப்படி நிற்கிறான் வருண். ஏதோ ஒரு வகையிலான ஏமாற்றம் அவன் மனதிற்குள். ஆனால் அது ஏன் வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.ஆழ்ந்து உறங்கும் அவள் முகத்தில் கொஞ்சம் கூட கபடம் இல்லை. அவள் முகமும் தப்பு செய்யும் முகமாய் தெரியவில்லை. வேறு எங்கோ தப்பு நடந்திருக்கிறது…நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.

Advertisement

ஆனால் இது தனக்குத் தேவையா என்று அவன் யோசிக்கவில்லை. அவனுக்கு இருக்கும் அவ்வளவு வேலையிலும், இது தேவையில்லாத வேலை என்று அவனுக்குத் தோன்றவே இல்லை. சக்தியை எங்கோ பார்த்தது போன்று வேறு இருந்தது. ஆனால் நியாபகத்திற்கு வரவில்லை.மனதின் எங்கோ ஒரு மூலையில் அவள் முகம் ஆழப் பதிந்து போயிருந்தது.

Advertisement

‘எதுக்காக இவ சென்னை வந்தா..? கோயம்புத்தூர் பக்கத்துல பிறந்த இவளுக்கு கொடைக்கானல்ல என்ன வேலை…? அந்த நேரத்துல இவகிட்ட வம்பு பண்ணது யாரு..? ஏன் பயந்த மாதிரியே இருந்தா..? ஷிவானியோட தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன..? பிரண்டுகிட்ட சொல்லாம, திடீர்ன்னு கிளம்பி வர அளவுக்கு சக்திக்கு என்ன பிரச்சனை..? ஷிவானியோட ஹஸ்பண்ட் இறந்தது ஆக்சிடன்ட்டா…? இல்லை மர்டரா..?சக்தியோட ரிலேஷன் எல்லாம் எங்க..? யாருமில்லைன்னு சொன்னது பொய்யா இல்லை உண்மையா…? இப்படி எல்லா கேள்விகளும் வரிசையாக அவன் மனதில் அணிவகுத்து நின்றது.

தானாக கேள்விகள் எழுந்தது என்பதைக் காட்டிலும், அவனுக்கு வந்த போன் கால் அந்த சந்தேகங்களை எல்லாம் ஏற்படுத்தியிருந்தது.

“அடுத்து என்ன செய்றது..? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, அவனைக் காணாமல் அவனைத் தேடி வந்தார் நித்யா.

Advertisement

“என்னாச்சு வருண்..? சாப்பிட வாங்க..! எங்க அந்த பொண்ணு சக்தி..! என்று கேட்டபடி வர, அவன் விலகி, தூங்கிக் கொண்டிருந்த அவளைக் காட்டினான்.

“என்ன வருண்..? இந்த பொண்ணு இப்படித் தூங்குது..? வந்து முகம் கூட வாஷ் பண்ணலை..! என்ற நித்யா, வருணை கேள்வியாய்ப் பார்க்க,

“ரொம்ப அசதின்னு நினைக்கிறேன்..! நீங்க வாங்க. எழுந்ததும் சாப்பிடட்டும்..! என்றான் வருண்.

“இல்லப்பா..! வயித்துல ஒன்னும் இல்லாம…! என்று இழுக்க,

“விடுங்கம்மா..! கொஞ்ச நேரத்துல அவளே எழுந்திடுவா.அவளோட பசியே அவளை எழுப்பி விட்டுடும்..! என்றவன் நித்யாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

“என்னாச்சு..? எங்க அந்த பொண்ணு..? என்றார் சத்யமூர்த்தி.

“அசந்து தூங்குறாங்க..! அதான் வருண் எழுப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டான்..! என்றார் நித்யா.

“அதுவும் சரிதான்..! நீ வந்து சாப்பிடு வருண்..! என்றார் சத்யமூர்த்தி.

“என்ன சரிதான்..? கொஞ்சமாவது தெரியாதவங்க வீட்டுக்கு வந்திருக்கோம் அப்படின்ற எண்ணம் இருக்கா. என்னமோ சொந்த வீடு மாதிரி வந்த உடனே தூங்குறா..? என்றார் மோகனாம்பாள்.

“மோகனா..! கொஞ்ச நேரம் வாயை மூடு. சொந்த வீடா இருந்தாத்தான் தூங்கணுமா..? மனுஷனுக்கு இதெல்லாம் இயற்கை. அந்த பொண்ணுக்கு என்ன அசதியோ..? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா..? என்று சத்யமூர்த்தி அதட்ட,

“ஆமா..! நான் எது சொன்னாலும் இந்த வீட்ல பொல்லாப்பு தான். வயசுப் பிள்ளைய இவன் தனியா கூட்டிட்டு வந்ததைப் பார்த்தா, அக்கம் பக்கம் என்னவெல்லாம் பேச மாட்டாங்க..! என்று மோகனா அங்கலாய்க்க,

“நீங்க பேசாம இருந்தா போதும் அத்தை. என் தம்பிய யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அவன் ஒன்னும் காலேஜ் படிக்கிற பையன் கிடையாது.ஒரு பொறுப்பான வேலையில் இருக்கான். அவனுக்குத் தெரியும்..! என்றாள் கௌசல்யா.

“அம்மா..! கொஞ்ச நேரம் வாயை மூடுங்க. அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது..! என்றான் முரளி.

“அட விடுங்க மாம்ஸ்..! அத்தை தான…பேசுனா பேசிட்டுப் போறாங்க..! என்றான் வருண் கூலாக.

வருண் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, கௌசல்யா அவனிடம் எதையோ கேட்குமாறு கண் ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள்.

“இருடி..! அவன் சாப்பிட்டு முடிக்கட்டும்..! என்று அவனும் ஜாடையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எதுக்கு ரெண்டு பெரும் ஊமை பாஷை பேசிட்டு இருக்கீங்க..? என்றான் வருண், குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டே.

“அது ஒன்னும் இல்லை வருண்..! நீ முதல்ல சாப்பிட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்பறம் பேசிக்கலாம்.. என்றான் முரளி.

“நீங்க எதைப் பத்திப் பேச போறீங்க…? யாரைப் பத்தி கேட்கப் போறிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னொரு தடவை அதைப் பத்தி பேசுனா…நான் மனுஷனா இருக்க மாட்டேன்..! என்றான் அழுத்தமான குரலில். முகத்தில் எதுவும் தெரியவில்லை. ஆனால் குரல், அவ்வளவு கடினமாக இருந்தது.

“கொஞ்சம் யோசி வருண்..! இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்..! என்று முரளி ஏதோ சொல்ல வர,

“மாமா..! நானும் இல்லைன்னு சொல்லலை. ஆனா, இந்த விஷயத்தை என்னால் ஏத்துக்க முடியலை. ஏத்துக்கவும் முடியாது. தப்பைத் தான் மன்னிக்க முடியும். துரோகத்தை மன்னிக்க முடியாது. என்னைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். இன்னொரு தடவை இதைப் பத்தி பேசுறதா இருந்தா…நான் இனி வீட்டுக்கே வர மாட்டேன்..! என்றான் வருண்.

“அப்படி சொல்றா வருணு..! இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அறிவே கிடையாது. நடந்தது என்ன சாதாரண தப்பா..? மறக்க முடியுமா…? நீ இப்ப சொல்றது தான் சரி. இதுல இருந்து என்னைக்குமே மாறாத..! என்று மோகனா மேலும் அவனைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.

அத்தை..! நீங்க என்ன அவனுக்கு ஏத்தி விடுறிங்களா..? என்றாள் கௌசல்யா கோபமாக.

“இதென்னடி..? உள்ளதை சொன்னா கோபம் வருது. உங்க அப்பனே சும்மா உட்கார்ந்திருக்கான். நீ ஏன் தாண்டுறவ..? என்று நொடித்துக் கொண்டார் மோகனா.

“அவனுக்கு வேணுமின்னா…அக்கான்ற உறவு வேணாம்ன்னு இருக்கலாம். ஆனா எனக்கு என் தங்கச்சி வேணும்.நான் போய் அவளைப் பார்ப்பேன்.பேசுவேன். அது தப்புன்னா, நாங்க இந்த வீட்டை விட்டு கிளம்பிக்கிறோம்..! என்று ஒரே போடாய் போட்டவள், சட்டென்று அவளின் அறைக்குள் சென்று மறைந்தாள்.

சத்ய மூர்த்தியும், நித்யாவும் என்ன பேசுவதென்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். அவர்களை யோசனையுடன் பார்த்தவன்,

“உங்களுக்கு போய் பார்க்கணும், பேசணும்ன்னா நீங்க போய்க்கோங்க. அதே சமயம் என்னைக் கட்டாயப்படுத்துற அதிகாரம் இங்க யாருக்கும் இல்லை.நானும் உங்களைக் கட்டுப்படுத்தலை..! என்றவன்,

“சக்தி எழுந்தா, அவளை சாப்பிட வைங்கம்மா…! இன்னைக்கு நைட் நான் ரிட்டர்ன் கிளம்பனும். நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..! என்றபடி யார் பதிலுக்கும் காத்திருக்காமல் சென்று விட்டான்.

“இப்ப சந்தோஷமா..? வந்த பிள்ளையை நிம்மதியா இருக்க விடக் கூடாதுண்ணே நினைப்பிங்களோ..! எனக்கும் வருண் சொல்றது தான் சரின்னு தோணுது..! என்றபடி மோகனாவும் இடத்தை காலி செய்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நித்யாவிற்கு தான் மனசு தாங்காமல் அழுகை வந்தது.

“இப்ப என்ன நடந்திடுச்சு நித்யா..? கண்ணை துடை. வருண் சீக்கிரம் மனசு மாறிடுவான். அவங்களைப் புரிஞ்சுக்குவான்…! என்ற சத்யமூர்த்திக்கும் அப்படி நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

“நான் வருணை நினைச்சு கவலைப்படலைங்க.என் பிள்ளை சொக்கத் தங்கம். அவ நம்மகிட்ட சொல்லி இருக்கலாம். இல்ல வருண்கிட்டயாவது சொல்லி இருக்கலாம். அவன் அவ மேல எவ்வளவு பாசமா இருந்தான். ஆனா இப்போ இந்த அளவுக்கு வெறுக்குறான். அதான் எனக்கு கவலையா இருக்கு.! என்றார்.

“விடு, இது தான் நடக்கணும்ன்னு விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும். ஆனா கூடிய சீக்கிரம் எல்லாமே சரி ஆய்டும்ன்னு நம்புவோம். ஆனா, என் பையன் சமாதானம் ஆகாம நான் ஆகா மாட்டேன். நம்ம தேவையில்லைன்னு நினைச்சுட்டு போன பொண்ணை விட, என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத என் பையன் எனக்கு ரொம்ப முக்கியம். அவனோட நியாயமான கோபத்தை நான் ஆதரிக்கிறேன்..! என்றார் மூர்த்தி.

“நீங்களும் இப்படிப் பேசுனா எப்படிங்க..? என்ற நித்யா திரும்ப, அங்கே அறை வாயிலில் நின்றிருந்தாள் சக்தி.

உடனே பேச்சையும், முகத்தையும் மாற்றியவர்,

“வாம்மா சக்தி..! வந்து சாப்பிடு.உன்னைக் கூப்பிட வந்தோம்.நல்லா அசந்து தூங்கிட்டு இருந்த.அதான் வந்துட்டோம்..! என்ற நித்யா அவளை அழைக்க,

கொஞ்சம் தயக்கத்துடன் சென்றாள் சக்தி.

“கூச்சப்படாம சாப்பிடனும்..! என்றபடி அவர் பரிமாற, எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள்.

“ஏன்ம்மா வேற டிரஸ் மாத்திக்கலையா..? என்றார்.

“இல்ல ஆன்ட்டி…! டிரஸ் இருந்த பேக் பஸ்லயே போய்டுச்சு..! என்றபடி தலையை குனிய,

“நான் கௌசல்யாகிட்ட அவ சுடிதார் ஒன்னை வாங்கித் தரேன், மாத்திக்கம்மா.! என்றார் நித்யா.

“அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி, பரவாயில்லை…! என்றாள்.

“அப்போ, அந்த ரூம் கபோர்ட்ல நைட்டி இருக்கும்மா..! அதை மாத்திட்டு, இந்த டிரஸைக் குடு. துவச்சு காயப்போட்டா, சாயந்திரம் காஞ்சுடும்..! என்றார்.

“சரிங்க ஆன்ட்டி..! நான் வாஷ் பண்ணிக்கிறேன்..! என்றவள், இருந்த பசிக்கு நன்றாகவே சாப்பிட்டாள்.சாப்பிட்டு முடித்த பிறகு தான், அவளுக்கு இருந்த பசியின் அளவே தெரிந்தது நித்யாவிற்கு. கொஞ்சம் குற்ற உணர்வாகக் கூட இருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி..! ரொம்ப நாள் கழிச்சு நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன்..! என்று சொல்ல,

“இதுக்கெல்லாமா நன்றி சொல்றது.போய் நல்லா ரெஸ்ட் எடும்மா..! வருண் ஈவ்னிங் கிளம்பனும்ன்னு சொன்னான்..! என்றார் நித்யா.

“ஓகே ஆன்ட்டி..! என்று சொல்லி சென்றவளுக்கு, இதயம் உள்ளே பட படவென அடித்துக் கொண்டது.

“மறுபடியும் அவன்கூட கார்ல போகனுமா..? பேசாம பஸ்லயே கிளம்பிடலாம்.  எதுக்கு வீண் ரிஸ்க்..! எப்படியாவது அவன்கிட்ட பேசி, பஸ்ல இல்லைன்னா ட்ரெயின்ல கிளம்பிடனும்..! என்று மனதிற்குள் அவள் திட்டம் போட,

இனி எப்போது அவளை அவன் விடப்போவதில்லை என்பதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.

அறைக்குள் அழுது கொண்டிருந்த கௌசல்யாவை சமாதானம் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் முரளி.

“இப்ப எதுக்கு இப்படி அழற கௌசி..! விடு எல்லாம் சரி ஆகிடும்..! என்றான் முரளி.

“இல்லைங்க..! இவன் மனசு மாறவே மாட்டான். இவன் மாறாம, அப்பா அம்மா ரெண்டு பேரும் மாற மாட்டாங்க. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அவளைப் பார்க்கனும்ன்னு கொள்ளை ஆசை. ஆனா வருணுக்காக எதையும் வெளிய காட்டாம இருக்காங்க.! என்றவள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்க,

“எல்லாமே உடனடியா மாறாது கௌசி. கொஞ்சம் டைம் எடுக்கத்தான் செய்யும். உன்னை விட, அத்தை மாமாவை விட, சாதனவை அவனுக்குத்தான் ரொம்ப பிடிக்கும்.அதானால அவன் சீக்கிரமே மாறிடுவான்..! என்றான் முரளி.

கௌசிக்கு அடுத்துப் பிறந்தவள் சாதனா.அவளுக்கு அடுத்துப் பிறந்தவன் தான் வருண் கிருஷ்ணா. இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்ததால் அனைவருக்கும் அவன் செல்லப் பிள்ளை. அதிலும் சாதனா என்றால் அவனுக்கு உயிர். ஒரு வருட இடைவெளி  தான் இருவருக்கும். அதனால் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தனர்.

வருணின் உயிர்நண்பன் தான் கார்த்திக். இப்படி எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான், ஒருநாள் சாதனாவும்,கார்த்தியும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதைக் கேட்ட வருண் தான் ஆடித் தீர்த்துவிட்டான்.

“நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம்  புரிஞ்சுக்க வருண்..! என்று கார்த்தி சொல்ல வர, வருணோ அவனுடன் பேசுவதையே வெறுத்தான்.

“நீ எனக்கு நண்பனா பழகி இருந்தேன்னா…அவ உனக்கு அக்கா முறை ஆகனும். உன்னைவிட அவ மூத்தவடா. என் வீட்ல, உன்னை இன்னொரு பிள்ளையா பார்த்தாங்க. ஆனா நீ..  என்றவன்,

“இனி என் முகத்துலையே முழிக்காத..! இது தான் வருண் கார்த்தியிடம் கடைசியாய் பேசிய வார்த்தைகள்.

“ஒரு வருஷ வித்யாசம் எல்லாம் பெரிய வித்யாசம் இல்லை வருண்..! என்று சாதனா பேச வர,

“நீ பேசாத…! அவனை பேச்சோட விட்டேன். உனக்கு நாலு அறை விடக் கூட யோசிக்க மாட்டேன்..! உனக்கு அப்படியே பிடிச்சிருக்குன்னு சொன்னா, முதல்ல வீட்ல சொல்லி இருக்கலாம்.இங்க யாரும் யாரையும் கொடுமைப்படுத்தலையே… அவன்கிட்ட அடைக்கலம் கேட்டுப் போற அளவுக்கு. இனி என்கூட பிறந்தவ ஒருத்திதான். அது கௌசி அக்கா மட்டும் தான்.. இது தான் சாதனாவிடம் அவன் பேசிய கடைசி வார்த்தைகள்.

இப்போது அதை நினைத்தாலும் டென்ஷன் ஆகிவிடுவான் வருண்.கொஞ்ச காலம் பிரிந்திருந்தனர். அந்த பிரிவு குடும்பத்தில் உள்ள அனைவரின் கோபத்தைத் தணித்திருந்தாலும் வருணுக்கு மட்டும் தணியவில்லை. அதை நினைத்து தான் அழுது கொண்டிருக்கிறாள் கௌசி.

“சரி விடு பார்த்துக்கலாம்..! என்றான் முரளி.

“இப்போ அவ பிரக்நென்ட்டா இருக்காங்க..! இந்த நேரத்துல யாருமே அவ கூட இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுறா..! என்றாள் கௌசி.

“இது கார்த்திக்கை கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும். இப்ப கவலைப் பட்டு ஒன்னும் ஆகப் போறது இல்லை. கார்த்தியும் அங்க தான் வொர்க் பண்றான். எப்படியும் வருண் மனசை மாத்திடுவான்..! என்றான் முரளி.

எப்படியோ ஒருவாறு சமாதானம் ஆனாள் கௌசி. அதற்குள் முரளிக்குத் தான் நாக்குத் தள்ளிவிட்டது.

“உனக்கு வாக்கப்பட்டு…நான் இன்னும் என்னவெல்லாம் செய்யணுமோ..? என்று அவன் போலியாய் நடிக்க,

“ம்ம்.. என்று முறைத்த கௌசி காளியாகவே தெரிந்தாள் முரளியின் கண்களுக்கு.

நன்றாகத் தூங்கி எழுந்து, பிரஷாக அமர்ந்திருந்தாள் சக்தி. நேரம் ஆக ஆக அவளுக்குள் கொஞ்சம் பயம் முளைத்தது. வருணிடம் சொல்லிவிட்டு எப்படிக் கிளம்புவது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க,

அங்கு வருணோ..அவளை தன்னுடன் அழைத்து செல்வதில் குறியாக இருந்தான்.அவனுக்கு நிறைய வேலைகள் பெண்டிங்கில் இருந்தது. அவனுடைய அப்பா கேட்ட சில டாக்குமென்ட்டில் கையெழுத்திட்டவன் , நேராக அதை அவரிடம் சென்று கொடுத்தான்.

“உனக்கு இதில் கோபமில்லையே வருண்..! என்றார் சத்யமூர்த்தி தர்மசங்கடத்துடன்.

“அப்பா..! எனக்கு இதுல எந்த கோபமும் இல்லை. நான் இந்த ஒரு விஷயத்துக்காகத் தான் இங்க வந்ததே. இல்லண்ணா நான் இங்க வந்திருப்பேன்னு நினைக்குறிங்க. அங்க ஒரு முக்கியமான கேஸ்..நான் போய் தான் ஹேண்டில் பண்ணனும். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். நான் பொண்ணு பார்க்க வந்ததாவே நினைச்சுக்கட்டும்.இந்த விஷயத்தைப் பத்தியும் நீங்க சொல்ல வேண்டாம்..! என்றான் வருண்.

“இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்ன்னு நான் நினைக்கலை வருண்..! என்றார் மூர்த்தி.

“விடுங்கப்பா…! இது உங்க சம்பாதியத்துல வாங்கினது. இதை என்ன பண்ணனும்ன்னு நீங்கதான் முடிவு பண்ணனும். மத்தபடி இதெல்லாம் எனக்கு குடுத்தாதான் நீங்க நல்ல அப்பா அப்படின்றது எல்லாம் கிடையாது. எனக்கு நல்ல படிப்பையும், நல்ல வேலையையும் கொடுத்திருக்கிங்க. எனக்கு அதுவே போதும்.கௌசிக்கு என்ன செய்யணுமோ செய்ங்க..! என்று தன் மனதில் உள்ளதை எல்லாம் வெளிப்படையாகவே பேசிவிட்டான்.

“அந்த அளவுக்கு கஷ்ட்டம் இல்லை வருண். ஆனா, பணம் கொடுத்த இடத்துல உடனே குடுக்கலை. இந்த இடத்தை வாங்குறவங்க…கண்டிப்பா உன் கையெழுத்தும் வேணும்ன்னு சொல்லிட்டாங்க. நாளைப்பின்ன வில்லங்கம் வந்துடுமோன்னு அவங்களுக்கு  பயம். இந்த ஒரு இடத்தை மட்டும் குடுத்துட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சுடும்..! என்றார் மூர்த்தி.

“ஓகேப்பா..! அப்போ நான் கிளம்புறேன்..! என்றவன்,

“ஒரு முக்கியமான விஷயம்ப்பா… என்றவன் சொல்ல சொல்ல, அவரின் முகம் கொஞ்சம் மாறியது.

“எதைச் செய்றதா இருந்தாலும் பார்த்து செய் வருண்..! எதுன்னாலும் அப்பா இருக்கேன்..! என்று மூர்த்தி சொல்ல, அவரை நினைத்து மனதிற்குள் பெருமைப் பட்டான் வருண்.எல்லாருக்கும் இப்படித் தகப்பன்கள் கிடைப்பதில்லையே.

இருவரும் வெளியே வர,

“அப்படி என்னதான் அப்பாவும் பிள்ளையும் ரகசியம் பேசுவிங்களோ தெரியலை..! என்று நித்யா குறைபட,

அவரைப் பார்த்து சிரித்து வைத்தவன்…

“சக்தி..! கிளம்பலாமா..? என்றான் வருண்.

“நம்ம டிரைவரைக் கூட கூட்டிட்டு போகாலாமே வருண்..! என்று நித்யா சொல்ல,

“வேண்டாம்மா..! மறுபடியும் அவர் அங்க இருந்து இங்க வரணும். நான் பார்த்துக்கறேன்..! என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.

தன்னிடம் சொல்ல வருவான் என்று கௌசி நினைத்திருக்க, அவன் அவளை சட்டையே செய்யாமல் கிளம்ப, அதற்கும் புகைந்து கொண்டிருந்தாள் கௌசி.

“இருக்கட்டும்..! அவனா இல்லை நானான்னு பார்க்குறேன்..! என்று முறுக்கிக் கொண்டாள்.

“என்ன சக்தி..! இப்படி ஒரு நாளை நீ எதிர்பார்க்கலை இல்லையா..? என்றான் வருண்.

“நீங்க என்ன சொல்றிங்க..? என்றாள் புரியாமல்.

“இல்லை, இப்படி கிளம்பி, வழியில் மாட்டி அப்பறம் என்கிட்டே மாட்டி..! அதைச் சொன்னேன் என்றான்.

“அது வந்து..! என்று திணறினாள் அவள்.

“ஓகே..! எது எப்படியோ..உன்னை உன்னோட இடத்துல கொண்டு போய் சேர்த்துட்டா.. எடுத்த வேலைய கச்சிதமா செஞ்சு முடிச்ச திருப்தி கிடைக்கும் எனக்கும்..! என்றான் மந்தகாசமாய்.

“எடுத்த வேலையா..? என்று அதிர்ந்தாள் சக்தி.

“ஆமா..! இதுவும் ஒரு வேலை தான..? என்றான்.

“இல்லை..! உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம். நானே போய்டுவேன் .. என்றாள்.

“எப்படி தப்பிச்சா..? என்றான் இரு பொருள் பட.

அவளுக்கு வியர்த்து விறுவிறுத்து.

“நீங்க என்ன சொல்றிங்க…? நான் என்ன தப்பிச்சுப் போறேன்..? என்றாள் லேசான பதட்டத்துடன்.

“அட..! என்கிட்டே இருந்து தப்பிச்சு போகப் போறியான்னு கேட்டேன்..! ஏன் உனக்கு என்ன தோணுது..? என்றான்.

“எ..எனக்கு ஒன்னும் தோணலை..! என்றாள்.

“சரி..! காதலைப் பத்தி என்ன நினைக்குற..? என்றான் உல்லாசமாய்.

“ஒன்னும் நினைக்கலை. நினைக்கிற அளவுக்கு அதுல ஒரு மண்ணும் இல்லை..! என்றாள் வெடுக்கென்று.

“ரொம்ப அனுபவம் போல..! என்றான்.

“இப்ப எதுக்கு சார் தேவை இல்லாததை எல்லாம் பேசுறிங்க..! என்னை முதல்ல இறக்கி விடுங்க..! என்றாள்.

“ஓகே..! கூல். இல்லை இவ்வளவு அழகா இருக்க. யாரும் பிரப்போஸ் பண்ணாமயா இருந்திருப்பாங்க. அதனால கேட்டேன்..! என்றான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..! என்றாள்.

“ஒண்ணுமே இல்லையா…? என்றான் மந்தகாசமாய் சிரித்தபடி.

“இவன் வேற இப்படி சிரிச்சு வைக்குறான். அநியாயத்துக்கு இம்ப்ரஸ் பண்றான். ஆனா, நான் அந்த நிலைமையிலா இருக்கேன்..! என்று நொந்து கொண்டாள்.

“என்ன..? என்றான்.

“ஒண்ணுமில்லை..! என்பதைப் போல் அவள் தலை ஆட,

அந்த தலையாட்டல் அப்படியே அவன் மனதில் பதிந்தது. அவன் அவளை பார்க்காததைப் போல் பார்த்து வைக்க, அவளுக்குத் தான் ஒன்றும் தெரியவில்லை.

இருவருக்கும் தெரியவில்லை… இனி வரும் வாழ்க்கைப் பாதையில் பல கடுங்கற்கள் இருக்கும் என்று.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!