Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai KadanthaalUncategorized

அ05_3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 5_3

 

 

துள்ளல் எல்லாம் மறைந்து போக மாதவனுக்கு அழைத்தாள்.



Advertisement

 

“மாது ண்ணா… முடிஞ்சிடுச்சு. அடையார் வரட்டுமா? வீட்டுக்குப் போகட்டுமா?”

 

Advertisement

“அடையாருக்கு ஆட்டோ பிடிச்சு வா. அட்ரெஸ் அனுப்பறேன்.”

Advertisement

 

“ம்ம்”

 

Advertisement

“போன விஷயம் என்ன ஆச்சு?”

 

“லட்சத்தை தாண்டுது ண்ணா… பச்! போண்ணா..” அடிபட்டுப் போன குரல்.

 

“பிடிச்சிருக்கா உனக்கு? யூஸ்ஃபுள்ளா இருக்கும்ன்னு தோணுதா?”

 

“ம்ம்.. ரொம்ப”

 

ஒரு வினாடி கூட தாமதிக்கவில்லை அவன். “நான் பே பண்ணட்டா டா?”

 

“ண்ணா!”

 

அவள் முறைப்பது தெரிந்தது. ‘இவ ஒருத்தி…’ சிரித்தான்.

 

“அது என் சேவிங்ஸ் டி. வீட்டில குடுக்கற பாக்கெட் மணி. என்னுது…”

 

“நீ நேர்மையா சம்பாரி ண்ணா. அப்புறம் சொல்லு உன்னுதுன்னு. நான் ஒன்னும் சொல்லாம வாங்கிக்கிறேன். இப்போ அது உங்க அம்மா அப்பாது. அதுவும் நேர் வழில சம்பாரிக்க கூட இல்ல. எனக்கு அதுல பங்கு வேண்டாம் போ”

 

“சரி விடு. நான் சித்தப்பாட்ட பேசறேன்”

 

“வேண்டாண்ணா.. ஆல்ரெடி காலேஜ் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ், செலவுக்கு காசுன்னு ஏகப்பட்ட செலவ இழுத்து வச்சிருக்கேன்.. வேண்டாம் விடு!”

 

“சரி கடனா என்ட்ட வாங்கிக்கோ.. வேலைக்குப் போனதும் திருப்பி குடு!”

 

“வேற பேசு ண்ணா..”

 

‘டேய் மாதவா..’ பின்னால் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. கூடவே, ‘அத்தான்…? ஒரு செக்கெண்ட்’ என்று மாதவன் பதில் கொடுப்பது கேட்டது.

 

“நீ வந்து சேரு. நாம நைட் ஊருக்கு போரப்போ பேசலாம்.”. வைத்துவிட்டான்.

 

‘பேங்க்ல இதுக்கு ஸ்டுடென்ட் லோன் குடுப்பானா? விசாரித்தால் என்ன’ என்று தோன்றியது.

 

சிந்தனையோடு மாதவன் கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள். ஒருவருமில்லாத பத்துக்கு பத்து வரவேற்பறை. அதையொட்டி இருந்த அறை பூட்டப்பட்டிருக்கக் கண்ணாடிக் கதவின் பின் பார்த்தாள். அதுவும் சின்ன அறை தான். எதோ மருத்துவம் சம்பந்தப்பட்ட லேப் போன்றிருக்க.. மாதவனுக்கு அங்கு என்ன வேலை என்று புரியவில்லை.

 

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்த அறையின் ஓரத்திலிருந்த கனமான கதவு திறக்கப்பட, ஏசியின் புகையோடு கூட ஒருவன் வெளியே வந்துகொண்டிருந்தான்.

 

பத்துக்கு பத்து அறையை நோட்டமிட இப்பொழுது தான் கவனித்தாள்.. ‘ஜெனிடிக் ரிசர்ச் லேபாரடரி’ (Genetic Research & laboratory) என்றிருந்தது அங்கிருந்த பலகை.

 

“வந்து நேரம் ஆச்சா..?”, கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மாதவன்.

 

“உனக்கு ஏதாவது நோய் இருக்கா ண்ணா?”

 

“ஆங்?”

 

“இங்க என்ன பண்ற?”

 

ஒரு வினாடி விழித்தான். “என் ஃப்ரெண்ட பாக்க வந்தேன்..”

 

உள்ளே நடமாடிக் கொண்டிருந்தவன் வெளியே வர,

 

“இதோ இவன் தான்.. விஷ்வநாதன், என் ஃப்ரெண்ட். அவன் லேப் தான் இது. டேய் என் தங்க டா…” அறிமுக படுத்தி முடித்ததும்.. “கிளம்பறேன் மச்சான். வா அலர்”, அவளைக் கிளப்ப.. அவளுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம்.

 

“இங்க என்ன பண்றீங்க?”, விஷ்வாவிடம் கேட்க..

 

“ஜெனிட்டிக்கல் எஞ்சினியரிங்.”

 

“ம்ம்..?”

 

“இப்போதைக்கு ஃபெர்டிலிட்டி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி-ன்னு வச்சுக்கோங்களேன்.”

 

மாதவனை மேலும் கீழும் அவள் முறைத்துக் கொண்டே பார்க்க…

 

“சிஸ்டர்.. நீங்க என்னவோ தப்பா நினைக்கறீங்க. உங்க அண்ணா கைல கால்ல விழுந்து இப்போ தான் ரிசர்ச்சுக்காக சீமன் வாங்கினேன். வேற ஒன்னும் இல்ல பெருசா..”

 

சத்தியமாக மாதவன் இப்படி ஒரு ஓட்டை வாயை எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் தங்கையிடமே யாரவது விந்தணு பற்றி பேசுவார்களா? மடையனை ஊள்ளுக்குள் திட்டி தீர்த்தான். ‘டேய் நாசமான போனவனே..’ கொலை வெறி வந்தாலும் ஒன்றும் காதில் விழாதது போல் மாதவன் எங்கோ பார்க்க..

 

இவள் ‘ஏன் டா கேட்டோம்’ என்று கஷ்டப்பட்டு புன்னகையை உதிர்த்து.. “நைஸ் மீட்டிங் யூ. பை”, என்றுவிட்டு, “உன் வேலை முடிஞ்சுதுனா போலாமா ண்ணா..” என்று மாதவனை பார்த்தாள்.

 

தன்னால் முடிந்த அளவு பார்வையால் விஷ்வாவை எரித்தவன்.. “நீ வெளில இரு அலர்.. இவன்ட்ட ஒரு வார்த்த பேசிட்டு வந்துடுறேன்.”, அவளைக் கிளப்பினான்.

 

“ம்ம்..”, சிரிப்பை அடக்க முடியாது, விஷ்வாவிடம் தலை அசைத்து வெளியே செல்ல கதவைத் திறக்கவும் மெல்லிய உரசலோடு உள்ளே நுழைந்தான் நெடியவன் ஒருவன்.

 

“சாரி..”, என்றுவிட்டு அவன் உள்ளே செல்லவும்.. வெளியே நின்று கொண்டவள் காதில் பேசுவது துல்லியமாக விழுந்தது.

 

“வாங்க வாங்க டாக்டர் சார்.. மனசு மாறீட்டீங்களா? சேம்பிள் குடுக்கிறீங்களா? உன்ன மாதிரி ஜீனியஸ்சோட ஸ்பெர்ம் வேணும் டா..”, விஷ்வாவின் சத்தம் கேட்டது.

 

“போடாங்… அதுக்கு வேற எவனாது இளிச்ச வாயன் இருப்பான் அவன்ட்ட கேளு..”

 

கொல்லென்ற சிரிப்பு சத்தம்.. “டேய் மாதவா நீ இளிச்ச வாயனா?”

 

“கால்ல விழுந்தியேன்னு பாவம் பாத்தா… என் தங்க முன்னால என் மானத்த வாங்குவ நீ? நீ இதுலயே ஊறிட்டு கிடக்குற. அதுக்காக சின்ன பொண்ணுட்ட என்ன சொல்லணும் சொல்ல கூடாதுன்னு தெரியாது? எருமை மாடே.. நாயே… பேயே.. என் மானத்த வாங்கின பிசாசே..”, குனிய வைத்து முதுகில் மொத்தும் சத்தம்.

 

“இவன் விரிச்ச வலையில விழுந்துட்டியா மாதவா?”, புதியவன் மாதவனிடம் கேட்கவும்… இதற்கு மேல் அங்கு நிற்பது சரி வராது என்று எண்ணியவள் காதில் சம்பாஷனை கேட்காத தூரம் சென்று நின்று கொண்டாள்.

 

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.. மூவரும் சிரித்துக் கொண்டே வெளி வந்தனர்.

 

“வா டா அலர். சாப்பிட்டுப் போகலாம். சனிக்கிழமன்னு அம்மா வெண்டைக்காய்  மோர் குழம்பும், சம்பந்தமே இல்லாம கேபேஜும்ன்னு கொடுமையான சமையல் செஞ்சு வச்சிருக்காங்களாம். வசு பிரியாணி கேட்டா. நாம சாப்பிட்டுட்டு அவளுக்கும் வாங்கிட்டு போவோம்.”

 

அலர் தயங்க… “வா டா… விஷ்வா நம்ம கூட பிறக்கல அவ்வளவு தான். என்ன அத்தான் உங்க ப்ளான்? வாங்களேன் நீங்களும்..”, நெடியவனையும் அழைத்தான்.

 

தயக்கமாக இருந்தாலும் அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத அலர்விழியை கண்டவன் என்ன நினைத்தானோ.. “ஓ போலாமே..” என்றுவிட்டான்.

 

“அலர் நீ எதுக்கு வெயில்ல..? என் கூட கார்ல வாயேன்.”, நெடியவன் அமைதியாக நின்றிருந்த அலர்விழியிடம் கேட்க, ‘இவனா கேட்டது?’ நம்பமுடியா பார்வை விஷ்வா – மாதவனிடையே.

 

“தாங்க்ஸ்.. நான் அண்ணா கூடவே வரேன். எனக்கு பைக் ரைட் பிடிக்கும்.” அவள் முடித்துவிட, அருகிலிருந்த உணவகம் நோக்கிச் சென்றது வண்டிகள்.

 

பல உயிரினங்கள் உணவு மேசையில் உயிர் விட்டிருக்க.. உணவை உள்ளே தள்ள ஆரம்பித்தனர்.

 

“இவர் டாக்டர்.பிரவீன் குமார். நீயூரோ சர்ஜன். சிட்டில்ல இருக்க பெரிய டாக்டர்ஸ்-ல இவரும் ஒருத்தர். சின்ன வயசுலயே மனுஷன் சாதிச்சுட்டார்! இவர பாக்க அப்பாயின்மென்டுக்கு காத்து கிடக்கணும். ஆனா அது மத்தவங்களுக்கு.. நமக்கு இவர் பிரவீன் அத்தான்.”

 

அவள் புருவம் சுருக்க..

 

“அம்மாவோட அண்ணன் பையன் வினோத் தெரியுமில்ல..?”

 

“ம்ம்”

 

“அவனோட பெரியம்மா பையன். எல்லாம் சொந்தம் தான்.”

 

விஷ்வா, பிரவீன் அடுத்தடுத்து அமர்ந்திருக்க.. மாதவன் அருகே அமர்ந்திருந்தவள்.. பிரவீனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.

 

“அத்தான்… இவ கடலூர் சித்தப்பா பொண்ணு. அலர்விழி”

 

இன்று அவள் மை பூசி இருக்கக் கூடாதோ… அவன் விழியும் அவள் விழியில் தான் நிலைத்து நின்றது.

 

விஷ்வா ஏதோ கேட்க, மாதவன் கவனம் விஷ்வா பக்கம் திரும்ப, பிரவீன் அலர்விழியிடம் பேச ஆரம்பித்தான்..

 

“என்ன பண்ற..” என்று ஆரம்பித்து அம்மா.. அப்பா.. நகு.. பாட்டி.. படிப்பு.. பொழுதுபோக்கு என்று ஒவ்வொன்றாய் கேட்க.. மாதவனுக்குப் பொறி தட்டியது.

 

“ப்யூட்டிஃபுள் ஐஸ்.. பட் இந்த மை எல்லாம் கண்ணுக்கு நல்லதில்ல. ரொம்ப யூஸ் பண்ணாத.”, என்றான் மருத்துவன். மாதவன் கவனம் முற்றிலும் பிரவீன் பக்கம் திரும்ப… மருத்துவன் கவனம் முழுவதும் தங்கையின் மேல்.

 

ஒரு புன்னகையைப் பதிலாக அலர் கொடுக்க.. மாதவன் முறைத்ததோ விஷ்வாவை!

 

இருவருக்கும் வியப்பு தான் பிரவீனின் திடீர் மாற்றத்தில். முதலாவது அவன் இவர்களோடு உணவருந்த வருவான் என்பது எதிர்பாராதது. விஷ்வா மாதவனை விட பெரியவன், மணமானவன்.. என்றாலும் மிகுந்த நெருக்கம், ஒரே தெருவில் வசித்து வருகின்றனர். அவனை நம்பி வசுவை தனியே விட்டுச் செல்லலாம். மாதவன் தங்கை அவனுக்கும் ‘சிஸ்டர்’ தான். அதனாலேயே அலர்விழியோடு அவனையும் ‘வா டா சாப்பிடலாம்’ என்று அழைத்தான்.

 

பிரவீன் விஷ்வா வயது, சட்டென்று பழக மாட்டான். அவன் நட்பெல்லாம் மருத்துவ புத்தகத்தோடு மட்டுமே. மாதவன், மாமா வீட்டிற்குச் சென்று தங்கும் வேளையில் பிரவீன் அங்கு இருக்க நேர்ந்தாலும் அவன், ‘அவன் உலகில்’ தான் இருப்பான்.

 

வீட்டுக்குத் தெரியாமல் மாதவனும் வினோத்தும் மிட் நைட் மசாலா பார்க்கும் வேளையிலும் இவன் தொலைகாட்சிப் பெட்டி முன் இருந்தாலும் ஏதாவது படித்துக் கொண்டோ யோசித்துக் கொண்டோ இருப்பான். மாதவனுக்குமே சந்தேகம் வந்ததுண்டு.. ‘பிரவீனுக்கு வயதுக்கு ஏற்ற ஆசையும் எண்ணங்களும் வருமா?’ என்று.

 

ஆக இப்படிப் பட்ட ஒருவன் தன் தங்கையிடம் பேசுவது சற்று நெருடல் தான்.

 

மாதவன் முறைக்க.. சுதாரித்த விஷ்வா பிரவீனை பிடித்துக் கொண்டான்.

 

“சொல்லுங்க டாக்டர் ஜீ.. அடுத்து என்ன படிக்க போறீங்க..?”

 

அவன் பேச்சுக்கெல்லாம் பதில் உரைத்தாலும், ஒருவரும் உணராத வண்ணம் அலர் பக்கம் உணவை நகர்த்தி வைப்பதும்.. ‘இது சாப்பிடேன்.. அத சாப்பிடேன்.. சிந்தாம சாபிடு.. இவ்வளவு தண்ணி குடிக்காத’ என்ற அன்புத் தொல்லையும் கொடுத்துக் கொண்டிருந்தான். அவளும் பதில் பேசாமல் அவன் கூறுவதை எல்லாம் கடனே என்று செய்துக் கொண்டிருந்தாள்.

 

மாதவன் பக்கா அண்ணனாய் மாற.. “அலர் சட்டுன்னு சாப்பிடு… இல்ல பேக் பண்ணிக்கலாம். வசு பசில காத்திருப்பா..”, என்று துரிதப்படுத்தி ஒரு வழியாய் உணவை முடித்துக் கொண்டு வெளிவருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

 

மருத்துவன் சிந்தனையை முழுவதுமாக ஆக்கிரமித்தாள் அலர்விழி. அடக்கம் ஒடுக்கமாக சல்வாரும், உடலை வெளிக்காட்டாமல் மூடி மறைத்த கஞ்சியிட்ட பருத்தி துப்பட்டாவும், அனைத்து முடியையும் பறக்க விடாமல் இழுத்து க்ளிப் செய்திருந்த விதமும்.. அதிகம் பேசாத மென்மை தன்மையும்.. எதிரில் இருக்கும் ஆண்களை நேர் பார்வை கூட பார்க்காமல் மண்ணை பார்க்கும் பெண்மையும், சிரிக்கக் கூட காசு கேட்கும் அமைதியின் திருவுருவமாகக் காட்சியளித்த அலர்விழி, மருத்துவன் சிந்தனையை முழுவதுமாக ஆட்கொண்டாள்!

 

“பை அலர்விழி.. கூடிய சீக்கிரம் மீட் பண்ணலாம். அப்போ நிதானமா பேசலாம்”, என்று கை கொடுத்துச் சென்றவன் முதுகை இவள் பார்த்து நிற்க..

 

“ட்டால், ஹேன்ஸம் அண்ட் சக்ஸ்ஃபுல் யங் டாக்டர் (tall, handsome and successful young doctor) இல்ல..?”, மாதவன் கேட்க..

 

கடுவன் பூனை போல் நின்றிருந்தவன் முகம் பார்த்தவளுக்கோ அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

 

“போட்டு வாங்கறியா மாது ண்ணா?”

 

“நீ எதுக்கு இப்போ பல்ல காட்டற? அடக்கமா இருக்கத் தெரியாதா?”, காய்ந்தான்.

 

“ண்ணா.. ஏன் ண்ணா.. பழைய படத்து பாக்கியராஜ் மாதிரி பண்ற?”, அலர் சிரித்தாள்.

 

“நீ இன்னும் சின்ன பொண்ணு தான் ஞாபகமிருக்கில்ல?”

 

இழுத்துப் பிடித்து இம்சித்தக் கூந்தலை பறக்க விட்டுக் கொண்டே, “இம்ம்… இருக்குண்ணா..”, சத்தமாக சிரித்தாள்.

 

“எதுக்கு அவர பாத்த? அவருக்கும் உனக்கும் வயசு வித்தியாசம் ஜாஸ்தி டா! அவர் அம்மா ஒரு பத்திரகாளி! உன் பெரியம்மா எல்லாம் அந்த பொம்பள முன்ன ஒன்னுமே இல்ல. உனக்கு வேண்டா டி!”

 

“அவர் என் டைப் இல்லண்ணா. சும்மா கூட சைட் அடிக்கல போதுமா?”

 

‘அப்போ யார் உன் டைப் அலர்?’ மனம் கேட்டது. கேள்வி முடியும் முன் பதில் கண் முன் வந்து நின்றது. அவன் கண்கள் சுண்டி இழுக்க.. வாய் எதையோ மென்றுக் கொண்டிருக்க.. மந்தகாச புன்னகை சிந்தினான். இவளும் அவனுக்குப் பதில் புன்னகை வீசினாள்.

 

“இப்போ எதுக்கு நீ தானா சிரிக்கிற?”

 

“ண்ணா…!”

 

“அவர நினைச்சியா?”

 

“நீ வேற! அவர பத்தி நினைக்க என்ன இருக்கு? சரி.. அடுத்த தரம் இவர் இருக்கார்ன்னு தெரிஞ்சா அந்த பக்கம் கூடப் போக மாட்டேன் போதுமா?”

 

இவள் கூறினால் போதுமா? நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?

 

துப்பட்டாவை அழகாக மடித்து மாதவன் கையில் கொடுத்தவள் இருபக்கமும் கால்போட்டுகொண்டு, “நீ பின்னால உக்காரு மாதுண்ணா.. உனக்கு ஓட்டவே தெரியல. நான் வேகமா ஓட்டறேன் பார்..”. கூறிய அலர்விழி கையில் பல்ஸர் பறந்தது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!