அ07 – Shoba Kumaran கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 7
செமஸ்டர் விடுமுறையில் நான்கு நாட்கள் கடந்திருக்க, அலர்விழியால் இன்னும் இருதினங்களே வீட்டினரோடு செலவழிக்க முடியும்.
Advertisement
வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கவே அலர்விழியை தாங்கோ தாங்கென்று தாங்க.. பெண்ணிற்கு நாட்காட்டி வேகமாக கிழிபடுவது அவஸ்தையைத் தந்தது.
Advertisement
இன்று ஒருவராலும் விடுப்பு எடுக்க முடியவில்லை என்றதும் பாட்டியும் பேத்தியும் மட்டுமே வீட்டில்.
Advertisement
“முடிய என்ன பாடு படுத்தி வச்சிருக்க நீ? வாரத்துக்கு ஒரு தரம் எண்ணை வச்சு குளிக்கறது இல்லியா?”
Advertisement
கொல்லைப்புற வாசற் படியில் அமர்ந்து பாட்டி, பேத்தியின் சுருள் முடியில் எண்ணை வைத்து மாசாஜ் செய்ய.. பெண்ணின் விழிகள் சுகத்தில் சொக்கி நின்றது.
“என்ன டி.. சத்தத்த காணம்?”
“உங்க மாசாஜ்க்கு கண்ண சொக்குது பாட்டி. இந்த சுகம் அனுபவிச்சு எத்தன நாளாச்சு! ஹ்ஹ்ம்ம்! நீங்களும் என்னோடையே வந்திடுங்க பாட்டி… நாம ரெண்டு பேரும் தனியா வீடெடுத்து தங்கலாம்.. நீங்களே எனக்கு தினமும் எண்ணை வச்சு விடுங்க”
“அங்க எல்லாம் வீடு தீப்பெட்டி கணக்கால்ல இருக்கும்? அங்க வந்து நான் என்ன பண்ண?”
“ரெண்டு பேருக்கு அது போதும். நிஜமா தான் கேக்கறேன்.. என்னோட வரீங்களா?”
“உன் தாத்தாக்கு வாழ்க்கை பட்டு இங்க வந்தேன். என் உயிர் இங்க தான் பிரியணும்.”
“ச்சு.. என்ன பாட்டி இப்படியே பேசிகிட்டு!”
“வயசாகுதில்லியா மா.. உடம்புக்கு எதுவும் வரதுக்கு முன்ன, உங்களுக்கெல்லாம் தொந்தரவு தராம கண்ண மூடிடணும். எம் மகனும் மருமகளும் என்னை கண்கலங்காம பாத்துகறாங்க! நீ அவங்க வயசான காலத்துல அவங்கள பாத்துக்கணும். இந்த வீட்டுல பையன் இல்லாத குறைய நீ தான் தீத்து வச்ச. அம்மா அப்பா மனசு கோணாம நடந்துக்கணும்..”
“ம்ம்ம்..”
“என்ன ம்ம்?”
“கண்டிப்பா அவங்க மனசு கோணாம நடந்துப்பேன்… நல்ல படியா பாத்துப்பேன்… போதுமா…?”
“நீ நல்லா படிக்கணும் பாப்பா. நல்ல உத்தியோகத்துக்கு போகணும். உன் வளர்ச்சிய கெடுக்கன்னு நிறைய தடை வரும். உத்து கவனிச்சா தெரியும்.. அந்த தடை தான் நீ மேல ஏற உதவுற படிகட்டுன்னு. சோர்வா இருக்கும் போது ப்ரேக் எடுத்துக்கோ… தேங்கி நின்னுடாத. மூச்சு இருக்க வரைக்கும் யார் கையும் எதிர்ப்பாக்காத மாதிரி வாழ கத்துக்கோ. எப்பவும் மத்தவங்களுக்காக உன் கை நீளணுமே ஒழிய… யார் தூக்கி விடுவான்னு காத்து நிக்காத!
உனக்கு சரின்னு தோன்றத மூனாம் மனுஷியா தள்ளி நின்னு பாரு! சாதக பாதங்கள அலசு! அது உன் வாழ்க்கைக்கு சரின்னு தோணினா துணிஞ்சு செய்! ஒரு கனவு முடியும் போது புது கனவு காணு. உடம்புல தெம்பிருக்க வரைக்கும் ஓஞ்சு போயிடாத! நல்லா வாருவ பாப்பா நீ!”
பாட்டியின் குரல் கரகரத்தது.
“ஏன் பாட்டி… உங்களுக்கு ஏதாவது கனவு இருந்துதா?”
“கனவு இல்லன்னா.. அந்த மனுஷனும் மனுஷியும் ஜடம்! நீ என்னை மாதிரி பாப்பா. எனக்கும் படிப்பு தான் கனவா இருந்துது. அப்போ எல்லாம் அது ரொம்ப ரொம்ப பெரிய கனவு! என் குடும்பத்துல என் கூட பிறந்தவங்க எட்டு பேர். ரொம்ப வசதி எல்லாம் இல்ல. தோட்டம் இருந்துது வயறுக்கு சாப்பாடு இருக்கும். அவ்வளவு தான் தேவை. அதனால யாரும் அதுக்கு மேல யோசிக்கல. படிப்பு வாசனையே இல்லாத கிராமம்.
ஒரு லூதரன் சர்ச் இருக்கும்.. அவங்க அஞ்சாவது வரைக்கும் ஸ்கூல் வச்சிருந்தாங்க. அதுல ஒரு அங்களோ இண்டியன் டீச்சர்… அவங்க தான் என்னோட வழிகாட்டி! சும்மா சுத்திட்டு இருந்த என்னை இழுத்துட்டு போய் அவங்க க்ளாஸ்ல உக்கார வச்சாங்க.. மதியம் ஸ்கூல் முடியும் போது ஒரு மிட்டாய் தருவாங்க. அதுக்காக போக ஆரம்பிச்சேன்.
ஆறாவதுக்கு டவுன் போகணும். அம்பது காசு ஸ்கூல் ஃபீஸ்.. அப்பா தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அம்பது காசுக்கு எங்க முழு குடும்பமும் ரெண்டு நாள் மீன் வச்சு சாப்பிடலாம்! அந்த மிஸ் தான் அப்பாட்ட பேசி சேர வச்சாங்க. எங்க வீட்டு கிட்ட இருந்த பெரியப்பா பசங்களோட பழைய புக்ஸ், பழைய நோட்ல மீதி வர பேப்பர் வச்சு படிப்பு ஓடிச்சு! ஃபீஸ் கட்டினனால துணி கிடையாது எனக்கு! மொத்தமே ரெண்டு சட்டை துணி தான் இருக்கும். நல்ல நாளுக்கு எல்லா பிள்ளைங்களுக்கும் புது துணி கிடைக்கும். ஆனா எனக்கு ஒரு பேனா… பென்சில் அப்படி தான் ஏதாவது வாங்கிபேன். அக்காவோட பழயத தச்சு போட்டுப்பேன்!
பன்னெண்டு நல்ல மார்க் கிடைக்கவும், என்னோட மிஸ் தான் திரும்பவும் காலேஜ் சேத்துவிட அப்பாட்ட பேசினாங்க. நிறைய நிறைய போராட்டம். தெரியாம கெமிஸ்ட்ரி எடுத்துட்டு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். நைட் எல்லாம் முழிச்சு படிப்பேன்.. அப்பா தான் தேயில போட்டு குடுத்து பக்கத்துல படுத்திருப்பார் நான் தூங்க போர வரைக்கும். அந்த மண்ணென்னை விளக்குல படிச்ச நான் காலேஜ் செக்கண்ட்.. என்னாலையே நம்ப முடியல.
படிப்பறிவு இல்லாத என் கிராம பிள்ளைங்களுக்காக தான் டீச்சிங்-ல இறங்கினேன். வாழ்க்கையில முடியாததுன்னு எதுவுமே இல்ல! சிலது சிலருக்குச் சுலபமா கிடைக்கும் சிலருக்கு அதுவே எட்டாக் கனியா இருக்கும். அதுக்காக முடியாதுன்னு துவண்டுட கூடாது. முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்!
இது என் வாழ்க்கை சாதனை இல்ல. என் மகன்.. என் மருமக.. நீங்க.. உங்க நிம்மதி தான் என் சாதனை.
சாதிக்கறதுன்னா மார்ஸ் போய் கொடி பறக்க விடுறது மட்டும் இல்ல.. நம்ம மன நிம்மதியும்.. கூட இருக்கவங்கள நிம்மதியா இருக்க விடுறதுமே சாதனை தான்!”
பாட்டியும் பேத்தியும் அவரவர் கால காரியங்களை அலசி ஆராய்ந்தனர். எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் இப்படிப் பட்ட தருணங்கள் அபூர்வம்.
“நேத்து நைட்டோட சீரியல் இப்போ திரும்பவும் போடுவான்.. நேத்து மிஸ் பண்ணினத இன்னைக்கு பிடிகணும்! நான் போய் நாட்டாமைக்கு என்ன ஆச்சுன்னு பாக்கறேன்..”
பாட்டி கிளம்பி உள்ளே சென்றுவிட்டார். அவள் அமர்ந்தே இருந்தாள். பாட்டி சிந்திய ஒற்றை வாத்தை அவளை எங்கோ அழைத்துச் சென்றது. அங்கு வாயில் எதையோ அரைத்துக் கொண்டே வந்து நின்றான் அவன்.
‘சென்டர்ல இருப்பான். பாக்கலாம்!’ கள்ள மனது திட்டம் தீட்டியது.
‘படிக்கிற வேலையை மட்டும் பாரு!’ மூளை சாடியது.
சும்மா இருந்தா தானே பிரச்சனை? வீட்டு வேலையில் ஈடுபட்டவள்.. வேலை முடித்து தலைக்கு நீர் ஊற்றி.. உண்டு முடித்து.. கையில் ஒரு புத்தகத்தோடு மெத்தையில் அமர்ந்தாள்.
The Hidden life of Trees-ல் மூழ்கிப் போனாள். என்றுமே மரங்கள் மேல் தனி விருப்பம் அவளுக்கு. அவைகள் பேசிக் கொள்ளுமாமே.. உணருமாமே. புத்தகத்தில் ஆழ்ந்து போனாள்.
அவளும் பேசுவாள் அவள் வீட்டுக் கொய்யா மரத்தோடு. அப்பாவும் தாத்தாவுமாக நட்ட செடியாம்.. இன்று அத்தனை பெரியதாகக் கிணற்றின் பின் நின்று கொண்டிருக்கிறது. வருடம் தோறும் கூடைக் கூடையாக சிறிய, சிகப்பு கொய்யா தரும்… தேன் தித்திப்பு அதன் சிறப்பு!
மாதவனோடு அவளும் கிணற்றில் ஏறி.. அங்கிருந்து கொய்யாவில் தாவி… நகுநாவையும் வசுவையும் இழுத்து தூக்கி கிளையில் அமரவைத்துக் காய் பறித்த நினைவலைகள் வருடி நின்றது.
இருவாலுகளும் இறங்கி விட, வசு தொங்க.. இறக்கி விட்டவர்களுக்கு நகுவை இறக்க தெரியவில்லை அன்று. ஒற்றைக்கை பிள்ளையை மரம் ஏற்றிவிட்ட குற்றத்திற்காக அதே கொய்யா சுள்ளியால் இவள் அடி வாங்க நடுவே வந்து விழுந்து மீதி அடியை அன்று மாதவன் தான் வாங்கினான்.
இவர்கள் இருவரும் அடி வாங்க அம்மா காலைக் கட்டிக் கொண்டு அழுதது என்னவோ நகுநாவும் வசுவும் தான்! புத்தகத்தை நேஞ்சோடு அணைத்துப் பிடித்தவள் இதழ் விரிந்தது.
உண்ட மயக்கம்.. தலைக்கூற்றிய மயக்கம்.. கண் தன்னால் மூடியது.
மரம் பேசவில்லை. ஆனால் கனவில் வந்தது. அந்த மரத்தோடு மரமாய் இவளை ஒருவன் நிறுத்தி குரல்வளையைப் பிடித்திருந்தான். அவன் உதடு உதிர்த்த மந்தகாச புன்முறுவல் அவள் தலைமாட்டில் போட்டிருந்த கைப்பேசி அழைப்பால் காணாமல் போக.. எரிச்சலோடே கண் திறந்தாள்.
லோன் தருகிறேன் என்று நீண்ட வரிசையில் வருபவர்களுக்கு எல்லாம் மதியம் மூன்று மிகவும் பிடித்த நேரம். வேலை எல்லாம் முடித்து சற்று கண் அசர நினைக்கும் தறுவாயில் தான் அவர்களுக்கு கடன் கொடுக்க ஆசை முட்டிக் கொண்டு வரும். இன்றும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்தாள்.
“மிஸ்.அலர்விழி?”, என்றதும் வேண்டா வெறுப்பாகத்தான் “ம்ம்.. சொல்லுங்க” என்றாள்.
“டேர் டு ட்ரீம்-ல இருந்து ஸ்காலர்ஷிப் விஷயமா கால் பண்றேன்”, என்ற அந்த வரியில் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான்.
அப்படி ஒன்று அங்கு இல்லை என்று வனிதா கூறியிருந்தாளே.. தன்னை யாரேனும் கிண்டல் செய்கிறார்களோ என்று ஒரு வினாடி தோன்றியது.
“புரியல… யார்? எங்க இருந்து பேசறீங்க?”, மீண்டும் கேட்டுக் கொண்டாள். உன்மை தான் போலும்!
“சேக்கர் ஃப்ரம் டேர் டு ட்ரீம் மேடம். உங்க ஸ்காலர்ஷிப் விஷயமா பேசலாமா?”
‘என்னது பேச..லா..மா..வா? பேசு பேசு’ என்று மனம் துள்ளியது.
“சொல்லுங்க சார்..”
சில பல கேள்விகள் கேட்கப்பட்டது. பதில் உரைக்கப்பெற்றது. வீட்டின் வருமானம், பள்ளி மதிப்பெண் என சில கோப்புகள் அனுப்பித் தருமாறு கேட்டுக் கொண்டான்.
“அனுப்புற டாக்யுமென்ட்ஸ் வெரிஃபை பண்ணிட்டு, நீங்க ஸ்கரஷிப்புக்கு எலிஜிபிள்னா எங்க ஆஃபீஸ்ல இருந்து கால் வரும். ஆப்டிட்யூட் டெஸ்ட், உங்க காலேஜ்ல போன செமஸ்டர்ல படிச்ச கான்செப்ட்ஸ்-னு ரெண்டு டெஸ்ட் இருக்கும். மொத்தம் மூனு மணி நேரம்! அத பாஸ் பண்றத மார்க் வச்சு, 50 டு 80% வரைக்கும் ஸ்காரல்ஷிப் கிடைக்கும். ஒரு டெஸ்ட் ஃபெயில் ஆனா கூட ஸ்காலர்ஷிப்ப மறந்திடுங்க.”, என்ற பின் எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் என்ற தகவல் பகிரப்பட்டது.
அவளின் நிம்மதி பெருமூச்சோடு தாங்க்யூ வர.. ‘ஆல் தி பெஸ்ட்’-டோடு அழைப்பு துண்டிக்கப்பாட்டது.
பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எபி-க்குள்ளும் ஒரு நிம்மதி.
அவளின் அந்த ஒற்றை நிம்மதி மூச்சிற்காக அவன் எத்தனை மணி நேரம் நிம்மதி இழந்தான்!
அலர்விழி அல்லாது வேறு யாரேனும் அவள் இடத்திலிருந்திருந்தால் ‘உதவி செய்திருப்பாயா?’ என்ற மனசாட்சிக்குப் பதில் உடனே கூறவில்லை என்றாலும், பதில் தீர்க்கமாக வந்தது. அந்த பதில் ‘செய்வேன்’ என்பது.
அப்படி ஒரு பதில் வரவும் தான் அம்மாவிடம் சென்று நின்றான்.
“நாம என்ன ச்சாரிட்டியா ரன் பண்றோம் எபி?”, இந்த கணினி மையத்தைப் பொறுத்த வரை எஸ்தர் தான் அனைத்தும். இன்று வரை மகனோ கணவனோ அதில் மூக்கை நுழைத்தது இல்லை, அதனால் அம்மாவிற்கு அவன் புதிய பரிமாணம் பிடிபடவில்லை.
“பண்ணினா என்ன மா தப்பு? வருஷா வருஷம் என் பொறந்த நாள் அன்னிக்கு ஒரு இல்லத்துக்கு ஒரு நாள் சாப்பாடு குடுக்கிறதவிட இது மேல் மா. முன்னுக்கு வரணும்ன்னு இருக்கப் பல வசதியில்லாத பசங்க முன்னுக்கு வருவாங்க மா. படிக்க ஆசை இருக்கவங்களுக்கு தானே செய்யறோம்… செய்யலாம்மா. நமக்கு நஷ்டம் வராம பாத்துகலாம். டேக்ஸ் டிடக்ஷ்ன் இருக்கான்னு பார்ப்போம்.
மாடில ஒரு ஃப்லோர வாடைக்கு விடலாம். அந்த சிஸ்டம் எல்லாம் கீழ இருக்க இடதுல அட்ஜட் பண்ணி போடுவோம். சோ கூட்டி கழிச்சா எல்லாம் ட்டாலி ஆகும்!”
“ம்ம்ம்.. யோசிக்கிறேன். எந்த போதி மரத்தடியில போய் உக்காந்த?”
“ஒரு பொண்ணுமா!”
எஸ்தர் கண்களை விரித்தார்.
“டேய்..? நான் அம்மா டா..”
“அம்மா..!”
“ம்ம்! பொண்ணு!?”… “சரி அவ ஒருத்திக்கு மட்டும் செஞ்சா போதாதா?”
“பச்… மா.”
“சரி சொல்லு..”
“சனிக்கிழம ஒரு விஸ்காம் ஸ்டுடென்ட் வந்தா.. உள்ள வரும்போது அவ முகத்த பார்த்தேன். அதுல அவ்வளவு கனவு.. அவ்வளவு எதிர்பார்ப்பு. புதுசா பூத்த பூ மாதிரி இருந்தா. அவளுக்கு இங்க கட்டுபடியாகல. வசதி இல்ல. அது மட்டும் தான் ரீசன்… திறமை இருந்தும் ஆசை இருந்தும் வசதி மட்டும் இல்ல. அவளால இங்க அஃபர்ட் பண்ண முடியாதுன்னதும் அவ முகம் வாடி போச்சு. கனவ தொலைச்சுடுவோமோன்னு ஒரு பயம், ஏக்கம், விரக்தி அதுல! அத பாத்துட்டு ஒன்னுமே செய்யாம இருக்க முடியல மா.
அந்த பொண்ணு என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றா மா.. எனக்கு வசதி இல்லன்னு எம்.பி.ஏ. பண்ண முடியாட்டி எப்பிடி இருக்கும்ன்னு நினைச்சேன். அவளுக்கு மட்டும் உதவறதுல்ல என்ன இருக்கு? ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு செஞ்ச கணக்குல போகும். இது.. அது இல்லமா… அவள மாதிரி படிக்கிற வசதி கம்மியான பசங்களுக்கு அவங்க கனவ பிடிக்க உதவணும்.”
“..”
“ம்மா.. புரியுதாமா? பொண்ணால தான் இந்த முடிவு… ஆனா இது பொண்ணுக்காக இல்ல… ம்மா?”
இது ஒரு பெண்ணால் எடுத்த முடிவென்றாலும், எண்ணம் அவளைத் தாண்டியது என்று புரியவைக்கும் நோக்கம் அவனிடம்.
“ம்ம்”, புன்னகைத்தார். “ரொம்ப வளர்ந்துட்ட எபி. பெருமையா இருக்கு ராஜா. என்ன ஆகணுமோ நீயே செய். சென்டர மட்டும் இழுத்து மூட வச்சிடாத.” என்றுவிட்டர்.
ஆக.. அலர்விழி என்ற போதி மரம் அவனுள் இருந்த மனிதனை வெளி கொண்டுவந்திருக்க, அவர்கள் கணினி மையத்தில் இன்று அவளால் பல பிள்ளைகள் பயன்படும் கதவு திறக்கப்பட்டுள்ளது. கதவு அப்படி ஒன்றும் அகலமல்ல.. பல தரப்பட்ட வடிகட்டலுக்கு பின்னரே தகுதியானவர்கள் மட்டுமே உள்ளே நுழையமுடியும் என்றது அவர்களின் சட்ட திட்டங்கள்.
அந்த குறுகிய கதவு அலர்விழிக்கு போதுமானதாக இருக்கும் என்று நம்புவோம்!
