Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ11_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 11_2

 

எபியை பார்த்த நிமிடம் அலர்விழியின் உடல் தூக்கி வாரிப் போட்டது. உடல் முழுவதும் ஒரு மெல்லிய நடுக்கம்.

 



Advertisement

‘மனோ’ எச்சில் விழுங்கியவளின் மூச்சு வாங்கியது.

 

அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன் அவள் விழி வீச்சு தன்மேல் விழவும் அப்படியே நின்று விட்டான். இவளைப் பார்க்காமல் அவன் பட்ட பாட்டை அவன் மட்டும் தான் அறிவான். பெங்களூரிலிருந்து வீட்டிற்குக் கூடப் போகாமல் நேரே அவளைத் தேடி வந்து நிற்கிறான்.

Advertisement

 

Advertisement

மேசையிலிருந்த புத்தகத்திலிருந்து கை நகர்ந்தது. அவனைப் பார்த்து தேங்கி நின்றது நொடி நேரம் தான்,

 

ஓட்டமும் நடையுமாக அவன் முன் நின்றவள் பார்வை அவனை ஒரு முறை முழுமையாக அலசி ஆராய்ந்தது. ஒன்றும் ஆகவில்லையே என்ற தவிப்பு அவள் கண்களில் தெளிவாகத் தெரிந்தது!

Advertisement

 

முகத்தில் மிதமிஞ்சிய களைப்பு! மற்றபடி எப்பொழுதும் போல் நன்றாகத் தான் இருந்தான். அவள் உருக்குலைந்து போயிருக்க, அவன் வசீகரம் கூடியது போல் தோன்றியது. ஏன்.. அவனுக்கு தவிப்பெதுவும் இல்லையா? மனம் வலித்தது. கோபம் வலுத்தது.

 

கீழிருந்து மேல் வரை அளவெடுத்த அவள் கண்கள், அவன் கண்களில் வந்து  நிலைத்தது.

 

விழியின் குளம் கட்டிய விழிகளையும்.. நடுங்கிய உதட்டையும் பார்த்தவனுக்கு வலித்தது. தேடிப் பயந்திருப்பாள் என்று தோன்றியது.

 

“ஏய்… ச்சு… எனக்கு ஒன்னும் இல்ல விழி… வேலை விஷயமா தீடீர்னு பெங்களூர்..”, முடிக்கவில்லை..

 

‘பளார்’ என்ற சத்தம்.. கன்னம் எரிந்த பின் தான் உணர்ந்தான்.

 

எதிர்பார்க்கவில்லை… ஒரு நொடி.. ஒன்றுமே அவனுக்குப் புரியவில்லை. அவனும் தன்னிச்சையாக, அறைந்த கையை அடுத்த வினாடியே முறுக்கி அவள் முதுகோடு பிடித்திருந்தான்.

 

உரசி நின்ற உடலின் நடுக்கமும்.. பனித்த கண்களும்.. விடைத்த மூக்கும்.. துடித்த உதடும்.. அவள் இதயத்தை உணர்த்த, அவள் நிலை பார்த்தபின்னும் அவள் இதயத்தை உணராமல் இருக்க அவன் என்ன ஜடமா?

 

கண்டிப்பாக அவள் கரம் வலித்து கொண்டிருக்கும்.. அவன் பிடி அப்படி. ஆனால் அவனை ஈர்த்த விழிகளின் ஈரம் கரத்தின் வலியினால் ஏற்பட்டதல்ல என்று ஒருவரும் அவனுக்குக் கூற அவசியம் இல்லை.

 

மூக்கு விடைக்க… இதழ் துடிக்க.. உயிரைக் கண்களில் தேக்கி நிற்பவளிடமா அவன் வீரத்தைக் காட்ட? கையை விடுவித்தான். நகராமல் பார்த்தே நின்றாள்.

 

அவள் அறைந்திருக்க…. “ரொம்ப பயந்துட்டியா? சாரி விழி.. எதிர்பாக்கல விழி..”, என்றான், அறை வாங்கியவன்!

 

அவள் இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை. எப்பொழுதும் போல் விழி பேசியது.

 

‘போடா…’ என்ற பார்வையோடு அவள் திரும்பவும் விழியின் கையை பிடித்தான். திரும்பி பார்த்தவள் கண்கள் கனலைக் கக்கியது. பற்கள் அரைபட்டாலும் உதடு துடித்தது.

 

அலர்விழி கண்கள், பிடித்திருந்த அவன் கையை நோக்கவும்…

 

“இது ரொம்ப ஓவர்! நீ அடிப்ப… நான் பிடிக்கக் கூடாதா?”, பிடியை விடாமல் கேள்வி கேட்டான்.

 

அவள் பார்வை அதே இடத்தில் நிலைத்து நிற்க.. “போ டி”, முணுமுணுத்துக் கொண்டே கையை விலக்கினான்.

 

சட்டென்று விலகியவள்.. அவள் இருந்த இடத்திற்குச் செல்லவும் பின்னோடு சென்றான்.

 

“ஏய்… நில்லு விழி..”

 

“..”

 

“எனக்கும் புதுசு தானே… எப்பிடி தெரியும்? பச்!.. விழி.. சொல்றத கேளேன்..”

 

இரண்டு தோப்புக்கரணம் போட்டான்… “சாரி.. சாரி. எனக்குமே தெரியல… தெரிஞ்சுக்க போக வேண்டியதா போச்சு! இத நான் எதிர்பாக்கல… உனக்கு மட்டும் இல்ல. எனக்கும் தான். புரியுதா?”

 

முறைத்தாள். ஆனால் அந்த முறைப்பில் வேறு பொருள் அடங்கியிருந்தது. வெறுப்பு இல்லை. நூறு சதவீத காதல் மட்டுமே! என்னை விட்டு சென்றாயே என்ற ஏக்க முறைப்பு அது!

 

காதல் தழுவ பார்த்தான். மெலிந்த தேகம்.. கலங்கிய கண்கள்! அவன் உள்ளுக்குள் அடக்க முடியா உணர்வலைகள். ஏதோ நினைக்க ஏதோ நடப்பது போல் தோன்றியது. நடப்பது எதுவும் சரியாக நடப்பதாகத் தோன்றவில்லை. கண்டிப்பாக இதன் முடிவு சரியாக வரும் என்று தோன்றவில்லை அவனுக்கு.

 

கண்களை இறுக மூடி திறந்தான். இழுத்து மூச்சை விட்டான். இதழ் துடித்தது. குரல் கமற, ஈரபடுத்திய உதடு உயிரில்லாமல் அசைந்தது.

 

எச்சில் விழுங்கி, ‘வேண்டாம்.. கூறாதே’ என்ற மனதின் அலறலைப் பொருட்படுத்தாது, “இருந்தாலும்.. இது வேண்டாம் விழி!”, என்றான், உயிர் வடிய.

 

எது இருந்தது அவர்களுக்குள் இன்று அதை வேண்டாம் என்று சொல்ல? “உனக்காக.. எனக்காக.. நமக்காக இப்போ வேண்டாம் விழி!”

 

அவனோ புரியாத பாஷை பேச, அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை பெண். மனம் அதிகமாக பிசைந்து வலித்தது.

 

அரை நாழிகை முன் வரை இதை அவள் எதிர்பார்க்கவில்லையே… ‘ஏன்’ என்ற கேள்வி தாங்கிய குளம் கட்டியிருந்த அதிர்ந்த விழிகளிலிருந்து மடை திறந்து வழிய உவர்ப்பு நீர் தயாராக நின்றது.

 

“இப்போ இதெல்லாம் சரியா தோணும். வயசப்பிடி! ஆனா இந்த வயசுல நமக்கு இது தேவையா? சாதிக்க எவ்வளவோ இருக்கே.. தேடி ஓட கனவில்லையா? அத பாப்போம். கனவ தொடும் போது நம்ம எண்ணம் இப்படியே இருந்தா… மேல யோசிப்போம். நான் சொல்றது சரி தானே.. விழி?”

 

நீர் வழிந்த மூக்கை புறங்கையால் துடைத்தாலும்… பார்வை அவன் மேல் தான். ஒரு மாதம் செத்துப் பிழைத்தாளே.. வாழ் நாள் முழுவதும் இது தானா? பற்களைக் கடித்து உணர்வை கட்டுக்குள் வைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

 

“படி விழி! அதுக்கு தான் குடும்பத்த விட்டு வந்திருக்க. அந்த படிப்புக்காகத் தான் தனியா தங்கி பாடாப்படற! மணி எட்டு! இந்த ஃப்லோர்-ல உன்ன தவிர யாருமே இல்ல. இந்த கஷ்டம் எல்லாம் சின்ன தடுமாற்றத்தால வீண் பண்ணிடாத! நல்லா படி விழி. நீ ஆசைப் பட்ட கனவ கெடுத்தவனா, உன் லட்சியத்துக்கும் உனக்கும் நடுவில தடைக்கல்லா நான் இருக்க விரும்பல. இது நமக்கு வேண்டாம் விழி!”, குரல் கமற, கடைசி சில வார்த்தைகள் காற்றாய் வெளி வந்தது.

 

‘வேதனை உனக்கு மட்டும் அல்ல எனக்கும் தான் பெண்ணே’ அவன் மனம் கூறியது அவளுக்கு கேட்கவில்லை.

 

‘அவ்வளவு தானா?’ அம்மா வரைந்த கோட்டையும் அவனுக்காக மனதார தாண்டியிருந்தாளே. குடும்பத்தையும் அவர்கள் கோட்பாடுகளையும் தூர எறிய துணிந்தாளே.. எல்லாம் இதற்கு தானா?

 

வாரக் கணக்காகக் காத்திருந்தது எல்லாம் இவன் ஊற்றும் ஈயத்தைக் காதில் வாங்க தானா?

 

உள்ளுக்குள் எழுந்த புயலின் காரணமாக, குனிந்து நின்று அடுக்கியிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக் கொண்டிருந்தவள் கண்கள் சொட்டு சொட்டாக வலியைச் சொட்டிக் கொண்டே இருந்தது. பெண்ணே உன் தைரியம் எங்கே? மனோ என்ற மனிதன் முன்… அவன் மேல் கொண்ட காதல் முன் அவள் அவளாக இல்லையே. தைரியத்திற்கு எங்கே போவாள்?

 

“விழி… புரியுதா? உனக்கு இந்த முடிவு சரின்னு தோணலையா?”

 

அவள் முறைக்க… கண்களிலிருந்து வழிந்துக் கொண்டே இருந்தது. ஒருத்தருக்காகவும் அவள் கண்ணீர் சிந்தியதே இல்லை. இன்று கரை சேரா காதல், கண்ணீர் விட வைத்தது.

 

“விழி..”, அவள் கண்ணீரை சகிக்க முடியவில்லை. தன்னால்.. தனக்காக.. சிந்தப்படும் விழியின் விழி நீர் பிடிக்கவில்லை. தன்னால் விழி எங்கோ தொலைந்து போனது தெரிந்தது. முதல் நாள் பார்த்த பெண் எங்கே?

 

“உன்ன இந்த நிலமையில உங்க அம்மா பார்த்தா.. நீ படிச்சது போதும்ன்னு கூட்டிட்டு போயிட மாட்டாங்களா? அப்புறம் நீ சாதிக்க நினைச்சது? இத இப்போ வளர விட்டா.. உன் கண்ணீர் நிரந்தரமாகிடாதா? விழி… ப்ளீஸ்.. புரியுதா விழி?”, அவள் தவிப்பு கண்ணீராய் வெளிவர… அவன் தவிப்பு அக்கறை பொதிந்த வார்த்தைகளாய் உதிர்ந்தது. இதயம் அதிகமாக அடித்து கொண்டது. அவன் திடமெல்லாம் அவள் கண்ணீரோடு கரைந்துவிடும் போல் தோன்றியது. ‘உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன். அழாத டி’ கத்த வேண்டும் போல் இருக்க.. முடியவில்லை!

 

ஏமாந்து போன உணர்வைத் துடித்த இதழைக் கடித்து உள்ளிறக்கினாள். அவனுக்கும் பிடித்தம் தானே… வேண்டாம் என்றுவிட்டானா? ‘போடா’ கூற நினைத்தாலும் முடியும் என்று தோன்றவில்லை. ‘விட்டுப் போகாதே’ என்று தான் வெட்கம் கெட்ட மனம் ஓலமிட்டது. காதல் ஒருத்தியை இப்படி ஆட்டிப்படைக்க வேண்டாம்!

 

“ஒரேயடியா பிரியற அளவுக்கு எனக்குத் தெம்பில்ல. உனக்கு இஷ்டம்ன்னா ஃப்ரெண்ட்சா டச்சுல இருப்போம்.

கால போக்கில ஃப்ரெண்ட்சாவே இருந்துடுவோம்ன்னு தோணினா அப்பிடியே இருந்திடலாம். பழகுவோம்.. நட்ப வளத்துப்போம்… ஒருத்தருக்கு ஒருத்தர் இருப்போம்..?”, அவன் பேச்சு அவளுக்கு உவப்பளிக்கவில்லை.

 

‘நீ எப்படியோ போ… என் எண்ணம் மாறாது.’, நினைத்தவள் அவனுக்குப் பதில் உரைத்தாளில்லை.

 

இது இவர்களுக்குத் தேவை தானா? சரியான கேள்வி தானே… அவன் கூறுவதில் உண்மை புதைந்திருப்பது புரிந்து தொலைக்க வேண்டுமா? ஆனால் இன்றைய அடிபட்ட மனதிற்கு உண்மை வேண்டாம். மனோ மட்டும் தான் வேண்டும் என்றது. மனோ.. எட்டா நிலவு தான் போலும்!

 

“ஃப்ரெண்ட்ஸ்..?” கேள்வியோடு கை நீட்டினான்.

 

‘இரண்டு அறை சேர்த்தே கொடுத்திருக்க வேண்டுமோ?’. விழி நீரை உள்ளிழுத்தவள் ஒருவன் எதிரில் இருப்பது போல் காட்டிக்கொள்ளாமல் அவனைக் கடந்து நடக்க ஆரம்பித்தாள்.

 

“இப்போதைக்கு வேண்டாம் சொன்னேன் தான்.. அதுக்காக உன்ன பாக்காம இருப்பேன்னு சொல்லல! நீ வேண்டாம் சொன்னாலும் உன் ஃப்ரெண்டா இருப்பேன்..”

 

உயிரின் பாதியாய் இருக்க மறுப்பதற்குக் கதற வேண்டுமா? இல்லை தோழனாக இருக்க விருப்பம் தெரிவிப்பதற்கு குளிர்ந்து போகவேண்டுமா? தெரியவில்லையே… கண்ணீர் நின்றபாடில்லை.

 

திரும்பிப் பார்க்காமல் நடையின் வேகம் கூட்டினாள். என்ன முயன்றும் நீர் வழிவது நின்றபாடில்லை. விசும்பல் சத்தம் கடித்த உதட்டைத் தாண்டி வெளியே வந்தது.

 

அவள் உடல் குலுங்குவது தெரிந்தது. இரண்டு நாட்களாவது அழுவாள் என்று தெரியும். தைரியமான பெண், புரிந்து கொள்வாள் என்று தோன்றியது!

 

செல்பவளை ஏக்க பெருமூச்சோடு பார்த்து நின்றான். எக்கச்சக்கமாகச் சொதப்பியது தெரிந்தது. மனம் பிசைந்து மூச்சு முட்டி சொல்லொன்னா துயரத்திற்குள் செல்ல.. பல்லைக் கடித்து நின்றான். கை வலிக்க அங்கிருந்த மேசை மேல் குத்தினான். கை வலியால் மன வலியைக் குறைக்க முடியவில்லை போலும்.. அவள் சென்ற சுவடை வெறித்தான். மனதார விரும்பியவளை வேண்டாம் என்றுவிட்டான். அவன் நிலை அவனுக்கே பிடிக்கவில்லை. அவள் கண்ணீர் அவனை வதைக்க மனமும் தலையும் கனத்தது.

 

கைகளால் தலையைத் தாங்கிக்கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கும் அவளின் நிலை தான்… அதில் இம்மி மாற்றமில்லை. கண்கள் கசிந்தது. உதடு துடித்தது. ‘எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் விழி.. உன்ன மட்டும் தான் பிடிக்கும் விழி!’

 

வலிக்க வலிக்கச் சத்தமாய் கூறினான், “இதுவும் கடந்து போகும்”, என்று. கடக்காது என்று யார் அவனிடம் கூறுவது?

 

இப்படி பைத்தியம் போல் அனைத்தையும் சொதப்ப நினைத்து வரவில்லை தான்! விழியின் விழியோடு கலந்து தன்னை அவளிடம் தொலைத்ததை அவளிடம் கூறத் தான் ஓடோடி வந்தான்! ஆனால் நடந்ததோ வேறு! ஏன்?

 

கருப்பு வளையமோடு குழிவிழுந்து வாடி வந்தங்கிய அவள் கண்களும்.. யாருமில்லா தனிமையிலும் படிக்க நினைத்தும் முடியாமல் அவள் படும் அவஸ்தையும், துறுத்தி நின்ற கழுத்தெலும்பும், மெலிந்த தேகமும், அவனைக் கண்டதும் அவளின் துடிப்பும்.. அவனை அசைத்தது. எப்படி இருந்த பெண் எப்படி உருக்குலைந்து நிற்கிறாள்! ஏன்? “என்ன காதல் இது? இப்படி பட்ட காதல் இருவரையும் அழித்துவிடாதா?” என்று எண்ணத்தோன்றியது!

 

இருவருக்குள்ளும் காதல் பகிரப்படும் முன்பே.. ஒரு மாத பிரிவை அவளால் தாங்க முடியவில்லை என்றால்… காதலில் திளைத்தபின் இரண்டு வருடம் அவன் அமெரிக்கா சென்று படிப்பது எப்படி? அவள் ஒரு வேலை கிடைத்து வெளிநாடு செல்வது எப்படி? அந்த பிரிவை எப்படி தாங்குவாள்?  இருவர் கனவுகளும் சமாதி ஆகி அதில் துளிர்க்கும் காதலுக்கு ஆயுசு இருக்குமா?

 

மடி சாய்ந்து.. தலை கோதி.. சிறு சிறு சில்மிஷங்கள் செய்து.. ஆசை தீரச் சுற்றி திரிந்து.. பெற்றவர்களிடம் திட்டு வாங்கி.. அவர்கள் காலில் விழுந்து.. கரம் பிடித்து.. திகட்ட திகட்ட காதல் வாழ்வு வாழ ஆசை தான்! ஆனால் இதுவா இவர்கள் வாழ்வின் குறிக்கோள்? இப்படி கரம் பிடிக்கும் இவர்கள் காதல் வழியில் இறந்துவிடாதா?

 

ஹம்ரிஷ் கூறியது தானே நடக்கும்! ‘பாத்ததும் காதல்ன்னு அதுல கவுந்து விழுந்துட்டு, படிப்ப கோட்ட விட்டுட்டு… வீட்டுல போராடி கல்யாணம் முடிஞ்சதும் ‘உன்னால என் கனவு போச்சு’ன்னு மாத்தி மாத்தி ப்ளேம் பண்ணி… ஏன்டா காதலிச்சோம்ன்னு மனசளவில பிரியற மாதிரி ஆகிடுமே.’

 

வலித்தாலும்,  இந்த பிரிவு சரியான முடிவு தான் என்று தோன்றியது. காலத்தால் காதல் அழியாதென்றால் சாதிக்கும் வரை காத்திருப்பதில் தவறில்லையே!

 

கனவும், கடமையும், காதல் என்ற சொல்லால் மறக்கப்படக் கூடாது. அப்படி மறக்கப்படும் வேளை ‘காதல்’ வெறும் சொல்லாகவே அவர்கள் வாழ்வில் கடந்துவிடும்! கனவைக் கலைக்காமல் கடமை தவறாத காதல், உணர்வில் கலந்து உயிரில் உரைந்து விடுகிறது. அது அழிவதில்லை. அவசர அவசரமாகக் காதல் புரிந்து.. ஆரம்பித்த அவசரத்திலேயே காதலைத் தொலைக்க அவன் தயாராக இல்லை.

 

அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!