Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iravin Panithuli

அத்தியாயம் 8.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 8

சோலையில் வந்த

பூவைக் கண்டு

மயங்கினேன், சோலையே



Advertisement

கனவென்று தெரியாமல்!!!

 

முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த காயத்ரியைக் கண்டு சௌமிக்கும் கலாவதிக்கும் தான் குழப்பமாக இருந்தது.

Advertisement

 

Advertisement

“சௌமி, என்ன ஆச்சு டி? இவ ஒரு மார்க்கமா ரூமுக்கு போறா?”:, என்று கேட்டாள் கலாவதி.

 

“உன் பொண்ணைப் பத்தி உனக்கே தெரியலை. எனக்கு எப்படி தெரியும் மா?”, என்று கேட்டாள் சௌமி.

Advertisement

 

“எனக்கா அவளைப் பத்தி தெரியும்? உனக்கு தான் அவளை பத்தி தெரியும். ரெண்டு பேரும் கூட்டுக் களவானிங்க தானே டி? ஒழுங்கா என்னன்னு போய் கேளு போ”

 

“நீயே கேளு மா”

 

“நான் கேட்டா அம்மான்னு எதுவும் சொல்ல மாட்டா டி. நீன்னா பிரண்ட் மாதிரி அவ கிட்ட பேசுவ? சீக்கிரம் அவ கிட்ட என்ன பிரச்சனைன்னு விசாரிச்சு சரி பண்ணு. உங்க அப்பா வந்துட்டார்னா என்னோட மகளை நீ தான் ஏதோ சொல்லிருக்கன்னு காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவார் அந்த விவரம் கெட்ட மனுஷன்”

 

“என்னது விவரம் கெட்ட மனுசனா? நீ எப்படி அப்பாவை பத்தி அப்படி சொல்லலாம்?”, என்று சண்டைக்கு வந்தாள் சௌமி.

 

“ஐயையோ தெரியாம சொல்லிட்டேன் டி”

 

“இரு இரு அப்பா வந்த உடனே அவர் கிட்ட உன்னை சொல்லிக் கொடுக்குறேன். நீ எப்படி அப்பாவை அப்படி சொல்லலாம்?”

 

“ஆத்தாடி, நீ ஒரு அப்பா பைத்தியம் அப்படிங்குறதை மறந்துட்டேன் டி. தெரியாம சொல்லிட்டேன் போதுமா? எனக்குன்னு ரெண்டும் வாச்சிருக்கு பாரு. எதுக்கு எடுத்தாலும் அப்பா அப்பான்னுட்டு. போ போ அவ கிட்ட என்னன்னு விசாரி”, என்றதும் அம்மாவை முறைத்துக் கொண்டே அறைக்கு சென்றாள் சௌமி.

 

அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் காயத்ரி. “என்ன இவ இந்த நேரம் இப்படி தூங்குறா? என்ன ஆச்சுன்னு தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு வெளியே வந்தவள் “அம்மா அவ நல்லா தூங்குறா. தூங்கி எந்திச்சா சரியாகிருவா. சும்மா கிளாஸ்ல யாராவது பாடம் எடுக்குறேன்னு மொக்கைப் போட்டுருப்பாங்க. அதான் தலை வலி வந்துருக்கும்”, என்றாள்.

 

“சரி சரி இந்த வெங்காயம், ரெண்டு மிளகாயை வெட்டிக் கொடு, தோசைக்கு மாவு அரைக்கும் போது உழுந்து மாவு தனியா எடுத்து வச்சேன். ஆளுக்கு ரெண்டு வடை போட்டுத் தரேன்”

 

“ஐ ஜாலி வடை”, என்று குதித்துக் கொண்டே வெங்காயத்தை தோல் உரிக்க ஆரம்பித்தவள் “அம்மா மிளகாயை நீயே வெட்டிக்கோ. என் கை எரியும்”, என்றாள்.

 

“ஏன் அதை வெட்ட எவன் வருவான்? நாளைக்கு கல்யாணம் முடிஞ்சா உன் புருஷன் வந்து வெட்டித் தருவானா? இல்லைன்னா உன்னோட மாமியா வந்து மிளகாய் வெட்டுவாளா? வாயை மூடிட்டு ஒழுங்கா வெட்டு டி”

 

“ஏன் என் புருஷன் வெட்ட மாட்டானா? அதெல்லாம் செய்வான். என்னோட எல்லாக் காதலையும் அவன் கிட்ட கொட்டினா அவனும் என்னை கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்க போறான்”

 

“ஒரு அம்மா கிட்ட பேசுற மாதிரியா டி பேசுற? காதலைப் பத்தி எல்லாம் அம்மா கிட்ட பேசலாமா? வர வர உன் வாய் கூடி போச்சு டி சௌமி?”

 

“அப்ப நீ மட்டும் புருஷன் மாமியார்னு பேசலாமா? ஒரு பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா நீ பேசுற? போ மா”

 

“உன்னை ஜெயிக்க முடியுமா? வாயாடி. வாய் மட்டும் தான் டி உனக்கு வேலை செய்யுது. இன்னும் வெங்காய தோலைக் கூட நீ உரிக்கலை”

 

“நீ பேசி பேசி எதுக்கு என் மூடைப் மாத்துற மா?”

 

“ஆமா ஆமா, நீ வெட்டிக் கிழிச்சிட்ட. பல மணி நேரம் ஆராய்ச்சி செஞ்ச உன் வெங்காயத்தை மியூசியம்ல வை. நீ உன் ரூமுக்கு போ. நானே வெட்டிக்கிறேன்”

 

“அப்பாடி இதை முதல்லே செய்ய வேண்டியது தானே? வர வர உன் மூளை மழுங்கிட்டே வருதும்மா”

 

“எனக்கு மாமியார் இல்லாத குறை உன்னால போச்சு டி. ரூமுக்கு போய் அவளை எழுப்பாம இரு. நல்லா தூங்கட்டும்”, என்று சொல்லி தான் அனுப்பி வைத்தாள் கலாவதி.

 

ஏதோ ஒரு இருட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்த காயத்ரிக்கு விழிப்பு வர எழுந்து லைட்டை போட்டாள். சுற்றி இருந்த இருட்டு கரண்ட் இல்லை என்று உணர்த்தியது. நிதானமாக அறையை விட்டு வெளியே வந்து பார்த்தாள். எங்கும் இருள் மாயம் தான், நெஞ்சுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது.

 

அவள் மனம் பந்தையக் குதிரையைப் போல துடித்தது. வியர்வை ஆறாக பெருகியது. மெதுவாக கதவை திறந்து வெளியே வரும் போது தூரத்தில் எதுவோ அலறல் சத்தம் கேட்டது. எச்சில் விழுங்கியவளுக்கு தாகம் தொண்டையை அடைத்தது.

 

இதயம் துடிக்கும் ஓசை மட்டும் அந்த இடத்தில் கேட்டது. அவள் உடல் பயத்தில் நடுங்கியது. அப்போது அவளை நெருங்கி ஒரு கருப்பான உருவம் வந்தது.

 

அதைக் கண்டு ஆஆ என்று அலறியவள் அந்த உருவம் தன்னருகில் வந்ததும் அதிர்ந்து போய் அதன் முகத்தைப் பார்த்தாள். பார்த்தவள் திகைத்து தான் போனாள். ஏனென்றால் அது தீபக்கின் முகம்.

 

படக்கென்று கண் விழித்தாள். அப்போது அவன் எதிரே அவளை முறைத்த படி அமர்ந்திருந்தாள் சௌமி.

 

“ஐயோ கனவா?”, என்று எண்ணிக் கொண்டு சௌமியைப் பார்த்து அசடு வழிந்தாள் காயத்ரி.

 

“இப்ப எதுக்கு இப்படி கத்தின? லூசு பிடிச்சிட்டோன்னு பயந்தே போயிட்டேன். என்னக்கா உன் பிரச்சனை?”, என்று கேட்டாள் சௌமி.

 

“பயங்கரமான கனவு சௌமி”, என்று ஆரம்பித்து கனவை பற்றி விவரித்தாள்.

 

“இண்டரெஸ்ட்டிங் கனவு தான். கனவுல வந்த முகம் யாரோடது?”

 

“நான் சொன்னேன்ல தீபக் பத்தி. அவன் தான் டி வந்தான். ஆனா எதுக்கு அவன் முகம் வந்துச்சுன்னு தெரியலை”

 

“அவன் முகம் உன் மனசுல ஆழ புதைஞ்சிருக்குன்னு அர்த்தம்”

 

“சீ, அது எதுக்கு பதியனும்?”

 

“அப்ப இல்லையா? அப்ப அவன் கூட ஏதாவது வாக்குவாதம், பேச்சு வார்த்தை ஏதாவது நடந்துச்சா? ஏன்னா நாம ஒருத்தங்களைப் பத்தி நினைச்சிட்டே தூங்கினா அவங்க முகம் கனவுல வரும்”

 

“ஓ அப்படியா? அப்ப அப்படித் தான் இருக்கும். அவனைத் தான் நினைச்சிட்டு இருந்தேன்”

 

“எதுக்கு, உன்கிட்ட பேசாம நந்தினி அக்கா கிட்ட மட்டும் பேசினானா?”

 

“ப்ச் அது இல்லை டி”, என்று ஆரம்பித்து பஸ்ஸில் நடந்தது, இன்று அவன் பேசியது அனைத்தையும் சொன்னாள்.

 

“ஆனா நீ சரியான ஆளுக்கா. அன்னைக்கு அந்த அண்ணன் உன்னை கட்டிப் பிடிச்சதை சொல்லவே இல்லை பாத்தியா?”

 

“அடச்சீ, கட்டிப் பிடிச்சானா? இப்படி பிடிச்சான் டி”, என்று சொல்லி காண்பித்தாள்.

 

“ஏதோ ஒண்ணு. ஆனா நீ எதுக்கு என்கிட்ட சொல்லலை?”

 

“அது… அது வந்து மறந்துட்டேன்”

 

“ஓஹோ, நம்பிட்டேன். சரி விடு. நீ மன்னிப்பு கேட்டும் அவங்க மன்னிக்கலையா?”

 

“ஆமா டி, அந்த பேப்பரை என் மேலயே திருப்பி தூக்கிப் போட்டுட்டான்”

 

“எங்க அந்த பேப்பர்? தூரப் போட்டுட்டியா?”

 

“எதுக்கு கேக்குற?”

 

“நீ எழுதி இருந்த சாரி ஏதாவது கெட்ட வார்த்தை மாதிரி அவங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கலாம்? அதனால தூக்கி உன் மேலயே போட்டுருக்கலாம்? எனக்கு தான் உன்னோட எழுத்தின் மகிமை தெரியுமே?”

 

“போடி கையெழுத்து நல்லா இருந்தா தலையெழுத்து நல்லா இருக்காதாம். அதனால எனக்கு இந்த கோழி கிண்டுண கையெழுத்தே போதும்”

 

“சரி சரி, அந்த பேப்பரைக் காட்டு நான் பாக்கணும்”, என்றதும் அதை எடுத்துக் கொடுத்தாள் காயத்ரி.

 

“இது தான் நீ தூக்கிப் போட்ட பேப்பரா?”

 

“ஆமா டி”

 

அதை விரித்து பார்த்த சௌமி “உனக்கு ஏத்த கேடி தான் கா அந்த அண்ணனும்… சே இனி எப்படி அவங்களை அண்ணான்னு சொல்றது?”, என்று சொல்லி சிரித்தாள்.

 

“என்ன உளற சௌமி?”

 

“நீயே கேடி மாதிரி அவங்களுக்கு பேப்பரை தூக்கி போட்டா அவங்க அதுக்கு மேலயே போயிட்டாங்க. நீ போட்ட கோடை ரோடா ஆக்கிட்டாங்க போ”

 

“லூசு, புரியுற மாதிரி பேசு டி”

 

“நான் எங்க பேச? நீ தான் பேசணும்”

 

“சௌமி என்னை கொலைக்காரியாக்காத”

 

“சரி சரி டென்ஷன் ஆகாத. இங்க பாரு. அவங்க போன் நம்பர் எழுதிருக்காங்க”

 

“என்ன?”, என்று அவசரமாக கேட்டு அதை வாங்கிப் பார்த்தாள் காயத்ரி. அதைக் கண்டு அவளுக்கு திகைப்பு தான் வந்தது.

 

“சௌமி என்ன டி இது?”

 

“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்? நீங்க தான் பேப்பர் பாசிங்க் கேம் விளையாடிருக்கீங்க?”

 

“நான் சாரி தான் டி கேட்டேன். அதுக்கு மன்னிச்சிட்டேன்னு தானே சொல்லணும்?”

 

“ஒரு வேளை மன்னிச்சிட்டேன்னு சொல்லத் தான் போன் நம்பர் கொடுத்தாங்களோ என்னவோ?”

 

“இப்ப என்ன செய்ய?”

 

“என் கிட்ட கேட்டா? எனக்கு தெரியாதுப்பா. சரி சரி இந்த விஷயத்தை இப்போதைக்கு விடு. அம்மா சூடா வடை போட்டுட்டு இருக்காங்க. அப்பாவும் வந்துருப்பாங்க. வந்ததும் நம்மளைத் தான் கேப்பாங்க. வா முதல்ல அங்க அட்டண்டன்ஸ் போட்டுட்டு வந்து டிஸ்கஸ் பண்ணலாம். இந்த பிரச்சனையை வெளிய வந்து காட்டிட்டு இருக்காத”

 

“அப்ப இதை அம்மா அப்பா கிட்ட சொல்ல வேண்டாமா?”

 

“இதை சொன்னேன்னா, நீ சாரின்னு எழுதி தூக்கிப் போட்ட பேப்பரை பத்தியும் சொல்லணும். இது அவங்க கிட்ட சொல்ற அளவுக்கு பெரிய விஷயம் இல்லைக்கா. அதை அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. சொல்ற விஷயத்தை சொல்லிக்கலாம். அப்பாவாது புரிஞ்சிப்பாங்க. ஆனா அம்மா நம்ம மேல தான் தப்புன்னு பேசுவாங்க. போன வருஷம் எனக்கு ஒரு பையன் லவ் லட்டர் கொடுத்தான்னு சொன்னதுக்கு நான் எப்படி திட்டு வாங்கினேன்னு பாத்த தானே? இப்ப வரைக்கும் நான் தான் அந்த பையனுக்கு சிக்னல் கொடுத்தேங்குற  மாதிரியே அம்மா பாக்குறாங்க. சோ எதுவும் சொல்ல வேண்டாம். வந்து இதைப் பத்தி பேசுவோம், இப்ப வா”, என்று சொல்லி காயத்ரியை அழைத்து சென்றாள்.

 

காயத்ரியும் பெற்றோர் மற்றும் தங்கையுடன் சகஜமாக உரையாடினாள். ஆனாலும் மனதுக்குள் அவன் எதற்கு நம்பர் கொடுத்தான் என்ற குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது.

 

ஒரு மணி நேரம் பெற்றோருடன் செலவழித்து விட்டு படிக்கிறோம் என்று சொல்லி விட்டு அறைக்கு வந்தனர் அந்த ரெண்டு கேடியும்.

 

அதே நேரம் “என்ன டா, ஒரு மார்கமா முழிச்சிட்டு இருக்க? என்ன பண்ணிட்டு வந்த?”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள் தீபக்கின் அக்கா ரேவதி.

 

“ஒண்ணும் இல்லையே? நான் என்ன பண்ண போறேனாம்?”

 

“நீ ஒரு சைலன்ட் கில்லர்னு எனக்கு தெரியும் தம்பி. ஒழுங்கா சொல்லிரு”

 

“அட ஒண்ணும் இல்லைக்கா. நீ போ. போய் மாமா கூட கடலை போடுற வேலையைப் பாரு”

 

“ஆக மொத்தத்துல என்ன விசயம்னு சொல்ல மாட்ட அப்படித் தானே?”

 

“அப்படி இல்லை….”

 

“அப்ப சொல்லு. என்கிட்ட சொன்னா உன் டென்ஷன் குறையும்ல? கண்டிப்பா அம்மா அப்பா கிட்ட சொல்ல மாட்டேன்”

 

“நம்பலாமா?”

 

“நம்பு டா, நூறு சதவீதம் உத்ரவாதம் தரேன்”

 

“அன்னைக்கு சொன்னேன்ல காயத்ரி பத்தி?”

 

“ஆமா, அந்த பொண்ணைத் தான் சுத்தல்ல விடுறியே? அவளுக்கு என்ன?”, என்று கேட்டதும் அவனும் பஸ்ஸில் அவள் விழப் போனதை பற்றி, பின் அவள் திட்டியது பற்றி, இன்று நடந்தது பற்றி என அனைத்தையும் சொன்னான்.

 

“ஹா ஹா, நல்லா கிழி வாங்கிட்டு தான் வந்து உக்காந்துருக்கியா?”, என்று கேட்டு சிரித்தாள் ரேவதி.

 

“நான் திட்டு வாங்கினா உனக்கு சந்தோஷமா? பல்லைக் காட்டுறதை நிறுத்து. அவ விழக் கூடாதுன்னு பிடிச்சது தப்பா?”

 

“அது தப்பு இல்லை டா மாங்கா மாடையா. நீ எதுக்கு செஞ்சேன்னு அவளுக்கு தெரியுமா? பாத்த நாள்ல இருந்து நீ அவளை கடுப்படிச்சிட்டே தான் இருக்க. அவளை எப்படி முன்னாடியே தெரியும்னு இப்ப வரைக்கும் அவ கிட்ட சொல்லலை. இதுல அவளைப் பாத்து கண்ணடிச்சி வேற வச்சிருக்க? அப்ப உன்னை அவ கேடியா தான் நினைப்பா. நீ தான் தெளிவா அவ கிட்ட பேசணும்”

 

“அதெல்லாம் பேசியாச்சு பேசியாச்சு”

 

“எப்ப டா?”

 

“இன்னைக்கு தான். அவ திட்டின உடனே எனக்கும் கோபம் பொங்கிருச்சு. கடுப்புல கத்திட்டு வந்துட்டேன்”

 

“ஓ அவளை திட்டிட்டேன்னு தான் நீ டல்லா இருக்கியா?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைக்கா”

 

“அப்ப இன்னும் அவ உன்னைத் தப்பா நினைப்பான்னு பயந்து இப்படி இருக்கியா?”

 

“அதெல்லாம் அவ என்னைத் தப்பா நினைக்கலை. நான் சொன்னதுமே அவளுக்கு புரிஞ்சிருச்சு”

 

“அவ தப்பா நினைக்காதது உனக்கு எப்படி தெரியும்? உன்கிட்ட சொன்னாளா?”

 

“என்னை பாவமா ஒரு பார்வை பாத்தா?”

 

“உடனே மன்னிச்சிட்டான்னு உனக்கு தெரியுமா?”

 

“முழுசா கேளுக்கா. முந்திரிக் கொட்டை மாதிரி முந்தாத”

 

“சரி சரி சொல்லு”

 

“சாரின்னு ஒரு பேப்பர்ல எழுதி என் கால் கீழே போட்டா”

 

“என்னது? அந்த பொண்ணா?”

 

“ஆமாக்கா?”

 

“அவளுக்கு அவவளவு தைரியமா?”

 

“அது தான் எனக்கும் ஆச்சர்யம்?”

 

“உடனே நீ என்ன அனுப்புன? பரவால்லன்னு எழுதி அனுப்பிட்டியா?”

 

“இல்லை, அவ கிட்ட பேசணும்னு ஆசையா இருந்துச்சா?”

 

“அதுக்கு?”

 

“போன் நம்பர் எழுதி அனுப்பிட்டேன்”

 

“என்னது? போன் நம்பரா? யார் நம்பர் டா கொடுத்த?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் ரேவதி.

 

“என்கிட்ட என்ன போனா இருக்கு? என் நம்பர் கொடுக்க? அப்புறம் அம்மா அப்பா நம்பரா கொடுக்க முடியும்? அதனால?”

 

“அதனால”

 

“உன் நம்பர் தான்க்கா கொடுத்தேன்”, என்று அவன் சொன்னதும் அவள் கண்கள் வெளியே தெறித்து விடும் போல விரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!