அ17_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 17_2
“வா டா அலர். டீ ரெடி..”, எஸ்தர் அழைக்கவும்.. கைப்பேசியைப் பயத்தில் பட்டென்று அணைத்துவிட்டாள். அச்சோ.. கோபித்துக் கொள்வானோ?! மீண்டும் எப்படி அழைக்க? உடல் முழுவதும் மெலிதான நடுக்கம் பரவியது. கண்டு கொண்டானே.. லேசாகச் சிலிர்க்கவும் செய்தாள்.
Advertisement
அடுக்களைக்கு வெளியே இருந்த படிகளில் அமர்ந்திருந்த இருவரும் தேநீர் அருந்திக் கொண்டே பேசினாலும் இருவர் மனதிலும் எபி தான்! ஏன் என்னவாயிற்று இவனுக்கு என்ற ஒரே கேள்வி வெவ்வேறு கோணத்தில்!
Advertisement
“டீயும் பஜ்ஜியும் நல்லா இருக்கு ஆண்டி…”
Advertisement
“எல்லாம் உனக்காக தான்.. வீடியோ பாத்து..”, சிரித்தார்.
Advertisement
“எப்படி சமையல் தெரியாம சமாளிக்கறீங்க?”
“யமுனா! அதுக்கு முன்ன என் மாமியார்! கல்யாணம் ஆகி வந்த போது ஒரு நாள் சமையல் செஞ்சேன்! ஆயுசுக்கும் மறக்க முடியாது அந்த டேஸ்ட எல்லாம். எனக்கு வீட்டு வேலையில கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்ல. பிடிக்கலன்னு தெரியவும் என் மாமியார் என்னைச் செய்ய விட்டது இல்ல. போ போய் பிடிச்சத செய்ன்னு சொல்லிட்டாங்க. அது தான் இந்த டேர் டு ட்ரீம் சென்டர்.”
“அப்படி கூட மாமியார் எல்லாம் இருப்பாங்களா?”
“என் மாமியார்.. அப்பிடி தான். அம்மா கூட கண்டிப்பு.. ஆனா மாமியார் என்னை எதுலயுமே விட்டு கொடுத்தது இல்ல. என் அம்மாட்ட கூட! அவங்க இறந்த போது என்னால அத தாங்கிக்கவே முடியாம மயக்கமாகி.. உடம்புக்கு வந்து.. ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அவ்வளவு பாசமா இருப்பாங்க. அவங்க எல்லாம் லட்சத்துல ஒருத்தங்க!”
“..”
“எனக்கும் கூட அவங்கள மாதிரி இருக்கணும்ன்னு ஆசை. என் மருமக மேல பாசமா,, லட்சத்தில ஒரு மாமியாரா!”
“நீங்க கோடில ஒருத்தங்க ஆண்டி. நீங்க வேணும்னா பாருங்களேன் உங்க மருமக உங்க மாமியார் மாதிரியே உங்க மேல பாசமா இருப்பா.”
அவர் அவளைத் தான் பார்த்தார். மெல்லத் தலையை வருடி விட்டார். ஆசை தான் “நீயே எனக்கு மருமகளா வரியா” என்று கேட்க ஆசை தான். ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்தே சிறுமியிடம் கேட்க முடியுமா?
பேச்சின் திசையை மாற்றினார்.
“இந்த கருநீல கலர் சல்வார் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு அலர்”
“சௌமி செலக்ஷன் ஆண்டி”
“கேக்கணும்ன்னு நினைச்சேன்… நீ யார்ட்ட சல்வார் தைக்கிற? இவ்வளவு ஃபிட்டிங்கா இருக்கு.. ஆனா ப்ளௌஸ் மாதிரி கை எல்லாம் ஃப்ரீயா மூவ் பண்ற? யாராது டிசைனரா?”
“இல்ல ஆன்டி நம்ம சௌமி அம்மா.. ராஜாத்தி அக்கா. அவங்களே அவங்களுக்கு ப்ளௌஸ் தச்சுப்பாங்க. ஃபிட்டிங்க ரொம்ப நல்லா இருக்கவே சல்வார் தைக்க சொன்னேன். வேற எதுவும் தைக்க தெரியாதுன்னு சொன்னாங்க. வீடியோஸ் காட்டினேன்.. சட்டுன்னு பிடிச்சுகிட்டாங்க. கொஞ்சம் துணி வாங்கி கொடுத்து நானே சோதனை எலியா அளவ கொடுத்தேன்… ரெண்டு மூனு லேசா சொதபீச்சு. பின்னால சிப்பர் வைக்க வரல. இப்போ ஒன்றரை வருஷம் ஆகவும் நல்லா கத்துகிட்டாங்க. என்ன சூப்பரா தச்சிருக்காங்க இல்ல. ஹாஸ்டல்ல எல்லாருக்கும் அவங்க தான் தைக்கிறாங்க! அவங்கள ஒரு சேனல் போட சொல்லிட்டு இருக்கேன். இப்போ எல்லாம் அவங்களால நான் நிறைய சல்வார் தான் போடறேன். ஒரு கஷ்டம் என்னன்னா துப்பட்டா இல்லாம வெளியில தலை காட்ட முடியாது!” சிரித்தாள்.
இரண்டு சிறிய கூடைகள் நிறைய மலர தயாராயிருந்த மொட்டுகளோடு அவள் அமர, அவள் நூடுல்ஸ் மண்டையை வாரி விட்டார் எஸ்தர்.
“எனக்கு பொண்ணு இருந்தா எப்பிடி இருக்கும்ன்னு நினைச்சு பாப்பேன். இப்படி தான்.. உன்ன மாதிரி இருந்திருப்பான்னு இப்போ தோணுது.
30 வார கரு.. வளர்ச்சியில்லாம இந்த உலகத்த பாக்காமலே இறந்து போச்சு! பொண்ணு குழந்த! என் பொண்ணு போராடவே இல்ல.. போய்ட்டா. அவளுக்கு போராட காரணம் இருக்கல போல… இந்த அம்மா அப்பாவ பாக்க அவளுக்கு தோணல போல… இப்போ நினைச்சாலும் தாங்கவே முடியல! அந்த குட்டி குட்டி விரல்.. பச்!
எல்லாமே எபி தான் எங்களுக்கு. ஒரு குட்டி பாப்பாவ தத்தெடுக்கலாம்ன்னு நினைச்சோம்… இவனுக்கு அஞ்சு வயசிருக்கும் போது. அப்போவே இவனுக்கு என்ன புரிஞ்சுதோ… வேற பேபிய வீடுல சேத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான். உங்க தொப்பையில இருந்து தான் பாப்பா வேணும் இல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டான். மீறி கொண்டு வந்தா தூக்கி போட்டுடுவேன்னு சொல்லி ரொம்ப தகராறு பண்ணினான்.
அவனால ஏனோ அப்போவே அவன் ரத்த சம்பந்தமில்லாத ஒரு குழந்தைய குடும்பமா பாக்கவே முடியல..”, ஏதேதோ பேசினார். கேட்டுக் கொண்டாள். மகன் ஊருக்கும் செல்லவிருப்பதால் இருக்கலாம். இல்லை என்றால் எபி பற்றிய பேச்சுகளே இருக்காது.
ஊசி கொண்டு அடர்த்தியாகக் கோர்த்த நித்திய மல்லி சரத்தை அவளுக்கே சூட்டிவிட்டார்.
நேரம் சென்றது. சூரியன் பூகோளத்தின் மறுபக்கத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தது.
“நான் கிளம்பறேன் ஆண்டி”, என்று நிற்பவளை ஏனோ அனுப்பவே மனமில்லை அவருக்கு.
“ஏன் டா எப்போவும் ரெண்டு நாள் இருப்பியே.. எபி அப்பா வர பதினொன்னு ஆகிடும். அவன் வர 12 ஆகிடும். வந்ததும் ஏர்போர் கிளம்பிடுவாங்க. உன்ன யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க.”
“ச்ச ச்சா.. அப்பிடி நினைக்கல ஆண்டி.. நீங்களும் ஏர்போர்ட் போக வேண்டாமா?”
“அவன் திட்டி தீத்திடுவான் மா. வீட்டுல இருந்தே வழி அனுப்பினா போதும் சொல்லிடுவான். அப்பிடியே பழகி போச்சு! எபி அப்பா.. அவன் பேச்செல்லாம் கேக்க மாட்டார். அங்க போய் மகன வழி அனுப்பினா தான் அவருக்கு தூக்கம் வரும்!
என் பின்னாலேயே சுத்திட்டு இருக்க.. நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. இல்ல மாடிக்கு போய் எப்பவும் போல வேடிக்கை பாரு! நானும் ஒரு மணி நேரம் இந்த ஆஃபீஸ் வேலைய பாக்குறேன்.
மேல போகும் போது இத அவன் ரூம் வாசல்ல வச்சிடுமா. அவன் வந்து பெட்டில போட்டுக்க வசதியா இருக்கும்”, நகர்ந்தவள் கைகளில் சிறிய பொதிகள் சிலவற்றைக் கொடுத்தனுப்பினார்.
“நீ போடறதுக்கு ரெண்டு நைட்டி வாங்கி நீ படுக்கிற ரூம்ல வச்சிருக்கேன். பசிக்கும் போது சொல்லு.. சாப்பிடுவோம்.”. அவள் முதுகின் பின் அவர் சத்தம் தேய்ந்து போனது.
இன்று செல்லும் மகனை மீண்டும் என்று காண்பாரோ? ஒரு மாதமாக மகன் முகமும் சரியில்லை.. எதையோ பறிகொடுத்தவனைப் போல் இருப்பவனைக் காண சகிக்கவில்லை. தனியே இருந்துவிடுவானா? மகன் நினைவு தாயை உருக்க.. வருத்தம் தொண்டையை அடைக்கத் தனிமை தேவை.. இவளையும் அனுப்ப மனமில்லை. தனித்துப் போய்விடுவோமோ என்ற பயமாகக் கூட இருக்கலாம். மகள் போன்றே ஒரு நெருக்கம் அலர்விழியிடம்… பெண்ணை விட மனமில்லை.
மொட்டை மாடிக்குச் சென்றாள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் காற்றாடிகள் வானை அலங்கரித்தது. எந்த யோசனையுமின்றி பட்டத்தை வெறித்தாள். பட்டம் அது இஷ்டத்திற்குப் பறப்பதாக நினைத்து வாலை ஆட்டிக் கொண்டே போனது. ஆனால் எங்கோ தூரத்தில் நின்றிருந்த சிறுவன் ஒருவன் கையில் கண்ணுக்கு தெரியாத இழை கொண்டு அந்த பட்டத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையும் இப்படி தானோ…? எதோ ஒன்றோ.. யாரோ ஒருவரோ நம்மை ஆட்டிப்படைக்கத்தான் செய்கிறார்கள். அதை நாம் உணர்வதில்லை அவ்வளவே.
காற்றாடிகள் தங்கள் இருப்பிடம் சென்றுவிட்டது. வானம் இருட்ட ஆரம்பிக்கவும் படி இறங்கினாள். முதல் மாடியில் தான் விருந்தினருக்கான அறை இருந்தது. அங்கு தான் தங்கிக் கொள்வாள்.
அறைக்குள் நுழையப் போனவள் பார்வை எபியின் அறை வாசலிலிருந்த பொதிகள் மேல் நிலைத்தது. கதவைத் தள்ள திறந்து கொண்டது. உள்ளே பொதிகளை வைத்தவள் நின்றுவிட்டாள். ஆளில்லா அறையில் நுழைவது தவறென்று தெரியும் தான்..
இன்று தான் பார்க்கிறாள் இந்த அறையை. எங்கும் எதிலும் மனோ தெரிந்தான். பெரிய திரை கொண்ட கணினி முதல் சுவரிலிருந்த புகைப்படங்கள் வரை எதிலும் அவன் தான்.
அலர்விழி எபியின் அறையில் அவன் புகைப்படங்களைப் பார்த்து நின்றுகொண்டிருக்க, அவனோ அதே வீட்டின் கீழ்த் தள சோஃபா கைப்பிடியிலிருந்த அலர்விழியின் துப்பட்டாவோடு அமர்ந்திருந்தான். மனம் சரியில்லை.. அவள் குரல் கேட்டபின் எங்கோ எதிலோ புரிதல் தவறாகிப் போனதை உணர்ந்தான். அன்று இவன் பெயரைக் கேட்டு அருவருத்த குரல் இல்லை! அத்தனை தவிப்பு!
அன்று.. அந்த அருவருப்பும் முக சுளிப்பும் தனக்கானதில்லையோ? சந்தேகத்தைப் பிடித்துக் கொண்டான்.
கசங்கி கிடந்த துப்பட்டாவை மெல்ல நீவி விட்டான்.. கசங்கிப் போன உறவைச் சரி செய்வதாய் எண்ணினானோ என்னவோ.. ‘எல்லாம் சரி ஆகிப்போகும்’ ஆறுதல் அவனுக்கே கூறிக்கொண்டது போல் தோன்றியது. துப்பட்டாவை ஓரம் வைத்தவன் அம்மாவைக் காணச் சென்றான்.
மகனை பார்த்ததும் கலங்கிய கண்கள் மினுமினுக்கத் தாயின் முகம் மலர்ந்தது. தோளோடு அணைத்தவனுக்கு பேச வரவில்லை. ஒரு மாதமாக அம்மாவைப் படுத்திவிட்டது புரியாமலில்லை. அது அவனையும் மீறிய செயல். அம்மா உச்சந்தலையில் இதழ் பதித்தவன்.. “சாரி மா” என்றான்.
அம்மாவிடம் மகன் பேசிக் கொண்டிருக்க.. அவன் வீட்டில் இருப்பதை அறியாதவள் பார்வை இன்னும் அங்கிருந்த புகைப்படங்களில். ஒன்று போல் மற்றொன்று இல்லை. தலை முழுவதும் அலையலையாக அடர் கேசமிருக்க.. பல வகை ஹைர் ஸ்டைல்!
ஒரு படத்தில் கண்கள் நிலைத்து நின்றது. சத்யா என்ற படத்தில் இப்படி தான் கமல் இருப்பார்.. குட்டை முடியும்.. மழிக்கப் படாத தாடியும்.. ஓரத்தில் முறுக்கி விட்ட மீசையுமாக.. இப்பொழுது தான் தொலைக்காட்சி பெட்டியில் பார்த்தாள். ஒரு பாட்டில் கமலும் அமலாவும் மரத்தடியில் பாடி.. பின் ஒரே பேருந்தில் தொங்கிக் கொண்டே சென்றனர்.
இந்த புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது என்று எபியிடம் கேட்டால்.. அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ… கண்டிப்பாக அலர்விழி கூறிவிடுவாள்.
மரத்தடியில் இவள் கழுத்தை இறுக்கி நின்ற அன்று இப்படி தானே இருந்தான்? கண்களை மூடினாள்.
அன்று அவன் நெரித்தது வலிக்கவில்லை. இன்று கழுத்து நெரிப்படும் வேதனை எழுந்தது.
அன்று ‘போடா..’ என்று தோரணையாக நின்றாள். இன்றோ.. ‘ஏன் போனாய்?’ என்று தன் தன்மை எல்லாம் மாறி கோழையாக.. திமிர் எல்லாம் வடிந்து கண் கசிந்து நிற்கிறாள்.
மூடி இருந்த கண்கள் மடை திறக்க.. உடல் மெல்லக் குலுங்க ஆரம்பித்தது.
“ஏன் மனோ? ஏன்..”, சத்தமாகக் கத்தினாள்.
அப்பொழுதே உள்ளே நுழைந்தவன் அவளை உள்ளே கண்டதும் கதவருகே நின்று விட்டிருந்தான். அவளின் ‘ஏன் மனோவில்’ உள்ளே வந்தான்.
சுவரை பார்த்து நின்றிருந்தவள் பின்னோடு வந்து நின்றவனுக்குப் பதில் இல்லை அவள் கேள்விக்கு.
அவள் அழுவது தெரிந்தது. கண்ணீரைப் பார்க்கும் திராணி இல்லை. கைகள் இரண்டும் இருதோள்களையும் பிடிக்க.. சட்டென்று அவளிடம் ஒரு விரைப்பு. அவனை எதிர்பார்க்கவில்லை. திரும்பி அவனை எதிர்கொள்ளவும் தைரியம் இல்லை.
இன்று என்ன சொல்லப் போகிறானோ? ‘வேண்டாம் விழி! தோழமை கூட வேண்டாம். உன் வழியே போ.. என் முகத்தில் விழிக்காதே..’ சொல்லிவிடுவானா? ‘சொல்லிடாத மனோ.. தாங்க மாட்டேன்..’ அழுகை பீரிட்டது. இப்படி கோழையாகிப் போனேனே.. கழிவிரக்கம் சேர்ந்துக் கொண்டது.
அவள் அதிக உணர்ச்சிவசப்படுவது அவன் கைவழியே உணர முடிந்தது. தோள்கள் இரண்டிலும் அழுத்தம் கொடுத்தவன் சற்று நெருங்கினான்.
முதுகில் அவன் சட்டை உராய.. அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. வெட்கமே இல்லாமல் கட்டிக்கொண்டு கதறிவிடும் ஆபாயம் தெரிய.. அவன் கையை தட்டி விட அவன் நெருக்கம் அதிகமே ஆனது.
கழுத்தோரத்தில் ஒரு சொட்டு உஷ்ணமான நீர் சொட்டவும்.. அவள் அசைவும் நின்றுபோனது. பேசவில்லை. விழிமோதவில்லை. ஒரு சொட்டு நீர் அவள் விட்ட கண்ணீரை எல்லாம் அடித்துச் சென்றதாகவே உணர்ந்தாள். அவன் காதல் கூற வேண்டிய அவசியம் இல்லாமலே போனது.
எல்லாம் முடிந்தே போனது என்று எண்ணியிருக்க.. நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிப்போனது. பழைய பயணம் முடிந்து புதிய பாதையில் புது பயணம் காத்திருப்பது தெரிந்தது. வலித்த வலிகளெல்லாம் வடிய ஆரம்பிக்க.. அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.
தோள்களில் ஆரம்பித்து கைகளின் முழு நீளத்திற்கும் இறங்கிய எபியின் கைகள்.. அலரின் விரல்களோடு பின்னிக்கொண்டது. உடல் சிலிர்த்து அடங்கியது.
சுட்டெறித்த வெறுமை எல்லாம் எங்குப் போனதோ உடலில் மனதிலும் நிறைவான உணர்வு. உணர்வு இருவருக்கும் பொது.
பின்னியிருந்த விரல்களைப் பிரிக்காமலே விழியின் வயிற்றோடு கட்டிக் கொண்டவன் நெஞ்சம் தழுதழுத்தது. இறுக அணைத்து.. தலையில் கன்னம் பதித்துக் கண்மூடி நின்றான். அறிவாளியின் அறிவு ஒதுங்கிக்கொள்ள.. உள்ளுணர்வு விழுத்துக் கொண்டது. நிமிடங்கள் நகர்ந்தது.
இன்று தான் புதிதாகப் பிறந்தது போன்று தன்னையே உணர்ந்த நிலை. அவன் உலகம், அவன் உணர்வுகளின் தன்மை எல்லாமே மாறிப்போனது. முதன்மையாகத் தோன்றியதெல்லாம் மாயை என்று தோன்றியது. மனதில் வேறெதையும் ஏற்றிக் கொள்ளவில்லை… அலர்விழி என்றவள் மட்டுமே அவனை ஆட்கொண்டாள்.
இளம் காதலியைத் தனிமையில் அணைத்து நிற்கும் படபடப்போ… பதறலோ இல்லை. உள்ளுக்குள் ஒரு தெளிவு.. நிதானம். மனதின் வெறுமை அகன்று, கனம் நீங்கி உடலும் உள்ளமும் லேசாகிப் போனது.
நீ வேறு நான் வேறில்லை என்ற தெளிவு. சிற்பம் பாறைக்குள் தான் ஒளிந்திருக்கிறது. அவனின் சிற்பம் அவள்.. உள்ளுக்குள் புதைந்தே இருப்பவள். தள்ளி நிறுத்தவும் முடியாது, ஒன்றிப் போன இருவர் உணர்வுகளையும் தனித் தனியே பிரிக்கவும் முடியாது.
ஒன்றில்லை என்றால் மற்றொன்று இல்லை. இது பறைக்கும் சிற்பத்திற்கும் மட்டும் அல்ல.. விழி என்ற அலர்விழிக்கும், மனோ என்ற மனோவா எபினேசருக்கும் சால பொருந்தும்.
சோலை மலரொளியோ – நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை – உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
