அ20 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் – 20
“சோறு வெந்திடுச்சா?”
Advertisement
“ம்ம்…”
“ரசத்த கொதிக்க விடாதீங்க மனோ.. போதும் அடுப்ப அணைச்சுட்டு ஒரு ஆம்லேட் போட்டுக்கோங்க.”
Advertisement
Advertisement
அறை தோழி இல்லாமல் தனியே அடுப்பங்கரையில் மாட்டிக் கொண்ட மனோவிற்கு சமையல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் அலர்விழி.
“ம்ம்”
Advertisement
“வெங்காயத்த சின்னதா வெட்டுங்க..”
“சும்மா இருடி.. இவ ஒருத்தி. கடிச்சு தான் சாப்பிட போறேன். ஏதோ ஒரு சைஸ்ல இருந்துட்டு போகட்டுமே.. காலையிலேயே இத செய் அத செய்ன்னு!”, காய்ந்தான்.
அவள் விடுவதாகத் தெரியவில்லை. “கொஞ்சம் மிளக அதிகமா தூவுங்க..”.
“ஒரு ப்ரெட் டோஸ்ட், ஆரஞ் ஜூஸ். வேல முடிஞ்சிருக்கும். காலங்காத்தால படுத்திற டி”
“எதுக்கு..? சாயங்காலம் வரும் போது சளி நெஞ்சு வரைக்கும் இறங்கியிருக்கவா?”
காலையிலேயே மனோவிற்கு மூக்கு ஒழுக ஆரம்பிக்கவும், இவள் இங்கிருந்து ஆரம்பித்துவிட்டாள். அவன் கதற கதறக் கேட்காமல் சோறு.. ரசம் என்று!
ஒரு வழியாக உணவோடு மேசைக்கு வந்தான்!
“ரசம் கொஞ்சம் கூட ஊத்திக்கோங்க மனோ..”
ஒரு வாய் உள்ளே சென்றது. முகம் போன போக்கு சரியில்லை.
“என்னங்க..?”
“அன்னைக்கு நீ வீட்டுல செஞ்சிருந்தியே.. அது மாதிரி இல்ல விழி”, ருசி ரசிக்கவில்லை அவனுக்கு.
“அது தக்காளி ரசம் மனோ.. இது மிளகு ரசம்.. சளிக்கு நல்லது. சாப்பிடுங்க!”
“ரசதுல வெரைட்டி வேறையாக்கும்?”
“இருக்கு மனோ.. தக்காளி ரசம், மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், ஓமவல்லி ரசம், புளி போட த ரசம்..”
“யம்மா.. போதும் போதும்! ரசம் பத்தி ஒரு சொற்பொழிவ ஆரம்பிக்காத இப்போ.”
உணவு முடியும் வரை இருவரும் பார்த்துக் கொள்வர். அதன் பின் அவள் படிக்க அமர்ந்துவிட, அவன் கல்லூரிக்கு கிளம்பிவிடுவான். இருவருக்குமான இந்த பொழுதை எதற்காகவும், யாருக்காகவும் அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
“காரம் தாங்கல… போ டி”, கண்களில் அவளை நிறைத்துக்கொண்டு.. மூக்கை உறுஞ்சிக் கொண்டே உண்ண ஆரம்பித்தான்.
“அப்போவே ரசத்துக்கு நிறைய மிளகு போடுறீங்கன்னு சொன்னேன். நீங்க தான் அந்த பெப்பருக்கு காரம் கம்மின்னு சொன்னீங்க. அட்ஜஸ்ட பண்ணி சாப்பிடுங்க.”
தண்ணீர் குடித்து அதை உள்ளே அனுப்ப..
“ஃப்ரிஜ் தண்ணி குடிக்காதீங்க.. சுடு தண்ணி குடிக்கலனாலும் பரவால.. வெறும் தண்ணிய குடிங்க!”, அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள்.
“எங்க அம்மா தேவல டி உனக்கு! ‘ஒரு மாத்திரைய முழுங்கீட்டு போடா’ன்னு சொல்லி இருப்பாங்க. மூக்கு ஒழுக கூட ஆரம்பிக்கல நீ ஆரம்பிச்சுட்ட.”.
“தனியா இருக்கும் போது உடம்புக்கு எதையும் இழுத்து வச்சுகிட்டா யார் உங்கள பாக்குறதாம்?”
“அதெல்லாம் ஒன்னும் ஆகது விழி”
“சரி பேசாம சாப்பிடுங்க. நான் ட்ரெஸ் மாத்திற வரைக்கும் சுவர பார்த்துட்டே சாப்பிடுங்க..”
மேசை மேல் வீற்றிருந்த கைப்பேசியைச் சுவரை நோக்கித் திருப்பி வைத்தவள் கதை பேசிக்கொண்டே இரவு உடையைத் தேடிச்சென்றாள்.
“விழிமா… என் செல்லம் இல்ல.. என்னை விடு டி.. என்னால இத சாப்பிட முடியல”
“சங்கு பாப்பா தோத்திடும் உங்கட்ட.. பேசாம சாப்பிடுங்க மனோ…”
உண்ணாமல் விட மாட்டாள் என்று தெரியும்.. விழுங்க ஆரம்பித்தான்.
“இன்னைக்கு எதுக்கு புடவ கட்டியிருக்க?”, சத்தம் மட்டுமே கேட்டது.
“காலேஜ்-ல இந்த பொண்ணுங்க ஒரே கலர்ல்ல பொடவ கட்டி வர சொன்னாங்க… இது லாஸ்ட் செம்.. இன்னும் கொஞ்ச மாசம் தானே இருக்கு.. அது தான் ஃபோட்டோஸ் எடுத்துக்க.”
விக்க ஆரம்பித்தவனிடம்.. “தண்ணி குடிங்க..”, என்றாள் இருந்த இடத்திலிருந்தே.
“வி…ழி..”, வார்த்தை வாயிலிருந்த உணவோடு சிக்கி.. மாட்டி.. ஒரு வழியாக வெளி வந்தது.
“இப்போ என்ன பிரச்சினை உங்களுக்கு. வேண்டா வெறுப்பா சாப்பிட்டா எப்பிடி உடம்புல ஒட்டும்? ரசிச்சு சாப்பிடுங்க..”
“ரசிக்கவா டி?”
“ம்கும்! எல்லாம் கேட்டுட்டு தான் செய்வார். நான் வரதுக்குள்ள பாதி தட்டு காலியாயிருக்கணும். நான் பாக்கலன்னதும் சாப்பாட கொட்டிடாதீங்க”
“…”
“என்னங்க… இருக்கீங்களா..? சாயங்கலாம் ஆன்டி என்னை பார்த்துட்டு எனக்கு சாரி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க தெரியுமா? நீங்கதான் ஒன்னுமே சொல்லறது இல்ல. ஒரு வார்த்த நான் அழகா இருக்கேன்னு சொன்னா தேஞ்சு போய்டுவீங்களா?”
புடவையிலிருந்து இரவு பைஜாமாவிற்கு மாறியவள், கைப்பேசியைத் திருப்பி.. புருவம் சுருக்கி… கேமராவை தன் முகம் நோக்கி மாற்றி வைத்தாள்.
அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டே உணவை மென்றான். மின்சாரம் பாய்ந்திருக்கும் போல.. அசைவில்லை மனிதனிடம்.
அவன் பேச்சு நின்றிருக்க, “என்னங்க?” என்றாள் அவன் முகம் பார்த்து.
மந்தகாச புன்னகை சிந்தினான்.
“எதுக்கு இந்த சிரிப்பு?”
“நீ தானே விழி, ரசிச்சு சாப்பிடச் சொன்ன… அது தான்”, என்றான் புன்னகை மாறாமல்.
“சாப்பிடச் சாப்பிட சாப்பாடு பிடிச்சிடுச்சா? முகம் ப்ரைட் ஆகிடுச்சு?”
கட்டுபாடின்றி அவன் இதழ் விரிய.. “என்ன சிரிப்பு? நான் கேட்டேனே புடவ நல்லா இருந்துதா?”
“புடவைய கவனிக்கலியே விழி..”
“பச்! போங்க மனோ.. இத கூட கவனிக்க மாட்டீங்களா… அழகா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன்.”
“புடவ பத்தி தெரியல டி.. ஆனா நீ அழகுன்னு நான் சொன்னாதான் தெரியுமா விழி”, குரல் குழைந்தது.
அவன் குரல் செய்த மாயம், அவள் குரலும் குழைந்தது. “சொன்னதில்லன்னு சொன்னேன்..”
“உண்மைய சொல்லட்டுமா..?”
“ம்ம்..”
“அப்பிடியே என் மனச அள்ற டி.. சரியா சொல்லணும்ன்னா கும்முன்னு இருக்க டி செல்லம்..”, என்றான், கண்கள் இரண்டிலும் மயக்கத்தைத் தேக்கி.
வெட்கமாய் போனது. “என்னங்க பேச்சிது புதுசா..?”
“அப்படி தான் மனசுல தோணிச்சு! சொன்னேன்.”, நெஞ்சை தடவிக் கொண்டவன் புன்முறுவல் குறைந்த பாடில்லை.
“நீங்க ஒன்னும் சொல்லவே வேணாம் போங்க!”. பொய்யான கோபம் என்று இருவருக்குமே தெரியும்.
“இதெல்லாம் உன்ட்ட தானே சொல்ல முடியும்”
“ம்ம்”, தலை நிமிர்ந்த பாடில்லை.
“இதுக்கே ஓவரா ரியக்ட் பண்ற… அப்போ நான் சொல்ல வந்தத சொல்ல முடியாதா,,?”
“நீங்க இப்பிடி தான் ஏதாவது சொல்ல போறீங்கன்னா.. ஒன்னும் வேணாம்..”, பெண் முகம் சிவந்திருக்க… அவன் சிரித்தான்.
“அப்போ எனக்கு தோன்றத கூட உன்ட்ட சொல்லக் கூடாதா? சரி போ.. வேற யார்ட்டையாது சொல்லிக்கிறேன். என் கூட மார்கரீட்டான்னு ஒரு மெக்சிகன் பொண்ணு படிக்கிறா.. அவ என்னையே சுத்தி சுத்தி வரா தெரியுமா? நான் ஹான்சமா இருக்கேனாம்.. ‘உன் கேர்ள் ஃப்ரெண்டா இருக்கவா’ன்னு கேக்கிறா. அவ கூட பாக்க சும்மா..”
“ஐயோ போதும் போதும் நிறுத்துங்க.. சும்மா ஏதாவது சொல்லி என்னை சீண்டறது. போங்க போய் அவட்டயே சொல்லுங்க அவ தான் உலக அழகின்னு”
“ஹ ஹ ஹா.. சொல்ல தான் போறேன் அவட்ட, என் கேர்ள் ஃப்ரெண்ட் உன்ன உலக அழகின்னு சொல்லி உஷார் பண்ண சொன்னான்னு..”
“மனோ.. போதும் மனோ..”
“சரி சரி.. விளையாடினா கூட டென்ஷன் ஆகிடுவியா?”
“டென்ஷன் இல்ல மனோ! இருந்தாலும் வேற பொண்ணோட எல்லாம்… யோசிக்க கூட பிடிக்கல மனோ.”
“சரி யோசிக்காத. விடு ஃரீயா”
நிமிட நேர மௌனம்.
“விழி..”, தொனி மாறியிருந்தது.
“ம்ம்..?”, முகம் பார்த்தாள்.
“ட்ரெஸ் மாத்தும் போது.. ஃபோன ஸ்டாண்டுல நிக்க வச்சுட்டு.. இனி மேல் மாத்தாத. பேசிட்டு இருக்கவங்க உன் ஃபோன ஹாக் பண்ண தெரிஞ்சவங்கன்னா.. கேமரா அவங்க கன்ட்ரோல்ல இருக்கும். புரியுதா? ட்ரெஸ் மாத்துற இடத்துலையும் குளிக்கிற இடத்துலையும் ஃபோனுக்கு வேலை இல்ல புரியுதா? டச் ஸ்க்ரீன்ல தெரியமா கை பட்டு கேமரா மோட் மாற வாய்ப்பிருக்கு. அதனால ரொம்ப கேர்ஃபுல்ல இரு. ட்ரெஸ் மாத்தும் போது ஃபோன ஆப் பண்ணி ஃளாட்டா இருக்க மாதிரி வை.. புரியுதா விழி..”
“நீங்கன்னதும் தான் ஃபோன திருப்பி வைச்சேன்.. மத்தவங்கன்னா பாய் சொல்லிட்டு கட் பண்ணி இருப்பேன். ட்ரெஸ் மாத்தறேன்னதும் தேவ இல்லாம அவங்க இமாஜினேஷன் கண்ட மேனிக்கு ஓடாதா? மத்த நேரம் ஃபோன் மேல துணி போட்டுவேன் மனோ.. சோ நான் அலர்ட் தான்!”
“ஆமா ஆமா.. பார்த்தேனே! அலர்ட் அறுமுகம் தான் டி நீ..”, நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
“உங்க சிரிப்பே இன்னைக்கு சரியில்லையே! இப்போ என்னத்துக்கு இந்த சிரிப்பு?”
“அப்போ நான் கண்ட மேனிக்கு நினைச்சா பரவாலியா விழி..”, ஏகத்திற்கும் குரல் குழைந்தது.
“நீங்க இன்னைக்கு சரி இல்ல… என்னலாமோ பேசறீங்க..”, எழாத கோபத்தை இருப்பதாய் காட்டிக் கொண்டாள்.
“பதில் சொல்லு விழி… நான் கண்ட மேனிக்கு நினைச்சா பரவாலியா?”
“மனோ.. ப்ளீஸ். சும்மா இருங்க மனோ.. நீங்க சரியே இல்ல.”
“உன்ட்ட இப்பிடி எல்லாம் பேசலனா தான் நான் சரி இல்ல, விழி…”, கொஞ்சலாய் மொழிந்தான்.
“உங்களுக்கு இப்படி எல்லாம் பேச தெரியும்ன்னே எனக்கு தெரியாதே… புதுசா பேசவும் என்னவோ போல இருக்கு மனோ..”
“என்னவோ போலனா..”
“அதெல்லாம் சொல்ல தெரியல. கூஸ்பம்ஸ் வருது. அடி வயிறு என்னவோ பண்ணுது. சாமியார் மாதிரி அமைதியா இருந்திட்டு திடீர்ன்னு.. ஏதோ காதல் ரோமியோ மாதிரி பேசறீங்க.”
“ஓய்.. நான் சராசரி ஆம்பள டி… முனிவர் ரேஞ்சுக்கு நினைச்சுடாத. எல்லாம் பேசுவேன். தள்ளி இருக்கியேன்னு அடக்கி வாசிக்கிறேன். அவ்வளவு தான்!”
“காலைலேயே ஓவர் கதையா இருக்கு..? காலேஜுக்கு லேட் ஆகலியா?”
“ம்ம்… கிளம்பணும். யார் என்ன சொன்னாலும் பரவால.. நாளைக்கு மாதவன் கல்யாணத்துக்கு போயிட்டு வா”
“ம்ம்..”
“ரெண்டு பேருக்கும் வாங்கின வாச்ச மறந்திடாம..”
“ம்ம்..”
“சங்கு பாப்புக்கு வளையல், கொலுசு..?”
“உங்க மருமகள மறப்பேனா? எல்லாம் ஒன்னா தான் வச்சிருக்கேன்… மறக்க மாட்டேன்”
“அவளுக்கு ஸ்கை ப்ளூ ஃப்ராக் கிடச்சுதா?”
“அவ கண்ணுக்கு மேட்சா பட்டு எடுத்து.. ராஜாத்தி அக்காட்ட சொல்லி ஃப்ராக் மாதிரி தைக்க சொல்லியிருக்கேன். காலையில கிளம்பறதுக்குள்ள தந்துடுவாங்க.”
“சூப்பர் விழி நீ. குழந்த வராளா உன் கிட்ட? அம்மாட்ட நல்ல போறா தெரியுமா?”
“அவ முழு நேரமும் ஆன்டி கூடவே இருக்கா.. சோ ஆன்டிகிட்ட ஒட்டிகிட்டா! நான் எப்பாவது தானே பாக்கறேன். சோ நான் இருக்கும் போது அண்ணா.. அண்ணிட்ட மட்டும் தான்.”
சிரித்தான்.
“இப்போ என்ன சிரிப்பு?”
“அண்ணி ஆகிட்டாளா அபி?”
“பின்ன? அண்ணன் பொண்டாட்டியா ஆக போறாங்க.. அண்ணி இல்லியா?”
“மாதவன் வீட்டுல இருந்து யாராவது வராங்களா?”
“பெரியவங்க யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்குறேன். பெரியம்மா வாய்க்கு பயந்து அம்பிகா அத்த கூட வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன். வினோ ஊர்ல இல்ல.. டாக்டர் பத்தி தெரியல.. நானும் வசுவும் காலேஜ் கட்டடிச்சுட்டு போறோம். அப்புறம் அண்ணா ஃப்ரெண்ட்ஸ்!”
“பத்திரமா போயிட்டு வா. ஃபோட்டோ அனுப்பு.”
“ம்ம்..”
அவசர அவசரமாய் போட்டிருந்த டி.ஷர்ட்டை கழட்டி, சட்டைக்கு மாறினான். “நேரமாச்சு டி… நான் கிளம்பட்டா..”
பெண் எச்சில் விழுங்க மறந்து அமர்ந்திருந்தாள். மின்சாரம் பாய்ந்திருக்கும் போலும்!
“கிளம்பட்டுமா விழி?”
மனமே இல்லாமல் ம்ம்ம் வந்தது.
“உடனே ஒரு முழத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கோ.. என்ன டி..”
“உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் மனோ..”
“நானும் தான் விழி. நமக்கப்புறம் லவ் பண்ண ஆரம்பிச்சான் அந்த வினோத்! அவன் ரெண்டு வீட்டுலயும் பேசி சம்மதம் வாங்கிட்டான். ரெண்டு மாசம் கூட மாதவன் அபியோட பழகல.. அதுக்குள்ள அவன் கல்யாணமே பண்ண போறான்! நம்ம தான்.. பச்! லீவ்ல ஊருக்கு வரட்டா? நம்மளும் மாதவன் மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாமா? நீ இல்லாம இனிமேல் எனக்கு ரொம்ப கஷ்டம் விழி..”
“மாட்டவே மாட்டேன். எனக்கு ரெண்டு வீட்டுலயும் சம்மதிச்சு அவங்க ஆசீர்வத்தோட பண்ணிக்கணும்! எத்தன வருஷம் ஆனாலும் சரி!”
“நடக்குற காரியமா யோசி விழி!”
“நம்புங்க மனோ.. எல்லாம் நல்லபடியா நடக்கும்!”
“அப்போ நேரா அறுபதாம் கல்யாணம் தான்னு சொல்லு! கனவுலயே குடும்பம் நடத்தி பிள்ளைங்க பெத்துகணும் போல!”
தலை வாரி.. ஷூ அணிந்து.. கிளம்பியிருந்தான்.
“ச்சு… சொன்னா புரிஞ்சுப்பாங்க மனோ. அம்மா அப்பா, மாதவன் கல்யாணத்துக்கு ஒன்னும் சொல்லல தெரியுமா?”
“ம்ம் குட். நம்ம விருப்பத்தையும் மதிப்பாங்கன்னு நம்புவோம். சரி நான் கிளம்பறேன் விழி, லேட் ஆகுது டா. நீ தூங்கு. தூக்கத்துல வந்து உன்ன கட்டிக்கிறேன்.”
“மனோ..”
“சொல்லு விழி..”
“அப்போ கேட்டீங்களே..”, அவள் இழுக்க..
“என்ன கேட்டேன்?”, அவன் விழிக்க..
“கண்ட மேனிக்கு நினைச்சா பரவாலியான்னு..”, அவள் தடுமாற..
“ம்ம்.. கேட்டேன்”, பின்னந்தலை கோதி அவன் சிரித்தான்.
“பதில் வேண்டாமா?”, கேட்டவள் முகத்தில் செம்மை.
“நீ சொல்லாமலே பதில் தெரியும் விழி. போ போய் தூங்கு. அப்புறம் நீ நினைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் நல்லவன் எல்லாம் இல்ல டி! உன்ன கட்டிக்காம நான் தூங்கினதே இல்ல”
அவள் விழி விரிக்க..
“குட் நைட்”, என்றான் காதல் பொங்க.. காற்றில் முத்தம் பறக்கவிட்டுக் கொண்டே.
ஜன்னல் கதவைத் திறந்தாள். இரண்டு நாட்களில் நிலா மங்கை முழுவதுமாக வளர்ந்துவிடுவாள் என்பதால் இன்றே முழு போலிவோடு காட்சியளித்தாள். பார்த்து நின்றவள் மனம் முழுவதும் மனோ. இது போன்ற ஒரு இரவின் தனிமையில் அவனோடு கழித்த மணித்துளிகள் உடலைச் சுட்டது.
சித்தத்தை கலைத்த அவன் திண்ணிய மார்பில் ஒரு முறை முகம் புதைக்க ஆசை எழும்பியது. கனவில் வந்து கட்டிக்கொள்வானாமே.. உள்ளுக்குள் எழுந்த ஆசையோடே புத்தகத்தை மூடியவள் மெத்தையில் விழுந்தாள். இவனும் உறவு முறையில் இருந்திருக்கக் கூடாதா? மனம் ஏங்கியது.
தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. ஜன்னல் வழி நிலவைப் பார்த்தாள். மனோ சிரித்தான். அவனைப் போல் அவளுக்குத் தலை கோதி புன்சிரிப்பில் தவிப்பை கட்டுப்படுத்தத் தெரியவில்லை. மனம் தாறுமாறாக.. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்.. கண்ட மேனிக்கு அலைபாய்ந்தது.
