Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Dum Dum En Kalyaanam

dum dum en kalyaanam 04

Episode 04

 

டீலரிடம் பேசிக்கொண்டே ஹோட்டலை விட்டு வெளியே வந்த வீரா, அஷ்டா புயல் வேகத்தில் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு செல்வதை கண்டு திடுக்கிட்டான்.

 



Advertisement

அவசரமாய் உடன் இருந்தவரை வழியனுப்பிவிட்டு தன் பைக்கை கிளப்பிக்கொண்டு அவள் சென்ற சாலையில் விரைந்தான்.

 

ஏன்? எதற்கு? எதனால்? என்ற எந்த கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை. முக்கியமாய் அவன் மனதில் கேள்வி எழ நேரம் கூட இல்லை.

Advertisement

 

Advertisement

ஏனோ அவள் சென்ற வேகம் அவனுக்கு உவப்பாக இல்லாமல் போக நொடியும் தாமதிக்காது அவள் பின்னோடே கிளம்பிவிட்டான்.

 

அவள் ஸ்கூட்டி அண்ணா ரவுண்டானா தாண்டி காவேரி பாலத்தில் பயணிக்க, இரவு நேர ஜில்லென்ற காற்று பாலத்தின் இருமருகில் இருந்தும் கேசம் கலைத்து ஆடை இழுத்து விளையாடியது.

Advertisement

 

உடன் பயணிக்கும் வாகனங்களை எல்லாம் முந்திக்கொண்டு அவள் செல்ல, அவளை முன்சென்று பிடிப்பது அந்த ட்ராபிக்கில் அவனுக்கு சிரமமாகவே இருந்தது.

 

ஒருவழியாய் பாலம் முடிவுக்கு வர எதிரே தெரிந்த சிக்னல் வீராவுக்கு அவளை பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

 

ஒரு வேகத்தில் சென்றுக்கொண்டிருந்த அஷ்டா சிக்னலில் சிவப்பு ஒளி எரிவதை கண்டதும், வண்டியை இடப்புறமாய் ஒடித்து ‘ப்ரீ லெப்ட்’க்குள் வளைய, அவள் முன்னே ஒரு அடியில் சிவப்பு நிற ஒளி பரப்பும் கண்ணாடி குழாயை நீட்டி ஆட்டியபடி ட்ராபிக் போலிஸ் வரவே, தங்குதடையின்றி சீறிக்கொண்டிருந்த அவள் ஸ்கூட்டி சடன் ப்ரேக் போட்டு நின்றது.

 

‘ஓரம் கட்டு… ஓரம் கட்டு’ என அவரின் வார்த்தைகள் செவி சேர, அதுவரை தோழிகள் மீது இருந்த கோபத்தில் ஒரு வெறியில் இருந்தவளுக்கு, இப்போது போலிசை கண்டதும் அத்தனை உணர்வும் நொடியில் வடிந்து, அடிவயிற்றில் ‘கிலி’ பிடித்துக்கொண்டது.

 

‘ஐயையோ அப்பாவை விட்டுட்டு வந்துட்டோமே?’

 

‘இவ்ளோ இருட்டி போயிருக்கு?’

 

‘தனியா வந்து மாட்டிக்கிட்டோம்… போச்சு’

 

‘நீலாவுக்கு தெரிஞ்சா செத்தோம் இன்னைக்கு’

 

இப்போது தான் அவளை சுற்றி உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நினைவுக்கு வர, கண்களில் கூட லேசாக ஈரம் கோர்க்க ஆரம்பித்தது.

 

“ஓரம் கட்ட இவ்ளோ நேரமா?” என அதட்டிய அந்த போலிஸ்காரர், “வானத்துல ஏரோப்ளேனுல போறதா நினைப்போ?” என்றார் முறைப்புடன்.

 

அவளுக்கு பேச்சு என்ற ஒன்றே மறந்து போனதை போல ஆனது.

 

“என்ன கேட்டுட்டே இருக்கேன், பதிலை காணோம்?” என்றவர், “லைசன்ஸ் எடு” என்றார் அடுத்ததாய்.

 

“ஐயோ” என நிஜமாகவே தலையில் கைவைத்து நின்றுவிட்டாள் அவள்.

 

“என்னமா? லைசன்ஸ் ஆர்.சி புக் எல்லாம் எடு! இன்சூரன்ஸ் இருக்கா இல்லையா?” என அவர் கேட்டுக்கொண்டே போக, ‘வகையா மாட்டுனோம்’ என நினைத்து கதி கலங்கி போனாள் அஷ்டலட்சுமி.

 

பின்னே, இருந்தால் தானே எடுத்து காண்பிக்க!!!

 

அவள் பயத்தின் உச்சத்தில் வியர்த்துக்கொட்ட, “ஸா…ஸா…ர்…” என அவள் திக்க,

 

“காட்டுமா” என்றார் அவர்.

 

“இல்ல ஸார்”

 

“என்னது இல்லையா?” என்று அவர் சற்று காட்டமாக பேச ஆரம்பித்தபோது, கணீரென, “சார்!!!” என்ற குரல் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

 

அவனை கண்டதும் ‘இவரா?’

 

ஹோட்டலில் பார்த்த அதே ஆள்!!!  என விழிவிரித்து பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.

 

வீரா, “ஸார்?” என அழைத்து அந்த ட்ராபிக் போலிசின் அருகே செல்ல, “அட, வீரா ஸார்? ஊருல தான் இருக்கீங்களா? பார்க்கவே முடியல” என சிரித்துக்கொண்டு அவனிடம் சென்றார் அவர்.

 

அநாதரவான நிலையில் அவனை அங்கே கண்டதும் அஷ்டாவுக்கு பதட்டம் மட்டுப்பட்டு சுவாசம் கொஞ்சம் சீரானது.

 

காவலரை அவளை விட்டு சற்று தள்ளி அழைத்து சென்று சிறிது நேரம் பேசிய வீரா, சில நொடிகள்  சென்று அவளை திரும்பி பார்க்க, துப்பட்டாவின் முனையை  திருகிக்கொண்டும், லேசாக நடுங்கும் விரல்களை அவ்வப்போது கடித்துக்கொண்டு நின்றிருந்த அஷ்டா பட, அவனை மீறி லேசான முறுவல் வெளிவந்தது.

 

பேச்சு முடிந்ததை போல, இருவரும் மீண்டும் இவள் அருகே வந்து நிற்க, “இனி ஓவர் ஸ்பீட்ல வர வேலை எல்லாம் வச்சுக்கக்கூடாது! புரியுதாமா?” என்றார் அந்த காவலர்.

 

வேகவேகமாய் ‘சரி’ என்று தலையை உருட்டினாள் அஷ்டா.

 

உடனே வீராவிடம் திரும்பியவர், “ஓகே ஸார், பார்த்து கூட்டிட்டு போங்க! அப்பறம் பாப்போம்” என இளநகையுடன் சொல்லிவிட்டு வேறு பக்கமாய் சென்றார்.

 

அவர் அங்கிருந்து சென்றதும் தான் அஷ்டாவுக்கு ஆசுவாசமாய் இருந்தது. அப்படியே வண்டி சீட்டில் அமர்ந்தவள், ‘உப்ப்’ என்ற பெருமூச்சுடன் முகத்தை அழுந்த துடைக்க, அவள் அருகே சென்று ‘க்கும்…க்கும்’ என செருமினான் வீரா.

 

அவள் ‘என்ன?’ என்பதை போல நிமிர்ந்து அவனை நோக்க,

“வயசு இருவத்தி எட்டு ஆச்சு! எம்.பி.ஏ முடிச்சுருக்கீங்க! அஞ்சடி ஆறு அங்குலம் இருக்கீங்க! வெயிட்டு ஐம்பத்தி நாலு கிலோ!  எங்க ஊருல எந்த பாப்பாவும் இப்படி இருக்க மாட்டாங்க தான்!” என முன்பு அவள் சொன்னது போலவே சிரிப்பில் துடிக்கும் உதடுகளை அடக்கிக்கொண்டு சொன்னவன்,

 

“அதனால, வண்டி ஓட்டனும்ன்னா லைசன்ஸ் எடுக்கணும்ன்னு இந்த ‘பெரிய பாப்பா’க்கு தெரிஞ்சுருக்கனுமே?” என்றான் கேள்வியில் கிண்டல் கலந்து.

 

வெடுக்கென பேச அவளுக்கு வாய்வரவில்லை. இக்கட்டில் வந்து உதவியவனாயிற்றே!

 

“தெ…தெரியும்!”

 

“அப்பறம் ஏன் எடுக்கலையாம்?”

 

ஏனோ அவன் பேசிய தொனி, தவறு செய்த சிறு பிள்ளையிடம் விசாரணை நடத்துவதை போலவே தோன்ற, “ப்ச்! எடுக்கல” என முகத்தை சுளித்தாள் அஷ்டா.

 

“ஏன்னு தான் கேக்குறேன்…” அவனும் விடுவதாய் இல்லை.

 

“பெருசா நான் வெளில சுத்த மாட்டேன்! அப்டியே வந்தாலும் பொண்ணுங்களை போலிஸ் பிடிக்க மாட்டாங்க” என்று அவள் சொன்னதும், இரு புருவங்களும் உயர, பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றான் வீரா.

 

அவனிடம் பதில் இல்லை என்றதும், அவன் முகத்தை ஏறிட்டவள், “எ…என்ன?” என்றாள் நலிந்து போல குரலில்.

 

“ஒன்னும் சொல்றதுக்கு இல்லை!” என தலையை உலுக்கியவன், “இவ்ளோ ஹை-ஸ்பீட்ல ஓட்டிட்டு வரது தப்பில்லையா?” என்றான் அக்கறையாய்.

 

‘என் இஷ்டம், உனக்கென்ன?’ என்று கேட்க தோன்றாது,

 

“கொஞ்சம் கோவம் பிரண்ட்ஸ் மேல! அதான் அப்டியே கோவத்துல ஸ்பீடா……..!!!” என்று இழுத்தவளை,

 

“அப்படி என்னங்க கோவம்?” என்றான் அவன். அவளை எதற்கு இத்தனை துருவி துருவி விசாரிக்க வேண்டும் என்று அவனுக்கும் தோணவில்லை. எவனோ ஒருவன் கேள்விக்கெல்லாம் தான் ஏன் பதில் சொல்லிக்கொண்டு நிற்க வேண்டும் என்று அவளுக்கும் தோணவில்லை.

 

“எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலன்னு கிண்டல் பண்ணுறாங்க!” என அவள் சொன்னபோதே படக்கென சிரித்தவன்,

 

“ஏங்க, எனக்கெல்லாம் முப்பத்தி மூணு வயசாகுது! இன்னமும் கல்யாணம் ஆகல தான்! அதுக்காக நானும் வண்டியை எடுத்துக்கிட்டு புயல் வேகத்துல பறக்கவா?” என்றான், இதெல்லாம் ஒரு விஷயமா என்பதை போல!!

 

“அதில்லைங்க! சொட்ட தலையா, தொப்ப விழுந்த ஆளா தான் எனக்கு கிடைக்கும்ன்னு சொன்னாங்க! எனக்கு கோவம் வந்துடுச்சு!” என்றாள் அவள் முகத்தை சுருக்கிக்கொண்டு, இன்னும் மிச்சமிருந்த கோபத்தோடு!

 

அவளை சில நொடிகள் வெறித்தவன், “முடி கொட்டுறதும், தொப்பை விழுகுறதும் என்ன அவ்ளோ பெரிய வியாதியா?” என்றான் புருவம் சுருக்கி.

 

அவன் குரலில் இருந்த கேலியும் விளையாட்டு தொனியும் மறைந்திருந்திருந்தது.

 

“ஹும்?”

 

“என்ன பார்க்குறீங்க? பொண்ணுங்களுக்கெல்லாம் முடி கொட்ட தானே செய்யுது! இதை ஒரு காரணமா சொல்லி எந்த பையனாவது பொண்ணை வேண்டான்னு சொல்லி கேள்வி பட்டுருக்கீங்களா? அப்பறம் ஏங்க நீங்க எல்லாம் மட்டும் இப்படி இருக்கீங்க?”

 

“……..”

 

“நாற்பது வயசானா முன்பக்க முடி வலுவிழந்து கொட்ட தான் செய்யும்! முறையான உடற்பயிற்சி, உணவுமுறை இல்லன்னா எப்பேர்ப்பட்ட அழகனுக்கும் தொப்பை விழ தான் செய்யும்! ஏன், நீங்கல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வெயிட் போடுறது இல்லையா? உங்களுக்கு தொப்பை விழுகிறது இல்லையா?” என்றான் அவன். 

 

அவள் ‘ப்பே…’ என முழித்துக்கொண்டு நிற்க,

 

“இதெல்லாம் ஒரு குறைன்னு நினைக்காதீங்க! ஒருத்தரோட குணம் தான் கடைசி வரைக்கும் நிலைக்கும்” என சொல்ல,

 

‘போதும்டா சாமி’ என்று நினைத்தவள், “ஓகே…ஓகே… நான் கோவப்பட்டது தப்பு தான் விட்டுடுங்க” என அவசரமாய் இறங்கி வந்தாள்.

 

நடுநிலையாய் தலையசைத்தவன், “பார்த்து வீட்டுக்கு கிளம்புங்க” என்று சொல்ல, அப்போது தான் தந்தையின் நினைவு வர பெற்றவளாய், ‘அச்சோ’ என தலையில் தட்டிக்கொண்டாள்.

 

“என்னாச்சுங்க?”

 

“என் அப்பா கூட தான் வந்தேன்! கோவத்துல அவரை விட்டுட்டு இப்ப நான் மட்டும் கிளம்பி வந்துட்டேன்” என்றவளை விநோதமாய் பார்த்தான் வீரா.

 

திகைப்புடன், “அப்பாவை கூடவாங்க மறப்பாங்க?” என்றவன்,

“போன் போட்டு விஷயத்தை சொல்லுங்க” என்றுவிட்டு, “போன் இருக்கா?” என்றான் சந்தேகமாய்.

 

அவன் சந்தேகம் ‘சரியே’ என்பதை போல, “மொபைல் கொண்டு வரல” என முன் நெற்றியை சொரிந்தாள்.

 

உடனே தன் மொபைலை எடுத்து நீட்டியவன், “அப்பா நம்பராவது தெரியுமா?” என்றான் சற்றே நக்கலாய்.

 

ரோஷத்துடன் அவனிடம் இருந்து மொபைலை வாங்கியவள் தந்தையின் எண்ணுக்கு டயல் செய்துவிட்டு அவர் எடுப்பதற்காக காத்திருந்தாள்.

 

மறுபுறம், “ஹலோ?” என்று தந்தையின் குரல் வந்ததும்,

 

“ப்பா! நான் மாம்பலசாலை சிக்னல் பக்கத்துல இருக்கேன்ப்பா! ஃபிரண்டை டிராப் பண்ண வந்தேன்! நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நான் வந்து கூப்பிட்டுக்குறேன்” என சரளமாய் சொல்ல, அவளது ரெடிமேட் ‘பொய்’யை கேட்டு அசந்து நின்றான் வீரா.

 

“நீ அங்கேயே இருமா! அப்பா ஒரு ஆட்டோ பிடிச்சு வந்துடுறேன்” என்ற சண்முகம் அழைப்பை நிறுத்திவிட, “ம்ம்ம்! இந்தாங்க!” என்றாள் அவள்.

 

மொபைலை வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டவன், “முதல்ல லைசன்ஸ் வாங்குங்க மேடம்!” என்று சொன்னதும், “ம்ம்ம்… ம்ம்” என தந்தை வரும் வழி பார்த்து நின்றுக்கொண்டாள் அஷ்டா.

 

‘வேலை முடிஞ்சதும் திருப்பிக்கிட்டு நிக்குறதை பாரு!’ என்று நினைத்த வீரா, லேசான முறுவலுடன் தன் பைக்கில் ஏற, அவளிடம் இன்னும் பேச வேண்டும் போல தோன்றியது அவனுக்கு.

 

சாலையை வெறித்துக்கொண்டு தந்தையை தேடியவளாய் நின்றவளும் ஓரக்கண்ணில் அவன் சென்றுவிட்டானா? என பார்க்க தவறவில்லை.

 

“ஹலோ மேடம்?” அவன் சற்று சத்தமாய் அழைத்தான்.

 

அஷ்டா திரும்பி பார்த்ததும், “நீங்க எனக்கு ரெண்டு தேங்க்ஸ், ஒரு ஸாரி சொல்லணும்! நியாபகம் இருக்கா?” என்றிட,

 

“ரெண்டு தேங்க்ஸ் சரி! அதென்ன ஒரு ஸாரி?” என கணக்கு கேட்டாள் அஷ்டா.

 

“முதல்ல தேங்க்ஸ் சொல்லுங்க மேடம்”

 

“ம்ம்! கீழ விழாம பிடிச்சதுக்கும், போலிஸ் கிட்ட இருந்து காப்பாத்தினதுக்கும் ரெண்டு தேங்க்ஸ்” என்றவள்,

“ஸாரி எதுக்கு சொல்லணும்?” என்றாள் புரியாமல்.

 

அவளுக்கு வார்த்தையில் பதில் சொல்லாது, தனது பர்சில் இருந்து அந்த ‘கிழிந்த இரண்டாயிரம்’ நோட்டை எடுத்து அவளுக்கு காட்ட, திகைத்து நின்றாள் அவள்.

 

‘ஆத்தி!!! அவரா இது?’

 

முன்பு அவனை பார்த்தபோது மூன்று நாள் தாடியுடன் இருந்தவன், இன்று கிளீன் ஷேவ் செய்திருக்க, அன்றோ காரியத்தில் மட்டுமே கண்ணாய் இருந்தவள் அன்றவனை ஊன்றி கவனித்திறாதலால் இன்று சரியாக அடையாளம் தெரியாமல் போனது.  

 

அந்த நாராய் கிழிந்து செல்லோ டேப் தயவில் நிமர்ந்து நிற்கும் நோட்டை பார்த்ததுமே விளக்கெண்ணை குடித்தது போலானது அவள் முகம்.

 

வீராவோ, அவளுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பதை முன்பே கண்டுக்கொண்டதால், தன்னை நினைவூட்டுவதற்காக அதைக்காட்ட,

 

‘அச்சோ! நம்ம ஏமாத்துனது தெரிஞ்சுதான் ஸாரி கேட்க சொல்றாரோ?’ என அவள் அசடு வழிந்து நின்ற போது அவள் முன்னே ஒரு ஆட்டோ வந்து நிற்க, சண்முகம் அதில் இருந்து இறங்குவதை கண்டதும், அவளை தவிக்க விடாமல் லேசாக தலையசைத்து அவளை பார்த்துக்கொண்டே அங்கிருந்து தன் பைக்கில் மறைந்தான் அவன்.

 

“மானம் போச்சுடி அஷ்டா!” அவன் சென்ற திக்கை பார்த்து தலையில் தட்டிக்கொண்டு நின்றாள் அஷ்டலட்சுமி.

 

அங்கிருந்து புறப்பட்டு சென்றவன், பக்கவாட்டு கண்ணாடியில் அவளை பார்க்க, அவள் தலையில் தட்டிக்கொண்டு நிற்ப்பதைக்கண்டு,   என்ன முயன்றும் மறைக்க முடியாத முறுவல் கிளம்பி அவன் இதழ்களில் தவழ்ந்தது.

 

-தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!