அ21_3 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 21_3
பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு மகளை மடியில் வைத்துக் கொண்டே தாலி கட்ட, திருமணம் நல்ல முறையில் முடிந்தது. அழகான இளம் ஜோடி. கண்களை நிறைத்தனர். அனைவர் முகத்திலும் நிறைவு. ஒருவருக்கும் இடையே இருந்த இன பேதம் அங்குத் தெரியவில்லை. ஏன் சௌந்தர்யாவுமே அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தன் பிள்ளைகளுக்கு என்று வரும் போது அதை யோசிப்பாராயிருக்கும்!
Advertisement
பதினோரு மணிக்கு திருமண பதிவு இருக்க, அது முடிந்ததும் அருகிலிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் உணவு என்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்க அனைவரும் தங்கள் தங்கள் வாகனம் நோக்கிச் செல்ல, மாதவன் கையில் கார் சாவி ஒன்றைக் கொடுத்தாள் அபிகெயில்.
மகளை ஒரு கையில் ஏந்தியிருந்தவன் ஏதோ கார் சாவி என்று வாங்கிக் கொண்டு வந்தான். BMW நின்று கொண்டிருக்க, இதுவும் எபி வீட்டினருடையதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.
Advertisement
Advertisement
“பிடிச்சிருக்கா?”, கேள்வியோடே மாதவன் முகம் பார்த்த மனையாள் முகத்தில் அத்தனை ஆர்வம்.
“பிடிக்காம தான் தாலி கட்டினேனா..”, புன்னகையோடே மகள் நெற்றியில் முத்தம் பதித்தவன் தோளோடு அபியை அணைத்து நெற்றியில் முத்தம் பதித்து விட்டான். ‘உன்னையும் மகளையும் ரொம்ப பிடிச்சிருக்கு’ என்றது அவன் செய்கை.
Advertisement
“வெட்டிங் கிஃப்ட் பிடிச்சிருக்கா..?”, என்றாள், அவன் கையிலிருந்த சாவியை ஒரு முறை பார்த்து.
சாவியை பார்த்தான். ‘AM’ என்ற எழுத்துகள் கீ செயினாய் இருந்தது. காரை மீண்டும் பார்த்தான். ப்ளூஸ்டோன் மெட்டாலிக் (Bluestone metallic) நிறத்தில் நேர்த்தியாய் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு ‘ஜஸ்ட் மேரிட்’ வாசகத்தோடு BMW M5 Competition பளபளத்தது. “இதுவா..?”, அவன் கண்கள் விரிந்தது.
அதையே பதிலாக எடுத்து கொண்டாள்.
‘ஒன்னே முக்கால் கோடி கிட்ட இருக்கும்’ என்று விஷ்வாவிடம் கேட்டு தெரிந்த பின் தான் பாக்கியாவிற்கு மூச்சு சீரானது. இருந்தும் அவர் கெத்து குறைய கூடாதே.. “இதோட என் கடமை முடிஞ்சுது. கேப் புக் பண்ணு விஷ்வா.” என்று சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொண்டவர் போல் குதித்தார். அவர் வாடகை வாகனத்தில் கிளம்ப எத்தனிக்க பால்ராஜ் அவர் ஓட்டுநரோடு அவர் வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
சட்டப்படி திருமணத்தைப் பதிவு செய்து, உணவருந்திவிட்டுச் செல்லும் முன் அனைவரும் அவரவர் பரிசுப் பொருளை கொடுத்துவிட்டுச் செல்ல கடைசியில் வந்த அலர்விழி மாட்டிக் கொண்டாள்.
“அது தான் சித்தப்பா செயின் போட்டாங்கல்ல!… நீ எதுக்கு அதிக பிரசங்கி மாதிரி இவ்வளவு வாங்கியிருக்க? பொண்ணுக்கு கைல.. கால்ல வாங்கி போட்டிருக்க. இது என்ன இவ்வளவு காஸ்ட்லி ப்ராண்ட் வாச்? ஏது பணம் உனக்கு?”
“ண்ணா.. அது அவர், மருமகளுக்கு வாங்கச் சொல்லி பணம் அனுப்பினார். அவர்ட்ட கேளு. என்னை கேக்காத. இந்த வாச்.. இதுவும் அவர் அத்தானுக்கும் ஃப்ரெண்டுக்கும் அனுப்பினது. என்னை ஒன்னும் கேக்காத. எனக்குத் தெரியாது.” என்று நழுவிக்கொண்டாள். அருகில் இல்லாமல் இருந்தாலும்.. அதிகம் பேசாது போனாலும்.. சிலர் நட்பு வளருமாம். அந்த பட்டியலில் மாதவன்-எபி நுழைந்திருந்தனர், கடந்த இரண்டு மாதங்களாக.
உணவு முடிந்து அனைவரும் கிளம்பியிருக்க.. எஸ்தர் சௌந்தர்யாவைப் பிடித்துக் கொண்டார். “பொண்ணு வீட்டுக்கு மாப்பிள்ளை வந்துட்டு பாலும் பழமும் சாப்பிட்டுட்டு தான் போகணும். இப்போ மாதவன் வீட்டுக்குப் போனாலும் பிள்ளைங்கள வான்னு சொல்ல அங்க ஆளில்ல. கொஞ்ச நேரம் வீட்டுல வச்சுட்டி தான் அனுப்பணுன்னு பாக்குறேன். மத்தவங்க எல்லாம் லோகல்ல இருக்காங்க.. கிளம்பிட்டாங்க. அலர் அம்மா அப்பா நீங்க.. நீங்க வராம போகலாமா? கண்டிப்பா வந்துட்டு தான் போகணும்.” என்று பிடித்து கொண்டார்.
இன்னும் ஒரு சில மதங்களில் அலர்விழியின் கல்லூரி படிப்பு முடிந்துவிடும். இப்பொழுதே வேலையிலும் அமர்ந்துவிட்டாள். கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட பிரவீன் இன்றே தியாகுவிடம் பேச நினைத்து கிளம்பாமல் அவரோடு பேசிக் கொண்டிருக்க எஸ்தர் குறுக்கே வந்து நின்றார்.
சௌந்தர்யாவிற்கு விருப்பமில்லை. ஆனால் மாதவன் அவர் முகம் பார்த்து நின்றான். “அம்மா, அண்ணன தனியா விட போறீங்களா?”, என்ற மகளிடம், “இவன் பண்ற காரியத்துக்கு வேற என்ன எதிர்ப்பாக்குற?”, என்ற முறைப்பே வந்தது.
“சித்தி… எனக்காக.. ப்ளீஸ். கொஞ்ச நேரம் தான். நானே ட்ரெயின் ஏத்தி விடுறேனே.. சொல்லுங்க சித்தப்பா..”, மகனாய் தெரிந்த மாதவனுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை சித்தியால்!
“நம்ம பிள்ள.. தலைய காட்டிட்டு வருவோம் சௌந்தரியா”, என்று தியாகு கூறிவிட, பிரவீனுக்கு தான் கோபம் முட்டிக் கொண்டு வந்தது. அவனைக் காண.. அவனிடம் 10நிமிடம் பேச, தவம் கிடக்கவேண்டும். அப்படிப்பட்ட உயரத்தில் இருக்கும் அவன், ஒரு பெண்ணிற்காக எவ்வளவு இறங்கிப் போவது என்ற எண்ணம் வரவும், “அப்புறம் பார்ப்போம் மாமா..”, என்று கிளம்பத் தயார் ஆனான்.
“நீங்களும் வாங்க தம்பி..”, என்று பால்ராஜ் மரியாதை நிமித்தமாய் அழைக்க… “வாங்க அத்தான்”, என்று மாதவன் அழைக்க… “வாங்களேன் டாக்டர்..”, என்று அலர்விழி அழைக்க.. அவள் கொஞ்சும் விழியில் மதி மயங்கியவன் மலை இறங்கினான்.
பிடிக்காத அடர்த்தியான மையும்.. ஊதா நிற இமையும் ஏனோ இன்று அவனுக்குப் பிடித்தது. தொட்டு பாரேன் என்ற வழவழப்பான கன்னத்தை கைகளில் ஏந்தி அந்த நீள நயனத்தோடு கதை பேசத் தோன்றியது.
வேண்டுமென்றே பறக்க விட்டிருந்த கூந்தலை இழுத்து பின்னலிட சொல்லத் தோன்றவில்லை.. அந்த கருமேக கற்றைக்குள் கை நுழைக்கத் தோன்றியது.
காதில் பெரிதாய் இருந்த அரை நிலவின் கீழே, ஆடி நின்ற ஜிமிக்கியை விரல் தொட்டு ஆட்ட மனம் ஏங்கியது.
மினுமினுக்காமல், உதட்டு வரிகள் தெளிவாய் தெரிய பட்டையாய் தீட்டியிருந்த அடர் ஊதா நிறம் அவன் எண்ண அலைகளை தறிகெட்டு நாலாபுறமும் ஓட செய்தது. கண்களை உதட்டை விட்டு எடுக்க முடியவில்லை. உதட்டில் தெரிந்த வரிகளில் தன்னை இழந்தான். இப்பொழுதே இவள் வேண்டும் என்றது மனம். தடுமாறிப் போனான் மருத்துவன்.
தென்றலாய் வந்து சிலையாய் நின்ற மரத்தைத் தீண்டியவள்.. புயலாய் மாறி அவனை வேரோடு சாய்த்துக் கொண்டிருந்தாள். அந்த உதட்டிற்கு சொந்தக்காரன் ஒருவன் இருப்பது தெரியாமல் அதே உதட்டிற்குச் சொந்தம் கொண்டாட ஒருவன் ஏக்கம் கொண்டான்.
பிரவீன் காரில் சாய்ந்து நின்று கொண்டு, அவசர அவசரமாய் கைப்பேசியில் எதையோ அவள் செய்து கொண்டிருக்க.. தலை முதல் கால் நகம் வரை பார்த்தவன், பார்த்து.. லயித்து.. கிறங்கி நின்றான்.
கைப்பேசியிலிருந்து விடுபட்டவள் அருகில் நின்றிருந்தவனிடம், “போகலாமா?”, என்று கேட்டுக் கொண்டே திரும்ப அவன் பார்வையில் நெற்றி சுருங்கியது.
கார் கிளம்பியது. அலர் பெற்றவர்களிடம் திருமணத்தைப் பற்றி சீக்கிரம் பேசி முடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். சித்தி மூலம் அம்மாவைச் சரி கட்ட வேண்டும். எப்பொழுது.. எப்படி என்ற கணக்கை மூளை போட ஆரம்பித்தது.
அவன் ஏன் அப்படிப் பார்த்தான்? “என்ன டாக்டர் அப்பிடி பார்த்துட்டு இருந்தீங்க..?”, கேட்டும் விட்டாள்!
“அத்தான்னு நல்ல தமிழ் வார்த்த இருக்கு அலர்விழி”, என்று திருத்தினான் பிரவீன். கேள்விக்கான பதில் இது இல்லையே!
“ஏனோ அப்பிடி உங்கள் கூப்பிட வரல. என்ன பண்ணட்டும்?”, அழகாய் இதழ் கடித்து புருவம் சுருக்கி.. சிரித்தாள். கடிபட்டிருந்த இதழ் மட்டுமா.. அந்த பல்வரிசை கூட அவனை ஏனோ இம்சித்தது. மனம் கட்டுபாட்டை முழுவதுமாக இழப்பதை அவனால் உணரமுடிந்தது. விருப்பத்திற்கும் இதயத்திற்கும் மெலிதான தொடர்பு இருப்பதாக நரம்பியல் மருத்துவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. இதயம் மெல்ல அடித்துக் கொண்டது.
இதயம் அலர்விழியால் நிறைய.. எதையுமே யோசிக்க முடியாமல் மூளை வடிந்து போவதை உணர்ந்தான் ‘மூளை’ மருத்துவன்.
முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிய அவளின் நீள விரல்களில் கண்கள் நிலைத்தது. விரலோடு விரலை பிணைத்துக் கொள் என மனம் தூண்டியது.
சாலையை நோக்கி பார்வையை திருப்ப பாடாய் படவேண்டியதாகப் போனது. இந்த இளமை தவிப்பெல்லாம் புதிது மருத்துவனுக்கு. கைகளின் ஒன்று, ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடிக்க, மற்றது கியர் ஸ்டிக்கை அழுத்திப் பிடித்தது.
விருப்பம் என்பதைத் தாண்டி மனம் வேறெங்கோ பிரயாணப் பட ஆரம்பித்தது. அப்பேர்பட்ட எண்ணங்கள் சரியா தவறா என்று யோசிக்க முடியாத நிலை.
“என்ன மருத்துவரே..? என்ன யோசனை?”, அவளோடு வேற்று கிரகத்தில் உறவாடிக் கொண்டிருந்த மனதை இழுத்து பிடித்து காருக்குள் அடைத்தான்.
அனைவரும் கிளம்பும் வேளை, “சித்தப்பா, நீங்க அங்கிள் கூட போங்க. அலர் என் கூட வரட்டும்”, என்று அவர்களை அனுப்பி விட்ட மாதவன், “வா அலர்..”, என்று அவளை ஏற்றிக்கொள்ளும் வேளை, “என்னோட வா அலர்விழி.. புதுசா கல்யாணம் ஆனவங்க தனியா வரட்டுமே?”, என்று பிரவீன் கூற.. அவளுக்கும் அதுவே சரியாக பட.. ‘சரி’ என்றவள் இதோ பிரவீனோடு தனியே அவன் வாகனத்தில்.
என்றும் ஓட்டி செல்லும் கார் இன்று புதுமையான உணர்வை தந்தது ப்ரவீனுக்கு. கார் ஏசி-யில் பனிமலை குளிரை உணர்ந்தான். அலர்விழியின் மல்லி சரம் அவனை எங்கோ அழைத்துச் சென்றது. அவன் அவனாயில்லை!
சென்னை நெரிசலில் வண்டி ஊர்ந்தது. பல சிக்னல்களில் பல நிமிடங்கள் வாகனம் நின்றது. முதல் முதலாக சென்னை சாலையில் விரும்பி பயணித்தான். மனதிற்குப் பிடித்தவளோடு நீளமான பயணம். அதிகம் பேசவில்லை இருவரும்.. இருந்தும் அவனுக்கு நிறைவாய் தோன்றியது.
மீண்டும் சிக்னலில் வண்டி நின்றிருந்தது. இன்னும் 180 வினாடிகள் வண்டி அசையப் போவதில்லை. உள்ளம் குதூகலித்தது.
தன் வாகனத்தில், தன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவளை பார்த்தான். அவள் மேலிருந்து வந்த நறுமணம் மனதை நிறைத்தது. புதுவித மயக்கம்.. ‘யூ ஆர் ப்ரெத்டேக்கிங் அலர்விழி அன்ட் ஐ திங் ஆம் ஃபாலிங் ஃபார் யூ’ (You’re breathtaking and I think I’m falling for you) என்று நா வரை வந்தது, அவனுக்கே அதிசயம்.
நாகரீகம் கருதி, “யூ ஆர் ப்ரெத்டேக்கிங் அலர்விழி”, என்று நிறுத்திக் கொண்டான்.
“தேங்க்யூ”, அவளும் புன்முறுவலோடு நிறுத்திக் கொண்டாள். அவள் கவனம் முழுவதும் எந்தெந்த புகைப்படங்களை மனோவிற்கு அனுப்புவது என்பதில் மட்டுமே.
இவன் மனம் எங்கோ பறக்க.. ஒரு வித ரசனையோடே பேசினான்.
“என் லைப்ல இது தான் முதல் தடவ ஒரு பொண்ணு நல்லா இருக்கான்னு சொல்றது. யாரையும் கவனிச்சதில்லை. கவனிக்க தோணினது இல்ல. மருந்தும் நோயளிங்களும் தான் தெரியும். ஆனா உன்ன கவனிக்காம இருக்க முடியல. இன்னைக்கு உன்னால எல்லாம் புதுசா தெரியுது. எல்லாரையும் கவனிச்சேன். ஒண்ண நோட்டீஸ் பண்ணினேன். எல்லாரும் ஷைனியா… ஃப்ளாஷியா இருந்தாங்க. ஆனா நீ? வேற மாதிரி ரொம்ப டிஃபரண்டா இருக்க”
மெல்ல சிரித்து வைத்தாள்.
“ஷைன் இல்லாத சாரி.. அதுவும் இந்த டல் ஃபினிஷ் லிப் கலர் சூட்ஸ் யூ (suits you). ஸ்ட்ராங் யெட் சட்டில்(strong yet subtle), உன்னோட பெர்சனாலிட்டி மாதிரி. டு யூ கெட் மி?”
‘சாரியும்.. லிப் கலர் தான் பிடிச்சிருக்குன்னா.. என்னோட மேக் அப் மேன் மனோட்ட சொல்லு.. அவர் குஷியாகிடுவார்’, அவன் பேசிக் கொண்டிருக்க மனோ என்ற புள்ளியில் அவள் மனம் சொக்கி நின்றது. ‘ஊம கொட்டான் எல்லாம் உங்களால வாய் திறந்து, நான் பாக்க நல்ல இருக்கேன்னு சொல்லுது மனோ. இனி மேல் நீங்க தான் என் ட்ரெஸ் டிசைனர்… என் மேக் அப் ஆர்டிஸ்ட்’.
அவன் கேட்ட கேள்விக்கு, ‘ஈ’ என இளித்து வைத்தாள். காதல் வார்த்தை போல் இல்லாது.. தகவல் போல் கூறியதால் அவளுக்கு அவன் பேச்சில் தவறாய் ஒன்றும் தோன்றவில்லை. அலர்விழி அவனுக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அவன் விளக்க.. அவளோ புடவையைப் பற்றி கூறுகிறான் என்றதுமே வாங்கி அனுப்பியிருந்த மனோவோடு டூயட் பாட ஆரம்பித்திருந்தாள்.
“உன் கிட்ட ஒரு ஸ்ட்ராங் பெர்சனாலிட்டி அண்ட் ஸ்ட்ராங் ப்ரெசன்ஸ் இருக்கு அலர்விழி. இருந்தும் ஒரு விதமான அமைதியும்.. ஈர்ப்பும் இருக்கு.”
“..”
“அலர்விழி?”
பூலோகத்திற்கு வந்தவள், “ம்ம்? சொல்லுங்க டாக்(doc)”, என்று முகம் பார்த்தாள்.
“நான் சொல்றது புரியுதா?”
“புரிய என்ன இருக்கு? நீங்க பிஸி பெர்சன். அப்பிடி தான் இருப்பீங்க. இன்னைக்கு ஃப்ரீயா இருக்கவே.. நல்லா பராக்கு பார்த்திருக்கீங்க. இந்த பர்புள் கலர் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு கண்டு பிடிச்சுருக்கீங்க. வெறும் ஹாஸ்பிட்டல்.. பேஷியன்ட்ஸ் மட்டும் லைஃப் இல்ல டாக்… இன்னும் நிறைய இருக்கு. டேக் டைம் டு ஸ்மெல் தி ரோசஸ்(take time to smell the roses).”
“சீ.. இத தான் சொல்றேன். நான் பேசறத கேட்டுட்டு என்னை நீ ஜட்ஜ் பண்ணாம… நீ சொல்ல நினைக்கிறதையும் என்ன அழகா நாசூக்கா சொல்ற!
ஐ அட்மையர் யுஅர் சட்லிட்டி அலர்விழி(I admire your subtlety).”
“தாங்க்யூ டாக்..” என்றவள் கண்களும் அவனைப் பார்த்துச் சிரித்தது.
பிரவீனுக்கு இது புது அனுபவம். படிப்பும்.. புத்தகமும்.. மருந்தும்.. மருத்துவமும் தான் அவன் உலகம். பார்த்த சில தினங்களிலேயே அலர்விழியை மனைவியாக்கிக் கொள்ள விருப்பம் கொண்டான். ஆனால் இன்று… நெருக்கம் வேண்டியது மனம். அவளிடம் மனதை திறக்க ஆசை பிறந்தது. அவனுக்குள் இந்த விருப்பம்.. ஆசை எல்லாம் இதுவரை எங்கிருந்தது? விருப்பத்தைக் கூறிவிடலாமா என்று துடித்த இதயத்திற்கு மூளை கடிவாளமிட்டது. எல்லாம் சரியாக வரும் நேரம் எதையும் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. மிக நிதானமாக வாகனம் சென்னை நெரிசலில் ஊர்ந்தது. முதல் முறை அந்த நெரிசலுக்கு நன்றி கூறினான்.
அவனை பற்றிக் கூறினான். அவன் படிப்பு.. அவன் மருத்துவத்தில் அடைய நினைக்கும் உயரம் என்று.. அவன் கனவைப் பற்றிப் கூறினான். அவள் கேட்டுக் கொண்டாளா தெரியாது.. ஆனால் அவன் பேசினான்! அவன் மனதை பற்றியும் கூறாமல், அவள் மனதை அறிந்துக்கொள்ளும் நோக்கமில்லாமல்.. அவன் பேசினான்!
எபி வீட்டை அடையவும் பேச்சு தடைப்பட்டது, தனிமை போனது!
உயர்ந்த உள்ளம் உடையவர்கள் என்பதை எல்லா இடத்திலுமே பறைசாற்றினர் அந்த வீட்டினர். மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடுங்குகள் எந்த குறையுமின்றி நடந்தது. பெற்ற மகளைப் போலவே அபி நடத்தபட்டாள். சொந்த பேத்தி போலவே சுங்கு குட்டியை ஏந்திக் கொண்டு சுற்றினார் பால்ராஜ். அலர்விழியை அத்தனை அன்பாய் கவனித்தனர். அவர்கள் உபசரிப்பும் அன்பும் சௌந்தர்யாவை நெகிழச் செய்தது. மகனின் தோழி என்ற ஒற்றை காரணத்திற்காக இப்படியா எடுத்துப் போட்டுச் செய்வார்கள் என்று பார்த்தார். ஏன் யமுனாவுமே அந்த வீட்டு ஆள் போல் தான் சுற்றி வந்தார்.
அவர்களின் கீழ் வேலை செய்யும் பெண்ணின் பெற்றவர்களுக்கு எதற்கு இத்தனை மரியாதை? சிலர் அப்படி தான்… விருந்தோம்பலில் அவர்களை மிஞ்ச ஆள் இருக்காது.
காரிலேயே தூங்கி விட்ட சங்கு வீட்டிற்குள் நுழைந்ததும் கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்தாள். நல்ல மன நிலையில் குழந்தை இருக்க, எந்த தயக்கமும் இல்லாமல் சௌந்தர்யாவிடமும், தியாகுவிடமும் விளையாடினாள். ஒரே இடத்தில் அவளுக்குப் பிடித்த அனைவரும் இருக்க.. வீடே மழலையைக் கொஞ்சுவதிலும்.. மழலையின் சிரிப்பிலும் நிறைந்தது.
“தம்பி தான் உங்க மகனா? சிரிச்ச முகம். நல்ல முக லட்சணம்…”
சுவரில் சிரித்துக் கொண்டிருந்த எபியின் பெரிய புகைப்படத்தில் சௌந்தர்யாவின் பார்வை நிலைத்தது. மாதவன் வயது தான் இருக்கும் என்று தெரிந்தது. திருமணம் முழுவதும் அவன் பொறுப்பில் நடந்ததாய் மாதவன் கூறியிருந்தான். அபியையும் குழந்தையும் அவன் பார்த்துக் கொண்டதாய் அலர் கூறியிருந்தாள். வேளிநாட்டிலிருந்து கொண்டே அவன் படிப்பையும் தொழிலையும் கவனித்துக் கொள்வதாய் மகள் கூறினாள். அவன் குணமும் அவன் திறமையும் பாராட்ட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டார்.
“ஆமா.. எங்களோட ஒரே செல்ல மகன் எபி..”, மகனைப் பற்றிய பெருமையை அள்ளி வீசினார் எஸ்தர்.
ஏற்கனவே அவன் மேல் ஒரு நல்ல எண்ணம் ஏற்பட்டிருக்க.. எஸ்தர் கூறுவதை ஆர்வத்தோடே கேட்டு நின்றார், சௌந்தர்யா.
‘இவன எங்கேயோ பார்த்து இருக்கோமே…’ பிரவீன் மூளை புகைப்படத்திலிருப்பவனை மூளையின் எல்லா முக்கிலும் தேட ஆரம்பித்தது. ஆனால் பிடிபடவில்லை! அலர்விழியின் பார்வை வாஞ்சையாய் அந்த புகைப்படத்தை வருட.. பிரவீனுக்கு எபி என்பவனைப் பிடிக்கவில்லை. ஏனோ அவன் சிரிக்கும் கண்களும், வசீகர முகமும் இவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
ஒரு மணி நேரம் நெருப்பில் அமர்ந்திருந்தான் பிரவீன். ஏதோ ஒரே குடும்பம் போல் அனைவரும் ஒன்றி உறவாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. என்ன கூறி அத்தை, மாமா, அலர்விழியை கிளப்ப..? என்று யோசித்தவனுக்கு நேரம் கூடி வந்தது.
அமர்ந்திருந்த சௌந்தர்யாவின் வலது கன்னம் மெல்லச் சரிய ஆரம்பித்தது. அவரின் வலது பக்க இதழ் மட்டும் கீழே இறங்குவது போல் பிரவீனுக்கு தோன்றியது. சௌந்தர்யாவின் பேச்சு குழறி.. அதை மற்றவர் கவனிக்கும் முன்னே சில வினாடிகளில் எல்லாம் சரியாகப் போனது. அவர் அறியாமலே இடது கை வலது தோளை நீவிவிட்டுக் கொண்டிருந்தது.
மற்றவர்களுக்கு என்ன என்று தெரியவில்லை என்றாலும் அவர்கள் கவனத்தில் அது பதியவில்லை என்றாலும்.. நரம்பியல் நிபுணருக்குத் தெரியாதா சௌந்தர்யாவிற்கு நடப்பது என்னவென்று. எழுந்துக் கொண்டவன், “தப்பா நினைக்காதீங்க. கிளம்பணும். அத்தைக்குத் தல வலி அடிக்கடி வருதுன்னு சொன்னாங்க. இங்க வரும்போது பாக்கணும்ன்னு நினைச்சிருந்தேன். ஒன்னும் மேஜர் இல்லனாலும், வந்திருக்காங்க… அப்பிடியே பார்த்திடலாம்ன்னு நினைக்குறேன். ஈவ்னிங் ஒரு சர்ஜரி இருக்கு.. கொஞ்ச நேரம் தான் எனக்கு ஃப்ரீ டைம் இருக்கு. சோ.. நாங்க கிளம்பறோம். மாதவன் கிளம்பும் போது அலர்விழிய ஹாஸ்டல்ல விட்டிடட்டும்”, என்று அனைவருக்கும் அவனே முடிவைக் கூறி, “வாங்க அத்த. கிளம்பலாம் மாமா” என்று உரிமையோடு கூப்பிட இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை.
இல்லாத தலைவலி எதற்கு?
விசாரித்தவர்களிடம் எதையோ கூறி சமாளித்தனர்.
“உடம்ப பாகத்துக்கோங்க. பத்திரமா போய்ட்டு வாங்க..”, என்று பால்ராஜ், எஸ்தர் வழி அனுப்ப.. மாதவனை மட்டுமல்லாது தன் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டவர்களிடம், “அடுத்த முறை வரும் போது கண்டிப்பா வரோம். அண்ணனோட பாத்து போமா..”, என்று அனைவரிடமும் விடைபெற்று என்ன ஏதென்று புரியாமலே, வருங்கால மாப்பிள்ளையை அனைவர் முன்னும் விட்டுக் கொடுக்க மனமின்றி, மருத்துவனோடு சென்றனர் அலர்விழியை பெற்றவர்கள்.
