அ27-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 27
மூன்று வாரப் பிரிவு இன்றோடு முடிந்துவிடும். காணொளியில் கண்டிருந்தாலோ.. கண்சொக்கி இமை மூடும்வரை ஆசை தீரப் பேசி இருந்தாலோ இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமா தெரியவில்லை. இது இரண்டுமே நடவாது போகவே பிரிவின் தாக்கம் அதிகம் இருவரிடமும்.
Advertisement
“மிஸ். அலர்விலி.. வாட்ஸ் கோயிங் ஆன்?”
வேறு யார்? ஷிவானியேதான்! மீட்டிங்கிங்கில் அமர்ந்து கொண்டு கனவு கண்டால்?
Advertisement
Advertisement
இன்று வருவான். விமான நிலையம் செல்லாம்! என்ற ஆசை எல்லாம் குழி தோண்டி புதைத்தது வேறு இல்லாமல்.. ‘வாட்ஸ் கோயிங்?’ என்ற கேள்வி வேறு! பிசாசு பிசாசு.. மனதிற்குள் திட்டிக் கொண்டாலும், முகம் புன்னகையைப் பூசி, “நோ.. நத்திங்”, என்று கூற கற்றுக் கொடுத்திருந்தது கார்ப்பரேட் உலகம்!
நேரம் சென்று கொண்டே இருந்தது. ஆனால் சந்திப்பு முடிந்த பாடில்லை! வெள்ளி மாலையில் இப்படி எல்லாம் நடக்காத நிறுவனத்தில் இன்று அவளை சோதிக்கவென்றே இழுத்தடித்தது மீட்டிங்! மணி ஏழை தொடவும் பீட்சா, டோனட், பாஸ்தா என்று உணவு வகை மேசையை நிறைத்தது.
Advertisement
மணி ஒன்பதைத் தொடவும் சிலர் கிளம்பிவிட, சிலருக்கு இருந்து முடிக்க வேண்டிய வேலை இருந்தது. தங்கி முடிக்க வேண்டிய ஆட்களில் இவளும் ஒருத்தி! இதெல்லாம் இந்தியாவில் சகஜமாக நடக்கும் ஒன்று. இங்கு இதுவரை அவளுக்கு நடந்ததில்லை! இந்தியர்கள் எங்கு சென்றாலும் இது தான் கதி போலும்!
மணி பத்தரை. ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது. அடுத்து.. ஐந்து நிமிடம் அந்த பாழாய்ப் போன தெருவில் நடக்க வேண்டுமே! அமெரிக்காவோ இந்தியாவோ… பெண்களுக்கு இரவும், தனிமையும், பாதுகாப்பில்லை!
“ஒரு அஞ்சு நிமிஷம். நான் கொண்டு விடுறேன்”, என்ற ‘லீ’ வரும்வரை காத்திருந்து, அரை மணி நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த அலர்விழிக்குள் படிந்து கிடந்த இன்பமெல்லாம் வடிந்து போயிருந்தது.
கதவைத் திறந்து உள்ளே சென்றவளை வரவேற்றது இருட்டு வீடு. படுக்கையறைக்குள் சென்று வெளிச்சத்தை உயிர்ப்பிக்க, சார்ஜில் மறந்து விட்ட சென்ற கைப்பேசி பல்லிளித்தது. மாலை நான்கு மணிக்கு எபி தரையிறங்கி இருப்பான் போலும், ஏகப்பட்ட அழைப்புகள் இருந்தது! ‘தூக்கம் வருது. படுக்க போறேன்’ என்ற செய்தியைப் பார்த்தபின் மனோவை அழைக்க மனம் வரவில்லை.
மனம் முழுவதும் ஏமாற்றம் கொட்டிகிடக்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஷவரின் கீழ் அலுப்பு தீரும் வரை நின்று குளித்துவிட்டு படுத்தவள், இருந்த களைப்பில் உறங்கி போனாள்.
காலை எழுந்ததும் மனோவிடமிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்குமோ என்ற ஆவலோடு கைப்பேசியை எடுத்துப் பார்க்க.. ம்ம்கூம்! ஏமாற்றமே மிச்சம். மீண்டும் அழுகை வருவேனா என்று முட்டிக்கொண்டு வந்தது. இனி என்று மனவோவை பார்க்க? மூன்று நாள் விடுப்பு அடுத்த மாசம் இருப்பதாய் தோன்றவில்லை. காலைக்கடனை முடித்து தனிமையை விரட்டக் கைப்பேசியில் பாடலை அலறவிட்டாள்.
‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே..’
பாடல் ஆரம்பிக்க, ஏனோதானோவென்று அடுக்களைக்குள் நுழைய.. காற்றில் அலை அலையாய் ஆடிக்கொண்டிருந்த கேசமும் பரந்த முதுகும் அவளை வரவேற்றது.
‘மனோ?’ நொடி நேரம் முடியும் முன் ஒடி சென்று பின்னோடு கட்டிக்கொண்டவளுக்கு வார்த்தை பஞ்சமாகிப் போனது.
‘விழி!’ மனதை நிறைத்தவளின் காதல் தீண்டல் ஆயிரம் மிஸ்ட் யூக்களை பூ மழையாய் பொழிய, தவித்த மனம் தவிப்பைக் கூட்டியது.
கையை பிரித்து மெல்ல அதில் இதழ் பதிக்க, பெண்ணவள் உயிர் பெற்றாள்.
“வந்து எழுப்பினா என்ன?”, பின்னிருந்தே நெஞ்சில் செல்ல அடிகள் விழ, “தூங்கிட்டு இருந்த டி.. எழுப்ப மனசு வரல”
“ரொம்ப மிஸ் பண்ணினேன் மனோ..”
முகம் புதைந்திருந்த முதுகுக்குக் கிடைக்கும் முத்தங்கள் முகத்தில் கிடைத்தால் இனிக்குமே! ஆசை கொண்டவன் பெண்ணை முன்னுக்கு இழுக்க, அவன் இழுப்புக்கெல்லாம் இசைந்துகொடுக்கும் அளவிற்கு ஏக்கம் கொண்டவள் முன்னுக்கு வந்தாள்.
“தெரியும் டி”. இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். இருவர் கண்களில் ஏக்கம் கொட்டி கிடந்தது. அடக்கமுடியா உணர்வுகளை இருவர் முகமும் காட்டிக்கொடுத்தது.
கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டவன், “நல்லா தூங்கினியா?” என்று சகஜமாக ஆரம்பித்தான். அவளுக்குத்தான் சகஜ நிலைக்கு வரமுடியவில்லை.
இதழ் ஒற்றல் போதவில்லை. மூன்று வாரத்தின் தவிப்பை அணைக்க அணைப்பும் ஆறுதலும் தேவைப்பட்டது.
“நேத்து செல் ஃபோன வீட்டுலயே விட்டுட்டு போயிட்டியாக்கும்? நல்ல வேள என்னோட ஸ்பேர் சாவி பேக்லயே இருந்துது. இல்ல ஹோட்டல் புக் பண்ணிப் போயிருப்பேன். அவ்வளவு டையர்ட்”
அவன் பேசிக் கொண்டே இருந்தாலும், அவன் கையிலிருந்த கத்தி ஒரு ரிதத்தோடு ஆப்பிளை வெட்டி கொண்டிருந்தது. பெண்ணின் கண்கள் அவன் வெட்டும் அழகில் லயித்து நின்றது.
“எதோ ஸ்டார் ஹோட்டல் செஃப் மாதிரி வெட்டுறீங்க மனோ..”
“மார்க் புண்ணியம்”, முகம் பார்த்துப் புன்னகைத்தவனை அள்ளிக் கொள்ளத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு தானும் சகஜ நிலையிருப்பதாய் காட்டிக் கொண்டாள், மனோவின் விழி.
“நான் நான்..”, கத்தியைக் கையில் வாங்கிக் கொண்டவளுக்கு அந்த ரிதம் வரவில்லை.
“என்ன மனோ நீங்க இப்டி தானே பண்ணினீங்க? எனக்கு வர மாட்டேங்குதே”
“ம்ம்.. ஓரளவுக்கு இப்பிடி தான்! ட்ரை பண்ணினா வரும்.. காய பிடிக்கிற விரல் நுனி வெளியில இருந்தா, ஸ்பீடா வெட்டும் போது கத்தி வெட்டிடும். லைட்டா விரல ஃபோல்ட் பண்ணு.. முட்டி வெளியில வரட்டும்.. இப்போ பொறுமையா கத்தி நுனிய கட்டிங் போர்ட விட்டு லிஃப்ட் பண்ணாம வெட்டு. மென்மையா தொட்டில் ஆட்டுற மாதிரி ”, என்று பின்னோடு நின்று கைபிடித்து பாடம் எடுத்தான்.
அவனளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு வெட்ட ஆரம்பித்தாள். நிமிடங்கள் கரைந்தது. ஒற்றை துண்டு ஆப்பிள் அவளிடம் மாட்டிக் கொண்டு விழித்தது. இருவர் கவனமும் கண்டிப்பாக ஆப்பிளில் இல்லை.
‘பசை ஊறும் இதழும்
பசி ஏறும் விரலும்
இரவு முழித்து
இரையை விரையும்
நேரம் இது
உயிரின் உலையில்
மயிரின் இழையின்
தூரமது’
மீசை வருடிய கன்னம் குறுகுறுத்தது.
“மனோ..”
“ம்ம்..”, மார்போடு அணைத்து பிடித்திருந்தவனுக்கு மனம் கட்டுப்பாட்டில் இல்லை.
“..”
“விழி”
“ம்ம்”, மார்போடு ஒன்றிக் கொண்டவளுக்கு வார்த்தைகள் இல்லை.
அந்த நிமிடம் மிகவும் அழகான நிமிடமாகத் தோன்றியது இருவருக்கும். தன்னவளின் ஸ்பரிசம் உள்ளுக்குள் நெருப்பை அள்ளி தெளித்தது. நெருக்கம் கூடியது. அணைப்பின் வித்தியாசம் பெண்ணிற்கு தெரியாத? தெரிந்தும் விலக மனமில்லை. சூழல் மாறிப்போனது. இதயங்கள் இரண்டும் புல்லட் ரயிலின் வேகம் பிடித்தது. மூன்று வாரத் தவிப்பு, மூன்று யுக தவிப்பாய்.. தாகமாய் மாறிக்கொண்டிருந்தது.
சுவாசம் பெண்ணவள் கன்னம் தீண்ட, கைகளில் அழுத்தம் மாற, ‘மனோ’ என்ற முனங்கலோடு பெண்ணின் கண்கள் மூடியது. தன்னைக் கொன்று கொண்டிருந்த கத்தி ஓரம் சென்று விழவும் ஆப்பிளிற்கு உள்ளுக்குள் குளிர்ந்திருக்க வேண்டும், ஹப்பாடா என்று ஒய்யாரமாய் சரிந்து விழுந்தது.
குளிரைப் பரப்ப ஆரம்பித்திருந்த இலையுதிர் கால காற்றால் தணிக்க முடியா வெப்பம் அங்கு. எரிந்து கொண்டிருந்த அடுப்போ இல்லை அவர்கள் நிலையோ.. அங்கு உஷ்ணம் சற்று அதிகம் தான்!
‘சிறுக சிறுக
இரவை திருடும்
தாரிகையே
விடியும் வரையில்
விரையும் இதயம்
தூரிகையே’
சில நீண்ட முத்தங்களோடு ஏக்கம் முடியும் என்று ஆரம்பிக்க, சத்தமில்லா முத்தங்கள் அவ்வளவு எளிதில் முடியக்கூடியவை இல்லை என்பது புரியும் நிலையைக் கடந்திருந்தனர். அடுத்த பத்து நிமிடங்களில் அடுத்தடுத்த கட்டமென்று கைகளும் உதடும் முன்னேற, அங்கு நடந்ததெல்லாம் மற்றவர் கண்களுக்கு அத்துமீறல்கள். கண்டிப்பாகப் பெரிய சூரியகாந்தி மலர் போதாது.. திரை சீலை கொண்டு மூட வேண்டிய காட்சிகள் அரங்கேற, இருவருக்கும் ஏகாந்தத்திலிருந்து வெளிவர முடியவும் இல்லை. வெளிவர மனமும் இல்லை.
‘விடியாதே இரவே
முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம்
நீள கோரி
காதல் தானே
துடிக்க துடிக்க..’
ஆரம்பித்த பாடல் மட்டும் முடிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அடுப்பிலிருந்த தண்ணீர் கொதிநிலையை அடைந்துகொண்டிருந்தது.
கட்டி வைத்திருந்த கட்டுப்பாடுகள் காற்றில், ‘மனோ.. விழி’ என்ற பிதற்றலோடு பறக்க, மோகத் தீயில் லயித்த நேரம் அடுக்களையில் புகைமூட்டம். கண்டிப்பாக அவர்கள் ஏற்படுத்திய அனலால் இல்லை என்பது திண்ணம்.
கண்ணைக் கரித்து நாசியில் நுழைந்த கருகிய வாசம் கத்தரிக்கோலாக மாறியது! மோகக் கயிறு முதலில் மனோவிற்கு தான் அறுபட்டது. கரிந்து தீய்ந்துபோன பாத்திரம் புகையைக் கிளப்பி விட்டிருக்க, அடுப்பை அணைத்தவன், மெல்ல விழியிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும், இருவருக்குமே அந்த நிமிடத்தை கையாள தெரியவில்லை. விட்ட இடத்தில் தொடர ஆசை. தொடரமுடியா நிலை. தவிப்பு தான்! வேண்டும் தான்! ஆனால்? பச்! தங்கள் நிலையை இருவருமே வெறுத்தனர்.
அவள் கண்கொட்டாமல் அவனையே பார்க்க, மெல்ல அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தவன், கலைந்த முடியை ஒதுக்கி, “நீ வேலைய பார். நான் ரூம்க்கு போறேன் விழி”, என்று மென்று விழுங்கி சென்றவனுக்கு இதயம் முன்பைவிட அதிகமாய் அடித்துக் கொண்டது.
காதலர்களுக்கிடையே இதெல்லாம் கூடாது என்ற எண்ணம் எங்கு எப்படித் தகர்ந்ததென்று தெரியவில்லை மனோவிற்கு. உணர்வுகளின் பிடியிலிருந்து வெளிவர முடியவில்லை. தவிப்பும் தாகமும் தணியாதா? தொட்டால், தொடர்கதையாகிப் போகும் என்பது நிச்சயம்! இனி தனிமையில் அவளோடு இருப்பது எங்குப் போய் முடியுமோ என்ற கேள்வி அவனுக்குள். சுதாரிக்காமல் போயிருந்தால் விபரீதம் நிச்சம் என்பது தெள்ளத் தெளிவு!
வெளியே வெறித்து நின்றவன் கண்கள் திறந்திருந்தாலும், கண்டிப்பாகப் பார்வையில் எதுவும் விழவும் இல்லை… சிந்தனையில் எதுவும் எட்டவும் இல்லை.
காலை உணவருந்த அவன் வருவான் என்று அலர்விழி காத்திருக்க அறைக்குள் சென்றவன் வந்தானில்லை! அரை மணி நேரம் கடந்ததை அவன் அறியாவிட்டாலும், நேரம் நகரத்தான் செய்தது. அவனை வெளியே காணாதவள் அவனறைக்குள் வந்தாள்.
இருபது நிமிடம் முன் வந்து பார்த்தபோது எப்படி நின்றிருந்தானோ அப்படியே நிற்க, பெண்ணிற்குச் சிரிப்பு வந்தது. பின்னோடு அணைத்துக் கொள்ள, அவன் சற்றுமுன் அனுபவித்த இன்பமெல்லாம் அவன் முன் வர.. கூடாது என்ற கசப்பான நினைப்பும் கூடவே வர.. வெறுத்தே போனான்!
“மனோ..”
“ம்ம்…”
“லவ் யூ மனோ..”
“கொல்ற டி”
“நீங்களும் தான் மனோ!”
“வேண்டாம் விழி”, என்றான்.
“ஏன் மனோ? எனக்குப் பசிக்குதே..”, கொஞ்சலாய் மொழிந்தாள்.
கையை பிரித்துவிட்டவன், “வேண்டாம் விழி..”, என்றான் இறங்கிப்போன குரலில்.
அவனைத் திருப்பி, முகம் பார்த்தவள், “உங்க வாழ்க்கைய கெடுத்துட்டு கம்பி நீட்டிட மாட்டேன். பயப்படாதீங்க மனோ.” என்றாள், வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு.
“என்ன? என்ன சொன்ன?”, சரியாகத்தான் கேட்டதா என்ற சந்தேகம் அவனிடம்.
“இதுகெல்லாம் பாப்பா வராதுன்னு சொன்னேன்!”
“வாட்? என்னடீ பேசற?”
“உங்க கற்புக்கு நான் காரெண்டின்னு சொன்னேன். இப்போ வாங்க சாப்பிடலாம் முனிவரே!”
அவனும் சிரித்தான். “போடீ. கொஞ்சம் ஓவர் இதெல்லாம்..”, ஏனோ மனோவிற்கு வெட்கம் வந்தது.
“ம்ம்.. அது முன்னமே தெரிஞ்சிருக்கணும். இப்போ ரொம்ப லேட்! சாப்பிடலாம் வாங்க.. பசிக்குது.”, கைபிடித்து இழுத்துச் சென்றாள்.
“நீ எதுக்கும் தள்ளியே இரு சொல்லிட்டேன். அடுத்த தரம் இப்பிடி பாதியிலயே விட மாட்டேன்..”, மிரட்டலாய் அவன் கண் உருட்ட,
“ஆரம்பிக்கவே இல்ல… பாதியாமே!”, அவள் சலித்துக்கொள்ள.
“வெக்கமே இல்ல டி உனக்கு”, அவன் சிரித்தான்.
“உண்ம தான்! என்ன பண்ணட்டும்?”, சுவரோடு சாய்ந்திருந்தவன் மேல் சாய,
“மனுஷன உயிரோட கொல்ற டீ பட்டு”, என்றான் சிவந்திருந்த இதழ் பார்த்து.
‘தள்ளி நின்று காதல் செய்’ என்ற கோட்பாடெல்லாம் அவள் ஓரப் பார்வையில் பொடிந்து போனது மனோவிற்கு.
நாட்கள் நகர்ந்தது. கருவில் இருக்கும் குழந்தைக்கு மெல்ல மெல்ல ஒவ்வொரு உறுப்பாக தோன்றுமாம். பத்து மதத்தில் முழு உருவம் பெற்று முழுமை பெற்றுவிடும். அவர்கள் காதலும் அப்படி தான்.. மெல்ல மெல்ல முழு உருவம் பெற்றுக் கொண்டிருந்தது. வாரம் தவறாமல் வெள்ளி இரவு வந்துவிடுபவன், திங்கள் விடியற்காலை நேரே அலுவலகம் சென்றுவிடுவான்.
வெளியே சுற்ற நேரம் அதிக கிடைப்பதில்லை இருவருக்கும். சனிக்கிழமையானால், அவனின் ஒரு வாரத் துணியை துவைப்பதிலிருந்து அடுத்த வாரத்திற்கான மாவரைத்து, குழம்பு, கூட்டு வகைகளைச் செய்து, தேதி வாரியாக டப்பாக்களில் போட்டுக் கொடுத்துவிடுவாள். அவன் அதை ஃப்ரீசரில் வைத்து அந்த வாரத்தை ஓட்டிவிடுவான்.
“வேண்டாம் விழி.. ஏன் சிரம படுற? விடு நான் பாத்துக்கிறேன்”, என்று சொல்லிப் பார்த்து அலுத்துப் போனான்.
“எனக்கு தெரியும். உங்க வேலையை பாருங்க!”, என்றுவிடுவாள்.
அவனும் வீட்டைச் சுத்தம் செய்து, அந்த வாரத்திற்கான காய்களை வாங்கி, கழுவி, நறுக்கிக் கொடுத்துவிடுவான். ஒரு வாரத்திற்கான இருவரின் உடையும் அவனே இஸ்திரி போட்டு வைத்துவிட, வார நாட்கள் இருவருக்குமே அவதியின்றி செல்லும்.
சனிக்கிழமை ஸ்பெஷல் சமையல், வீட்டு வேலை, ஞாயிறு அவனோடு தேவாலயம் சென்று அது முடிந்ததும் பிரிட்ஜ்வாட்டரில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அப்படியே அங்கேயே இருக்கும் கேன்டீனில் மதிய உணவை முடித்துவிட்டு வந்துவிடுவார்கள்.
“சர்ச்சுக்கு வா”, என்று அவன் அழைத்ததில்லை. அவளுக்கு அவனோடு போவது பிடித்திருக்கவே, மதம் பெரிய விடயமாக இருக்கவில்லை.
அவன் கோவிலுக்குள் சென்றாலும் வழிபாடுகளில் கலந்துகொள்வதில்லை. மேலே கோவிலுள் ஐந்து நிமிடம் அவளோடு நின்றுவிட்டு கீழே இருக்கும் கேன்டீன் சென்றுவிடுவான். “என்னோடே முழு நேரமும் இரு”, என்று அவளும் கேட்டதில்லை.
ஆக.. மதம், கடவுள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு நடுவே சுவராய் எழும்ப இருவரும் விடவில்லை. உன் நம்பிக்கை உன்னோடு என்றளவில் இருவரும் இருந்துவிட்டனர்.
திருமணமும் ஆகவில்லை. படுக்கையறை ஒன்றாயிருக்கவில்லை என்பதால் 99 விழுக்காடு கணவன் மனைவியாய் மாறியிருந்தனர் இருவரும்.
“என்னங்க..”, அவள் அறையிலிருந்து அழைக்க..
“என்ன டீ..”, அவன் சோஃபாவிலிருந்து எழுந்தானில்லை.
“கூப்பிட்டா வர வேண்டியது தானே… அது என்ன அங்க இருந்தே கேள்வி? வாங்க!”
‘இவ ஒருத்தி.. மனுஷன உக்கார விட மாட்டா! கீழ இருக்க அவ ஃப்ரெண்ட் வீட்டுக்கு போக இந்த மேக்கப் தேவையா இவளுக்கு!’ புலம்பிக் கொண்டே உள்ளே சென்றான்.
முழு அலங்காரத்தில் நின்றிருந்தவள், தலை வாரிக் கொண்டிருந்தாள்.
“என்ன டி?”
“இந்த ப்ளீட்ஸ்ச அடுக்கி, கொஞ்சம் அமுக்கி விடுங்களேன்!”
“இதுக்கு தான் இந்த பட்டுப் புடவை எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன்… சும்மா வேல வாங்கிட்டே இரு.. இப்போ புடவை கட்டியே ஆகணும்ன்னு என்ன இருக்கு?”, புலம்பல் நின்றபாடில்லை என்றாலும் முட்டி போட்டுச் சொன்ன வேலையைச் செய்தான்.
“கடைசி நாள் கொலுங்க! பாயல் ஒரே கலர்ல்ல எங்க எல்லாரையும் புடவ கட்டிட்டு வர சொன்னா.. அது தான்! நல்லா இருக்கேனா?”
“ம்ம் ம்ம்ம்! போதுமா பாரு!”
“பக்கா! என்னங்க, குனிஞ்சா.. இந்த முந்தி முன்ன வந்து விழும்.. சோ இந்த ப்ளோஸ் பின்னாடி.. முந்திய சேத்து வச்சு ஒரு பின்… ப்ளீஸ்..”, அவள் கண் சுருக்கி கெஞ்ச
“குடு… அப்பிடியே உன் சதையோட குத்தி விடுறேன்!”
“ஏன் இவ்வளவு கோபம்?”
“ஒரு மண்ணும் இல்ல.. போடீ”
“சும்மா சொல்லுங்க..”
“பின் குத்த கூப்பிடுறதுக்கு பதிலா புடவ கட்ட கூப்பிடு கோவிச்சுக்க மாட்டேன்”, இளநகை எட்டிப்பார்த்தது.
“நான் என்ன வேண்டாம்ன்னா சொன்னேன்? நான் ரெடி தான். இப்போ கூட நேரம் இருக்கு ஆரம்பிப்போமா?”, அவள் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டே உதட்டுச் சாயத்தைக் கையில் எடுக்க..
“வாய் டி உனக்கு. எப்பவும், கை என் பேச்ச கேட்டு சும்மா இருக்காது.. சொல்லிட்டேன்”
“அம்மாடி.. சாமியார்ட்ட இருந்து என்ன ஒரு மிரட்டல்! க்கும்!”, என்று சாயத்தை உதட்டில் வைக்கவும், அதைப் பிடுங்கி மேசையில் வைத்தவன், இடையோடு கட்டிக் கொண்டு, “அது எதுக்கு?” என்று அவனே சிவக்க வைத்து, “அம்மாக்கு கால் வலி போயிடுச்சு! உன் பாட்டிக்கும் ஓரளவு சரி ஆகிடுச்சு! வீட்டுல இருந்து பேச்ச ஆரம்பிக்கதுக்கு முன்னமே சொல்லிடுறது நல்லது. நான் இன்னைக்கு அம்மா, அப்பாட்ட சொல்ல போறேன் விழி. நீயும் சும்மா காரணம் சொல்லிட்டே இருக்காம வீட்டுல இன்னைக்கு சொல்லு.”
“ம்ம்ம்..”
“என்ன டி ம்ம்? இப்பிடியே பாத்து பாத்து உருகிட்டு இருக்க என்னால் முடியல டி பட்டு. கனவுன்னு ஒண்ண சொன்னோம்.. அது தான் நிறைவேறிடுச்சே… அப்புறம் என்ன விழி? உனக்கு, நாம சேந்து வாழணும்ன்னு ஐடியா இருக்கா இல்லியா?”
எம்பி கன்னத்தில் முத்தம் பதித்தாள். “தள்ளி இருந்தாலும், சேர்ந்து வாழ்ந்துட்டு தான் இருக்கேன் மனோ. மனசார.. சந்தோஷமா ஒவ்வொரு நிமிஷமும் உங்க கூட வாழ்ந்துட்டு இருக்கேன் மனோ.”, என்றாள் மனோவின் விழி!
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று (மகாகவி பாரதியார்)
