Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ32-1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 32

 

பூமியின் சீதோஷனத்திற்கு ஏற்றார் போல் காலங்கள் மாறும். அலர்விழி வாழ்ந்த இடத்தில் வசந்த காலத்தில் துளிர்க்கும் அழகிய இலைகள், இலையுதிர் காலத்தில் விதவிதமான நிறத்தில் பழுத்து விழுந்துவிடும். அங்கு இலையுதிர் காலம் என்பதால் மரங்களைப் பலவகை நிறங்கள் அலங்கரித்திருந்தது.

 



Advertisement

இலைகள் மட்டுமா பலவர்ணத்தில்? மக்களும் பச்சோந்திகளாய் நிறம் மாறுவதால், நல்லவன் யார் கெட்டவன் யார் என்று முகத்தைப் பார்த்தோ தோற்றம் வைத்தோ கண்டுபிடிக்க முடிவதில்லை.

 

முன்தினம் மதியம் படுத்தவள், பதினாறு மணி நேரம் கழித்து காலை கண்விழித்தாள். கண் திறந்தவள் கண்டது தன் முன் நீண்டிருந்த இரு கால் முட்டிகளை. மெத்தையில் சாய்வாய் அமர்ந்திருந்தவனின் முட்டி தொடா ஷாட்ஸ் அணிந்திருந்த கால்கள் என்று புரிந்தது. மெல்ல நகர்ந்து முட்டியில் கன்னம் உரசி கால்களில் முகம் புதைத்தாள்.

Advertisement

 

Advertisement

முட்டிகளின் சொந்தக்காரனிடமிருந்து எந்த வித அசைவும் இல்லை. மூட்டில் இதழ் பதித்து, கன்னம் உரைய படுத்தவாக்கிலேயே பார்வை உயர்த்தி பார்க்க, இமைக்காமல் இவளை தான் பார்த்தமர்ந்திருந்தான் எபி. உணர்வற்ற முகம். பெண்ணிற்கு முன்தின சண்டை நினைவுக்கு வந்தது. கோபம் போலும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

“பொன் மானே கோபம் ஏனோ

Advertisement

ஊடல் என்பது காதலின் கௌரவம் வா

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா…”

 

ம்ம்ஹூம் அவனிடம் அசைவில்லை. “கோபம் போகலையோ சார்க்கு? என்ன பண்ணினா என் செல்ல குட்டிக்குக் கோபம் போகும்?” கேட்டவள் தாராளமாக முட்டிகளுக்கு இதழ் ஒற்றலை வாரி இறைத்தாள். “நம்ம காதல் கூட கௌரவ ஸ்டேட்டஸ்சுக்கு போயிடுச்சு மனோ?” கிளுக்கி சிரித்தாள்.

 

“..”

 

“ப்ச்! போங்கப்பா. ரொம்ப பண்றீங்க! சின்ன பொண்ணு. அதுவும் நேத்தோட பாதி பொண்டாட்டி! புது பொண்டாட்டி மன உளச்சல்ல ஒரு வார்த்தை சொன்னா அதையே பிடிச்சுகிட்டு தொங்குவீங்களா?”

 

புரியாத பார்வை பார்த்தான். அவள் சிரிப்பு அவனுக்குப் புரியவில்லை.

 

“எழுந்து ரொம்ப நேரம் ஆச்சா மனோ? எழுப்ப வேண்டியது தானே… எப்போ படுத்தேன்னு கூட தெரியலை! சரியான கும்பக்கர்ணீ நான். காபி ஆச்சா மனோ? எனக்கு ஒரு கப் எடுத்துட்டு விரலியா? காபி வாசம் காணோம்?”

 

கேட்டுக்கொண்டே போர்வையை அவன் கால்களோடு சேர்த்துப் போர்த்தி, “அந்த டாக்டர் மண்டையன் என்ன மாத்திரை கொடுத்தானோ… தல பாரம் தாங்க முடியல. தாகமா எடுக்குது. உடம்பெல்லாம் வலிக்குது மனோ. கொஞ்ச நேரம் கூட தூங்கட்டா?” பேசிக்கொண்டே அவன் கால்களோடு ஒண்டவும், வெற்று கால் வெற்று மேனியை உரசவும் பட்டென்று போர்வையை விலக்கிப் பார்த்தவள் நடுங்கிப் போனாள். ஆயிரம் வாட் மின்சார தாக்கமும், பதற்றமும் பெண்ணை மிரள வைத்தது. என்ன கோலமிது?

 

கட்டில் தலைமாட்டோடு ஒண்டியவள், போர்வையால் இழுத்து மூடிகொண்ட  பின்னும் உடல் நடுக்கம் நின்றபாடில்லை. எப்படி? ஏன்? எதற்கு? பதில் தெரியா கேள்விகள்! கண்கள் பனிக்க மனோவை பார்த்தாள். எந்தவித  பதட்டமோ, உணர்வோ இல்லாத பார்வை அவனிடம். அவளின் கோலம் கண்டபின்னும் முகத்தைத் திருப்பவும் இல்லை. ஏதும் கூறவும் இல்லை!

“ம..னோ?” திக்கித் திணறியவளுக்குக் கண்ணீர் மூட்டி மோதிக்கொண்டு கொட்டத் தயாரானது. ‘என் மனோவா?’ மனம் நம்ப மறுத்தது.

 

அமானுஷிய மௌனம் மட்டுமே அங்கு. எதற்குமே வாய் திறக்க மாட்டானா? மூளையால் எதையுமே யோசிக்க முடியா வேதனை.

 

“நீ.. நீங்களா மனோ?” இரண்டே இரண்டு வார்த்தைகள். மிக மிகக் கடினமான வார்த்தைகள். இதயம் கீழே விழுந்து தன் துடிப்பை நிறுத்தாதா என்ற வலியை கொடுத்த கேள்வி அது… கேட்டவளுக்கும். கேட்டவனுக்கும்!

 

எதையுமே உணரும் நிலையில் அவனில்லை. அவள் கேள்வியும் புரியவில்லை! ஏன் தன்னை குற்றப் பார்வை பார்க்கிறாள்? என்ன கேள்வியிது? அவனுக்கு உண்மையிலுமே புரியவில்லை. அவள் கண்விழித்தபின் அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்த எதிர்வினை இதல்லவே!

 

மௌனம் சம்மதம் போல் தான் அவன் தோற்றம். எப்படி உணர்வில்லாமல் இவனால் அமர்ந்திருக்க முடிகிறது? அவளுக்கும் சூழ்நிலை புரியவில்லை.

கோபமும் அழுகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வர மூக்கு விடைக்கக் கத்தினாள். “ஆஆஆ…”

 

எச்சில் விழுங்கிப் பார்க்க முடியா கோரக் காட்சியை பார்த்து அமர்ந்திருந்தான். அவளுக்கு மேல் அவன் மனம் கூப்பாடு போட்டது. தாயாய் தகப்பனாய் தோழனாய்… பார்த்துப் பார்த்து தோள்கொடுத்த அவன் செல்ல சிட்டு தொண்டை கிழியக் கதற, ஒன்றுமே செய்ய முடியாதவனாய் அவள் கதறலைப் பார்த்தே அமர்ந்திருந்தான்.

 

“நீங்களா மனோ?”

 

‘நானா?’ என்ன கேட்கிறாள் இவள்? நம்பாத பார்வை பார்த்தான்! சத்தியமாகக் கேள்வி புரியவில்லை. இந்த அறைக்குள் நுழைந்தது முதலே அவனுக்குத் தான் ஒன்றுமே புரியவில்லையே.. இது புரிவதற்கு!

 

“நீங்களா மனோ?” விக்கி வெடித்து, கோபத்தில் அலறலாய்.. வலியில் கதறலாய் அவள்.

 

அவள் கண்களும், அதில் தெரிந்த வலியும் மட்டுமே அவன் பார்வையில். மௌனமாய் பார்த்தமர்ந்திருந்தவன் மனம் அமைதியில்லாமல் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலைக்கு, காக்காமல் போன தான் தானே காரணம்!

 

‘ம்ம்ம்’ என்ற தலையசைப்பு மட்டுமே பதிலாய் வந்தது.

 

“நேத்து ரொம்ப பேசிட்டேன். தப்பு தான். சாரி கூட கேட்டேனே மனோ” உதடு நடுங்கியது. மனோ யார்? அவன் எப்படிப்பட்டவன் எல்லாம் இரண்டாவதாக போனது. அவள் நிலை… அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. பெண்ணோ ஆணோ.. இது சகிக்கமுடியாத வேதனை தான்!

 

“நேத்து பேசினதுக்கா மனோ?” கேட்டவளுக்கு வாய் திக்கித் திணறியது.

 

நீண்ட மௌனம். இருவருக்கும் பிடிக்காமல் நத்தை போல் நகர்ந்த நொடிகள் அவை.

 

“கோபம் போச்சா மனோ?” மூக்கிலும் வாயிலும் ஒழுகிய நீரைத் துடைக்கத் தோன்றாதவளாய் கேட்க, அவனிடமிருந்த எந்த பதிலும் இல்லை. கோபம் எல்லையை கடக்க, மார்பைச் சுற்றிய போர்வையோடே “ஏன் மனோ இப்பிடி? அப்பிடி என்ன கோவம்?” வெறுமனே கேட்க ஆரம்பித்தவள், கோபத்தோடு அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

 

“என் மேல என்ன டா உனக்கு அப்பிடி கோபம்? அசிங்கப் படுத்தி வச்சிருக்க என்னை! ஏன் மனோ… யோசிக்காம ஒரு வார்த்தை பொறுக்கி மாதிரின்னு சொன்னா… பொறுக்கி என்ன பண்ணுவான்னு செஞ்சு காட்டியிருக்கியா?”

 

அடி வாங்கியும் கற்சிலை என அமர்ந்திருந்தவன் எந்த வித உணர்வையும் முகத்தில் காட்டினான் இல்லை. அவள் கோபம் தீரும் மட்டும், அவளை அணைத்த மார்பிலும் தோளிலும் அடிவாங்கிக் கொண்டான்.

 

“நான் உன்னோட விழி இல்லையா மனோ…” குனிந்து அமர்ந்து கதற, அசைவற்று அமர்ந்தே இருந்தான். என்ன செய்யவேண்டும் என்று ஒன்றுமே புரியவில்லை. உண்மை தெரிந்தவனுக்கு வேதனை அதிகமாயிற்றே. நடந்த எதுவுமே விழிக்கு தெரியவில்லை! அவளுக்கு உண்மை தெரிந்தால்? ‘விழி..’ கண்கள் ஏகத்திற்கும் பனித்தது. பிரவீன் மேல் கொலைவெறி. தன் மேல் தீரா ஆத்திரம்! எல்லாம் தன்னால் தானே!

 

இது நடக்கும் வரை உணர்வற்று உறங்கினேனே என்ற கேவலமான உணர்வு அவளைக் கொன்று போட அந்த ஆத்திரத்தையும் அவன் மேல் காட்டினாள். “நான்… நான் உனக்கு பொண்டாட்டியாவே இருந்தாலும் இப்பிடி செய்யலாமா மனோ… எங்கிட்ட எப்பிடி மனசு வந்துது?”

 

அவனிடமிருந்து எந்த விதப் பதிலோ உணர்வோ இல்லை.

 

“ப்ச்!” உடலைச் சுற்றியிருந்த போர்வையோடே கட்டிலை விட்டு இறங்கியவளுக்குச் சுறுக்கென்று வலி. முதலில் புரியவில்லை. இரண்டடி எடுத்து வைத்தவள் “ஸ்ஸ்ஸ்ஆஆஆ” வலியில் முகம் சுருங்க  நின்றுவிட்டாள்.

 

தலை வலிக்கான காரணம் தெரியும்! ஆனால் இந்த வலி? வலிக்கான காரணம் கண்டுபிடிக்கப் பிடிக்கவில்லை. நடக்க முயன்று தோற்றாள். கை கால் நடுங்க அழ ஆரம்பித்தாள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் மனோவா? அவனால் அவளை காயபடுத்த முடியுமா? விசும்பல் கட்டுபாடில்லாமல் வர, பெண் துவண்டு போனாள்.

 

முதுகைக் காட்டி நின்றிருந்தவளைப் பார்த்தே அமர்ந்திருந்தான். எதுவும் பேசும் மனநிலையில் அவனில்லை. எது நடந்திருக்கக் கூடாது என்று வேண்டினானோ.. அது தான் நடந்தேறியுள்ளது! உடையோடு அத்துமீறல் நிற்கவில்லை என்பது தெரிய செத்தே போனான். உள்ளுக்குள் பிசைந்து வலிக்கக் கதறக் கூட முடியாதவனாய் உள்ளுக்குள் உடைந்து அணுஅணுவாய் மாண்டுகொண்டிருந்தான்.

 

அவனால் தானே தன்னவள் திராணியற்று நிற்கமுடியாமல் நிற்கவேண்டும்! அவனால்.. அவனின் மட்டுப்படாத கோபத்தால் தானே இன்று திராணியற்று நிற்கமுடியாமல் நிற்கிறாள்? மனம் வலித்தது. ‘ஓ’ என்று கத்தி கதற துடித்த மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் தளர்ந்துபோனான்.

 

யார் மேலோ ஏற்பட்ட கோபத்தை தன் இணையிடம் காட்டியிருக்கக் கூடாது. கோபப்பட்டு வீட்டைவிட்டுப் போனதிற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இப்படி எல்லாம் கூட ஒருவன் செய்வானா? அதுவும் அவனுக்காகத் தாங்கிப் பேசிய தன் விழியை? தாங்கத்தான் முடியவில்லை மனோவால். போராடியதற்கான அறிகுறி இல்லை. அவளுக்கு எதுவுமே நினைவில்லை என்பது வரமா சாபமா? ‘விழி..’ நெஞ்சை அடைத்தது.

 

ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்று தெரியாமலா கூறினார்கள்! தன் மேல் தனக்குக் கோபம் வருமா? பின் விழி மேல் எப்படி கோபம் வரலாம்? கோபம் வந்தால் வீட்டை விட்டுப் போகலாமா? தலைக் கனத்தது.  தலையை எங்கேனும் இடித்துக் கொள்ளலாம் போல் தோன்றியது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!