Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ31-1- Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 33_1

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம்

என்பதை உணரும்போது



Advertisement

சிலபேர்

தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

நிறையப்பேர்

Advertisement

காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

Advertisement

–கண்ணதாசன்

Advertisement

காலை சூரிய கதிர்கள் முகம் வருட ஜன்னல் திறந்து குளிர் காற்றை உள்ளிழுத்து கொண்டாள் அலர்விழி. உடல் அசௌகரியமும் மன உளைச்சலும் காணாமல் போயிருக்க, வானும் மண்ணும், புல்லும் பூண்டும் கூட ஒருவன் நினைவால் அழகாகத் தோன்றியது இன்று. மோதிரத்தைப் பார்த்தாள். தான் மனோவின் மனைவியா?

 

“என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக்கொள், நீ எனக்கு வேண்டும்” என்று பார்த்த அன்றே சகுந்தலையைப் பார்த்து துசுயந்தன் (துஷ்யந்தன்) உரைத்தானாம். கணையாழியிட்டு (முத்திரை மோதிரம்)  கந்தர்வ மணம் புரிந்தானாம். ஆணும் பெண்ணும் ஓர் உயிராய் மாறினார்களாம்.

 

இவர்களுக்கு நடந்ததும் கந்தர்வ மணமோ? இது அந்த வகையிலும் சேராதே! நிலம் காற்று வானம் என்று இயற்கை மட்டும் சாட்சியாக நடந்தால் அது கந்தர்வ மணம். இவர்களுக்குத்தான் சுவாசிக்கும் மனித சாட்சிகள் இருந்தார்களே!

 

மனம் ஒன்றி, உடலும் ஒன்றியபின் மனோவின் மனைவி தானே! மெல்ல மோதிரத்தில் இதழ் பதித்தவளின் உதடுகள், “லவ் யூ மனோ” என்றன. நடந்தது இயற்கை விதிமுறையைத் தாண்டியது இல்லையே… மனதால் ஒன்றி ஓருயிராய் உணரும் ஆணும் பெண்ணும் ஓரே வீட்டிலிருந்தால் இதெல்லாம் நடக்கும் என்பதால் தானே திருமணம் முன் இதையெல்லாம் நம் சமூகம் அனுமதிப்பதில்லை. அவன் ஆண் இவள் பெண்! மனம் முழுவதும் மனோ கணவன் ஸ்தானத்தில் வீற்றிருக்க, அலர்விழிக்கு தவறாகத் தோன்றவில்லை.

 

ஏதோ நடந்துவிட்டது தான்! ஆனால் அதற்குப் பின் மனோவின் வலி நிறைந்த முகம்? தவறியதாக எண்ணிவிட்டானோ? தனக்கு ஏன் தவறாகவோ வேதனையாகவோ தோன்றவில்லை? ‘மனோ கூறுவது போல் வெட்கம் கெட்டவளோ நான்?’ மெல்லச் சிரித்துக் கொண்டாள். ஏனோ இணைந்த இரு இதயங்களை எளிதில் பிரிப்பவர்கள், உடல் இணைந்த இருவரைப் பிரிக்க நினைப்பதில்லை! இனி யாரும் அவர்களை பிரிக்க முடியாதே! நேற்று இடிந்து போனதாகத் தோன்றிய வானம் இன்று வண்ணமயமாகத் தோன்றியது. அதே வானில் கனவு கோட்டை கட்டினாள், பெண்!

 

எபியை காணச் சென்றாள். யோசனையோடே ஜன்னல் அருகே கைக்கட்டி சூனியத்தை வெறித்து நின்றிருந்தான். முன்தினம் காலையில் அவன் பேசிய ஒரு சில வார்த்தைகள் தான் அதன் பின் இருவருக்கும் பேச்சில்லை. வேளை தவறாமல் ஏதேனும் உண்ண எடுத்துச் செல்வான். மெத்தையோரம் அமைதியாக அமர்ந்திருப்பான். அவ்வப்போது இழுத்து பெருமூச்சு விடுவான். இதோ இன்றும், நேற்று போலவே கலக்கம் கலையா முகம்.

 

சத்தமெழுப்பாமல் வந்த வழியே அவன் தனிமையைக் கெடுக்காமல் சென்றுவிட்டாள். குளித்து வந்தவள் அடுக்களைக்குள் சென்றாள். முன் தினம் மூன்று வேளையுமே வெளி சாப்பாடு என்பதால் அடுக்களை வெறிச்சோடி கிடந்தது.

 

மேடையில் கிடந்த சில காலி பொட்டலங்களையும் உணவு டப்பாக்களையும் குப்பை தொட்டியில் போட, பார்வை நிலைத்தோ உள்ளே கிடந்த உடைந்த கண்ணாடி கோப்பையின் மேல். சிறிது நேரம் பிடித்தது அது பிரவீனின் வேலை என்று உணர. கூடவே கிடந்த வட்கா பாட்டிலும் கண்ணில் பட, அதைக் கையில் எடுத்தாள். அருந்திய எலுமிச்சை சோடா நினைவில் வரவும் கூகிளிடம் தஞ்சம் புகுந்தாள்! நினைவு பிழறியதின் காரணம் தெரிந்தது!

 

சொந்த வீடே என்றாலும், விருந்தினர் இருக்கும் வேளை, ஆதரவில்லா பானத்திற்கு ஆதரவு தரக் கூடாது. நல்ல வேளை அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை! – பெண்ணின் எண்ணவோட்டம்.

 

காபியோடு எபி அறைக்குள் செல்ல, நாற்பது நிமிடங்கள் முன் எப்படி நின்றிருந்தானோ அதே போல் நின்றிருக்க, மழிக்கப்படாத இரண்டு நாள் தாடியும் அவன் சோக முகமும் பார்க்கச் சகிக்கவில்லை பெண்ணிற்கு.

 

‘நல்லா இருந்த மனுஷனை என்னடி பண்ணி வச்ச? கற்பு போன சோகத்தை விட்டு மனுஷன் வெளிவர மாட்டார் போலவே..’ இவனை எப்படிச் சரி செய்ய என்ற யோசனையோடே, “காபி மனோ” என்று காபியை நீட்ட, பார்வை பெண்ணின் மேல் விழுந்தது. பளிச்சென்றிருந்தவள் பளிச்சென்று சிரித்தாள்.

 

விழியைப் பார்த்தவன் நெஞ்சு அடைக்க, தொண்டை ஏறி இறங்கியது. பெண்ணின் கன்னம் வருடி, தலையை வருட, “மனோ காபி” என்றாள், இன்முகமாய்.

 

இருவரும் வெளியே பார்த்துக்கொண்டே கையிலிருந்த காபியை அருந்த எங்கிருந்தோ கார்டினல் பறவையின் இசை காதில் ஒலித்தது. சென்ற முறை இந்த பறவையைப் பார்த்த நாளுக்கு அலர்விழியின் எண்ணங்கள் ஓட, காலி கோப்பையை மேசையில் வைத்தவள் அவன் மார்பில் கன்னம் வைத்து கட்டிக்கொண்டாள்.

 

அண்ணாந்து முகம் பார்த்தவளை தான் அவனும் பார்த்து நின்றான். “தெரியுமா மனோ.. முன்னகாலத்துல, இவங்க ரெண்டு பேருக்கும் திருமணம்ன்னு பேசி முடிச்ச பிறகு, அந்த பையன் செத்துபோயிட்டா, அவ தன்ன ஒரு விதைவையாவே நினைச்சுப்பாளாம். அது அந்த காலத்து தமிழ் பொண்ணுங்க பண்பாடு மட்டுமில்லை மனோ. என்னுதும்! உங்கள மனசளவுல ஏத்துக்காம போனா உங்க கூட இப்பிடி ஒட்டிக்கிட்டு இருக்க மாட்டேன். தம்பதிங்கனா, வாழ்க்யோட இன்ப துனபம்ன்னு எல்லாத்துலயேயும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தன் தோள் கொடுக்கிறதும் மனம் ஒன்றி வாழ்றதும் தான். அப்படி பாத்தா நாலு வருஷம் முன்னமே நாம மனம் ஒத்த தம்பதிங்க தான். என்ன தாம்பத்தியம் மட்டும் நடக்காம இருந்தது!”

 

அவன், அவள் கண்களையே பார்த்து நிற்க, மெல்லிய புன்னகையோடே, “இப்போ அந்த குறையும் போச்சு” என்று அவனிடமிருந்து விலகியவள் மனமோ அவனோடே ஒட்டியே நின்றது.

 

“ரொம்ப சாரி மனோ. நடந்தது எதுவுமே எனக்கு நினைவில்ல. அந்த மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு லெமன் சோடான்னு நினைச்சு குடிச்சது வாட்காவா போச்சு!”

 

“வாட்கா? நம்ம வீட்டுல?”

 

“ம்ம்ம்.. அந்த ஆள் குடிப்பான் போல! கொஞ்ச நேரம் ஸ்டெடியா அவன் கூட சண்டை கூட போட்டேன்.  அதுக்கப்புறம் எதுவுமே நினைவில்ல. நீங்க வந்தது கூட தெரியல மனோ.

 

என் விருப்பம் இல்லாம நீங்க என்ன தொட்டிருக்க மாட்டீங்கன்னு தெரியும் மனோ. நீங்களா எதையும் ஆரம்பிச்சும் இருக்க மாட்டீங்கன்னும் தெரியும் மனோ. எல்லாத்துக்கும் நானே காரணமா இருந்துட்டு உங்கள பேசிட்டேன். அது திடீர் அதிர்ச்சியில, பயத்தில பேசினது மனோ. பெருசு பண்ணாதீங்கப்பா. தெரியும்! இதயே அடிக்கடி செய்றேன்னு! ரொம்ப சாரி மனோ… இது தான் கடைசி மனோ. இனிமேல் நான் இப்பிடி உங்கட்ட பேசவே மாட்டேன் மனோ.”

 

தலை வருடிக்கொண்டே நின்றவனிடமிருந்து “ச்சு…” மட்டுமே வந்தது.

 

“என்ன மனோ? ரெண்டு நாளா ஷேவ் கூட பண்ணாம எப்பிடியோ போல இருக்கீங்க? நமக்குள்ள தானே மனோ! என்ன கொஞ்சம் முன்ன நடந்திடுச்சு!”

 

“ம்ம்”

 

“என்னை பிடிக்கலியா மனோ? உங்க முகம் பாக்கவே பயமா இருக்குப்பா. என்னை அறியாம நடந்துன்னு சொல்றேனே”

 

இழுத்து அணைத்தவனை முகம் உயர்த்தி பார்த்து நின்றவள் கண்களில் இதழ் பதித்தான். கண்கள் நான்கும் மோதி நிற்க, “லவ் யூ விழி” என்றான்.

 

மெல்லச் சிரித்தவள், “அடப்பாவி. எத்தன முறை ஒத்த லவ் யூ சொல்லுன்னு கேட்டிருப்பேன்! அத எதுக்கு சொல்லணும்ன்னு கேட்டுட்டு… இப்போ மேட்டர் முடிஞ்ச பிறகு தான் லவ் யூ வருது. சரியான ஆள் தான் நீங்க… கேடி பையன்” விடாமல் உளறிக்கொண்டே இருந்த உதடுகளுக்குத் தண்டனை கொடுத்தான். பெண்ணின் கண்கள் சொருகி, அவன் கையில் அவள் விழும் வரை தண்டனை நீண்டது.

 

ஒற்றை முத்தத்தோடு அவளை அவனுக்குள் புதைக்கப் பார்த்தான். உப்பு கரிக்கவும் அலர்விழி கண்களைத் திறக்க, கட்டுப்படுத்த முடியாமல் மனோ அழ, பதறிப் போனாள். “மனோ… ஏன் மனோ? என்ன ஆச்சு மனோ?”

 

“ம்ம்கூம்..” என்று அணைத்துக் கொண்டவன் “லவ் யூ டி” என்று மீண்டும் மீண்டும் கூறினானே ஒழிய வேறொன்றும் கூறவில்லை.

 

பெண்கள் ஏவுகணையைப் பறக்க விட்டாலும், போர் விமானத்தைப் பறக்க விட்டாலும், இன்றும் இனப்பெருக்கத்தின் தலைவனின் வித்தை அடைகாக்கும் பெட்டகமாகவே ‘சில படித்த மேதாவிகளும்’ பெண்களைப் பார்க்கிறனர்.

 

நேற்று வரை வீட்டுக்குள் புதைத்தான். அவன் காலடியில் காத்திருக்கும் செருப்பாய் வனைந்தான், கணவனையும் பிள்ளைகளையும் பேணிகாப்பதில் மட்டுமே பெண்ணின் வாழ்நாள் பயன் இருப்பதாக அவள் மூளையில் ஏற்றி வைக்க முயன்றான். பல நேரம் அதில் வெற்றியும் பெற்றான்.

 

கற்பென்று அவளுக்கு மட்டுமே ஒன்றைக் கண்டுபிடித்து, அதை அவளுக்கு போதித்து, அதைக் கெடுக்கும் வித்தையையும் கற்றவன், அவன் கைப்பாவையாகப் பெண்ணை உள்ளங்கையில் அடக்கிக்கொள்ள, பெண்ணின் குணங்களை இப்படி தான் இருக்கவேண்டும் என்று அவன் விருப்பம் போல் பெண்ணை வடிவமைத்தான்!

 

காதல் கொண்ட இதயங்களால் மட்டுமே இதை தாண்டி சிந்திக்க முடிகிறது. ஆணும் பெண்ணும் சமமாக மாறிப்போவது அவர்கள் பார்வையில் மட்டுமே. பேரன்பு இருக்கும்வரை பாலியல் கொடுமைகள் கொண்டு பெண்ணை அடக்க முடியாது என்பது திண்ணம்.

 

இந்த கண்மண் தெரியாத, உலக கோட்பாடுகளைத் தகர்க்கும் காதல் இன்று நேற்றில்லை… அது உள்ளது காவிய காலம் முதலே. காதல் மனைவிக்கு மேகத்தைத் தூதுவிட்ட காலத்திற்கு முன்னமே உள்ளது இந்த காதல். திருவள்ளுவனும் ஏழு வார்த்தை குறள்களுக்குள் அடக்க முயன்றான், அடங்க மறுத்த காதலை.

 

‘தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்! ரோம் சாம்ராஜ்ஜியத்தின் தோரண வளையம் குப்புற வீழட்டும்! என் வசிப்புத் தளம் இதுதான்!’ என்று கிளியோபட்டராவிடம் உருகிக் கிடந்தான் மார்க் ஆண்டனி. கிளியோபட்டரா இல்லாத உலகத்தை விட வாளுக்கு இறையாவதை விரும்பி உயிர்நீத்தான் அந்த காதல் பித்தன்.

 

‘காதல் மரணத்தைப் போல் வலியது’ என்ற ஒரு கிரேக்கக் கூற்றுண்டு! அப்படி தான் மனோவா காதலும் வலியதாக இருக்கவேண்டும். அதனால் தான் அலர்விழி மீண்டபின்னும் அவனால் மூச்சுவிடக் கூட முடியவில்லை. நெஞ்சு வலி தாளமுடியவில்லை. தன்னால் தான் என்ற அவசியமற்ற குற்ற உணர்வு அவனைக் கொல்ல, அந்த வலியை எப்படி போக்குவதென்று மனோவிற்கு தெரியவில்லை.

 

உண்மை தெரிய நேர்ந்தால் என்னாவாளோ… இந்த சிரிப்பு மறைந்து போகுமோ? உள்ளுக்குள் பிசைந்தது. இணையிடம் உண்மை மறைப்பது சரி தானா? அதுவும் தெரியவில்லை. கிறுக்குப் பிடித்துவிடும் போல் தோன்றியது.

 

“என்ன மனோ? நான் தான் கல்யாணத்துக்கு முன்ன இப்பிடி ஆகிடுச்சேன்னு கவல படணும். இங்க என்னடான்னா.. நான் தான் உங்களை ஆறுதல் படுத்த வேண்டியிருக்கு! ப்ளீஸ் மனோ. நமக்குள்ள தானே மனோ. ஃபீல் பண்ணாதீங்கப்பா!”

 

அவளிடம் இருந்த திடம் ஏன் அவனிடம் இல்லை? மனோவோடான கூடல் என்ற எண்ணத்திலான திடம் அது. உண்மை தெரியும் வேளை மணல் கோபுரம் உடைந்து போகும் வாய்ப்புகள் அதிகம்!

 

“என்னை வேண்டாம்ன்னு சொல்லிட மாட்டியே விழி?” குரல் ஏகத்திற்கும் உடைந்து போனது.

 

“ஐயோ… நான் பேச வேண்டிய டையலாக் எல்லாம் நீங்க பேசறீங்க! எல்லாம் முடிஞ்ச பிறகு விடுவேனா? ‘தொட்டவன் தான் புருஷன்’ பண்பாடுல வளந்தவளாக்கும்! சோ… ஏமாத்தாம கல்யாணம் பண்ணிக்கிறேன். இப்போ சிரிக்கிறது?”

 

அவனிடம் பதிலில்லை. புன்னகைக்க முயன்று தோன்றான். அவன் கண்கள் மீண்டும் உடைபெடுத்துவிடுமோ என்றிருந்தது. நடந்த எதுவுமே தெரியாமல் நிற்பவளிடம் என்னவென்று கூறுவான்?

 

“எனக்கு உங்க மேல கொள்ள இஷ்டம். அது தான் போதையில கசமுசா ஆகிடுச்சு! நான் கெட்ட பொண்ணெல்லாம் இல்ல மனோ.” அருகில் நின்று சட்டை பொத்தானைத் திருவி கொண்டிருந்தவளை அணைத்துக் கொண்டான். நடுங்கிய உதட்டை உச்சந்தலையில் பதித்தவனால், ‘தான் இயல்பாக இருப்பதாய்’ காட்டிக் கொள்ள முடியவில்லை.

 

அணைப்பிலிருந்து வெளிவர விருப்பமில்லாது, “ஏன் மனோ… இவ்வளவு வருத்த படுறீங்க? ரொம்ப பண்ணிட்டேனா? எனக்கு ஒன்னும் ஞாபகமில்ல மனோ. நிதானமில்லாத போதையில இருந்த பொண்ணுகூட இருந்துட்டோமேன்னு ஃபீல் பண்றீங்களா? இல்ல, இந்த கெட்ட பொண்ண போய் லவ் பண்ணி தொலச்சுட்டேனேன்னு ஃபீல் பண்றீங்களா? எல்லாம் பண்ணிட்டு பழியை மட்டும் உங்க மேல போட்டுடேனேன்னு வருத்தமா?”

 

“ச்சு… என்ன பேச்சிது?” குரம் கரகரக்க மெல்லக் கனைத்துக் கொண்டான்.

 

“பின்ன என்ன… நேத்துல இருந்து உங்கள நான் ஏமாத்திட்ட மாதிரி முகத்தை தொங்கவிட்டுட்டு நின்னா என்ன அர்த்தமாம்? என்னவோ நடந்து போச்சு. நமக்குள்ள தானே மனோ… ஃப்ரீயா விடுங்க மனோ. அது தான் ஊருக்குப் போனதும் கல்யாணம் ஆகிடுமே. அப்பிடி எல்லாம் உங்கள விட்டுட்டு ஓடிட மாட்டேன் பா…”

 

“விழி”

 

“ம்ம்ம்”

 

“எனக்கு ஒரு சத்தியம் பண்ணுவியா?”

 

“சொல்லுங்கப்பா”

 

“இனி மேல் இத பத்தி நீ நினைக்கவும் கூடாது. பேசவும் கூடாது. எனக்காக செய்வியா?”

 

ஏன் இவனுக்கு இவ்வளவு வலி என்று புரியவில்லை என்றாலும் சத்தியம் செய்தாள். “சத்தியமா எனக்கு நடந்த எதுவுமே நினைவில இல்ல. நினைவில இல்லாததை நினைக்கவும் மாட்டேன். அதைப் பத்தி பேசவும் மாட்டேன்”

 

சத்தியம் செய்த உள்ளங்கைக்குள் இதழை அழுத்திக் கொண்டிருந்தவனும் உள்ளுக்குள் சத்தியம் செய்துகொண்டான். பிரவீனை சும்மா விடுவதில்லை என்று.

 

அன்றைய தினம் இருவரும் விடுப்பெடுத்திருக்க, நாள் மெல்ல நகர்ந்தது. காலை உணவு முடியவும், “வா ஒரு சேஞ்சுக்கு அட்லாண்டிக் சிட்டி வரைக்கும் ட்ரைவ் போயிட்டு வருவோம்” என்று வெளியே அழைத்துச் சென்றான். சுமார் நூறு மைல் தொலைவிலிருந்த கடற்கரையில் கால்வலிக்கும் வரை சுற்றி திரிந்தனர். அவள் சிரிப்பிலும் அட்டகாசத்திலும் அவன் மனமும் லேசானது.

 

“மனோ.. ஒண்ணு சொல்லட்டா?”

 

என்ன டி கேள்வி இது புதுசா? சொல்லு”

 

“அந்த பிரவீன் வீட்டுல இருந்து தான் பொண்ணு கேட்டிருக்காங்க ப்பா”

 

“யார் சொன்னா?”

 

“அவன் தான்! நீங்க போன பிறகு எனக்கும் அவனுக்கும் சண்டை வந்திடுச்சுன்னு சொன்னேனே. வாய ரொம்ப கிளறினான். பொறுமை போயிடுச்சு! வெளியில போன்னு சொல்லவும் அவன் தான் சொன்னான் மனோ. இத்தன நாளா பேசி பழகியிருக்கான்… வாய் திறந்தானா பாருங்கேளேன். இத்தனைக்கும் அவன் கிட்ட உங்கள விரும்பறதாவும் உங்கள தான் கல்யாணம் பண்ண போறாதாவும் சொன்னேன்.”

 

“ம்ம்”

 

“என்ன ஆனாலும் கல்யாணம் பண்ணாம விடமாட்டேங்கிற மாதிரி சவாலா பேசினான் மனோ. கடுப்பாகிடுச்சு! போடான்னுட்டேன்! அவன் சண்டை போடுவான்னு நினைச்சேன் மனோ. ஆனா புண்ணியவான் இருந்த தல வலிய அதிக படுத்தாம அமைதியா போயிட்டான்.”

 

பற்களைக் கடித்தான். அமைதியாகவா போனான்? ப்ச்!

 

“போய் சேர்ந்துட்டேன்னு மெசேஜ் அனுப்பி இருக்கான் மனோ. ‘நைஸ் எக்ஸ்பிரியன்ஸ் வித் யூ. த்தாங்கஸ்’ன்னு ஒரு இத்துப்போன மெசேஜ் இன்னைக்கு வந்திருக்கு அதுகிட்ட இருந்து. சரியான இம்சை! யார் இவனை கட்டிகிட்டு அவஸ்தைப் பட போறாளோ? ஏன் மனோ… நீங்க எப்போ வந்தீங்க? உடனே வந்துட்டீங்கைல்ல?”

 

‘நைஸ் எக்ஸ்பிரியன்ஸாமா’ கொலை வெறி ஏற்பட்டாலும் காட்டிக் கொள்ளவில்லை. “ம் ம்ம்… பசிக்குது சாப்பிட போலாம்” என்று பேச்சை மாற்றினான்.

 

மனோவிற்கு ஒன்று புரிந்தது. பிரவீன் காதல்வயபட்டோ, ஆசையை அடக்க வழி தெரியாமலோ செய்த காரியமல்ல இது. விழியை அடைய அவன் எடுத்துக் கொண்ட குறுக்கு வழி. கண்டிப்பாக விழியோ அவள் வீட்டிலோ ஒத்துக்கொள்ளாது போனால், இதைக் கண்டிப்பாக வெளியில் கூறும் வாய்ப்புகள் அதிகம்.இயல்புக்கு திரும்பியவன் மீண்டும் யோசனைக்குள் இறங்கினான்.

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!