Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இனிது இனிது அத்தியாயம் 2.2

ஓவியா வீட்டு மொட்டை மாடி,

 

“பத்து டேங்கர் லாரி ஒன்னா ஏறிருந்தா கூட உடம்பு இம்புட்டு பங்க்ச்சர் ஆகியிருக்காது போல, கொலைகாரப் பாவிங்க பெத்த புள்ளையை அடிக்கிற மாதிரியா அடிக்கிறானுங்க விட்டா பாடை கட்டி அனுப்பிருவாங்க போல… ஷ் எந்த அம்மே டங்குவாரெல்லாம் எங்கப்பன் பழைய ட்ரௌஸர் மாதிரி டர்ன்னு கிழிஞ்சு போச்சே” என மேடி ஓயாமல் வலியில் புலம்பிக் கொண்டே இருக்க,

 



Advertisement

அதைக் கண்டு எரிச்சலான தான்வி , “கொஞ்ச நேரம் உன் வாயைத் தான் மூடேன் இருக்க கடுப்புல மூட்டைப்புச்சியை அரைச்சு மூலிகை ஜூஸ்ன்னு மூக்குல ஊத்தி விட்டுறுவேன் எருமை” எனத் திட்ட,

 

“ஏன் பேசமாட்ட? என் உயிர் நண்பியாச்சேன்னு உங்க நொண்ணன் உனைய மிதிச்சதெல்லாம் சந்துல புகுந்த எலி மாதிரி புகுந்து அதை என் முதுகுல வாங்கிகிட்டேன்ல நீ இன்னமும் பேசுவ… கிளிக்கு மூக்கு முளைத்திடுத்து அதான் உயிர் கொடுத்த நண்பனையே முள் போல அந்த மூக்கால குத்திடுத்து” என சிவாஜி பாணியில் பேச, அதில் மேலும் கடுப்பான தான்வி அவன் முதுகிலே நாலு போடு போட்டாள்.

Advertisement

 

Advertisement

“ஸ்ஸ்.. வலிக்கிதுடி எருமை உங்கொண்ணன் மிக்ஸி இல்லாமையே மிதிச்சு சட்னி ஆக்குன அதே இடத்தையே குறி வைக்குது பாரு.. கிராதகி” என மேடியும் அவள் மண்டையிலே கொட்ட,

 

அதைக்கண்ட இலக்கியா, ” லூசுங்களா இன்னைக்கும் நம்ம போட்ட பிளான் சொதப்பிரிச்சி. அவங்க மானத்த வாங்கனும்னு நாம நினைச்சா நம்ம மானம் தான் போச்சி.. அதைப்பத்தி யோசிக்காம சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு இருக்கிங்க..” என கடுப்புடன் கூற,

Advertisement

 

மாதேஷோ, “ஆமா, நமக்கு மானம்னு ஒன்னு இருக்குனு இன்னுமா நீ நம்பிட்டு இருக்க” என வினவ,

 

அதில் கொலை வெறியான நவ்யா, “உன்னாலதாண்டா எல்லாம் சொதப்புச்சு.. கவர்ல எந்த போட்டோ இருக்குனு கூடவா பார்க்காம குடுத்துட்டு வருவ.. இதுல வருங்கால ரைஸிங்க் ஸ்டார்னு பெருமை வேற.. ஒரு வேலை உருப்படியா செய்ய துப்பில்லை.. பக்கி!! பக்கி!!” எனக் கத்த,

 

மாதேஷோ “நானே பாவம்” என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான்.

 

அங்கு நடக்கும் பேச்சுவார்த்தைக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல தீவிர யோசனையிலிருந்த தான்வி,
“ஹேய்ய்ய்ய் ஐடியா கிடைச்சிருச்சி” என்றவாறு துள்ளிக் குதிக்க ஆரம்பித்தாள்.

 

தான்வி கூறியதைக் கேட்ட மற்ற மூவரும் மகிழ்ச்சியுடன் அவளை நெருங்கி என்னவெனக் கேட்க,

 

தான்வியோ, “இன்னைக்கு பெரிசுங்க கேங்க் சாப்டுட்டு இருக்கும் போது நாளைக்கு முக்கியமான டெண்டர் இருக்குறதாவும் அந்த டெண்டருக்கான பிளான் இருக்குற பென்டிரைவ் ஓவியா கிட்ட இருக்குனும் சொல்லிட்டு இருந்தது என் காதுல விழுந்தது இதை வைச்சே கவுக்கனும்” எனக் கூற

 

“அதை வைச்சி நாம என்ன பண்ணுறதுனு” எனப் புரியாமல் நவ்யா கேட்க,

 

“இதோ இருக்கானே இவன்கிட்ட இருக்குற கில்மா சாங்ஸ ஒரு பென்டிரைவுல ஏத்தி அவங்க பென்டிரைவுக்கு பதிலா மாத்தி வைச்சாலே போதும் அவங்க மானம் பறந்துறும்” என தான்வி பதிலளிக்க

 

பெருமையாக இல்லாத டி-ஷர்ட் காலரை தூக்கிவிட்டுக் கொண்ட மாதேஷோ, “நான் ஒருத்தன் கில்மா சாங்ஸ் பார்க்குறதால உங்க எல்லாருக்கும் எவ்வளவு யூஸ்னு பாருங்கனு” கெத்தாகக் கூற

 

மற்ற மூவரும் அவனைக் கேவலாமாக ஒரு பார்வை பார்த்து “தூ” என துப்பினர்.

 

இதனைப் பார்த்து “ஆத்தி இவளுங்க எச்சியிலயே குளிக்க வைப்பாளுங்க போலயே எனப் பதறிய மாதேஷ் உடனே, “யாரு பென்டிரைவ மாத்தி வைக்குறது” எனப் பேச்சை திசைதிருப்பினான்.

 

இலாவும் நவ்யாவும் “அதை நாங்க பார்த்துக்குறோம்” எனக் கூற

 

“இந்த பிளான் எப்படியாவது சக்ஸஸ் ஆகிறனும் ஆண்டவா!” என வடிவேலனுக்கு வேண்டுதல் வைத்தவாறே சிறியோரின் படை அவரவரின் இல்லம் நோக்கி கலைந்து சென்றது.

 

 

ஓவியாவின் வீடு,

 

தங்களது திட்டத்தை செயல்படுத்த அனைவரும் தூங்கிய பின்பு இலாவும் நவ்யாவும் ஓவியாவின் அறையை நோக்கி செல்லும் வழியில் “நான் தண்ணி குடிச்சிட்டு வர்றேன் நீ முன்னாடி போ” எனக் கூறி விட்டு நவ்யா நகர, அறையை நோக்கி இலா சென்றாள்.

 

அங்கே ஓவியாவோ ஜன்னலோரம் வெளியே பார்வை பதித்து அந்த காரிருளை கண்கொட்டாமல் வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

“இந்த லூசு இன்னும் தூங்காம என்ன பண்ணிகிட்டு இருக்கு?? இப்போ எப்படி பென்டிரைவை மாத்த?? ஹய்யோ ஆண்டவா நீதான் எங்களுக்கு எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணனும்” என அவளைக் கண்டு இலக்கியா மனதிற்க்குள் புலம்ப,

 

அப்போது “ஏன் இப்படிப் பண்ணுற?? உனக்கு என் மனசைப் பத்தி கவலையே இல்லைல” என கோபமாக ஓவி வினவ திரு திருவென விழிக்கவாரம்பித்த இலக்கியா, “நான் இன்னும் ஒன்னுமே பண்ணலையே டி” என பயத்தில் மனதிற்குள்ளே பதிலளிக்க,

 

ஓவியாவோ, “பேசாத நீ, நான் உன் மேல எவ்வளவு பாசம் வைச்சிருக்கேனு உனக்கு தெரியுமா? உன்னை நான் என் உயிரை விட அதிகமா நேசிக்குறேன்.. ஆனா நீ அது புரியாம என் மனசை இப்படி உடைக்க முடிவெடுத்துட்டியே” எனவும்

 

“இந்த நாயி இப்படியெல்லாம் பேசாதே என்னாச்சு இவளுக்கு” என ஓவியாவின் இந்த புதிரான நடவடிக்கைகளைப் பார்த்து அரண்டு போய் நின்றாலும் ‘ உன் மனசென்ன உச்சிபிள்ளையார் கோவில் உண்டியலா அதை நான் உடைக்க’ என கவுன்டர் கொடுக்கவும் மறக்கவில்லை.

 

“இந்த உலகத்துலையே எனக்கு உன்ன தான் ரொம்ப பிடிக்கும்.. என்ன விட்டுட்டு போய்ராத ப்ளீஸ்” என ஓவி மன்றாடும் குரலில் கூற

 

“அய்யோ இவளுக்கு பேய் பிடிச்சிருக்கு போல என்ன யாராச்சும் காப்பாத்த வாங்கடா” என இலா மனதினுள் நினைத்து நடுங்கிக்கொண்டே வந்த வழியே செல்ல திரும்புகையில் நவ்யா வந்து விட,

 

“இவ எதுக்கு பேயறைஞ்ச மாதிரி இருக்கா” என யோசித்தவாறே அவளை நெருங்கும் நேரம்

 

“உனக்குலாம் உண்மையான பாசம்னா என்னனு தெரியல என் உசுரா உன்னை நெனைச்சேனே” என ஓவியின் குரல் கேட்க

 

“என்னாதுதுதுதுது உசுராஆஆஆஆ” என அதிர்ந்தவாறே இலாவைப் பார்க்க அவளோ நவ்யாவைப் பாவமாகப் பார்த்தபடி,

 

“இதான்டி ரொம்ப நேரமா நடக்குது சந்திரமுகியா மாறியிருக்குற நம்ம எதிரி ஓவியாவை இப்போ தான் டி பார்க்குறேன்.. என்னை மட்டும் எப்படியாச்சும் காப்பாத்திரு டி செல்லமே ” என அழுதுவிடுபவள் போல் கூற,

 

“இது வேலைக்காகாது” என நினைத்த நவ்யா
பூனை நடையிட்டவாறே உள்ளே சென்றவள் அந்த அறையை தன் லேசர் கண்களால் ஸ்கேன் செய்து பென்டிரைவ் எங்கே என்று தேடிக் கண்டுபித்தவள்,

 

ஓவியா திரும்பும் முன் அந்த பென்டிரைவ்வை எடுத்துக் கொண்டு தான் கொண்டு வந்த பென்டிரைவை அங்கே வைத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என தலை தெறித்தவாறே தங்களது அறையை நோக்கி இலக்கியாவை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டாள்.

 

“ப்ளான் சக்சஸ்” என தங்கள் வீணாய்ப்போன குழுவில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விட, அதற்காகவே காத்திருந்த மற்ற இருவரும் சந்தோஷத்துடன் கண் மூட, நாளை தங்கள் உடன்பிறப்புகளின் நிலையை நினைத்தவுடன் நித்திராதேவி அவர்களை நிம்மதியாக அணைத்துக் கொண்டாள்.

 

– நட்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!