Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Kaanaang Kuruvigal

காதல் கானாங்குருவிகள்..! – 1

காதல் 1:

பொள்ளாச்சி:

பசுமைக்கும், தென்னைக்கும், விவசாயத்திற்கும் பெயர் போன ஊர். இயற்கை அன்னையின் முழு ஆதரவும் அந்த ஊருக்கு கிட்டியிருந்தது போல. பசுமையை வாரி இறைத்திருந்தாள் இயற்கையவள். எங்கு திரும்பினாலும் தென்னை மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்க, சுற்றி இருந்த அணைகளும், மலைகளும் பொள்ளாச்சிக்கு தனி அடையாளத்தையும், அழகையும் சேர்த்துக் கொண்டிருந்தன.

ஊரே பசுமையில் கொழித்துக் கொண்டிக்க, ஒருவனின் மனம் மட்டும் கானலாய் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த தெருவே மயான அமைதியில் இருக்க, வாழை மரங்கள் கட்டப்பட்ட அந்த பெரிய வீட்டின் முன்பு மட்டும் அழுகுரல் சத்தங்கள்.



Advertisement

பிறப்பை கொண்டாடும் மனித மனங்களுக்கு ஏனோ இறப்பை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மட்டும் அவ்வளவு எளிதில் வந்துவிடுவதில்லை. கட்டிய வாழை மரங்கள் அதன் பசுமையை இழக்காமல் இருக்க, அவனின் மனமோ அனைத்தையும் இழந்திருந்தது.

திருமணம் நடந்து முடிந்ததற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட்டடன அந்த வீட்டில். ஆனால் இப்போது… பல அழுகை குரல்கள், பல விரக்தி குரல்கள்,பல ஏக்கக் குரல்கள், பல கோபக் குரல்கள். இப்படி பல குரல்களின் மொத்த வடிகாலாக நின்றிருந்தான் அவன். அவன் தான் ஈஸ்வரன் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரன்.

அத்தனை அழுகுரல்களிலும், தன்னை அடக்கிக் கொண்டு அவன் நின்றிருந்த விதம்,பலருக்கு மனதில் கனத்தையும், பலருக்கு கேள்வியையும் கொடுத்திருந்தது. கல்லாய் இறுகிப்போயிருந்த அவனுடைய முகத்தில் இருந்து, எந்த உணர்வையும் அங்கிருந்த யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாநிறத்தைக் காட்டிலும் கூடுதல் நிறத்தில் இருந்தவனின் முகம், அடக்கப்பட்ட உணர்வில் சற்று சிவந்து தீயாய் எறிந்து கொண்டிருந்ததோ என்னவோ? யார் அறிவார் அவனின் மனத் தீயை?

Advertisement

நேற்று மணமேடையில், பட்டு வேஷ்ட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்தவன், இன்று நிற்கும் கோலம் என்ன?அதற்கு யார் காரணம்? அவன் கண்முன்னால் பிணமாய் படுத்துக் கொண்டிருந்த அவனின் புது மனைவியா..? யார் அறிவார்..?

Advertisement

“ஐயோ…! நேத்து ராஜாவாட்டம் இருந்த பய, இன்னைக்கு இப்படி நிற்கிறானே..? இதுக்குத்தான் ஊரு மெச்ச கல்யாணத்தை நடத்துனோமா ஈஸ்வரா..?” என்ற பாட்டியின் ஒப்பாரிக் குரல் கூட அவனை அசைக்கவில்லை.

ஆம்..! நேற்று தான் அவன் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இன்று காலையில் அவனின் மனைவி உயிருடன் இல்லை. இதனை எந்த வகையில் சேர்ப்பது. நேற்று புதுப் பெண்ணாய் தனக்கு அருகில் அமர்ந்து, தன் கையால் தாலி வாங்கியவளை  இன்று காலை பிணமாக பார்ப்போம் என்று அவன் என்ன கனவா கண்டான்?

“என்னய்யா இப்படி ஆகிப் போச்சு..? அப்படி என்ன பிரச்சனையா இருக்கும்..?ஒருநாள் ராத்திரில என்ன நடந்திருக்கும்..?” என்று அங்கிருந்தவர்கள் அந்த நேரத்திலும் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

Advertisement

மகன் நிற்கும் நிலைமையைக் கண்ட வசுந்தராவிற்கு மனமே ஆறவில்லை. பார்த்து பார்த்து செய்த திருமணம். மறுநாளே மகன் இப்படி மனைவியை இழந்து நிற்பான் என்பதை இப்போது வரை அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் என்று எதிரே இருந்த அனிதாவின் சடலம் அவருக்கு உணர்த்தியது.

“யம்மாடி வசுந்தரா..? என் பேரனோட நிலைமையைப் பார்த்தியா..? என் ராசா எப்படி நிக்கிறான்னு பாரு..?” என்று ராக்காயி பாட்டி விடாமல் அழுது கொண்டிருந்தார்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே வச்சு அழுதுகிட்டு இருக்கப் போறீங்க..? போலீஸ் கேஸ் ஆகுறதுக்கு முன்னாடி பிணத்தை எரிச்சாகனும்..” என்றனர் அங்கிருந்த சிலர்.

“ஏன் போலீஸ் வந்தா, இவன் வண்டவாளமெல்லாம் வெளிய தெரிஞ்சிடும்ன்னு பயப்படுறிங்களா…?” என்று வம்பை வளர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் கேட்க,

பெண்ணைப் பெற்ற தாயும், தகப்பனும் எதையும் சொல்லாமல் பெண்ணையே வெறித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன சொல்வார்கள்..? எதைப் பற்றி சொல்வார்கள்..? இனி சொல்லி என்ன பலன்..? மாண்ட மகள் மீண்டு வரப் போகிறாளா என்ன..? தாலிச் சரடின் ஈர மஞ்சள் காயும் முன், இப்படி வாழ்க்கையை முடித்துக் கொள்வாள் என்று அவர்களுக்கு முன்னமே தெரிந்திருந்தால்..?

“யப்பா.. தூக்குல தொங்குன உடம்பு. ரொம்ப நேரம் தாங்காது. சட்டுபுட்டுன்னு செய்ய வேண்டியதை செய்ங்கப்பா..?” என்றனர் சிலர் மீண்டும்.

“ஒரே ராத்திரியில புது பொண்ணு சாகுதுன்னா, விவகாரம் இல்லாமையா இருக்கும். புருஷன் ஆம்பளையே இல்லைன்னு முடிவு கட்டிருச்சோ என்னவோ..?” என்று ஈஸ்வரனின் பகைமை ஆட்கள் சொல்ல, அங்கிருந்த சிலர் அவர்களுடன் கைகலப்பிற்கு சென்று விட்டனர்.

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற..? ஊரு உலகத்துல தேடுனாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை அந்த பொண்ணுக்கு கிடைக்குமா..? அந்த பொண்ணு பக்கம் கூட பிரச்சனையா இருந்திருக்கலாம் இல்லையா..? பொண்ணைப் பெத்த அவங்களே சும்மா இருக்கும் போது, இடையில நீங்க என்னடா கொசுறு..” என்று சத்தம் போட, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரனின் முகம் மேலும் இறுகிக் கொண்டே போனது. பேசியவர்களை வெட்டி சாய்க்கும் வேகம் பிறந்தது அவனுக்கு. இடமும், சூழ்நிலையும் கருதி அவன் இரும்பாய் நிற்க,

“ஊருல இன்னொரு சாவு வேறப்பா. ரெண்டு பொணத்தையும் ஒரே நேரத்துல எரிக்கக் கூடாது. ரெண்டுமே அபாண்ட சாவு வேற..?” என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“வேற யாரு இங்க செத்தது..?” என்று கேட்டனர் விஷயம் தெரியாதவர்கள்.

“அட, நம்ம பாண்டியன் மக நிவேதா தான். கட்டிக் குடுத்து ரெண்டு மாசம் கூட ஆகலை. அங்க என்ன பிரச்சனையோ, விஷத்தை குடுச்சுட்டு சாவக் கிடந்திருக்கு. அவங்க வீட்டாளுக, எதையும் கண்டுக்காம இவுகளுக்கு தகவல் சொல்லியிருக்காக. போலீஸ் கேசாகி, போஸ்ட்மார்ட்டம் பண்ணி குடுத்துட்டாங்களாம். பாண்டியன் நம்ம ஊர்ல தான் எரிப்பேன்னு சொல்லி மக பொணத்தை இங்க கொண்டு வந்துட்டான்..” என்று ஒரு கிழவி நீட்டி முழக்கி சொல்ல,

“அந்த பிள்ளையா..? ரொம்ப அருமையான பொண்ணாச்சே..?” என்று தெரிந்தவர்கள் அனுதாபப் பட, கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

இதுவரை கலங்காமல் இருந்த கண்கள் லேசாக கலங்கியதோ அவனுக்கு. யாரையோ பார்க்க அவன் கண்கள் துடித்ததோ..? யார் அறிவார்.

“அதையெல்லாம் பார்த்தா கதையாகுமா..? நேரமில்லை. எவ்வளவு நேரம் இப்படி வச்சிருக்க முடியும். கொள்ளி வைக்கிற வரைக்கும் தான் கணக்கு. அதுக்கு பிறகு எத்தனை பொணம் வேணும்ன்னாலும் எறியலாம். தூக்குங்க..” என்றார் ஒரு பெரியவர்.

அனிதாவின் பெற்றோர் மகளின் உடலைப் பிடித்துக் கொண்டு கட்டிக் கதற, வசுந்தராவும் அழுது தீர்த்தார். ஒருநாள் மனைவியாய் அவன் வீட்டில் இருந்தவளுக்காக, அனைத்து பழிகளையும், பேச்சுக்களையும் ஏற்றுக் கொண்டு நடந்து கொண்டிருந்தான் பிரகதீஸ்வரன்.

வசுந்தராவின் மகன் தான் பிரகதீஸ்வரன். அந்த ஊரில் பேர் சொல்லும் குடும்பம். அவனுக்கு பெண் கொடுக்க அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்க, அனிதாவின் போட்டோவைக் கண்டவுடன் வசுந்தராவிற்கு பிடித்துப் போனது. இரு குடும்பமும் பேசி முடித்து தான், இந்த திருமணத்தை நடத்தியிருந்தனர். அவளும் முழு மனதுடன் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாள். ஆனால், மறுநாளே இப்படி தூக்கில் தொங்குவாள் என்று எண்ணவில்லை.

அவளின் சொந்த பந்தங்கள் அனைவரும் ஈஸ்வரனின் மேல் சந்தேகப்பட்டு பேச, அவளின் பெற்றோர் மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்தனர். மற்றவர்களையும் அடக்கிவிட்டனர்.

அவர்கள் சுடுகாட்டை நெருங்க, அதற்கு முன்பே பெண்கள் நின்று கொண்டனர். அங்கு ஏற்கனவே நிவேதாவின் பிணம் எறிந்து கொண்டிருக்க, இங்கே அவளின் அம்மாவும், தங்கையும் கதறிக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் பார்த்துக் கொண்டே சென்றான் பிரகதீஸ்வரன்.

இதோ மனைவியின் உடலுக்கு கொள்ளி வைத்து விட்டான். முதலில் அவன் மறுக்க, அனிதாவின் அப்பா வேண்டிக் கேட்டுக் கொள்ள, அதற்குமேல் அவனால் மறுக்க முடியாமல் போனது.

அந்த ஊரில் இருந்து வெளியூருக்கு வாக்கப்பட்டு போன நிவேதாவின் பிணமும், அதே ஊருக்கு வாக்கப்பட்டு வந்த அனிதாவின் பிணமும் அங்கே எறிந்து கொண்டிருந்தது. அந்த தீயைப் போலவே, அங்கே பல மனங்களும் எறிந்து கொண்டிருந்தது. அவ்வளவு நேரம் இறுகிப் போயிருந்த ஈஸ்வரனின் முகத்தில் அவனையுமறியாமல் கண்ணீர் துளியாய் கீழே இறங்க, இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த சில உணர்வுகளும் அதன் கட்டுக்களை உடைக்கத் தொடங்கியிருந்தது. அவனின் பார்வை நிவேதாவின் சடலத் தீயில் நிலைத்திருக்க, எண்ணங்களோ எங்கேயோ சுற்றிக் கொண்டிருந்தது.

“அக்கா..!” என்று அங்கே ஒருத்தி கதறிக் கொண்டிருந்தாள். நிவேதாவின் தங்கை மகா தான் அவள். முழுப்பெயர் மகா பத்ரா. முகமெல்லாம் சிவந்து வீங்கி, இரண்டு நாட்களாக அழுது கொண்டிருந்ததில், உடலில் கொஞ்சமும் தெம்பின்றி, சோர்ந்து போயிருந்தாள்.

“மகா, வீட்டுக்கு வா மகா. இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிப்ப..?” என்று அவளின் ஒன்றுவிட்ட சகோதரி காயத்ரி அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

மகாவின் தாய் கமலாவிற்கு கொஞ்சம் கூட தெம்பில்லை. அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இத்தனை வருடங்கள் ஆசையாய் வளர்த்து, சீரும் சிறப்புமாய் கல்யாணம் கட்டிக் கொடுத்த பெண், இரண்டே மாதத்தில் இப்படி பிணமாய் வருவாள் என்று நினைத்திருக்கவா போகிறார்.

மகாவின் குடும்பம் ஒரு திசையிலும், பிரகதீஸ்வரனின் குடும்பம் ஒரு திசையிலும் செல்ல, அங்கே அவர்களின் துயரத்திற்கு காரணமான இரண்டு பெண்களும் தீயில் எறிந்து சாம்பலாய் மாறிக் கொண்டிருந்தனர்.

வீட்டிற்கு வந்தும் மகாவின் கதறல் நிற்கவில்லை. கூடப் பிறந்தவளின் இழப்பு அவளை வெகுவாய் பாதித்திருந்தது. பாண்டியன் விட்டத்தைப் பார்த்து சோர்வாய் அமர்ந்திருந்தார். கமலா ஒரு மூலையில் அழுது கொண்டிருக்க, இவர்களின் முகத்திற்காகவாவது நிவேதா அப்படி ஒரு முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாம். நிவேதாவின் கணவன் லாக்கப்பில் இருக்க, பெற்ற கடமைக்கு பாண்டியனே இறுதிக் காரியங்களையும் செய்து முடித்துவிட்டார்.

அக்காவின் காரியங்களை அவள் கணவன் செய்யக் கூடாது என்பதில் மகா உறுதியாக இருந்தாள். பிறந்த ஊரில் தான் இறுதிக் காரியம் செய்ய வேண்டும் என்பது அவள் அக்காவின் கடைசி ஆசையும் கூட.

“நீயே இப்படி அழுதுகிட்டு இருந்தா, பெரியம்மாவுக்கும், பெரியப்பாவுக்கும் யாரு ஆறுதல் சொல்றது மகா. நீதான் இந்த நேரத்துல தைரியமா இருக்கணும்..” என்று காயத்ரி சொல்ல,

“என்னால முடியலை காயத்ரி..? நிவிக்கு எப்படி மனசு வந்துச்சு..? இப்படி செய்யறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் எங்களை நினைச்சுப் பார்த்திருந்தா, இப்படியெல்லாம் பண்ணியிருப்பாளா..? ஐயோ, எப்படி துடிச்சாளோ..? அந்த பாவி நல்லாவே இருக்க மாட்டான்..”என்று மகா மறுபடியும் அழ ஆரம்பிக்க, கமலாவும் அவளுடன் சேர்ந்து மேலும் அழ ஆரம்பித்தார்.

“இங்க பார் மகா..! நீ அழுகவும் பெரியம்மா ரொம்ப அழுகுறாங்க.  அவங்க உடம்புக்கு இப்படி அழுகுறது நல்லது இல்லை. நிவி அக்கா எங்கையும் போகலை. நம்ம கூடத்தான் இருப்பாங்க..” என்று காயத்திரியும் அவள் வயசுக்கு தோணின மட்டுமான ஆறுதலை சொல்லிக் கொண்டிருந்தாள். ஊரின் பாதி ஜனங்கள் அங்கே ஈஸ்வரினின் வீட்டில் இருக்க, இவர்கள் வீட்டில் ஆட்கள் குறைவாகத்தான் இருந்தனர். அதிலும் சொந்த பந்தங்கள் தான் இருந்தனர்.

அங்கே ஈஸ்வரனின் வீட்டில்,

“நாங்க கிளம்புறோம் சம்பந்தி. சொல்லிட்டு போகக் கூடாது. ஒரே பொண்ணையும் பறி கொடுத்துட்டு இங்கயே இருக்க முடியாது. எங்களுக்கு அவ ஞாபகம் வந்துகிட்டே இருக்கு…” என்றனர்.

“அனிதா இப்படி செய்வான்னு சத்தியமா எங்களுக்குத் தெரியாதுங்க. ரெண்டு பேரும் நல்லா வாழுவாங்கன்னு தான் நினைச்சோம். ஆனா, எல்லாமே இப்படி ஆரம்பிச்ச வேகத்துலையே முடியும்ன்னு நாங்க நினைக்கவேயில்லை…” என்றார் வசுந்தரா.

அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். அவர்களும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள். பிரகதீஸ்வரனை அவர்களால் குறை சொல்ல முடியுமா..? அவர்களும் முதல் நாள் இரவு அங்கு தானே இருந்தனர். பொய்யாகக் கூட அவன் மேல் அவர்களால் பழி சுமத்த முடியாது.

அறைக்குள் சென்ற பிரகதீஸ்வரன் அதற்கு பிறகு வெளியே வரவில்லை. என்னதான் அவன்மேல் தப்பில்லை என்றாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பேசுவதை கேட்கும் போது, யார் முகத்திலும் முழிக்க அவனுக்க விருப்பமில்லை. அவனுக்குள் ஆறாமல் இருந்த ரணங்கள் இன்று மீண்டும் உயிர்பெற்று அவனை இம்சித்துக் கொண்டிருந்தன.

முதல் நாள் திருமண மேளங்கள் கொட்டி, இன்று சாவு மேளங்கள் ஒலித்து, மனைவியாய் வந்தவளைப் பற்றி அறியும் முன்னரே, அவளுக்கு இறுதிகாரியம் செய்து முடித்திருந்தான்.

அந்த ஊர் முழுவதும் இதே பேச்சாய் இருக்க, இரண்டு வீடும் இருளில் மூழ்கிக் கிடந்தது.

“எய்யா ஈஸ்வரா..! வெளிய வந்து ஒரு வாய் சாப்பிடுய்யா. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி பட்டினியாவே இருப்ப..?” என்ற ராக்காயின் குரலில், சலிப்புடன் கதவைத் திறந்தான் ஈஸ்வரன்.

“வந்து சாப்பிடுப்பா..” என்றார்.

“எனக்கு பசியில்லை பாட்டி. நீங்க சாப்பிடுங்க..” என்றான்.

“நீ சாப்பிடாம, உங்க அம்மாவும் அங்க சாப்பிடாம கிடக்குறா. நடந்ததையே நினைச்சுட்டு இருந்தா எப்படி ஈஸ்வரா? எங்களைப் பத்தியும் கொஞ்சம் நினைச்சுப் பாருப்பா. எங்க குலசாமியே நீதான். நீ இப்படி இருக்குறதை பார்க்கறதுக்கா நான் இன்னமும் உசுரோட இருக்கேன்..” என்ற ராக்குவின் வார்த்தைகளில் கொஞ்சம் மனம் தெளிந்தான் ஈஸ்வரன்.

“அம்மா சாப்பிடலையா..?” என்றான்.

“நீ சாப்பிடாம, உங்கம்மா என்னைக்கு சாப்பிட்டுருக்கா..?” என்றார் ராக்கு.

“வாங்க..!” என்று அவரை அழைத்துக் கொண்டு, வசுந்தரா இருக்குமிடத்திற்கு சென்றான் ஈஸ்வரன்.

“சாப்பிடாம என்ன பண்றிங்கம்மா. மாத்திரை போடனும். நேரத்துக்கு சாப்பிடுங்க..” என்றான் இறுகிப் போன குரலில்.

“ஈஸ்வர்..உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனேப்பா. இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலையே..? எப்படி இருந்தவன், இப்ப இப்படி இருக்கியேப்பா..?” என்ற வசுந்தராவின் கண்ணில், கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க,

“அழுகையை நிறுத்துங்கம்மா முதல்ல.  மதிப்பான விஷய்த்துக்காகத் தான் கண்ணீர் கூட தரைக்கு போகணும். போதும், இதையே நினைச்சு இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பிங்க..?” என்றான் ஈஸ்வரன்.

“ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் நாக்கு மேல பல்லைப் போட்டு பேசும் போது, பெத்த வயிறு எறியுது ஈஸ்வரா..” என்றார் வசுந்தரா.

“நான் எப்படின்னு எனக்குத் தெரிஞ்சா போதும்மா. ஒவ்வொருத்தனுக்கும் என்னை நிரூபிக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்லை. தேவையில்லாம எதையும் போட்டு மனசைக் குழப்பாம, கொஞ்சம் நார்மலாக முயற்சி பண்ணுங்க..” என்றான்.

அவருக்குத் தெரிந்து இன்று தான், இவ்வளவு பேசியிருக்கிறான் பிரகதீஸ்வரன். அவனுக்கு அளந்து பேசத்தான் தெரியும். யாரும் பிறக்கும் போதே, இறுக்கமான குணத்துடன் பிறப்பதில்லை. வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்த பாடமும், பட்ட வேதனைகளும், அவமானங்களும் மட்டுமே ஒருவனை அப்படி மாற்றும். ஈஸ்வரனும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

அந்த வீட்டிற்கு அவன் ஒரு பிள்ளையில்லை.அவனுக்கு அக்கா மஞ்சரி என்று ஒருத்தி இருக்கிறாள். நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் அவள் மயங்கி விழ, அவளை அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருந்தனர். அவளுடைய கணவன் சபரி தான் அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறான்.

“காயத்ரி எங்கம்மா..?” என்றான் ஈஸ்வரன்.

“பாண்டியன் வீட்ல இருக்காப்பா. இந்த நிவேதா புள்ளையும் இப்படி பண்ணியிருக்கக் கூடாது..” என்றவரின் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.

ஈஸ்வரனை விட அவன் அக்கா மஞ்சரி பத்து வயதுக்கு மூத்தவள். பாண்டியனின் ஒன்று விட்ட தம்பி சபரி தான் அவளுடைய கணவன். காய்த்ரி அவளுடைய மகள் தாள்.

“அங்க, காயத்ரிக்கு என்ன வேலை..?” என்று கோபத்தில் கேட்டவனின் முக நரம்புகள் புடைத்தது.

“சொன்னா, அவ எங்கப்பா கேட்குறா..? கூப்பிட்டாலும் வர மாட்டேங்குறா..? மஞ்சரி வீட்டுக்கு வந்தாத்தான், அவ சொன்ன பேச்சு கேட்பா..” என்றார் ராக்கு.

“அவங்க வீட்லயும் துக்கம் நடந்திருக்கு ஈஸ்வரா. இந்த நேரத்துல ஏன் நம்ம கோபத்தைக் காட்டனும். நமக்கு இருக்குற மாதிரித்தானே அவங்களுக்கும் வலி இருக்கும்..?” என்ற வசுந்தராவின் மனதில் என்ன இருந்தது..?

“காலம் கடந்து அனுபவிக்கிற வலிம்மா. கொஞ்சம் அதிகமா வலிக்கத்தான் செய்யும்..” என்றவன், கண்களை மூடி, எதையோ தனக்குள் புதைக்கப் பார்த்தான்.

அங்கே மகாவின் வீட்டில்,  அவளுடைய நினைவு முழுவதும் அவள் அக்கா நிவேதா தான் நிறைந்திருந்தாள். அவளின் சிரிப்பும், குறும்பும் அவளை மீண்டும் மீண்டும் மகாவின் கண் முன் நிறுத்த, அவளின் ஒவ்வொரு நினைவுக்கும் இவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

“மகா, நான் ராக்கு பாட்டி வீடு வரைக்கும் போயிட்டு வரவா..?” என்றாள் காயத்ரி.

மகா அவளை கேள்வியாகப் பார்க்க,

“அது, ஈஸ்வரன் மாமா வொய்ப் அனிதாவும் இன்னைக்கு இறந்துட்டாங்கல்ல, அதான். அம்மா வேற ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. நானும் அங்க இல்லைன்னா, வந்து சத்தம் போடுவாங்க மகா…” என்றாள் காயத்ரி.

“பொண்டாட்டியையும் கொன்னுட்டு, போலீஸ்லையும் சிக்காம சாமர்த்தியமா தப்பிச்சுட்டான் உங்க மாமன்..” என்று மகா வெறுப்பை உமிழ,

“வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாத மகா. ஈஸ்வரன் மாமா அப்படி கிடையாது. தேவையில்லாம என்னை கோபப்பட வைக்காத..” என்றாள் காயத்ரி.

“உனக்கு வேணுமின்னா, அவன் உசத்தியா இருக்கலாம். ஆனா, உண்மையை மாத்த முடியாதே. இதோ எங்க அக்கா சாவுக்கும் அவ புருஷன் தான் காரணம். இங்க அந்த பொண்ணோட சாவுக்கும் இவன் தான் காரணம்..” என்றாள் மகா.

“உன்னோட அனுமானத்துக்கு நான் விளக்கம் குடுக்க முடியாது. ஆனா, எங்க மாமா தேடுனாலும் கிடைக்காத தங்கம். அது உனக்கெங்க புரியப் போகுது..?” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

பாண்டியன்-கமலா தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் நிவேதா. இளையவள் மகா பத்ரா, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். நிவேதாவை இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு இன்ஜினியர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மறுவீட்டுக்கு வந்துவிட்டு போனவள், மறுபடியும் பிணமாகத்தான் அந்த ஊருக்குள் வந்தாள்.

நிவேதா இயல்பில் கொஞ்சம் கலகலப்பானவள். ஆனால் மகா அப்படி கிடையாது. எதிலும் அழுத்தம் என்பதைப் போல், அமைதியும், அதே நேரம் அழுத்தமும் இருக்கும் அவளிடத்தில். அக்காவின் இறப்பு அவளை கொஞ்சம் பேச வைத்திருக்கிறது.

மறக்க முடியாத ஒரு சோகம் இருவீட்டிலும். நடந்த சம்பவங்கள் ஆறாத வடுவாய் இருவர் மனதிலும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!