Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உனக்குள் என் உயிரே

உனக்குள் என் உயிரே 8 2

மீராவிடம் மீனாக்ஷி காட்டும் வெறுப்பைப் பார்த்து வருத்தம் அடைந்த ராம்நாத்தின் அம்மா, “நீ உன் மனைவியுடன் தனிக் குடுத்தனம் போய்விடு.” என்று சொல்ல…. ராம்நாத் “ஏன்?” என்று கேட்க….

“இங்க இருந்தா ரெண்டு குழந்தைகளும் கஷ்டப்படும். அதை விட நீ தனியா போனா… வருனுக்கவது அவனோட அம்மா பாசம் கிடைக்கும். மீராவை நானும், உங்க அப்பாவும் வளர்கிறோம். ஆனா…. எங்களுக்கு எதாவது ஆகிட்டா, நீ மீராவை நல்லா பார்திக்கணும். அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கைய தான் நீ ஏற்படுத்தித் தரணும். அவளும் அவ அம்மா மாதிரி பிடிக்காத கல்யாணம் செஞ்சிட்டுக் கஷ்டப்படக் கூடாது. எனக்குச் சத்தியம் பண்ணு.” என்று சொல்ல…. ராம்நாத்தும் சத்தியம் செய்தார்.

அவருக்கு மகளை விட்டு தனியே செல்ல விருப்பம் இல்லை தான். ஆனால் மீனாக்ஷியின் வெறுப்பில் மீரா வளர்வதை விட… தனது பெற்றோரின் பாசத்தில் வளரட்டும் என்று நினைத்து மீனாட்சியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றார்.

மீராவும் பெற்றோரிடம் வளராமல் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தாள். செல்லமாக வளர்த்தால்… எங்கே மீராவும் அவள் அம்மா மாதிரி இருப்பாளோ என்று அவளைக் கண்டிப்புடன் வளர்த்தனர். மீராவும் சிறு வயதிலேயே தன்னுடைய பெற்றோரை பற்றிப் புரிந்து கொண்டதால்… தனது ஆசைகளை எல்லாம் மனதிற்குள்ளையே புதைத்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டாள்.



Advertisement

மீரா தன்னுடைய குடும்பத்தைப் பற்றி யாரிடமும் சொல்ல மாட்டாள். அதனால் அவள் படித்த பள்ளியிலோ, கல்லூரியிலோ அவள் பெற்றோரை பற்றித் தெரியாது. மீராவிற்குச் சிறு வயதில் இருந்தே மனதில் ஒரு வைராக்கியம், தன்னைப் பற்றி நினைக்காத பெற்றோர் பற்றித் தானும் நினைக்கக் கூடாது என்று. அதனால் அவளாக எதற்கும் அவர்களிடம் போய் நிற்க மாட்டாள். ஆனால் அவளின் பெற்றோர் தங்களின் தவறை மறைக்க… மீராவிற்கு அதிகமாகச் செலவு செய்தனர்.

ஷ்யாமளா வெளிநாட்டில் இருந்தாலும், மகளுக்குத் தனது பெற்றோரிடம் சொல்லி அவளுக்குத் தேவையான உடைகள், நகைகள் எல்லாம் வாங்கிக் கொடுக்க… ராம்நாத்தும் மகளுக்கு அதிகமாகச் சேர்த்து வைத்தார். அதோடு அவளுக்குத் தேவையானதை வாங்கியும் கொடுத்தார்.

மீரா எதையும் கண்டுகொள்ள மாட்டாள். பாசத்தைக் காட்டாமல் வெறும் பணத்தைத் தரும் பெற்றோர் மீது அவளுக்கு வெருப்பு தான் வளர்ந்தது. மற்ற குழந்தைகள் பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பத்தைப் பார்த்து அவள் மனதிலும் எழும் ஏக்கத்தை மறைக்கக் கற்று கொண்டாள். மற்ற குழந்தைகளுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று விளையாடினால், அவர்கள் தன் பெற்றோர்களைப் பற்றிக் கேட்கிறார்கள் என்று யார் வீட்டுக்கும் போக மாட்டாள். அதனால் தான் சிறு வயதிலேயே நாட்டிய பள்ளிக்குச் சென்றது. அவளுடைய நேரத்தை அவள் தன் திறமையை வளர்த்துக் கொள்ளப் பயன்படுத்தினாள். மீரா நன்றாக ஓவியமும் வரைவாள்.

Advertisement

மீராவின் தாத்தா, பாட்டி அவளை வீட்டில் நன்றாகப் பார்த்து கொண்டனர். ஆனால் அவளை வெளியே அழைத்துச் செல்வது அதெல்லாம் அவர்களுக்கு முடியவில்லை. மீராவும் சிறு வயது முதல் தன் வேலைகளைத் தானே செய்து பழகி கொண்டாள். யாரையும் சார்ந்து இருக்காமல் தனியே வாழ கற்று கொண்டாள்.

Advertisement

விடுமுறை நாட்களில் கூட வீட்டில் இருக்காமல் எதாவது கிளாஸ்க்கு சென்று விடுவாள். இப்படியே வருடங்கள் செல்ல… முதலில் அவள் தாத்தா இந்த உலகை விட்டு செல்ல, அடுத்து இரண்டு வருடத்தில் அவள் பாட்டியும் மறைந்தார். மீரா அப்போது பண்ணிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். ராம்நாத் அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

அவர் அப்போது தான் புதிதாக இப்போது இருக்கும் பெரிய வீட்டை கட்டி இருந்தார். அதனால் எல்லோரும் சேர்ந்து அங்கே சென்றனர். மீரா திரும்பி மீனாக்ஷியின் வெறுப்புக்கு ஆளானாள். மீனாக்ஷி மீராவை எதாவது ஹாஸ்டலில் சேர்க்க சொல்ல…. ராம்நாத் தான் தன் தாயிடம் சத்தியம் செய்து தந்திருப்பதைச் சொல்லி மறுத்துவிட்டார். மீனாக்ஷி வருணை கொண்டு போய் ஊட்டி கான்வென்ட்ல் சேர்த்து விட்டாள்.

மீரா மீனாக்ஷியின் கண்களிலேயே படாமல் இருக்கப் பழகி கொண்டாள். அவளது அறை இரண்டாம் தளத்தில் இருக்க… அவள் கீழேயே வர மாட்டாள். எதற்குத் தன்னைப் பார்த்து மீனாக்ஷி டென்ஷன் ஆக வேண்டும் என்று நினைத்து, மேலே தனது அறையிலேயே இருந்து கொள்வாள். கல்லூரிக்கு சென்ற நேரம் போக… மற்ற நேரம் வீட்டில் அதிகம் தங்காமல் பார்த்து கொள்வாள்.

Advertisement

காலையில் டிபன் சாப்பிட கீழே சென்றால்.. மீனாக்ஷியை பார்க்க வேண்டும்…. அப்புறம் அவள் பேசும் பேச்சையும் கேட்க வேண்டும். பிறகு அந்த நாள் இருவருக்கும் நன்றாக இருக்காது என்றுதான், காலை உணவை கூட வீட்டில் அருந்துவது இல்லை. கல்லூரியிலேயே சாப்பிட்டு கொள்வாள். விடுமுறை நாட்களில் வேறு வழி இல்லாமல் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தாள். இப்போது அர்ஜுன் சொல்லி தான் மற்ற நாட்களிலும் வீட்டில் சாப்பிட ஆரம்பித்து இருக்கிறாள்.

மீரா சொன்ன எல்லாவற்றையும் கேட்ட அர்ஜுனுக்கு, இப்படியும் கூடப் பெற்றோர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியமாக இருந்தது.

“உங்க அப்பா, அம்மா பிரிஞ்ச போது உனக்கு என்ன வயசு மீரா?”

“ஐந்து…”

ஐந்து வயது குழந்தைய எப்படி இவங்களால விட முடிந்தது தான் எட்டாம் வகுப்பு வரை… தன் அம்மாவை கட்டிபிடித்துக்கொண்டு தூங்கியது அவனுக்கு நினைவு வந்தது.
மீரா அர்ஜுனின் மடியில் படுத்துக்கொண்டே எல்லாவற்றையும் சொன்னவள், எழுந்து உட்கார்ந்து அர்ஜுனை பார்க்க…. அவள் கண்ணீரால் அவனின் தொடை பகுதியில் ஈரமாக இருந்தது.

ஐயோ இப்போ என்ன செய்றது? என்று அவள் யோசிக்க, அப்போது ஒரு மூன்று வயது சிறுவன் ஒருவன் அவர்களின் அருகே வந்தான். அவனை ஏற்கனவே விளையாடும் இடத்தில் இருவரும் பார்த்திருந்ததால்… மீரா கண்ணீரை துடைத்துவிட்டு அவனைப் பார்த்து வா என்று அழைக்க…. அருகில் வந்தவன், அர்ஜுனின் உடையில் இருந்த ஈரத்தை பார்த்து, “ஹய் அங்கிள் டிரஸ்லையே சுஸு போய்ட்டாங்க.” என்று சொல்லி சிரிக்க….

அவன் சொன்னத்தைக் கேட்டு அதிர்ந்த அர்ஜுன் இல்லை என்று தலை ஆட்ட…. மீரா சிரிப்பை அடக்கி கொண்டு ஆமாம் என்று தலை ஆட்டினாள். அதைப் பார்த்தவன், “இவ்வளவு நேரம் மடியில படுத்து பிழியப் பிழிய அழுதிட்டு, இப்ப என்னையே மாட்டி விடுற…” அர்ஜுன் சொல்ல….

மீரா எழுந்து கொண்டே “அவசரம்னா சொல்ல வேண்டியது தான அர்ஜுன். அதைவிட்டு இப்படியா பண்ணுவீங்க.” என்று கேட்டவள், அங்கிருந்து ஓட…
அர்ஜுன், “அடிங்க… இருடி வரேன்.” என்று அவளைத் துரத்த…. அந்தச் சிறுவனும் அவர்களின் பின்னே ஓடினான்.

மீரா கடற்கரை ஓரமாக ஓட…. அர்ஜுன் அவளைத் துரத்தி பிடித்தான். இருவரும் அங்கேயே நீரிலேயே அமர… அந்தச் சிறுவனும் ஓடி வந்து மீராவின் மடியில் அமர்ந்தான். அர்ஜுனும், மீராவும் மூச்சு வாங்கியபடி சிரிக்க… அந்தச் சிறுவனும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான்.

மீரா தாங்கள் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தவள், தங்களுக்குத் திருமணம் முடிந்து குழந்தை பிறந்தால்… தாங்களும் இப்படித் தானே குடும்பமாக இருப்போம் என்று நினைத்தவள், அது நடக்குமா என்ற எண்ணம் தோன்ற, அவள் அர்ஜுனை ஏக்கமாகப் பார்க்க… அவள் என்ன நினைக்கிறாள் என்பதை உணர்ந்த அர்ஜுன், “எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றவன், அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தான்.

வீட்டிற்குக் கிளம்பும் முன் அங்கிருந்த ரெஸ்ட் ரூம் சென்று இருவரும் தலை வாரி, முகம் கழுவி வர… அர்ஜுனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்ததால் மீரா பார்க்க தெளிவாக இருந்தாள். காரில் சென்று இருவரும் ஏற…

அர்ஜுன் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தவன், “மீரா… நான் உனக்கு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. நீ ரொம்பத் தைரியமான பொண்ணு. இதே உன்னுடைய இடத்தில வேற யாரவது இருந்திருந்தா, ஒன்னு மனசு ஒடிஞ்சு போய்… அவங்களுக்குத் தாழ்மை உணர்ச்சி வந்திருக்கும். இல்லைன்னா தங்களுடைய சோகத்தை மறைக்க… இவ்வளவு பணம் கைல இருக்கும் போது தவறான வழிக்கு போய் இருப்பாங்க. ஆனா… நீ உன்னைப் பற்றி ஒரு குறையும் சொல்ல முடியாதபடி நீயே உன்னைப் பார்த்து பார்த்து செதுக்கி இருக்க.”

“இனி நானும் என் குடும்பமும் உனக்கு இருக்கோம். என் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எல்லோரும் இனி உனக்கும் சொந்தம் என்பதையும் மனசுல வச்சிக்கோ…. இனி உன்னோட சந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்திக்க நாங்க இருக்கோம். நீ இதுவரை பட்ட கஷ்டமே போதும். நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்.” என்றவன், அவள் நெற்றியில் இதழ் ஒற்ற…. அவனின் முதல் முத்தத்தை மீரா கண் மூடி ரசித்தாள்.

வழக்கம் போல் அன்று இரவு உணவிற்குப் பிறகு தோட்டத்தில் அமர்ந்து பேசிகொண்டிருக்கும் போது அர்ஜுன் அமைதியாக அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மனதிற்குள் ஒரு சூறாவளி சுழன்று கொண்டு இருந்தது.

மீராவின் பெற்றோரை பற்றி நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது. நேரில் சென்று மீராவின் அப்பாவிடமே கேட்டுவிடலாமா என்கிற அளவிற்கு ஆத்திரம். ஆனால் இப்போது எதாவது செய்யப் போய்… அது மீராவிடம் இருந்து தன்னைப் பிரித்து விடக் கூடாது. கல்யாணம் முடியட்டும் அவங்களை நாக்கை பிடிங்கிற மாதிரி நாலு கேள்வியாவது கேட்டுடணும் என்று நினைத்துக் கொண்டான்.

அவனின் முகத்தில் தோன்றும் விதவிதமான பாவங்களைக் கவனித்த கணேசன், “என்ன அர்ஜுன் எதையோ மனசில போட்டு குழப்பிகிற மாதிரி இருக்கு. என்ன சொல்லு?” என்றதற்கு,

“இல்லைப்பா ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு விஷயம் சொல்லணும், ஆனா… இப்ப இல்லை கொஞ்சம் டைம் கொடுங்க.” என்றான். கணேசனும் சரி என்று அவன் தோளில் தட்டிவிட்டு உள்ளே சென்றார்.

ஆதியும், ஆருவும் அன்றைக்குப் பிறகு அர்ஜுனிடம் மீராவை பற்றி எதுவும் கேட்கவில்லை. அர்ஜுனும், மீராவும் பழகுவதில் இருந்தே அவர்கள் இருவரும் ஒருவரிடம் ஒருவர் தங்கள் காதலை சொல்லிகொண்டனர் என்பது மட்டும் புரிந்தது. இன்று அர்ஜுன் தங்கள் அப்பாவிடம் சொன்னது கண்டிப்பாக மீராவை பற்றித் தான் என்பதும் இருவருக்கும் புரிந்தது.

அர்ஜுன் மீராவை நன்றாகப் பார்த்துக்கொண்டான் என்று சொல்வதை விட… தன் கண்களுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான் என்று சொல்வது தான் உண்மை. அர்ஜுன் மீராவின் பெற்றோர் பற்றி யாரிடமும் சொல்லவில்லை… பிறகு தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

அர்ஜுனுக்கு மீராவை பற்றி நினைக்கும் போது ஆச்சரியமாக இருந்தது… மனதிற்குள் இவ்வளவு வருத்தத்தை வைத்துக் கொண்டு வெளியில் எப்படி இவளால் சாதரணமாக இருக்க முடிகிறது என்று யோசித்தான். மீராவும் அர்ஜுனை தவிரத் தன் சோகத்தை யாருக்கும் தெரிய விட்டது இல்லை . எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் தான் நடந்து கொள்வாள். அதனால் மற்றவர்கள் பெரிய பணக்கார வீட்டில் பிறந்து வளரும் செல்ல மகளாகத் தான் மீராவைப் பற்றி நினைத்து கொண்டிருந்தனர்.

இப்படியே சில நாட்கள் சென்றது. தசரா பண்டிகையும் அடுத்து தீபாவளியும் வருவதால் அர்ஜுனின் தந்தையின் கடையில் கூட்டம் அலை மோத…. அர்ஜுனும் சென்று அவன் அப்பாவிற்கு உதவி செய்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!