Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்டா வரச் சொல்லுங்க

கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 5

பகுதி – ௫

கண்ணனின் பாதி நாட்குறிப்பு வரை  நிகழ்ச்சிக் குறிப்புகள்தான் நிறைந்து இருந்தன. அதை விடுத்து, மற்றவைகளை வாசித்தான்.

                       முதல் குறிப்பு

‘இந்நாள் இவ்வளவு முக்கியமானது என நினைத்திருக்கவில்லை…அவளின் நினைவுகள் அழியா ஓவியமாய் ….மீண்டும்மீண்டும் அசை போடுவதில் இனிய, இணையில்லா சுகமே. என தொடங்கிய நினைவுகள் நாம் காட்சியாக காணலாம்.



Advertisement

                       காட்சி – 1

எங்கும் வண்ணத்துப் பூச்சிகளாக மாணவிகள், சுடிதார், மிடி, பான்ட் டி ஷர்ட், சேலை …என அந்த கல்லூரி வளாகம் மாணவிகளால் நிரந்திருந்தன். ஆங்காங்கே திரள் திரளாக மாணவிகளின் நலவிசாரிப்புகள் …. ‘ஹாய், ஹாய்,   எப்ப வந்த?, எப்படி உன்னோட  விடுமறை போச்சு, பாட்டி ஊர் போனீயா? என்ன கொண்டு வந்திருக்கிற …  என ஒரே குதூகல குரல்கள், ஆம், அன்று கல்லூரி புது வருட துவக்க நாள். ஆங்காங்கே சில மருண்ட பார்வையுடன் புது முகங்கள் தென்பட்டனர்.

பிரமாண்டமான புகழ்பெற்ற பெண்கள் கல்லூரி, கட்டுபடா மங்கைகள், சுதந்திரம் காற்று சுவாசிக்கும் காலம்..கல்விவாழ்வின் பொற்காலம். ஒரு மணிச்சத்தம் அனைவரையும் அவர்கள் பணிக்கு திருப்பியது.

Advertisement

பக்கத்து கிராமத்து பகுதிகளில் இருந்தும், புறநகர் பகுதிகளை  இருந்தும் வந்த புது மாணவிகளுக்கு  அந்த பெரிய வளாகம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது, அவ்வாறு  கற்க வந்த, புதியவர்களுக்கு அவர்கள் துறைகளை காண்பித்து விட்டு, தங்கள் வகுப்பு நோக்கி சென்று கொண்டு இருந்தனர்..விமலா, சம்யூக்தா.

Advertisement

“ஏன்டி நேரமாயிடுச்சு …முதல் நாளே அந்த ரூல்ஸ் ட்ட திட்டு வாங்க போறமா ?” மிகவும் கண்டிப்பான தன் ஆங்கிலத்  துறை தலைவருக்கு  வைத்த பட்டப்பெயர் ‘ரூல்ஸ்’

“வச்சு செய்ய போறாங்க, வருசம் முழுசும் சொல்லிக் காண்பிக்க வாய்ப்பு தந்துட்ட .. போடி,  எல்லோரும் பேசாமல் போனாங்க, நீ மட்டும் உதவுறேன் என்று போய் இப்ப பாரு நமக்கு கெட்டப்பெயர்”.

“நம்ம கல்லூரி வளாகம் பெரியது, தெரிந்தவர்கள் தேடிச் செல்வதே கடினம். பாவம் அவர்கள்  பள்ளி முடித்து கல்லூரி படிக்க வருகிற முதல் தலைமுறை. நான் முதல் நாள் எவ்வளவு திணறினேன்…தெரியுமா ? அந்த அனுபவம் தான் வேறென்ன?”

Advertisement

இருவரும் இளங்கலை ஆங்கிலம் படிக்கிற இரண்டாமாண்டு மாணவிகள். அவர்கள் வீடு புறநகர்ப் பகுதியில் இருக்கிறது. கல்லூரி இவங்க பகுதியி தான், வீட்டிற்கும் கல்லூரிக்கும் கொஞ்சம் தூரம்தான், இருவருமே ஒரே பேருந்தில் வருபவர்கள்..

அதற்குள் .. “மன்னிக்கவும்  …….ஒரு உதவி”… என்று ஒரு குரல்.

“நேரமாச்சு,  பார்க்காதது போல வா” என விமலா அவள் கையைப் பிடித்து நடக்க..நம் சம்மு கையை உருவி நின்று விட்டாள். “எஸ் சார்”.. என்ன வேண்டும்.

“இங்கே கலையரங்கம் எங்கே இருக்கிறது ? கொஞ்சம்  சொல்ல முடியுமா ?”

“இதே  வழியிலேயே போங்க சார் வரும்” ..

“ரெம்ப நேரமாக இந்த வழியில் தான் வருகிறேன், ரெம்ப தூரம் போகணுமா ?”

“ஆமாம் சார்.. இரண்டு இடங்களில் திருப்பம் வரும் ..பாதை மாற வேண்டாம்”.

“வாசலிலிருந்து பக்கம் என்று சொன்னாங்களே”…. என இழுத்தான்.

‘வயசுக்கு மீறி இளமையாக காட்ட முயன்ற தோற்றம்..குடுமி, ஒரு காதில் கடுக்கண், ஆங்கில பட வில்லன் போல சிறு தாடி, தோளில் ஒரு ஜோல்னா பை  வைத்திருந்தான்’.

“அந்த பக்க வாசலிலிருந்து பக்கம் சார்..கல்லூரிக்கு ரெண்டு வாசல் உண்டு”..என்றாள் எரிச்சல் குரலில் விமலா.

“நீங்க மாறி வந்துட்டீர்கள் சார்” என்றால் சம்மு/

“ஓ….ஆமாம், அங்கே போக்குவரத்தை திருப்பி விட்டுட்டாங்க ஓகே…ஓகே…..நன்றி” ..என விரைந்து நடந்தான்.

“வாடி..இனி எங்காவது நின்ற” ..

“யாரும் வராமல் இருக்கணும்னு வேண்டிக்க” ..என்று சிரித்தாள் சம்மு.

ஓட்டமும், நடையுமாக தங்கள் துறையை அடைந்தனர். நல்லவேளை யாரும் ஆசிரியர்கள் வரவில்லை..எல்லோரும் வெளியே தான் நின்றிருந்தனர். “ஹாய் விமலா  ..ஹாய் சம்மு ..என்னடி முதல் நாளே உன் சேவையை தொடங்கிட்டியா ?”

“என்னாச்சு ..எல்லோரும் வெளியில் நிற்கிறீர்கள்?” என வினவினாள் விமலா.

“நம்ம துறை முதல் நாளே அசத்துறாங்க போல .. இந்த வருடம் நம் துறையில் சேர்க்கை நிறைந்து விட்டது. அதனால் முதல் நாளே இசைக்கச்சேரி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்”.

“அடி தூள், ஆரம்பமே அசத்துறாங்க என்ன”

“எல்லோரும் கலையரங்கம் போகணும் ..வாங்க” என்று அனைவரும் நடந்தனர்”.

“அப்ப நல்ல தொகை கேட்பாங்களா ?”

“இல்ல, மூன்றாமாண்டு மாணவர்கள் ஏற்பாடு…. அதுவும்  நம்ம தலைக்கு தெரிந்தவர்களாம் .. கல்லூரிக்கு….. என்று சிறப்பு சலுகையாக வருகிறார்களாம்”.

“நம்ம கையை கடிக்காவிட்டால் பரவாயில்லை”.

“நல்லவேளை தப்பித்தோம்” என விமலா சொன்னாள். அரங்கில் நுழைந்தனர்..இவர்களிடம் வழி கேட்டவன் மேடையில் இசைக்கச்சேரியை வழி நடத்திக்கொண்டு இருந்தான். அனைவரும் தங்கள் கருவிகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர்.

‘சம்மு’ என்ற விளியில் திரும்பி பார்க்க, மூன்றாமாண்டு மாணவி, ஆங்கிலத்துறையின் துணைத் தலைவி,  “உன்னை எங்கெல்லாம் தேடுறது…வா நீ தானே  எப்பவும் வரவேற்புரை சீக்கிரம் வா” என இழுத்து சென்றாள்.

மேடையில் இசைக்குழுவினருக்கு வேண்டிய வசதிகள், வரவேற்புஉரை  அதன்பின் கச்சேரி தொடங்கவும் விருப்பப்பாடல்கள் கேட்ட சீட்டைக்களை  சேகரித்து மேடையில் அளித்தும் சம்மு பம்பரமாக சுழன்றாள். இனிய சிரிப்புடன், சோர்வடையாமல், துடிப்புடன் இயங்கும் சம்மு  கண்டு இசைக்குழுவினருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

இவளிடம் வழிக் கேட்டவன் பெயர் கண்ணன் என தெரிந்து கொண்டாள். அந்த குழுவில் பாடுகிற முக்கிய  பாடகன். அந்த குழுவை நடத்துபவர், அவனோட நண்பனும் கூட என அவர்கள் பேச்சில் அறிந்தாள் சம்மு.

பார்க்க ஒரு மாதிரி தோற்றம் என்றாலும் பாடல்களை  மிக இனிமையாகவே பாடினான். மெல்லிசை, ராக் என அசத்தினான். அவன் குரலில் அவ்வளவு இனிமை. அது மட்டுமல்ல, பாலு சார் மட்டுமல்ல ஹரி, உன்னி என எல்லாருடைய குரலுமும் அவன் வசம் வந்தது. கல்லூரி மாணவிகளுக்கேற்ப பிரபல பிற மொழி பாடல்கள், மற்றும் ஆல்பம் பாடல்களும் சில பாடினான்.

.சம்முவை அறிமுகம் இருந்ததால் அவளை அழைத்து அவர்களது தேவைகளை கேட்டான். அவளைப் பார்த்து அறிமுக உணர்வில் அடிக்கடி புன்னகைத்துக் கொண்டான்.

இசைக்கச்சேரி எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்க மேலும் ஒரு மணி நேரம் நீடித்தது. அதற்கு மேல் நீட்டிக்க முடியாமல், மீண்டும் வருவதாக கூறி முடித்தனர்.

கிளம்பும் நேரத்தில் சம்முவைப் பார்த்துக் கேட்டான்..”என்னங்க எல்லோர் விருப்பமும் நிறைவேற்றிய …உங்களுக்குப் பிடித்த பாடல் எதுவும் கேட்கவில்லையே ?”

“எனக்கு பிடித்தது நிறைய இருந்தது ..ஆனால் இன்னும் விருப்பப் பாடல்கள் இருக்கு  சார்”.. என வருந்திய குரலில்.

“அதனால் என்ன ..உங்களுக்கு சிறப்பாக பாடிடலாம்”.

“அடுத்த வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்” என்றாள்.

அடுத்த பக்கங்களில் குறிப்புகள் இல்லை…வெற்று பக்கங்களே. வெற்றி மேலும்மேலும் பக்கங்களை திருப்பி தேடினான். மேலும் பதினைந்து நாட்கள் கழித்து குறிப்புகள் தொடர்ந்தன.,… கண்ணனின் சுயவிளக்கத்துடன் தொடங்கியது.

“இன்று மாலை நண்பர் ஒருவரின் கட்டாயத்தின் பேரில் அவருக்கு துணையாக ஒரு விழாவிற்கு சென்றேன். அது மாதம் ஒரு முறை நடக்கும் விழா …அந்த மேடையில் சிறுவர் முதல் பெரியவர் வரை தங்கள் திறன்களை காண்பிக்கலாம். எந்தவிதமான கட்டணமும் இல்லை.

நடந்தவை காட்சியாக …

வெறுப்புடன் போன விழாவில் நடந்தது நேர்மாறு. அங்கே அவனின் தேவதை சம்மு இருந்தாள். என்னவோ அன்று கண்டது முதல் அவள் அவனை அதிக தொந்தரவு செய்தாள். இனம் புரிய உணர்வு மிகவும் அமைதியற்ற உணர்வு தந்தது…அவளை காணவும் மனம் புத்துணர்வு பெற்றது..அங்கே நிறைய போட்டிகளில் பரிசும் பெற்றாள் தனி நடிப்பு, பாட்டு போட்டி, கதை சொல்லுதல், ஓவியம். நண்பர் தான் அந்த குழுவின் முக்கிய விளம்பரதாரர்…அதனால் பரிசு கொடுக்கும் வாய்ப்பும் அவனுக்கு  கிடைத்தது…அதில் சிறப்பு  பாட்டுப் போட்டியும் அடக்கம். அதிலும் சம்முவே முதல் பரிசு பெற்றாள். ‘இவ்வளவு நன்றாக பாடுவாளா ?’

நாலு கோப்பைகளையும்  தன் வண்டியில் முன்னே தொங்கவிட்டு பார்த்தால், இவள் வண்டியை எடுக்க முடியாத அளவு நெருக்கமாக நிறைய வண்டிகள் சீரற்று நின்றன. கடுப்பானது..கொஞ்சம் கூட அறிவே இல்லாத மண்டுகள்..முன்ன உள்ள வண்டியை எப்படி எடுப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்ல..எப்ப திருந்துவாங்களோ…என இவள் வண்டியை எடுக்க முடியாமல் அடைத்து நின்ற பல்சர், இவளால் அசைக்க கூட முடியல, அது பக்க பூட்டு போட்டு  பூட்டி வேற வைத்து இருந்தார்கள்.

“ஹாய் ஸ்வீட்டி” என்ற குரலில் திகைத்து, கோபத்துடன்  தேடினாள்.

கண்ணனை பார்க்கவும் கொஞ்சம் சாந்தமானவள், முகசுளிப்புடனே “ஹாய்” என்றாள்.

“என்னாச்சு..முகம் வாடி விட்டதே..உன் பெயர் தெரியவில்லை..ஸ்வீட்டி என்பது காரணப்பெயர். இனிமையாக பாடியதால் ஸ்வீட்டி..கூல்…கூல்” என்றேன்.

“என் பெயர் சம்யுக்தா. இளங்கலை ஆங்கிலம் படிக்கும் இரண்டாமாண்டு மாணவி”.

“இவ்வளவு நன்றாக பாடுவாயா ? பாட்டு கத்துக்கிட்டாயா ?”

“அப்படியா சார்..நல்லா இருந்ததா ?

“நல்லா இல்லாமலா பரிசு வென்றாய்..நல்ல கேள்வி”.

“நன்றி சார்..உங்க வாயால் பாராட்டும் போது அதை விட பெரிய பரிசு என்ன சார்.. ?”

“பாட்டுக் கத்துக்கிறியா கேட்டேனே”.

“இல்ல சார் கேள்வி ஞானம் தான்”.

“இப்பவும் கத்துக்கலாம்…நல்ல குரல் வளம்”.

ம்ம்ம் …என்றாள்.

“என்ன இன்னும் முகசுளிப்பு மிச்சம் இருக்கே”..

“என்ன சார்…சொல்றீங்க?”

“என்ன பிரச்னைனு கேட்டேன்”.

“என் வண்டி எப்படி எடுப்பது என்பது தான்..எங்கம்மா தேடுவார்கள் ..உடனே போகணும்”.

கேட்க வந்ததை விழுங்கி.அவளைப் பற்றிய விவரங்களை விசாரிப்பது தவறாக போகலாம் எண்ணி, சாதாரண கேலியிலேயே பேசினான், “வாங்கின பரிசுகளை அம்மாட்ட காண்பிக்கணும்..குட்டி பாப்பா அதைச் சொல்லுங்க உங்கள் தேவை என் சேவை…நான் எதற்கு இருக்கிறேன்” என வண்டியை நகற்றி கொடுத்தான்.

“நன்றி சார்” என உடனே பறந்தாள்.

இத்துடன் முடிந்த நாட்குறிப்பு ரெண்டு பக்கம் கழித்து, தொடர்ந்தது.

விமலாவும் சம்முவும் கையில் ஒரு கோன் ஐஸ் உடன் அந்த பேரங்காடியை சுற்றிவந்தனர். “ஏன்டி விமலா, இங்கே தான் வரணும்னு அழிச்சாட்டியம் பண்ணி கூட்டி வந்த, பத்து ருபாய் பொருள் இங்கே 100 ரூபாய்க்கு விற்குது…என்ன கொள்ளை?”

“வெளியே வெயில் கொளுத்துதே… ஆனால் உள்ளே என்ன குளுகுளுனு இருக்குல..அதற்கும் சேர்த்துதான். எவ்வளவு பரிசு வாங்கின ட்ரீட் கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கிற?”

“அப்படி இல்ல இதுவரை வாய்ப்பு கிடைக்கல.

“ஏய் அதை பாரேன் விமல்  …என்ன அழகு ! கண்ணைப் பறிக்குது”..என்று கடைகளை பார்த்து வியந்தாள்.

“ஒரொரு தளத்திலும் ஒவ்வொரு கேளிக்கைகள் இருக்கு, இங்கே சினிமாவும் பார்க்கலாம்..சின்னப்பிள்ளைகளுக்கு பிடிக்கும்”.

“அப்ப நீ  நூற்றுக் கிழவி” ..

“போடி, கண்ணைப்பறிக்கிறது போல பொருட்கள், உடைகள்  ஆனால்.. விலை தான் இடிக்குது விமல்”.

“காசை பற்றிய  பேச்சை விடு…அதோ பாரு பாப்கார்ன், வாங்கலாம் வா”.

“ம்” ..என வாங்கியதும், “எங்கே போறோம் விமல்?”.

“மறுபடியும் ஒரு சுற்று சுற்றி வருவோம்…அதுக்கு தானே இவ்வளவு பெரியதாக கட்டி இருக்கிறாங்க”.

“பார்த்தாச்சு… வாங்க போறதும் இல்ல..அப்புறம் ஏன்?”

“ஏன்? வாங்கித் தா யார் வேண்டாம் னா?”

“நான் வேலைக்கு போகவும் வாங்கி தாரேன்”.

“இதை ஒன்றை விடாத ஏய் அங்கே பாரு ….சம்மு”.

“யாரு?”

“.உன் சோல்னா பை” …

“அன்றே சொன்னனே அவர் பெயர் கண்ணன் என்று”..

“இந்த பெயர் தான் பொருத்தம் பாரு…இப்ப கூட பையை விடல”,எதிரில் கண்ணன் வந்து கொண்டு இருந்தான்.

“சார்…சார்” ..என சம்மு, விமல் நெருங்க..”நீங்க எங்கே இங்கே ?” என்றான்.

“சும்மா சார்…நீங்க என்ன இங்கே சார்? எப்பவும் வருவீங்களா என்றாள் ஆர்வமாக சம்மு ..உங்களை பார்த்தது  ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கு சார்”.

“இங்கே  இசைக்கருவி பழுதுபார்க்கும் எனது நண்பர் கடை இருக்கு..அதனால் அடிக்கடி வருவேனே”.

“என்ன இசைக்கருவி சார்?”

“கீ போர்ட்-ல் உள்ள  மேல் ‘ஸா’ கீ கழண்டு விட்டது. அதை சரி பண்ண கொடுக்க வந்தேன்”…

“உடனே சரி பண்ணி தர மாட்டாங்களா ?”

“ஏற்கனவே இரண்டு மூன்று முறை ஒட்டி ஒட்டி சரி பண்ணியது தான், இந்த முறை கண்டிப்பாக அந்த கீ யை மாற்றணும் என்று சொல்லிட்டார்”.

“என்ன கீ போர்டு சார்?”.

“காசினோ தான்..”

“யமஹா இல்லையா சார்”..

“அதுவும் இருக்கு…உனக்கு கீ போர்டு பற்றி தெரியுதே”.

“கொஞ்சநாள் வகுப்பு போனேன் சார்”.

“அப்புறம்…..?”.

“பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுக்கவும் நிறுத்திட்டாங்க”.

“உனக்கு இசை ஞானம் இருக்கு, குரலும் நல்லா இருக்கே, வாய்ப்பாட்டு படிக்கலாமே”.

“அவங்கம்மா கொன்னே போடுவாங்க  சார்” என விமல் சொல்லவும்..

“ஓகோ ..சரி வாங்க ஒரு காபி குடிக்கலாமா?” என அருகில் இருந்த காபிக்கடைக்கு அழைத்தான்.

“இருக்கட்டும் சார்..இப்ப தான் ஐஸ் சாப்பிட்டோம்” என மறுத்தாள் சம்மு.

“அப்ப வாங்க ஒரு ஜூஸ் குடிக்கலாம்..வாங்க” என மீண்டும் வற்புறுத்தினான்.

பழச்சாறு மூன்று வாங்கி உட்கார்ந்தனர்.

“சார்.. ஒரு சந்தேகம் கேட்கலாமா ?”

“கேளு ..என்ன?”

“இந்த பையில் என்ன வச்சு இருக்கிறீங்க ? எப்ப பாரு இது இல்லாமல் உங்களைப் பார்க்க முடியலை…இது என்ன பழங்காலம் போல” ..என சம்மு கேட்டு விட்டாள்.

“ம் ..ம்…பாட்டின் ஸ்வர குறிப்புகள் இருக்கும்..பாடல் புத்தகம்..நிகழ்ச்சி நிரல்” மேலும் …இதான் வசதி…ஏன் நல்லா இல்லையா ?”

“வயசான தோற்றம் தருது சார்” என்கவும்  … “அப்ப உடனே மாற்றிடுவோம்” என்றான்.

அந்த ஸ்வர குறிப்புகளை பார்த்து  ‘ஹம்’ பண்ணினாள்…

“இவ்வளவு அழகான குரல்..இசை ஞானம் இருக்கே நான் கூட சொல்லி தரேன், படிக்கிறியா ?”.

“அம்மாக்கு பிடிக்காது, அனுப்ப மாட்டாங்க..ஒரு முறை கேட்டு அடம் பண்ணினேன் என்று அடிச்சுட்டாங்க. வேண்டாம் சார்”.

“எனக்கும் தினம் என்று எடுக்க முடியாதே..நான் நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் இது போல”…

“இது நல்ல ஐடியா ..இப்படின்னா ஓகே சார்”.

அதன்பின் வெற்றுபக்கங்கள் …கண்ணில்  தூக்கம் சொக்கவும் நாட்குறிப்பை மூடி வைத்து விட்டு உறங்கினான் வெற்றி.

                                                ———————–

வெற்றி புல்லட்டில், தன் அலுவலக வளாகத்தில் நுழைந்தான்…நிறைய கார்கள், அதிகம் கரை வேட்டிகள் தென்பட்டன ஆனாலும் வேகம் குறையாது சென்று நிறுத்தினான். இறங்கி தன் கூலிங்கிளாஸ்யை லேசாக அசைத்து சரி பண்ணினான். சில கரைவேட்டிகள் தங்கள் வேட்டியை இறக்கிவிட்டு நின்றனர்…திரும்பி படியேறினான்.

எதிர்ப்பட்ட காவலர்கள் வணக்கத்தை சிறு  தலை அசைப்புடன் ஏற்றான். அவன் அறை வாசலில் நிறைய பார்வையாளர்கள் கூட்டம். கடந்து உள் சென்றதும் “சந்திரன்” என விளித்தான். மூவரும் இணைந்து சலுயுட் வைத்தனர்.

“சார்” எனவும், “என்ன வெளியே ஒரே கும்பல்?”

“,சார் அந்த சின்னத்திரை நடிகை, அமைச்சர் மேலே புகார் கொடுத்தாங்கல்ல, இப்ப பதிலுக்கு இவர் வந்திருக்கிறார்”. “நல்லா விளையாடுறாங்க…மைனரா இருவரும் … சரி விடு, நம்மை வழக்கு என்னாச்சு?” …

“கண்ணன் நண்பர் மூர்த்தி நேற்று ஊர் திரும்பிட்டார் போல இன்று விசாரணைக்கு வரச் சொன்னேன்.. வந்துட்டார் சார்..வெளியே இருக்கிறார், கூப்பிடவா ?”

“அந்த கோப்பை எடுத்துக் கொடுத்துட்டு, வரச் சொல் ?” என கை நீட்டினான். அதற்குள் தேவி கோப்பை தரவும், புரட்டிய படி…மூர்த்தி உள்ளே வரவும் உட்கார இருக்கையை காண்பித்தான்.

“சொல்லுங்க சார்..நீங்களும் கண்ணனும் எப்படி பழக்கம், எவ்வளவு நாட்கள் நட்பு ?”

“சார், சென்னை வந்ததில் இருந்தே பழக்கம்”.

“எப்ப சென்னை வந்தீங்க ?”

“நான் பள்ளிப்படிப்பு முடிக்கவும் சார்”…

“கண்ணன் ?”

“அவனும் நானும்  ஒன்றாக தான் சென்னை இரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்  செய்யும்போது பிடிபட்டதில் ஏற்பட்ட நட்பு…அப்பயிருந்தே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது வழக்கம், அதுவே நட்பாகியது”.

“இங்கே உங்களை விட்டால் வேற யாரும் அவருக்கு  நெருக்கமான நட்புகள், உறவுகள் ?”

“இல்ல சார்..அவனோட பெற்றோர் வேளாங்கண்ணி கடற்கரையோரம் கடை போட்டு இருந்தவர்கள், அந்த சுனாமியில் அவங்களை இழந்தான் போல”

“அதன்பின் ..?”

“அவன் மதுரையில் உறவினர்கள் வீட்டில் கொஞ்சநாள் இருந்தான் போல … அங்கே ஏதோ பிரச்னைனு, பின்னர் இங்கே வந்துட்டான்”.

“அந்த உறவினர்களோடு தொடர்பில்லையா ?”

இல்லை சார்…அவன் பழசை நிறைய பேச மாட்டான்…நிறைய ஆரம்ப காலங்களில் கஷ்ட்டப்பட்டோம்…ஓட்டல் வேலை, கூலி வேலைன்னு…அப்ப கொஞ்சம் சொன்னது”

“அப்புறம் ஏற்கனவே வேளாங்கண்ணியில் வளர்ந்ததால்… அங்கே ஒரு பாதர் மூலம் கீபோர்டு வாசிக்க கத்துக்கிட்டதை வச்சு ..நாங்க தங்கியிருந்த விடுதியில் உள்ளவர் மூலமாக இசைக்கச்சேரி என அவன் வாழ்க்கை மாறிடுச்சு”.

“நீங்க ..உங்க குடும்பம்”…

“நான் படிக்க பிடிக்காமல் ஓடிவந்தவன். எங்கப்பா ஓய்வுபெற்ற அரசு ஊழியர்..விழுப்புரம் …தம்பி, தங்கை உண்டு…காதல் கல்யாணம்னு குடும்பத்தோடு எங்களை சேர்த்துக்கல ..இப்ப தான் அப்பா தவறியதால் ..மறுபடியும் இணைந்து உள்ளோம்”.

“உங்க தொழில் ?”

“நிதி நிறுவனம்”…

“உங்களுக்கும் கண்ணனும் உள்ள உறவு”…

“ரெம்ப நெருக்கம்..அவனுக்கு குடும்பமாக,உறவாக நினைக்கும் இடம் எங்க வீடு..?”

“அப்ப ஏன் உங்களோடு …பேசல.. சண்டைனு கேள்விப்பட்டோமே ?” என முதல் அம்பை எய்தான்…

“அது வந்து” …

“அதான் எது வந்து … ?”

 

 

மீண்டும் வருவான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!