Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 9_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

“இன்னைக்கு நைட் கிளம்பணும் விக்ரம்”, என்று ஆதி சொன்னதும் அவனை முறைத்தான் விக்ரம். தம்பியின் பார்வை புரிந்தாலும் அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை. விக்ரமுக்கு இது அண்ணன் அண்ணியின் வேலை என்று தெளிவாக புரிந்த்தது.

தன்னையும் ரேகாவையும் சேர்த்து வைக்க தான் இந்த பயணத் திட்டம் என்று என்று புரிந்து கொண்டவனுக்கு எப்படி அவளுடன் ஒரு வாரத்தைக் கழிப்பது என்று கேள்விக் குறியாக இருந்தது. இங்கே என்றால் ஆபீஸ் சென்று அவளிடம் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் டெல்லி சென்றால் பகல் முழுவதும் அவளுடன் இருக்க வேண்டும், இரவிலும் அதே கதை தான். இங்கேயாவது இரவில் மொட்டை மாடியில் எப்போதும் போல ஒளிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் வீட்டில் அதுவும் முடியாதே.



Advertisement

இன்று ஆபீஸ் போக வேண்டாம் என்று முடிவு எடுத்து ஆதியும் விக்ரமும் வீட்டில் இருந்து விட்டார்கள். உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்தவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து விட்டான்.

Advertisement

அப்போது உளே வந்த ரேகா “என்னங்க, எத்தனை நாள் நாம அண்ணி வீட்ல இருப்போம்? அஞ்சலிக்கு ஏதாவது வாங்கணும். இப்ப போய் வாங்குவோமா, இல்லை டெல்லில போய் வாங்குவோமா? ஆதி அத்தானும் காயு அக்காவும் வரது இன்னும்சந்தோஷமா இருக்கும்ல? மஞ்சு அண்ணியை நான் ரொம்ப மிஸ் பன்றேன். இப்ப அவங்களைப் பாக்கலாம், ஜாலில்ல?”, என்று சந்தோசத்துடன் கேட்டாள். இத்தனை வருடம் தனிமையில் வாழ்ந்த ரேகாவுக்கு அனைவரும் ஒன்றாக போவது அவ்வளவு சந்தோசமாக இருந்தது.

Advertisement

அது மட்டுமில்லாமல் விக்ரமின் அருகாமையும் அவளுக்கு கிடைக்குமே? அதனால் விஷயம் தெரிந்ததில் இருந்து அவள் மிகம் மலர்ந்தே இருந்தது. இங்கே அவன் அவளுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. காலையிலே கம்பெனிக்கு போறவன் இரவில் தான் வீட்டுக்கு வருகிறான்.

Advertisement

அவ்வளவு நேரம் பார்க்காதவனைப் இரவு பார்த்ததும் அவனிடம் பேச ஆசை மலை அளவுக்கு இருக்கும் ரேகாவுக்கு. ஆனால் அவள் என்ன பேசினாலும் முகத்தில் அடிப்பது போல பதில் கொடுத்து விடுவான். அவன் என்ன சொன்னாலும் மீண்டும் மீண்டும் அவனிடம் அவள் பேசத் தான் முயற்சி செய்வாள். அவளுக்கு அவன் திட்டினாலும் பரவாயில்லை, ஆனால் அவன் அந்த அறையில் இருக்க வேண்டும்.

டெல்லி சென்றால் ஒரு வாரம் அவன் தன்னுடைய அருகாமையிலே இருப்பான் என்று எண்ணி அவளுக்கு சந்தோஷமாக இருந்தக்து. அவளது சந்தோஷத்தை வெறித்துப் பார்த்தான் விக்ரம். அவனது பார்வை அவளது முகத்தில் இருந்து இறங்கி அவள் உடல் முழுவதும் பயணம் போக அவனுக்கு ஐயோவென்று இருந்தது. அவளுடைய அழகு அவனுடைய உணர்வுகளை திருடிக் கொண்டிருந்தது.

அவனுடைய தாபத்தைக் காட்ட முடியாமல் அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. அந்த கோபத்தை அவளிடமே காட்டினான். “என்ன சந்தோஷம் எல்லாம் பலமா இருக்கு? வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் அவன் கூட ஹனிமூன் கொண்டாட இப்படி தான் சந்தோஷமா கிளம்பிருப்பியா?”, என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.

அடுத்த நொடி சுடு தண்ணீரை முகத்தில் ஊற்றியதைப் போல துடித்து அவனைப் பார்த்தாள் ரேகா. அவள் சந்தோஷம் எல்லாம் கலைந்து காணாமல் போனது.

அவன் பேசுவதை எவ்வளவு தான் பொறுத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் அவன் மனதைக் குத்திக் கிழிக்கும் போது அவன் மேல் வெறுப்பு வராமல் அவன் காதலைத் தான் அவள் மனம் தேடுகிறது. அதைத் தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

“ஏன் தான் இந்த மனம் அவன் பின்னாலே அலைகிறதோ?”, என்று தன் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. வேதனையாக அவனை பார்த்தாள். அவளுடைய அந்த வேதனையான பார்வையில் அவன் உயிர் துடித்தது.

“பாவி என்னோட வார்த்தையால இவ்வளவு வேதனைப் படுறாளே, என் வாயும் சும்மா இருக்கா பாரு?”, என்று மனதில் எண்ணியவன் அவளுடைய வேதனையை தாங்க முடியாமல் “சரி சரி அப்படியே உன் டேமைத் திறந்திராத. டெல்லில போய் எல்லாம் வாங்கிக்கலாம். இப்ப டிரஸ் மட்டும் எடுத்து வை.  என்னோட டிரஸ்ஸும் எடுத்து வை. எனக்கு கொஞ்ச நேரம் தூங்கணும்”. என்றான் விக்ரம்.

“நான் எதுக்கு உங்களுக்கு வேலை செய்யணும்?”, என்று அவள் கேட்பாள் என்று எண்ணினான் விக்ரம்.

ஆனால் அவளோ அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கஷ்டப் படுத்தி விட்டு அதற்காக வருந்தி தான் அவன் இப்படி சமாதானமாக பேசுகிறான் என்று அவளுக்கு புரிந்தது.  காயமும் தந்து மருந்தும் தருபவனை என்ன செய்ய என்று தெரியாமல் இயலாமையாக பார்த்தாள் ரேகா.

அவள் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கவும் “என்ன பாத்துட்டு இருக்க? உன்னை டிரஸ் எடுத்து வைன்னு சொன்னேன்?”, என்றான் விக்ரம்.

அவன் சாதாரணமாக பேசியதும் முகத்தை சரி செய்தவள் “ஒரே பேக்ல எடுத்து வைக்கவா? இல்லை தனித் தனியா வைக்கவா?”, என்று கேட்டாள்.

“நாம தான் ஒண்ணா இருக்க முடியலை. அட்லீஸ்ட் நம்ம டிரெஸாவது ஒண்ணா இருக்கும்னு நினைச்சேன். அப்புறம் உன் இஷ்டம்”, என்று அவன் சொன்னதும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அவள் முகத்தில் சிரிப்பைக் காணவும் தான் அவனுக்கு போன நிம்மதி திரும்ப வந்தது. “ஒரே பேக்லயே எடுத்து வைக்கிறேன்”, என்று புன்னகையுடன் சொல்லி விட்டு எடுத்து வைக்க ஆரம்பித்தாள். முதலில் அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்தவள் அவனிடம் என்ன என்ன வைக்க வேண்டும் என்று கேட்டு எடுத்து வைத்தாள்.

எடுத்து வைக்கும் போது அவள் ஏதாவது கேட்டுக் கொண்டே இருந்ததால் அவனும் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். அவளுடன் பேசிக் கொண்டிருந்ததில் தூங்க வேண்டும் என்று எண்ணியதைக் கூட மறந்து போனான் விக்ரம்.

புடவையை இழுத்து சொருகிய படி எல்லாம் எடுத்து வைத்த ரேகா பேகை மூடி விட்டு “அப்பாடி எல்லாம் எடுத்து வச்சாச்சு”, என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தாள்.

அப்போது பளீரென்று அவள் இடை அவன் கண்ணில் விழுந்தது. அந்த வெண்ணிற இடையை கிள்ளி விட வேண்டும் போல எழுந்த எண்ணத்தில் தலையை ஒரு முறை உதறிக் கொண்டான் விக்ரம்.

அவளைப் பாக்காத என்று அவன் மூளை எச்சரித்தாலும் அவளுடைய அங்க அசைவுகளில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான். அவளது அசைவுக்கு ஏற்ப அவளது நீண்ட பின்னலும் அசைந்தாட அதை இழுத்துப் பிடிக்க ஆசை கொண்டான்.

அது மட்டுமல்லாமல் அவளை இழுத்து அவளுடைய மென்மையான இதழ்களில் முத்தமிட வெறியே வந்தது. ஆனால் எதுவுமே செய்ய முடியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம். அவனுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அன்று ஊருக்கு செல்வதில் உற்சாகமாக இருந்தாள் ரேகா.

அவன் மன உணர்வுகள் ஒரு வேளை புரிந்தாலும் “இவனை நானா விலகி இருக்கச் சொன்னேன்?”, என்று தான் எண்ணியிருப்பாள்.

அன்றைய நாள் அப்படியே கடந்தது. அன்று இரவு நால்வரும் சேதுபதி மற்றும் சாரதாவிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள். அந்த பயணம் அனைவருக்குமே சந்தோஷத்தை தந்தது. ரேகாவும் காயத்ரியும் சலசலத்துக் கொண்டே வந்தார்கள். அவர்களுக்கு பேச ஆயிரம் விஷயங்கள் இருந்தது.

அவர்களின் பேச்சை ரசித்த படி வந்தார்கள் ஆதியும் விக்ரமும். மஞ்சு வீட்டுக்கு சென்றதும் அவர்கள் நால்வரையும் பாசமாகவும் அன்பாகவும் வரவேற்றார்கள் சுதாகர் வீட்டினர்.  அஞ்சலி மாற்றி மாற்றி காயத்ரி மற்றும் ரேகாவிடம் தஞ்சம் புகுந்தாள்.

அதன் பின் தடாபுடலான உணவு, அதன் பின் ஓய்வு என்று அவர்களுக்கு நேரம் சென்றது. அடுத்த நாள் வெளியே சுற்றிப் பார்க்க போனார்கள். சுதாகர் அவர்களுக்கு கார் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டான். மஞ்சு இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்ததால் அவள் அவர்களுடன் செல்ல வில்லை.

அஞ்சலியை அழைத்துச் செல்கிறோம் என்று சொன்ன ரேகா மற்றும் காயத்ரியிடம் மஞ்சு “ரெண்டு பேரும் உங்க புருஷனை மட்டும் பொறுப்பா பாத்துக்கிட்டா போதும். அஞ்சலி இப்ப உங்க கூட வந்தா உங்க எல்லாரோட கவனமும் அவ மேல தான் இருக்கும். சுதாகர் ரெண்டு நாள் லீவ் போடுறேன்னு சொன்னாங்க. அப்ப நாம எல்லாரும் ஒண்ணா போகலாம். இப்ப நீங்க மட்டும் கிளம்புங்க”, என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள்.

சுதாகர் ஏற்பாடு செய்த கார் டிரைவர் காரை ஓட்ட இவர்கள் நால்வரும் பின்னால் ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தார்கள். அது ஒரு பெரிய குடும்பமே அமரக் கூடிய கார் என்பதால் வசதியா இருந்தது.

இந்தியா கேட்டை சுற்றிப் பார்த்தார்கள். காய்த்ரி ஆதி கையைப் பற்றிய படியே தனியே கழண்டு கொள்ள வேறு வழியில்லாமல் விக்ரமும் ரேகாவும் தான் சேர்ந்து சுற்ற வேண்டி இருந்தது. ஏற்கனவே விக்ரம் இங்கே எல்லாம் வந்திருக்கிறான் என்பதால் ரேகாவிடம் பழைய நினைவுகளை ஒரு நண்பனைப் போல பகிருந்து கொண்டான். ரேகாவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

அவர்களை ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணிய ஆதியும் காயத்ரியும் இன்னும் நெருக்கமானது தான் மிச்சம். ஆனால் விக்ரம் மற்றும் ரேகா இருவரும் சாதாரணமாக தான் இருந்தார்கள். சாதாரணமாக இருந்தார்கள் என்று சொல்வதை விட அப்படி நடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இரவில் ஒரே அறையில் எப்போதும் போல தனித் தனியே தூங்கும் போது அவர்களுக்கு தூக்கம் தான் வந்த பாடில்லை.

அதன் பின் ஹூமாயூன் கல்லறையையும் சுற்றிப் பார்த்தார்கள். மதிய உணவு மட்டும் அவர்களுக்கு ஹோட்டல் தான். அடுத்து வந்த நாட்களில் குதுப்மினார், செங்கோட்டை, தாமரைக் கோவில், ஜந்தர் மந்தர் என அனைத்தையும் சுற்றிப் பார்த்தார்கள். ஜும்மா மசூதி மற்றும் லக்ஷ்மிநாராயணன் கோவிலைப் பார்க்க சுதாகரும் குடும்பத்துடன் அவர்களுடன் வந்தான்.

ஊருக்கு கிளம்புவதற்கு முந்தைய நாள் விக்ரம், ஆதி, ரேகா, காயத்ரி நால்வரும் லோதி பூங்காவுக்கு வந்திருந்தார்கள். தொண்ணூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்தது அந்த பூங்கா.

“நீங்க இங்க சுத்திப் பாருங்க விக்ரம். காயத்ரிக்கு நான் அந்த இடத்தை காட்டிட்டு வரேன். வா காயத்ரி”, என்று சொல்லி விட்டு சென்றான் ஆதி. அவனுடன் காயத்ரியும் சென்று விட்டாள். தங்களுக்கு தனிமை கொடுக்கத் தான் அவர்கள் செல்கிறார்கள் என்று விக்ரமுக்கு புரிந்த்தது. வந்ததில் இருந்து தன்னையும் ரேகாவையும் கோர்த்து விடும் அவர்களின் வேலையை அவன் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்.

ஆனால் அவர்கள் என்ன தான் முயற்சி செய்தாலும் விக்ரம் ரேகாவை நெருங்கவே இல்லை. அவளைத் திரும்பிப் பார்த்தான். நீல வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சேலையைக் கட்டியிருந்தாள். அது அவளுக்கு அவன் வாங்கிக் கொடுத்தது தான். அந்த புடவையில் அதிக அழகோடு இருந்தவளை சுற்றியே அவன் பார்வை பதிந்தது.

அவன் பார்வையைக் கவனிக்காத ரேகா “என்னங்க, அத்தானும் அக்காவும் அந்த பக்கம் போறாங்க. நாமளும் போவோமா?”, என்று கேட்டாள்.

“எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்ணனும்? அவங்களுக்கு அங்க ஆயிரம் வேலை இருக்கும். அவங்க என்ன நம்மளை மாதிரியா?”, என்று அவன் சொன்னதும் முதலில் புரியாமல் விழித்தாள். பின் புரிந்ததும் அவள் முகம் சிவந்து விட்டது. அவள் சிவந்த முகத்தை கண்ட விக்ரம் அவளை விழுங்குவதைப் போல பார்த்தான்.

அவன் பார்வையைக் கந்தவள் “இப்படி பாக்க வேண்டியது. அப்புறம் வியாக்கியானம் பேச வேண்டியது? இவனுக்கு இதே வேலையா போச்சு”, என்று எண்ணிக் கொண்டாள்.

பேச்சையும் மனதையும் மாற்ற எண்ணி “அங்க ஊக்காருவோமா?”, என்று கேட்டாள் ரேகா. அவன் சரி என்று தலையசைத்ததும் அங்கிருந்த திண்டில் அமர்ந்தார்கள். மற்ற ஜோடிகள் அனைவரும் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்க இவர்களோ சிறிது இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் இருந்தே இவர்களைக் கண்ட ஆதியும் காயத்ரியும் தலையில் அடித்துக் கொண்டார்கள்.

“என்ன டி இவங்க இப்படி இருக்காங்க?”, என்று ஆதி கேட்டதும் “அதானே எனக்கும் ஒண்ணும் புரியலை. சுத்தி இருக்குறவங்களைப் பாத்தாவது மனசு மாற வேண்டாமா?”, என்று கேட்டாள் காயத்ரி.

“எங்க, அவங்க நம்மளைப் பாத்தே மனசு மாறலை. சண்டை இல்லாம பேசிக்கிறாங்க. அது மட்டும் தான் தெரியுது. நம்மளால இதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது காயும்?”

“இப்ப நாம திருப்பி அங்க போயிருவோமா? அவங்க எப்படியும் கடைசி வரை இப்படி தான் இருக்க போறாங்க? அங்க போய் நாமளும் பேசிட்டு இருக்கலாம்”

“அதுக்குள்ளே போகனுமா?”, என்று ஆசையாக கேட்டவனின் கண்களில் காதல் சொட்ட, அடுத்த நொடி காயத்ரிக்கு விக்ரம் ரேகா நினைவிலே இல்லை. அவன் கைகளுக்குள் புகுந்து கொண்டாள்.

அங்கே அமைதியாக அமர்ந்திருந்த விக்ரம் மற்றும் ரேகா மனதையும் தென்றல் காற்று குளிர்விக்க முயன்றது. காற்று கலைத்து விளையாடும் அவளது சிகையை வருட ஆசை எழுந்தது அவனுக்கு. அவனுடைய தோளில் சாய்ந்து பல கதை பேச வேண்டும் என்றும் ஆசை எழுந்தது அவளுக்கு. அது முடியாததால் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

விழி பேசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!