Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்டா வரச் சொல்லுங்க

கண்டா வரச் சொல்லுங்க – பகுதி 6

கண்டா வரச் சொல்லுங்க பகுதி

 

ஆள்ஆரவமற்ற சாலையில், ஒளியை வீசிக்கொண்டு வேகமாக வந்தது அந்த கார். அதன் தலையில் அதிக கனமான பெட்டிகள் கயிற்றால் பிணைக்க பட்டிருந்தன.

அந்த வீட்டின்  வாசலில் நின்றது. வராண்டாவில் மெல்லிய விளக்கு எரிந்தது. பெட்டிகளை ஓட்டுனர் உதவியுடன் இறக்கி, வாடகைக் காரை அனுப்பினான், தன்னிடம் உள்ள சாவியால் கதவைத் திரந்து சத்தமில்லாமல் உள்ளே சென்றான் கண்ணன்.



Advertisement

தொடர் கச்சேரியாக ஒருமாதமாக சுற்றிக்கொண்டே இருந்தான். கல்யாணத்திற்குப் பின் முதல் முறையாக இவ்வளவு நாட்கள் மனைவியை பிரிந்து இருக்கிறான். அவளை அழைத்துச் செல்ல முடியவில்லை, இந்நிகழ்ச்சி கல்யாணத்திற்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் பிரிவு காதல் மனைவியை மனம் நாட …பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா ..மனைவியின் உருவமே தோன்ற, அவள் நினைவாக நிறைய பரிசுகளை வாங்கி வந்திருந்தான்,

கீழ் அறையிலேயே பிரெஷ் ஆகி, தங்கள் அறையை அடைந்தான். பெரிய கட்டிலில் தன் பெரிய டெடி பியரை கட்டி படுத்திருந்தாள் அவன் மனைவி சீதா. அவளை எழுப்பாத வண்ணம் அருகில் படுத்தான்.

Advertisement

கபடமற்று உறங்கும் தன் மனைவியை பார்த்திருந்தான். இன்னும் அவள் முகத்தில் குழந்தைத்தனம் இருந்தது, டெடியை பிடித்து இருந்தது அவளது ஆதரவற்ற நிலையைக் காட்டியது. பெற்றோரையும் பிரிந்து தனக்காக வந்தவள், நம்மை விட்டால் அவளுக்கு யார் ? எப்படி சமாளித்தாளோ என மிகவும் வருந்தியவன் ,,இனி இவ்வளவு நாள் பிரிந்து போகக்கூடாது. என எண்ணினான்.

Advertisement

இனி தன்னுடன் தன் மனைவியும் வருவாள் என தன் குழுவில் ஏற்கனவே சொல்லியிருந்தான், இவன் பொருட்கள் வாங்கி குவித்ததையே கிண்டல் செய்தவர்கள், இப்படி சொல்லவும் அவனை ஓட்டி ஒரு வழி பண்ணி விட்டார்கள். அந்த சுகமான நினைவுடன் கண் அசந்தான்.

நன்கு ஆழ்ந்த உறக்கம் நீங்கி எழுந்தான், அருகில் மனைவியில்லை, சன்னலில் சூரிய வெளிச்சம், அவன் உச்சத்தில் இருப்பதை சொன்னது. இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா? என சோம்பல் முறித்தவன், துண்டு கொண்டு முகத்தை துடைத்த வண்ணம் அறையை விட்டு வெளியே வந்தான்.

நடு அறை முழுதும் பரிசுப் பொருட்களை பிரித்து நிறைத்திருந்தாள். பொம்மை, காதில் மாட்டிக் கேட்க ப்ளுடூத் ஹெட் போன், தானே வீடு துடைக்கும் ரோபோட் என …பலவும்.

Advertisement

கண்ணனை பார்க்கவும், “டார்லிங்” என ஓடி வந்து கட்டியவள், “மிஸ் யூ லாட்” என அவன் மார்பில் சாய்ந்தாள். பிரிவின் துயர் அடங்க, பரிசுப் பொருட்கள் பக்கம் கவனம் செல்ல, “இவ்வளவும் எனக்கா ? எனக்கு பிடிச்சது” என, ஹெட் போனை காதில் மாட்டி பாடல்களை ஒலிக்க விட்டவள், “இருங்க பசிக்கும், உங்களுக்கு பிடிச்ச டிபன் பண்றேன்” என அடுக்களை சென்றாள்.

“முதலில் காபி சீதா  ..நம்ம ஊர் காபி ரெம்ப மிஸ் பண்ணினேன்”.

“அப்ப என்னை மிஸ் பண்ணல ? என சீதா வம்பிழுக்க, “அடிங்” என செல்லமாக தலையில் தட்டினான்.

காலை உணவு முடிக்கவும், தான் கொண்டு போன பெட்டியைத் திறந்தவன்..”இன்னும் என் தேவதைக்கு, விலை மதிப்பு மிக்க பரிசு”, என அவள் கழுத்தில் அழகிய வேலைப்பாடு அமைந்த நெக்லசை அணிவித்தான்.

டிரெஸ்ஸிங் கண்ணாடியில் கொண்டு நிறுத்தி, அவள் தோள் வளைவில் தன் நாடியை வைத்து, கைகளை அவள் இடுப்பில் கொடுத்து அணைத்து, பெருமையை கண்ணில் தாங்கி நின்றான்.

அவளுக்கு பொருத்தமான நகை, மேலும் அழகை கூட்டியது, கணவனின் அன்பில், கன்னம் சிவக்க நின்றவள், “என்னங்க ஒரு சந்தேகம் ?”

“என்னம்மா கேளு” என்றான்.

“என்ன திடிரென்று இந்த விலை உயர்ந்த பரிசு?, என் பிரிண்ட்ஸ் சொல்வாங்க, தப்பு பண்ணதை மறைக்க தான் இப்படி பரிசுகள் கொடுப்பாங்க என்று….நீங்க என்ன தப்பு பண்ணீங்க?..எவளோட போனீங்க” என கேட்டாள்.

அவமானத்தால் முகம் சிவக்க “ச்சீ” …என அசிங்கத்தை தொட்டது போல் விலகியவன்…”நீயெல்லாம் …திருந்த மாட்ட ? ச்சே …உனக்கு வாங்கினேன் பாரு என்னை பிஞ்ச செருப்பால் அடிக்கணும்” ,,, என வெளியேறினான்.

“வாசலில் கிடக்கும்ங்க” … சத்தமாக. கணநேர பலவீனம் அவனின் நிம்மதியை அழித்தது.

—————————-

“மூர்த்தி உண்மை தவிர, வேறு பேசக்கூடாது” என்றான் வெற்றி கடுமையாக.

“ஒகே சார்…அவனோட கோபம் வழக்கமானது தான், பின்னர் அவனே வந்து பேசுவான்…அதனால் தான் அதை பெருசு பண்ணல, சாரி சார்”.

வெறுமன தலையை மட்டும் ஆட்டினான் வெற்றி. தொடரும் படி கையால் சைகை காண்பித்தான்..கபிலை பார்த்த பார்வை, பதிய சொன்னது.

“அது அவனோட கல்யாணத்துக்குப் பின் கொஞ்சம் எங்க மேலே அவனுக்கு வருத்தம் இருந்தது.. ஏன்னா அவனோட மனைவி எனக்கு தூரத்து சொந்தம் வந்தது”.

“சொந்தம்னு கல்யாணத்துக்கு முன்பே  தெரியுமா ? அதான் உதவி செய்தீங்களா ?”

“அச்சோ சார் அப்படி இல்ல… பின்னர் தான் தெரிய வந்தது. அவனோட மாமனார் பூர்வீகம் எங்க ஊராக இருந்தது. அதனால் அவன் மனைவி எங்களோடு தான் பழக்கம், அனுபவம் காரணமாக, குடும்ப நன்மைக்கு ஏதாவது சொன்னால், தவறாக எடுத்துக் கொண்டான்”.

“உங்க நண்பன் கல்யாண வாழ்வு எப்படி இருந்தது ?”

“இருவருமே அன்னியோன்யமாக தான் இருந்தார்கள். அவங்க புரிதலும் காதலும் சிறப்பாக இருந்தது. அவளுக்காக பார்த்து பார்த்து செய்வான். அவளுக்காக தான் பயிற்சிக்கு என தனி வீடு பிடித்தான்”.

“ஆனால் பக்கத்தில் உள்ளவர்கள் அப்படி சொல்லவில்லையே ? எப்பவும் அவர்களுக்குள் சண்டை என்றார்களே. சீதா  ரெம்ப வசதியான குடும்பமோ?”

“அது வீட்டுக்கு வீடு வாசப்படி தானே. ஆனால் அவன் மனைவி ஒரே பொண்ணு என்பதால் கொஞ்சம் செல்லம் அவ்வளவு தான். ரெம்ப பொறுப்பான பிள்ளை, அவனோட டேட்ஸ் பார்த்தது, பணத்தை முதலீடு பண்ண வைத்தது எல்லாம் அவள் தான்”.

“இரண்டு பேருக்கும் எதனால் பிரச்னை வந்தது?”.

“அவனோட குடிப் பழக்கம், அப்புறம்…பெண்களோடு அவனுக்கு உள்ள பழக்கம்”.

“அவருக்கு தவறான தொடர்பிருக்கா?”

“அப்படியெல்லாம் இல்ல சார், அவனோடு பாடும் பெண்களோடு உள்ள தொழில் பழக்கத்தை கூட கல்யாணத்திற்கு அப்புறம் அவன் மனைவிக்கு பிடிக்கல, அதனால தான் பாட பயிற்சி எடுக்க தனி இடம் பிடித்தான்”.

“அப்புறம் ….அவங்க வாழ்வில் சண்டை வரலையா?”

“ரெம்ப இல்ல, வயது வித்தியாசம் சில சமயம் சின்னப்பிள்ளையாக நடப்பதாக சொல்வான். அவன் தொழில் பணவரவுகள் எல்லாம் முதலாக ஆனதால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு, இதுவரை சுதந்திரமாக இருந்தவன், அவன் மனைவிக்கோ  கிசுகிசுகளை பக்குவமாக கையாள தெரியாமல், சில கருத்து முரண்கள் மட்டும் தான்”.

“உங்களுக்கும், அவருக்கும் என்ன பிரச்னை?”

“பயிற்சி நடக்கும்போது சிலசமயம் நேரில் சென்று தொல்லை பண்ணினாள் என்று, அவன் செல்லும் இடங்களை அவன் மனைவியிடம் மறைத்து வைத்திருந்தான்…நண்பன் என்ற முறையில் நான் அறிந்தது. அதைத் தெரிந்து கொண்டு ஒரு முறை என்னிடம் வந்தாள்”.

மூர்த்தி சொல்பவை காட்சியாக …..

“வாம்மா …. எப்படி இருக்கிற?” என கேட்டவன் உட்புறம் நோக்கி மனைவியிடம் சீதா வந்திருக்கிறாள் என சத்தம் கொடுத்தான்.

“உங்க ப்ரண்ட்யை  கட்டினதற்கு உயிரோட இருப்பதே பெரியது தானே ?”

“வா சீதா, ஏம்மா அப்படி பேசுற ..? இந்தா இதைக் குடி” என குடிக்க பானம் கொடுத்தாள் மூர்த்தியின் மனைவி.

“அவனைப் பற்றி தெரிந்து தானே கல்யாணம் பண்ணின ? கொஞ்சம் நீ அனுசரித்து போம்மா ..எல்லாம் சரியாகிடும்” என மூர்த்தி சமாதானப்படுத்தினான்.

“ஆமாம் நானே தான் எல்லாத்துக்கும் காரணம். என்னையே சொல்லுங்க”.

“காலையில் சாப்பிட்டியா, இவளை உள்ள கூட்டி போம்மா ..அவன் இன்று வந்துடுவான்” என வாயை விட்டான். அதற்கு தானே இங்கே வந்தாள்.

“அப்ப அவர் இருக்கும் இடம் உங்களுக்கு தெரியும் அப்படித்தானே ?”

“இல்லம்மா நேற்று பேசும்போது, நாளை ஊர் வருவேன்னு சொன்னான் மா”.

“உங்ககிட்ட பேசுறார் நான் போன் பண்ணினா எடுக்கல” மூக்கை சிந்தினாள்.

“அவன் வேலை அப்படி, உனக்கு தெரியும் தானே..உனக்கு தகவல் அனுப்பினேன்னு சொன்னானே”.

“அதற்கு குறைச்சல் இல்ல.. இங்கே போறேன், இன்னைக்கு வாறன்னு, துரைக்கு பேச நேரமில்ல”.

மூர்த்தி அதிர்ந்து பார்த்தான்.

“சரி விடுங்க, ..அவர் அப்படித்தான், நான் தான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும், இதானே சொல்வீங்க”

அவளின் பேச்சு, நண்பனின் குடிக்கான காரணத்தைச் சொன்னது.

“அவர் இருக்கும் இடம் தெரியும் தானே என்னை அங்கே கூட்டி போங்க” என அடம்பிடித்தாள்.

“ஆஹா, சிக்கிட்டோமா” என விழித்தான்.

“நீங்க கூட்டி போகலைன்னா அவர் வரும்போது என்னை பிணமாகத் தான் பார்ப்பார்”…என கைப்பையிலிருந்து மாத்திரை அட்டைகளை எடுத்தாள்.

நடந்ததை விவரித்தவன், “வேறு வழியின்றி அவளை கண்ணன் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றேன், நாங்கள் வருவதை அவனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன்.

கண்ணன் வாசலிலேயே எங்களை மறித்து, “நீ இங்கே ஏன் வந்த? என்னை வேவு பார்க்கிறியா ? ஆமாம் நான் அப்படித்தான்…பூக்க்களை தேடிச் செல்லும் வண்டு… என்னை உன்னால் கூட்டுக்குள் அடைக்க முடியாது…உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” வேண்டும் என்றே அருகில் நின்ற பெண்ணின் தோளில் கை போட்டுக்கொண்டு சொன்னான். மேலும் என்னை முறைத்துப் பார்த்து, “இனி நீ என் நண்பன் இல்லை அவளோட உறவினன் மட்டுமே” என்றான், அதன் பின் என்னோடு பேசவில்லை”.

“நீங்க முயற்சிக்கவில்லையா ?”

“அவன் சொன்னால், சொன்னது தான்”, அதன்பின் யாரோ போல நடந்துக்க ஆரம்பித்தான்.

“அப்ப இறுதி வரை பேசல”.

“ஆமாம் சார்”.

“அவர் இப்ப இருந்த வீடு தெரியுமா ?”

“இல்லை சார்… தெரிந்தால் அவன் மனைவி சண்டைக்கு வருவாள், அதனால் தெரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்ல, அப்படியே ஒதுங்கி விட்டேன்”.

“சம்யுக்தானு யாரையாவது தெரியுமா ?”

“இல்ல சார்”.

“ஓகே. எப்ப கூப்பிட்டு விட்டாலும் வரணும், வெளியூர் போனால் தகவல் சொல்லிட்டு போங்க” என விசாரணையை முடித்தான் வெற்றி.

—————————————————

குக்கூ …குக்கூ ….தாத்தா களவெட்டி … திருப்பி திருப்பி அதன் இசையை தன் ஹெட் போனில் ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் அன்பரசி. அவ்வளவு ஒன்றும் அந்த பேருந்தில் கூட்டம் இல்லை.

ஆனாலும் ஏதோ தூண்டுதல், சிவப்பு சுடிதார் சின்ன பெண்ணை நோக்கினாள். அவள் இடம்  மாறி மாறி நிற்பதை உணர்ந்தாள். தன் கவனத்தை அவளிடம் செலுத்த, இவள் நாம் அமரும்போது பின்னால் நின்றாளே, இங்கே ஏன் வந்தாள்? அவளும் இடம் மாற ஆட்கள் மாறி மாறி நிற்கிறானுகளோ? சுற்றி நோக்கினாள். ஒரு குழுவாக நிற்கிறார்கள். அந்த பெண் தான் நகருவது போல் பார்க்க தோன்றும், ஆனால் அவளின் மீது தொல்லைகள் தொடரும்.

நெடுநேரம் அனுபவிக்கிறாள் போல அவளிடம் அமைதி இல்லை, உடலில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது…ஒரு அவஸ்தையுடன் நிற்பது தெரிந்தது. எவ்வளவு படித்தாலும் நம் சமூகமும் மாறவில்லை, நம் மக்களும் மாறவில்லை. பெண்ணை உடலாக மட்டும் பார்ப்பது.

பின் நிற்பவர்களை நோக்கினாள். நாகரீக தோற்றம்,  பயங்கர டிப்டாப் கண்ணில், கூலிங் கண்ணாடி, ஒற்றைக்காதில் ப்ளுடூத், மற்றதில் கடுக்கன்..என்ன நாகரீகமோ? தெரியவில்லை, அவனையே பார்க்கவும், அவன் அந்த பெண்ணை…..சட்டென எழுந்தவள் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.

“என்ன …என்ன” …என அருகில் நின்ற அவன் நண்பர்கள் கூடினர். அவள் ஓரளவு அனுமானித்து இருந்தாள் அந்த கூட்டத்தை. இந்த களபரத்தில் அந்த பாதிக்கப்பட்ட சின்ன  பெண் நகர்ந்து முன் சென்று இருந்தாள். ஓடி ஒளிந்து கொள்ளவே இந்த சமூகம் பழக்கப்படுத்தி இருக்கிறது.

நண்பர்கள் என கூட்டமாக தான் ஈடுபடுவார்கள் போல, கூச்சல் குழப்பமும் ஏற்படுத்த, பயந்த ஓட்டுநர், வாகன சோதனையில் இருந்த காவலர்களில் அவனுக்கு தெரிந்த வெற்றி நிற்கவும் அங்கே வேகமெடுத்து சென்று நிறுத்தினார். ஒரு குற்றவாளியை தேடி, வாகனங்களை போக்குவரத்து காவலர்களுடன்  பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர் வெற்றியும், அவன் குழுவும்.

காவலர்களை பார்க்கவும் கலைந்து ஓடினர். ஆனாலும் அன்பரசி வம்பு பண்ணவனை தப்பிக்க விடவில்லை. அவனின் கையை முறுக்கி பிடித்தாள். அது அவளுக்கு தற்காப்பு கலை தெரியும் என சொன்னது. ஒரு நண்பன் ஓடாது கூடவே நின்று சிக்கினான்.

பேருந்தும், அதன் களபேரம், கண்டு காவலர்கள் ஏறி, அவனையும் அவன் நண்பனையும் கீழ் இறக்கினர். எஞ்சிய பயணிகள் தங்கள் வேலைக்கு நேரமாகும் என ஓட்டுனருடன் சிலர் வாக்குவாதம் செய்தனர். “பிரச்னை உள்ளவங்களை வச்சுக்கிட்டு பேருந்தை விடலாமே” என வெற்றியிடம் சிலர் இதமாக பேசினர், கூட்டத்தில் சலசலப்புக் கண்டு, அன்பரசியையும்  இறக்கிய பின் பேருந்தை அனுப்பி வைத்தான் வெற்றி.

அந்த சின்ன பெண் குனிந்து அன்பரசியை பார்த்தாள் அதில் பயம் கலந்த இறைஞ்சல் இருந்தது. என்னப்பா என்னாச்சு என விசாரணையை தொடங்கினான். அன்பரசி அடித்ததை மட்டும் சொன்னார்கள் அவனும் அவன் நண்பனும். அன்பரசிக்கும் அந்த சின்னப்பெண்ணை காட்டிக் கொடுக்க விருப்பமில்லாமல் மௌனமாக நின்றாள்.

வெற்றிக்கு அவளின் நேர் பார்வை, அழுத்தம், என்னெல்லாம் சொல்றன்னு பார்க்கிறேன் பாரு என்பது போல் நின்ற தோரணைக் கண்டு, நீங்க என்ன பண்ணீங்க ? என்று மீண்டும் மாணவர்களிடமே கேட்டான்.

செய்தவன் திணற, நண்பன், “என்ன சார் எப்பவும் பெண்கள் என்றால் ஓரவஞ்சனை, ஆண்களை மட்டுமே குற்றம் சொல்வது அவங்களை முதலில் விசாரிங்க சார்”.

“யாரை விசாரிக்கணும் எங்களுக்கு தெரியும், இவனுகளை ஸ்டேசன் கொண்டு போங்க, முறையாக விசாரிப்போம்” என ஆணையிட்டான்.

“சார்…சார்…மன்னிச்சுடுங்க சார்…கூட்டத்தில் ,,, தெரியாமல் கைப்பட்டதுக்கு அடிக்கிறாங்க சார்”.

அவளை திரும்பி பார்த்தான்…நீல நிற கால்சட்டை, சந்தன நிற டாப் போட்டு இருந்தாள். அப்படி எல்லாம் அவளிடம் வாலாட்ட முடியாது என ஏனோ தோணியது. வேற ஏதோ நடந்திருக்கு என யூகித்தான் அதனால் பையன்களை ஸ்டேசன் அனுப்பினான்.

“என்ன மேம் நீங்க ஒன்றும் சொல்லல…நீங்களும் ஸ்டேசன் வர வேண்டியது இருக்கும்” என்றான்.

“எந்த ஸ்டேசன் சார்…சொல்லுங்க ஒரு அரைமணிநேரத்தில் வரேன்” என்றாள்.

சுற்றுமுற்றும் பார்த்து, “வண்டி கூட இல்ல, ஜீப்பில் ஏறுங்க”…என்றான்.

“இல்ல சார், முக்கியமான வேலை தானியில்(ஆட்டோ) வந்துடுறேன்  சார்.

“என்னமா விளையாடுறீங்களா? பொது இடத்தில் இடையூறு பண்ணி இருக்கிறீங்க, மாணவனை கை நீட்டி அடிச்சு இருக்கிறீங்க .. குற்றம் தெரியுமா? நியாயப்படி உங்களை கைது பண்ணனும், பையன்களை பார்த்தால், அவர்களிடம் ஒரு கள்ளத்தனம் தெரியுது, அதனால்தான் தனியாக விசாரிக்கலாம் என பின்தங்க வைத்தேன்”.

“சார், எனக்காக பசியோட காத்திருப்பாங்க” என தோளில் உள்ள பையை காண்பித்து, “ப்ளீஸ் சார்” என்றாள்.

“எங்கே போகணும்? சாப்பாடா  ?”

“இங்கே பக்கம் தான், அடுத்த நிறுத்தம்தான் அதற்குள் இப்படி ஆகிடுச்சு. இதுவே நேரம் ஆயிடுச்சு” என வருத்தப்பட்டாள்.

“சரி பக்கம்னா, நானே அங்கே கூட்டி போறேன்..முடிச்சுட்டு ஸ்டேசன் போலாம், உங்களிடம் இன்னும் விசாரிக்கவே இல்லையே” என்றான்.

“அந்த பசங்களை பார்த்தாலே வில்லங்கமாக தெரியுது ..சிலர் ஓடிட்டாங்கல்ல, சில நடவடிக்கைகள் எடுக்கணும்” என கட்டாயப்படுத்தினான்.

“அவன் விடமாட்டான் என அறிந்து, “சரி” என அவன் வண்டியில் ஏறினாள்.

கொஞ்ச தூரம் செல்லவும், ஒரு சின்ன சந்தில் திரும்ப சொன்னாள். அதில் கட்டிடமோ, இல்லமோ தெரியலை…ஒரு ஒத்தையடிப் பாதை தெரிந்தது..”இங்கே தான் நில்லுங்க சார்” என இறங்கி வேகமாக சென்று ஒரு திருப்பத்தில் மறைந்தாள்.

‘எங்கே போறாள்?” என யோசனையுடன் தானும் வண்டியை நிறுத்தி பின் தொடர்ந்தான்.

‘தப்பிச்சுட்டாளா’ …என தோன்றவும் வேகமாக ஓடினான்.

மீண்டும் வருவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!