Skip to content
Post Views: 4,583
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 26
ஆதி அர்ஜுனுக்கு ஐஸ்வர்யாவின் போட்டோவை அனுப்பி இருந்தான். ரோஸ் கலரில் பொம்மை மாதிரி இருந்த குழந்தையைப் பார்க்க பார்க்க, அர்ஜுனுக்குக் குழந்தையை அள்ளி கொஞ்சும் ஆசை வந்தது. அவன் இந்தியா வரும் போது குழந்தை வளர்ந்திருப்பாள் என்று நினைத்தான்.
குழந்தை பிறந்து முப்பதாம் நாள் அன்று திருச்சியில் ரஞ்சனா வீட்டில் வைத்துப் புன்னியாதானம் மற்றும் குழந்தைக்குப் பெயர் வைக்கும் நிகழ்ச்சியை உறவினர்களை அழைத்து விமர்சையாகச் செய்தனர். அதற்கு ஆதி வீட்டில் இருந்து அர்ஜுனை தவிர மற்ற அனைவரும் சென்றனர்.
மதுரையில் இருந்து வித்யாவின் அக்கா காயத்ரி மட்டும் வந்திருந்தார்.
வித்யா அவர்கள் வீட்டிலும் குழந்தையைத் தொட்டிலில் போடும் விழா வைத்திருப்பதால் வேறு உறவினர்களை அழைத்துச் செல்லவில்லை.
விழா முடிந்ததும் ரஞ்சனாவின் பெற்றோர் ரஞ்சனாவை மூன்று மாதம் சென்று அனுப்புகிறோம் என்று சொன்னதற்கு ஆதி ஒத்து கொள்ளவில்லை.
“இல்லை…. அங்க தான் அம்மா இருக்காங்களே… அவங்க பார்த்துப்பாங்க. என்னால கம்பெனியையும், கடையையும் போட்டுட்டு அடிக்கடி இங்க வர முடியாது. எனக்கு என் பொண்ணு வளர்வதைப் பக்கத்தில் இருந்து பார்க்கணும்.” ஆதி உறுதியாகச் சொல்லிவிட அதை மறுத்து யாராலும் பேசமுடியவில்லை.
“நான் பார்த்துகிறேன், வேலைக்கு இன்னொரு ஆள் போட்டிருக்கேன். ரஞ்சனா மூன்னு மாசம் வரை எந்த வேலையும் செய்யாம நான் பார்த்துக்கிறேன். கவலைபடாதீங்க…” என்றார் வித்யா. ரஞ்சனாவின் பெற்றோரும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டனர்.
மதிய உணவை சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் கிளம்பினர். ஆதி காரை ஓட்ட… கணேசன் ஆதியின் அருகே அமர்ந்துகொள்ள. ரஞ்சனாவும், வித்யாவும் குழந்தையோடு காரின் பின் சீட்டில் ஏறினர். ஆரு கடைசிச் சீட்டில் அமர்ந்து கொண்டாள். குழந்தை பால் குடிக்க… காரை வழியில் அங்கங்கே நிறுத்தி, நிறுத்தி வந்ததால் வீடு வந்து சேரும் போது இரவு பத்து மணி ஆகிவிட்டது.
அடிக்கடி வித்யா மாடி ஏறி வர முடியாது என்று ரஞ்சனா குழந்தையோடு கீழே இருந்த அறையில் தங்கிக் கொண்டாள். வீட்டு வேலைக்கு இன்னொரு பெண்ணை வித்யா வைத்து கொண்டதால்… குழந்தையைப் பார்த்துகொள்ளும் வேலையை வித்யாவும், ரஞ்சனாவும் செய்தனர்.
மீரா மறுநாள் கல்லூரியில் இருந்து குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நேராக அர்ஜுனின் வீட்டிற்குத் தான் வந்தாள். வந்தவள் ஆருவின் அறைக்குச் சென்று முகம், கை, கால் கழுவிவிட்டு வந்து தான் குழந்தையைச் சென்று தூக்கினாள்.
Advertisement
மீரா ரஞ்சனாவிடம் நலம் விசாரிக்க… ரஞ்சனாவும் மீராவை விசாரித்தாள். மீராவை பார்த்ததும் தான் ரஞ்சனாவிர்க்கு ஆதி சொன்னது ஞாபகம் வந்தது. அன்றிரவு ஆதியிடம் அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்தாள்.
அர்ஜுனும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஸ்கைப்ல் வந்தான். ஆருவும், மீராவும் போட்டிபோட்டுக் கொண்டு குழந்தையைத் தூக்குகிறேன் என்று குழந்தையை நசுக்க… வித்யா இருவரிடமும் இருந்து குழந்தையை வாங்கி, அவர் மடியில் வைத்துக் கொண்டு அர்ஜுனிடம் பேசினார்.
குழந்தையிடம், “அங்க பாருங்க, உங்க அர்ஜுன் சித்தப்பா.” என்று அவர் சொல்ல…
“நான் வர்றதுக்குள்ள வளர்ந்திடுவா இல்ல மா… இந்தக் குட்டி கை, கால் எல்லாம் பெரிசாகிடும்.” என்றான் அர்ஜுன் ஏக்கமாக…
“ரொம்ப எல்லாம் பெரிசாகி இருக்க மாட்டா… ஏழு மாசம் தான் ஆகி இருக்கும். உங்க அண்ணன் தான் சொல்ல சொல்ல கேட்காம, முப்பது நாள்ளையே குழந்தைய அலைய வச்சிட்டான். நான் உன் பொண்டாட்டிய குழந்தை பிறந்து ஆறு மாசம் கழிச்சு தான் கூப்பிடுவேன்.” வித்யா வேண்டுமென்றே சொன்னார்.
“என்னது ஆறு மாசமா… ஏன் மா இந்தக் கொலைவெறி உங்களுக்கு?” அர்ஜுன் அலற… “சும்மா சொன்னேன் டா… நான் உனக்குப் பொண்ணு சென்னையிலேயே பார்கிறேன். உன் பொண்டாட்டி பிரசவத்துக்குப் போகும் போது நீயும் கூடவே போ…” என அர்ஜுனை வித்யா சமாதானம் செய்ய…
“நான் தான் என் பொண்டாட்டிய பிரசவத்துக்கு அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பவே மாட்டேனே, அதனால அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்.” அர்ஜுன் தான் அவரின் பிள்ளை என்பதை நிரூபித்தான். அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு ரஞ்சனா, ஆரு சிரிக்க… மீரா முகம் சிவந்தாள்.
“வர்ற ஞாயிற்றுக் கிழமை, நம்ம வீட்ல சொந்தகாரங்களைக் கூப்பிட்டு குழந்தையைத் தொட்டிலில் போடலாம்னு நினைத்திருக்கோம்.” வித்யா சொல்ல….”அப்படியா சரி மா…” என்று கேட்டுகொண்ட அர்ஜுன் எதையோ யோசிக்க ஆரம்பித்தான்.
இரவு ஐஸ்வர்யா தூங்காமல் முழித்துக் கொண்டு இருப்பதால்… ரஞ்சனாவிற்கு ஆதியிடம் மீராவை பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்தது சுத்தமாக நினைவு இல்லை. இரண்டு நாள் கழித்து அர்ஜுன் ரஞ்சனாவை செல்லில் அழைத்தான். அவன் அழைத்த போது வித்யா மதிய தூக்கத்தில் இருந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை.
அர்ஜுன் குழந்தை பிறந்த அன்று போன்னில் ரஞ்சனாவிடம் பேசி நலம் விசாரித்தது தான், அதன் பிறகு இன்று தான் அழைக்கிறான். ரஞ்சனாவிடம் நலம் விசாரித்தவன், சிறிது நேரம் குழந்தையைப் பற்றிப் பேசிவிட்டு, “அப்புறம் ஐஷுவோட சித்தி எப்படி இருக்காங்க?” என்று கேட்டதும், ரஞ்சனாவிற்குச் சந்தோசம் தாங்கவில்லை…
அர்ஜுனுக்குச் சஞ்சனாவை பிடித்திருக்கு. அதுதான் அவளைப் பற்றிக் கேட்கிறான் என்று நினைத்து, ரஞ்சனா பெருமையாக “அவளுக்கு என்ன சூப்பரா இருக்கா…. திருச்சியில் இருந்து குழந்தையை அடிக்கடி பார்க்க வர முடியலைன்னு தான் கவலை. இந்த வாரம் வரா…” என்றாள்.
“அண்ணி, உங்களுக்குச் சஞ்சனா மாட்டும் தான் தங்கையா?” அர்ஜுன் புதிர் போட…. ரஞ்சனா புரியாமல் முழித்தவள், “பின்ன வேற யாரு?” அவள் கேட்க….
“ஹா..ஹா … இன்னும் நீங்க வளரனும் அண்ணி. உங்க கூடப் பிறந்தா மட்டும் தான் உங்களுக்குத் தங்கச்சியா… நான் கட்டிக்கப் போற பொண்ணும் உங்களுக்குத் தங்கச்சி தான்.” அர்ஜுன் சிரித்துக் கொண்டே சொல்ல… ரஞ்சனா அதிர்ந்தாள். அவளுக்கு இப்போது ஆதி சொன்னதன் அர்த்தம் நன்றாகப் புரிந்தது.
ரஞ்சனா அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க…. அது தெரியாத அர்ஜுன், “என்ன அண்ணி நம்ப முடியலையா? மீராவை தான் அண்ணி நான் லவ் பண்றேன். என்னோட செலெக்க்ஷன் எப்படி? சுமாரா.. ஓகேவா… இல்லை சூப்பரா?…” என்று ஆர்வமாகக் கேட்க… ரஞ்சனாவும் தன்னைச் சமாளித்துக் கொண்டு மீராவை பற்றி நினைக்க… அவளுக்கு “சூப்பர்..” என்று தான் வாயில் வந்தது.
அர்ஜுனுக்கு வாயெல்லாம் பல்லு தான் “தேங்க்ஸ் அண்ணி, இன்னும் அம்மாவுக்குத் தெரியாது. நீங்க தான் அண்ணி அம்மாகிட்ட பேசி… எங்க கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கித் தரனும். ஆரு கல்யாணம் முடிஞ்சதும் அம்மாகிட்ட பேசலாம்.”
“சரி அர்ஜுன்.” என்ற ரஞ்சனாவின் குரலில் சுரத்தே இல்லை.
“சரி அண்ணி உங்க உடம்பப் பார்த்துக்கோங்க, அப்படியே என்னோட ஐஷு செல்லத்த நல்லா கவனிச்சிக்கோங்க, bye. ” என்று சொல்லி அர்ஜுன் போன்னை வைத்துவிட்டான்.
அர்ஜுனுக்கு அன்று போல் சஞ்சனா மீராவை எதுவும் பேசிவிடக்கூடாது என்று தான் ரஞ்சனாவிடம் தான் மீராவை காதலிப்பதை சொன்னான். இனி ரஞ்சனா தன் தங்கையைக் கண்டித்து வைப்பாள் என்று நினைத்தான்.
ரஞ்சனா அப்படியே சிலை போல் அமர்ந்துவிட்டாள். மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்த ஆதி குழந்தை தூங்குவாள் என்று காலிங் பெல் அடிக்காமல் தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு வந்தவன், நேராகக் குழந்தையைச் சென்று பார்க்க… அது அவன் நினைத்த மாதிரியே தூங்கிக் கொண்டு இருந்தது.
சிறிது நேரம் நின்று குழந்தையைப் பார்த்தவன், ரஞ்சனா அருகில் வந்து அவள் தோளைத் தொட… ரஞ்சனா திடுக்கிட்டு எழுந்தாள்.
“நான் தான் ரஞ்சனா, வா சாப்பிடுவோம்.” ஆதி அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான். சாப்பிடும் போது ரஞ்சனா எதோ யோசனையிலேயே இருப்பதைப் பார்த்தவன், சாப்பிட்டுவிட்டு அவர்கள் அறைக்கு வந்ததும் ரஞ்சனாவிடம் விசாரிக்க….
“நீங்க அன்னைக்கு மீராவும் இந்த வீட்டு ஆளுங்கிற மாதிரி எதோ சொன்னீங்க, அது எந்த அர்த்ததுல சொன்னீங்கன்னு… எனக்கு இன்னைக்குத் தான் புரிஞ்சிது.” என்றாள்.
“என்ன புரிஞ்சிது உனக்கு? புரியற மாதிரி சொல்லு.”
“மீரா தான் இந்த வீட்டோட ரெண்டாவது மருமகளா வர போறான்னு புரிஞ்சிது, போதுமா…” ரஞ்சனா எரிச்சலோடு சொல்ல…
“இதுல நீ எரிச்சல் பட என்ன இருக்கு?” ஆதி கோபமாகக் கேட்க…
“இல்ல இதெல்லாம் நம்ம வீட்டுக்கு ஒத்து வருமான்னு… அது தான் யோசிச்சேன்.” ரஞ்சனா சமாளித்தாள்.
“அர்ஜுனுக்கு நாம தேடினாலும் மீரா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்காது. அவனா தேர்ந்தெடுத்தாங்கிறது தவிர … வேற என்ன குற்றம் சொல்ல முடியும்? நீயே சொல்லு…” ஆதி கேட்க…
“மீரா நல்ல பொண்ணு தான். ஆனா… அவங்க அம்மா அப்பா..” என்று ரஞ்சனா அடுத்தத் தூண்டிலை போட….
“அவங்க அம்மா அப்பாவுக்கு என்ன? அவங்க தனிப்பட்ட வாழ்க்கைய பத்தி, நாம ஏன் கவலைபடனும்? அவங்களுக்குள்ள ஒத்துவரலை அதனால பிரிஞ்சி வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன தப்பு? அவங்க அப்பா மீராவை நல்லா தான் வளர்த்திருக்கார்.” என்று ஆதி சொல்ல, ரஞ்சனாவால் ஆமாம்…ஆமாம் என்று மண்டையைத் தான் ஆட்ட முடிந்தது.
“உனக்கு எப்படி ரஞ்சனா… அர்ஜுன் மீரா பற்றித் தெரியும்?”
ரஞ்சனா இன்று மதியம் அர்ஜுன் போன் செய்து பேசியது பற்றிச் சொல்ல… ஆதியின் முகம் மலர்ந்தது.
“பார்த்தியா… அவன் உன்னைத் தான் அம்மாவிடம் பேச சொல்லி இருக்கான். அவன் மனசுல உன் மேல நல்ல எண்ணம் இருக்கிறதுனால தான், உன்னிடம் நம்பிக்கையா சொல்லி இருக்கான். நீ அவன் நம்பிகைய காப்பாத்தனும் ரஞ்சனா.” என்று சொல்லிவிட்டு ஆதி கடைக்குக் கிளம்ப. ரஞ்சனா தான் இப்போது புகுந்த வீட்டிற்காகப் பார்ப்பதா இல்லை, பிறந்த வீட்டிற்காகப் பார்ப்பதா என்று குழம்பினாள்.
மறுநாள் மாலை குழந்தையோடு அனைவரும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் செல்ல… மீராவையும் உடன் அழைத்துச் சென்றனர். கோவிலில் கணேசன் மீராவுடன் பிரியமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆதி, ஆரு இருவருமே மீராவுடன் பாசமாகப் பழகினார்கள்.
ரஞ்சனாவுக்கு இப்போது நன்றாகப் புரிந்தது. மீரா அர்ஜுனை திருமணம் செய்து அவர்கள் வீட்டிற்கு மருமகளாக வரப்போகிறாள் என்று தெரிந்து தான், அவளிடம் பிரியமாக இருக்கிறார்களே தவிர, தான் நினைத்தது போல் பரிதாபத்தினால் இல்லையென்று.
மீரா இந்தக் குடும்பத்திற்கு மருமகளாக வருவதில் எல்லோருக்கும் விருப்பம், அத்தையும் ஒத்துகொள்வார். அதோடு மிகவும் முக்கியமானது அர்ஜுன் மீராவை விரும்புகிறான். அதனால் இனி தன் தங்கை இந்தக் குடும்பத்திற்கு மருமகளாக வர முடியாது. அவள் மனதில் தேவை இல்லாத ஆசையை வளர விடக்கூடாது என்று ரஞ்சனா நினைத்தாள்.
ஞாயிறு அன்று குழந்தையைத் தொட்டிலில் போடும் விழாவிற்கு, ரஞ்சனாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதோடு வித்யா அங்கிருந்த நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்திருந்தார். வித்யாவின் அக்கா குடும்பத்துடன் வந்திருந்தார். வளைகாப்பு அன்று போல் இன்றும் அர்ஜுன் ஸ்கைப்பில் விழாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு, வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரும் உணவருந்த செல்லும் வரை மீரா வரவில்லை. “ஏன் மீரா இன்னும் வரலை?” வித்யா கேட்க…. சஞ்சனா நாம அன்னைக்குப் பேசுனதுனால தான் வரலை போல…. என்று சந்தோஷப்பட… மீரா அப்போது சரியாக உள்ளே நுழைந்தாள்.
“ஏன் மீரா லேட்டு?” வித்யா கேட்க “ம்ம்.. உங்க பிள்ளையால தான், நான் கிளம்பும் போது போன் பண்ணி, ஒரு பெரிய லிஸ்டே குடுத்தா…” என்று சொன்ன மீரா…டிவியைப் பார்த்து முறைக்க… அர்ஜுன் வாய்விட்டு சிரித்தவன், “சாரி மீரா… நீ நல்லா பார்த்து வாங்குவ அதனால தான்.” என்றான்.
மீரா ஒரு பெரிய பை கையில் வைத்திருந்தவள், தொட்டில் அருகே சென்று அங்கு நின்றிருந்த காயத்ரியிடம் “ஆன்டி, அர்ஜுன் குழந்தைக்கு டிரஸ் வாங்க சொன்னாங்க வாங்கி இருக்கேன். இப்ப போடலாமா…” என்று கேட்க…. காயத்ரி “பேஷா போடலாமே..” என்றவர், குழந்தையைத் தூக்கி கொண்டு கீழே அமர்ந்தார். மீரா ஒவ்வொன்றாக எடுத்து கொடுக்க…. காயத்திரி குழந்தைக்குப் போட்டுவிட்டார்.
எல்லோரும் வழக்கமாகப் பெண் குழந்தைகளுக்குப் பேபி பிங்க் நிறத்தில் தான் அதிகம் வாங்குவார்கள். ஆனால் மீரா அடர் சிவப்பு நிறத்தில் உடை, தொப்பி, ஷு எல்லாம் வாங்கி இருந்தாள்.
உயர்ந்த தரத்தில் துணி மிருதுவாக இருந்தது. அதோடு மீரா ஒரு ப்ரேஸ்லெட்டும் வாங்கி இருந்தாள். மீரா அதை வித்யாவிடம் சென்று கொடுத்தாள். வித்யா அர்ஜுனை பார்க்க… “என் சார்புல, நீங்க போடுங்க மா.” அர்ஜுன் சொல்ல…. வித்யா சென்று குழந்தையின் கையில் போட்டு விட்டவர், பிறகு விருந்தினரை கவனிக்கச் சென்று விட்டார்.
மீரா குழந்தையைத் தூக்கி கொண்டு டிவி அருகில் சென்றவள், அர்ஜுனுக்குக் குழந்தையை அருகில் காட்ட…
“ஏற்கனவே நீங்க ரொம்ப அழகு பேபி, இன்னைக்கு இந்த டிரஸ்ல சூப்பரா கலக்குறீங்க.” அர்ஜுன் குழந்தையிடம் சொல்ல… மீரா குழந்தையின் கையைத் தூக்கி காட்டி “அர்ஜுன், ப்ரேஸ்லெட் நல்லா இருக்கா… உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்க… “உன் செலக்க்ஷன், சொல்லவா வேண்டும் மீரா, சூப்பர்.” என்றான் அர்ஜுன்.
இதுவரை மீராவை ஆருவின் தோழி என்றே நினைத்திருந்த சஞ்சனா. அர்ஜுன், மீராவின் நெருக்கத்தைப் பார்த்துப் பொறாமையில் பொசுங்கிவிட்டாள். சஞ்சனா விடுவிடுவென்று மீராவின் அருகே வந்தவள், குழந்தையைப் பிடுங்க… குழந்தை அழ ஆரம்பித்தது.
அதைப் பார்த்த ரஞ்சனா, “சஞ்சனா, குழந்தைய மீராகிட்ட கொடு…” என்று அதட்ட… சஞ்சனா மீராவிடமே குழந்தையைத் திரும்பக் கொடுத்துவிட்டு சென்றாள். ஒரு நிமிடம் அர்ஜுனுக்கும், மீராவிற்கும் என்ன நடந்தது என்றே புரியவில்லை?.
குழந்தை விடாமல் அழ…. மீரா சென்று ரஞ்சனாவிடம் குழந்தையைக் கொடுக்க… ரஞ்சனா குழந்தையை அறைக்குள் தூக்கி சென்றாள். அர்ஜுன் தான் மட்டும் இன்று நேரில் இருந்திருந்தால்… சஞ்சனாவின் கண்ணம் பழுத்திருக்கும் என்று நினைத்தவன், பிறகு பேசுவதாகச் சொல்லி தொடர்பை துண்டித்தான்.
ரஞ்சனா அறையில் அமர்ந்து குழந்தையைச் சமாதானம் செய்ய…சஞ்சனா உள்ளே வந்தாள். ரஞ்சனா அவளைப் பார்த்து முறைக்க…”இப்ப நீ எதுக்கு என்னைப் பார்த்து முறைக்கிற” எனச் சஞ்சனா கோபபட….
“உன்னோட கோபத்தைக் காட்ட என் குழந்தை தான் கிடைச்சுதா….இந்த குழந்தைக்கு ரெண்டு மாசம் தான் முடிஞ்சிருக்கு. உனக்கு அதாவது ஞாபகம் இருக்கா…வெடுக்குன்னு பிடிச்சு இழுக்கிற…இதை மட்டும் உங்க அத்தான் பார்த்திருக்கணும்.” ரஞ்சனா சொல்ல….
“அவ யாரு உரிமையா எல்லாம் பண்ண?” சஞ்சனா கேட்க….
“அது உனக்குத் தேவை இல்லாதது. இது நம்ம வீடு இல்லை. இங்க வந்தா ஒழுங்கா இருக்கணும். மீரா இந்த வீட்ல ஒருத்தி மாதிரி, அதனால போன தடவை மாதிரி எதாவது பேசாத சொல்லிட்டேன்.” ரஞ்சனா அழுத்தம் திருத்தமாகச் சொல்ல… சஞ்சனா முறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
குழந்தை பால் குடிக்காமல் அழ…. ரஞ்சனாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? அவள் வித்யாவை அழைக்க… வித்யா வந்து என்னவென்று கேட்க… ரஞ்சனா குழந்தை பால் குடிக்காமல் அழுவதாகச் சொல்ல… வித்யா குழந்தையின் உடைகளை அவிழ்த்து எறும்பு ஏதும் கடித்திருகிறதா என்று பார்க்க…. அப்படி எதுவும் இல்லை. குழந்தை எதற்கு அழுகிறது என்று அவருக்கும் தெரியவில்லை. குழந்தையின் அழுகை குரல் கேட்டு மீராவும், ஆருவும் அங்கே வந்தனர்.
வித்யாவின் அக்கா காயத்ரி வந்து குழந்தையைக் கையில் வாங்கிப் பார்த்தவர், “எங்கையாவது சுளுக்கி இருக்கும், அது தான் குழந்தை இப்படி அழுது.” என்று சொல்ல…
“அத்தை, சீக்கிரமா இவ அப்பா வர்றதுக்குள்ள எதாவது பண்ணுங்க, அவர் வந்தா என்னைத் தான் திட்டுவார்.” ரஞ்சனா தன் கணவனை நினைத்து பயப்பட…காயத்ரி தேங்காய் எண்ணையைக் கையில் தொட்டு, குழந்தைக்கு உருவிவிட ஆரம்பித்தார்.
குழந்தை இன்னும் சத்தமாக அழ… அதைப் பார்த்து ரஞ்சனா தவிக்க…. மீராவிற்குக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. குழந்தையின் சத்தம் கேட்டு ஆதியும் வந்துவிட்டான். ஆனால் அதற்குள் காயத்ரி குழந்தையை ரஞ்சனாவிடம் கொடுத்தவர், “இப்ப பால் கொடு.” என்றார்.
ரஞ்சனா குழந்தையைத் தூக்கி கொண்டு வேறு அறைக்குச் சென்றாள். ஆதி என்ன ஆச்சு என்று கேட்க… காயத்ரி “குழந்தைனா அழ தான் டா செய்யும். உலகத்துலேயே இவனுங்க தான் அதிசியமா புள்ளை பெத்த மாதிரி… போய் உன் வேலையைப் பாரு.” என்று சொல்ல… ஆதிக்கு ஏன் பெரியம்மா தன்னைத் திட்டுகிறார் என்றே புரியவில்லை.
ரஞ்சனா குழந்தைக்குப் பால் கொடுக்க…. குழந்தையும் அழுகையை நிறுத்தி பால் குடித்தது. சிறிது நேரத்தில் குழந்தை தூங்க, ரஞ்சனா குழந்தையை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு புடவை மாற்ற சென்றாள். ரஞ்சனா திரும்பி வந்து பார்க்கும் போது, மீரா குழந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“சாரிடா செல்லம்… எல்லாம் சித்தியால தான், பாப்பாவுக்கு ரொம்ப வலிசிடுச்சா… சாரி…” அவள் பேசுவதைக் கேட்டு ரஞ்சனாவிற்குச் சிரிப்பு வந்தது.
மீரா ரஞ்சனவை பார்த்ததும், “சாரி அக்கா…” என்று சொல்ல… ரஞ்சனா “நீ என்ன பண்ண, சஞ்சனா இழுத்ததுனால தான், நல்ல வேளை சரி ஆகிடுச்சு.” என்றாள்.
ரஞ்சனா மீராவின் அருகே அமர்ந்தவள், “அப்புறம் என்னோட கொழுந்தனார் என்ன சொல்றார்? எப்ப ஊருக்கு வர்றாராம்?” என்று கேட்க…
மீரா ரஞ்சனவை ஆச்சர்யமாகப் பார்த்தவள், “அர்ஜுனையா சொல்றீங்க.” என்று கேட்க… “பின்ன வேற யாரு எனக்குக் கொழுந்தனாறு, அவரு தான்.” என்றாள்.
மீராவிற்குத் தங்கள் விஷயம் ரஞ்சனாவிற்குத் தெரியும் என்பது தெரியாது. அதனால் அவள் “என்னைக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்?” என்று சொல்ல…”ஹே…சும்மா ரீல் விடாத, நீ என்னோட கொழுந்தனை சைட் அடிக்கலை.” ரஞ்சனா மீராவை வம்பு இழுக்க…
“ஐயோ நானா… ஆமா இவங்க கொழுந்தனாறு பெரிய மன்மதன் அவரை நாங்க சைட் அடிச்சிட்டாலும்.” மீரா அலுத்துக் கொள்ள… அப்போது சரியாக அர்ஜுன் மீராவை செல்லில் அழைத்தான்.
மீரா ரஞ்சனாவை பார்த்து அசடு வழிந்து கொண்டு போன்னை எடுக்க… அர்ஜுன் அவளிடம் அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்க…. மீரா இல்லை என்றாள்.
மீராவிடம் இருந்து போன்னை வாங்கிய ரஞ்சனா, “அர்ஜுன், நீ என்னவோ மீராவை பற்றிச் சொன்ன, ஆனா மீரா அப்படி எதுவும் இல்லைன்னு சொல்றா… அப்ப உனக்கு வேற நல்ல பொண்ணு பார்ப்போமா.” என்று சிரித்துக் கொண்டே கேட்க…
“அப்படியா அண்ணி சொன்னா, ஹப்பா… அவளே சொல்லிட்டா, நீங்க வேற பொண்ணு பாருங்க.” என்றான் அர்ஜுன் பதிலுக்கு….
மீரா ரஞ்சனாவின் அருகே நெருங்கி அமர்ந்து, அவள் காதை போன் அருகில் வைத்து அர்ஜுன் பேசியதை கேட்டு கொண்டிருந்தவள், வேகமாகப் போன்னை வாங்கி “ஓ…உங்களுக்கு அப்படி வேற நினைப்பிருக்கா…இருங்க இனிமே நான் உங்களோட பேச மாட்டேன்.” என்று மிரட்ட…
“ஹே …சும்மா டா மீரா… நீ ஏன் அண்ணிகிட்ட அப்படிச் சொன்ன?” அர்ஜுன் கேட்க… “அவங்ககிட்ட நீங்க சொன்னது, எனக்கு எப்படித் தெரியும். நீங்க என்கிட்டே சொன்னீங்களா… நான் ஒரு பயத்துல சொன்னேன்.” என்றாள் மீரா….
ரஞ்சனா மீராவிடம் இருந்து போன்னை வாங்கி, “என்ன அர்ஜுன் மீராவுக்கு இப்படிப் பயப்படுற? அவ பேச மாட்டேன்னு சொன்னதும் சரன்டர் ஆகிட்டே…” என்று கேலி செய்ய…
“நான் ஆதியோட தம்பி அண்ணி, பின்ன வேற எப்படி இருப்பேன். குழந்தைய சாக்கு சொல்லி ஆதி உங்களை இங்க ஒரு மாசத்திலேயே அழைச்சிட்டு வரலையா…” அர்ஜுன் பதிலுக்கு ரஞ்சனாவை வார…
“அப்பா சாமி என்னை ஆள விடு, தெரியாம கேட்டுட்டேன்.” ரஞ்சனா போன்னை மீராவிடம் குடுக்க… அர்ஜுன் அவளிடம் இரவு போன் செய்வதாகச் சொல்லி வைத்தான்.
அந்த அறையில் வேறு யாரும் இல்லாததால் ரஞ்சனாவும், மீராவும் ப்ரீயாகப் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ஆருவும் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள். மூவரும் சேர்ந்து அரட்டை அடித்துப் பின் ஒன்றாகவே சாப்பிட சென்றனர். அவர்கள் மூவரும் சேர்ந்து சாப்பிடுவதைப் பார்த்து சஞ்சனா எரிச்சல் பட்டாள்.
வந்திருந்த உறவினர்கள் சிறிது நேரத்தில் வீட்டுக்கு கிளம்பிவிட… மீராவும் அனைவரிடமும் விடைபெற்று சென்றாள். அர்ஜுனின் பெரியம்மா காயத்ரி மட்டும் வித்யாவிற்கு உதவுவதற்காக அங்கயே தங்கினார்.
ரஞ்சனாவின் பெற்றோர் இரவு ரயிலில் தான் ஊருக்கு கிளம்புகின்றனர். அதனால் ரஞ்சனா அவள் பெற்றோர் இருந்த அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தாள்.
அப்போது அவளின் அப்பா சேதுபதி “ரஞ்சனா, உன்னோட தங்கச்சிய உங்க மாமா பையனுக்குக் கேட்கிறாங்க. அவங்களுக்கு மூன்னுமே பசங்க தான். அதனால அவங்க முதல் பையனுக்கு நம்ம சஞ்சனாவை கல்யாணம் பண்ணி நம்ம வீட்லயே வேணும்னாலும் வச்சுக்கோங்க, இல்லன்னா நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து வச்சிக்கிறதுனாலும் வச்சிக்கச் சொல்றாங்க.” என்றவர் தொடர்ந்து,
“பையன் நல்ல பையன், நல்லா படிச்சிருக்கான். திருச்சியில வேலையை மாத்திகிட்டா வேலைக்கும் போயிட்டு, அப்படியே ப்ரீயா இருக்கும் நேரத்தில் நம்ம பிசினஸ்ம் பார்த்துக்கலாம். நீ என்ன சொல்ற?” என்று அவர் தன் பெரிய மகளின் அபிப்ராயத்தைக் கேட்க…
“இதுல நான் சொல்ல என்ன பா இருக்கு. நல்ல சம்பந்தம் விட்டுடாதீங்க. நான் தான் சென்னையில இருக்கேன். சஞ்சனாவாவது உங்க பக்கத்தில இருக்கட்டும். நானும் அடிக்கடி வந்து உங்களைப் பார்த்துகிறேன்.” ரஞ்சனா சொல்ல…சஞ்சனா கொதித்து விட்டாள்.
“ஆமா நீ மட்டும் சென்னையில இருப்ப, நான் திருச்சியில கிடந்து சாகனும். நான் மட்டும் அம்மா, அப்பாவை பார்த்துக்கணும். நீ உன் புருஷனோட ஜாலியா இருக்கணும்.” சஞ்சனா ஆத்திரத்தில் கத்த… ரஞ்சனா எழுந்து சென்று வேகமாகக் கதவை மூடினாள்.
வித்யாவும், காயத்ரியும் கீழ் அறையில் தூங்குகின்றனர். நல்லவேளை வீட்டில் வேறு யாரும் இல்லை… இவர்கள் மாடியில் இருந்த அறையில் இருந்தனர்.
சஞ்சனாவின் அம்மா வந்தனா “இப்ப எதுக்குடி கத்துற, நீ ஒன்னும் எங்களைப் பார்த்துக்க வேண்டாம். பையன் நல்ல பையன். அவன் இப்ப சென்னையில தான் வேலை பார்கிறான். நீ வேணா இங்கயே இருந்துக்கோ. உங்க மாமா எனக்காகத் தான் உங்களைத் திருச்சியில வச்சுக்கச் சொல்றாங்க, மத்தபடி அவங்களுக்கு நம்ம சொத்துப் போய்த் தான் நிறையனும்னு இல்லை…” என்றார்.
“எனக்கு அவனைப் பிடிக்கலை…” சஞ்சனா எடுத்தறிந்து பேச… அவளின் அம்மா “இங்க பாரு மரியாதையா பேசு, உன்னோட குணத்துக்கு நாங்க வெளிய சம்பந்தம் பண்ண முடியுமா… போன பத்து நாள்ல திரும்பி வந்திடுவ. அதே என் அண்ணன் பையன்னா, எங்களுக்காகப் பார்ப்பான்.” என்று எடுத்து சொன்னார்.
“அம்மா சொல்றதும் சரி தான சஞ்சனா…” என ரஞ்சனா சொல்ல….சஞ்சனா ரஞ்சனாவை பார்த்து “நீயெல்லாம் எனக்கு அக்காவா… உன்னைப் போய் நம்பினேனே… என் புத்திய செருப்பால அடிச்சிக்கனும்.” என்றாள். ரஞ்சனாவிற்குக் கோபம் வந்துவிட்டது.
“நீ மட்டும் அசைபட்டா போதுமா, எங்க வீட்ல இருக்கிறவங்க விருப்பம் தெரிய வேண்டாமா… அதோட முக்கியமா அர்ஜுனுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா… சும்மா நீ நினைச்சதை சாதிக்கனும்னு நினைச்சா, அதுக்கு நான் தான் ஆளா…” என்றாள்.
இவர்கள் இருவரும் சண்டை பிடிப்பதை பார்த்து, சேதுபதியும், வந்தனாவும் என்ன விஷயம் என்று கேட்க…. சஞ்சனா தன்னிடம் சொன்னது அத்தனையும் ரஞ்சனா சொல்ல….
வந்தனா சஞ்சனாவை பார்த்து முறைத்தவர், “எங்க மேல ரொம்ப அக்கறை மாதிரி எதுக்கு இந்த வேஷம்? நீயா உனக்கு மாப்பிள்ளை பார்க்கிற அளவுக்கு வந்திட்ட… இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது.” என்று அவளைத் திட்ட…
சேதுபதி எதையோ யோசித்தவர், “அவ மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும் போது… நாம அதுக்கு முயற்சி செஞ்சு பார்க்கிறது ஒன்னும் தப்பு இல்லை. நாளை அவ நம்மைக் குறை சொல்ல கூடாது. அவ அதையே மனசுல நினைச்சிட்டு இருந்தா…. அவ வேற இடத்தில கல்யாணம் பண்ணினாலும் நிம்மதியா இருக்க மாட்டா…அதனால் நான் இன்னைக்கு ஊருக்கு போறதுக்கு முன்னாடி சம்பந்திகிட்ட பேசுறேன்.” என்றார்.
அவள் அப்பா சொன்னதைக் கேட்டதும் சஞ்சனாவின் முகம் மலர்ந்தது… ரஞ்சனாவிற்கு அவள் அப்பா கேட்பதால் எதுவும் மாறிவிடப் போவது இல்லை என்று தெரியும். இருந்தாலும் அவர்கள் ஆசைக்குக் கேட்டு பார்க்கட்டும், சஞ்சனாவும் நேரடியாக அவர்களின் மறுப்பைக் கேட்டுவிட்டாள். பிறகு அமைதியாகி விடுவாள் என்று நினைத்ததாள். அதனால் அவள் அப்பா சொன்னதுக்குச் சரி என்றாள். இதனால தான் ஆதியின் வெறுப்பைப் பெறப்போவது தெரியாமல்.
ஆரு வெளியே சென்றுவிட்டு வந்தவள், நேராக அவள் அறைக்குச் சென்று சூர்யாவை செல்லில் அழைத்தாள். இன்று முழுவதும் அவனுடன் பேச முடியவில்லை, இப்போதாவது பேசுவோம் என்று நினைத்து அழைத்தாள்.
அங்கே சூர்யா குளித்துக் கொண்டிருந்தான். இன்றைக்கு வீடு முழுவதும் சுத்தம் செய்ததால் திரும்பக் குளிக்கச் சென்றவன், செல்லை ரூம்மில் வைத்திருந்தான். அர்ஜுன் சூர்யாவின் மொபைல் சத்தம் கேட்டு உள்ளே சென்றவன் யார் அழைப்பது? என்று செல்லை கையில் எடுத்துப் பார்த்தான்.
மொபைலில் ஹனி காலிங் என்று வந்தது. யார் அது ஹனி? நமக்குத் தெரியாத ஹனி… மாப்பிள்ளை யார்கிட்டையோ மாட்டிகிட்டானோ என்று நினைத்தவன், புன்னகையுடன் போன்னை ஆன் செய்து காதில் வைக்க…
அந்தப் பக்கம் ஆரு “ஹாய் சூர்யா, சாரி பா… காலையில இருந்து பேசவே முடியலை… இப்ப தான் ரிலேடிவ்ஸ் எல்லாம் போனாங்க. அப்புறம் என்ன பண்றீங்க? இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்க?” என்று அவள் பேசிக்கொண்டே செல்ல…
அர்ஜுனுக்கு இது ஆருவின் குரல் என்று நன்றாகத் தெரிந்தது. ஆனால் நம்பத்தான் முடியவில்லை. அந்தப் பக்கம் ஆரு “சூர்யா… என்ன பேசவே மாட்டேங்கிறீங்க?” என்று கேட்க… அர்ஜூனால் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை… ஆரு மீண்டும் ஹலோ சூர்யா கேட்குதா… கேட்குதா… என்று கேட்டதும்,
அர்ஜுன் கோபத்தை அடக்கி “சூர்யா குளிக்கிறான், நீங்க அப்புறம் பேசுங்க மேடம்.” என்று சொல்லிவிட்டுப் போன்னை வைத்தான். அர்ஜுனின் குரல் கேட்டு ஆரு உறைந்து நின்றாள்.
error: Content is protected !!