Skip to content
Post Views: 3,401
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 30
ரஞ்சனா குழந்தைக்கு முடியவில்லை, அதனால் தான் சஞ்சனா வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னதை, அவள் அம்மா வந்தனா நம்பவில்லை.
அவர் சஞ்சனாவிடம் தனிமையில், “பாரு நீ யோசிக்காம அறிவுகெட்ட தனமா பண்ற விஷயம், உங்க அக்காவை தான் பாதிக்குது. அன்னைக்கு வீட்டுக்கு வந்த அவங்க மாமனார், மாமியாரை நீ வாங்கன்னு கேட்கலை. அதனால தான் இன்னைக்கு அவங்க உங்க அக்காவை அனுப்பலைன்னு நான் நினைக்கிறன். உங்க அக்கா வரணும்னு நினைச்சிருந்தா, குழந்தையை அவ மாமியார்கிட்ட விட்டுட்டு வந்திருக்கலாம்.” என்றார்.
“வரலைனா போறா…” என்று சஞ்சனா அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டு சென்றாள். அவளுக்கு அதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகளைப் பற்றித் தெரியவில்லை.
சஞ்சனாவின் பெற்றோர் மறு நாள் ரஞ்சனா வீட்டுக்கு கிளம்ப, அவர்களுடன் தினேஷின் பெற்றோரும் கிளம்பினார்கள். அவர்கள் கிராமத்து மனிதர்கள் அவர்களுக்கு வீட்டில் முடங்கிக் கிடப்பது பிடிக்கவில்லை. அதனால் அவர்களும் ரஞ்சனா வீட்டை பார்த்துவிட்டு வருவோம் என்று நினைத்தனர்.
அவர்கள் தினேஷையும், சஞ்சனாவையும் கூட அவர்களுடன் அழைத்தனர். ஆனால் சஞ்சனா தலை வலிக்கிறது என்று சொன்னதால், சரி நீங்கள் இருவரும் வீட்டில் இருங்கள் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் சென்றனர்.
அவர்கள் வெளியே சென்றதும் தினேஷ் சென்று சஞ்சனாவை அணைக்க… அவளும் அவனை அணைத்தாள். மாலை வரை இருவரும் தங்கள் உலகில் இருந்தனர்.
“தலை வலிக்குதுன்னு சொன்ன, ஆனா உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலையே… நாம தனியா இருக்கணும்னு அப்படிச் சொன்னியா, இல்லை உனக்கு உங்க அக்கா வீட்டுக்கு போக இஷ்டம் இல்லையா….” தினேஷ் சிரித்துக் கொண்டே கேட்க….
சஞ்சனா அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் அதை அவள் முகத்தில் காட்டாமல் மறைத்தவள், “இல்லை, இன்னொரு நாள் போலாமேன்னு நினச்சேன்.” என்று சொல்லி சமாளிக்க…”சரி, இன்னொரு நாள் போகலாம்.” என்று சொல்லிவிட்டுத் தினேஷ் குளியல் அறைக்குச் சென்றான்.
தினேஷின் பெற்றோருக்கு ரஞ்சனா வீட்டினரை மிகவும் பிடித்து விட்டது. ரஞ்சனா வீட்டில் அவர்கள் அனைவரையும் நன்றாகக் கவனித்தனர். அதோடு விருந்து சாப்பாடும் செய்து அசத்தினர். கிளம்பு போது சஞ்சனாவையும் , தினேஷையும் பார்த்துக்கோங்க அவங்களுக்கு நீங்கதான் பக்கத்தில இருக்கீங்க என்று இருவரின் பெற்றோரும் சொல்ல…
“நாங்க பார்த்துக்கிறோம், நீங்க கவலைப்படாம ஊருக்கு போங்க.” என்று சொல்லி வித்யா அவர்களை அனுப்பி வைத்தார்.
அர்ஜுனும், சூர்யாவும் வேலைக்குச் செல்ல ஆராம்பித்து இருந்தனர். மீரா இரு வாரத்திற்கு ஒரு முறை சென்னை வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு சென்றாள். அவளுக்குப் பெங்களூர் இப்போது ஓரளவு பழகிவிட்டது. அர்ஜுன் அருகில் இல்லை என்று குறை தவிர வேறொரு கஷ்டமும் இல்லை.
ஆரு தன் வீட்டினரிடம் எப்படியாவது தான் சூர்யாவை விரும்புவதைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குச் சொல்ல தான் தைரியம் வரவில்லை. ஆதியிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று செல்பவள், சிறிது நேரம் கழித்துச் சொல்லாமலே வருவாள். அவளின் தவிப்பை ஆதி, அர்ஜுன் இருவருமே கவனித்துக் கொண்டு தான் இருந்தனர். அவள் என்ன தான் செய்கிறாள் பார்ப்போம் என்று அமைதியாக இருந்தனர்.
ஆரு சூர்யாவிடமும் சரியாகப் பேசுவதில்லை. சூர்யா இப்போது தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதால்… அவன் கவனம் வேலையில் தான் இருந்தது. அதனால் அவன் ஆரு சரியாகப் பேசாததைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை.
அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மதுரையில் இருந்து வந்து இறங்கிய பெரியம்மாவை அழைக்க… அர்ஜுன் ரயில்வே ஸ்டேஷன் சென்று இருந்தான்.
ஸ்டேஷன்னில் இருந்த கடையில், இரண்டு காபி வாங்கிக் கொண்டு இருவரும் அங்கிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தனர். அர்ஜுன் காபியை குடித்துக் கொண்டே தன் பெரியம்மாவிடம் எந்த மாதிரி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க… பெரியம்மாவும் பத்தாம் வகுப்பு மாணவி போல் அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையைத் தலையை ஆட்டினார்.
“பெரியம்மா சொதப்பிட மாட்டீங்களே…”
“மாட்டேன்னு தான் நினைக்கிறன். ஆனாலும் கொஞ்சம் பயமா இருக்கு. சின்னப் பசங்க பேச்சை கேட்டு எதுவும் தப்பு நடந்திட கூடாது. கல்யாணம் ஒன்னும் விளையாட்டு இல்லை அர்ஜுன்.”
“அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். சூர்யா ரொம்ப நல்லவன், அவன் என் தங்கைய நல்லா பார்த்துப்பான்.” அர்ஜுன் உறுதியாகச் சொல்ல…பெரியம்மா ஆமாம் என்று தலை அசைத்தார். இருவரும் எழுந்து வீடு நோக்கி சென்றனர்.
வித்யா இரண்டு நாட்கள் கழித்து, அவரே தன் சகோதிரியிடம் ஆரு திருமணத்தைப் பற்றிப் பேச்செடுத்தார்.
“அக்கா…ஆருவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கோம்.”
வித்யா எப்போது இந்தப் பேச்சை எடுப்பார் என்று காத்திருந்த காயத்ரி, “இப்பவெல்லாம் தெரியாத இடத்தில சம்பந்தம் பண்ணவே பயமா இருக்கு. அதுவும் பொண்ண வெளிய குடுக்கனும்னா ரொம்பப் பார்த்து, நல்லா விசாரிச்சு தான் குடுக்கணும்.” என்றார்.
“ஆமாம், அது என்னவோ உண்மை தான்.” என்று வித்யாவும் ஒத்துகொண்டார்.
“எனக்குத் தெரிஞ்ச ஒரு இடத்தில மணமேடை வரை வந்து கல்யாணம் நின்னுடுச்சு. அப்புறம் இன்னொரு இடத்தில வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு கட்டி கொடுத்தாங்க, அவன் என்ன பண்ணான் தெரியுமா? ஏற்கனவே அங்க ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். அவன் வீட்ல இது தெரியாம, இந்தியா வந்தவனுக்கு இவங்க ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, இப்ப பெரிய தகறாரு ஆகி கோர்ட்க்கும், வீட்டுக்கும் அலையறாங்க. அப்புறம் எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி போன ஒரே மாசத்தில வீட்டுக்கு வந்துடுச்சு. ஏன் வந்தேன்னு கேட்டா? சொல்லவே மாட்டேங்குது.” என்று பெரியம்மா அடித்து விட….
“என்னக்கா இப்படிக் குண்டை தூக்கி போடுற. எனக்கு இப்பவே வயத்த கலக்குது. ஆருவுக்கு ஒரு நல்ல இடம் அமையணுமேன்னு நானே பயந்திட்டு இருக்கேன்.” என்றார் வித்யா கவலையாக…
“நான் உண்மைய தான் சொல்றேன் வித்யா. நாட்ல இப்ப இப்படித் தான் நிறைய நடக்குது. நீ ஆருவை எதுக்கும் தெரிஞ்ச இடத்தில செய்யறதே நல்லது. தெரியாத இடத்தில பொண்ண கொடுக்கிறது ரொம்ப ரிஸ்க்.”
காயத்ரி சொன்னதைக் கேட்ட வித்யா யோசித்தார். அவர் யோசிக்கட்டும் என்று நினைத்த காயத்ரி அங்கிருந்து எழுந்து சென்றார்.
ஆரு தன் அம்மாவும், பெரியம்மாவும் தன் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவதைக் கேட்டவள், இதற்கு மேலும் தாமதித்தால் நல்லது இல்லை எனபதை உணர்ந்து வேகமாகத் தன் அறைக்குச் சென்று மீராவை அழைத்தாள்.
“மீரா, எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்கிறாங்க.” என்று ஆரம்பித்து வீட்டில் நடந்த அத்தனையும் சொன்னவள், “மீரா எனக்கு வீட்ல சொல்ல தைரியம் இல்லை. நீ தான் அர்ஜுன்கிட்ட சொல்லி எதாவது பண்ண சொல்லணும். அவன் என் மேல கோபமா இருக்கான். அவன் நினைச்சா என்னையும், சூர்யாவையும் சேர்த்து வைக்க முடியும். ப்ளீஸ் தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ண சொல்லு மீரா, நீ சொன்னா கண்டிப்பா செய்வான்.”
“நான் அர்ஜுன்கிட்ட சொல்லலைனாலும் அவங்க கண்டிப்பா எதாவது பண்ணுவாங்க ஆரு. கவலைபடாதே அவங்க எதாவது முயற்சி பண்ணிட்டு தான் இருப்பாங்க. அவங்க நீ லவ் பண்றேன்னு தெரிஞ்ச போதே இப்படித் தான் ஆகும்னு சொன்னங்க, நீயும் அவங்க எதிர்பார்த்த மாதிரி தான் நடந்து இருக்க.”
“நான் எல்லாம் லவ் பண்ணி இருக்கவே கூடாது. சூர்யாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தபடுவாங்க.” என்ற ஆரு அழுதாள்.
“விடு ஆரு, நீ எப்பவும் உன் குடும்பத்தைச் சார்ந்தே இருப்ப, அப்படி இருக்கும் போது சட்டுன்னு அவங்களுக்கு எதிரா நடந்துக்க வராது தான். உன்னை அர்ஜுன் கண்டிப்பா விட்டு குடுக்க மாட்டாங்க, அதனால சூர்யாவுக்கு நீ அப்படிச் சொன்னது தெரியாது.”
“இருந்தாலும் எனக்கே மனசாட்சின்னு ஒன்னு இருக்கே, அது என்னை நிம்மதியா இருக்கவிடாது. ஆமாம் அர்ஜுன் எதுவும் உன்கிட்ட இதைப் பத்தி சொல்லலையா?”
“இல்லை சொல்லலை…”
“உன்கிட்ட சொல்லாம இருந்தது, உனக்குக் கோபம் வரலை.”
“ஏன் வரணும்? அர்ஜுன் அவங்களைப் பத்தியா மறைச்சாங்க, இல்லையே…. அவங்களுக்கு என்கிட்டே எதைச் சொல்லணுமோ அதைக் கண்டிப்பா சொல்வாங்க. உன்னை அவங்க என்கிட்டே கூட விட்டுக்குடுக்க மாட்டங்க ஆரு.” என்றாள் மீரா தெளிவாக.
“இப்ப நான் என்ன பண்ணட்டும் மீரா?”
“இரு நான் எதுக்கும் அர்ஜுன்கிட்ட பேசிட்டு உனக்குப் போன் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு வைத்த மீரா அர்ஜுனை அழைத்தாள்.
“என்னடி பொண்டாட்டி ஆபீஸ் நேரத்தில போன் பண்ணி இருக்க, என்னைப் பார்க்கம இருக்க முடியலையா…”
“ஆமாம்னு சொன்னா என்ன பண்ணுவீங்க, உடனே இங்க வந்துடுவீங்களா…”
“வர்றதை பத்தி ஒன்னும் இல்லை, அம்மாகிட்ட நான் மீராவை லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றதுக்குப் பதிலா… அம்மா உங்களுக்குப் பேரன் வரப்போறான், அதனால எங்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்ற நிலைமை வந்துட்டா…..”
அர்ஜுன் சொன்னது முதலில் மீராவுக்குப் புரியவில்லை, அவன் சொன்னதைத் திரும்ப மனதிற்குள் சொல்லி பார்த்ததும், அவள் முகம் சிவந்தது. அவள் அமைதியாக இருந்தாள்.
“என்ன மேடம் சத்தத்தைக் காணோம், நான் பெங்களூர் வரட்டுமா…” அர்ஜுன் மீராவை வம்பு இழுக்க….
“உதை வாங்க போறீங்க, பேச்சை பாரு… நீங்க ஒன்னும் இங்க வந்திட வேண்டாம்.” என்றாள் மீரா.
“நிஜமா தான் சொல்றியா…சரி விடு நம்ம அதிர்ஷ்டம் அவ்வளவு தான். ஆமாம் எதுக்குப் போன் பண்ண?”
“ஆரு விஷயம் என்ன ஆச்சு? வீட்ல பேசலையா….” மீரா கேட்க….
“பெரியம்மாவை ஊர்ல இருந்து வர வச்சிருக்கேன், அவங்க சூர்யாவுக்குச் சொந்தம் தான, அதனால அவங்க மூலமா அரேஞ் மேரேஜ் மாதிரி கொண்டு வர போறேன். இதனால அம்மா மனசு கஷ்டபடாது இல்ல… நாமளும் லவ் மேரேஜ், ஆருவும் லவ் மேரேஜ்னா அம்மா ரொம்பப் பீல் பண்ணுவாங்க, அதனால தான்.” என்றான்.
மீராவுக்கு அவனின் நிலை புரிந்தது, “சரி… சூர்யா அண்ணன்கிட்ட பேசுங்க, நைட் கூப்பிடுறேன், bye.” என்று போன்னை வைத்தவள், ஆருவை அழைத்து…. அவளிடம் விஷயத்தைச் சொல்லி, “தைரியமா இரு, அர்ஜுன் பார்த்துப்பாங்க.” என்றாள்.
மேலும் இரண்டு நாட்கள் சென்ற பிறகு… வித்யா காயத்திரியிடம் “எனக்கும் நீ சொல்றாது சரின்னு தான் தோணுது கா, நானும் இவர்கிட்ட நீ சொன்ன மாதிரியே தெரிஞ்ச இடத்தில எதாவது மாப்பிள்ளை இருக்கான்னு பார்க்க சொல்லி இருக்கேன். நீயும் உனக்குத் தெரிஞ்ச இடத்தில மாப்பிள்ளை இருந்தா சொல்லு.” என்றார்.
“என் வீட்டுகாருக்கு தூரத்துச் சொந்தம் தங்கச்சி முறை, இங்க சென்னையில தான் இருக்காங்க. அவங்களை நான் ஆதி வரவேற்புல பார்த்தேன். அவங்க பையன் கூட நம்ம அர்ஜுன் ஃப்ரண்ட் தான், அவன் பேரு ஆர்யாவோ, சூர்யாவோ…” காயத்திரி தெரியாதது போல் இழுக்க….
“சூர்யா தான் அவன் பேரு. அவங்க நமக்குச் சொந்தமா? இது எனக்கு இப்ப நீ சொல்லி தான் தெரியும்.” வித்யா சொல்ல…
“அவங்க குடும்பம் நல்ல குடும்பம்னா, நீ அங்கயே ஆருவை செய்யலாமே…” என்றார் காயத்திரி.
“குடும்பம் நல்ல குடும்பம் தான், பையனும் ஆருவுக்குப் பொருத்தமா இருப்பான். ஆனா அவனுக்கும் அர்ஜுன் வயசு தான் இருக்கும். அவங்க வீட்ல இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணுவாங்களான்னு தெரியலையே…” வித்யா யோசிக்க…
“அர்ஜுன் வயசுனா இப்ப இருப்பத்தஞ்சு வயசு நடக்குமே, இன்னும் ஆறு மாசம் கழிச்சு வேணா கல்யாணம் வச்சுப்போம்.” காயத்ரி யோசனை சொல்ல…. வித்யா சரி பார்ப்போம் என்றார்.
அன்று இரவு எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் போது, வித்யா தன் அக்கா சொன்னதைச் சொல்லி, “ஆருவுக்கு வேணா சூர்யாவை பார்ப்போமா?” என்றவர், அர்ஜுனிடம் “நீ என்ன டா சொல்ற? உன்னோட ஃப்ரண்ட் தான சூர்யா…. அவனுக்கு நம்ம ஆருவை கல்யாணம் செய்யலாமா சொல்லு.” என்று கேட்டார்.
ஆருவுக்குத் தன் அம்மா சொன்னதைக் கேட்டதும் முகம் நொடியில் தாமரையாக மலர்ந்தது. அர்ஜுன் அவளை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே உடனே பதில் சொல்லாமல் யோசிக்க… ஆரு அவனையே தவிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன டா இவ்வளவு யோசிக்கிற? அந்தப் பையன் வேண்டாமா…” வித்யா கேட்க… ஆருவின் முகம் வாடிவிட்டது. அவளுக்கு எதையாவது தூக்கி அர்ஜுனின் மண்டையில் போட்டு விடலாமா என்று நினைக்கும் அளவிற்கு ஆத்திரம். கணேசனும், ஆதியும் அங்கே நடப்பதை சுவாரசியமாகப் பார்த்து கொண்டிருந்தனர்.
“இருங்க அம்மா, யோசிக்க விடுங்க. தங்கச்சியா…. நட்பான்னு யோசிக்கிறேன். தங்கச்சிக்காக நட்புக்குத் துரோகம் செய்ய முடியாது இல்ல… சூர்யா நல்லவன், திறமையானவன், ரொம்பச் சாது…. பாவம் அவன் தலையில இவள கட்ட பார்கறீங்களே… அது தான் என்ன பண்றது?” என்று அர்ஜுன் தலையில் தட்டி யோசிப்பது போல் நடிக்க… அவன் சொன்னதைக் கேட்ட வித்யா சிரித்துக் கொண்டே அர்ஜுனின் தலையில் கொட்டி, “வாலு…எல்லாத்திலையும் விளையாட்டு தான்.” என்றவர், மற்றவர்களைப் பார்த்து, அப்ப சூர்யாவையே ஆருவுக்குப் பார்க்கலாமா என்று கேட்க… எல்லோரும் சந்தோஷமாகச் சரி என்றனர்.
ஆருவிற்கு நம்பவே முடியவில்லை. நடப்பதெல்லாம் கனவு போல் இருந்தது. அன்று இரவு எல்லோரும் சென்று படுத்ததும் அர்ஜுனின் அறைக்கு வந்தவள், “அர்ஜுன் ரொம்பத் தேங்க்ஸ், நீ எனக்கு ஹெல்ப் செய்ய மாட்டேன்னு நினைச்சேன். நீ மட்டும் இல்லைனா, என்னுடைய நிலைமை…” என்று சொல்லி அவள் அழ….
அர்ஜுன் அவள் கண்ணீரை துடைத்து, “ஷு…. முதல்ல இப்படி எதுக்கெடுத்தாலும் அழுகிறதை நிறுத்து. சூர்யாங்கிறதுனால ஈஸியா முடிஞ்சது, இல்லைனா கஷ்டம் தான்.” என்றவன், “ஐஷு உன்னையே பார்கிறா பாரு.” என்று சொல்ல…
ஆரு அங்குக் கட்டிலில் அமர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ஐஷுவை தூக்கி கொஞ்ச… அது அழகாகச் சிரித்தது. ஆரு அவள் அறைக்குச் சென்றதும், அர்ஜுன் கட்டிலில் படுத்து… ஐஷுவை தூக்கி தன் வயிற்றில் உட்கார வைத்தவன், உங்க சித்திகிட்ட பேசுவோமாடா செல்லம் என்று சொல்லிக்கொண்டே மீராவை அழைத்தான்.
மறுநாள் அலுவலக இடைவேளையில் சூர்யாவை சந்தித்த அர்ஜுன், “லவ் மட்டும் பண்ற, கல்யாணத்துக்கு ஒரு முயற்சியும் செய்ற வழிய காணோம்.” என்று கேட்க….
“இப்ப என்ன டா அவசரம்? இப்ப தான வேலையில சேர்ந்திருக்கேன், இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்.” சூர்யா லகுவாகச் சொல்ல….
“அப்படியா சரி, ஆருவுக்கு எங்க வீட்ல மாப்பிள்ளை பார்கிறாங்க. நீ பொறுமையா ரெண்டு வருஷம் கழிச்சு வா… அநேகமா அவளுக்குக் குழந்தை இருக்கும்.” என்றான் அர்ஜுன் நக்கலாக.
“என்ன டா சொல்ற? ஆருவுக்கு மாப்பிள்ளை பார்கிறங்களா…” என்று சூர்யா அலற…அர்ஜுன் “ஆமாம்” என்றான்.
“டேய், இப்ப என்ன டா பண்றது? நான் எங்க வீட்ல சொல்லி, உங்க வீட்ல வந்து பேச சொல்லவா…” சூர்யா கேட்க….
ஹப்பா…இவனாவது தைரியமா இருக்கானே என்று நினைத்த அர்ஜுன், “எங்க வீட்ல ஆரு கல்யாணம் பேச்சை ஆரம்பிச்சதும், நான் எங்க பெரியம்மா மூலமா… உன்னை ஆருவுக்குப் பார்க்கலாம்னு சொல்ல சொன்னேன். அதுக்கு எங்க வீட்லயும் சரின்னு சொல்லிட்டாங்க. அதனால நீ உங்க வீட்ல மட்டும் பார்த்துக்க. அப்புறம் ஒரு விஷயம் மறந்திடாத, எங்க வீட்ல உங்க லவ் மேட்டர் தெரியாது… இது அரேஞ்ட் மேரேஜ் தான்.” என்றான்.
சூர்யா அர்ஜுனின் கையைப் பிடித்துக் கொண்டு, “மச்சான், எங்களுக்காக நீ எவ்வளவு வேலை பார்த்திருக்க… ரொம்பத் தேங்க்ஸ் டா… ஆமாம் ஆரு ஏன் மாப்பிள்ளை பார்க்கிற விஷயத்தை என்னிடம் சொல்லலை…” என்றான் யோசனையாக…
“மாப்பிள்ளை பார்த்ததும் தான் அவகிட்ட சொல்லலாம்னு இருந்தாங்க. அவளுக்கு நேத்து தான் தெரியும்.” என்று சொல்லி அர்ஜுன் சமாளிக்க… சூர்யாவும் அதை நம்பி விட்டான்.
Advertisement
error: Content is protected !!