Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 1(1)

அத்தியாயம் – 1

நாள் முழுவதும் ஓய்வே இன்றி சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அந்த அங்காடி சாலை..!!

மணப்பாறையின் பிரதான சாலை என்பதால் அங்கே பெரிய துணிமணி, நகை கடைகள் தொடங்கி சின்ன டீக்கடை வரை இருபக்கமும் வரிசையாய் அணிவகுத்து இருக்க மக்கள் கூட்டமும்
எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும்..!!!



Advertisement

மாறிவரும் நியூ- நார்மல் வாழ்க்கையின் ஆரம்பமாய் முககவசம் அணிந்த மனிதர்களும் ஜனநெருக்கடிகள் குறைந்த சாலையும் சான்றாக இருந்தாலும் அவர்கள் வழமையில் பெரிதாய் மாற்றங்கள் நிகழ்வில்லை.

அவ்வாறு அந்த பிற்பகல் வேளையில்  ‘அமிர்தம் புக் ஸ்டோர்..’ உள்ளே நுழைந்ததும் வீதியின் இரைச்சலை மீறி ஒரு அமைதியும் அலையென தாக்கிய புதிய புத்தகங்களின் வாசமும்  இயல்பாய் ஓர் இனிய உணர்வை தோற்றுவிக்க செய்தது.

நல்ல விஸ்தாரமாய் இருந்த உள் அமைப்பில் சிறு சிறு பிரிவுகளாய் பிரித்து வரிசையாய் புத்தகங்கள்  அடுக்கு தட்டுகளில் வைக்கப்பட்டு குட்டி நூலகம் போலவே காட்சியளித்தது.

Advertisement

காலியாய் இருந்த ஒரு உயரமான அடுக்கு தட்டின் அருகில் கீழே தரையில் மொத்தமாய் புத்தகங்கள்
வைக்கப்பட்டு இருக்க அவற்றில் ஒவ்வொன்றாய் எடுத்து அட்டை பக்கங்களை தன் திறன்பேசியில் புகைப்படம் எடுத்தாள் கமலினி.

Advertisement

அவள் புகைப்படம் எடுத்து முடித்த புத்தகங்களை அருகில் இருந்த தட்டில் ராகவி அடுக்க இவர்களுக்கு சற்று தள்ளி வாசலை பார்த்து அமர்ந்திருந்த பிரபு,

“ஏன் க்கா.. இந்நேரம் எல்லாத்தையும் அடுக்கியே முடிச்சு இருக்கலாம்.. எதுக்கு ஒன்னொன்னா அழகு பார்த்து ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கீங்க..”

என கேட்க தன் வேலையில் கவனம் வைத்தபடி கமலினி,

Advertisement

“இதெல்லாம் ரேர் பீஸ் பிரபு.. அவ்வளவு சீக்கிரம் எங்கேயும் கிடைக்காது.. எக்ஸ்ட்ராவா மெனகெட்டு வரவைச்சு இருக்கேன்.. நம்ம கிட்ட இருக்குன்னு  எல்லாருக்கும் தெரியணும்ல.. அதான் நம்ம கடையோட சோஷியல் மீடியா பேஜ்ல எல்லாம் அப்லோட் செய்ய..”
என்றாள் விளக்கமாக..

“ஹோ அப்படி..”
என புருவம் உயர்த்திய அவனும்,

“நெட்ல ஃபோட்டோ பார்த்து தேடி வந்து எல்லாம் வாங்கி இருக்காங்களா.. என்ன..”
என மீண்டும் சந்தேகம் கேட்டான்.

வழக்கமான வாடிக்கையாளர்களும் தற்போது அடிக்கடி கடைக்கு வர இயலாத சூழ்நிலை என்பதால் புத்தகங்களை வீடுகளில் சென்று டெலிவெரி செய்ய உதவியாய் ஒரு மாதம் முன்பே பிரபுவை சேர்த்து இருந்தனர். எனவே கடையின் விபரங்கள் பெரிதாய் அவனுக்கு தெரியாது.

“என்ன டா இப்படி கேட்டுட்ட.. அதெல்லாம் ஏராளமான பேர் இருக்காங்க..”
என்று ராகவியும்,

“நான் கடைக்கு வர ஆரம்பிச்ச அப்புறம் முதலில் செய்ததே எல்லா சோஷியல் மீடியாவிலும் நம்ம கடையோட பேஜ் தொடங்கியது தான்.. இந்த மூணு வருஷத்தில் நம்ம வாடிக்கையாளர்கள் தாண்டி நிறைய ஃபாலோவர்ஸ் வந்துட்டாங்க..

அப்போ எதார்த்தமா செஞ்சது இப்போ பேன்டேமிக்ல நல்லா கைக் கொடுக்குது..

இப்ப டோர் டெலிவரி செய்யுறோம்.. அடுத்து ஆன்லைன் ஆர்டர்ஸ்ஸும் எடுத்து வெளியூர்களுக்கும் அனுப்ப அப்பாகிட்ட கேட்டு இருக்கேன்.. சீக்கிரம் அதுவும் ஆரம்பிப்போம்..”
என கமலினியும் உற்சாகமாய் சொல்ல,

“சூப்பர் க்கா நீங்க..”
என சிலாகித்தான் பிரபு. அச்சமயம்  நடுத்தர வயதில் ஒருவருடன் இளைஞனும் ஒரு சிறுமியும் கடையினுள் நுழைய கமலினிக்கு புகைப்படங்கள் எடுக்கும் பணி முடிந்ததால் அவர்களை கவனிக்க சென்றவனை,

“பிரபு.. இங்க வா.. ராகவிக்கு ஹெல்ப் பண்ணு.. நான் அவங்களை பார்க்கிறேன்..”

என்று சொல்லிவிட்டு தானே அவர்களிடம் சென்றாள்.

“வாங்க சர்… என்ன புக்ஸ் பார்க்கறீங்க..”

என்று வரவேற்று கேட்க ஒரு நொடி யோசித்து,

“கிட்ஸ் படிக்கிற புக்ஸ் எல்லாம் இருக்கா..”
என்றான் அந்த இளைஞன்.

“ஹான் இருக்கு சர்.. உள்ள வாங்க..”
என்று முன்னால் நடந்த கமலினி குழந்தைகள் பகுதியை வந்ததும்,

“பாப்பாவிற்கு தானே..??”
என்று கேட்டு அந்த வயது பிள்ளைகளுக்கான புத்தகங்கள் இருந்த வரிசைகளை காட்டிவிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும் என தள்ளி நின்றுவிட்டாள்.

அந்த இளைஞனும் சிறுமியும் புத்தகங்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க இவள் அருகில் நின்ற பெரியவர்,

“ஓனர் இல்லையா மா..”

என கேட்கவும்,

“எங்க கடை தான் சர்..” என்றாள்.

“ஓஹோ.. இந்த கடை ரொம்ப வருஷமா இருக்குல்ல..”

“ஆமா சர்.. இருப்பத்தி நான்கு வருஷம்… எங்க அப்பா தொடங்கினது.. இந்த ஏரியாவிலே முதன்முதலா புக் ஷாப் வைச்சது எங்க அப்பா தான்..”
என பெருமை மிளிர கூறனாள்.

அது அவள் தந்தை சுந்தரமூர்த்தியை குறித்த பெருமிதம்..!! சின்ன பழைய புத்தகங்களில் தன் வியாபாரம் தொடங்கி இன்று இவ்வளவு பெரிய கடையின் உரிமையாளராய் உயர்ந்த தன் தந்தையின் உழைப்பை குறித்த பெருமிதம்..!!

“ஓ…” என்று கேட்டுக் கொண்டவரும் அந்த இளைஞனும் கண்களாலே ஏதோ பேசிக் கொள்ள அவர்களை கவனித்துவிட்ட கமலினிக்கு,

“இவங்க புக்ஸ் வாங்க வந்தா மாதிரி தெரியலையே..” என்ற சந்தேகம் முளைத்தது. எனவே

“நீங்க தேடுற புக்ஸ் கிடைக்கலையா சர்.. என்ன மாதிரினு சொல்லுங்க.. நானே எடுத்து தரேன்..”

என்று அந்த இளைஞனிடம் கேட்க அவன் சட்டென்று என்ன சொல்வது என யோசிக்கும் போதே அந்த சிறுமி,

“எனக்கு ட்ராயிங் புக்ஸ் வேணும் அக்கா..”

என்றாள். புன்னகையோடு கமலினியும் நிறைய  கலரிங் புக்ஸ்’ உடன் சில காமிக்ஸ்’ஸும் எடுத்துக் காட்ட அந்த குட்டி பெண்ணும் ஆர்வமாய் அதில் தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

அவற்றை வாங்கி சென்று கமலினி பில் போட,

“ஏம்மா.. இந்த எதிர் சாரியில் நாலு கடை தள்ளி இருக்கே ‘ஈகில் விஷன்..’ அந்த கடையோட ஓனர் தினகரன் என்பவரை தெரியுமா..”

என்று அந்த பெரியவர் கேட்கவும்  எழுதிக் கொண்டிருந்தவள் கை சட்டென்று நின்றுவிட்டது. நிமிர்ந்து இருவரையும் பார்த்தவள்,

“ஏன் கேட்கறீங்க..”
என்று ஆராய்ச்சியாய் பார்த்துக் கேட்க ராகவி, பிரபுவுமே ‘என்ன’ என்பது போல் அவர்களை தான் பார்த்தனர்.

அவளின் பார்வையில் மற்றவன் தான்,

“நீங்க தப்பா எதுவும் நினைக்காதீங்க.. அக்சுவலீ.. அவரை தான் என் தங்கச்சிக்கு  பார்த்து இருக்கோம்.. மேற்கொண்டு எதுவும் பேசும் முன்னாடி பையனை பற்றி விசாரிக்கலாம்னு தான் வந்தோம்..”
என்று எடுத்து சொல்ல,

“சந்தோஷம் ங்க.. ஆனா எனக்கு அவங்களை எல்லாம் தெரியாது.. நீங்க அக்கம் பக்கம் வேற கடையில் விசாரித்து பாருங்க..”

என இன்முகமாகவே சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் என்றால் இங்கே பிரபுவோ,

“தீனா அண்ணாவை எனக்கே தெரியும்.. கமலி அக்கா தெரியாதுனு சொல்றதை கேட்டால் நம்புற மாதிரியா இருக்கு..”
என்று ராகவியிடம் முணுமுணுத்தான்.

“அவரை தவிர இந்த எஸ். கே ரோட்ல யாரை பற்றி கேட்டு இருந்தாலும் கமலி அவங்க ஜாதகமே சொல்லி இருக்கும்..”

“ஏன் அப்படி..”

“காரணம் எல்லாம் தெரியாது.. ஆனா இவங்களுக்கு அவங்களை கண்டாலே பிடிக்காது.. அது மட்டும் தெரியும்..” என்று தன் அனுபவத்தில் கூறினாள்.

அந்த பெரியவரும்,

“என்ன மா இப்படி சொல்ற.. நீங்க அவங்களுக்கு சொந்தம்னு கேள்வி பட்டோம்.. அதனால தான் உங்க கிட்ட கேட்க வந்தோம்.. இத்தனை வருஷம் கடையும் பக்கத்துல நடத்துறீங்க.. தெரியாதுன்னு ஏன் மா சொல்லுற..”

என்று குடைந்து அவளை பேச வைக்க முயன்றான். அவள் சொந்தமாய் இருந்துக் கொண்டு தெரியாது என்று சொல்லவும் ‘அந்த பையன் பின்னணி எதுவும் சரியில்லையோ.. அதனை சொல்ல தயங்கி தான் இந்த பெண் தெரியாது என்கிறதோ..’ என்ற சந்தேகம் அவருக்கு..!!

“சொந்தமா..?? பாருங்களேன்.. நீங்க சொல்லி தான் அதுவே எனக்கு தெரியும்..”
என ஆச்சரியம் போல கூறியவள்,

“சர்.. எங்க குடும்பம் ரொம்ப பெருசு.. சுத்தி முத்தி இந்த ஊர்ல பாதி எங்க சொந்தம் தான்.. அதுக்குன்னு எல்லாரையும் நான் தெரிந்து வைச்சு இருக்க முடியுமா..?? தெரியாது என்றால் தெரியாதுனு தான் சர் சொல்ல முடியும்.. நீங்க வேற இடம் போய் கேளுங்க.. அதுக்கு முன்னாடி இந்தாங்க பில்..”

உதடுகளில் புன்னகையை வாட விடாமலே நறுக்கென்று அவள் சொல்லிவிட அவர் மேலும் எதுவும் சொல்லும் முன்,

“அப்பா விடுங்க..” என்ற மற்றவன் இரசீதை பெற்று பணம் செலுத்த அதே நேரம்,

“என்ன விஷயம் கமலி.. யாரை தெரியாதுனு சொல்ற..”
அவள் கடைசியாய் சொன்னதை மட்டும் கேட்டபடி உள்ளே வந்த சுந்தரமூர்த்தி மகளிடம் கேட்டார்.

தந்தையின் கேள்வியில்,

“அது ஒன்னும் இல்ல ப்பா… என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்க..”

என்று அந்த பேச்சை கத்தரிக்க நினைத்தாள். ஆனால் அந்த பெரியவரோ விடுவதாய் இல்லை. அவளிடம் கேட்டதையே மீண்டும் அவரிடம் கேட்க அதில் கமலினிக்கு எரிச்சல் வந்தது. மற்றோரு வாடிக்கையாளர் வந்துவிடவும்,

‘என்னவோ பேசிக் கொள்ளட்டும்.. ” என புத்தக பையை கொடுத்துவிட்டு அவர்களை கவனிக்க வந்துவிட்டாள்.

அவர் சொன்னதை கேட்டதும் சுந்தரமூர்த்தி முகத்தில் எந்த சலனமும் இல்லை.

“உட்காருங்க பேசலாம்..”

என்று நாற்காலியில் அமர சொல்லி எதிரே தானும் அமர்ந்தவர்,

“ஆமாங்க.. என் சொந்தகாரன் தான்.. அந்த பையனோட அப்பா லிங்கேஷ்வரன் எனக்கு அத்தை மகன்..”

என்று அவர் சொல்ல, “அப்படிங்களா..” என ஆர்வமாய் தலையசைத்தார் மேலே விவரம் கேட்கும் நோக்கத்தோடு..

“ஆமா.. ஆனா என் பொண்ணு தெரியலைன்னு சொன்னதும் ஒரு வகையில் உண்மை தான்..

ஒரே இடத்தில் தான் தொழில் பண்றோம் ஆனா இன்னைக்கு வரை ஒரு நாள் மாமான்னு மதிச்சு பேச மாட்டான்.. யாரோ எவரோ மாதிரி தான் பார்த்துட்டு போவான்.. சொந்த பந்தங்களை அனுசரிக்காதவனை  அப்புறம் எப்படி தெரியும் சொல்லுங்க..?

லிங்கேஷ்வரன் அவன் அண்ணன்களை சார்த்தே தான் இருப்பான்.. அவனை வளர்த்து ஆளாக்கினதே பெரிய அத்தான் இரண்டு பேரும் தான்.. லிங்கா உறவுகாரங்க மேல அவ்வளவு பிரியம் வைச்சு இருப்பான்.. ஆனா அவன் பிள்ளை உறவே வேண்டாம்னு வெட்டிவிடும் ரகமா இருக்கான்.. அம்புட்டு தலைகனம்..”

சுந்தரமூர்த்தி சொல்லிக் கொண்டே வர பெண்ணை பெற்றவர் முகம் சுருங்கியது. அண்ணன்காரனோ,

‘கொஞ்சம் சிடுசிடுன்னு பேசிவிடுவான்.. அது மட்டும் தான்.. ‘
என வேறு ஒருவர் சொன்னதையும் நினைவு கூர்ந்து தினகரன் பற்றிய பிம்பத்தை யோசிக்க தொடங்கினான்.

“தீனாவோட அப்பாவிற்கு சொல்லிக்கும் படி பெரிசா எந்த வேலையும் இல்லைங்க.. அவன் பரம்பரை சொத்தை எல்லாம் வித்தே காலம் ஓட்டிட்டான்.. இப்ப தினகரன் தலையெடுத்து தான் குடும்ப பாரம் குறைந்து இருக்கு.. லிங்காவோட ஒரே மகள் கல்யாணம் கூட தம்பியா இந்த பையன் தான் முன்னால நின்னு எல்லாமே செஞ்சு வைச்சான்.. கடன்னு கேள்விபட்டேன்.. எல்லாம் இப்ப அடைச்சு இருப்பானா தெரியல..

அதனால தினகரனுக்கு எல்லாம் தான் தான் செய்யிறோம் என்ற கர்வம்..
லிங்காவை அவனும் அவன் அம்மாவும் கை பொம்மையா தான் வைச்சு இருக்காங்க.. பாவம்..
அவனை வளர்த்த அண்ணனுங்க கிட்ட கூட பேச விடுறது இல்ல..!!

மக்க மனுஷால மதிக்க தெரியலைன்னா என்ன சம்பாரிச்சு என்ன பயன்.. சொல்லுங்க..

அவனோட குணம் பிடிக்காம தானே.. முறை இருந்தும் நாங்க யாரும் பொண்ணு கொடுக்க முன் வரல..

இதை தவிர ஒரு தம்பி இருக்கான்.. அவன் வெளியூர்ல இப்போ தான் வேலைக்கு போயிருக்கான்னு கேள்விபட்டேன்.. மத்தபடி நல்ல குடும்பம் தான்..”
என பட்டும் படாமலும் விவரித்து சுந்தரமூர்த்தி முடிக்க அனைத்தையும் உள்வாங்கி கொண்ட அவர்களோ எழுந்து,

“நன்றிங்க.. அப்போ நாங்க கிளம்புறோம் ” என்று சொல்லி விடைபெற,

“சரிங்க.. பொண்ணு விஷயம்.. நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க..”
என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துவிட்டு அடுத்து வந்தவருக்கு பில் பார்த்து எழுத கமலினி தந்தையை முறைத்து நின்றாலும் கஸ்டமர் இருக்கவே எதுவும் பேசவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!