Manam Malarum Oosai 8.2
நான்கு நாட்கள் கடந்திருக்க.. தகப்பனிற்கு சந்தோசத்தோடு அழைத்தான் அதிரூபன். எட்டரை மணிக்கு ஒருநாளும் போன் பண்ண மாட்டானே.. இந்த நேரத்துக்கு ஜிம்முலயில்ல இருப்பான்.. என யோசித்தவாறே அழைப்பை ஏற்றார் கணேசன்.
‘எப்படிப்பா இருக்கிங்க.? பட்டுமா தூங்குதா.?” என்றான் உற்சாகமாக. குழந்தை வரவிற்கு பிறகு அதிகம் வீடியோ காலில்தான் அதிரூபன் அழைப்பான். இன்றும் அப்படித்தான் கால் செய்தான்.
‘எல்லாரும் நல்லாயிருக்கோம்.. பட்டுமா எழுந்தாச்சி.. உங்கம்மா குளிக்க வச்சிட்டிருக்கா.. அது சரி.. நீ என்ன ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரியிருக்கு.. ஊருக்கேது வரியா.?” என்றார் சின்ன ஆவலோடு.
‘எப்படிப்பா கண்டுபிடிச்சிங்க.?” என வியந்தவன்.. ‘டைரக்டருக்கு உடம்பு சரியில்லையாம்.. அதனால சூட்டிங் ஒரு வாரத்துக்கு தள்ளி வச்சிட்டாங்கப்பா.. ஆம்புலன்ஸ் ஒன்னு விலைக்கு வருது.. ஒரு வாரமா வாங்கிக்கிறியான்னு கேட்டுட்டு இருக்காங்க.. நாளைக்கு அது என்னன்னு பார்த்துட்டு.. நைட் கிளம்பி வரேன்ப்பா..” என்றான் சந்தோசமாக.
Advertisement
‘ம்.. அப்பனையும் மகளையும் கையிலயே பிடிக்க முடியாது.. நீ வந்துட்டா போதுமே.. எங்களை அப்படியே ஓரங்கட்டிடுவா உன் மக..” என்றார் பெருமையோடு.
‘ஹா..ஹா..ஹா..” என சந்தோசமாய் சிரித்தவன்.. அப்புறம் பட்டுமா புதுசா என்ன செய்தா..?” என்றான் ஆசையாக.
‘போன வாரம் சப்பாத்திக்கு வச்சிருந்த மாவை எடுத்து உடம்பெல்லாம் கொட்டிகிட்டா.. பொறையேறினா என்னாகுறதுன்னு இதெல்லாம் எடுப்பியான்னு சின்னதாதான் அதட்டினேன்.. முகத்தை உம்முன்னு வச்சிட்டு பெரிய மனுசியாட்டம் மூலைல போய் உக்கார்ந்துட்டா.. இப்பவே அம்புட்டு கோபம் வருது.. அப்படியே ப்ரியா போலவே சேட்டை செய்யிறா ரூபா..” என்றார் பெருமையாக.
Advertisement
‘அப்பா..” என கோபமாய் கத்தினான் அதிரூபன்.
Advertisement
எதற்கு கத்துறான் என ஒரு நிமிடம் யோசித்த கணேசனிற்கு பிறகுதான் தன் தவறு புரிய.. ‘ப்ச்..” என தலையில் தட்டிக்கொண்டவர்.. ‘பட்டுமா பண்றதெல்லாம் ப்ரியா சின்ன வயசுல செய்ததை போலவே இருக்குடா.. அதான் வாய்தவறி சொல்லிட்டேன்..” என்றார் குற்றவுணர்வோடு.
‘தவறி சொல்விங்களோ தவறாம சொல்விங்களோ.. பட்டுமா விசயத்துல அத்தை மாமா நம்ம குடும்பம் தவிர்த்து யாருக்காவது ப்ரியா விசயம் தெரிய வந்துச்சி உங்க மகனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம்ன்ற ஒன்னு இல்லவேயில்லன்னு நினைப்புல வைச்சிக்கோங்க..” என்றான் கோபமாக.
அங்கு வந்த கனகா.. ‘எங்கன்னாலும் உனக்கு குழந்தையிருக்குனு சொல்லிதான் பொண்ணு கேட்கனும்னு சொல்லியிருக்க.? அப்புறம் எப்படி வெளில தெரியும்.? இங்க நம்ம வீட்டுக்குள்ள நமக்குள்ளன்னுதானன்னு அப்பா எதேச்சையா பேசியிருப்பாங்க.. அதுக்கு இப்படி முறைப்பியா.?” என்றார் கோபமாக.
Advertisement
‘ம்மா.. அப்பாவை முறைக்கனும்னு எனக்கு மட்டும் என்னமா.? பட்டுமா என் குழந்தைன்னு மனசுல இல்லாததுனாலதான ப்ரியா நியாபகம் வருது.? ப்ரியான்றவளை மனசுலயிருந்து அழிச்சிடுங்கன்னு எத்தனை முறை சொல்றது.? குழந்தைக்கு ஒரு வருசம் ஆகப்போகுதுமா.. என்னைக்காவது குழந்தை முன்ன இப்படி பேசி பட்டுமாக்கு தெரிஞ்சதுனா என்னாகுறது.?” என்றான் வேதனையோடு.
குழந்தை விசயம் நம்மளை தவிர யாருக்கும் தெரியகூடாதென கடவுள் முன் நின்று ரூபனிற்கு வாக்கு கொடுத்திருக்க.. வாய்தவறி என்றாலும்.. தான் இவ்வாறு பேசியது பெரும் தவறுதான் என்றும்.. இப்படி பேச்சு குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றுதான் தன்னிடம் கோபம் காட்டுகிறான் எனவும் மகனின் மனம் உணர்ந்த கணேசன் முகம் சோர்ந்துவிட்டது.
தந்தையின் வாட்ட முகம் தாளமுடியாமல்.. ‘சரி விடுங்கப்பா.. இனி கொஞ்சம் கவனமா இருங்க ப்ளீஸ்..” என்றான்.
‘ம்..” என தலையசைக்க.. ‘பட்டுமா எங்கம்மா.? குளிக்க வச்சிட்டிருக்கிங்கன்னு அப்பா சொன்னார்.. இப்போ நீங்க மட்டும் வந்துருக்கிங்க..?”
‘என்ன டிரெஸ் போடனும்னு அவளேதான் செலக்ட் செய்வா.. நான் நல்லாதா எடுத்து கொடுத்தாலும் மூஞ்சை சுழிக்கிறா.. இதுக்கும் ஒரு டிரெஸ் இரண்டு மணிநேரம் கூட போட்டிருக்க மாட்டா.. தண்ணிய ஊத்தி நனைச்சிட்டு மாத்தனும்னு இன்னொரு டிரெஸ்சோட வந்து நிப்பா.. “ என்றார் பொய்யாய் சலித்தபடி.
‘நல்லதுதானம்மா.? ஈரத்துலயிருந்தா சளி பிடிச்சுக்கும்ல.?” என்றான் பெருமையாக.
ப்ரியாமேல் உள்ள பாசத்தையும் அன்பையும் நூறுமடங்காய் அவளின் பிள்ளையிடம் காண்பிக்கிறான்.. ப்ரியா இல்லாததனால் அல்ல.. அவள் உயிரோடிருந்திருந்தாலும் ரூபன் இப்படித்தான் இருந்திருப்பான்.. அத்தனை பெருமைக்குரியது இவர்களின் பாசம் என அனைவருமே புரிந்திருந்திருந்தனர்.
‘ம்.. அதான பார்த்தேன்.. நீ உன் பொண்ணுக்குதான் சப்போர்ட் பண்ணுவ..” என பொய்யாய் முறைத்து.. ‘ரூபா.. உனக்கு யாரையோ பிடிச்சிருக்குன்னு சொன்னியே.. அந்த புள்ளையை சீக்கிரம் கல்யாணம் செய்துக்கிற வழிய பாருடா..
உடனே உன் பட்டுமாவை பார்த்துக்கிறதுக்காக சொல்றேன்னு நினைச்சிக்காத.. பட்டுமாக்கு எத்தனை தம்பி தங்கச்சி வந்தாலும் பார்த்துக்க எனக்கும் உங்கப்பாக்கும் சமத்து இருக்கு..
உன்னை கட்டிக்கிறவ உன்னை புரிஞ்சி பாசத்தோடவும் அன்போடவும் நடந்துக்கிட்டா போதும்.. கல்யாணத்துக்கு பேச்செடுத்ததுக்கப்புறம் நீ இப்படி தனியா கஷ்டப்படுறது எனக்கு கஷ்டமா இருக்கு..” என்றார் கவலையாக.
தன் சந்தோசமே பெரிதென நினைக்கும் அன்னையை பெருமையாய் பார்த்தவன்.. ‘ம்.. நான் விரும்பற பொண்ணை கல்யாணம் செய்துக்க நீ சம்மதிச்சிட்ட.. ஆனா உங்க புருசனும் மாமானாரும் வேற பொண்ணையில்ல கட்டிக்க சொல்றாங்க..” என்றவன்.. நியாபகம் வந்தவனாய்..
‘அப்பா அந்த காஞ்சனாம்மாகிட்ட எனக்கு குழந்தையிருக்க விசயத்தை சொல்லிட்டிங்களா.?” என்றான்.
கணேசனின் முகம் சட்டென வாட.. கனகாதான் நடந்ததை விளக்கினார். ‘அவங்க கோபம் நியாயம்தானப்பா.?” என்க..
‘பொண்ணு கொடுக்காதது கூட பரவால்ல ரூபா.. சுயநலத்துக்காகத்தான் அவங்க வீட்டுக்கு போனோம்னு காஞ்சனா நினைச்சிடுச்சி.. அதான் ரொம்ப வேதனையா இருக்கு..” என்றார் வாடிய முகத்தோடு.
‘அவங்க புருசன் இல்லாததால இப்படி நடந்துகிட்டாங்கன்னு நினைச்சிட்டாங்கப்பா..” என காஞ்சனாவை நினைத்து வருத்தமடைந்தவன்.. ‘விடுங்கப்பா.. நான் ஊருக்கு வந்ததும் அவங்க வீட்டுக்கு போய் உங்களை புரிய வைக்கிறேன்..” என்றான் ஆறுதலாக.
கணேசன் அமைதியாய் இருக்க.. ‘நான் விரும்பற பொண்ணுக்கும் அப்பா இல்லப்பா.. அவளும் ரொம்ப நல்ல குணம் உடையவதான்.. நீங்க நினைக்கிற மாதிரி இருப்பா..” என்றான் தன்மையாகவே.
மாரியப்பன் கண்கலங்கவே.. ‘தாத்தா ஒரு கால் வருது.. நான் அப்புறம் பண்றேன்.. இல்ல நாளைக்கு நேர்ல பேசிக்கலாம்..” என இணைப்பை துண்டித்தான்.
இன்னும் சற்று நேரம் பேசினால் மீண்டும் காஞ்சனா புராணம் பேசுவார் என இணைப்பை துண்டித்திருந்தான் அதிரூபன். ம் ஊருக்கு சென்றதும் ஆதிரையிடம் பேச வேண்டும்..
எத்தனை பெண் பார்க்கும் படலம் நடந்திருக்க.. அவர்களிடம் எந்த தயக்கமும் இல்லாமல் தனக்கு குழந்தையிருக்கு என சொன்னவனிற்கு தற்போது ஆதிரையிடம் அந்த தைரியம் வரவில்லை.. குழந்தையோடிருக்கும் தன்னை ஏற்றுக்கொள்வாளா.? என மனம் அடித்துக் கொண்டது.
ம்ஹூம்.. காதலை சொல்லும்போது அவளின் முகத்தில் பிடித்தமின்னை தெரியாமலா போய்விடும்.. பெரிய பட்டு என்னை வேணாம் சொல்லிடாதடி என உரிமை வேண்டுதல் வேறு வைத்தான்.
— —– —— —–
மூன்று நாள் கடந்திருக்க.. அதிரூபன் நெஞ்சினில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை. காலை எட்டு மணியாகியும் இருவரும் எழாமல் இருக்கவே.. ‘கணேசா.. ரூபனை எழுப்பு..” என்றார் மாரியப்பன். ரூபன் நள்ளிரவில் வந்தது மாரியப்பனிற்கு தெரியாததால் எழுப்ப சொன்னார்.
‘இரண்டு மணிக்கு வந்தவனை எப்படித்தான் கண்டு பிடிச்சாளோ.. ரூபன் குரல் கேட்டதும் அப்பவே எழுந்துட்டா.. விடியகாலம் அஞ்சி மணிக்கு மேலதான் ரெண்டு பேரும் தூங்கினாங்க.. இப்போ எழுப்பினா பட்டுவும் எழுந்துக்குவா.. நாம ரெண்டு பேரும் முதல்ல போலாம்.. ரூபன் எழுந்ததும் அங்க வர சொல்லி கனகாகிட்ட சொல்லிட்டு போலாம்..” என்றார் கணேசன்.
‘ஓ.. இரண்டு மணிக்கு வந்தானா.?” என புலம்பியவர்.. ‘இந்த மாதவி வம்பு செய்தா ரூபன் இருந்தா சரியா பேசுவான்னு பார்த்தேன்.. சரி.. அவனுக்கும் அலுப்பாயிருக்கும்ல.? நீ சொல்றமாதிரி நாம முன்ன போலாம்.. அவன் பின்னாடி வரட்டும்..” என கிளம்ப ஆயத்தமானவர்களுக்கு கனகா டிபன் பரிமாற இருவரும் உண்டு கிளம்பினர்.
ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்தான் அதிரூபன்.. நெஞ்சினில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை பெட்டில் படுக்க வைத்து குளித்து வெளியே வந்த ரூபனிற்கு டீ கொடுத்த கனகா..
‘அந்த ராமசாமி பெரியவருக்கு விடியகாலம் ஹார்ட் அட்டாக் வந்திடுச்சாம்.. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்கன்னு மாதவிம்மா போன் செய்தாங்க.. சொத்தெல்லாம் உயில் எழுதி வச்சிருப்பார் போல.. அந்த வக்கில் உங்கப்பாவும் தாத்தாவும் வந்தாதான் விபரம் சொல்வேன்னு சொல்லிட்டாராம்..
காஞ்சனாவையும் அவங்க மகளையும் வக்கில் வர சொல்லியிருக்கார்.. மாதவிக்கு பயந்து சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம்னு காஞ்சனா சொல்லியிருக்கு..
காஞ்சனா கையெழுத்தில்லாம உங்களாலும் சொத்தை அனுபவிக்க முடியாதுன்னு வக்கில் சொல்லவும்.. மாதவி காஞ்சனாக்கு போன் செய்து வர சொல்லியிருக்காம்..
மாதவி சொத்துக்காக போன் செய்திருந்தாலும்.. இப்படி சூழல்லையாவது காஞ்சனாக்கு எதாவது நல்லது செய்ய முடியுமான்னு உங்கப்பாவும் தாத்தாவும் எட்டரைக்கெல்லாம் கிளம்பிட்டாங்க.. நீ எழுந்ததும் உன்னையும் வர சொன்னாங்க..” என்றார்.
அந்த ஊர்தான ஆதிரைக்கும் என சந்தோசமாய் நினைத்தவன்.. அவங்க பிரச்சனையை முடிச்சிட்டு.. ஆதிரைகிட்ட நம்ம காதலை சொல்லி அவகிட்டயும் இன்னைக்கே பேசிடலாம் என முடிவெடுத்து.. ‘சரிம்மா நான் உடனே கிளம்பறேன்..”என்றான்.
‘சாப்டுட்டு போடா..” என்க.. இப்போதான்மா டீ குடிச்சேன்.. ஒரு மணிநேரமாவது ஆகனும்.. நான் அங்க பார்த்துக்கிறேன்.. என ரூமினுள் நுழைந்து சார்ட்ஸ் களைந்து பேண்டிற்கு மாறியதும்.. ‘அப்பா..” என புன்னகைத்தாள் அவனின் பட்டு.
‘அச்சோ எழுந்துட்டாளே.. இனி இவளை விட்டுட்டு எப்படி நகருறது என யோசிக்க.. அவனின் அம்மாவிடம் சொன்ன ஐடியா எதுவும் வேலைக்காகவில்லை.. ரூபனை பசையாய் ஒட்டிக்கொண்டாள் குழந்தை. இதிலேயே அரை மணி நேரம் கடந்திருக்க..
‘அம்மா.. இது வேலைக்காகாது.. பட்டுவை விட்டுட்டு போனா அழுதே திரும்பவும் காய்ச்சலை வரவச்சிடுவா.. நீயும் கிளம்பு.. நாம பட்டுமாவை தூக்கிட்டே போலாம்.. அந்த மாதவி லேசுபட்டவங்கயில்ல… நம்ம தாத்தாகிட்டயும் அப்பாகிட்டயும் எதாவது வம்பு பண்ண போறாங்க..
அந்த காஞ்சனாம்மாவை நினைச்சி அப்பா ரொம்ப வருந்துறார்.. இது மூலமா அவங்களுக்கு சொத்து பணம் இப்படி எதாவது கிடைச்சா அப்பாவும் ரொம்ப சந்தோசப்படுவார்..”என்றான்.
‘ஹாஸ்பிட்டலுக்கெல்லாம் குழந்தையை தூக்கிட்டு வேணாம் ரூபா.. பட்டுவை சமாளிக்கிறது எத்தனை கஷ்டம்னு உனக்கு காட்டத்தான் அமைதியாயிருந்தேன்.. நான் செடிக்கு தண்ணி ஊத்த போனா இவளும் பின்னாடியே வந்திடுவா.. அந்தநேரம் பார்த்து கிளம்பிடு..” என்றார் சிரிப்போடு.
ஆதிரையை பார்க்கப்போகும் சந்தோசத்தில் தானும் கிளம்பினான் புன்னகை முகத்தோடு.
