Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 2(1)

அத்தியாயம் – 2

கமலினி கடந்து சென்ற அதே சமயம் ஈகில் விஷனின் கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் ஆதவன்.

தினகரன் தொலைபேசியில் பேசியபடியே ‘வா..’ என்ற விதமாய் தலையசைக்க ஆதவனும் தன் கழுத்து பட்டையை தளர்த்திவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.



Advertisement

ஈகில் விஷன் – கண்காணிப்பு கேமராகளுக்கான மொத்த வியாபார கடை..!! வெவ்வேறு ஊர்களில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதோடு நேரடியாகவும்   தன் தொடர்பில் உள்ள ஆட்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கண்காணிப்பு கேம்ரா நிறுவுதலும் செய்து வருகிறான் தினகரன்.

அந்த முன்னறையில் ‘ப’ வடிவில் உள்ள டிஸ்ப்லே கவுண்டர்ஸ் மீறி இடையில் மூவருக்கு மேல் நிற்க இடமில்லாத அளவு குறுகலாய் இருந்தாலும் நவீன வசதிகளோடு அமைக்கப்பட்டிருந்தது.

வெவ்வேறு வகையான கேமராக்கள் சுவரில் கண்ணாடி தடுப்புகளுக்கு பின்னே வரிசையாய் பொருத்தபட்டு இருக்க அதற்கும் மேலே ஸ்லாப்களில் டி. வி. ஆர், ஹார்ட்டிஸ்க், கேபிள்ஸ் என இதர பொருட்களும் வகை வாரியாய் பிரித்து அடுக்கி இருந்தது. இதனை தாண்டி உள்ளறையில் மொத்த சரக்குகள் இருக்கும்..!!

Advertisement

மேலும் வாசலுக்கு எதிரே இருக்கும் சுவரில் பொருத்தி இருந்த தொலைக்காட்சி வாடிக்கையாளர்களுக்கு மாதிரி காட்டவென கண்காணிப்பு கேமராவோடு இணைக்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்தது.

Advertisement

“சரிங்க.. அனுப்பி வைக்கிறேன்..”
என்று ரிசீவரை வைத்ததும்,

“உன்னை தான் காணுமேன்னு நினைச்சுட்டு இருந்தேன்.. என்ன டா ஆபிஸ்ல இருந்து நேரா வரியா..” என்று ஆதவனை கேட்க அவனோ,

“இல்ல தீனா.. இங்க ஒரு டாக்டரை பார்க்க வந்தேன்..”
என சலித்துக் கொண்டான். ஆதவன் மருந்து நிறுவனம் ஒன்றில் ‘மெடிக்கல் ரெப்’ ஆக பணிப் புரிகிறான். அதிகம் அழைச்சல் உள்ள வேலை என்றாலும் பணி நேரம் போக மீதி நேரம் தினகரனோடு தான் இருப்பான்..!!

Advertisement

“என்ன டா வைச்சு செஞ்சுட்டாரோ..”

“வழக்கமா வாங்கிறது தானே.. அதை விடு.. அன்னைக்கு உனக்கு ஒரு பொண்ணை பார்த்துட்டு வந்தோம்ல.. அந்த பொண்ணோட அப்பாவும் அண்ணனும் என்னடா உன் மாமா கடையில் இருந்து வராங்க..”

என்று கேட்டவனை முறைத்து,

“உன் சித்தப்பானு சொல்லு.. அவரை என் மாமான்னு சொல்லாதன்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்.. ஒரு நாள் என்கிட்ட வசமா வாங்க போற பார்..”
என எரிந்து விழுந்தான்.

ஆதவன் சுந்தரமூர்த்தியின் சொந்த அண்ணன் மகன் தான்…!! தினகரனை விட இரண்டு வயது இளையவன் என்றாலும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்..!!  தினகரனிடம் எதை வேண்டுமானாலும் பேசவும் கேட்கவும் உரிமை பெற்ற ஒருவனும் அவனே..!!

சுந்தரமூர்த்திக்கும் தினகரனுக்கும் ஆகாது என்பதாலே உன் மாமா என்றே அவரை குறிப்பிடுவான்… அதே வழக்கத்தில் கூறியவன் அவன் கடுப்படிக்கவும்,

“சரிடா.. அது இப்ப முக்கியம் இல்ல.. இவங்களுக்கு அங்க என்ன வேலை..”
என்று ஆதவன் சொல்லவே தினகரனும் யோசிக்கலானான்.

“தெரியலயே.. நீ உன் சித்தப்பா கிட்டயே போய் விசாரிக்க வேண்டியது தானே..”

“ஏன்.. ஏற்கனவே நொந்து போய் வந்தவனை அவர் இன்னும் நூடுல்ஸ் ஆக்கவா..?? அட்வெய்ஸ் பண்றேன் பேர்வழி அப்படி இப்படின்னு கடைசியா  சேர்க்கை சரியில்லைன்னு சாடுவார்.. நானும் கேட்க போறது இல்லை.. அவரும் அதை விட போறது இல்லை..!! அப்புறம் எதுக்கு வம்பு..??”

என்று அவன் பெருமூச்சுவிட லேசாய் புன்னகைத்தவன்,

“விடு.. புக் எதுவும் வாங்க வந்து இருப்பாங்க..”

என சாதாரணமாய் சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க,

“ஆமா.. கல்லனைல இருந்து புக் வாங்க வேண்டி உன் மாமா கடையை தேடிகிட்டு வராங்க.. ஏன் டா இப்படி இருக்க..?? உன்னை பத்தி விசாரிக்க தான் வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..”

என்று ஆதவன் கவலையாய் கூறினான். இது எங்கே போய் முடியும் என்று யோசிக்காமல் அலட்சியமாய் இருக்கிறானே என கோபம் வந்தது.

தினகரன் அமைதியாய் இருக்கவே தானே தொடர்ந்தான்.

“ஊர்ல வேற ஆளே இல்லைன்னு அவர்கிட்ட போய் கேட்குறாங்க.. அந்த மனுஷன் நல்லவிதமாவா சொல்ல போறாரு.. அத்தை வேற இந்த தடவை ரொம்ப எதிர்பார்த்து இருந்தாங்க.. என்ன நடக்க போகுதோ..”

தினகரனுக்கும் புரியாமல் இல்லை. ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும்..!! எதுவாக இருந்தாலும் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றே இருந்தது.

எனவே,
“இப்ப ஏன் புலம்புற ஆதி… அவங்க எதார்த்தமா கூட வந்து இருக்கலாம்.. நீ அதிகம் யோசிக்காத..”
என்று அசட்டையாய் சொல்ல அவனை மேலும் கீழும் பார்த்தவன்,

“எனக்கு ஒரு உண்மையை சொல்லு தீனா.. உனக்கு அந்த பொண்ணை பிடிச்சு இருக்கா.. இல்லையா..”
என்று சந்தேகம் கேட்க,

“ஏன் திடிர்னு இந்த கேள்வி..? நிச்சயத்திற்கு நாள் கூட குறிக்க போறாங்க.. என் சம்மதம் இல்லாமலா நடக்கும்..”
என்று பதில் கேள்வி கேட்க,

“நான் சம்மதமா கேட்கல.. உனக்கு பிடிச்சு இருக்கானு தான் கேட்டேன்..”

என்று அழுத்தமாய் அவன் பார்க்கவும் நிமிர்ந்து,

“எனக்கு பெண் பார்க்கிறது இது என்ன முதல் முறையா..?? இத்தோட எத்தனை பெண் பார்த்தாச்சுனு உனக்கே தெரியும்.. எனக்கே பிடிச்சு இருந்தாலும் எதாவது ஒத்து வந்துதா..”

என்று கேட்க ஆதவனால் மறுக்க முடியவில்லை.

“நான் இப்ப பிடிச்சு இருக்கா இல்லையான்னு யோசிக்கிற நிலையை எல்லாம் தாண்டிட்டேன் ஆதி.. பார்க்கிறதும் அப்புறம் பிடிக்கலைனு விலகுறதும் எனக்கு சலிச்சு போயிடுச்சு..

அம்மா கிட்ட முன் கூட்டுயே சொல்லிட்டேன்.. இந்த சம்மந்தம் தான் கடைசின்னு.. இதுவும் அமையலைன்னா இத்தோட கல்யாண பேச்சை மறுபடியும் எடுக்க கூடாதுனும்.. அதான் அம்மா ரொம்ப மும்முரமா முடிக்க பார்க்கிறாங்க..”
என்றவன் நிறுத்தி,

“எனக்கும் இந்த பெண்ணோட கல்யாணம் ஆகிட்டா தேவலைனு இருக்கு..”

என்று சொல்ல அது ஒரு கடமை தீரும் என்பது போல் இருந்ததே தவிர ஒரு ஆசையோ ஆர்வமோ இல்லை.
ஆதவனும் அனைத்தும் அறிந்தது தானே..!!

கணினி அறிவியலில் முதுகலை படித்திருக்கிறான். நன்றாக சம்பாதிக்கிறான்..! சொந்த தொழில்..!! கெட்ட பழக்கங்களின் வாடையே இல்லாதவன்..!! குடும்பத்தை தாங்கும் பொறுப்பானவன்..!! அத்தனையும் இருந்தாலும் தினகரனின் பிரச்சனை என்பது அவனின் முசுடு குணமும் கொஞ்சம் டெரெர் தோற்றமும் தான்.
மீறி வந்த சில இடங்களின் குடும்பத்தில் அவனின் அன்னைக்கு திருப்தி இல்லை. அதனாலே அவனின் கல்யாண பேச்சு ஓர் தொடர்கதை ஆனது.
அதை வாய்விட்டு கூறவும் செய்தான் ஆதவன்.

“என்ன டா செய்ய சொல்ற..?? உனக்கு வினையே உன்னோட லுக் தான்..
ஹீரோ மாதிரி இல்லைனாலும் ஒரு சைட் கேரக்டர் மாதிரி ஆவது இருக்கலாம்.. ஆனா ஆளும் முழியும் நல்லா வில்லன் மாதிரியே இருக்க.. இந்த தாடியை மட்டும் ஆவது எடுடான்னு சொல்றேன் கேட்க மாட்டேங்கிற.. ஒல்லியா தெரியுற ஜிம் போய் உடம்பை ஆவது ஏத்துன்னு சொன்னால் காதிலே வாங்கிறது இல்ல.. அட்லீஸ்ட் சிரிச்ச மாதிரி ஆவது முகத்தை வைன்னு சொன்னால் ‘சும்மா சிரிக்க நான் என்ன பைத்தியமா..’னு சண்டைக்கு வர..!!!  இதை பார்த்து
வர்ற பொண்ணு வீட்டுக்காரன்  எல்லாம் ‘சைக்கோ கொலைகாரனா’ இருப்பானோன்னு பயந்து ஓடிடுறானுங்க.. “

என நீட்டி முழக்கி கூறியவன் தலையில் பட்டென்று ஓரடி வைத்தான் தீனா.

“இதான் சாக்குன்னு ஓவரா டேமேஜ் பண்ற நீ.. கொன்றுவேன் பார்த்துக்க..”

“கோபப்படாத மச்சான்..”

என்றவன் பின்,

“காத்திருப்போட பலன் எப்பவும் சிறப்பா தான் இருக்கும்.. நீ நல்லவன் டா… உனக்கு நல்லது தான் நடக்கும்.. பார்த்துட்டே இரு..”
என மனதார கூற, “நடந்தால் சரி..”
என்றான் நம்பிக்கை துளியும் இல்லாமல்..!!

விளையாட்டாய் கூறினாலும் தீனாவை பற்றி அவன் அன்னை லலிதா பேசும்போது ஆதவனுக்கும் மிக கஷ்டமாக இருக்கும்.. இவன் சொன்னது எல்லாம் புறதோற்றத்தில் தான்.. ஆனால் உள்ளே மனதளவில் எத்தனை தங்கமானவன் என பழகி பார்த்தால் தான் தெரியும்..!! தன்னை சார்ந்தவர்களை அப்படி பார்த்துக் கொள்வான்.!!அவர்களுக்காக எதுவும் செய்வான்..!!  ஆதவனை கேட்டால் தினகரன் கிடைக்க அந்த பெண் தான் கொடுத்து வைக்க வேண்டும் என்பான்.

‘இந்த பெண் வீட்டில் ஆவது தீனாவை புரிந்துக் கொண்டு நல்லபடியாய் திருமணம் நடக்க வேண்டும்..’

என ஆசைப்பட்டாலும் என்ன செய்வது அவர்கள் நேரம் சரி இல்லையே..!!

ஆதவன் சந்தேகித்த உண்மை இரண்டு நாள் சென்று தினகரன் வீட்டில் வெடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!