Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆதவனின் அனிச்சமலரே

ஆதவனின் அனிச்சமலரே 1 (2)

மலர் 2.

“நீங்களாவது கொஞ்சம் விட்டு கொடுக்கலாமே அவனுக்கு விருப்பமில்லாத ஒன்ன செய்ய சொல்லி எதுக்கு கட்டாயப்படுத்துறீங்க”.

“நா எதுக்கு சொல்றேன்னு அவனுக்கு தான் புரியலை உனக்குமா புரியலை. நா ஒரு விஷயம் சொன்னா காரணமில்லாம சொல்லமாட்டேன்னு உனக்கு தெரியாதா கோதை. நமக்கு இருக்குறது ஒரே மகன். ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளையா இருக்கு சரி போய்ட்டு வான்னு அனுப்பி வைக்க,

அவன் ஃபாரின் போய் படிக்கணும்னு சொன்னான் சரின்னு அனுப்பி வச்சேன் அதுவும் அவனோட விருப்பத்துக்காக இல்ல. நீ மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் கேட்டதும் ஒத்துக்கிட்டேன். ஆனா, இப்போ மொத்தமா நம்மள விட்டு போறேன்னு சொல்றான் அவனை அனுப்பி வச்சுட்டு நாம சந்தோஷமா இருப்போமா சொல்லு!.



Advertisement

இங்க ஆபீஸ்ல வந்து வேலை பாக்குறதுல அப்டி என்ன கஷ்டம்!, அவனுக்கு வேணா நாம தேவையில்லாம இருக்கலாம் ஆனா நமக்கு அவன் தேவை கோதை. அதனால தான் அவன் விருப்பத்தை மதிக்காம ஆபீஸ்ல வந்து வேலை பாக்க சொல்றேன்” என்று தன் மன எண்ணத்தை வெளிப்படுத்தினார் தணிகாசலம்.

“நீங்க சொல்றது சரிதான் அவன பிரிஞ்சு இத்தனை நாள் நாம கஷ்டப்பட்டது போதும்” என்று ஆமோதித்தவர் “அவன் மேல இவ்ளோ பாசம் வச்சுருக்கிங்க அப்புறம் எதுக்கு அந்த மாதிரி கண்டிஷன் போட்டிங்க. உங்களுக்கு பிறகு அவன் தான் அந்த கம்பெனிய எடுத்து நடத்த போறான். அப்டி இருக்குறப்போ ஆபீஸ்ல வேலை செய்றவங்கள்ல அவனும் ஒருத்தனா இருக்கணும்னு சொல்லுறிங்க, அது தான் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றார் பூங்கோதை கவலை தேய்ந்த குரலில்.

மூக்கு கண்ணாடியை கழற்றி அருகில் இருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு”கோதை நா இந்த இடத்துக்கு வர்றதுக்கு காரணம் என்னனு நீ நினைக்கிற. பொறுமை, நிர்வாக திறமை, சாதிக்கனும்ன்ற வெறி. இந்த மூனையும் விட கடின உழைப்பு. இதெல்லாம் இருந்ததுனால தான் இன்னைக்கு இவ்ளோ பெரிய இடத்துல இருக்கேன் கடின உழைப்புன்னா என்னனு என்னோட மகனுக்கு தெரிய வேணாமா?,

Advertisement

எம்டி பதவிய கொடுக்குறதுல எனக்கு எந்த ஆட்சோபணையும் இல்ல, ஆனா நிர்வாகத்தை எடுத்து நடத்துறதுக்கு அவனுக்கு பொறுமை ரொம்ப அவசியம். எதுகெடுத்தாலும் கோபப்பட்டுகிட்டு இருந்தா அவனால எப்டி முன்னேற முடியும் அவன நம்பி எப்டி நிர்வாகத்தை கொடுக்க முடியும் சொல்லு?.வேலை பாக்குறதை விட வேலை பாக்குறவங்களை எப்டி அனுசரிச்சு அரவணைச்சு வேலை வாங்கணும்னு அவனுக்கு தெரியணும். அதுக்கு தான் நா அப்டி ஒரு கண்டிஷன் போட்டேன் எல்லாம் அவனோட நல்லதுக்கு தானே தவிர அவன கஷ்டப்படுத்த இல்ல கோதை” என்று சொல்ல,

Advertisement

“பிஸ்னச பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது ஆனா அவனோட நல்லதுக்கு, நீங்க பண்ற ஒவ்வொரு காரியத்துலயும் நா உங்களுக்கு துணையா இருப்பேன். அவன சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு நாளைக்கு கண்டிப்பா அவன் ஆபீசுக்கு வருவான் நீங்க அவன நினைச்சு கவலைப்படாதீங்க” என்றவர் “ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னிங்களே கிளம்புங்க அவன நா பாத்துக்கிறேன்” என்று பூங்கோதை கூறியதும் புன்னகை முகமாய் தலையாட்டிய தணிகாசலம், அலுவலகம் கிளம்பி சென்றார்.

கோபத்துடன் அறையில் நடந்து கொண்டிருந்தவன் வாயிலில் நிழலாடிய உருவத்தை கண்டு நிமிர்ந்து பார்க்க, கையில் உணவு தட்டுடன் நின்று கொண்டிருந்தாள் பவித்ரா. அவளை கண்டதும் உள்ளுக்குள் கனன்றவன் “என்ன?” என்று உரும,

“உள்ள வந்து பேசலாமா மாமா” என்றவளை ஏற இறங்க பார்வையால் அளவிட்டவன் “ம்” என்ற முணங்களில் அனுமதி அளித்தான்.

Advertisement

தயங்கி உள்ளே வந்தவள் “உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன் மாமா என்ன கோபம் இருந்தாலும் அத சாப்பாடு மேல காட்ட கூடாது. முக்கியமா மார்னிங் சாப்பாட ஸ்கிப் பண்ணவே கூடாது” என பேசிக்கொண்டே உணவை பரிமாறி “ம் சாப்டுங்க மாமா” என்று நிமிர்ந்தவள் அவன் மூகம் பார்க்க,

எள்ளலின் எழுச்சி ஏகபோகமாய் காணப்பட்டது அவன் வதனத்தில் “நீ யாரு எனக்கு சாப்பாடு கொண்டு வர்றதுக்கு பசிச்சா எனக்கு சாப்பிட தெரியாது. அன்ன பூரணின்னு நினைப்பு இத எடுத்துட்டு போ இப்போ சாப்பாடு ஒன்னு தான் கேடு அத கொண்டு போய் குப்பையில போடு” என்றான் விஷ்வா முகத்தை சுண்டி வைத்தபடி.

“அப்டி சொல்லாதீங்க மாமா ஒருவேளை சாப்பாடு இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா?, பெரிய மாமா சொன்ன விஷயம் உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா, உங்க நல்லதுக்கு தானே அவரு சொன்னாரு எதையும் ஒரு பக்கமா இருந்து யோசிக்கத்திங்க அவங்க மனசுல என்ன இருக்கு எதுக்காக அப்டி சொன்னாங்கன்னு கொஞ்சம் நிதானமா யோசிங்க மாமா”.

“ப்ச் உன்னோட அறிவுரைய கொஞ்சம் நிறுத்துறியா உன்கிட்ட கேட்டேனா?. எனக்கு அட்வைஸ் பண்றதுக்கு கூட தகுதி வேணும் நீயெல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு முட்டாள் இல்ல. இந்த வீட்டுல உன்னோட இடம் எதுவோ அத மட்டும் பாரு தேவையில்லாம என்னோட விஷயத்துல தலையிடாத நல்லா இருக்காது” என வெடுக்கென்று பேசவும்,அவள் முகம் கூம்பி போனது.

“சாரி மாமா என்னோட தகுதி என்னனு தெரிஞ்சிருந்தும் மனசுல தோணுனத சொல்லிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க. அத்தை உங்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டாங்க அவாய்ட் பண்ணாம சாப்பிட்டுருங்க நா கிளம்புறேன்” என்றவள் அவன் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.

‘வார்த்தைகளில் நாணை ஏற்றி குறி பார்த்து எய்யும் வித்தையை எங்கு கற்றானோ’ என்று கலங்கிய விழிகளுடன் பவித்ரா விறுவிறுவென அறையை விட்டு வெளியேறிட,

“ச்சே” என்று கோபத்துடன் கையை உதறியவன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்புவிடுத்து பேச தொடங்கினான்.

தணிகாசலத்தின் தங்கை மகள் தான் பவித்ரா. வேண்டுதலை நிறைவேற்ற குடும்பமாக திருப்பதி சென்றவர்களின் வாகனம் எதிர்பாராத விதமாக எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பவித்ராவின் தாய் தந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட, கையிலும் தலையிலும் பலமான காயங்களுடன் தப்பியது அவள் மட்டுமே.

விஷயம் அறிந்து தணிகாசலமும் பூங்கோதையும் மருத்துவமனை சென்று பார்க்க, பார்வையில் ஜீவனின்றி விட்டதை வெறித்து பார்த்தபடி விபத்து நடந்த அதிர்ச்சியில் பித்து பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். அந்நிலையில் அவளை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் தங்களுடனே அழைத்து வந்து பார்த்து கொள்ள,அன்று முதல் அவளும் அவ்வீட்டில் அவர்களில் ஒருத்தியாய் அங்கமாகி போனாள்.

ஆனால் விஷ்வாவிற்கு மட்டும் ஏனோ அவள் மீது அத்தனை பிடித்தம் இல்லாமல் போனது அவளை கண்டாலே அவன் முகம் எண்ணெயில் பட்ட கடுகாய் பொறியும். பள்ளி ஆண்டுவிழாவில் முதல் பரிசை பெறுவதில் இருந்து, படிக்கும் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுக்கும் வரை அவளுடன் ஒப்பிட்டு பேசி அவர்கள் அறியாமலேயே அவன் மனதில் அவள் மீது வெறுப்பை வளர்த்துவிட்டனர்.

எவருமில்லை என்ற பரிவு ஒரு புறம் இருந்தாலும் இன்று வரை பின் தொடரும் ஒப்பிடுதலை மட்டும் அவனால் சகித்து கொள்ள முடியவில்லை. அன்று காட்ட தொடங்கிய அதே வெறுப்பை இன்று வரை தொடர்ந்து அவள் மீது காட்டி வருகிறான் விஷ்வாமித்ரன்.

கீழே இறங்கி வந்தவள் பூங்கோதையை கண்டதும் கலங்கிய விழிகளை அவசரமாக துடைத்து கொண்டு “அத்தை எனக்கு டைம் ஆச்சு நா போய்ட்டு வறேன்”என்றாள் அவர் முன் எதையும் காட்டாது.

“மன்னிச்சிறும்மா அவன் பேசுனதுக்கு நா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன். நீ எதையும் மனசுல வச்சுக்காத அவனோட குணம் தான் தெரியுமே”என்று வருந்தி பேச,

“என்ன அத்தை இப்போ என்னாச்சுன்னு நீங்க மன்னிப்பு கேக்குறீங்க. மாமா என்ன எதுவும் சொல்லல நீங்களா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு வருத்தப்படாதீங்க. அவருக்கிட்ட இப்போ எதுவும் பேச வேணாம் கொஞ்ச நேரம் கழிச்சு போய் பேசுங்க மாமா ரொம்ப கோபமா இருக்காரு” என்னும் போதே வாசலில் பைக்கின் ஹாரன் சத்தம் கேட்டது.

“சரிங்க அத்தை நா கிளம்புறேன் டைம் ஆச்சு ஈவ்னிங் வந்து பேசலாம் இன்னைக்கு டிஃபன் சூப்பர்” என்று கன்னத்தை தட்டியவள் பூங்கோதையின் முகத்தில் புன்னகையை கண்ட பிறகே கைபையை எடுத்து கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினாள்.

பவித்ரா அருகே வரும் வரை நிறுத்தாமல் ஹாரனை அடித்து கொண்டிருந்தான் அந்த இரும்பு குதிரையின் மேல் அமர்ந்திருந்தவன்.

“நிறுத்து பாலா அதான் நா வந்துட்டேன்ல பின்ன எதுக்கு நிறுத்தாம அடிச்சுகிட்டே… இருக்க”.

“டைம் ஆச்சு பவி சீக்கிரம் போகணும் எல்லாரும் நமக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்று அவசரப்படுத்தியவன் அவளது முகத்தை உற்று பார்த்தான்.

அவன் பார்வையை கண்டு புருவம் நெறித்தவள் “என்ன அப்டி பாக்குற. லேட் ஆகிருச்சுன்னு பறந்த இப்போ என்னடான்னா என்னோட முகத்தை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க”, பிசிறில்லாமல் வார்த்தைகளை அளவாய் கோர்த்து கன்னம் விரியாமல் இதழை மட்டும் லேசாக விரித்து புன்னகைத்த வண்ணம் கேட்டாள் பவித்ரா.

“அழுத மாதிரி இருக்கு எப்பவும் போல அந்த விஷ்வா உன்ன எதுவும் சொன்னானா?” என்று சந்தேகம் இழையோட கேட்டவனின் குரலில் கீற்றாய் கோபம் ஒட்டியிருந்தது.

தும்பை பூ நிற பற்கள் பளிச்சென்று தெரிய சத்தமில்லாமல் சிரித்தவள் “உனக்கு ஏ பாலா அவருமேல அவ்ளோ கோபம் நா டல்லா இருந்தா அதுக்கு அவரு தான் காரணமா என்ன?. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல இன்னைக்கு அம்மா அப்பாவோட கல்யாண நாள் அவங்க கூட இருந்த நாட்களை நினைச்சு பாத்தேன் ஒரு மாதிரி ஃபீல் ஆகிருச்சு”என்றாள் சோகம் இழையோட.

“இது தான் காரணமா பவி?”, அவள் கூற்றை நம்பாமல் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டி கேட்க,

“வேற என்னவா இருக்கும்னு நீ நினைக்கிற” என்று தணிவான குரலில் பவித்ரா கேட்கவும்,

“நா எதுவும் நினைக்கலை நீ ஏறு இன்னைக்கு எங்க கேம்ப்ன்னு தெரியும் தானே?”.

“ம் தெரியும் பாலா அதான் சீக்கிரமாவே கிளம்பிட்டேன் நீ தான் வர லேட் பண்ணிட்ட இப்போ பேசியே அஞ்சு நிமிஷத்தையும் வேஸ்ட் பண்ணிட்ட சீக்கிரம் போ ப்பா” என்றவள் ஏறி அமர்ந்ததும் அந்த இரும்பு குதிரை இருவரையும் தாங்கி கொண்டு வேகமாக சென்றது.

கீழே நடந்தவற்றை ஜன்னல் வழியே பார்த்து கொண்டிருந்த விஷ்வா அலட்சியமாய் தோளை குலுக்கி விட்டு அவசரமாக வெளியே கிளம்பி சென்றான்.

தொடரும்…

suganya mahesh

House wife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!