Skip to content
Post Views: 3,068
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 31
சூர்யா அவனுடைய அக்கா மதுவிற்கு அழைத்துத் தான் ஆருவை காதலிப்பதாகச் சொல்ல… “நான் இதை எதிர் பார்த்தேன். நீ ஆஸ்திரேலியால இருந்து தான் யாரையாவது தள்ளிட்டு வருவேன்னு நினைச்சேன். பரவாயில்லை நம்ம ஊரு பொண்ணு தான். அதுவும் ஆராதனாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்றாள்.
“மது, நீ தான் அம்மா அப்பாகிட்ட எப்படியாவது பேசி சம்மதம் வாங்கணும். ஆருவோட பெரியம்மா நமக்குச் சொந்தம் தான். ஆரு வீட்ல அர்ஜுன் தவிர மத்தவங்களுக்கு, நாங்க லவ் பண்றது தெரியாது. அதனால அரேஞ் மேரேஜ் மாதிரி தான் கொண்டு போகணும். நீ இதையும் அம்மா அப்பாக்கிட்ட சொல்லிடு.”
“நீ கவலைப்படாதே சூர்யா, நான் இன்னைக்கு நம்ம வீட்ல பேசுறேன். மறுக்கக் காரணம் எதுவும் பெரிசா இல்லை… அதனால ஒதுக்குவாங்கன்னு தான் நினைக்கிறேன்.” மது சொல்ல… சூர்யாவும் தன் பெற்றோர் தங்கள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கடவுளை ப்ராதித்தான்.
மதுவும் சொன்னது போல் அன்றே தன் பெற்றோரிடம் சூர்யா ஆருவை விரும்புவதைச் சொன்னாள். சூர்யாவின் அம்மா அவனைப் பார்த்து, “நீயே உனக்குப் பொண்ணு பார்த்துக்கிற அளவு வளர்ந்திட்ட, நாங்கெல்லாம் உனக்குத் தேவை இல்லை…” என்றார் வருத்தமாக….
“அம்மா ப்ளீஸ்… நான் பிளான் பண்ணி லவ் மேரேஜ் தான் பண்ணிக்கணும்னு நினைக்கலை. எனக்கு ஆராதனாவை பிடிச்சிருக்கு. அவ எனக்கு மனைவியா வரணும்னு ஆசை. ஆனால் உங்களுக்கு விருப்பம் இல்லைனா வேண்டாம், இதோட விட்டுடுங்க. ஆனா… என்னை வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்த கூடாது.” சூர்யா உறுதியாகச் சொல்ல…
“இதை ஒன்னு சொல்லி நல்லா பயமுறுத்துங்க டா…உங்களுக்குக் காலேஜ்ல இதெல்லாம் தான் சொல்லி தராங்களா… பெத்தவங்களை எப்படிக் கார்னர் பண்றதுன்னு…” அவன் அம்மா கேட்க… சூர்யா இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“போதும் அவனைப் போட்டு ஏன் படுத்துற? நல்ல பொண்ணா தான பார்த்திருக்கான். உனக்குப் பொண்ணு தேடுற வேலை மிச்சம். இந்தக் காலத்தில பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு, அவன் உனக்கு நோகாம ஒரு நல்ல பொண்ணா பார்த்திருக்கான். சரின்னு சொல்லிட்டு போவியா… அதை விட்டுட்டு உன்னோட கெத்த காட்ற நேரமா இது…” சூர்யாவின் அப்பா கேட்க ….
சூர்யாவின் அம்மா, “நீங்களும் அவனோட சேர்ந்துடிங்களா… இனி உருப்பட்ட மாதிரி தான்.” என்று அலுத்துக் கொண்டார்.
சூர்யா சென்று அவன் அம்மாவின் அருகே அமர்ந்தவன் “அம்மா உங்களுக்கு நிஜமா ஆராதனாவை பிடிக்கலையா, அவ ரொம்ப நல்ல பொண்ணுமா…” என்றான் தவிப்பாக.
மகனின் தவிப்பை உணர்ந்த அவன் அம்மா, “தன்னோட பையனுக்குத் தான் பெண் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு… எல்லா அம்மாவுக்கும் ஆசை இருக்கும். அதனால நான் அப்படிப் பேசினேன். எனக்கு ஆராதனாவை பிடிச்சிருக்கு கவலைபடாதே.” என்றவர், “நாம அவங்க வீட்ல எப்படிப் பேசுறது?” என்று கேட்க…. சூர்யாவின் முகம் மலர்ந்தது.
“ரொம்பத் தேங்க்ஸ் மா.” என்றவன் தொடர்ந்து, “அர்ஜுன் இன்னைக்குச் சாயங்காலம் அவங்க பெரியம்மாவோட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கான். அவங்க வந்ததும் எப்படின்னு பேசி முடிவு பண்ணிக்கலாம்.” என்றான்.
சூர்யா சொன்னது போலவே அர்ஜுன் மாலை நான்கு மணிக்கு தன் பெரியம்மாவை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்தான். டிபன் காபி சாப்பிட்டதும் காயத்ரியே பேச்சை ஆரம்பித்தார்.
“உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும், பசங்க ஆசை படறாங்க, அதுவும் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தம் வேற…எனக்கு உங்க பையன்னு தெரிஞ்சதும் ரொம்பச் சந்தோஷம், அது தான் நானே நேர்ல வந்தேன்.”
“எங்களுக்கும் உங்க குடும்பம்னு தெரிஞ்சதும் சந்தோஷம் தான், இருந்தாலும் பொண்ணு வீட்ல இவங்க காதல் தெரியாது போலிருக்கே…” என்று சூர்யாவின் அப்பா இழுக்க…
“ஆதி வரவேற்புல உங்க பையன் தான் சூர்யான்னு தெரிஞ்சதும், ஆருவுக்குச் சூர்யாவை கல்யாணம் செஞ்சா நல்லா இருக்குமேன்னு நான் அப்பவே நினைச்சேன். அதனால நாம இதைக் காதல் கல்யாணமா பார்க்காம, நாம பார்த்து செஞ்சு வைக்கிற கல்யானமாவே நினைச்சுப்போம்.”
“என்னோட தங்கை வீட்ல என் பேச்சை தட்டமாட்டங்க. நான் சூர்யாவுக்கு ஆருவை செய்யலாம்னு சொன்னதும். அவங்களுக்கு ரொம்பச் சந்தோசம்.” என்று காயத்ரி ஒரு பெரிய ஐஸ் கட்டியை தூக்கி சூர்யாவின் பெற்றோர் தலையில் வைக்க… அவர்களும் அதில் உருகி, பெரியம்மா சொன்னதுக்குச் சந்தோஷப்பட்டனர்.
“நீங்க எப்ப எங்க வீட்டுக்குப் பெண் பார்க்க வர்றீங்க?” காயத்ரி கேட்க…..
“சூர்யா இப்ப தான் வேலையில சேர்ந்திருக்கான், அதுக்குள்ள கல்யாணமான்னு தான் யோசிக்கிறோம்.” சூர்யாவின் அம்மா சொல்ல…
“நீங்க சொல்றதும் கரெக்ட் தான். ஆனா நல்ல விஷயத்தைத் தள்ளி போட வேண்டாம். அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நாள் நல்லா இருக்கு, நீங்க அன்னைக்குப் பொண்ணு பார்க்க வாங்க. நாம நமக்குள்ள பேசி உறுதி பண்ணிக்கலாம். நமக்கும் மண்டபம் கிடைக்கணும், கல்யாணம்னா ஏகப்பட்ட வேலை இருக்கே. எப்படியும் கல்யாணம் வைக்க ஆறு மாசமோ இல்லை எட்டு மாசமோ ஆகிடும்.” காயத்ரி சொல்ல…சூர்யாவின் பெற்றோரும் ஆமாம் சரி \தான் என்றனர்.
அர்ஜுனும், பெரியம்மாவும் வெற்றிகரமாகச் சூர்யா, ஆரு திருமணத்தைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்ததும், அர்ஜுன் தன் பெரியம்மாவை வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல், மீரா வீட்டுக்குச் சென்றான்.
அன்று சனிக்கிழமை மீரா பெங்களூரில் இருந்து வந்து இருந்தாள். அவர்கள் வருவது மீராவுக்குத் தெரியாது. வீட்டில் வேறு யாரும் இல்லை, எல்லோரும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் வேலை செய்யும் பெண் மீராவை இண்டர்காமில் அழைத்து, அர்ஜுன் வந்திருப்பதாகச் சொல்ல… மீரா துள்ளி குதித்துக் கீழே இறங்கி வந்தாள்.
மீரா காயத்ரியை பார்த்ததும் உற்சாகமாகி “அத்தை, வாங்க… வாங்க.” என்று அவரைச் சந்தோஷமாக வரவேற்று கட்டி கொண்டவள், அவரிடம் பாச மழை பொழிய…. அர்ஜுன் அவள் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்ற கடுப்பில் இருந்தான்.
மீரா அர்ஜுனுக்குப் பிடித்த ரசமலாயும், முந்திரி பக்கோடாவும் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தவள், “அத்தை, நீங்க இருந்து நைட் சாப்ட்டுட்டு தான் போகணும்.” என்றாள்.
“ஏற்கனவே சூர்யா வீட்ல டிபன் சாப்பிட்டோம் மீரா, இப்ப நீ வேற ஸ்னாக்ஸ் குடுத்திருக்க. இனி நைட் ஒன்னும் சாப்பிட முடியாது. எனக்கு உங்க வீட்ல போடற பில்ட்டர் காபி பிடிக்கும், அது வேணா கொடு…” காயத்ரி சொல்ல… மீரா வேலை செய்யும் பெண்ணை அழைத்து இரண்டு பில்டர் காபி கொண்டு வர சொன்னாள்.
அர்ஜுன் தனக்குக் காபி வேண்டாம் என்றான். மீரா சரி ஒரு காபி கொண்டு வா என்று அந்தப் பெண்ணை அனுப்பிவிட்டுக் காயத்திரியிடம் பேச… அவரும் சூர்யா வீட்டில் நடந்ததைச் சொல்ல…அதை கேட்ட மீராவிற்கு மிகவும் சந்தோசம்.
வேலை செய்யும் பெண் காபியை கொண்டு வந்து மீராவிடம் கொடுக்க… அவள் காயத்ரிக்கு கொடுத்துவிட்டு அர்ஜுனை தேடினாள்… அர்ஜுன் வெளியே தோட்டத்தில் நின்று கொண்டிருந்தான். மீரா காயத்ரிக்கு டிவி போட்டுவிட்டு “பார்த்திட்டு இருங்க அத்தை, இதோ வரேன்.” என்று அர்ஜுனிடம் சென்றவள், அவனை அழைத்துக் கொண்டு தள்ளி சென்றாள்.
அர்ஜுன் எதற்கு என்று புரியாமல் பார்க்க… மீரா தோட்டத்தின் உள்ளே சென்றதும், அர்ஜுனை இறுக அனைத்து கொண்டாள்.
அர்ஜுன் மீராவின் முகத்தை நிமிர்த்தி “என்ன மேடம் இவ்வளவு நேரம் கண்டுக்காம இருந்தீங்க, இப்ப திடீர்ன்னு கட்டி பிடிக்கிறீங்க.” என்றவன் லேசாக மீராவின் நெற்றியில் முட்ட…. மீராவிற்குக் கண்ணெல்லாம் கலங்கி விட்டது.
“என்னடா மீரா? என்ன ஆச்சு? ஏன் கண்ணெல்லாம் கலங்குது?”
“அர்ஜுன் நம்ம கல்யாணமும் நல்லபடியா நடக்கும் இல்ல…”
“அதுல உனக்கு என்ன சந்தேகம்? கண்டிப்பா நடக்கும்.”
“அர்ஜுன் நாம வித்யா ஆன்டி முழு மனசோட ஒத்துக்கிற வரை… அது எவ்வளவு நாள் ஆனாலும் காத்திருக்கணும். அவங்க சம்மதம் இல்லாம, நாம கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.” மீரா கண்ணீரோடு சொல்ல…
“கண்டிப்பா மீரா, அம்மா சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கும். நீ ஏன் இதுக்கு இவ்வளவு கவலைப்படுற? நான் பார்த்துக்கிறேன்.” என்றவன், அவள் கண்ணீரை துடைத்து, அவள் இதழில் லேசாக முத்தமிட்டு, வா போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
உள்ளே வந்த மீராவை பார்த்து காயத்திரி, “அழுதியா என்ன… கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.” என்று கேட்க…”அவளுக்கு அம்மா எங்க கல்யாணத்துக்கு ஒதுக்க மாட்டாங்களோன்னு பயம்.” என்றான் அர்ஜுன்.
“இதுல பயப்பட என்ன இருக்கு?” என்றதும், அர்ஜுன், மீரா இருவரின் முகமும் மலர்ந்தது. அவர்கள் இருவரின் முகத்தைப் பார்த்த காயத்ரி, “இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா வித்யா உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா.” என்றார் சாதாரணமாக…. அர்ஜுன் அவனின் பெரியம்மாவை பார்த்து முறைக்க…
“என்ன டா லுக்கு…. கண்டிப்பா உங்க அம்மா ஒத்துக்கமாட்டா…. அதுக்காக நீ அப்படியே விட்டுடவா போற, அப்புறம் எதுக்குப் பீலிங்க்ஸ்? எதுவுமே உடனே கிடைச்சுட்டா அதோட அருமை தெரியாது. போராடுங்க… கண்டிப்பா நினைத்ததைச் சாதிக்கலாம்.” என்றார் உறுதியாக.
அவர் சொன்னதைக் கேட்ட அர்ஜுன், மீரா இருவருக்கும் மனதில் நம்பிக்கை வந்தது. பெரியம்மா பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த மீராவின் அப்பா, “நீங்க சொல்றது ரொம்பச் சரி மா.” என்றார்.
மீராவின் அப்பாவையும், சித்தியையும் பார்த்து காயத்ரியும், அர்ஜுனும் எழுந்து நிற்க… ராம்நாத் காயத்திரியை பார்த்து “வாங்க மா உட்காருங்க.” என்றவர், அர்ஜுனிடம் “எப்படி இருக்க அர்ஜுன்? நானே உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன்.” என்றார்.
“நான் நல்லா இருக்கேன் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?” அர்ஜுன் கேட்க… ராம்நாத் அர்ஜுனின் அருகில் வந்து அவனைத் தோளோடு சேர்த்து அணைத்து, “நானும் நல்லா இருக்கேன்.” என்றவர் மீனாக்ஷியை பார்க்க, அவள் அவர்களைப் பார்த்து “நைட் சாப்பிட்டு தான் போகணும், நான் டிபன் ரெடி பண்ண சொல்றேன்.” என்றாள்.
“இப்ப தான் மீரா ஸ்னாக்ஸ் குடுத்தா… அதுவே போதும், இன்னொரு நாள் வரும் போது சாப்பிடுறோம்.” காயத்ரி சொல்ல… மீனாட்சியும் சரி என்று அவர்களோடு அங்கயே அமர்ந்தாள் .
ராம்நாத் அர்ஜுனிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அவனை அழைத்துக் கொண்டு அவரது அலுவலக அறைக்குச் செல்ல… காயத்ரியும், மீனாட்சியும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். ராம்நாத்தும், அர்ஜுனும் என்ன பேச போகிறார்களோ என்று மீரா டென்ஷன்னாக இருந்தாள்.
“அர்ஜுன், மீரா என்கிட்டே உன்னை விரும்புறேன்னு சொன்னா… ஒரு அப்பாவா முதல்ல எனக்குக் கொஞ்சம் ஷாக் தான். ஆனா எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, என் பொண்ணு அவளா தேர்ந்தெடுத்தாலும் நல்ல மாப்பிள்ளையா தான் தேர்ந்தெடுதிருக்கா….எனக்கு இந்த ஜாதி நம்பிக்கை எல்லாம் கிடையாது. யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் அங்கே அன்பும், ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கிறதும் தான் ரொம்ப முக்கியம். அது இல்லைனா எந்தக் கல்யாணமும் வெற்றி பெறாது, இதுக்கு நானே உதாரணம். அதனால நான் அவ விருப்பத்தை மறுக்கலை…” என்ற ராம்நாத் தொடர்ந்து,
“மீராவுக்கு உங்க குடும்பத்தோட நல்ல ஒட்டுதல் இருக்கு, அவ உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா சந்தோஷமா இருப்பா… எனக்குத் தெரியும். நானும் ஒரு அப்பாவா எதிர்பார்க்கிறது அது தான். உனக்கே தெரியும், என் பெண்ணை நானோ, இல்லை… அவ அம்மாவோ, சீராட்டி வளர்க்கலை. அவளுக்கு அந்த ஏக்கம் மனசுல இருக்கும். அதனால உன் கூட மட்டும் இல்லாம, உன் குடும்பத்தோடவும் சேர்ந்து இருக்கணும்னு ஆசைபடுறா…. அவ ஆசை நியாயமானது தான். அதனால தான் நான் உங்க கல்யாண விஷயத்தில தலையிடலை. நீயும் மீராவும் எப்ப உங்க வீட்ல பேச சொல்றீங்களோ, நான் அப்ப வந்து பேசுறேன்.” என்றார்.
அர்ஜுன் அவர் கைபிடித்து அழுத்தி “தேங்க்ஸ் மாமா, நான் உங்க நம்பிக்கைய கண்டிப்பா காப்பாத்துவேன். என் தங்கைக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கோம், நான் நேரம் பார்த்து அம்மாகிட்ட பேசுறேன். அம்மாவுக்குக் காதல் திருமணம் மேல அவ்வளவு நம்பிக்கை இல்லை…ஆனா சொன்னா புரிஞ்சிப்பாங்க, அதுவும் மீரான்னு தெரிஞ்சா மறுக்க மாட்டாங்கன்னு தான் நினைக்கிறன்.” என்றான் புன்னகையுடன்.
“அப்படி நடந்தா எனக்கும் சந்தோசம் தான்.” என்ற ராம்நாத், அர்ஜுனிடம் அவன் வேலையைப் பற்றி விசாரிக்க… அர்ஜுனும் அவருக்குப் பதில் சொன்னான். இருவரும் சிறிது நேரம் கழித்து வெளியே வர… மீரா அவர்கள் இருவரின் முகத்தையும் ஆர்வமாகப் பார்க்க…. இருவரின் முகத்திலும் புன்னகை இருந்தது. ஹப்பா… என்று நிம்மதியானவள், அவர்கள் இருவரையும் பார்த்துச் சந்தோஷமாகச் சிரித்தாள்.
அர்ஜுன் அவன் பெரியம்மாவோடு வீட்டுக்குள் நுழைந்ததும், அவர்களுக்காக ஆவலுடன் காத்திருந்த வித்யா, “ரெண்டு பேரும் எங்க போனீங்க? உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? என்று கேள்விகளாக அடுக்க…
“நானும், அர்ஜுனும் சூர்யா வீட்ல இருந்து அப்படியே மீரா வீட்டுக்கு போனோம். அவ வீடு அங்க தான இருக்கு. அது தான் லேட். சூர்யாவோட அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் நம்ம குடும்பத்தோட சம்பந்தம் பண்ண ரொம்ப இஷ்ட்டம், அவங்க சரின்னு சொல்லிட்டாங்க. அடுத்த ஞாயிற்றுக் கிழமை பெண் பார்க்க வராங்க.” விளக்கமாகக் காயத்திரி சொல்ல…வித்யா நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இவர்கள் பேசுவதை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆருவுக்குச் சந்தோசம் தாங்கவில்லை, அவள் துள்ளி குதித்துத் தன் அறைக்குச் சென்றாள். அன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமர்ந்து ஆராதனாவை பெண் பார்க்க வருவதைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார்கள். அர்ஜுனின் வீடு… சூர்யா, ஆராதனாவை பெண் பார்க்க வரும் நன்னாளுக்காகத் தயாராகியது.
மறுநாள் அர்ஜுன் மீராவை அழைத்துக் கொண்டு ஆருவுக்கும், சூர்யாவுக்கும் பரிசு பொருள் வாங்க ஷாப்பிங் சென்றான். இரவு அவளை ரெயில் நிலையம் அழைத்துக் கொண்டு சென்றவன் அங்கே அவளோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
“அடுத்த வாரம் ஆருவை பெண் பார்க்க வர்றதுனால… என்னையும் வர சொல்லி ஆருவும், வித்யா ஆன்டியும் சொல்லி இருக்காங்க. இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு, உங்களைப் பார்க்க.” என்றாள் மீரா மகிழ்ச்சியுடன். அர்ஜுனுக்கு அவளை நினைத்து வருத்தமாக இருந்தது.
மீராவுக்கு இப்பொது மீனாட்சியால் தொல்லை என்று எதுவும் இல்லை என்றாலும், சிறி வயதில் ஏற்பட்ட காயம் இன்னும் அவள் மனதில் ஆறவில்லை. அதனால் அவளால் முழு மனதோடு அவள் வீட்டில் தங்க முடியவில்லை. அதே நேரத்தில் அவளாள் தன்னைப் பிரிந்தும் இருக்க முடியவில்லை என்பதும் அர்ஜுனுக்குப் புரிந்தது.
மனதிற்குள் தவித்துக் கொண்டு வெளியில் சிரிக்கும் மீராவின் துயரை துடைக்கவாவது தங்களுக்குச் சீக்கிரம் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அர்ஜுன் நினைத்தான். அர்ஜுன் நினைப்பது நடக்குமா?
Advertisement
Advertisement
error: Content is protected !!