Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிழலை திருடும் இருள்

நிழலை திருடும் இருள் – 4

அத்தியாயம் – 4

ஆதவனை கூர்மையாய் பார்த்த சிவசுப்ரமணியம்,

“ஏன்.. சுந்தரம் என்ன பண்ணினான்..”



Advertisement

என்று கேட்க அப்போது பேட்டிங் செய்துக் கொண்டிருந்த கமலினியை பார்த்தபடி அவன் அமைதியாய் இருந்தான்.

‘தினகரனுக்கு இவ்விஷயம் யாருக்கும் தெரிவதில் உடன்பாடு இல்லை’ தான்.. ஆனால் தாத்தா மட்டுமே சித்தப்பாவை கண்டிக்க முடியும்.. சொல்லலாமா.. வேண்டாமா..’
என யோசனையோடு ஆதவன் அமர்ந்திருக்க,

“தீனாவை அவனுக்கு பிடிக்காதுன்னு உன்னைவிட எனக்கு நல்லா தெரியும்.. உண்மையை சொல்லு ஆதி.. என்ன நடந்தது..”
என அவர் அழுத்தமாய் கேட்கவே  அவனும் மறைக்காமல் எல்லாவற்றையும் கூற பெரியவர் முகம் இறுகி போயிற்று.

Advertisement

“அவன் கல்யாண பேச்சே இனி எடுக்காதீங்கன்னு சொல்லிட்டான் தாத்தா.. லலிதா அத்தை பாவம்.. ஒரே அழுகை..”

Advertisement

என்று வருத்தமாய் ஆதி கூற அமைதியாய் கேட்டு இருந்தவர்,

“கமலினி இங்க வா..” அழைத்தார் சத்தமாய்…

மட்டையால் அப்பொழுது தான் ஒரு பந்தை தட்டிவிட்டு ‘ரன்’ ஓடியவள்,

Advertisement

“என்ன தாத்தா.. அப்படியே சொல்லுங்க..”
விளையாட்டு ஜோரில் வர மறுக்க,

“தாத்தா அவளுக்கு என்ன தெரியும்..
விடுங்க..”
என்ற ஆதவனை கண்டுக் கொள்ளாது,

“அப்புறம் விளையாடலாம்.. முதல்ல வா..”
என உரக்க கூப்பிடவும் அவர் குரலின் மாற்றத்தைக் கண்டுக் கொண்டவள் மட்டையை சங்கவியிடம் கொடுத்துவிட்டு ஓடி வந்தாள்.

“என்னாச்சு தாத்தா.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..”

மூச்சிரைக்க தன் அருகில் வந்து நின்றவளிடம்,

“தீனாவை விசாரிச்சு யாரும் நம்ம கடைக்கு வந்தாங்களா கமலி..”
என்று அழுத்தமாய்  கேட்க அதனை எதிர்பாராததால் அப்பட்டமான அதிர்ச்சியோடு அவள் பார்க்க அதிலே அவருக்கு பதில் கிடைத்து விட்டது.

தயக்கமாய் ஆதவனையும் ஓர் பார்வை
பார்த்துவிட்டு ஆமோதித்து தலையசைக்க,

“நீங்க என்ன சொன்னீங்க..”

என கடினமேறிய குரலில் தாத்தா கேட்கவும் அவளுக்கும் பதட்டமானது. சிவசுப்ரமணியமும் சுந்தரமூர்த்தியும் பெரிதாக பேசிக் கொள்வதே கிடையாது. அவசியத்திற்கு மட்டுமே பேச்சுக்கள் இருக்கும் மற்ற நேரங்களில் அமிர்தவள்ளி வழியாகவோ கமலினி வழியாகவோ தான் எல்லாம்..!! அது வயதின் காரணமாகவும் இருக்கலாம்.. இல்லை மரியாதை காரணமாகவும் இருக்கலாம்..

அதனால் இந்த விஷயத்தில் தாத்தா என்ன செய்வார் என யூகிக்கவே முடியவில்லை. இருவருமே பிடிவாதகாரர்கள்.. ஒருவேளை இருவருக்கும் வாக்குவாதம் என வந்துவிட்டால் பெரிய பிரச்சனையில் தான் முடியும்..!!

அனைத்தையும் யோசித்தபடி,

“தாத்தா.. அவங்க கேட்டதுக்கு மட்டும் தான் அப்பா பதில் சொன்னாங்க.. பெருசா எதுவும் சொல்லல..”
என அவள் இழுக்க,

“நீ உங்க அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு தெரியும்.. ஆனால் என்னோட பேத்திக்கு என்கிட்ட பொய் சொல்ல வராதுன்னு நான் நம்புறேன்..”
என ஸ்திரமாய் சொல்ல அவளுக்கும் வேறு வழி இருக்கவில்லை.

அன்று நடந்தவை அனைத்தையும் அவள் சொல்லி முடிக்க சிவசுப்ரமணியம் ருத்ரமூர்த்தியாகவே மாறி இருந்தார்.

‘இதென்ன வன்மம் வைத்து செய்வது..? கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் வெளி மனிதர்களிடம் தன் உறவுகளை விட்டுக் கொடுப்பதா..!! அதுவும் தன்னை விட ஒரு சிறு பையனிடம் பகைமை பாராட்டுவது எவ்வளவு கேவலம்.. அத்தனை மூர்க்கனா என் மகன்..’

நினைக்கவே ஆத்திரமாய் பெருகியது. ஆதவனிற்கோ தன் நண்பனை பற்றி சுந்தரமூர்த்தி கூறியவற்றை எல்லாம் கேட்டதும் கொதிநிலையில் இருந்தான்..

திண்ணையில் கையூன்றி தன்னை கட்டுப்படுத்தியவர் நிமிர்ந்து கமலினியை நோக்கி,

“இதை நீ நடந்த அப்பவே சொல்லி இருக்கணும் தானே கமலி.. உன் அப்பா செஞ்ச தப்பை நீயும் அப்படியே மறைக்க பார்க்கிற இல்ல…”
என்று குற்றம் சாட்டினார்.

“மறைக்க எல்லாம் நினைக்கல தாத்தா.. அது அவ்வளவு பெரிய விஷயமா தோணல.. அத்தோட அப்பா சொன்னது எதுவும் பொய் இல்லையே.. அந்த தீனா யாரையும் மதிக்காத திமிரு பிடிச்சவர் தானே..”

என்று  சொல்லிவிட ஏக கோபத்தில் இருந்த ஆதவன் பொறுமை முற்றிலும் துறந்து,

“ஏய்.. ஓங்கி ஒன்னு வைச்சேனா பார்த்துக்க.. யாரை பார்த்து திமிரு பிடிச்சவன்னு சொல்ற..!! உனக்கு ரொம்ப தெரியுமா..?? வந்து பார்த்தியா..?”

என எகிறி குதிக்க அவளுக்கு ஒரு நொடி திக்கென்று ஆனது. ஆனால் அடுத்த நொடியே அதனை கோபம் ஆட்கொள்ள,

“ஆமா.. பார்த்ததை வைச்சு தான் சொல்றேன்.. ஸ்வர்ணா அண்ணி மேரேஜ்ல அவர் என் அப்பாவை இன்சல்ட் பண்ணும் போது நீயும் தானே இருந்த..”
என பதிலுக்கு சிலிர்த்தெழுந்தாள்.

“ஏன் அவன் பேசினது மட்டும் தான் தெரிஞ்சுதா.. அதுக்கு முன்னாடி உங்க அப்பா அவனை மட்டம் தட்டி பேசினது உன் கண்ணுக்கு தெரியலையா..??
சுயமரியாதை உள்ள எந்த மனுஷனும் அந்த சூழலில் அப்படி தான் பேசுவான்..”

“ம்க்கும்.. உன் ஃப்ரெண்டை நீ விட்டுக் கொடுக்காமல் பேசலாம்.. அதுக்குன்னு எல்லாரும் அப்படியே நினைக்கணும்னு
அவசியம் இல்ல ஆதி… அவங்களா வந்து கேட்டாங்க.. அப்பா அவருக்கு தெரிந்தவரை சொன்னார்.. இதில் என்ன இருக்கு..”

“எவ்வளவு அசால்ட்டா சொல்ற நீ..? உங்க அப்பா சொன்னதை கேட்டு நிச்சயம் வரை பேசிய பின்னாடி அந்த பொண்ணு வீட்டில் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.. அத்தைக்கும் மாமாவிற்கும் இதனால் எத்தனை மன உளைச்சல் தெரியுமா..?  ச்ச..!! என்ன மனுஷங்களோ..”

என வெறுப்பாய் கூறியவன், “நான் வரேன் தாத்தா..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் சென்றுவிட கமலினி அப்படியே திகைத்து நின்றாள்.

என்ன தான் வாதாடினாலும் அவள் மனசாட்சிக்கு தெரியாதா..?

‘நான் அப்பவே இப்படி எதாவது நடக்குமோன்னு தான் பயந்தேன்.. அதே மாதிரி ஆகி போயிடுச்சு.. ‘

ஆதவன் கடைசியாய் கூறியதை கேட்டதும் மிகவும் கஷ்டமாக இருந்தது.

அமைதியாய் அமர்ந்திருந்த சிவசுப்ரமணியத்தை பார்த்து,

“தாத்தா..” என்று கூப்பிட,

“நீ பேச வேண்டாம் கமலி.. போ..”
என்று அவர் சொல்லவும் முணுக்கென்று கண்ணீர் துளிர்த்தது. தன் பாசமிகு தாத்தா அவ்வாறு கூறியதை தாங்கவே முடியவில்லை..

“நான் என்ன பண்ணேன்.. என்கிட்டே பேச மாட்டீங்களா..”

என விசும்ப அவளின் கண்ணீரில் உருகியவராய் தன் தோளோடு அணைத்து,

“உன்னை நான் ஒன்னும் சொல்லல கண்ணா.. எனக்கு இப்ப எதுவும் பேச பிடிக்கல.. கொஞ்சம் அமைதி வேணும் அவ்வளவு தான்..”

என்று கூற அதற்குள் இவர்களை கவனித்துவிட்டு என்னவென்று கேட்க வந்த அனன்யாவிடம்,

“ஒன்னும் இல்ல அனு..” என்றவர்,

“போ கமலி.. எல்லாம் உனக்காக தான் காத்திட்டு இருக்காங்க…”

என்று உறுதியாய் சொல்ல  மறுப்பேச்சு இன்றி அவர்களோடு சென்று கலந்துக் கொண்டாலும் உள்ளே என்ன நடக்குமோ என்று தவிப்பாய் இருந்தது.

ஆனால் மதியம் சாப்பிட சுந்தரமூர்ததி வந்த பின்பும்  சிவசுப்ரமணியம் அமைதியாகவே இருக்க,

‘தாத்தா இதனை பெரிதாக ஆக்கி சண்டையிடாததே போதும்..’ என நிம்மதிக் கொண்டாள். ஆனால் அது புயலுக்கு முன்னான அமைதி என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

சுந்தரமூர்த்தி இயல்பில் தீய எண்ணம் படைத்தவர் எல்லாம் இல்லை. சிவசுப்ரமணியத்தை போலவே அன்பானவர் தான். தன் மகள்கள் என்றால் கொள்ளை பிரியம்..!!   சில கட்டுபாடுகள் விதித்தாலும் அவர்களின் நியாயமான ஆசைகளை தடுத்தே இல்லை. கமலினி தங்கள் கடையை நடத்த ஆசைப்பட்ட போதும் மகிழ்ச்சியாகவே வரவேற்றார்.

அதே போல  தன் உறவுகளையும் பேணி காப்பவர். தன் உடன்பிறப்புகள் போலவே தான் தன் அத்தை மக்களோடும் வளர்ந்தவர்.

அதிலும் லிங்க்கேஷ்வரனின் அண்ணன்கள் சிறுவயதில் இருந்தே இவருக்கு மிகவும் நெருக்கம்!!

அதனாலே எப்பொழுதும் அவர்கள் தரப்பில் நின்று நின்று லிங்கேஷ்வரனை தள்ளி நிறுத்தி இருந்தார். இளம்வயதில் இருந்தே காணும் லிங்காவின் பொறுப்பின்மையும் மேம்போக்குதனமும் அறவே பிடிக்காது. பணம் சம்பாரிக்க தெரியாத, திறமைகள் இல்லாத மனிதர்களை நம் மக்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லையே..!! அந்த வரிசையில் சுந்தரமூர்த்தியும் விதிவிலக்கு அல்ல.!!

‘இவனெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறான்..’ என்று கீழாக தான் நடத்துவார். அதனை அவரின் அத்தை மகன் வேண்டுமெனில் பொறுத்து போகலாம் ஆனால் அவரின் மகனும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே..!! அங்கே தொடங்கியது தினகரன் – சுந்தரமூர்த்தி இடையிலான பனி போர்..!!

சுந்தரமூர்த்தி ஆர்டர் விபரம் பற்றி மகளிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருக்க
அப்போது அவளின் இருபக்கமும் வந்து அமர்ந்துக் கொண்டது நால்வர் படை..!!

“மாமா.. ஆனாலும் உங்க பொண்ணு இப்ப எல்லாம் நான் ரொம்ப பிஸின்னு  பிகு பண்றா.. எங்க மேல பாசமே இல்ல.. முன்ன மாதிரி எல்லாம் எங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்ல தெரியுமா..”

என ஓரக்கண்ணால் அவளை பார்த்துக் கொண்டே சங்கவி சொல்ல மற்றவர்களும் அதற்கு கோரஸ் போட்டனர்.

கமலினியை கேட்பார் என்று பார்த்தால்,

“ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்ல டா.. உண்மையாவே கொஞ்சம் அவளுக்கு வேலை அதிகம் தான்..!! கமலிக்கு பாசம் இல்லைன்னு எல்லாம் இல்ல டா.. இப்ப கூட பார்.. எல்லாம் வந்து இருக்கீங்கன்னு தானே இன்னைக்கு உங்க கூடவே இருந்தாள்…”

என்று தன் மகளுக்கு பரிந்து சுந்தரமூர்த்தி பேச நக்கலாய் சிரித்த கமலினி,

“ப்பா.. வேணும்னு உங்க கிட்ட மாட்டி விடுறாளாம்..”
என்றவள் சுந்தரமூர்த்தி கையை பற்றிக் கொண்டு,

“எங்க அப்பா எப்பவும் என் கட்சி தான்..”
என்றாள் பெருமையாக..!!

“சரி தெய்வமே… ஒத்துக்கிறோம்.. இங்க பார்.. இதை காட்ட தான் வந்தது…”

என்ற அபூர்வா தன் திறன்பேசியை காட்டி,

“இந்த வொய்ட் குர்தியை பாறேன்..”
என்று சொல்ல வாங்கி பார்த்த கமலினியும்,

“ஹே.. ரொம்ப அழகா இருக்கு அப்பு.. உங்களுக்கு மட்டும் எப்படி டி இந்த கலெக்ஷன் எல்லாம் மாட்டுது…”

என்று கூறி அவர்கள் வலையில் தானே விழுந்தாள்.

“அதுக்கு எல்லாம் பொறுமையும் ஆர்வமும் வேணும் ஜிமிக்கி கம்மல்.. தானா வந்து கண்ணில் விழுகாது.. இல்ல அனு..”

என்று சொல்லி அனன்யாவையும் இழுக்க அவளும்,

“ஆமா.. ஆமா.. இதை நாங்க வுமென்ஸ்  டே  ஃப்ங்ஷன் அப்போ காலேஜிற்கு செட்டா போடணும்னே தேடி இப்ப தான் ஆர்டர் பண்ணினோம்..”

என்றவள்,

“அதனால கமலு கேஷ் டெபிடட்ன்னு பேங்க் மெசேஜ் வந்தால் பயப்பட கூடாது சரியா..”

என்று சாதாரணமாய் கூற நிமிட நேரத்தில் குழம்பி திறன்பேசியை எடுத்து பார்த்தவளுக்கு சட்டென்று அனைத்தும் புரிந்தது.

“அடியேய் கொல்ல போறேன் உன்ன.. உன்கிட்ட என் பின் நம்பர் சொன்னது தப்பா போயிருச்சு..”

என்ற கமலியின் கத்தலை கேட்க அங்கே நால்வருமே இல்லை.

இவர்கள் சேட்டையில் சிரித்த சுந்தரமூர்த்தி,

“விடும்மா.. ட்ரெஸ் தானே வாங்கிக்கட்டும்.. எவ்வளவு சொல்லு.. உனக்கு நான் தரேன்..”

என்று கேட்க புன்னகைத்த கமலினி,

“வேண்டாம் ப்பா.. அவளுகளுக்கு என்கிட்ட வாங்கிறதில் ஒரு சந்தோஷம்.. இருக்கட்டும்..”
என்றாள்..

எல்லாம் நன்றாக போவது போல் இருந்தது அமிர்தவள்ளி,

“நான் அவ்வளவு சொல்லியும்.. இந்த ஆதவன் சாப்பிடாமலே போயிட்டான்.. பெரியவங்க சொல்றாங்க என்ற பேச்சிற்காவது மதிச்சு இருக்க வேண்டாம்.. ஏன் பாக்கியா நீ எதுவும் கேட்க மாட்டியா..”
என அங்கலாய்த்து பேசும் வரை..!

பாக்கியத்திடம் எல்லாருமே இதையே மாற்றி மாற்றி கேட்டாகிற்று. வராமல் இருந்திருந்தால் கூட தெரியாது. வந்தபின்பு  காரணமே இன்றி திடீரென யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்றது தான் எல்லாருக்கும் கேள்வியாய் இருந்தது.

ஆதவன் இப்படி கிளம்பியதன் காரணம் அறிந்து கமலினிக்கு உறுத்தலாய் இருக்க தன் தாத்தனை தான் பார்த்தாள். அவர் முகத்தை வைத்து என்ன நினைக்கிறார் என யூகிக்க முடியவில்லை.

மகனை மனதில் தாளித்தவராய் பாக்கியம்,

“சொல்ல சொல்ல கேட்காம போயிட்டான் அத்தை.. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறான்..
நானும் என்ன தான் செய்ய..”

என்று சற்று சலிப்போடே கூற அனைத்தையும் கேட்டிருந்த சுந்தரமூர்த்தி வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் தானே வந்து சிக்கினார்.

“அண்ணி… ஆதவன் போக்கு எனக்கு என்னவோ சரியாவே படல..! மத்தவங்க எல்லாம் முக்கியமா போனதும் சொந்த சித்தப்பன் கூட அந்நியமா போயாச்சு போல..! சும்மா அந்த தீனா பைய கூடவே சுத்தாம தன் வேலையில் அடுத்த கட்டத்துக்கு போறதில் கவனம் வைக்க சொல்லுங்க.. முகிலன் மாதிரியே ஆதவனும் பொறுப்பா இருந்தா தானே அண்ணி நமக்கும் பெருமை..!!”

என அக்கறையாய் அறிவுரை கூறினாலும் அதில் தன்னை மதிக்கவில்லை என்ற ஆதங்கமும் இருந்தது. அதனை புரிந்துக் கொண்ட பாக்கியமும்,

“உங்க அண்ணன் மகன் உங்களை அந்நியமா நினைப்பானா..? ஏதோ வயசு துடுக்கில் இப்படி இருக்கான்.. ஆனால் போக போக புரிஞ்சுபான்.. நீங்க எதுவும் மனசுல வைச்சுக்காதீங்க..”

தன் மகனின் மீது கொழுந்தன் வருத்தம் கொள்ள கூடாது என சமாதானமாய் கூற,

“ஆதி எல்லாம் பொறுப்பான பிள்ளை தாண்ணே.. நீயும் சும்மா அவனை ஏதாவது சொல்லிட்டே இருக்காத.. அதான் ஒட்டாம விலகி ஓடுறான்..”
என்று சித்ராவும் மருமகனை தூக்கியே பேச,

“என்னவோ.. நல்லது சொன்னால் இந்த காலத்து பிள்ளைகளுக்கு பிடிக்கிறதே இல்லை தான்..”

என்று பெருமூச்சோடு சொல்லி அப்பேச்சை முடித்தார். ஆனால் சிவசுப்ரமணியமோ,

“உபதேசம் எல்லாம் மத்தவங்களுக்கு தான் இல்ல… அதை தானும் கடைப்பிடிக்கணும்னு நினைக்கிறது கிடையாது…  அவனை நினைச்சு  பெருமை படுறது இருக்கட்டும்… முதல்ல நீ செய்யுற காரியம் எல்லாம் ரொம்ப பெருமைக்குரியதுன்னு நினைச்சுட்டு இருக்கியோ..”

என காட்டமாய் கூறிவிட திடீரென வெளிப்பட்ட தந்தையின் கோபமொழியில் திகைத்தது சுந்தரமூர்த்தி மட்டும் அல்ல மொத்த குடும்பமும் தான்.

இப்படி எல்லார் முன்பும் கேட்டுவிடுவார் என எதிர்பாராத கமலினிக்கும் திக்கென்று ஆனது.

“ஏன் ப்பா.. நான் என்ன பண்ணேன்..”

காரணம் என்னவென்று யூகிக்க முடியாமல் குழப்பமாய் சுந்தரம் வினவ அமிர்தவள்ளியும்,

“ஏங்க கோபமா பேசுறீங்க.. என்னாச்சு..”
என்று பதட்டமாய் அருகில் வந்தார்.

“என்ன ஆகணும்.. ராஜா, பழனி மாதிரி தானே லிங்காவும் நமக்கு.. அவனுங்க தான் கிறுக்கனாட்டும் எதாவது செய்யிறானுங்கன்னு நான் கண்டிச்சுட்டு இருந்தால்.. இங்க உன் புள்ளையும் அதையே தான் செய்யிறான்..

லிங்காவும் அவன் பையனும் இவனுக்கு என்ன பண்ணாங்களாம்.. தேவையே இல்லாம இவன் ஏன் அவங்க விஷயத்தில் தலையிடுறான்..”

என ஆவேசமாய் சத்தம் போட யாருக்கும் எதுவும் புரியவில்லை சுந்தரமூர்த்தியை தவிர..

“அப்பா.. என்ன சொல்றீங்க.. அவனை எல்லாம் நான் ஒரு ஆளாவே கண்டுக்கிறது இல்ல.. நான் ஏன் அவன் விஷயத்தில் தலையிட போறேன்..”

என்று சுந்தரம் அலட்சியமாய் கூறியது இன்னும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை சேர்த்தது.

“அப்புறம் எதுக்கு நீ தீனாவை பற்றி அவனுக்கு சம்மந்தம் பேசி இருந்த இடத்தில் கண்டபடி சொல்லணும்.. இதனால் அவன் கல்யாணமே தடைப்பட்டு போயிடுச்சு தெரியுமா..”

என சொல்ல அதில் அதிர்ந்து அமிர்தவள்ளியும்,

“நீயா இப்படி செஞ்ச..? ரொம்ப தப்பு டா.. அவனும் நம்ம ஆதி மாதிரி தானே..   அவனுக்கு நல்லது நடக்க காரணமா இருக்கணுமே தவிர இப்படி செய்யிறது அசிங்கம்.. நாளைக்கு லலிதா வந்து கேட்டால் என்னால பதில் சொல்ல முடியுமா..”
என கோபமாய் கூறினார்.

“அதெல்லாம் இல்ல ம்மா..” என்றவர் சுப்ரமணியத்திடம்,

“அப்படின்னு யார் சொன்னா லிங்காவா..?? அவன் பையனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கலைனா அதுக்கு நம்மளை காரணம் ஆக்குவானா..?? அவனையே வரவைத்து என்னானு கேட்கறேன்..”
என வேகமாய் சொல்ல,

“ஏன் அவனை கேட்கணும்.. இதோ கமலியை கேட்டதற்கே அவ எல்லாம் என்கிட்ட சொல்லிட்டாள்..”

என்று சுப்ரமணியம் கூறிவிட சடாரென திரும்பி கமலினியை  பார்த்தார்.

“தாத்தா கேட்கும்போது என்னால சொல்லாமல் இருக்க முடியல ப்பா..”

என்று அவள் இயலாமையோடு கைவிரித்து நின்றிருக்க மகள் மீது சுந்தரமூர்த்தியால் கோபம் கொள்ள முடியவில்லை.

“அவளை ஏன் பார்க்கிற.. நான் கேட்டதும் தான் எல்லாமே சொன்னாள்..

இது முதல் தடவை இல்லைன்னும் எனக்கு தெரியும்.. வீட்டோட அமைதிகாக கண்டும் காணாமலும் இருந்தால் நீங்க வரம்பு மீறி போறீங்க..

லிங்கா எல்லாரையும் நம்பும் ஒரு அப்பாவி டா.. அவன்மேல அப்படி என்ன வன்மம் உங்களுக்கு..!! நீங்க எல்லாம் ஒன்னு கூடிக்கிட்டால் அவனுக்குனு யாரும் இல்லைன்னு நினைச்சுட்டீங்களா..

நான் இன்னும் உயிரோட தான் டா இருக்கேன்.. நான் கேட்பேன்..”

என நாடி துடிக்க சிவசுப்ரமணியம் பேசியதில் அனைவருக்கும் மிகுந்த பதட்டமானது.

சுந்தரமூர்த்தியுமே இத்தனை கோபத்தை எதிர்பார்க்கவில்லை.

“நீங்க நினைக்கிற அளவு எல்லாம் எதுவுமே தப்பா சொல்லல ப்பா.. உண்மை நிலவரம் என்னவோ அதை தான் சொன்னேன்.. மேற்கொண்டு சம்மந்தம் பேசுறதும் மறுக்கிறதும்
அவங்க விருப்பம்.. அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்..”

என அவர் கூறியபோதும்,

“எதை சொன்னால் என்ன நடக்கும்னு தெரியாத சின்ன பையன் இல்ல நீ.. வேணும்னு தானே செஞ்ச.. இதை எப்படி சரி படுத்தணும்னு எனக்கு தெரியும்..”

என்று அழுத்தமாய் சிவசுப்ரமணியம் சொல்ல இருவருமே முறைத்துக் கொண்டு நின்றனர்.

அப்பாவிற்கும் மகனிற்கும் வாக்குவாதம் வந்துவிட்டால் அது அவ்வளவு சுலபமாய் முடிந்து விடாது. இருவருமே பிடிவாதமாய் தன் பிடியில் நின்று மற்றவர்கள் நிம்மதியை தான் கெடுப்பர் என அறிந்தவராய் தவிப்போடு நின்றிருந்தார் அமிர்தவள்ளி. காலையில் விட்ட மயக்கம் இப்போது மீண்டும் வந்துவிடும் போல் இருந்தது.

“கொஞ்சம் பொறுமையா தான் பேசுங்களேன்.. எனக்கு படபடன்னு வருதே… ஈஸ்வரா..”

என அமிர்தவள்ளி தலையை பிடிக்கவும் எல்லோர் கவனமும் அவரிடம் செல்ல பதறி வந்து தாங்கி கொண்டனர்.

“ஏற்கெனவே காலைல இருந்து அம்மா உடம்பு முடியலைனு சொல்லிட்டு இருக்காங்க.. இந்த நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் அவசியமா..”

என அன்னையை தன்னோடு தாங்கிக் கொண்டு பொதுவாய் கூறிய சித்ரா,

“என்ன ண்ணா.. இதெல்லாம்..”
என்பது போல சுந்தரமூர்த்தியை பார்க்க,

“நீ அப்பா கிட்ட தான் இதை சொல்லணும் சித்ரா..”
என்றவர்,

“அம்பிகா.. அம்மாவிற்கு தண்ணீ எடுத்துட்டு வா.. வாங்க ம்மா.. இப்படி உட்காருங்க..  ஒன்னும் இல்ல.. நீங்க டென்ஷன் ஆகாம இருங்க..”
என அவரை சமாதானப்படுத்த சிவசுப்ரமணியமும் அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!