Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் மலரும் ஓசை

மனம் மலரும் ஓசை 13.2

காஞ்சனாவின் முகம் பேரதிர்ச்சிக்குள்ளாக.. ‘எதுக்கத்த இத்தனை அதிர்ச்சி ஆகுறிங்க.? இத்தனை வருசமா அடங்காத மாதவியையே அடக்கியிருக்கான்.. அவன் இல்லன்னா உங்களுக்கு கொடுத்த சொத்துக்கு மாதவிம்மா கண்டிப்பா எதாவது வில்லங்கம் செய்திருப்பாங்க.. காதல் சொல்லியிருக்கான்.. ஆதி அவனை பிடிக்கலன்னு சொல்லியும் இத்தனை உதவி செய்யும்போது எந்த பொண்ணுக்குதான் பிடிக்காது.?” என ஆதிரைக்காக இலகுவாய் நியாயம் கேட்டவன்..

     ‘இத்தனை நாளா நீங்க சொல்ற மாப்பிள்ளைக்கெல்லாம் டீ கொடுத்தால்ல.? இனி அப்படி செய்ய மாட்டா..  கல்யாணத்துக்கும் ஒத்துக்கமாட்டா.. என் மேல நம்பிக்கையில்லனா ஆதிகிட்ட விசாரிச்சி பாருங்க.. நாளைக்கு பொண்ணு பார்க்க வரதையே வேணாம்னு சொல்லுவா..” என்றான் நம்பிக்கையாக.

      கர்ணன் இத்தனை சொல்லும்போது காஞ்சனாவிற்கும் நம்பாமல் இருக்கமுடியவில்லை.. ஆனாலும் பெண்கொடுக்க மனம் முரண்டியது.

         ‘சரியான காரணம் இருக்கும் பட்சத்துல இரண்டாந்தாரம் தப்பு இல்லதான்.. ஆனா இந்த ரூபன் கல்யாணம் செய்துக்காமலே புள்ள பெத்துருக்கான்.. மத்த எல்லா விசயத்துலயும் அவன் சரின்னாலும் இந்த விசயம் ரொம்ப அசிங்கம் இல்லையா.?



Advertisement

     கல்யாணத்துக்கு முன்னவே தப்பு செய்தவன்.. ஆதியை கட்டிக்கிட்டதுக்கப்புறம் ஒழுங்கா இருப்பான்னு எப்படி நம்பறது.? ஆதி அந்த பையனை விரும்பினாலும்.. இதெல்லாம் எடுத்து சொல்லி அவ மனசை மாத்துறதை விட்டுட்டு அந்த பையனுக்கு சப்போர்ட் பண்ணிட்டிருக்க..?” என்றார் சிறு கோபத்தோடு.

     கர்ணன்.. ‘நான் எங்கத்தை சப்போர்ட் செய்தேன்.. ஆதியோட மனசையும் ரூபன் மனசையும் உங்களுக்கு புரிய வச்சேன் அவ்வளோதான்.. மத்தபடி நீங்க எடுக்கிற முடிவுதான்..” என்றான்.

      காஞ்சனாவின் முகம் பெரும் கவலைக்குள்ளாக.. கர்ணன்.. ‘முதல்ல ஆதிகிட்ட பேசுங்கத்த.. அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம்..” என்றான் தேறுதலாக.

Advertisement

      அபிமன்யு.. ‘மாமா.. நாம ஏற்பாடு செய்த பையனோட போட்டோவை ஆதிக்காக்கு அனுப்பி பையனை பிடிச்சிருக்கா கேட்கலாமா.?”

Advertisement

          ‘ம்.. அனுப்பு அபி.. திரும்ப நீங்க ஃபாரின் போறதுக்குள்ள இதுக்கொரு முடிவு கட்டனும்.. “ என்றார் இளங்கோ.

     அபிமன்யுவும் கர்ணனும் முன்னமே பேசிவைத்தபடி அவனின் நண்பன் போட்டோவை அனுப்பி.. ‘இவர்தான் நாளைக்கு உன்னை பார்க்க வரவர்க்கா..” என குறுஞ்செய்தியும் அனுப்பினான்.

      ‘என்ன சொல்றான்னு கேட்போம்..” என அனைவரும் காஞ்சனா வீட்டிற்கு வந்தனர். இருவர் வீடும் அருகருகே என்பதால் இரண்டு நிமிடத்தில் வந்தனர்.

Advertisement

      ‘என்னடாது.? கத்துவா.. கல்யாணம் வேணாம்ன்னு ஆர்பாட்டம் செய்வான்னு பார்த்தா சத்தத்தையே காணோம்..” என வியந்தவாறு..’ஆதி..” என குரல் கொடுத்தான் கர்ணன்.

      ‘மாமா..” என குரல் கொடுத்தவள் வெளிவரவில்லை.

      ‘மாமா.. ஆதிக்கா இன்னும் போட்டோவை பார்க்கல..” என்றான் அபிமன்யு.

      காஞ்சனா.. ‘ஆதி.. உள்ள என்ன பண்ற.? வெளிய வா.. மாமா கூப்பிடறானில்ல.?” என்றார் சற்று அதிகாரமாக.

    ஆதிரை வெளியே வர.. ’உன் மொபைலுக்கு பையன் போட்டோ அனுப்பியிருக்கு.. எடுத்து பாரு.. நாளைக்கு பார்க்க வராங்க.. பையனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றார் காஞ்சனா.

      இளங்கோவும்.. ‘ஆதிம்மா.. போட்டோவை பாருடா.. பையன் ரொம்ப நல்லா இருக்கான்..” என்றார் கனிவாக.

      ஆதிரை.. ‘நாளைக்கு வராங்கள்ல.? நேர்ல பார்த்துக்கிறேன் சித்தப்பா..” என்றாள் சன்னக்குரலில்.

      காஞ்சனா தற்போது கர்ணனை சந்தேகத்தோடு பார்க்க.. கர்ணனிற்கும் ஆதிரையின் பதில் ஆச்சர்யம் என்றாலும்.. ‘இப்போவே பார்த்திடு ஆதி.. நாளைக்கு நிச்சயம் செய்ய தயாரா வரன்னுட்டாங்க..” என்றான்.

          ‘வரட்டும் மாமா.. நாளைக்கே பார்த்துக்கிறேன்..” என்றாள் மீண்டும்.

    இம்முறை ஆதிரையின் குரலில் உறுதி தெரிய.. ‘எதுக்கு.? நாளைக்கு எல்லார் முன்னவும் பிடிக்கலன்னு சொல்லவா.?” என முறைத்தான்.

      ‘எல்லார் முன்னவும் பிடிச்சிருக்குன்னுதான் சொல்லப்போறேன்..” என்றாள் இன்னும் திடமாக.

      அனைவருக்குமே பெரும் குழப்பம் உண்டாக.. ஏதோ ப்ளான் செய்துட்டாள் என கர்ணன் மட்டும் ஊன்றிப்பார்த்தான் ஆதிரையை. ஆதிரையின் முகத்தில் அத்தனை உறுதி.. நிச்சயமா எதோ செய்யப்போறா என நினைத்வதன்.. ‘சரி.. அப்போ உனக்கு பிடிச்சிருக்குன்னு மாப்பிள்ளைகிட்ட சொல்லிடு..” என்றவன்.. ‘அபி.. கால் பண்ணி கொடுடா..” என்றான்.

           ‘இப்போ வேணாம்.. நாளைக்கே சொல்றேன் மாமா..”

      கர்ணன்.. ‘உன் வாயால கேட்டாதான் அவங்களுக்கு திருப்தியாம்.. பொண்ணு பார்க்கிறது.. சாப்பிட வரதுன்னு இல்லாம நேரடியா நிச்சயம் செய்ய வரதால மாப்பிள்ளையும் அவங்கப்பாம்மாவும உன்கிட்ட இதை எதிர்பார்க்கிறாங்க.. நிச்சயத்துக்கு நாப்பது ஐம்பது பேர் பக்கம் வருவாங்க போல..

           உனக்கு பிடிக்கல அப்படியிப்படின்னு ஆகிடுச்சினா எல்லார் முன்னவும் அவமானமாகிடும்னு நினைக்கிறாங்க.. அப்படி எதாவது நடந்தா அத்தையாலயும் அதை தாங்கிக்க முடியாது.. நாளைக்கு நேர்ல சொல்லிக்கலாம்.. இப்ப ஃபோன்ல ஒத்த வார்த்த சொல்லிடு..” என முடிவாய் சொல்லி அபியை பார்த்தான்.

       அபிமன்யு அவனின் நண்பனிற்கு அழைத்து போனை ஆதிரையிடம் கொடுக்க.. சிறு நடுக்கத்தோடு மொபைலை வாங்கியவள்.. ‘நா.. நான் எங்க கர்ணா மாமாவைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்.. எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு.. நீங்க வராதிங்க..” என்று சொல்ல அடுத்த நொடி ஓங்கி அறைந்தான் கர்ணன்.

       இரண்டடி தள்ளி விழுந்தவளிற்கு கன்னம் புசுபுசுவென உப்பிச் சிவந்தது. இளங்கோ கர்ணனின் கையை பிடித்துக்கொள்ள.. அபிமன்யு ஆதிரையின் கன்னம் தாங்கி.. ‘என்ன ஆதி.. இப்படி பேசலாமா..?” என்றான் வேதனையாக.

      ம்.. கர்ணனிற்கு தன்னை தெரிந்துவிட்டதென ஆதிரை புரிந்திருந்தாள். மாமா அன்னையிடம் இது பற்றி பேசியிருப்பார்.. ரூபனை தவிர யாரையும் இனி திருமணம் செய்ய முடியாதென உணர்ந்த தருணம்.. அவனோடு வாழவும் பிடிக்கவில்லை..

      கர்ணன் அடித்ததும், அம்மா தனக்கு திருமணம் செய்யாமல் ஓயமாட்டார் என்பதையும் நினைத்தவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் ஆதிரை. ‘அவளை உள்ள கூட்டிட்டு போத்த.. இல்ல அடிச்சே கொன்னுடுவேன்..” என கத்தினான் கர்ணன்.

     காஞ்சனா.. ‘உன் மனசுல என்னதாண்டி நினைச்சிட்டிருக்க.? கர்ணா உன்னை பெத்த புள்ளையா நினைக்கிறான்.. அவனுக்கு கோபம் வரும்னு தெரிஞ்சே இப்படி சொல்லலாமா.?” என தானும் கண்கலங்கினார்.

        ‘அம்மா..” என கட்டிக்கொண்டாள் அன்னையை.

   கர்ணன்.. ‘இன்னும் ஒரு வாரத்துல உனக்கு கல்யாணம்.. எதாவது மறுத்து பேசின வெட்டிபொலி போட்டுருவேன் ஜாக்கிரதை..” என்றான் ஆத்திரம் தீராமல்.

        ‘கொல்லுங்க.. என்னவோ செய்ங்க.. ஆனா உங்களை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்..” என்றாள் இவளும் தீவிரமாக. கர்ணன் மீண்டும் அடிக்க வர.. ‘மாமா.. வேணாம் மாமா.. அங்க பாருங்க சரத்தோட அம்மா வெளில வந்துட்டாங்க.. இந்த செய்தி பரவ வேணாம்.. ஆதிக்காகிட்ட பொறுமையா எடுத்து சொல்லாம்.. வாங்க..” என தன்வீடு இழுத்துச் சென்றான் அபிமன்யு.

      ஆதிரையின் இந்த பேச்சில் காஞ்சனாவிற்கு கட்டுக்கடங்காத கோபமும்.. சந்தேகமும் வர.. ‘என் மேல சத்தியம்.. நீ யாரையாவது விரும்பறியா.? யாரையாவது என்ன.? அந்த ரூபனை விரும்புறியா.?” என்றார் உக்கிரமாக.

      ‘அம்மா..” என ஆதிரை கதறியழ.. ‘அப்போ கர்ணன் சொன்னது உண்மைதானா.?” என மகளின் கையை தன் கைக்குள் கோர்த்து சத்தியம் செய்யும் பாவனையில் கண்ணீரோடு கேட்கவும்.. ‘ஆமாம்மா.. ஆமாம்மா..” என கதறி..  ‘ஆனா எனக்கு அவனோட வாழ பிடிக்கல.. இன்னொருத்தியை தொட்டவனை என்னால கல்யாணம் செய்துக்க முடியாது..” என்றாள் அருவருப்பாக.

      ‘விரும்புவாளாம்.. ஆனா கல்யாணம் செய்துக்கமாட்டாளாம்..” என மகளின் கையை கோபமாய் உதற.. கர்ணன் அழைத்தான் காஞ்சனாவிற்கு.

    அழைப்பை ஏற்றதும்.. ‘அத்த அந்த ரூபன் போன் நம்பர் இருந்தா கொடுங்க..”

         ‘கணேசண்ணா நம்பர்தான் கர்ணனா இருக்கு..” என்க.. ‘ஆதிக்கு மெசேஜ் போட்டான் சொன்னிங்கள்ல.. அவ போனை எடுத்துட்டு மாமா வீட்டுக்கு வாங்க..” என்றான்.

    காஞ்சனா ஃபோனோடு வர ஆதிரையின் மொபைலிலிருந்தே ரூபனிற்கு அழைத்தான் கர்ணன். ஸ்டுடியோவில் டப்பிங் செய்துகொண்டிருந்த அதிரூபன் அழைப்பை ஏற்காமல் போகவே தனது நம்பரிலிருந்து அழைத்தான். அப்பொழுதும் எடுக்காமல் போகவே குழப்பமானான் கர்ணன்.

           ‘லவ் பண்றான்னா ஆதி நம்பர்லயிருந்து ஃபோன் செய்தும் ஏன் எடுக்கல..?” என புலம்ப.. ‘ஆம்புலன்ஸ் ஏது ஓட்டிட்டிருப்பானாயிருக்கும் கர்ணா..” என்ற காஞ்சனா ‘அவனுக்கு எதுக்கு போன் செய்த கர்ணா.?” என்றார் தவிப்போடு.

      ‘அவன்கிட்ட பேசிட்டு சொல்றன்த்த..” என்றவன்.. ‘ரோஜாம்மா.. கொஞ்சம் தண்ணிகொண்டு வாடா..” என்றான். ரோஜா தண்ணீர் கொண்டு வர வாங்கி பருகியவன் தன் கோபம் குறைக்க ரோஜாவின் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தான்.

       அரைமணி நேரம் கழித்து ரூபன் ஆதிரையின் நம்பருக்கு அழைக்க.. கர்ணன் அழைப்பை ஏற்றதும்.. ‘வாட் எ சர்ப்ரைஸ்..” என்றான் உற்சாகமாக.

     பதிலில்லாமல் போகவும்.. ‘ஆதி..” என்றவன் சுதாரித்து ‘லைன்ல யாரு.? அத்தையா.?” என்றான்.

       ‘நான் கர்ணன் பேசுறேன்..”

       ‘ஓஹ்.. இன்னைக்கென்ன ஒரே சர்ப்பரைசா இருக்கு..?” என்றான் இலகுவாக.

    ஸ்பீக்கரில் போட்டு.. ‘ஆதியை லவ் பண்றிங்களா.?” என்றான் நேரடியாக.

           ‘ஏன் எல்லார் முன்னவும்தான சொன்னேன்..? உங்களுக்கு தெரியாதுங்களா.?” என்றான் சிரிப்போடே.

          ‘ஆனா..” என இங்கு நடந்ததை சொன்னவன்.. ‘என்ன செய்ய போறிங்க.?” என்றான்.

         ‘ப்ச்.. அதுக்கு அடிப்பிங்களா.?” என பதறியவன்.. ‘அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு.. ஆனா என் குழந்தையை நினைச்சி விலகறா.. இப்போ அவ முடிவெடுத்ததுக்கு காரணமும் என் மேல உள்ள காதல்தான்..” என நெகிழ்வோடு சொல்லி..

      ‘என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய பிடிக்கல.. அதே நேரம் என்னை கல்யாணம் செய்துக்கவும் விருப்பமில்ல.. எப்படியும் அவளுக்கு கல்யாணம் செய்யாம நீங்களும் இருக்கப் போறதில்ல.. மத்தவங்களை கட்டிகிட்டா பொண்டாட்டியா வாழனும்.. அது அவளால முடியாது..

       உங்களை கட்டிகிட்டா நிச்சயம் அவளை தப்பா நெருங்க மாட்டிங்க.. உங்களோட கல்யாணம் நடந்துட்டா என்கிட்டயிருந்தும் தப்பிச்சிடலாம்னு இப்படி முட்டாள்தனமா முடிவெடுத்திருப்பா..” என்றான் வருந்திய குரலில்.

       தனக்கு தெரியாத மகளின் எண்ணம் இவனுக்கு தெரிஞ்சிருக்கே என வியந்தாலும்.. ‘ஆதியை சரியா புரிஞ்சி வச்சிருக்கான்.. இவளும் விரும்புறா, ஆனா..” என வேதனையோடு நிறுத்தினார்.

      காஞ்சனாவின் எண்ணம் உணர்ந்தவன்.. ‘என் பட்டுவோட அம்மாவை நான் ஏமாத்துலத்த.. அவதான் குழந்தையை பெத்து கொடுத்துட்டு.. என் நம்பிக்கையை பொய்யாக்கிட்டு  போய்ட்டா..” என வேதனையோடு சொன்னவன்.. “இப்போ ஆதிரையும் என்னை புறக்ணிக்கிறா.. ஆனா எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஆதிரையோட மட்டும்தான்..” என்றான் உறுதியாக.

     பெருத்த அமைதி நிலவ.. ‘கர்ணன் அண்ணா.. லைன் ல இருக்கிங்களா.?”

     ரூபனின் மரியாதையான குரலில் இலகிய கர்ணன்.. ‘ம்.. இருக்கேன்..” என்றவன்.. ‘இப்போ என்ன செய்யலாம்த்த..?” என்றான் காஞ்சனாவிடம்;.

         தன்  கடந்த காலத்தைப் பற்றி அதிரூபன்  சொன்னதில் பொய்யில்லை என புரிய, அவனை பற்றிய சஞ்சலம் சற்று குறைய.. ‘எனக்கு என்ன முடிவெடுக்கன்னு தெரியல கர்ணா.. ரூபனை பிடிச்சிருந்தாலும் கட்டிக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்றவகிட்ட என்னன்னு பேசட்டும்.? நாமளா கேட்டாலும் எங்கப்பா இருந்தா இப்படி ஆகுமான்னு அழுவா..” என்றார் தவிப்பாக.

      அதிரூபன்.. ‘எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. என்னை நம்பி உங்க பொண்ணை தருவிங்களாத்த..?”

      அதிரூபனின் கரைந்த குரலில் காஞ்சனா சொல்வதறியாது தடுமாற.. ‘குழந்தை விசயம் எந்த பொண்ணுக்கும் அவ்வளவு சுலபம் கிடையாதுன்னு எனக்கு புரியாம இல்லங்கத்த.. அதுக்காக இந்த ரூபன் ரொம்ப மோசம் கிடையாது.. உங்கண்ணன் என்னை அப்படி வளர்க்கல.. ப்ளீஸ் என்னை நம்புங்க..” என்றான் கனிவாகவே.

          ‘உங்களை பத்தி அதிகம் தெரியலன்னாலும் என் பொண்ணைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இந்த ஜென்மத்துல உங்களை மறக்க மாட்டா.. ஆனா என்ன செய்யிறதுன்னுதான் எனக்கு புரியல..” என்றார் பரிதவிப்பாக.

           ‘நான் பார்த்துக்கிறேன்த்த..” என மீண்டும் நம்பிக்கையளித்தவன்.. கர்ணனிடம் தன் திட்டத்தை சொல்லி இணைப்பை துண்டித்து தந்தைக்கு அழைத்தான்.

      ‘ரூபா.. காஞ்சனா அவங்க குடும்பம் எல்லாரும் சம்மதிச்சிட்டாங்களா.? இவ்வளோ சீக்கிரம் நான் எதிர்பார்க்கவே இல்ல ருபா..” என பெரிதாய் சந்தோசித்தவர்.. ‘எப்படிபட்ட விசயம்.. ஆனா உன் குரல்ல சந்தோசமில்லையேப்பா..” என்றார் பரிதவிப்பாக.

      ‘என்னை பிடிச்சிருந்தும் என்னோட வாழப்பிடிக்காதவளை கார்னர் செய்து கல்யாணம் செய்துக்கிறது ரொம்ப வருத்தமா இருக்குப்பா..” என்றான் தளர்வாக.

        ‘கவலைப்படாத ரூபா..  போகப்போக சரியாகிடும்.. நம்ம பட்டுமாக்காகன்னு நினைச்சிக்கோயேன்..”

        ‘ம்.. சரிப்பா.. அம்மா, தாத்தாகிட்ட, அத்தை வீட்ல, நம்ம சொந்தத்துல முக்கியமானவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்கப்பா.. அப்புறம் முக்கியமான விசயம்.. காஞ்சனா அத்தைக்கு ஏது ஃபோன் செய்திடாதிங்க.. ஆதி பக்கத்துல இருக்கப்போய் எதாவது உளறிடப்போறாங்க..” என்றான்.

       ‘இல்லப்பா நான் பார்த்துக்கிறேன்.. நீ முடிஞ்சவரை இரண்டு நாள் முன்னவாவது வர முடியுமா பாரு..” என இணைப்பை துண்டித்து, “கனகா..” என மனைவியிடம் சென்றார் சந்தோசமாக.

       ( அடுத்த பதிவு அதிரூபன் ஆதிரை திருமணம்.. மணமக்கள் இரண்டு பேரும் ஆளுக்கொரு நிலையில இருக்காங்க.. எல்லோரும் ஆசிர்வதிக்க வந்திடுங்க ப்ரண்ட்ஸ்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!