Skip to content
Post Views: 3,727
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 37
அர்ஜுன் நேராகப் பெசன்ட் நகர் பீச்சில் இருக்கும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குத் தான் சென்றான். அவனும் அன்று மீரா செய்தது போல்… மற்ற சந்நிதியில் சென்று சாமி கும்பிட்டவன், அன்று மீராவுக்குச் செயின் போட்டுவிட்ட இடத்திற்கு வந்து அமர்ந்து கண் மூடி வேண்டினான்.
“நான் அன்னைக்கு மீரா கழுத்தில செயின் போடும் போது, அவ இன்னையில் இருந்து என்னோட மனைவி, இனி நடக்கும் கல்யாணம் ஊருக்காகத்தான்னு நினைத்துதான் போட்டேன். எங்க அம்மா மனசு நல்லபடியா மாறி… எங்களைச் சீக்கிரம் சேர்த்து வைக்கணும்.” என்று வேண்டிக் கொண்டான்.
அன்று இரவு அர்ஜுன் மீராவை செல்லில் அழைத்து, “என்ன மீரா சென்னைக்கு வந்து ரெண்டு மாசம் ஆகப் போகுது, எப்ப தான் வருவ?” என்று வேண்டுமென்றே தெரியாதது போல் கேட்க…
ரஞ்சனா அர்ஜுனுக்கு விஷயம் தெரிந்துவிட்டதால்… அவன் பார்த்து கொள்வான் என்று நினைத்து, அவள் மீராவிடம் எதுவும் சொல்லவில்லை… அதனால் மீராவிற்கு வீட்டில் நடந்தது எதுவும் தெரியாது. அதனால் “வரேன் அர்ஜுன், இங்க ஆபீஸ்ல ஒரே வேலை… நகரவே முடியலை.. சனி, ஞாயிறு கூட வேலை இருக்கு…” மீரா சமாளிக்க…
“இன்னும் எத்தனை நாள் இதே காரணம் சொல்வ மீரா… வேறே எதாவது புதுசா சொல்லு….” அர்ஜுன் சொல்ல….மீரா மெளனமாக இருந்தாள்.
“எனக்கு எல்லாம் தெரியும் மீரா….அம்மா பேசினதை நீ ஏன் என்கிட்டே மறைச்ச?”
மீரா பெருமூச்சு விட்டவள், “அப்ப எல்லோரும் ஆரு கல்யாண வேளையில் இருந்தீங்க… இதை வேற சொல்லி எதுக்கு மூட் அவுட் பண்ணனும். அதோட நான் சொல்றத விட அத்தையே சொல்லட்டும்னு நினைச்சேன்.” என்றாள்.
“நல்லா நினைச்ச போ… அம்மா உன்னை ரொம்பப் பேசிடாங்களா…” அர்ஜுன் வருத்தமாகக் கேட்க….
“இல்லை… அதெல்லாம் எதுவும் இல்லை.”
“நீ ஆமாம்னாலும் இல்லைன்னு தான டி சொல்லுவா.” அர்ஜுன் கடுப்பாகப் பேச….
“எந்த அம்மா தன் பையன் லவ் பண்றான்னு தெரிஞ்சா… வரவேற்பு கொடுப்பாங்க, கோவப்படத் தான் செய்வாங்க….இது கூட இல்லைனா எப்படி? நாம முன்னாடியே இதை எதிர்பார்க்க தான செய்தோம். இனி அவங்க மனசை எப்படி மாத்தனும்னு தான் பார்க்கணும்.” என்றாள் மீரா.
உண்மை தான் என்றவன், வீட்டில் வித்யாவோடு நடந்த வாக்குவாதத்தைச் சொன்னான். ஆனால் வித்யா அவர்களைத் திருமணம் முடித்துத் தனிக்குடித்தனம் போகச் சொன்னதை மட்டும் சொல்லவில்லை. அவனுக்குத் தெரியும், தன்னால் ஒரு குடும்பம் பிரிகிறது என்று தெரிந்தால் மீரா தாங்கமாட்டாள் என்று.
“அம்மாவுக்கு நாம கல்யாணம் செஞ்சிகிறது பிடிக்காம இல்லை மீரா… அவங்களுக்கு உன்னைப் பிடிச்சு தான் இருக்கு. இருந்தாலும்… எதோ தடுக்குது. அது என்னன்னு பார்த்து சரி பண்ணிட்டா… அம்மா சந்தோஷமா, நம்ம கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க.” என்றான்.
“சரி அர்ஜுன், ஆனா… நாம இந்த இடைபட்ட காலத்தில… அவங்க மனசு கஷ்டபடாம பார்த்துக்கலாம்.” மீரா சொல்ல… அர்ஜுனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது.
“நாம நேர்ல சந்திக்கக் கூடாது…அதுதான சொல்ல வர….சரி மீரா.” என்று போன்னை வைத்தான்.
அங்கே ஆதியும், ரஞ்சனாவும் அவர்கள் அறையில் யார் இவர்கள் விஷயத்தை அம்மாவிடம் சொல்லி இருப்பார்கள்? என்று குழம்பி கொண்டிருக்க… ரஞ்சனா இந்த விஷயம் சஞ்சனாவிற்கும், தினேஷ்க்கும் தெரியும் என்று வாய்விட… உடனே ஆதி பிடித்துக் கொண்டான்.
“அப்ப சஞ்சனா தான் அம்மாகிட்ட சொல்லி இருப்பா. உன் தங்கச்சிக்கு எதுக்கு இந்தக் கேவலமான புத்தி?” என ஆதி சண்டைக்குச் செல்ல…. ரஞ்சனாவிற்குக் கோபம் வந்து விட்டது. உடனே அவள் “எதுக்கு என்னோட தங்கச்சிய திட்றீங்க? அவ தான் சொன்னான்னு உங்களுக்குத் தெரியுமா..” என்று பதிலுக்குச் சண்டைக்குச் செல்ல… “அவ புத்தி தெரிஞ்சது தானே…அதுவும் அப்ப அவ நம்ம வீட்ல தான இருந்தா.” ஆதி எகிற… ரஞ்சனாவிற்குமே சஞ்சனா மேல் சந்தேகம் இருந்ததால்… இப்போதைக்கு அடக்கி வாசிப்போம் என்று அமைதியாகச் சென்று படுத்துவிட்டாள்.
மறுவாரம் ஞாயிறு மதியம் ஆரு, சூர்யாவோடு அவள் பிறந்த வீட்டிற்கு வந்த போது வித்யா அவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே, “நீயும் தான உங்க சின்ன அண்ணனோட கூட்டு. நான் மீராவை உன்னோட சினேகிதின்னு தான் தாங்குறேன்னு நினைச்சேன். இப்ப தான தெரியுது, அவள உங்க அண்ணனோட ஜோடி சேர்த்திருக்கேன்னு. உனக்குச் சோறே போட கூடாது. ஆனா… கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போய்ட்ட, இனி நீ அந்த வீட்டு பொண்ணு, அதுதான் போடறேன்.” அவர் கோபமாகச் சொல்ல…
ஆருவிற்குத் தட்டில் விதவிதமாகச் சாப்பிட வைத்து விட்டு திட்டும் அம்மாவை என்ன செய்வது என்று தெரியவில்லை…ரோஷமாகச் சாப்பிடாமல் எழுந்து செல்லவும் மனம் இல்லை. அவள் தட்டை பார்ப்பதும், அம்மாவை பார்ப்பதுமுமாக இருந்தாள். அவள் காதருகில் குனிந்து சூர்யா, “இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது…உங்க அம்மா தான திட்றாங்க. அதெல்லாம் கண்டுக்காத…நீ பாட்டுக்கு உள்ள தள்ளு…” என அவன் சொல்ல… ஆருவும் சாப்பிட ஆரம்பித்தாள்.
வித்யா சமையல் அறைக்குள் சென்றதும், ஆதி “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஆரு, அன்னைக்கு அம்மா அர்ஜுன்கிட்ட… நம்ம ஆருவுக்கு நாம மாப்பிள்ளை பார்த்துதான் கல்யாணம் பன்னோம்னு சொன்னாங்க. அப்படியா?” என்று கேட்க… ஆருவிற்குப் புரை ஏறியது.
அவள் இன்னைக்கு என்னை எல்லோரும் சாப்பிட விடக் கூடாதுன்னு முடிவோட இருக்குங்க போலிருக்கு, இது தெரியாம வந்து மாட்டிகிட்டோம். ஏற்கனவே அர்ஜுன் விஷயம் தெரிஞ்சு கோபமா இருக்கிற அம்மா… என்னோட விஷயம் தெரிஞ்சா…பத்திரகாளியாவே மாறிடுவாங்க. சீக்கிரம் இங்கிருந்து எஸ்கேப் ஆகணும் என்று நினைத்தாள். அவள் முழிப்பதை பார்த்து ஆதிக்கு சிரிப்பாக வந்தது.
அப்போது அர்ஜுன் வந்து அவர்களோடு சாப்பிட அமர்ந்தான். அவனுக்கு ரஞ்சனா தான் பரிமாறினாள். வித்யா அர்ஜுனை பார்த்ததும், அவரது அறைக்குள் சென்றுவிட்டார். அர்ஜுனின் முகம் வாடிவிட்டது. அதைக் கவனித்த ஆரு, அர்ஜுனின் அருகே சென்று அமர்ந்து அவன் தோள் சாய்ந்து, “சீக்கிரம் சரி ஆகிடும் அர்ஜுன், நான் வேணா அம்மாகிட்ட பேசவா?” என்று கேட்க…
அர்ஜுன் வேண்டாம் என்று தலை அசைத்தவன் “நீ எனக்கு ஒரு ஹெல் பண்ணனும்.” என்றான். ஆரு என்ன என்பது போல் அவனைப் பார்க்க… “நீயும், சூர்யாவும் பெங்களூர் போய் மீராவை பார்த்திட்டு வரணும். எனக்காக இதைச் செய்வியா ஆரு.” என்று கேட்க…
“கண்டிப்பா அர்ஜுன். நாங்களே அங்க போகணும்னு தான் இருந்தோம். எங்களை மது அண்ணி ரொம்ப நாளா கூப்பிடுறாங்க, அதைச் சாக்கா வச்சு போய் மீராவோட ரெண்டு நாள் இருந்திட்டு வரேன்.” என்றாள் ஆரு. “நீயும் எங்களோட வாயேன் அர்ஜுன்.” சூர்யா சொல்ல… “இல்ல வேண்டாம், நீங்க போய்ப் பார்த்திட்டு வாங்க.” என்றான் அர்ஜுன்.
அர்ஜுன் கேட்டு கொண்டபடி சூர்யாவும், ஆருவும் மறு வாரம் பெங்களூர் கிளம்பி சென்றனர். மூன்று நாட்கள் அங்கே தங்கியவர்கள், முதல் நாளே மீராவை அவள் வீட்டில் சென்று சந்தித்து… அர்ஜுன் மீராவுக்காக நிறையப் பொருட்கள் வாங்கிக் கொடுத்திருந்தான், அதையெல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு, தங்களுடன் அவளையும் அழைத்துக் கொண்டு மது வீட்டிற்குச் சென்றனர். அங்கே மது வீட்டில் அனைவரும் சேர்ந்து ஊர் சுற்றுவதும், இரவில் அரட்டை அடிப்பதுமாக நன்றாகப் பொழுதை கழித்தனர்.
மூன்று நாட்கள் சென்று ஊருக்கு கிளம்பும் போது…சூர்யா மீராவிடம், “நாங்க இனி மாசம் ஒரு தடவை வந்து உன்னைப் பார்க்கிறோம் மீரா. கவலைபடாதே சீக்கிரம் சரி ஆகிடும்.” என்று சொல்லிவிட்டு வந்தான்.
இங்கு அர்ஜுனின் வீட்டிலும் கணேசன், ஆதி, ரஞ்சனா என்று ஒருவர் மாற்றி ஒருவர் வித்யாவின் மனசை மாற்ற முயற்சி செய்து கொண்டு தான் இருந்தனர். அர்ஜுன் மட்டும் அமைதியாக இருந்தான். இப்படியே ஆறு மாதங்கள் சென்ற போது…அர்ஜுன், சூர்யா வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு மூன்று மாதம் மட்டும் சூர்யாவை ஆஸ்திரேலியா சென்று வர சொன்னார்கள். ஆறு சூர்யாவை விட்டு இருக்க முடியாது என்று அழுது கரைய… அவனுக்குப் பதில் அர்ஜுன் ஆஸ்திரேலியா செல்லும் முடிவை எடுத்தான்.
அர்ஜுன் மீராவிடம் தான் சூர்யாவிற்குப் பதில் ஆஸ்திரேலியா செல்ல போவதாகச் சொல்ல… அவளும் பார்த்து போயிட்டு வாங்க அர்ஜுன் என்றாள். “நான் உனக்காகவும் தான் மீரா போறேன். நான் இங்க இருக்கிறதுனால தான நீ சென்னைக்கு வர மாட்டேங்கிற…நான் ஆஸ்திரேலியா போய்டா, நீ வருவே தான.” அர்ஜுன் சொல்ல…
மீராவிற்கு இதனை நாள் அர்ஜுனிடம் அழுது விடக்கூடாது என்ற கட்டுபாடு எல்லாம் மீறி அழுகை வந்தது. அவள் அழுததும் அர்ஜுன் துடித்து விட்டன்.
“மீரா… நாம கல்யாணம் பண்ணிக்கலாம் டா. அம்மா நம்மைக் கல்யாணம் பண்ணிக்கத் தான் சொன்னாங்க. ஆனா.. அவங்க முழு மனசா சொல்லலைன்னு எனக்குத் தெரியும். அதனால… அவங்க முழு மனசோட ஒத்துக்கிட்டதும் செஞ்சிக்கலாம்னு நினைச்சேன். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அம்மாவோட மனசை மாத்தலாம், சரியா டா… எனக்கு நீ தனியா இருக்கிறது மனதுக்குக் கஷ்ட்டமா இருக்கு.” அர்ஜுன் சொல்ல…
“வேண்டாம் அர்ஜுன், வித்யா அத்தை கண்டிப்பா ஒத்துக்குவாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு, வெயிட் பண்ணலாம் அர்ஜுன் ப்ளீஸ்…” என்றாள் மீரா.
“எனக்குத் தெரியும் நீ இப்படித் தான் சொல்வேன்னு, சரி பார்ப்போம். வச்சிடுறேன்.” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் போன்னை வைத்தான்.
அவனுக்கு எப்போது தன் அம்மா தங்கள் திருமணத்திற்குச் சரி என்று சொல்வார்கள் என்று இருந்தது. ஒரு பக்கம் மீரா தனியாகப் பெங்களூரில் இருக்கிறாள். அவளோடு இருந்த கீர்த்தனாவிற்குத் திருமணமாகி அமெரிக்கா சென்றுவிட்டாள்.
இன்னொரு பக்கம் மீராவின் அப்பா வேறு அடிக்கடி போன் செய்து, எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்? மீரா சென்னைக்கே வர மாட்றா ஏன்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியா சென்று வந்ததும், அம்மாவிடம் பேசி முடிவு எடுத்து விட வேண்டும் என்று நினைத்தபடி ஆஸ்திரேலியா செல்ல… பெட்டியில் எடுத்து வைத்தான்.
அர்ஜுன் அடுத்த ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா கிளம்பினான். கிளம்பும் முன் வித்யாவிடம் சென்று போயிட்டு வரேன் மா… என்று சொல்லும் போதே… அவன் கண்கள் கலங்கியது. வித்யா மெளனமாக இருந்தார். ஆதி, சூர்யா, மற்றும் ஆரு அர்ஜுனோடு விமான நிலையத்துக்குச் சென்றனர்.
அர்ஜுன் வீட்டில் இருந்து கிளம்பியதும் “வித்யா, நீ ரொம்பப் பண்ற… உனக்கு உன்னோட பையன் உன் சம்பந்தம் இல்லாம கல்யாணம் பண்ண மாட்டாங்கிற திமிர். அவனையும், மீராவையும் நீ எவ்வவளவு கஷ்டபடுத்துற? தோளுக்கு மேல வளர்ந்த பையன் எப்படிக் கண் கலங்கிட்டுப் போறான் பாரு. இனியும் உன்னோட சம்மதத்துக்காக நான் காத்திருக்க மாட்டேன். அவன் ஆஸ்திரேலியால இருந்து வரட்டும், நான் அவங்க கல்யாணத்தை நடத்த போறேன். நீ என்ன அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்றது, என் பையன் என்னோட தான் இருப்பான்.” என்று கணேசன் முடிவாகச் சொல்லிவிட்டு சென்றார்.
அர்ஜுன் ஆஸ்திரேலியா சென்றதும் மீரா சென்னைக்கு வந்தாள். அவள் இங்கே வந்து எட்டு மாதம் ஆகி இருந்தது. அதனால் வருணுக்கு மீரா மீது கோபம். அவன் அவளுடன் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தான். மீராவிற்கு அவனைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. வருண் இப்போது கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்தான். குழந்தை தனம் போய், அவன் முகத்தில் மீசை அரும்ப ஆரம்பித்து இருந்தது. மீரா வருணின் பின்னாலையே திரிந்து மன்னிப்பு கேட்டதும் தான் வருண் மலை இறங்கினான்.
Advertisement
error: Content is protected !!