Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் மலரும் ஓசை

Manam Malarum Oosai 15.2

          அனைவரும் சாப்பிட்ட முடிக்க.. காஞ்சனா.. ‘முகம் கழுவிட்டு வா ஆதி..” என அனுப்பி வைத்து ஆதிரைக்கு தேவையான உடைகள் நிறைந்த பேகை எடுத்து வந்து சோபாவில் வைக்கவும்.. ராஜாத்தி இளங்கோ கர்ணன் என அனைவரின் முகத்திலும் கலக்கமே..

          நான்கு உறுப்பினரோடு வாழ்ந்த குடும்பம்.. காலம் இருவரை எடுத்துக்கொள்ள தற்போது ஒற்றை மகளையும் பிரியும் நிலை மிகக்கொடுமைதான் என காஞ்சனாவை உணர்ந்திருந்தான் அதிரூபன். மனதிற்கினியவளை தன்வீடு அழைத்து செல்லும் சந்தோசம் சற்று மட்டுப்பட.. ஏதும் செய்ய இயலாதவனாய் அமைதியாய் அமர்ந்திருந்தான் சோபாவில்.

       ஆதிரை முகம் கழுவி வர.. அவளின் கையில் மல்லிகை சரம் கொடுத்து சிறிய ஒப்பனை செய்து கொள்ள பணிக்கவும் ஆதிரை அறைக்குள் சென்றாள். மகளின் பின்னோடு சென்று.. ‘ஆதிம்மா..” என்றார்.

     அன்னையின் குரல் வாட்டத்தில் ஆதிரை சட்டென நிமிர.. கதவு தாழிட்டவர்.. ‘முன்ன மாப்பிள்ளை பக்கத்திலயே இருக்கவும் சில விசயம் பேச முடியல..” என பூவை சூடிவிட்டு..



Advertisement

      ‘குழந்தை விசயத்துல மாப்பிள்ளை பக்கம் தப்பிருக்க மாதிரி எனக்கு தெரியல.. அப்படியே இருந்தாலும் அதுக்கு குழந்தை என்ன செய்யும்..? மாப்பிள்ளை மேல உள்ள கோபத்தை குழந்தைகிட்ட காட்டிடாதடா..

       குழந்தையை பார்த்துக்க அங்க அண்ணன் அண்ணி மாரிப்பன் அப்பான்னு எல்லாரும் இருக்காங்கதான்.. ஆனா எத்தனை பேர் இருந்தாலும் ஒரு தாயோட அன்பு மாதிரி வராது.. எங்கப்பா பொண்டாட்டியால நான் பட்ட கஷ்டம் அந்த குழந்தைக்கு..” எனும்போதே.. ‘ம்மா..” என கண்ணீரோடு அணைத்துக்கொண்டாள் அன்னையை.

         ‘இல்ல.. இல்ல.. ஆதி.. என் ஆதிம்மா அப்படி கிடையாதுன்னு எனக்கு தெரியாதா.? நான் எதுக்கு சொல்றேன்னா.. உன்னால அந்த குழந்தைக்கு..” என நிறுத்தியவர்.. ‘அந்த குழந்தைன்றதே தப்பு.. உன் பெரியகுழந்தை விசயத்துல எப்போவும் உனக்கு தனிகவனம் இருக்கனும்..” என எடுத்துரைக்க.. ஆதிரை நம்பிக்கையாய் தலையாட்டினாள்.

Advertisement

      மகளை பெருமையாய் பார்த்தவர்.. ‘நேரமாச்சி வா..” என வெளியே அழைத்து வந்து.. ‘அப்பா அண்ணாவை கும்பிட்டுக்கோ..” என வணங்க வைத்து..  ‘கர்ணாவும் அபியும் கிளம்புனதுக்கப்புறம் கர்ணா குட்டிகளை கூட்டிகிட்டு உங்கத்தையோட வரேன்..” என தைரியமூட்டி மகளை அனுப்பி வைத்தார் இன்முகத்தோடு.

Advertisement

     கணேசன் காரோட்ட.. இளங்கோ முன்னிருக்கையில் அமர்ந்திருக்க.. அவரின் மனைவியோடு அதிரூபனும் ஆதிரையும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர். வீட்டில் போல அழவில்லை ஆதிரை.. நிச்சயம் இவனின் வீட்டில் தன்னால் பொருந்தி போக முடியாது.. வேலைக்கு அப்ளை செய்ய வேண்டும் என தீவிர யோசனையில் இருந்தாள்.

       அதிரூபனின் ஊர் திருவண்ணாமலை என்பது மட்டும்தான் ஆதிரைக்கு தெரியும்.. மற்றபடி அவனின் படிப்பு வேலைப்பற்றியெல்லாம் ஏதும் தெரியாமலிருக்க.. அவன் இங்குதான் இருப்பான். நாம் வேலைக்கு அப்ளை செய்வோம்.. வேலையை சாக்காக வைத்து சென்னை சென்றிடலாம்.. அங்கே ஹாஸ்டலில் தங்கிகொள்ளலாம் என திட்டமிட்டு வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள மொபைலை எடுத்தவள் அதில் கவனம் செலுத்தினாள்.

     — —– —–

Advertisement

      மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே வரவைத்த கனகா ஆதிரையை விளக்கேற்ற பணிக்க.. யாரும் உன்னை குறை சொல்லாதவாறு நடந்துகொள்ள வேண்டுமென அத்தனை அறிவுரைகளை காஞ்சனா சொல்லியிருக்க.. கனகா சொன்னதை மறுப்பின்றி செய்தாள் ஆதிரை.

      வீட்டில் ப்ரியாவின் அப்பா அம்மா அண்ணன் என இருக்க.. இத்தனை பெரிய குடும்பமா என அதிர்ந்தாள் ஆதிரை. மருமகளின் மனமறிந்த கணேசன்.. ‘ஆதிம்மா இது என் தங்கை ராதா.. அவர் என் தங்கை புருசன் பாலன்.. உங்கத்தையோட அண்ணன்.. இவன் சுதாகரன் என் தங்கை பையன். இங்க பக்கத்துல தேனிமலைல இருக்காங்க..” என்றார்.

       ஓ.. கல்யாணத்துக்காக வந்திருப்பாங்க போல என நினைத்து சரி என்பதாய் தலையசைத்தாள். ‘ஆதி வா..” என தனதறையை அதிரூபன் திறந்துவிட.. அங்க நம்ம வீட்ல அத்தனை பேர் முன்னவே தாழ்போட்டான்.. இங்க என்ன செய்வானோ என இவள் பதட்டமாக வேணாம் என தலையசைக்க.. ‘எவ்வளோ நேரம் பட்டு சாரியோடவே இருப்ப.? போய் டிரெஸ் சேன்ஜ் செய்துக்கோ..” என்று ஆதிரையின் பேகை உள்ளே வைத்து வந்தவன்.. ‘போ ஆதி..” என்றான் கனிவாக.

      அதிரூபனின் குரலில் கனகா அறையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை.. ‘ப்பா..” என குரல் கொடுக்க.. ‘பட்டூ..” என குரல் கொடுத்தவாறு அன்னை அறைக்குள் செல்லவும்.. குழந்தைக்கான இவனின் பாச அழைப்பில் மனம் தள்ளாட ரூபன் சொன்ன அறைக்குள் நுழைந்தாள் ஆதிரை.

       அதிரூபன் குழந்தையை தூக்க சென்றதும் ஆதிரையின் முகபாவனையை கண்ட பாலன், ராதாவிற்கு, ஆதிரை குழந்தையோடு பொருந்துவாள் என்ற நம்பிக்கை ஆட்டம் கண்டது.

       குழந்தையோடு வெளியே வந்த ரூபனிற்கு தன் அத்தைமாமா முகவாட்டம் சந்தேகத்தை உண்டாக்க சுதாகரை பார்த்தான்.. அவனின் முகமும் வாட்டமாய் இருக்கவே.. ‘ம்மா.. லன்ச் ரெடியா.? சாப்பிட்டா அத்தை மாமா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுப்பாங்கள்ல.?” என்றான் ஒட்டாமல்.

        ‘என்ன பேச்சு ரூபா இது..? அத்தைமாமா மனசை இப்படித்தான் புண்படுத்துவியா.?” என கடிந்தார் கணேசன். ரூபனின் பேச்சில் மாரியப்பனின் முகமும் வாடிட.. ‘அப்பா.. என்னோட காதலை ஆதிரை ஏத்துக்காததுக்கு காரணமே எனக்கு ஒரு குழந்தையிருக்குன்றதுதான்.   எந்த பொண்ணுக்கும் இருக்கும் நெருடல்தான் இது.

      நம்ம பட்டுவை ஆதிரை பார்த்துக்கிறாளோ இல்லையோ.. ஆனா குழந்தை மனசு கஷ்டப்படறமாதிரி கண்டிப்பா நடந்துக்க மாட்டா..” என நம்பிக்கையோடு சொன்னவன்..  ‘இவங்க இப்படி முகத்தை காட்டினா அவ மனசு கஷ்டப்படாதா.?” என்றான் வருத்தமாக.

      ராதா.. ‘எங்களுக்கும் குழந்தை மேல..” எனும்போதே.. ‘அத்தை.. பட்டு என் குழந்தை.. இது என் குடும்ப விசயம்.. எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கிறோம்..” என்றான் இறுக்கமாக.

      கனகா.. ‘ரூபா.. ஏண்டா இவ்வளோ கோபம்..?” என மகனை அமைதிப்படுத்த.. குழந்தையை அன்னையிடம் கொடுத்தவன்.. ‘அப்பா ஃபோன் பேசிட்டு வரேண்டா பட்டு..” என குழந்தைக்கு சொல்லி.. ‘சுதா..” என கோபமாய் அழைத்து மாடிக்கு சென்றான் அதிரூபன்.

      சுதாகரன் மாடிக்கு வரவும்..  தன் ஆதங்கத்தை கலங்கிய கண்களோடு வெளிப்படுத்திய அதிரூபன்.. ‘கீழ ஆதியோட சித்தப்பா சித்திலாம் இருக்காங்க.. நீயாவது சொல்லலாமில்ல சுதா.? ப்ரியாவைப் பத்தியும் பட்டுவைப் பத்தியும் யோசிக்கவே மாட்டிங்களா.?” என வருந்தியவனாய் கேட்கவும்..

         ‘இந்த கோணத்துல நானும் யோசிக்கல ரூபா.. நீ டென்சன் ஆகாத.. சாப்பிட்டதும் அப்பாம்மாவை அழைச்சிட்டு போய்டறேன்.” என்றான் மன்னிப்பு கேட்கும் பாவனையில்.

     அப்பொழுதும் ரூபனின் கோபம் குறையாமலிருக்கவே.. ‘இந்த மாதிரி யோசிக்கலன்னு நான்தான் சொல்றேன்ல.? இனி நான் பார்த்துக்கிறேன் ரூபா.. நீ தங்கையை கவனி..” என தன்மையாய் சொல்லி அதிரூபனை கீழே அழைத்து வந்தான்.

      பாலன் ராதாவிற்கு சுதாகரன் எடுத்துரைக்கும் முன்.. தன் பேரன் எதற்காக கோபப்பட்டிருப்பான் எனப்புரிந்த மாரியப்பன்.. மகள் மருமகனிற்கு எடுத்துரைத்திருக்க.. தன் முகபாவனை தவறென புரிந்தபோதும்.. ஆதிரை குழந்தையிடம் அன்புகாட்டுவாள் என்ற நம்பிக்கை வராமல் போகவே.. சுணங்கிய முகத்தோடே சாப்பிட அமர்ந்தனர்.

      இளங்கோவிடமும் அவரின் மனைவியிடமும் கணேசன் கனகா பேச்சு கொடுத்திருந்தபோதும்.. ஆளுக்கொருபுறம் தனித்தனியாய் பேசச் சென்றதால் இளங்கோவிற்கு ஏதோ போலாக..  அதனை கண்டுகொண்ட அதிரூபன்.. ‘அவங்க வீட்டுக்கு குழந்தையை தூக்கிட்டு போக யோசிச்சிருக்காங்க மாமா.. இவங்க தூக்கிட்டு போய்ட்டா ஆதியோட குழந்தை எப்படி பழகுவான்னு எனக்கு கோபமாகிடுச்சி.. அதான் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்..” என சமாளித்து.. ‘அம்மா இளாமாமாக்கு சாப்பிட எடுத்து வைங்க..” என்றான் கனிவாக.

       புதிதாய் திருமணமாகியிருப்பதால் குழந்தையை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல நினைத்திருப்பார்கள் போல என நினைத்த இளங்கோ.. இதற்கேன் இத்தனை கோபப்படனும் எனவும் யோசித்தார். ம்.. என் குடும்ப விசயம் நான் பார்த்துக்கிறேன் என தன் அத்தை மாமாவிடமே அத்தனை கோபமாய் சொல்கிறான்.. இதில் தான் என்ன செய்வது..? ஏதாவது பிரச்சனை என ஆதிரையாக சொல்லும்முன் தாமாக எதுவும் நினைக்க கூடாதென எண்ணி சகஜமாய் இருக்க முயன்றார் இளங்கோ.

      சாப்பிட்டு ஒரு மணிநேரத்திலேயே தன் தாய்தந்தையரை அழைத்து சென்றிருந்தான் சுதாகரன். மாலை ஆறு மணிவரை பேசிக்கொண்டிருந்த இளங்கோ கிளம்ப ஆயத்தமாக.. நாளை போலாம் என மாரியப்பன் சொல்ல.. ‘மறுவீடு அழைச்சிட்டு போகவும் வழியில்ல.. ரூபன் நாளைக்கு காலைலயே கிளம்பறன்றாப்ல.. வேலை முடிச்சி ரூபன் வந்ததுக்கப்புறம் ஃபோன் செய்ங்க.. அழைச்சிட்டு போக வரோம்..” என்று இவர்களிடம் சொல்லி ஆதிரையை அழைத்தார் இளங்கோ.

      ஆதிரை வெளியே வரவும்.. ‘ப்பா.. பெரிய பட்டூ..” என குழந்தை ஆர்பரித்து சொல்லவும்.. ‘ஆமாம் பெரிய பட்டூ..” என தானும் தன் கண்களை அகல விரித்தான் அதிரூபன்.

       ஆதிரையிடம் பேசி முடித்து கிளம்பும்போது.. அதிரூபனிடம்.. ‘அம்மான்னு சொல்லி பழக்கிவிடுங்க தம்பி.. இல்ல நாளபின்ன உங்களுக்கு குழந்தைபிறந்தா அவங்க அம்மான்னு கூப்பிடும்போது பட்டு மனசு சங்கடப்படும்..” என எடுத்துரைத்து கிளம்பினார் இளங்கோ.

    —- —– ——

       அதிரூபனின் அறையை அலங்கரிக்க ஆதிரையை தனதறைக்கு வரசொல்ல கனகா கணேசனிடம் சொல்ல.. ‘சாய்ங்காலம் ஆனா பட்டுக்கு மாடி விளையாடறது ரொம்ப பிடிக்கும்.. ஆதியை கூட்டிட்டு மேல வா ரூபா.” என குழந்தையை தூக்கி சென்றார் கணேசன்.

       ரூபன் உள்ளே செல்ல இவள் பதட்டத்தோடு பார்க்கவும்.. ‘மதிய சாப்பாடும் ரூம்க்குள்ளயே முடிச்சாச்சி.. எல்லாரும் மாடியில இருக்காங்க.. வா போலாம்..” என்றான்.

      ஆதிரை தயங்க.. ‘அப்போ இங்கையே இருக்கலாமா..?” என அதிரூபன் கதவை சாத்த முயல.. ‘இல்ல.. இல்ல போலாம்..” என்றாள் அவசரமாக. சின்ன சிரிப்போடு அழைத்து சென்றான் மாடிக்கு.

      இரண்டு நாள் சரிவர தூங்காத போதும் இரவு ஏழு மணிவரை தந்தையோடு விளையாடிக் களைத்த குழந்தைக்கு ரூபனே ஊட்டிவிட சமத்தாய் சாப்பிட்டாள் பட்டு.

      சாப்பிட்டு முடித்து ரூபனிடம் கதைபேசியவாறே குழந்தை உறங்கிட.. ‘ம்மா.. பட்டுவை படுக்க வச்சிட்டு வரேன்..” என கீழிறங்க.. ‘நாங்களும் வரோம் ரூபா.. சாப்பிட்டு தூங்கலாம்..” என அனைவரும் கீழிறங்க ஆதிரையும் கீழே வந்தாள்.

      அதிரூபன்.. ‘மதியமே சரியா சாப்பிடல.. இப்பவாவது சாப்பிடு ஆதி..” என அக்கறையாய் சொல்லி தானும் அமர்ந்தான். முதலில் ஆதிரை சாப்பிட்டு முடிக்கவே.. ‘போய் படு..” என அறையை காட்ட..

     ஆதிரை உள்ளே செல்ல முயல.. ‘கொஞ்சம் இரும்மா..” என சமையலறை விரைந்த கனகா மல்லிகையோடு வந்து மருமகளிற்கு சூட்டிவிடவும்.. அடிவயிற்றினுள் ஏதோ உருளும் அவஸ்தையோடு முந்தியை சுருட்டிக்கொண்டிருந்தாள் ஆதிரை.

     மனைவியின் தவிப்பறிந்தவனாய்.. ‘ம்மா அவளுக்கு பிடிக்கலனா வேணாம்..”

      கனகா.. ‘பூ பிடிக்காத பொண்ணுங்க இருப்பாங்களா.? அதெல்லாம் பிடிக்கும்.. நீ சீக்கிரம் சாப்பிடு..” என மகனை அதட்டி.. ‘நீ உள்ள போம்மா.. ரூபன் வருவான்..” என்றார் இன்முகத்தோடு.

      யார் முகத்தை பார்க்கவும் திராணியற்றவளாய் உள்ளே சென்ற ஆதிரைக்கு அவ்வறையின் அலங்காரம் அவளின் பயத்தை மேலும் அதிகரிக்க செய்தது. வேண்டாம் என மறுத்தாலும் விடாமல் நெருங்கிடுவானா..? என நினைக்க அடிவயிற்றினில் சுழன்ற பந்து இதயத்தை வந்தடைய.. அதிரூபனும் உள்ளே வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!