Post Views: 6,215
மீரா தன் அழுகையை விழுங்கி கொண்டு “அம்மா வந்தாலும் விருந்தாளி மாதிரி தானப்பா வருவாங்க. அதுக்கு அவங்க வராமலே இருக்கட்டும். அவங்க யாரோ மாதிரி இருக்கிறதை பார்த்தா எனக்குக் கஷ்ட்டமா இருக்கும்.” என்றாள். ராம்நாத்திற்கு அவள் வேதனை புரிந்தது, அவர் அமைதியாக அங்கிருந்து சென்றார்.
ஆரு கர்ப்பமாக இருப்பதால்….அவள் வீடு அவள் அம்மா வீடு என்று மாறி மாறி இருந்தாள். அப்படி ஒரு நாள் அவள் அம்மா வீட்டில் இருக்கும் போது…அவளை பார்க்க சூர்யாவின் அம்மா வந்திருந்தார்.
எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சு மீராவை பற்றி வர…. சூர்யாவின் அம்மா “நீங்க லவ் மேரேஜ்ன்னு நினைச்சு கவலைபடாதீங்க… அதெல்லாம் இப்ப லவ் மேரேஜ் சாதாரணமா ஆகிடுச்சு… நாம பார்த்துக் கல்யாணம் பண்ணா கூட, முன்ன பின்ன தெரியாத குடும்பத்தில தான் செய்வோம். அவங்களே விரும்பி கல்யாணம் பண்ணிக்கும் போது, அவங்களுக்கு ஒருத்தரை பற்றி ஒருத்தருக்கு நல்லா தெரியும். நான் கூட எங்க சூர்யா லவ் பண்ணும் போது பயந்தேன். ஆனா ஆரு ரொம்ப நல்ல பொண்ணு.” என்று ஒரு ப்லோவில் சொல்லி விட….
Advertisement
ஆரு சூர்யாவின் காதல் விஷயம் தெரியாத வித்யாவும், ரஞ்சனாவும் அதிர்ந்தனர். வித்யா ஆருவை பார்த்து முறைக்க…ஆருவிற்கு வயிறெல்லாம் கலங்கியது. அவள் பயப்படுவதைப் பார்த்த வித்யா, அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று அமைதியாக இருந்தார்.
சூர்யாவின் அம்மா சென்ற பிறகு… ரஞ்சனா “ஆரு நீயா லவ் பண்ண… என்னால நம்பவே முடியலை…” என்று கேட்க… அர்ஜுன் “பாருங்க அண்ணி, நம்மை எல்லாம் எப்படி ஏமாத்தியிருக்கா…” என்று அவனுக்கும் எதுவும் தெரியாதது போல் நடிக்க… ஆதி இவர்கள் பேசுவதைச் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
அர்ஜுன் வித்யாவை பார்த்து, “என்ன மா பேசாம இருக்கீங்க… நல்லா திட்டுங்க…” என்று ஆருவை போட்டு கொடுக்க… ஆரு அர்ஜுனை பார்த்து முறைக்க… வித்யா சமையல் அறைக்குச் சென்று கையில் தயிர் கடையும் மத்தோடு வந்தவர், அதை வைத்து அர்ஜுனை போட்டு மொத்த… “என்ன மா அவ லவ் பண்ணதுக்கு என்னைப் போட்டு அடிக்கிறீங்க?” அர்ஜுன் புரியாமல் கேட்க….
Advertisement
“நீ நடிக்காத…அவ லவ் பண்ணது உனக்குத் தெரியாது. எல்லாம் உன்னோட வேலை தான. இதுல உனக்குக் கூட்டு, உங்க பெரியம்மா. இரு அவ வரட்டும், அவளுக்கும் இருக்கு.” என்றவர் தொடர்ந்து, “உன்னோட தங்கச்சி லவ் பண்ணதை மறச்சு, அவளுக்குக் கல்யாணம் பண்ண நீ… எப்படி டா மீரா விலகுறேன்னு சொன்னதுக்கு அப்புறமும் பேசாம இருந்த?” என்று வித்யா சந்தேகமாகக் கேட்க…
“நான் எங்க பேசாம இருந்தேன். நீங்களே மீரா காணாம போனது தெரிஞ்சு வருவீங்கன்னு நினைச்சேன். இந்த ஆருவும், சூர்யாவும் அவங்களா எதாவது செய்வாங்கன்னு பார்த்தா… மீரா காணாம போனேதே இதுங்களுக்குத் தெரியலை…..அப்புறம் நான் தான் என்னோட ஆபீஸ்ல வேலை செய்றவர் மூலமா… நான் ஆஸ்திரேலியாவுலேயே இருக்கப் போறதா சூர்யாகிட்ட சொல்ல வச்சேன்.” என்ற அர்ஜுன் தொடர்ந்து,
“ஆனா… நான் ஒன்னு நினைச்சா…நடந்தது வேற. என்னால தான் மீராவுக்கும் கஷ்ட்டம், உங்களுக்கும் உடம்பு முடியாம போச்சு இல்ல மா…” என்று அர்ஜுன் வருத்தப்பட…. வித்யா அர்ஜுனின் அருகில் சென்று அவனைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு, அவன் தலையைக் கோதியவர் “இல்லை டா கண்ணா… இதெல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு. சரி விடு, இப்ப தான் கல்யாணம் நடக்கப் போகுது இல்ல….இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, அந்த வேலையைப் பார்ப்போம்.” என்றவர் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றார்.
Advertisement
ஆரு அவள் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க… “உங்க பெரியம்மாவும், அண்ணனும் திள்ளாலங்கடி வேலை பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணாலும், சூர்யா மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சதால உங்களைச் சும்மா விடுறேன்.” என்று சொல்ல…ஆரு சந்தோஷமாக அவள் அம்மாவை கட்டி கொண்டாள்.
அதிகாலை வேளை….இருள் விலகி கதிரவன் உதயமாகும் அழகான காலை பொழுது. சென்னை நகரத்தில் இருக்கும் அந்தப் பெரிய மண்டப வாசலில் பச்சரிசி மாவில் பெரிய கோலம் வரைந்து, அதில் அழகாகக் காவி இட்டு, மண்டபம் முழுவதும் தோரணங்கள் தொங்க…சொந்த பந்தங்கள் இங்கும் அங்கும் நடக்க…அந்த கல்யாண மண்டபமே களைகட்டியது.
பட்டு வேஷ்ட்டி, சட்டையில் அர்ஜுன் தன் சொந்தபந்தம் மற்றும் உற்றார் உறவினருடன் மண்டபத்தின் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக நடந்து வர… அவனை எதிர்கொண்ட வருண், அர்ஜுனுக்கு மாலை அணிவித்து அவன் கரம் பற்றி அழைத்துச் செல்ல.. அவர்களோடு மற்றவர்களும் சென்றனர்.
அர்ஜுன் வந்து வாசலில் நின்றதும், உள்ளே இருந்து கையில் மல்லிகை மாலையுடன், நீல நிற பட்டு புடவையில்… அழகு பதுமையாக நடந்து வந்த மீரா… அர்ஜுனின் கழுத்தில் மாலையிட… அர்ஜுன் முகம் முழுவதும் புன்னகையுடன் அவளையே பார்த்திருந்தான். சூர்யா அர்ஜுன் கையில் மாலையைக் கொடுத்து மீராவிற்குப் போட சொல்ல… வருணும், மீராவின் தாய் மாமனும் மீராவை தூக்கி கொள்ள… அர்ஜுன் கஷ்ட்டப்பட்டு மீராவின் கழுத்தில் எட்டி மாலை அணிவித்தான்.
அடுத்து சூர்யாவும், ஆதியும் அர்ஜுனை தூக்கி கொள்ள… மீராவிற்கு அர்ஜுனின் கழுத்தில் மாலை போட முடியவில்லை… அதைக் கண்டு எல்லோரும் சிரித்தனர். வருணும், அவள் மாமாவும் திரும்ப மீராவை தூக்கிக்கொள்ள… மீரா அர்ஜுனின் கழுத்தில் மாலை அணிவித்தாள்.
பின் அர்ஜுனும், மீராவும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டே நடந்து சென்று, மலர்களால் அலங்கரித்து இருந்த ஊஞ்சலில் அமர்ந்தனர். இருவரின் வீட்டுப் பெண்கள் வந்து அவர்களுக்குப் பாலும், பழமும் கொடுத்து, செந்நிற சாத உருண்டையால் இருவருக்கும் சுற்றி போட்ட பின், இருவரும் மலர்களால் அலங்கரிக்கபட்ட மணமேடைக்குச் சென்றனர்.
மீராவின் வீட்டு வழக்கப்படி திருமணம் நடப்பது என்று முடிவானதும், அர்ஜுன் அவளிடம் “கல்யாணத்துல நான் சட்டை போட்டுக்காம இருக்க மாட்டேன். அப்புறம் உங்க அப்பா எனக்குப் பாத பூஜை செய்றது வேண்டாம். உங்க அப்பாவும், எங்க அப்பா மாதிரி தான். அவர் எனக்குச் செஞ்சா கஷ்ட்டமா இருக்கும். அதே போல என் பொண்டாட்டிக்கு முஹுர்த்த புடவையும், தாலியும் நான் தான் வாங்குவேன். கல்யாண செலவுல பாதிய நாங்க குடுத்துடுவோம்.” என்று உறுதியாகச் சொல்லிவிட… மீரா அதை ராம்நாத்திடம் சொல்ல… அவரும் சரி என்றார். அதனால் இரு குடும்பத்துக்கும் ஏற்ற வகையிலேயே சடங்கு சம்ப்ரதாயங்கள் நடந்தது.
மணமேடைக்கு வந்து சில சடங்குகள் செய்ததும், அர்ஜுன் மீராவிற்கு முஹுர்த்த புடவை கொடுக்க… மீரா அதைக் கட்டி கொள்ளச் சென்றாள். அவளோடு ரஞ்சனாவும், ஆருவும் சென்றனர். இங்கே அர்ஜுன் மணமேடையில் அமர்ந்து வாத்தியார் சொன்ன மந்திரங்களைத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
மீரா மரூன் நிறத்தில் தங்க ஜரிகை நெய்யப்பட்ட புடவையில், நிறைய நகைகள் அணிந்து, தலையில் மலர் அலங்காரத்துடன் ஜடை வைத்து, மணமகளுக்குரிய இலக்கணத்துடன் மணமேடைக்கு வந்தவள், முதலில் நமஸ்காரம் செய்துவிட்டு, அர்ஜுனின் அருகில் அமர்ந்தாள்.
அர்ஜுனும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர். இருவருக்குமே இனிய படபடப்பு இருந்தது. அவர்களுக்குப் பின்னே ஆதி, ரஞ்சனா, ஆரு, சூர்யா, தினேஷ், சஞ்சனா நின்றனர். ஐஷு பட்டுப் பாவடையில் அர்ஜுனின் பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வித்யா முகத்தில் புன்னகையுடன் கணேசன் அருகில் நின்று கொண்டிருந்தார்.
மந்திரங்கள் முழங்க, கெட்டி மேளம் ஒலிக்க…. அர்ஜுன் கையில் தாலியை எடுத்தவன், அதை மீராவின் கழுத்திற்குக் கொண்டு செல்ல…ரஞ்சனா அவனுக்கு வசதியாக மீராவின் ஜடையைத் தூக்கி பிடித்துக் கொள்ள… அர்ஜுன் பொறுமையாக இரண்டு முடிச்சுக்களைப் போட்டதும், மூன்றாவது முடிச்சை ஆராதனா போட்டுவிட்டாள். அடுத்து அர்ஜுன் ஒரு தங்க செயின்னையும் மீராவிற்குப் போட்டுவிட்டான். எல்லோரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
மீராவிற்குக் கண்கள் கலங்கியது… அப்போது அவளை யாரோ மீரா என்று அழைக்கத் திரும்பி பார்த்தவள், அவளுக்குப் பக்கத்தில் ஷ்யாமளவை பார்த்ததும் திகைத்தவள் “அம்மா…” என்று ஆவலாக அழைக்க… ஷ்யாமளா மீராவின் அருகே அமர்ந்து, அவள் முகத்தைப் பற்றி, நெற்றியில் முத்தமிட்டு “அழகா இருக்கடா செல்லம். அழக்கூடாது… சந்தோஷமா இரு… உனக்குப் பிடிச்ச வாழக்கை கிடைச்சிருக்கு…..எனக்கு ரொம்பச் சந்தோஷம். நான் செஞ்சது தப்பு, சாரி டா.” என்றவள் அர்ஜுனிடம் வாழ்த்து சொல்லி, “மீராவை நல்லா பார்த்துக்கோங்க.” என்று சொல்ல… அவன் “கண்டிப்பா அத்தை.” என்றான்.
மீரா இதைத் தான் எதிர் பார்த்தாள். சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், திருமணமாகியவுடன் பெண்களுக்கு இத்தனை நாள் இருந்த வீட்டை விட்டுச் செல்லப்போகிறோம் என்று வருத்தம் தோன்றும், அப்போது அவர்களைத் தேற்ற அவர்கள் பெற்ற தாயால் தான் முடியும். மீரா இப்போது சந்தோஷமாக மற்ற சடங்குளை செய்தாள். எல்லோரும் ராம்நாத்திடம் வாழ்த்து சொல்ல…மீனாக்ஷி அங்கிருந்த பெண்களுக்குத் தாம்பூலம் கொடுத்தார்.
ஷ்யாமளா மீராவை வாழ்த்திவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டாள். அவளுக்குத் தன் மகளின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதனால் தான் வந்தாள். ஆனால் அங்கே எதோ விருந்தினர் போல் அமர்ந்திருக்க வேண்டிய தன் நிலையை எண்ணி நொந்தாள். அதற்குக் காரணம் நீயே தான் என்று அவளது மனசாட்சி சுட…தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தியபடி அங்கிருந்து சென்றாள்.
அர்ஜுனும் மீராவும் மற்ற சடங்குகளை நல்லபடியாக முடித்துத் தங்கள் பெற்றோரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். பின் அனைவரோடும் சென்று காலை டிபன் சாப்பிட்டுவிட்டு, சொந்தபந்தகளுடன் நின்று போட்டோ எடுத்தனர். இருவர் மனமும் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.
மாலை அதே மண்டபத்தில் அவர்கள் திருமண வரவேற்ப்பு சிறப்பாக நடந்தது. அதில் ராம்நாத் மற்றும் கணேசனின் தொழில் துறை நண்பர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டதால்…. மண்டபமே நிரம்பி வழிந்தது. மீரா அளவான… அதே சமயம் அழகான அலங்காரத்தில் இருக்க, அவள் பக்கத்தில் அர்ஜுன் சூட்டில் கம்பீரமாக நின்றான். வரவேற்ப்பு முடிய இரவு பதினொரு மணி ஆகிவிட்டது.
மணமக்கள் மீராவின் வீட்டிற்குச் சென்றனர். அவர்களுடன் ரஞ்சனா, ஆதி மற்றும் சூர்யா சென்றனர். அப்போதே ரொம்ப நேரமாகி விட்டதால் ரஞ்சனா மீராவை “இதே அலங்காரத்தில் போ மீரா வேற வழியில்லை…இப்ப வேற அலங்காரம் பண்ணா, ரொம்ப நேரம் ஆகிடும்.” என்று சொல்ல… மீராவும் சரி என்றாள்.