Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கிடும் நிமிடம் 3 3

எப்போதுமே அதிகாரமாக பேசும் மகள் முதல் முறை கெஞ்சவும் அதன் பின் அவளை தொல்லை செய்யாமல் விட்டு விட்டார் சரவணன்.

பெற்றவர்களுக்காக மனதை மறைத்து கொஞ்சம் கலகலப்பாக மாற ஆரம்பித்தாள் ஜானகி. அதன் பின் ஒரு வாரம் கழித்து “நானும் கடைக்கு வரேன் பா. அக்கா பாத்த வேலையை நான் பாக்குறேன்”, என்று சொல்லி சரவணனுடன் கிளம்பினாள் ஜானகி. வியப்பாக இருந்தாலும் சந்தோசமாகவே அவளை அழைத்துச் சென்றார் சரவணன். வேலையில் கவனம் வைத்தால் கொஞ்சம் அவனைப் பற்றிய நினைவு மறக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.



Advertisement

வேலைக்கு போனதும் அந்த நினைவு அவளை அதிகம் தொல்லை செய்ய வில்லை தான். ஆனால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த நினைவு அவளை பாடாய்ப் படுத்த ஆரம்பித்தது.

Advertisement

“எதுக்கு அங்க கையை வச்சான்? அவன் தொடுகைல அவன் கிட்ட நான் மயங்கிருவேன்னு நினைச்சானா? இல்லை நான் பொறுக்கின்னு சொன்னதுனால கோபத்துல வச்சானா? ஐயோ அவன் இப்ப என்னைப் பத்தி நினைப்பான்? என்னை பாக்கும் போதெல்லாம் அவன் கண்ணு அந்த இடத்துக்கு தானே போகும்”, என்று எண்ணி கூசிப் போனாள்.

Advertisement

வேறு யாரைத் திருமணம் செய்தாலும் இந்த கொடுமையான நிகழ்வு அவளை விட்டு போகாது என்று புரிந்து கொண்டது வேறு அவளுக்கு கவலையாக இருந்தது. சரவணன் எத்தனை நாள் திருமணம் பற்றி பேசாமல் இருப்பார்? என்றைக்கு இருந்தாலும் பெற்றவர்களுக்காக அவள் திருமணம் என்ற ஒன்றை செய்து தான் ஆக வேண்டும்.

Advertisement

திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளையாக வருபவனிடம் என்னை ஒருத்தன் இந்த இடத்துல கிள்ளி வைத்து விட்டான் என்று எப்படி சொல்ல முடியும்? அதை நினைத்தாலே எரிச்சலாக வந்தது.

“எங்கிருந்து டா வந்த? எப்ப உன்னைப் பாத்தேனோ, அப்ப இருந்து நான் நானா இல்லை. உன்னோட ஒரு தப்பான செய்கை என்னோட வாழ்க்கையவே முடக்கி போட்டுருச்சு. ஆனா உனக்கு இதெல்லாம் ஜாலி அப்படி தானே? இப்ப எந்த பொண்ணு கூட எங்க சுத்திக்கிட்டு இருக்கியோ? ஆனா நான் பிடிக்காத உன்னை நினைச்சு என் தூக்கத்தை தொலைச்சிட்டு இருக்கேன்?”, என்று வாய் விட்டே புலம்பினாள்.

அவள் இங்கே குழம்பிக் கொண்டிருக்க ஸ்ரீராமும் அவள் நினைவில் தான் இருந்தான். அவளைப் பார்த்து ஒரு மாதத்துக்கு மேல் கடந்திருந்தது.

யமுனாவைக் காண அவள் தங்களின் வீட்டுக்கு வருவாள் என்று அவன் எதிர் பார்க்க சரவணனும் அரசியும் மட்டும் தான் வந்தார்கள்.

“ஜானகி வரலையா?”, என்று ஜெயா கேட்கும் போது “கூப்பிட்டோம், தலை வலின்னு சொன்னா. ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டு வந்துட்டோம்”, என்று சொன்னாள் அரசி.

அவள் தன்னால் தான் இங்கே வராமல் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான் ஸ்ரீராம். அவளை அவனால் நெருங்க முடியவில்லை. அவள் பேசியதற்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கடந்து அவளைக் காண வேண்டும் என்ற தவிப்பும் அவனுக்குள் இருந்தது. ஆனால் அவன் அந்த தவிப்பை உணர்ந்தானா என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

அடுத்த ஐந்து நாளில் அவன் போய் நின்றது அம்பிகாவிடம் தான். “பாட்டி”, என்று தயக்கத்துடன் வந்து நின்றவனைக் கண்டு புருவம் உயர்த்தினாள் அம்பிகா.

அம்பிகாவை அன்பு, அம்பு, கிழவி, அம்பிகா என்று அழைப்பவன் இன்று அதிசயமாக பாட்டி என்று அழைக்கவும் அவளுக்கு வியப்பாக இருந்தது.

“ஸ்ரீ குட்டி என்ன இப்படி பம்மிட்டு வந்து நிக்குற?”

“அது வந்து அன்பு, உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்”

“என் கிட்ட என்ன தயக்கம்? சொல்லு டா”

“எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா?”

“ஏய், என்ன டா சொல்ற?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள்.

“பிளீஸ் அன்பு, எனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு தானே? பிளீஸ் உன் மகன் கிட்ட சொல்லி எனக்கும் கல்யாணம் பண்ணி வையேன்”

“உன் அண்ணனைப் பாத்து உனக்கும் கல்யாண ஆசை வந்துருச்சா?”

“ஏன் வரக் கூடாதா?”

“வரலாம் வரலாம். எனக்கும் உனக்கு சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வச்சு கிரி குழந்தைகளையும் உன் குழந்தைகளையும் பாக்க ஆசை தான். ஆனா உன் அப்பன் என்ன சொல்வானோன்னு இருக்கு டா”

“என்ன அன்பு இப்படி சொல்ற? அவர் உன் மகன். அவர் என்ன சொல்றது? உன் பேச்சை அவர் கேட்டே ஆகணும்? நீ தானே அவருக்கு அம்மா?”

“க்கும்.. நீ என்ன உன் அப்பன் பேச்சையா கேக்குற? அப்ப அவன் மட்டும் என் பேச்சை எப்படி கேப்பான்?”

“நீ செத்து போறது மாதிரி டிராமா போடு பாட்டி”

“அடேய்…”

“சும்மா விளையாட்டுக்கு தான் பாட்டி. உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு அப்பா கிட்ட சொல்லு”

“இது நல்ல ஐடியா தான். இன்னைக்கே சொல்றேன். அப்ப தான் உனக்கு அவசரமா பொண்ணு பாப்பான்”

“காரியத்தையே கெடுத்த போ. அதெல்லாம் பொண்ணு பாத்தாச்சு”

“அப்படியா? என் பேத்தி யாரு டா?”

“எல்லாம் உனக்கு தெரிஞ்சவங்க தான்”

“யாருடா?”

“ஜானகி”

“யமுனா தங்கச்சியையா சொல்ற?”

“ஆமா அன்பு. அவளைப் பாத்ததுல இருந்தே எனக்குள்ள ஒரு தாக்கம்”

“அவளை லவ் பண்ணுறியா டா?”

“லவ்வான்னு தெரியலை. ஆனா சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணனும்னு தோணுது”

“நல்ல பொண்ணு தான். நம்ம யமுனா தங்கச்சி வேற. ஆனா கொஞ்சம் சேட்டைக்காரின்னு யமுனா சொல்லி கேள்வி பட்டுருக்கேன். அதான் தயக்கமா இருக்கு”

“இந்த ஸ்ரீராம் கிட்ட அவ சேட்டை எல்லாம் செல்லாது அன்பு. ஆனா அவ தான் வேணும். நீ எப்ப உனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிக்க போற?”

“போடா நான் ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிச்சா உன் அப்பன் நம்பவே மாட்டான். அவன் எமகாதகன். அவன் கிட்ட எப்படிச் சொல்லணுமோ அப்படிச் சொல்லி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றேன் போதுமா?”

“பாட்டின்னா பாட்டி தான்”, என்று புன்னகைத்த ஸ்ரீராம் “கூடிய சீக்கிரம் என் கிட்ட வந்துருவ டி ஜானு”, என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

அன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன் அம்பிகாவின் அறைக்கு வந்த ரகு “மாத்திரை போட்டீங்களா மா?”, என்று அக்கறையாக விசாரித்தார்.

தினமும் இது வழக்கம் என்பதால் “போட்டுட்டேன் பா”, என்று பதில் சொன்னாள் அம்பிகா.

“என்ன மா சோர்வா இருக்கீங்க?”

“ரகு, இப்படி கொஞ்சம் உக்காருப்பா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“என்ன மா?”

“நம்ம கிரிக்கு கல்யாணம் முடிச்ச மாதிரி நம்ம ஸ்ரீக்கும் கல்யாணம் பண்ணி வைப்போமா?”

“என்னது அவனுக்கு கல்யாணமா?  என்ன மா விளையாடுறீங்களா?”

“இல்லை ரகு, என் மனசுல பட்டதைச் சொன்னேன்”

“அவனே ஒரு தறுதலை மா”

“இப்படிச் சொல்லி சொல்லி தான் அவன் அப்படி இருக்கான்”

“அம்மா”

“அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா வரப் போறவளுக்காக அவன் பொறுப்பா இருந்து தான் ஆவான்”

“இவனை நம்பி யார் பொண்ணு கொடுப்பா?”

“நம்ம ஸ்ரீக்கு யமுனாவோட தங்கச்சி ஜானகியைப் பாக்கலாமா? அவளும் இங்க மருமகளா வந்துட்டா ரெண்டு குடும்பமும் பிரியாம இருக்கும். இன்னொரு குடும்பத்துல இருந்து பொண்ணு எடுத்தா அவளுக்கும் யமுனாவுக்கும் ஒத்துப் போகலைன்னா என் பேரனுங்க இடைல விரிசல் வந்துரும். உறவுக்குள்ள விரிசல் வந்தா அது தொழிலையும் பாதிக்கும். அக்கா தங்கச்சியை கட்டிக்கிட்டா அண்ணன் தம்பி கடைசி வரை ராமன் லட்சுமணன் மாதிரி ஒண்ணா இருப்பாங்கல்ல?”

“நீங்க சொல்றதெல்லாம் சரி தான் மா. எனக்கு ஜானகியை ரொம்ப பிடிக்கும் தான். ஆனா இவன் விளையாட்டுத் தனமா சுத்திக்கிட்டு இருக்கானே?”

“அவனை அடக்க அவ தான் லாய்க்கு ரகு. அவளோட அடாவடியை யமுனா சொல்லி நீ கேட்டுருக்க தானே? கண்டிப்பா அவள் ஸ்ரீயை மாத்துவா”

“ஹிம், ஆனா அவங்க வீட்ல என்ன சொல்வாங்களோன்னு இருக்கு…”

“அவங்க மட்டும் வேண்டாம்னா சொல்லுவாங்க? சரவணன் கண்டிப்பா சம்மதிப்பார். முதல்ல நீ நாளைக்கு ஸ்ரீ கிட்ட சம்மதம் கேளு. அவன் சரின்னு சொன்னதுக்கு அப்புறம் அவங்க வீட்ல பேசு”

“அவன் கிட்ட என்ன கேக்குறது? நான் சொல்றது தான் முடிவு. அவனுக்கு ஜானகி தான் பொண்டாட்டின்னு நான் முடிவு பண்ணினா போதும். நாளைக்கு வீட்ல உள்ள எல்லார்க் கிட்டயும் சொல்லிட்டு சரவணன் கிட்ட பேசுறேன். நீங்க ரொம்ப நேரம் முழிச்சிருக்காம தூங்குங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்ற ரகு ஜெயாவிடம் விஷயத்தை சொல்ல அவள் மகிழ்ந்து போனாள்.

செல்ல பிள்ளைக்கு திருமணம் என்றால் சும்மாவா? “ஏங்க நாளைக்கு வரைக்கு எதுக்கு சும்மா இருக்கணும்? மணி ஒன்பது தானே ஆகுது? அவங்க இப்ப இப்பவே தூங்கிருக்க மாட்டாங்க. அண்ணன் கடைல இருந்தே வந்துட்டாங்களோ என்னவோ? இப்பவே போனில் பேசுங்களேன்”, என்றாள் ஜெயா.

“அவசரக் படாத டி. இதெல்லாம் போனில் பேச முடியாது. நாளைக்கு சாயங்காலம் நானும் நீயும் நேர்ல போய் பேசிட்டு வருவோம்”, என்று சொன்னதும் அவள் சந்தோஷமாக சரி என்று சொன்னாள்.

அடுத்த நாள் மாலை அவர்கள் வீட்டுக்கு சென்ற போது அரசி மட்டும் தான் வீட்டில் இருந்தாள். முதலில் திகைத்து பின் அவர்களை வரவேற்று உபசரித்தாள்.

“ஜானகி இல்லையா மா?”, என்று கேட்டார் ரகு.

“அவங்க அப்பா கூட கடைக்கு போய்ருக்கா அண்ணா. திடீர்னு நீங்க வந்ததுல எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. இருங்க காபி எடுத்துட்டு வரேன்”

“அதுக்கு முன்னாடி அண்ணனை கொஞ்சம் வீட்டுக்கு வரச் சொல்ல முடியுமா அரசி?”, என்று கேட்டாள் ஜெயா.

“ஏதாவது பிரச்சனையா அண்ணி?”

“இல்லை ஒரு நல்ல விஷயம் பேச தான்”

“இதோ சொல்றேன்”, என்று சொன்ன அரசி சரவணனை அழைத்து வீட்டுக்கு வரச் சொல்லி விட்டு போனை வைத்தாள்.

“அரை மணி நேரத்துல அவங்க வந்துருவாங்க அண்ணா. அண்ணி இந்தாங்க இந்த போட்டோசை பாத்துட்டு இருங்க. நான் உங்க ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் அரசி.

யமுனா மற்றும் ஜானகியின் சிறு வயது புகைபடங்கள் அதில் இருக்க ஜானகியின் குறும்புகளையும் அந்த புகைபடங்கள் எடுத்துரைத்தது. தங்கள் மகனுக்கு அவள் தான் சரியானவள் என்ற எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.

நேசம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!