Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

Nesam Thodangum Nimidam 4 1

அத்தியாயம் 4

காதல் என்பது புதையல் பெட்டி

என்பதை உணராமல் இருந்தேன்

உன்னைக் காணும் முன்னே!!!



Advertisement

“வாங்க சம்பந்தி, வாங்க அக்கா, ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா?”, என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் சரவணன். அவர் பின்னே அமைதியாக வந்த ஜானகி “வாங்க அத்தை, வாங்க மாமா”, என்று வரவேற்றாள்.

Advertisement

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் சம்பந்தி”, என்று சரவணனிடம் சொன்ன ரகு “எப்படி இருக்க மா? வீட்டுப் பக்கம் வரதே இல்லையே?”, என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டார்.

Advertisement

“நல்லா இருக்கேன் மாமா”, என்று சொன்ன ஜானகி அவரின் இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர்த்தாள். ஆனால் தன்னுடைய அக்காவைக் கூட பார்க்க செல்ல முடியாத படி அங்கே ஒருவன் இருக்கிறானே? அவனை எண்ணிப் பல்லைக் கடித்தாள்.

Advertisement

“வா டா கண்ணு, இங்க வந்து உக்காரு”, என்று சொல்லி அவள் கை பற்றி தன்னுடைய அருகில் அமர வைத்துக் கொண்டாள் ஜெயா.

ஜெயாவைக் கண்டு புன்னகைத்த ஜானகி “பாட்டி வரலையா அத்தை?”, என்று கேட்டாள்.

“இல்லை மா. நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேச வந்தோம்”, என்று ஜானகியிடம் சொன்ன ஜெயா ரகு புறம் திரும்பி “என்னங்க வந்த விஷயத்தை சொல்லுங்க”, என்றாள்.

“அது வந்து சம்பந்தி”, என்று ரகு தயக்கத்துடன் ஆரம்பிக்க “தயங்காம சொல்லுங்க சம்பந்தி. யமுனா ஏதாவது தப்பு பண்ணிட்டாளா?”, என்று தகப்பனாக கவலைப் பட்ட படி கேட்டார்.

“சே சே யமுனா தங்கம். அவ மருமகளா வந்ததுக்கு நாங்க புண்ணியம் பண்ணிருக்கணும். நான் இப்ப கேக்க வந்தது உங்க வீட்ல உள்ள இன்னொரு தங்கத்தையும் எங்க வீட்டுக்கு கொண்டு போக தான். என்ன புரியலையா? ஜானகியை எங்க ரெண்டாவது மகன் ஸ்ரீராமுக்கு கேட்டு வந்துருக்கோம்”, என்று சொன்னதும் சரவணன் சந்தோஷமாக அரசியைப் பார்க்க அவளும் அவரைக் கண்டு புன்னகைத்தாள்.

ஆனால் அவர் சொன்னதைக் கேட்டு உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ஜானகி. அவள் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை. முகத்தில் எந்த உணர்வுகளைக் காட்ட என்று தெரியாமல் அவள் திகைத்து வழிக்க “ஆமாங்கண்ணா. ஜானகியும் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு நாங்க ஆசைப் படுறோம்”, என்று சொன்ன ஜெயா ஜானகியின் கன்னத்தை ஆசையாக வருடிக் கொடுத்தாள்.

“யமுனாவைக் கொடுத்துருக்குறதுனால ஜானகியையும் எங்க வீட்டுக்கு தான் மருமகளா அனுப்பணும்னு அவசியம் இல்லை. அவ வாழ்க்கை வேற, இது வேற. நாங்க எங்க ஆசையை சொன்னோம். ஆனா உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம் சம்பந்தி”, என்றார் ரகு.

“இவ்வளவு பெரிய நல்ல விஷயத்தைச் சொல்லிருக்கீங்க? நாங்க என்ன மறுக்கவா போறோம்?”, என்று சொன்னார் சரவணன்.

“ஆமாங்கண்ணா அக்காவும் தங்கையும் ஒரே வீட்ல வாழ கொடுத்து வச்சிருக்கணும். என் பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பு வந்தா நாங்க வேண்டாம்னா சொல்லுவோம்”, என்றாள் அரசி.

தன்னை மீறி அவர்கள் பேச்சு செல்கிறது என்று புரிந்து கொண்ட ஜானகி பாவமாக தந்தையைப் பார்க்க “எதையாவது சொதப்பிறாத டா”, என்று கண்களால் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் சரவணன்.

அந்த இடத்தில் ஏதாவது பேசி யாருடைய மரியாதையையும் கெடுக்க மனதில்லாமல் அமைதியாக இருந்தாள் ஜானகி. ஏனென்றால் அவளைப் பொறுத்த வரை அவனைத் தவிர மற்ற அனைவரும் நல்லவர்களே.

“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துட்டே வந்தோம். அப்புறம் ஸ்ரீராம் ரொம்ப நல்ல பையன் தான். ஆனா என்ன கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி. கிரி மாதிரி அமைதி கிடையாது. கொஞ்சம் அடாவடி. ஜானகி மாதிரியே படிச்சிருக்கான். இப்ப வேலைக்கு போகாம ஊரைச் சுத்தினாலும் கொஞ்ச நாள்ல என் தொழிலை கவனிச்சுக்குவான்”, என்றார் ரகு.

“சின்ன மாப்பிள்ளையை பத்தி நீங்க இவ்வளவு சொல்லனுமா? கிரி மாப்பிள்ளைக்கு தம்பி தானே? அதெல்லாம் கண்டிப்பா நல்லவரா தான் இருப்பார். நாங்க பாத்த வரைக்கும் எங்களை மரியாதையா தான் சின்ன மாப்பிள்ளை நடத்துறார். என் கிட்ட எல்லாம் சரி மாமான்னு சொல்றதை தவிர வேற ஒண்ணும் சொல்றது இல்லை. அவ்வளவு நல்லவர்”, என்று சரவணன் சொன்னதும் “ஆமா ஆமா அவன் செஞ்ச காரியம் தெரிஞ்சா நீயே அவனை ஓட ஓட விட்டு அடிப்பப்பா. நல்லவராம் நல்லவர்”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள் ஜானகி.

“அவனைப் பத்தி தெரியாம சம்பந்தி ஓவரா புகழ்றாரே? அந்த அளவுக்கு அவன் இவரை தாஜா பண்ணிட்டானா? பரவால்ல அவன் வாழ்க்கையில் செஞ்ச ஒரே நல்ல விஷயம் இவரை கரெக்ட் பண்ணது தான்”, என்று மகனைப் பற்றி எண்ணிக் கொண்டார் ரகு.

“இருந்தாலும் நாங்க உண்மையைச் சொல்லணும்ல? நாளைக்கு யாரும் அவனைப் பத்தி குறை சொல்றதுக்குள்ள நாங்களே சொல்லிறது நல்லது”, என்றார் ரகு.

“எங்களுக்கு பரிபூரண சம்மதம் சம்பந்தி. எங்களுக்கு சின்ன மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க பொண்ணு மட்டும் என்ன? யமுனா மாதிரி அமைதியா? இவளும் சரியான அடவாடி தான். கொஞ்ச நாளா தான் கம்முன்னா இருக்கா. சின்ன மாப்பிள்ளை குணத்துக்கும் இவளுக்கும் நல்லா ஒத்துப் போகும்”, என்று தந்தை சொல்ல அவரை வெட்டவா குத்தவா என்று முறைத்துப் பார்த்தாள் மகள். அவரோ அவள் புறம் திரும்பவே இல்லை. திரும்பிப் பார்த்தால் மகள் என்ன செய்வாள் என்று தான் அவருக்கு தெரியுமே?

“நாம தான் பேசிட்டு இருக்கோம். ஆனா கல்யாணப் பொண்ணு ஒண்ணுமே சொல்ல மாட்டிக்கா. எங்க வீட்டுக்கு மருமகளா வரியா கண்ணு. உன்னை நான் என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன்”, என்று சொன்னாள் ஜெயா.

தன்னிடம் நேரடியாக கேட்ட ஜெயாவிடம் என்ன பதில் சொல்ல என்று திணறிய ஜானகி அடுத்த நொடி தலை குனிந்து கொண்டாள். அதை அனைவரும் வெட்கம் என்று நினைக்க அவளோ அவனை எண்ணி உள்ளுக்குள் கடுப்பில் அமர்ந்திருந்தாள்.

“அவ சின்ன பொண்ணு அண்ணி. அதான் வெக்கத்துல பதில் சொல்ல தயங்குறா. நாங்க சொன்னா எங்க மக கேப்பா. எங்களுக்கு சம்மதம்”, என்று அரசி சொல்ல “நீ தாய் இல்லை மா. பேய். தலை குனிஞ்சா அது வெக்கமா? இவங்க போகட்டும், உனக்கு இருக்கு”, என்று பல்லைக் கடித்தாள் ஜானகி.

“சரி அப்படின்னா நாங்க நாளைக்கு எல்லாரையும் கூட்டிட்டு வரோம். பொண்ணு பாக்குற பங்ஷன் மாதிரி வச்சிட்டு அப்படியே கல்யாண தேதியையும் நிச்சய தேதியையும் குறிச்சிருவோம்”, என்று சொல்லி விட்டு ரகு எழுந்து கொண்டார். ஜெயாவுடன் அவருடன் கிளம்பினாள்.

அவர்கள் சென்ற பிறகு “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். அதுவும் அவன் எனக்கு வேண்டவே வேண்டாம். தயவு செஞ்சு இதை நிறுத்துங்க”, என்று கத்தினாள் ஜானகி.

“எதுக்கு வேண்டாம்னு சொல்ற? சின்ன மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? உன் முன்னாடி தானே அவங்க கிட்ட சம்மதம் சொன்னோம். அப்ப வெக்கப் பட்டு தலை குனிஞ்சிட்டு இப்ப வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?”, என்று கேட்டாள் அரசி.

“உன்னைக் கொன்னுறுவேன் மா. நான் வெக்கப் பட்டதை நீ பாத்தியா?”

“அப்ப அது வெக்கம் இல்லையா? எங்க காலத்துல நாங்க அப்படி தானே வெக்கப் பட்டோம். ஏங்க நீங்க என்னைப் பொண்ணு பாக்க வந்தப்ப இப்படி தானே வெக்கப் பட்டேன்”, என்று அரசி நேரம் காலம் தெரியாமல் கணவனிடம் கேட்க அவரோ பழைய நினைவில் மனைவியை காதலாக பார்த்தார்.

“என்னை கடுப்பேத்திட்டு இதுகளுக்கு ரொமான்ஸை பாரு”, என்று எண்ணிய ஜானகி “நீங்க என்ன சொன்னாலும் சரி. எனக்கு அவன் வேண்டாம்… வேண்டாம்”, என்றாள்.

“அப்படியா? நாளைக்கு அவங்க எல்லாரும் வருவாங்க. அவங்க கிட்ட நீயே சொல்லிக்கோ”, என்றார் சரவணன்.

“நான் எப்படி சொல்ல பா? அது மரியாதையா இருக்காதுப்பா. நீயே அவங்க கிட்ட சொல்லு”, என்று அவள் குரல் உள்ளே சென்று ஒலித்தது. அவள் திமிரெல்லாம் அவளுடைய தந்தையிடம் மட்டுமே இருக்கும். மற்றவரிடம் அவள் என்றுமே மரியாதை குறைவாக நடத்த மாட்டாள்.

“அப்ப நான் சொன்னா மட்டும் மரியாதையா இருக்குமா? இங்க பாரு பாப்பா. இதுல யமுனா வாழ்க்கையும் அடங்கிருக்கு. நீ வேண்டாம்னு சொன்னா அவங்க பெருந்தன்மையா சரின்னு சொல்லலாம். ஆனா தினமும் யமுனாவை பாக்கும் போது அவங்களுக்கு நம்ம மகனை வேண்டாம்னு இவ தங்கச்சி சொல்லிட்டாளேன்னு அவ மேல அவங்க கோபம் திரும்ப வாய்ப்பு இருக்கு. அதனால நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு தான் ஆகணும்”

“அப்பா, அக்காக்காக நான் கல்யாணம் பண்ண முடியுமா? அவனை கண்டிப்பா கட்டிக்க முடியாது”

“அப்படியா சரி? உனக்காக நான் சம்பந்தி வீட்ல பேசுறேன். இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்”, என்று சரவணன் சொன்னதும் “என்னங்க, என்ன பேசுறீங்க? அவ தான் கூறு கெட்ட தனமா பேசுறான்னா…. நீங்களும்….”, என்றாள் அரசி.

அம்மாவை முறைத்துப் பார்த்த ஜானகி சரவணன் புறம் திரும்பி “நிஜமாவாப்பா ரொம்ப தேங்க்ஸ்ப்பா”, என்றாள்.

“நான் சொல்லி முடிச்சிறேன் ஜானகி. ஸ்ரீராம் தானே உனக்கு வேண்டாம். என்னோட ஃபிரண்ட் சங்கர் இருக்கான்ல? அவன் மகனுக்கு ஏற்கனவே உன்னைக் கேட்டுட்டு இருந்தான். நாளைக்கே ஸ்ரீராம் வீட்ல இருந்து வர வேண்டாம்னு சொல்லிட்டு சங்கர் வீட்ல இருந்து வரச் சொல்றேன். உடனே உனக்கும் அந்த ரஞ்சித்க்கும் கல்யாணம். கொஞ்ச நாள் சம்பந்தி வீட்ல நம்ம மேல கோபமா இருப்பாங்க. ஆனா என் மக யமுனா எல்லாம் பாத்துப்பா. ஏன்னா அவ ஒண்ணும் உன்னை மாதிரி அடம் கிடையாது. நான் பாக்குற மாப்பிள்ளைக்கு உடனே சரின்னு சொன்னவ. ஆனா உனக்கு அடுத்தவங்க உணர்வு புரியாது. ஆனா எனக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. உனக்கு உன் அக்கா வாழ்க்கையை பத்தி கவலை இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம்”, என்றார் சரவணன்.

“என் பொண்ணு என் பொண்ணுன்னு அக்காவைச் சொல்ற? அப்ப நான் உனக்கு யாருப்பா?”, என்று அவள் கேட்டதும் சரவணனும் கலங்கித் தான் போனார்.

“நீயும் என் பொண்ணு தான். அதான் உன்னை தப்பா வளத்துட்டோம்னு கவலைப் பட்டுட்டு இருக்கேன். ஸ்ரீராம் கூட உனக்கு கல்யாணம் நடக்கணும். இல்லைன்னா அந்த ரஞ்சித் கூட கல்யாணம் நடக்கணும்”, என்றார் உறுதியாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!