Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேசம் தொடங்கிடும் நிமிடம்

நேசம் தொடங்கும் நிமிடம் 5 3

ஸ்ரீராம் குடும்பம் சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றது. அவர்கள் சென்றதும் அறைக்குள் சென்று விட்டாள் ஜானகி.

காரில் போகும் போது அம்பிகா முகம் ஒரு மாதிரி இருந்தது. மற்றவர்கள் யாரும் இதைக் கவனிக்க வில்லை. ஆனால் ரகு பார்த்து விட்டார்.



Advertisement

வீட்டுக்கு சென்றதும் “என்ன மா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டார் ரகு.

Advertisement

“இல்லை இந்த கல்யாணம் நடக்கணுமா? நாம வேணும்னா ஸ்ரீராம்க்கு வேற பொண்ணு பாப்போமா?”, என்று கேட்டு ரகுவின் கண்டனப் பார்வைக்கு ஆளானார் அம்பிகா.

Advertisement

“வயசாகிருச்சு, ஆனா மூளை சரியா வேலை செய்யாது போல? நீ தானே இதை ஆரம்பிச்ச. இப்ப வந்து இப்படி சொல்ற? இனி இப்படி பேசின அம்மான்னு கூட பாக்க மாட்டேன்”, என்று ரகு கத்தி விட்டுச் சல்ல அம்பிகா வாயை மூடிக் கொண்டார்.

Advertisement

பின் அங்கே வந்த ஸ்ரீராமிடம் அவர் விஷயத்தைச் சொல்ல “பாட்டி அவ பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. நாங்க சந்தோஷமா வாழ்வோம். இன்னொரு தடவை அப்பா கிட்ட இப்படி பேசி திட்டு வாங்காத”, என்றான்.

“இருந்தாலும் அவ வேண்டாம் ஸ்ரீ. அவ யமுனா மாதிரி இல்லை. என்னைப் போய் தூது புறான்னு சொல்றா டா. திமிர் பிடிச்சவ”, என்று சொன்னதும் ஜானகியை எண்ணி சிரிப்பு வந்தது அவனுக்கு.

“அண்ணி மாதிரி பொண்ணு அண்ணனுக்கு தான் சரி. ஆனா எனக்கு அவ தான் வேணும் பாட்டி. பிளீஸ்”

“நம்ம உயிருக்கு உத்திரவாதம் இல்லைன்னு மிரட்டுறா டா”

“பாட்டி நீ யாரு? அம்பிகா. நீ எவ்வளோ பெரிய ஆளு? நீ போய் அந்த கொசுவுக்கு பயப்படணுமா? அவ இங்க வரட்டும். நாம ரெண்டு பேரும் சேந்து அவளை ஒரு வழி ஆக்கிறலாம்”

“ஆமா ஆமா, அவ எல்லாம் சுண்டைக்காய். நம்ம பாத்துக்கலாம் டா”, என்று சொல்லி அம்பிகா சமாதானம் ஆகவும் தான் ஸ்ரீராமுக்கு நிம்மதியாக இருந்தது.

அன்று இரவு மொட்டை மாடியில் எரிச்சலுடன் அமர்ந்திருந்தாள் ஜானகி. முழு நிலவு காய்ந்து கொண்டிருந்தது. இதமான தென்றல் அவளைத் தீண்டிச் சென்றது. ஆனால் அவள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. திருமணத்தைப் பற்றிய கவலையும் ஸ்ரீராமைப் பற்றிய கவலையும் அவளை அரித்தது.

அவன் தனக்கு சரியானவன் தானா? திருமணத்திற்கு பின் தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று விதவிதமாக எண்ணினாலும் அவள் மனதில் எழும் கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை.

அடுத்து வந்த நாட்களில் ஜானகியிடம் இருந்து எந்த பேச்சு இல்லை. பேச்சே மறந்தது போல தனக்குள் மருகிக் கொண்டிருந்தாள். அவளது அமைதி அவளது பெற்றோரையும் பாதித்தது. ஆனால் ஏதாவது சமாதானம் செய்தால் இன்னும் முறுக்கிக் கொள்வாள் என்பதால் அமைதியாக இருந்து விட்டார்கள். அவர்களுக்கு திருமண வேலைகளும் குவிந்திருந்தது.

நிச்சயதார்த்த தினத்தில் அவளுடைய கையில் அவன் மோதிரம் போடப் போகும் போது அவள் கண்கள் கலங்குவதைக் கண்டவனுக்கு திகைப்பாக இருந்தது. ஏதோ அவள் கண்ணீர் அவன் மனதை அழுத்துவது போல இருந்தது.

திருமண உடை எடுக்க போகும் போதும் எந்த விருப்பமும் இல்லாமல் தான் இருந்தாள் அவள். மற்றவர்கள் சொல்லியதைச் செய்யும் இயந்திரம் போல செயல் பட்டுக் கொண்டிருந்தாள்.

எப்போதும் துறுதுறுவென்று கலகலப்பாய் இருப்பவளின் அமைதி சரவணனை அதிகம் பாதிக்க அன்று வீட்டுக்கு வந்ததும் “உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா பாப்பா? உனக்கு விருப்பம் இல்லைன்னா நான் சம்பந்தி கிட்ட பேசுறேன். நான் உனக்காக அவங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன். என்ன தான் யமுனாக்காக பாத்தாலும் நீயும் என் பொண்ணு தான் டா. நீ இப்படி இருக்குறது எனக்கு ரொம்ப கவலையா இருக்கு”, என்றார்.

“ஐயோ அப்படி எல்லாம் இல்லைப்பா. கல்யாணம் அப்புறம் அவங்க வீட்டுக்கு போகணும். உங்களை எல்லாம் பிரியனும். அதான் கஷ்டமா இருக்கு. மத்த படி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்”, என்று சொல்லி சமாளித்தவள் அதன் பின் பெற்றவர்களுக்காக புன்னகை முகமாகவே இருந்தாள்.

இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் தோழிகளுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்தாள். அவர்கள் அனைவரும் டிரீட் கேட்க அவர்களுக்கு ஒரு பெரிய ஹோட்டலில் வைத்து டிரீட் கொடுக்கலாம் என்று எண்ணி அனைவரையும் அங்கே வரச் சொன்னாள். இவளும் அரசியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.

தன்னுடைய வண்டியில் ஜானகி சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்தினாள். அங்கே சற்று தள்ளி ஸ்ரீராம் ஒரு பெண்ணுடன் வண்டியில் அமர்ந்திருப்பதைக் கண்டு விட்டாள்.

ஜானகி ஹெல்மெட் போட்டிருந்ததால் அவன் அவளைப் பார்க்க வில்லை. ஆனால் அவள் அவனை கண்டு கொண்டாள். அதுவும் அவனுடன் இருந்த பெண் தான் தியேட்டரில் அவள் பார்த்த பெண் என்று புரிந்ததும் உள்ளுக்குள் கொதித்துப் போனாள். அவள் மனம் அவன் செய்கையை கண்டு இறுகிப் போனது.

“இவன் திருந்தவே மாட்டானா? நிச்சயம் முடிஞ்சதுக்கு அப்புறமும் இவன் இவளை கூட்டிட்டு சுத்துறான்னா அப்ப என்னோட வாழ்க்கைல வந்து ஏன் விளையாடனும்? இவன் இப்படி தான் இருப்பான்னா கல்யாணத்துக்கு அப்புறம் என் நிலைமை என்ன?”, என்று கேள்வி எழுந்தது அவளுக்கு.

“அவன் எங்க திருந்த போறான்? அன்னைக்கு நீ அவனைக் குற்றம் சாட்டினப்ப கூட அவன் அந்த தப்பை உணரவும் இல்லை. அதுக்கு அவன் மன்னிப்பும் கேக்கலை. ஏதோ தப்பு செய்யாதவன் மாதிரி தான் பேசினான். அப்படி இருக்க அவன் எப்படி திருந்துவான்னு நீ எதிர் பாக்குற?”, என்று கேள்வி எழுப்பியது அவள் மனசாட்சி.

சிக்னல் கிளம்பியதும் போகும் அவர்களைப் பார்த்த படியே நின்றவள் பின் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு எதிர் பக்கம் சென்றாள். தோழிகளுக்காக முகத்தை சந்தோஷமாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு டிரீட் கொடுத்து விட்டு வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.

ஆனால் அறைக்குள் வந்ததும் அவன் ஏன் இப்படி கெட்டவனா இருக்கிறான் என்று எண்ணி அவளுடைய இயல்புக்கு மாறாக அழுகையில் கரைந்தாள் ஜானகி. அந்த கண்ணீர் அவள் மனதில் அவன் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறான் என்பதற்கான விடை என்பதை அவள் உணரவே இல்லை.

அதே நேரம் அன்றைய நிகழ்வை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். ரம்யாவுக்கு பத்திரிக்கை கொடுக்க தான் அவளுடைய வீட்டுக்குச் சென்றான். அப்போது அவளுடைய வீட்டில் வேறு யாரும் இல்லை.

வெறித்த பார்வையுடன் அதை வாங்கிக் கொண்ட ரம்யா “உன் கூட கொஞ்சம் பேசணும் ஸ்ரீ. வீட்டுக்குள்ள வா”, என்றாள்.

“வீட்ல யாரும் இல்லை. இங்க நாம பேசுறது சரி இல்லை ரம்ஸ். நீ கிளம்பி வா. வெளிய போகலாம்”, என்றான் ஸ்ரீராம்.

அதற்கு மேல் அவனைக் கட்டாயப் படுத்த முடியாது என்பதால் அவனுடன் கிளம்பி வெளியே சென்றாள்.

அவர்கள் போகும் போது தான் ஜானகி அவர்களைப் பார்த்தது. ஒரு ரெஸ்டாரண்ட் சென்றதும் “என்ன ரம்ஸ் சொல்லு”, என்றான் ஸ்ரீராம்.

“உனக்கு என்னோட லவ் புரியவே இல்லையா ஸ்ரீ?”, என்று வேதனையுடன் கேட்டாள் ரம்யா.

“ரம்ஸ் நீ இன்னும் இந்த பேச்சை விடவே இல்லையா? அன்னைக்கு நீ தியேட்டர்ல வச்சு முத்தம் கொடுத்த. படம் முடிஞ்சப்ப வெளிய வந்த பிறகு நான் இதுக்கு தெளிவா பதில் சொல்லிட்டேன். நீயும் சரின்னு சொல்லிட்டு இது வரை எனக்கு நல்ல பிரண்டா தானே இருந்த? மறுபடியும் லவ் அது இதுன்னு பேசுற?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.

“சொன்னேன் தான். ஆனா உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு”

“என்னை உண்மையான நண்பனா நீ நினைச்சா உனக்கு கஷ்டமா இருக்காது. நான் நம்ம நட்பு கடைசி வரை இருக்கணும்னு நினைக்கிறேன். பட் நீ வேற மாதிரி பேசினா நமக்கு இது தான் கடைசி சந்திப்பு”

“ஐயோ அப்படி சொல்லாத ஸ்ரீ. சாரி, இனி இப்படி பேச மாட்டேன்”

“குட், என்ன சாப்பிடுற?”

“ஏதாவது ஆர்டர் பண்ணு. அப்புறம் ஜானகியைப் பத்தி சொல்லு”, என்று அவள் கேட்டதும் ஜானகி நினைவில் அவன் உதடுகள் மலர்ந்தது.

அவன் கண்களில் தோன்றிய மயக்கத்தையும் உதட்டில் இருந்த புன்னகையையும் கண்டவளுக்கு முகம் தெரியாத அந்த ஜானகி மேல் பொறாமையாக வந்தது.

“அவ ரொம்ப சுட்டி ரம்ஸ். ரொம்ப கியூட். நாங்க இப்ப வர சண்டை தான் போடுறோம். ஆனா எனக்கு அவ மேல தோனுற பீலிங்க்ஸ் இது வரை வேற யார் மேலயும் தோனுனது இல்லை”, என்று மயக்கத்துடன் சொன்னான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி சண்டையா? ஏன்?”

“அது ஒரு பெரிய கதை. இதுக்கு நீயும் ஒரு காரணம்”

“நானா அவளை நான் பாத்ததே இல்லையே? அவ போட்டோவைக் கூட நீ காட்டலை எனக்கு”

“இரு கட்டுறேன்”, என்று சொல்லி தன்னுடைய அண்ணன் திருமணத்தில் எடுத்திருந்த ஜானகியின் புகைப்படத்தைக் காட்டினான்.

“அழகா இருக்கா ஸ்ரீ. ஆனா நான் இவளைப் பாத்ததே இல்லை. அப்புறம் எப்படி என்னால சண்டை”

“அன்னைக்கு தியேட்டர்ல வச்சு அவ நம்மளைப் பாத்துருக்கா. நீ செஞ்ச முட்டாள் தனத்தையும். அதனால என்னைத் தப்பா நினைச்சு என் அண்ணன் கிட்ட போட்டுக் கொடுக்க பாத்தா. அவளை மிரட்ட தான் நான் இந்த கல்யாணம் பிளான் பண்னினேன். பட் இப்ப ஐ லவ் ஹெர். அவ இல்லைன்னா எனக்கு லைபே இல்லை”, என்று தோழமையோடு அவளிடம் தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டான் ஸ்ரீராம்.

அவன் சொன்னதை எல்லாம் உள்வாங்கிக் கொண்ட ரம்யா “சாரி ஸ்ரீ”, என்றாள்.

“பரவால்ல விடு. கண்டிப்பா அவ என்னை மனசு மாறி ஏத்துக்குவா”,. என்று நம்பிக்கையோடு சொன்னான்.

அதன் பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவளை வீட்டில் விட்டுவிட்டு “நம்ம பிரண்ட்ஸ் கூட சேந்து நீயும் கல்யாணத்துக்கு வந்துரு ரம்ஸ். அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வா”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்றான்.

அதை இப்போது நினைத்துப் பார்த்தவன் ஜானகியைப் பற்றி ரம்யாவிடம் சொன்னதை நினைத்துப் பார்த்தான்.

“அவளை எனக்கு பிடிச்சிருக்கு தான். ஆனா அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு ரம்யா கிட்ட எப்படி அப்படி சொன்னேன்? அந்த அளவுக்கு அவளை விரும்புறேனா?”, என்ற சுய அலசலில் இறங்கினான். அவனது மனதில் அவளுக்கான நேசத்தை அந்த நிமிடம் அவன் உணர்ந்து கொண்டான். அதே போல அவளுக்கு அவன் மீதான நேசம் எப்போது துவங்குமோ?

நேசம் தொடரும்….. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!