Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சில் துளிர்க்கும் காதல்

நெஞ்சில் துளிர்க்கும் காதல் 7 2

அந்த அறியாமையையும் அவளுடைய வெகுளித் தனத்தையும் ரசித்தான் தமிழ். “பொய்யா? உனக்கு தான் என்னோட அழகு பிடிக்கலை. ஆனா நான் ஒவ்வொரு நிமிசமும் உன் அழகை நினைச்சு எப்படி வியந்துருக்கேன் தெரியுமா?”, என்று கேட்டு அவளை ஆழம் பார்த்தான் தமிழ்.

“நீங்க அழகு இல்லையா? உங்களை மாதிரி அழகை நான் யார் கிட்டயும் இது வரை பாத்தது இல்லை தெரியுமா? அழகா இல்லாம தான் ஊர்ல இருக்குற எல்லாரும் உங்களை ரசிக்கிறாங்களா? அப்பாடி உங்க கண்ணு இருக்கே, அது அப்படியே காந்தம் தான். அதுவும் எக்ஸைஸ் பண்ணி வளத்து வச்சிருக்கீங்களே உடம்பு ஐயோ அதுக்கு ஈடா எந்த ஹீரோவும் வர முடியாது. உங்களை அழகு இல்லைன்னு சொன்னா வேற யாரையுமே அழகுன்னு சொல்ல முடியாது”, என்று கடகடவென்று பேசியவள் ரகசிய சிரிப்போடு அவன் அவளை பார்க்கவும் வாயை கப்பென்று மூடிக் கொண்டு அவனை அசடு வழிய பார்த்தாள்.



Advertisement

“ஹா ஹா, தேங்க்ஸ் டி. என்ன டா நம்ம பொண்டாட்டி கண்ணு நம்ம மேல படவே மாட்டிக்கு. ஒரு வேளை அவ ரசிக்கிற மாதிரி நாம இல்லையோனு ரொம்ப கவலைப் பட்டேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு. இனி யார் பாத்தா என்ன பாக்கலைன்னா என்ன? என் பொண்டாட்டி என்னை அழகா இருக்கான்னு சொல்லிட்டாப்பா”, என்று அவன் குதூகலிக்க “ஐயோ பேசாம வண்டியை எடுங்களேன்”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள் பாரதி.

Advertisement

“ஏண்டி? டி சொல்லலாமா?”, என்று அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல “ம்ம்”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள்.

Advertisement

“தேங்க்ஸ் பாரதி, இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். ஏறு போகலாம்”, என்று அவன் சொன்னதும் அவளும் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். ஏறி அமர்ந்ததும் அவள் பைக் கம்பியைப் பிடிக்க “அங்க தான் பிடிக்கணுமா? வேற பிடிக்க உனக்கு இடமே கிடைக்கலையா?”, என்று பொய்க் கோபத்துடன் கேட்டான் தமிழ்.

Advertisement

“வேற எங்க பிடிக்க?”, என்று அவள் குறும்போடு கேட்க “ஏன் வேற இடமே உனக்கு தோணலையா டி?”, என்று அவன் கிசுகிசுப்பாக கேட்டதும் நெஞ்சம் முழுக்க தடதடக்க அவன் தோள் மீது விருப்பத்துடனே தன்னுடைய கரத்தை வைத்தாள் பாரதி.

அவள் கை வைத்ததும் உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஓட சந்தோசமாக வண்டியைக் கிளப்பினான் தமிழ்.

போகும் போது பழம், ஸ்வீட், பிரவீனுக்கு பிடித்ததைக் கேட்டு அவன் வாங்கியதை பெருமையாக பார்த்தாள் பாரதி. அங்கே அவர்களை பாசமாக வரவேற்றார்கள் மூர்த்தியும் மீனாவும். அதன் பின் அங்கே சந்தோஷமாக பேசி விட்டு மதிய உணவையும் முடித்து விட்டு கிளம்பும் போது “சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு பாரதி”, என்று மீனா சொல்ல முகம் சிவந்த படி தலையசைத்தாள் பாரதி. அப்போது தமிழின் பார்வை தன் மேல் இருப்பதை அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவளால் உணர முடிந்தது.

தயக்கத்தை உதறி அவனை அவள் நிமிர்ந்து பார்க்க அவனோ ஏக்கம் நிறைந்த விழிகளோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் தாபமும் ஆசையும் கசிந்ததை அவளால் உணர முடிந்தது.

அவன் பார்வை அவளை என்னவோ செய்ய இதற்கு மேல் அவனைக் காத்திருக்க வைக்க கூடாது என்று எண்ணிய பாரதி கூடிய சீக்கிரம் சஹானாவிடம் உண்மையைச் சொல்லி மனதில் எழும் குற்ற உணர்ச்சியை போக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றதும் அவன் குளிக்க பாத்ரூம் செல்ல அவனுடைய போனை எடுத்த பாரதி சஹானாவை அழைத்தாள்.

யார் நம்பரோ என்று தான் அதை எடுத்தாள் சஹானா. அவள் எடுத்ததும் “சஹி”, என்று அழைத்தாள் பாரதி.

“பாரதி எப்படி டி இருக்க? எத்தனை நாள் ஆச்சு உன் கிட்ட பேசி? ஒரு போன் பண்ணுறதுக்கு கூட உன்னால முடியலைல்ல? போ டி”, என்று அவள் கோப பட “உன் கிட்ட இப்ப எல்லாத்தையும் விளக்கம் சொல்லுற மன நிலைல நான் இல்லை சஹி. எனக்கு கல்யாணம் ஆகிருச்சு. நாளையோட ஒரு மாசம் ஆகுது”, என்றாள்.

“பாரதி என்ன விளையாடுறியா?”, என்று கலக்கமாக கேட்டாள் சஹானா.

“விளையாட இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்னு உனக்கே தெரியும் சஹி. நிஜமாவே எனக்கு கல்யாணம் ஆகிருச்சு”

“அப்ப என் அண்ணனுக்கு என்ன டி பதில் சொல்லப் போற?”

“சஹி”

“சீ என்னை அப்படிக் கூப்பிடாத. தினமும் அவன் உன்னைத் தான் டி கேட்டுட்டு இருக்கான். அவனைப் போய் ஏமாத்திட்டியே?”

“நீயே என்னை புரிஞ்சிக்கலைன்னா எப்படி டி? என்னோட நிலைமை அப்படி ஆகிருச்சு?”

“ஓஹோ, உன்னோட நிலைமை இப்படி ஆகிருச்சு சரி. ஆனா இதுக்கு அப்புறம் என் அண்ணன் வாழ்க்கை. அவனுக்கு நீ கொடுத்த்த வாக்கு? சே உன் கிட்ட பேசவே எனக்கு பிடிக்கலை. போனை வை”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள் சஹானா.

மீண்டும் பாரதி அவளை அழைக்க அவள் போனை எடுக்கவே இல்லை. மீண்டும் அழைத்தாள். அப்போதும் அவள் எடுக்க வில்லை என்றதும் “சாரி, நான் உனக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு விவரமா சொல்றேன். இப்ப இந்த நம்பருக்கு கால் பண்ணிறாத. இது என் வீட்டுக்காரர் நம்பர்”, என்று அவளுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.

அந்த மேஸ்ஸேஜ் போனது போல காட்ட வில்லை என்பதால் அவள் மீண்டும் அனுப்பி வைத்தாள். அப்போது ரீசீவ்ட் என்று வந்ததும் அதை அழித்து விட்டாள். கால் செய்ததையும் அழித்து விட்டாள்.

அதன் பின் அவன் குளித்து முடித்து வரும் போது அவன் போனை எடுத்தற்கான எந்த தடையமும் இல்லாமல் வைத்து விட்டாள். குளித்து முடித்து வந்தவன் மில்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு தேவையான ஜட்டி, பனியன், சட்டை என அனைத்தையும் எடுத்து வைத்தாள் பாரதி.

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை”, என்று எண்ணிக் கொண்டான் தமிழ். அவள் எடுத்து வைத்ததை அவன் அணிந்த பிறகு “சாப்பிட போகலாமா?”, என்று அழைத்தாள்.

“உன் மனசுல என்ன டி இருக்கு? எனக்காக எல்லாம் செய்ற? நான் கிட்ட வந்தாலே உருகிப் போற? அப்புறம் எதுக்கு என் கூட முழு மனசா வாழ தயங்குற?”, என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டு அவளுடன் சாப்பிடச் சென்றான்.

அவனுக்கு அவளை சத்தியமாக புரிந்து கொள்ள முடியலை. அதே நேரம் எனக்கு நீ வேணும் என்று தன்னுடைய தன்மானத்தை விட்டு அவளிடம் கெஞ்சவும் அவனுக்கு மனதில்லை. எத்தனை நாள் இப்படியே இருப்பா? என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே வரத் தானே செய்யும் என்று எண்ணிக் கொண்டான். கட்டாயம் ஒரு நாள் அவள் முழு மனதாக தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று நம்பினான் தமிழ்.

சாப்பிட்டு முடித்ததும் “நான் ஒரு முக்கியமான ஆளைப் பாத்துட்டு வரேன் பாரதி. அம்மா தூங்குறாங்க போல? என்னை எங்கன்னு கேட்டா சொல்லிரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

அவன் போன பிறகு அப்பாடி என்று மூச்சு விட்டவள் குளிக்கச் சென்றாள். அவள் மனது முழுவதும் சஹானா விஷயத்தை ரிஷியிடம் சொன்னால் அவன் என்ன செய்வான் என்பதைப் பற்றியே இருந்தது.

ஒரு ஆளைப் பார்க்க சென்ற தமிழ் அவரிடம் பேசி விட்டு பின் அவனுடைய மில்லுக்கு சென்றான். அங்கே கிடந்த வேலைகளை முடித்து விட்டு அக்கடா என்று அமர்ந்தவன் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்தான்.

அப்போது அதில் ஏதோ மெஸ்ஸேஜ் வந்திருப்பதாக காட்ட அதை எடுத்துப் பர்த்தான். அதில் “உன் புருசனுக்காவது உண்மையா இரு டி துரோகி”, என்று வந்திருந்தது. கூடவே இங்கிருந்து ஒரு மெஸ்ஸேஜும் போனதாக காட்டியது. அதை எடுத்துப் பார்த்தவன் அதில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தான்.

பாரதி ஏதோ திருட்டுதனம் செய்ததை அறிந்து அவனுக்கு அதிர்வாக இருந்தது. அவளை தவறாக நினைக்க மனது வரவில்லை என்றாலும் “விஷயம் ஏதாவது இருக்குமோ? அதனால் தான் என்னை விட்டு விலகிப் போறாளோ?”, என்று எண்ணியவன் அந்த நம்பருக்கு அழைத்தான்.

எடுப்பாங்களா மாட்டாங்களா என்று குழப்பமாக இருந்தது. அவன் எண்ணியது போல அவள் அதை எடுக்க வில்லை. அதனால் மீண்டும் அழைத்தான்.

அப்போது அதை எடுத்த சஹானா “உன் கிட்ட பேச பிடிக்காம தானே போனை எடுக்காம இருக்கேன். அப்ப எதுக்கு திருப்பி திருப்பிக் கூப்பிட்டு இம்சை படுத்துற? என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தின உன் மேல கொலை வெறியே வருது டி. உன் கிட்ட பேசவே எரிச்சலா இருக்கு”, என்று கத்தினாள் சஹானா. அவள் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனான் தமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!