Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 1 1

அத்தியாயம்

நீ என்னிடம் சேர்ந்ததும்

என்னிடம் இருந்த இருள்

அனைத்தும் நீங்கியே போனது!!!



Advertisement

ஆதவன் மேல் எழும்பி தன்னுடைய ஒளிக் கிரணங்களால் இந்த பூமியை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய உக்கிரம் கூட கூட பூமி கொஞ்சம் கொஞ்சமாக சூடாக ஆரம்பித்துக் கொண்டிருந்தது. பனித் துளிகள் கூட அந்த வெம்மை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தன. அனைவரும் ரசிக்கும் அழகான காலைப் பொழுது… இந்த பொழுதில் அனைவரின் மனதுமே கொஞ்சம் இதமாக அமைதியாக இருக்கும்.

Advertisement

புதிதாக பூத்த பூக்கள் அனைத்தும் மணம் பரப்பிக் பூமியையே சுகந்தமாக்கிக் கொண்டிருந்தன. பறவைகள் அனைத்தும் கீச் கீச் என்று ஒலி எழுப்பிய படி தங்கள் கூட்டில் இருந்து இறை தேடி பறந்து கொண்டிருந்தன.

Advertisement

அந்த அழகான காலை வேளையில் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து சுற்றி இருக்கும் மரங்களையும் பூக்களையும் ரசித்துக் கொண்டிருந்தாள் இந்து. இந்து யாவரும் ரசிக்கும் அழகான பெயர். பெயர் மட்டும் அல்ல. ஆளும் அழகு தான்.

Advertisement

இந்து என்ற இந்துமதி. எலுமிச்சை நிறம், ஐந்தடி உயரம், துருதுருவென்று இருக்கும் சின்னக் கண்கள், மாசு மருவற்ற திருத்தமான முகம், பார்ப்பவரை திரும்ப பார்க்கத் தூண்டும் அழகு கொண்டவள் தான் இந்து.

அவளுடைய ஒவ்வொரு அசைவுக்கும் அவள் காதில் இருந்த ஜிமிக்கி அங்கே இங்கே அசைந்தது. காற்றில் பறந்த அவளது தலை முடி அவள் அழகை இன்னும் அதிகப் படுத்தியது.

இந்த அதிகாலை பொழுது இந்துவுக்கு எப்போதுமே பிடிக்கும். தன்னுடைய ஒளியால் உலகையே வெளிச்சமாக்கும் ஆதவனை மிகவும் சந்தோஷமாக வரவேற்ப்பாள். ஆதவனின் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த அந்த நிறத்தைப் பார்க்க அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

அதுவும் ஸ்ட்ராங்கான காபியை கையில் வைத்துக் கொண்டு அந்த காலை வேளையை வரவேற்பதை தினமும் ஆர்வமாக செய்வாள் இந்து. புலர்ந்தும் புலராமலும் இருந்த காலை வேளை மனதுக்கு தெவிட்டாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. தினமும் இந்த ஆதவனின் எழுச்சியைக் காணும் போது புதிதாக ஒரு நம்பிக்கை பிறப்பது போல அவளுக்குத் தோன்றும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூத்து என்ற கிராமம் தான் இந்துவின் ஊர். அந்த ஊரிலே கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம் தான் இந்துவின் குடும்பம்.

இந்து திருநெல்வேலியில் இருந்த கலைக் கல்லூரியில் முதுகலை கடைசி வருடம் படிக்கிறாள். அவளது தம்பி கிரி இப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கிறான். இந்து மற்றும் கிரிக்கு அம்மா அப்பா கிடையாது. இவர்களுக்கு சொந்தம் என்று இருப்பது அவர்களது தாத்தா குணசேகரன் மட்டும் தான்.

மகனும் மருமகளும் ஒரு விபத்தில் இறந்ததும் அந்த பிஞ்சுகளுக்கு தாயுமானவனாக மாறி போனார் குணசேகரன். விவசாயம் செய்து அவர்களை படிக்க வைத்து ஆளாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த காலத்தில் கம்மங்கஞ்சி, கேப்பைகூழ் என சாப்பிட்ட உடம்பு என்பதால் இந்த காலத்திலும் உடல் தளராமல் அவரால் உழைக்க முடிந்தது.

ஆனாலும் அவரால் அவர்களை படிக்க வைத்து ஒரு சாதாரண வாழ்க்கையை தான் கொடுக்க முடிந்தது. பிள்ளைகளும் தாத்தாவுக்கு அதிகம் பாரம் வைக்க கூடாது என்று உணர்ந்தே அவருக்கு அதிகம் செலவு வைக்காமல் இருந்தனர். விடுமுறை நாட்களில் அவருக்கு உதவியாக வயலுக்குச் செல்வார்கள். வீட்டுக்குப் பின் இருந்த தோட்டத்தில் அவரை, கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், புடலை, பூசணி அனைத்து காய்கறிகளையும் பயிரிட்டு இருந்தனர்.

தாத்தா, பேரன், பேத்தி மூவரும் வசிக்கும் அழகான கூடு தான் அவர்கள் வீடு. மூவரும் மற்றவர் மேல் அதிக அன்பு வைத்திருந்தனர். இந்துவும் கிரியும் மற்ற உடன் பிறப்புகள் போல சண்டை எல்லாம் போட மாட்டார்கள்.

ஏனென்றால் கிரி இந்துவை அக்காவாக இல்லாமல் அன்னையாகத் தான் நினைத்தான். சிறு வயதில் இருந்தே அவள் என்ன சொன்னாலும் “சரிக்கா”, என்ற சொல்லுக்கு மறு சொல் சொல்ல மாட்டான்.

அவளும் அவனுக்கு நல்ல தோழியாக தான் இருந்தாள். பல முறை அவளிடம் தோழமையை விட தாயன்பு தான் அதிகம் வெளிப்படும். அவர்கள் இருவரின் ஒற்றுமையைக் கண்டு சந்தோசமாக இருக்கும் குணசேகரனுக்கு.

எப்போதுமே நீங்கள் இருவரும் இதே அன்போடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி அவர்களுக்கு அந்த எண்ணத்தை மனதுக்குள் விதைத்துக் கொண்டே இருந்தார் குணசேகரன்.

அனைத்தையும் யோசித்த படி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த இந்துவுக்கு மற்ற பெண்களை போல மனதில் சந்தோஷத்தை தவிர வேற எந்த எண்ணமும் இல்லை. அவள் தேவையில்லாமல் எதற்கும் ஆசைப் பட்டது இல்லை என்பதால் அவளுக்கு எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லை. அவள் மனது நிர்மலமாக இருந்தது.

அப்போது “இந்து குட்டி”, என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள். அங்கே குணசேகரன் தான் நின்றிருந்தார்.

“தாத்தா”, என்ற படி அவர் அருகில் வந்து நின்றாள். “பனில உக்காந்தா மேலுக்கு ஏதாவது வந்துரும் கண்ணு. உள்ள போ மா”, என்று சொன்னவரின் குரலில் பாசமே சொட்டியது.

“சரி தாத்தா உள்ளே போறேன், நீங்க வயலுக்கு கிளம்பிட்டீங்களா?”

“ஆமா மா, இப்ப போனா வெயிலுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துரலாம் பாரு. அதுக்கு அப்புறம் வெயில்ல நிக்க முடியுதா? வயசு ஆகிருச்சுள்ள? உச்சி வெயில் மண்டையைப் பிளக்குது. சீக்கிரம் கிறக்கிருது. உனக்கு இன்னைக்கு காலேஜ் உண்டு தானே?”

“ஆமா தாத்தா போகணும்”

“சரி சின்னவனை எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பிரு மா. அப்புறம் சமையல் கட்டுல ரொம்ப எல்லாம் கஷ்ட பட வேண்டாம். இன்னும் ஒரு வாரத்துல உனக்கு பரிச்சை வருது. அதனால நீ படிக்கிற வேலையைப் பாரு. பேருக்கு ஏதாவது செஞ்சு வச்சிட்டு போ. அது கூட வேண்டாம் நானே பாத்துக்குவேன்னு சொன்னாலும் நீ கேக்க மாட்டிக்க? நானே மதியம் ஏதாவது செஞ்சு கிரிக்கும் நானே மதியம் கொண்டு போய் கொடுத்துறேன் மா. நீ பைசா எடுத்துட்டு போய் காலேஜ்ல சாப்பிட்டுக்கோ கண்ணு. இப்ப எதுவும் செய்ய வேண்டாம். காலைலைக்கு நேத்து உள்ள பழைய சாதம் இருக்குள்ள? அதை சாப்பிட்டுக்கலாம்”

“நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம் தாத்தா. நேரம் தான் இன்னும் இருக்கே. ஏதாவது கலவை சாதம் செஞ்சு எடுத்துட்டு போக போறேன். இதுல என்ன கஷ்டம் இருக்கு. நீங்க உங்களுக்கு அது பிடிக்கலைன்னா குழம்பு மட்டும் வச்சிக்கோங்க. கிரிக்கும் நான் அதே கொடுத்துறேன்”

“சரி இந்து, அப்படின்னா எனக்கும் அதையே செஞ்சிரு மா. நான் போயிட்டு வரட்டுமா?”

“காபி குடிச்சிட்டீங்களா தாத்தா?”

“நீ கொடுத்ததுமே குடிச்சிட்டேன் டா. சரி பாத்து காலேஜ் போயிட்டு வா என்ன?”, என்று சொல்லி விட்டு தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையில் தலைப்பாகையாக கட்டியவர் வெளியே நடக்க ஆரம்பித்தார்.

உள்ளே சென்ற இந்து சோறு பொங்கும் பானையை அடுப்பில் வைத்து விட்டு அதன் பின் கிரியை எழுப்பி காபி கொடுத்து அவனை கொஞ்ச நேரம் படிக்க சொல்லி விட்டு மற்ற சமையலை ஆரம்பித்தாள்.

அதன் பின் கிரியும் குளித்து கிளம்பினான். அதன் பின் இருவரும் பேருக்கு காலை உணவை கொறித்து விட்டு வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினார்கள்.

கிரி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் தான் படிக்கிறான். அதனால் அக்காவுடன் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து வந்தவன் அவளுடைய தோழிகள் அங்கே வந்ததும் அவனுடைய பள்ளியைப் பார்த்து நடந்தான்.

தன்னுடைய கல்லூரிக்கு செல்லும் பஸ் வந்ததும் அதில் ஏறி அமர்ந்தாள் இந்து.

அதன் பின் ஒரு மாதம் இதே போல கடந்திருந்த நிலையில் இந்துவுக்கு கடைசி பரீட்சை எல்லாம் முடிந்திருந்தது. அதனால் வீட்டையே சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் ரெண்டு படுத்திக் கொண்டிருந்தாள். மற்ற நேரங்களில் குணசேகரனுடன் வயலுக்கும் செல்வாள்.

ஒரு நாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். அப்போது “இந்து”, என்று அழைத்தார் குணசேகரன்.

“என்ன தாத்தா?”

“மணி பதினொன்னு ஆகுது பார். சூரியன் மேல வந்துட்டான். இதுக்கு மேல நீ இங்க நிக்க வேண்டாம். கிரிக்கு சாப்பாடு கொடுக்கணும்ல? வீட்டுக்கு போய் தயார் செய்றியா?”

“நீங்களும் வாங்களேன் தாத்தா வீட்டுக்கு போகலாம். நீங்களும் ரொம்ப களைப்பா தெரியுறீங்க”

“நான் இந்த மடையை மட்டும் அடைச்சிட்டு வந்துருவேன் மா. ஒரு கால் மணி நேர வேலை தான்”

“கால் மணி நேரம்னு சொன்னா உங்க அகராதில ஒரு மணி நேரம் ஆகிருமே. சரி தாத்தா, நான் வீட்டுக்கு போறேன். நீங்க சீக்கிரம் வாங்க”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குச் சென்ற இந்து அதன் பின் சமைத்தாள். பின் கிரியுடைய பள்ளிக்கு சென்று அவனுக்கான உணவைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தாள். அப்போது வரை குணசேகரன் வீட்டுக்கு வர வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!