Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 5 3

“உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் கிரி. உன் அக்கா அப்படிங்குற இளிச்சவாய் இருக்குற வரைக்கும் உன் பாச்சா எல்லாம் என் கிட்ட செல்லாது”, என்று எண்ணிக் கொண்டவன் அப்போதே இந்துவைக் காணத் தான் நினைத்தான்.

ஆனால் மணி மாலை ஆறு ஆனதால் அந்த எண்ணத்தை கை விட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான். அவன் முகத்தை அஞ்சலி எதிர்பார்ப்புடன் பார்க்க “எதுக்கும் டென்ஷன் ஆகாத டா,. உனக்கும் கிரிக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது இந்த அண்ணன் பொறுப்பு. நான் மாப்பிள்ளையை பாக்க போனப்ப கிரி அங்க இல்லை. நாளைக்கு பாத்து பேசுறேன்”, என்று தங்கைக்கு ஆறுதல் கூறினான்.



Advertisement

என்ன தான் இன்பனிடம் திமிராக பேசி விட்டு வந்தாலும் அஞ்சலியை நினைத்து கிரிக்கு மனது கலங்கித் தான் போனது. தனக்காக உயிரையே விடத் துணியும் அளவுக்கான அவளுடைய காதல் அவனுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது., என்ன செய்து விட்டான் அவன் அவளுக்காக? எதனால் இவ்வளவு காதலை தன் மேல் வைத்தாள் என்று எண்ணியவனுக்கு பூரிப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. அதே நேரம் அதை அடைய முடியாத படி செய்த விதியை எண்ணி கோவமும் எழுந்தது.

அதற்கு மேல் வேலை ஓடாமல் வீட்டுக்கு சென்று விட்டான். அவன் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்த இந்து “என்ன டா ஒரு மாதிரி இருக்க? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்க “ஒண்ணும் இல்லை அக்கா. கொஞ்சம் தலை வலி”, என்று சொல்லி சமாளித்தானே தவிர வேறு எந்த உண்மையும் சொல்ல வில்லை. அவன் உண்மையைச் சொன்னால் கண்டிப்பாக அவளும் வருத்தப் படுவாள் என்பதால் தான் அஞ்சலியைப் பற்றி மறைத்தான்.

Advertisement

Advertisement

அடுத்த நாள் காலையில் கிரி வேலைக்கு கிளம்பிச் செல்ல தாத்தாவை சாப்பிட வைத்து விட்டு இந்துவும் வேலைக்கு கிளம்பினாள்.

அவள் எப்போது வீட்டை விட்டுக் கிளம்புவாள் என்று கண் கொத்தி பாம்பு போல கவனித்துக் கொண்டிருந்த இன்பனுக்கு அவள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் உற்சாகமாய் இருந்தது. “வா அடிமையே வா”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

Advertisement

“நான் அவங்க வீட்ல போய் சம்பந்தம் பேசுறேன் மா. அவங்க வீடு எங்க இருக்கு?”, என்று அஞ்சலியிடம் கேட்டு இந்துவின் அட்ரஸ் வாங்கியிருந்தான் இன்பன்.

அவள் பஸ் ஸ்டாண்ட்க்கு நடந்து சென்று கொண்டிருக்க அவளை காரில் நெருங்கினான் இன்பன். தன்னருகே ஒரு கார் வந்து நிற்கவும் அதை நிமிர்ந்து பார்த்தாள் இந்து.

“ஹாய்”, என்று புன்னகையுடன் காரில் இருந்து இறங்கினான் இன்பன். அவனை சத்தியமாக இந்து எதிர் பார்க்கவே இல்லை. அவனைக் கண்டதும் உடல் எல்லாம் மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது இந்துவுக்கு,. அவள் முகம் எல்லாம் கோபத்தில் தக்காளி போல சிவந்து விட்டது. (https://prodavinci.com)

அவளையே பார்த்துக் கொண்டு நின்ற இன்பனுக்கும் திகைப்பு தான் ஏனென்றால் இந்து அவ்வளவு அழகாக இருந்தாள். இருபத்தி ஒரு வயதில் சிறு பெண் போல இருந்தவள் இப்போது இன்னும் கொஞ்சம் உடல் எடை கூடி அழகான மங்கையாக இருந்தாள். அவள் அணிந்திருந்த காட்டன் சேலை அவளின் அழகை மேலும் உயர்த்திக் காட்டியது.

“இவ என்ன இவ்வளவு அழகா இருக்கா. அப்ப எல்லாம் இப்படி தெரியலையே”, என்று எண்ணினான் இன்பன். “நீ எதுக்கு வந்த? ஆனா இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?”, என்று மனசாட்சி அவனிடம் கேலியாக குரல் கொடுக்க அடுத்த நொடி அவளிடம் இருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவளோ அவனை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்து விட்டு அவனைச் சுற்றிக் கொண்டு அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.

அவள் அங்கிருந்து செல்லப் போவதைக் கண்ட இன்பன் “என்ன மேடம் பாத்துட்டு கண்டுக்காம போறீங்க? நம்ம சந்திச்சது எல்லாம் மறந்து போச்சா?”, என்று நக்கலாக கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டதும் எரிச்சல் அடைந்த இந்து “துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு சொல்லுவாங்க. அதான் விலகி போயிட்டு இருக்கேன்”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டு அங்கிருந்து நகன்றாள்.

அதில் அவன் முகம் கருத்தது. “என்ன மாற்றம் வந்தாலும் இவ திமிர் மட்டும் அடங்கவே அடங்காது போல? இவ தம்பியையும் இப்படியே திமிரா மாத்தி வச்சிருக்கா”, என்று எண்ணிக் கொண்டு “ஏய் நில்லு, உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான்.

படக்கென்று திரும்பியவள் “இந்த ஏய் ஓய் ன்னு பேசுற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத சொல்லிட்டேன்”, என்று கத்தினாள்.

“இப்ப எதுக்கு கத்துற? உன் கிட்ட கொஞ்சம் பேசணும்னு தானே சொன்னேன்?”

“நமக்குள்ள பேச என்ன இருக்கு?”

“கிரி அஞ்சலி பத்தி பேசணும்”

“இதுல பேச என்ன இருக்கு”

“அவங்க கல்யாணம் நடக்கணும். இல்லைன்னா அஞ்சலி இருக்க மாட்டா”

“அஞ்சலி பாவம் தான். ஆனா என்ன பண்ண அவ உன்னோட தங்கையாச்சே?”

“முதல்ல கார்ல ஏறு. வேற எங்கயாவது பேசலாம். ரோட்ல நின்னு பேசினா எல்லாரும் நம்மளையே தான் பாப்பாங்க”

அது அவளுக்கும் புரிந்தாலும் தனியே அமர்ந்து அவனிடம் பேச எல்லாம் அவளுக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்லை. அதனால் “பேசவே ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன். நீ என்னடான்னா வேற எங்கயாவது போய் பேசலாம்னு சொல்ற?”, என்று கேட்டாள்.

“ஓஹோ அப்ப என் கிட்ட பேச மாட்ட அப்படித் தானே?”

“ஆமா”

“சரி போ உன்னை எப்படி என் கிட்ட பேச வைக்கணும்னு எனக்கு தெரியும்?”

“எப்படி அன்னைக்கு என்னைக் கடத்தின மாதிரி இப்பவும் ஆள் வச்சு கடத்தப் போறியா?”

“சே சே அப்படி எல்லாம் இல்லை. இப்ப நேர கமிஷ்னர் ஆஃபிஸ்க்கு போய் உன் தம்பி மேல கேஸ் கொடுக்க போறேன்”

“என்ன மிரட்டுறியா? கிரி மேல எப்படி கேஸ் கொடுக்க முடியும்? அவன் என்ன பண்ணினான்?”

“என் தங்கச்சி தற்கொலைக்கு காரணமான உன் தம்பி மேல கேஸ் கொடுக்காம எப்படி இருக்க முடியும்?”

“என்னது அஞ்சலி தற்கொலை செஞ்சிக்கிட்டாளா? அவளுக்கு என்ன ஆச்சு?”, என்று பதறிய படியே கேட்டாள். அந்த பதட்டமே அவர்களுக்கு அஞ்சலியைப் பிடித்திருக்கிறது என்று அவனுக்கு புரிய வைத்தது. இந்த வீட்டில் அஞ்சலியைக் கொடுத்தால் அவள் சந்தோசமாக இருப்பாள் என்றும் அவனுக்குப் புரிந்தது.

“அவளுக்கு இப்ப ஒண்ணும் இல்லை. கஷ்டப் பட்டு காப்பாத்திட்டோம். ஆனா அவ உன் தம்பி கிடைக்கலைன்னா திருப்பியும் இதை தான் செய்வா”

அஞ்சலிக்கு ஒன்றும் இல்லை என்றதும் நிம்மதியானவள் “நான் அப்பவே சொல்லிட்டேனே? உன் தங்கையா பிறந்ததுக்கு தான் பாவம் அவளுக்கு இந்த தண்டனை”, என்றாள்.

“நீ நினைச்சா இதை சரி செய்ய முடியும். நேத்து நான் கிரி கிட்ட பேசினேன். அவன் முடியாதுன்னு சொல்லிட்டான். நீ தான் அவனை சம்மதிக்க வைக்கணும்”

“ஓஹோ நீ அவனைப் போய் பாத்து பேசினதுல தான் அவன் தலை வலில வீட்டுக்கு வந்தானா? இப்ப எனக்கும் தலை வலிக்குது உன்னால. அப்புறம் நான் எதுக்கு அவன் கிட்ட பேசணும்? கிரி அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லாதப்ப அவனை எப்படி நான் சம்மதிக்க வைப்பேன்”

“நீ தான் அவனை சம்மதிக்க வைக்கணும். வச்சே ஆகணும். வைக்க வைப்பேன்”, என்று தீவிரமாக ஒலித்தது இன்பனின் குரல்.

“நீ மிரட்டினா நான் பயந்துருவேனா?”

“ஹலோ மேடம் நான் மிரட்டி நீ பயந்தது எல்லாம் ஏற்கனவே நடந்திருக்கு. அதை மறந்துற வேண்டாம். நிஜமா இப்பவும் உன்னை மிரட்ட தான் வந்துருக்கேன். ஏன்னா எனக்கு என் தங்கை வாழ்க்கை ரொம்ப முக்கியம்”

“அதுக்கு?”

“நீ உன் தம்பியை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்”

“வைக்கலைன்னா?”

“உன் தம்பி நாளைக்கு இந்த உலகத்துல இருக்க மாட்டான்”

“இன்பன்”, என்று அதிர்ந்து போய் கத்தினாள்.

“நான் உண்மையை தான் சொல்றேன். இன்னைக்கு சாயங்காலம் அவன் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும் போதே அவனுக்கு ஆக்ஸிடெண்ட் நடக்கும்”, என்று அவன் சொன்னதும் அவள் நடுங்கிப் போனாள்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!