Skip to content
Post Views: 5,400
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 5
அன்று காலையிலேயே அன்பரசுவின் தனித் தொலைபேசி அழைத்தது. அன்றைய நாளிதழை படித்துக் கொண்டு இருந்தவர், எழுந்து சென்று தொலைபேசியை எடுத்தார்.
“ஹலோ…”
Advertisement
“என்ன அன்பரசு நல்லா இருக்கீங்களா?”
தன்னை யார் பேர் சொல்லி அழைப்பது என யோசிக்கும்
போதே, “என்ன யாருன்னு தெரியலையா? ASP. நந்தகுமார் பேசுறேன்.” அவன் பேரைக் கேட்டதும், அன்பரசுவின் முகம் கடுத்தது.
“என்னை அடிக்க எல்லாம் ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் நல்ல ஆளா ஏற்பாடு பண்ணி இருக்கலாம். இப்ப பாருங்க மாட்டிகிட்டாங்க.” என நந்தகுமார் சொல்ல, கேட்ட அன்பரசு பதட்டம் கொண்டார்.
Advertisement
“அடுத்தத் தடவையாவது நல்ல ஆளா ஏற்பாடு பண்ணுங்க.” என யோசனை சொல்லிவிட்டு, அவன் போன்னை வைத்து விட, அதிர்ச்சி விலகாத அன்பரசு தொலைபேசியைக் காதிலேயே இன்னமும் வைத்திருந்தார்.
Advertisement
சிறிது நேரம் சென்றே அதை உணர்ந்தவர், போன்னை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார்.
“கிருஷ்ணா, வாசு…” என அவர் கத்தி அழைக்க…. ஆளுக்கொரு பக்கம் இருந்த இரு மகன்களும் அடித்துபிடித்து ஓடி வந்து அவர் முன் நின்றனர்.
“நாம அனுப்பின ஆளுங்க மாட்டிகிட்டாங்க.”
Advertisement
“ஓ…” என அலட்சியமாகக் கிருஷ்ணன் சொல்ல…
“அனுப்பினது நாமதான்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.” என்றார் அன்பரசு. இப்போது கிருஷ்ணனின் முகம் மாறியது.
“எப்படிப்பா? அவங்களுக்கே நாம தான் அனுப்பினதுன்னு தெரியாதே… அப்புறம் எப்படி நம்மைச் சொல்லி இருக்க முடியும்?”
“எனக்கும் அதுதான் தெரியலை…. ஆனா அந்த ASP எனக்கே போன் பண்ணி சொல்றான்?”
“இதுக்கு ஏன் பா கவலைப்படுறீங்க? அவனால நம்மை என்ன செய்ய முடியும்.”
“அவன் நினைக்கிறது செய்ய முடியும். அதுவும் இப்பதான் எலெக்ஷன் முடிஞ்சது. நம்ம தயவு இப்ப அரசியல்வாதிகளுக்கும் தேவை இல்லை… இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுதான் நம்மைப் பத்தி யோசிப்பாங்க.”
“இதுக்குத்தான் நீங்களே தேர்தல்ல நில்லுங்கன்னு நான் சொல்றேன்.”
“அதைபத்தி அப்புறம் யோசிக்கலாம். முதல்ல இது என்னன்னு பார்க்கணும். அங்க இருக்கிற நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி என்ன ஏதுன்னு பார்க்க சொல்லு.”
“சரிங்கப்பா.”
“அவன் பார்வை நம்ம மேலதான் இருக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு எதுவும் வேண்டாம்.”
“சரிங்கப்பா…”
இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், அன்பரசு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தார். ஒரு வாரம் அமைதியாகச் சென்றது. அவருக்கு இன்னும் நந்தகுமாருக்கு எப்படி அந்த விஷயம் தெரியும் எனப் புரியவில்லை.
வீட்டு வேலைகளில் எப்போதும் பங்கெடுக்காத கீதா, அன்று அவள் தம்பி விக்னேஷ் வந்திருந்ததால், அவனுக்கு உணவை தானே பரிமாறிக்கொண்டு இருந்தாள்.
அப்போது கயல்விழி சமையல் அறையில் இருந்து வந்தவள், தனது அறைக்குள் சென்றாள். வழியில் இருந்த உணவு மேஜையில்தான் விக்னேஷ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் அவள் அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
அவளை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் தனது அக்காவிடம் மெதுவான குரலில் பேசினான்.
“நீயும் அப்பாவும், இதை ஏன் என் தலையில கட்டணும்னு பார்க்குறீங்களோ தெரியலை?”
“டேய் வீணா வர்ற அதிர்ஷ்டத்தை வேண்டாம்ன்னு சொல்லாத.”
“எச்சில் இலையில சாப்பிடுறது அதிர்ஷ்ட்டமா?”
“நான்தான் சொன்னேன் இல்ல... அன்னைக்குச் சாயங்காலம்தான் ஒரு கோவில்ல கல்யாணம் நடந்தது. அன்னைக்கு ராத்திரியே மாட்டிகிட்டா…. எதுவும் நடக்கலை.”
“அதுவும் இல்லாம அப்படி எதாவது நடந்திருந்தா… அங்கயே அவளையும் அவங்க அண்ணன் வெட்டியிருப்பார்.”
தனது சகோதரி எத்தனை சமாதானம் சொல்லியும், விக்னேஷின் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை அவனது முகமும் காட்டிக்கொடுத்தது.
“உனக்கு இவளோட சேர்த்து எவ்வளவு சொத்து வரும் தெரியுமா? இந்த வீடும் நம்ம அதிகாரத்துக்கு வரும். என் மாமனார் இருக்கிற வரை, இவளை அங்க வச்சுக்கோ. அதுக்குப் பிறகு அவளை இங்க துரத்தி விட்டுடு. நான் என் வீட்டுக்கு வேலைக்காரியா வச்சுகிறேன்.”
கீதா மனதில் இருந்த குரோதம் வார்த்தையாக வெளிவந்தது. அவளுக்கு எப்போதுமே கயல்விழியின் அழகில் பொறாமை உண்டு. அவர்கள் இருவரும் பேசியதை அன்பரசுவின் அறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்த பத்மாவின் காதுகளில் நன்றாக விழுந்தது.
மகள் இருந்த அறைக்குள் வந்து கதவை சாற்றிய பத்மா, “உனக்கு ஏன் டி புத்தி இப்படிப் போச்சு? இன்னைக்குப் பாரு கண்டவனுக்கு எல்லம் உன்னைக் கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய நிலை.”
“உன் அண்ணிக்காரி என்ன பேச்சு பேசுறா? எங்களுக்குப் பிறகு உன் நிலைமை என்ன ஆகுமோ தெரியலையே. பொம்பளை பிள்ளை வேணும்னு எவ்வளவு ஆசையா உன்னைப் பெத்து, செல்லமா வளர்த்தேன். இப்படிப் பண்ணிட்டியே.” எனக் கண்ணீர் விட, கயல்விழியும் மெளனமாகக் கண்ணீர் சிந்தினாள்.
அன்று கோவிலுக்குக் கிளம்பும் போது எப்போதும் துணைக்கு வருபவர் உடல்நலக் குறைவால் வேலைக்கு வரவில்லை. அன்பரசு விக்னேஷை துணைக்கு அனுப்பி வைத்தார்.
அவனுக்கு இஷ்ட்டம் இல்லையென்றாலும் வேறுவழியில்லாமல் உடன்சென்றான். காரை வாயிலில் விட்டுவிட்டு உள்ளே செல்லும் போது, பத்மா முன்னே செல்ல… கயல்விழியின் அருகே நடந்து வந்த விக்னேஷ், அவளைக் கடுமையாக வார்த்தைகளால் வதைத்தான்.
“பார்க்க ஊமைகோட்டான் மாதிரி இருந்திட்டு என்னென்ன வேலை பண்ணி இருக்க.”
“உண்மையா சொல்லு, அன்னைக்குக் கல்யாணம் மட்டும்தான் நடந்துதா, வேற எதுவும் நடக்கலை?”
“நான் எப்படியும் உன்னை லேடி டாக்டர்கிட்ட கூடிட்டு போய் டெஸ்ட் பண்ணுவேன். அப்ப எப்படியும் உண்மை தெரிஞ்சிடும்.”
விக்னேஷின் பேச்சு எல்லை மீறி செல்ல, கயல்விழி நின்று அவனை முறைத்தாள். அவளது பெரிய விழியால் அவள் முறைத்துப் பார்த்தது, அவனுக்குக் கொஞ்சம் நடுக்கத்தையே கொடுத்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “என்ன முறைக்கிற?” என அவன் கையை ஓங்க… இதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமாருக்குக் கோபம் வந்தது.
கயல்விழி அந்த இடம் விட்டு விரைந்து சென்றாள். தன் கண்கள் கலங்கியது தெரியாதபடி, அவள் தலை குனிந்து செல்ல, அதனால் அங்கே நின்ற நந்தாவை அவள் கவனிக்கவில்லை.
நந்தாவுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாத குழப்பம். உரிமையாகக் கையை ஓங்குகிறான், யாராக இருக்கும் என யோசித்தபடி நின்றான்.
ஏற்கனவே அவனைப் பத்மா இவன் ஏன் அடிக்கடி இங்கு வருகிறான் என்பது போல் பார்த்து இருந்தார். அதனால் கோவிலுக்குள் செல்லாமல் வெளியவே நின்று இருந்தான்.
மூவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வர… அப்போது பைக்கில் இருவர் கோவிலுக்குள் நுழைந்தனர். வந்ததும் அவர்கள் விக்னேஷை சரமாரியாகத் தாக்க… நந்தா அருகில் செல்வதற்குள் அவர்கள் அவனை நன்றாகச் சாத்தி இருந்தனர்.
“நீ இவளை கல்யாணம் கட்டுவியாடா?” எனக் கேட்டே அவர்கள் அடிக்க… நந்தா வந்து அவர்களைத் தடுக்க…. ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என்று விக்னேஷ் அங்கிருந்த காரில் ஏறி ஓடி இருந்தான்.
“நீங்க யாரு?” நந்தா அதட்டலாகக் கேட்க…. அதுவரை அதிர்ச்சியில் தன் அம்மாவின் பின்னே ஒண்டி இருந்த கயல்விழி தலையைத் தூக்கி பார்த்தாள்.
அவர்கள் இருவரும் அவ்வளவு ஆக்ரோஷமாக நின்று இருந்தார்கள்.
“உன்னைக் கொல்ணும் டி. உன்னாலதான் அவன் செத்தான், ஆனா நீ சந்தோஷமா இன்னொரு கல்யாணம் கட்டிக்கப் போறியோ?” என இருவரில் ஒருவர் கேட்க….
“என்ன என்னால செத்தான்? நீ வரலைனா செத்துடுவேன்னு மிரட்டி என்னை வர வச்சான். அவன் செத்துட கூடாதுன்னுதான் நான் போனேன், அப்பவும் செத்துட்டான். என்னை என்ன பண்ண சொல்ற?”
“வேணா என்னையும் கொல்லு. தினமும் செத்து செத்து பிழைக்கிறதுக்கு, இன்னைக்கே செத்து போறேன்.” அவர்களையும் விட ஆக்ரோஷமாக முன்னால் வந்து கயல்விழி பேச…. இப்போது அனைவருமே திகைத்து போய் நின்றனர்.
ஏற்கனவே பாண்டியின் சாவிற்குத் தான் காரணம் என்று மன உளைச்சலில் இருந்தவள், அதையே மற்றவனும் சொல்ல… அதைக் கேட்க பொறுக்காமல் தான் தன்னையும் மீறி பேசினாள்.
“இல்லை உனக்கே தெரியும். பாண்டி அவன் அப்பா அம்மாவுக்கு ஒரே பையன். இப்ப அவனும் இல்லாம, அவங்க சாப்பாடுக்கு கூடக் கஷ்ட்டபடுறாங்க. அந்த ஆத்திரத்திலதான் பேசிட்டோம். சரி நாங்க வரோம்.” என அவர்கள் சோர்வாகத் திரும்பி சென்றனர்.
“ஒரு நிமிஷம் இருங்க.” என அவர்களை அழைத்த கயல்விழி, தன் கைகளில் இருந்த தங்க வளையல்களையும், கழுத்தில் இருந்த செயினையும் கழட்டிக் கொடுத்தாள்.
“இதை அவங்க அப்பா அம்மாகிட்ட கொடுத்திடுங்க.”
கயல்விழி நகையைக் கொடுக்க…. பாண்டியின் நண்பர்கள் வாங்க தயங்கினர்.
“நீ நகையைப் போடு…” என நந்தா வாய்திறக்க, கயல்விழி அசையாமல் நின்றாள்.
“இந்த நகையால அவங்களுக்குப் பிரச்சனைதான் வரும். நான் பார்த்துகிறேன். என்னை நம்பு.” நந்தா அழுத்தி சொல்ல, கயல்விழி தனது நகைகளைத் திரும்ப அணிந்து கொண்டாள்.
“இந்நேரம் விஷயம் இவங்க அப்பா காதுக்குப் போயிருக்கும். இன்னைக்கு நைட் வெளிய தங்கிட்டு, நாளைக்கு என்னைப் பார்க்க வாங்க.” எனத் தனது கார்டை எடுத்து நந்தா கொடுக்க,
அப்போதுதான் அவர்கள் இருவருக்கும் அவன் காவல்துறையில் உயர் அதிகாரி எனத் தெரிந்தது. கண்களில் பயம் வர அவனை மிரண்டு போய்ப் பார்த்தனர்.
“ஒன்னும் பயப்பட வேண்டாம். நாளைக்கு வந்து என்னைப் பாருங்க. பாண்டி அப்பா அம்மாவுக்கு எதாவது செய்யலாம்.” என அவன் மென்மையாகச் சொல்ல, சரி என்பதாகத் தலையசைத்த இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
“உங்களை நான் வீட்ல விடுறேன்.” என்ற நந்தா, அவன் வந்த காரை எடுக்கச் செல்ல, பத்மா கயல்விழியை அழைத்துக் கொண்டு சென்றார்.
அதுவரை அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்த பூசாரி “பிள்ளை பத்திரம் மா. அய்யாவுக்குக் கவுரவம்தான் முக்கியமா நினைப்பாங்க.” என்றார்.
பத்மாவுக்கும் அதே எண்ணம்தான் காரில் ஏறிய பின்னர் பயத்தில் அவர் அழுது கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சு?” நந்தா கேட்க,
“இவளை எதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு.” அவர் மறைக்காமல் சொல்ல, நந்தா என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
“பரவாயில்லை விடுங்கம்மா. என்னைக்கா இருந்தாலும் சாகதான போறோன். அது இன்னைக்கே இருந்தா என்ன? ஆனா வலிக்காம கொல்ல சொல்லுங்க.” என்றவள்,
தன் அம்மாவின் தோல் சாய்ந்து, “இன்னைக்கு எனக்குப் பிடிச்ச காரக்குழம்பு பண்ணி தரீங்களா…”
இன்றோடு நம் கதை முடிந்தது என்ற முடிவுக்கே அவள் வந்துவிட, அதை கேட்கும் போதே…. பத்மா கதறி அழ தொடங்கிவிட்டார் என்றால், நந்தாவுக்கு ஒரு நொடி இதயமே குலுங்கி விட, காரை நிறுத்தியே இருந்தான்.
“கொஞ்சம் வாயை மூடுறியா நீ.” என அவன் போட்ட அதட்டலில் கயல்விழி மிரண்டு போய் விட்டாள்.
அவளின் பயந்த முகத்தைப் பார்த்தவன், “பாரு உன் அம்மா எப்படி அழறாங்கன்னு, இப்படித்தான் பேசுவியா?” என அவன் தன்மையாகவே கேட்க,
“எனக்கு மட்டும் சாக ஆசையா?” கேட்கும் போதே, அழுகையில் அவள் குரல் உடைந்தது. முகத்தைத் தன் அம்மாவின் தோளில் மறைத்தவள், அதன்பிறகு தலையை நிமிர்த்தவே இல்லை.
அங்கே இவர்கள் ஊகித்தது போலவே நிலைமை இருந்தது. விக்னேஷ் வீட்டிற்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாக வத்தி வைத்திருந்தான்.
“ஒரு சின்ன ஜாதிக்காரன் நம்ம மேல கையை வைக்கிறதா? அவனுங்க கையைக் காலை வெட்டனும்.” கிருஷ்ணன் குதிக்க…
“இதெல்லாம் யாரால? உங்க தங்கச்சியால். அன்னைக்கே நீங்க அவளையும் கொன்னு இருக்கணும்.” எனக் கீதா வேறு ஏற்றிவிட
“இன்னைக்கு அவ வரட்டும்.” என்றான் வாசு அவன் பங்குக்கு.
“முதல்ல போய் உங்க அம்மாவையும் தங்கச்சியையும் வீட்டுக்கு கூடிட்டு வாங்க. பிறகு பேசிப்போம்.” என அன்பரசு மகன்களை அனுப்பி வைத்தார்.
தன் தம்பியை தனியாக அழைத்துச் சென்ற கீதா, “நீ அவளைக் கல்யாணம் பண்ணிப்பியா?” எனக் கேட்க,
“உனக்கு என்ன பைத்தியமா? இதுக்கு மேல நான் அவளைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறியா?” என அவன் பதிலுக்குக் கேட்க,
“அப்ப அவ கதை இன்னையோட முடிஞ்சது.” என்ற கீதா, அன்பரசுவிடம் வந்து, தன் தம்பி கயல்விழியைத் திருமணம் செய்ய மாட்டான் எனவும் திமிராகச் சொன்னாள்.
என்ன செய்வது என அன்பரசு யோசித்துக் கொண்டிருக்க… அங்கே நந்தகுமாரும் கயல்விழியை இப்படியே எங்காவது கடத்தி விடுவோமா என யோசித்துக் கொண்டு இருந்தான்.
error: Content is protected !!