Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடம்பன் குன்று

கடம்பன் குன்று – 1

இது கற்பனைக்கதையே என்ற போதும், இங்கே சொல்லப்பட்டிருக்கும் முருகர் பற்றிய குறிப்புகளும், நவபாஷாணங்கள் பற்றிய அறிவியல் செய்திகளும் உண்மையே.

 

கடம்பன் குன்று

 



Advertisement

பகுதி – 1

 

“பாங்கான பாடாணம் ஒன்பதினும்

Advertisement

பரிவான விபரம்தான் சொல்லக் கேளு

Advertisement

கௌரி, கெந்திச்சீலைமால் தேவி கொடு

வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு

சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி

Advertisement

நலமான மனோம்மணி கடாட்சதாலே

நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு” – போகர் 7000

 

 

கி.மு 8 ஆம் நூற்றாண்டு

மஞ்சள் நிறத்தில் சிறிய வட்ட வடிவிலான மலர்கள் அந்த வனமெங்கும் பூத்திருந்தன. கதிரவன் ஒளிகள் அந்த இலைகளைத் தாண்டி உள்ளே வருவதற்கில்லை. அத்தனை அடர்த்தியான பசுமை போர்த்திய இலைகள். இந்த கடம்ப மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகளின் காரணமாகவே இந்தக் காடு, அங்கு வாழ்ந்த மக்களால் “கடம்பவனம்” என்று பெயர் பெற்றது. மலரின் மெல்லிய நறுமணத்தில் மயங்கிய இளம் வண்ணத்துப் பூச்சிகளும் தேனீக்களும் ரீங்காரமிட்டபடிக்கு அந்த பரந்த காட்டில் கட்டிப்பாடுகளின்றி சுற்றிவந்தன.

மரத்தில் குடியிருக்கும் தேன்சிட்டுப் பறவைகளும் குயில்களும் கூட, வண்ணத்துப் பூச்சிகளுக்கு இணையாக போட்டியிட்டு சுற்றிய அந்த கடம்பவனத்தின் ஒரு குளுமையான சிறு பாறையின் மீது கண்களை மூடி அந்த நிஷ்டையில் அமர்ந்திருந்தார் அவர். அவரிடமிருந்து எழுந்த மூலிகை வாசனையும், உடலில் ஒளிர்விட்ட பிரகாசமும், முக்காலமும் உணர்ந்திருந்த ஞானத்தின் செரிவும், இதழில் கொண்டிருந்த புன்சிரிப்பும், தேஜஸ்சும் அவரை சித்த புருஷர் என்று நிமிடத்தில் காட்டிக் கொடுத்துவிடும்.

18 சித்தர்களுள் ஒருவரானவரும், காளாங்கி நாதரின் சீடருமான போகர் கண்கள் மூடி நிஷ்டையில் இருந்தார். ஆழ்ந்த தியானத்தில் மூச்சடக்கி அமர்ந்திருந்தவரைச் சுற்றி கரையான்கள் புத்து கட்டத் துவங்கியிருந்தன.

தன் குரு நாதரிடம் சில செய்திகள் செல்வதற்காகவும், தன் மனதில் எழுந்திருந்த ஐயங்களைக் களையவும் வேண்டி, போகர் கண்விழிக்கும் தருணத்தை எதிர்நோக்கி சற்றே தூரத்தில் நின்றிருந்தார் மற்றொரு சித்தர். காத்திருந்தவரின் காலடியில் நாய்குட்டியைப் போல் படுத்திருந்தது அந்தப் புலி.

புலியும் கூட தன் எஜமானனின் குருநாதர் கண்விழிக்கக் காத்திருந்தது போல் கண்மூடி அமர்ந்திருந்த சித்த புருஷரை கண்கொட்டாமல் பார்த்தவண்ணம் இருந்தது. சித்தபுருஷரின் தியானம் கலையாத வகையில் காற்றும் சப்தமில்லாமல் ஒலித்தது.

தனக்காக காத்திருந்த சீடரின் வருகையை அகக்கண்களால் கண்டு கொண்ட சித்தபுருஷர் போகர், “சொல் புலிப்பாணி!” என்று கண் திறவாமலேயே மொழிந்தார்.

சட்டென தன் பெயர் சொல்லி அழைப்பட, திடுக்கிடலுடன் திகைத்த புலிப்பாணி என்று அழைக்கப்பட்ட சீடர், தன் குருவின் குரல் கேட்டு நெடுஞ்சானாக தரையில் விழுந்து வணங்கினார்.

பின், “தங்களின் அறிவுரைப் படி கலக்கப்பட்ட ஒளஷதங்கள், புடம் போட தயார் நிலையில் உள்ளன குருவே,” என்று மெல்லிய குரலில் மொழிந்தார். ஆனால் உண்மையில் புலிப்பாணியாரின் மனதில் தோன்றியிருந்த ஐயத்தை வெளிப்படையாகத் தன் குருவிடம் கேட்டுவிட அவர் மனம் துணியவில்லை. அதனால் முதலி நடந்து கொண்டிருக்கும் செயல்களை போகரிடம் சொல்லிவிடுவது என்று நினைத்தார்.

“81 சித்த புருஷர்களுக்கும் புடம் போடுவதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்கப் பெற்றுவிட்டனவா புலிப்பாணி?”

“கிட்டிற்று குருவே”

“ஆகட்டும். கெந்தக பாஷாணத்தை குக்குடப் புடமும் (8 முதல் 10 வறட்டிகள்), கச்சால பாஷாணத்தை கன புடமும் (500 அல்லது 1000) போட வேண்டும் புலிப்பாணி. செய்துவிடு.” என்று சொல்லிய சித்தபுருஷர் திரும்ப நிஷ்டையில் அமிழத் துவங்க, புலிப்பாணி சித்தர் சற்றே தயக்கத்துடன் நின்றிருந்தார்.

“குருவே” என்று தயக்கத்துடன் புலிப்பாணி சித்தர் மெல்லிய குரல் எழுப்ப, கண்களைத் திறந்து தன் முதன்மைச் சீடரை ஏறிட்டார் போகர்.

“கால பைரவர் சிலை செய்த பொழுது புடம் போடுவதில் கவனப்பிசகு நேர்ந்ததன் பொருட்டே நவபாஷண காலபைரவர் சிலையானது, தன்னுள்ளே பாஷாணத்தை தக்கவைக்க இயலாது போய் நீலிவிஷத்தை வெளியிட்டது.” என்று அச்சர் கலந்த குரலில், முன்னர் நேர்ந்த பிழையை நினைத்து வருந்தியபடிக்கே மொழிந்தார் புலிப்பாணி.

“சென்ற முறை நடந்த கவனப்பிசகு நினைவு இருத்தல் நலமே புலிப்பாணி.” என்ற போகரின் குரலில் மெல்லிய சிரிப்பொலி ஊடுருவியது. தன் முதன்மை சீடனான புலிப்பாணியின் கவலையை உணர்ந்திருந்த போகர், தன் சீடனின் ரசவாதத் திறமைக்கு சவால் விடுவது போல அடுத்த கேள்விகளை வினவினார்.

“இம்முறையும் பாஷணங்கள் செய்முறையில் ஏதேணும் சந்தேகம் தோன்றியுள்ளதா புலிப்பாணி?”

“81 சித்தர்களையும், 9 குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பாஷணம் என்ற விதத்தில் கௌரிப் பாஷாணம், கெந்தகப் பாஷாணம், சீலைப் பாஷாணம், வீரப் பாஷாணம், கச்சாலப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், சூதப் பாஷாணம், சங்குப் பாஷாணம் என நவபாஷாணங்களையும் குழுவிற்கு ஒன்று என்ற வீதம் பிரித்தளித்து தயாரிக்கும் படிக்கு பணிந்துள்ளீர்களே ஸ்வாமி”

“செய்முறையில் ஏதேணும் பிரச்சனைகள் தோன்றியனவா?”

“சந்தேகங்களுக்கு இடமில்லாமல் தாங்கள் விளக்கமளித்து விட்டபடியால் எந்த பின்னடைவும் தற்போதைக்கு ஏற்படவில்லை குருவே.”

“பின் உன் மனதில் ஏற்படும் இந்த சஞ்சலத்திற்கு என்ன காரணம் என்று நீயே தெரிவித்துவிடுதல் நலம் புலிப்பாணி” என்று தன் சீடரின் மனக்கவலையை உணர்ந்த போகர் வினவினார்.

“குருவே, பாஷாணங்களை அரைத்து, வேகவைத்து, எரித்து நுண்ணிய அணுக்களாகப் பிரித்து புடமிடப்பட வேண்டும். சென்ற முறை நடந்த கவனப்பிசகு, இம்முறை நடவாமல் இருக்க, தாங்கள் நேரே ஒரு தரம் பார்த்துவிடுதல் நலம் என்று மற்ற சித்தபுருஷர்கள் எண்ணுகிறார்கள்”

“யார், உன் மேற்பார்வையின் கீழ் பாஷாணங்களைக் கட்டும் மற்ற 81 பேரும் எதிர்பார்க்கிறார்களா?” என்ற போகரின் கேள்வியால் சஞ்சலப்பட்ட புலிப்பாணி, பதில் சொல்லத் தெரியாமல் தன் குருநாதரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“இன்று முழு பெளர்ணமி நாளல்லவா, மூலிகை கொண்டு வரும் பொருட்டு நீ செல்லவில்லையா? கில்லாச்சி மரங்களில் இருந்து விதைகள் விழும் சமயமாயிற்றே இது” என் வானில் நடுஉச்சிக்கு வந்திருந்த நிலவினைப் பார்த்துக் கொண்டே மொழிந்தார் போகர்.

“குருவே! நான்..” என்று தயங்கிய புலிப்பாணியார், மேற்கொண்டு தன் குருவிடம் வாதம் செய்ய இயலாதவராக, “ நான் உத்தரவு பெறுகிறேன் குருவே” என்று திரும்ப நிலம் நோக்கிக் குனிந்து நமஸ்கரித்தார். தன் எஜமானர் நமஸ்கரிப்பதைப் போலவே அவர் காலடியில் அமர்ந்திருந்த புலியும், போகரை நோக்கி மண்டியிட்டு நிலத்தில் தலை வைத்து தன் வணக்கத்தை சமர்ப்பணமாக்கியது.

புலிப்பாணியுடன் சேர்த்து அவரது புலியையும் ஆசீர்வதித்த போகர், தன் சீடரின் கேட்கப்படாத கேள்விக்கான விடையை மொழிந்தார். “பயம் வேண்டாம் புலிப்பாணி.உன் மனதின் சஞ்சலத்தை நான் அறிவேன். 9 ஆண்டுகள் கடும்தவம் செய்து உள்மூச்சடக்கி நாம் தோற்றுவிட்ட காலபைரவர் சிலை விஷமாக மாறிப் போனது. அது போலவே, இம்முறையும் நடந்து விடுமோ என்று அச்சம் கொள்கிறாய்? சரிதானே?”

“குருவே”

“உன் மனக்கவலையை அறியாவனா நான் புலிப்பாணி? சென்ற முறை செய்த நீலி விஷமாக மாறிப்போன காலபைரவர் விக்ரகம் போல, இந்த முறை நடவாது. என் மேற்பார்வையில் உன் உதவியுடன் நான் செய்யப்போகும் இந்த குழந்தை வேலப்பர் விக்கிரகமானது, செவ்வாய் ஆதிக்கம் பலமாக காணப்படும் ஒரு குன்றின் மீது பிரதிஷ்டை செய்யப்படும்.”

“பிரதிஷ்டை செய்யப் போகும் இடத்தினைக் கண்டு கொண்டீர்களா குருவே?”

“என் குருநாதர், என் ஐயன், காளங்கி நாதரின் அருளால் அப்படி ஒரு குன்று என் மனக்கண்ணில் தோன்றியது.”

“அப்படியா? எங்கிருக்கிறது அந்த குன்று”

“ஒரு குன்றல்ல, இரண்டு குன்றுகள் தோன்றின.”

“இரண்டா? இரண்டுமே அங்காரகன் அருள் பெற்றவையா குருவே?”

“ஆம், செவ்வாய் கிரகத்தின் அதிபதியான அங்காரகனின் பூரண ஆதிக்கம் பெற்ற இரு குன்றுகள் அவை. சில காத இடைவெளியில் ஒன்று போலவே தோற்றமளித்தன அவை இரண்டும். அதில் ஒரு குன்றில் மையத்தில் செவ்வாய் கிரக்கதின் முழு பலனையும் தரவல்ல ஸ்தலம் அமைந்திருந்தது. நிஷ்டையில் தெரிந்த அக்குன்றின் மையத்திலிருந்த எழுந்த ஒலியானது என்னை வெகு ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.”

“மகிழ்ச்சி குருவே! எங்கிருக்கின்றன அந்த இரட்டைக் குன்றுகள்?”

“பல காத தூரங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும். அடுக்கடுக்காக, தொடர் மலைகள் சூழ்ந்த இடத்தில், அடர்ந்த பெரிய வனமும், அவ்வனத்தின் மத்தியில் அவ்வீரு குன்றுகளும் காட்சியளித்தன. எங்கே இருக்கின்றன என்பதையும் என் குருநாதரின் அருளால் தேடி கண்டுபிடித்துவிடலாம் புலிப்பாணி”

“அப்படியே ஆகட்டும் குருவே.”

“அந்த குன்றின் மேல் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிவபாலன் முருகனின் சிலையானது பற்பல இன்னல்களைச் சந்திக்கப் போகிறது.

“இன்னல்களா? என்ன சொல்கிறீர்கள் குருவே. அப்படியென்றால் நாம் இத்துனை சிரமம் மேற்கொண்டு செய்து கொண்டிருக்கும் சிலையானது வருங்கால சந்ததிக்கு உபயோகமில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதா?”

“இருள் இருந்தால் தானே தீபத்தின் ஒளியானது தேவைப்படும். அது போலத்தான் இந்த நவபாஷாண சிலைக்கும் நேரப் போகிறது. துயர் பல கண்டு, வழிபாடு செய்வதில் தடங்கல்கள் ஏற்படத்தான் போகிறது.”

“அதைக் களையும் உபாயம் உள்ளதல்லவா குருவே?”

“ஏன் இல்லாமல்? எல்லா இன்னல்களுக்கும் அருமருந்தான் காலம் இருக்கிறதே! காலத்தின் கோட்பாட்டில் உள்ளபடி தானே காரியங்கள் நடக்கும். இந்த முருகரும் இன்னல்கள் பல கண்டு, மழை, வெயில், காற்று என்று பல இயற்கை சீற்றங்களையும் தாங்கிக் கொண்டு, அழகிய இந்த வனத்தில் தனக்கென ஒரு நிரந்தர இருப்பிடத்தை அமைத்துக் கொள்வார்.”

“காரிய சித்தி யாகமும் நடக்கப்பெற்றிடுதல் நலம் பயக்கும் அல்லவா குருவே!”

“நிச்சயமாக புலிப்பாணி! காரிய சித்தி யாகத்தை உன் திருக்கரங்களாலேயே செய். உனக்குப் பின், உன் வழிதோன்றல்களால் இந்த குழந்தைவேலைப்பருக்கு ஆறுகால பூஜைகளும் நடக்கக்கடவது.”

“அப்படியானால் பிரதிஷ்டை செய்யப் போகும் இடத்தினை நாம் தேடத் துவங்க வேண்டும் அல்லவா குருவே?”

“அதற்கு இப்போது அவசரமில்லை புலிப்பாணி. முதலில் பாஷாண கலவைகளை வேண்டுமளவு தயார் செய்து, அவற்றை 9 முறை வடிகட்டி, தனித்தனியாக புடம் போட்டு பின்பு தான் சுடுமணலில் புதைக்கப் போகிறோம். அதிலும் மூன்று சிலைகள் செய்ய, போதுமான அளவு மூலிகைகள் வேண்டுமல்லவா புலிப்பாணி?”

“மூன்று சிலைகளா?”

“ஆம், மூன்று சிலைகள் தாம்” என்று சொல்லிய போகர், தன் சீடரின் முக மாற்றத்தைக் கண்டு தன் புன்னகையை இன்னமும் பெரிதாக்கினார். முதலில் ஆச்சர்யம் காட்டிய புலிப்பாணியின் முகம், நொடியில் ஆச்சர்ய பாவத்தில் இருந்து அதிர்ச்சி பாவத்தை எட்டியிருந்தது. புலிப்பாணியின் மனக்கவலைகள் பன்மடங்கு அதிகரித்திருந்தன.

அது பொழுது வரையிலும் ஒரு சிலை செய்ய வேண்டிய மூலிகைப் பொருட்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டிருந்த நிலையில், தன் குரு நாதர் போகர் “மூன்று சிலைகள்” என்று கூறிய செய்தி புலிப்பாணியாரை சஞ்சலப்படுத்தியது.

மூன்றரை அடி அளவிலான ஒரு முருகர் சிலை செய்யும் சூத்திரத்திற்குத் தேவையான பாஷாணங்கள் இருக்க, இன்னும் இரண்டு நவபாஷாண சிலைகள் செய்ய போதுமான அளவு மூலிகைகள் இல்லையே என்று கவலை கொண்டது அவர் மனம்.

“மற்ற இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்ய இடங்கள் தேடவேண்டுமல்லவா ஸ்வாமி?”

“தேவையில்லை புலிப்பாணி. மற்றொரு முருகர் சிலை, பூக்கள் நிரம்பிய பெரிய கற்பாறையை தன் வசிப்பிடமாக தேர்ந்தெடுத்துவிட்டது.”

“நல்லது குருவே. மூன்றாம் சிலை?” என்ற புலிப்பாணியின் கேள்வியைக் கேட்டு சற்றே சிரித்தார் போகர்.

“அச்சிலை சற்றே வித்தியாசமானது. அது எங்கே சென்றடைப் போகிறது என்று எனக்கு நிஷ்டையில் தோற்றம் தர மறுக்கிறது.”

“மறுக்கிறதா? என்ன சொல்கிறீர்கள்? சிலைகள் எங்கனம் மறுப்பு தெரிவிக்கும்?”

“தெரிவிக்கிறதே! எல்லாம் என் ஈசனின் திருவிளையாடல். அச்சிலை சென்று சேருமிடம் இப்போதைக்கு எனக்குச் சொல்லப்படவில்லை. என் வேலை அது இல்லையோ என்னவோ! யாருக்கு அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்யும் பிராப்தம் இருக்கிறதோ, அவருக்கு உரிய நேரத்தில் அந்த செய்தி வந்து சேரும் என்று நினைக்கிறேன்.”

“ஆகட்டும் குருவே. நான் உத்தரவு பெற்றுக் கொள்ளும் சமயம் வந்துவிட்டது. என்ன ஆசிர்வதியுங்கள்” என்று குருநாதரை வணங்கினார் புலிப்பாணி.

“கவலை கொள்ளாதே புலிப்பாணி. உமக்குத் தேவையான மூலிகைகள் அனைத்துமே தக்க சமயத்தில் உனக்குக் கிடைக்கப்பெறும். உன் வளர்ப்பு புலியானது உன்னை அந்த மூலிகைகள் இருக்கும் இடத்திற்கு விரைந்து அழைத்துச் செல்லக்கடவும்” என்று அருளினார் போகர்.

அதன் பின்னரே புலிப்பாணியாருக்கு மன நிம்மதி தோன்றியது. இரு கரங்களையும் தலைமேல் வைத்து வணங்கிய புலிப்பாணி, “ஆகட்டும் குருவே. உங்கள் கட்டளைப்படியே மூன்று சிலைகளுக்கும் தேவையான எரிபொருட்கள், புடம் போட வறட்டிகள் மற்றும் மூலிகைகள் சேகரிக்க ஆயத்தம் செய்கிறேன்” என்று திடமனதுடன் மொழிந்தவர்.

“குருவே சரணம்” என்று நிலத்தில் விழுந்து விடைபெற்ற புலிப்பாணி, குருவிற்கு முதுகு காட்டாமல், குனிந்தபடிக்கே பின்னால் விரைந்து நடந்தார். அவர் மனதில் அடுத்தடுத்து செய்யவேண்டிய காரியங்களை வகுத்தபடிக்கு விரைந்து செயலாற்ற எண்ணம் கொண்டார் புலிப்பாணி சித்தர்.

81 சித்தர்களும் பாஷாணங்கள் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்த, பிற்காலத்தில் ஹரிசேசவபர்வதம் என்று அழைப்படப்போகும் அந்த சிறு மலையின் உச்சியில் அமைந்திருந்த வேதிகை ஊற்றினை நோக்கி தன் புலியின் மேல் அமர்ந்து விரைவாக பயணம் செய்தார் புலிப்பாணி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!