Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 6 2

அவளுடைய அலுவலகம் எங்கே என்று கேட்டு அங்கே அவளை அழைத்து வந்தான். காரில் இருந்து அவள் இறங்க ஆரம்பிக்கும் போது “சொன்னது எல்லாம் நினைவு இருக்கட்டும். ஏதாவது தில்லாலங்கடி வேலை பண்ணின அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை”, என்று சொல்லி விட்டுக் காரைக் கிளப்பினான்.

தாத்தா மற்றும் கிரியிடம் எப்படி இந்த விஷயத்தைச் சொல்வது என்ற யோசனையில் அன்று முழுவதும் நேரத்தைக் கழித்தாள் இந்து. கூடவே மீண்டும் மீண்டும் அவனுடன் தன்னைக் கோர்த்து விடும் கடவுளை நினைத்து அவளுக்கு கோபமாகவும் வந்தது.



Advertisement

அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் அவள் அமைதியாவே இருக்க குணசேகரனுக்கு அவளுடைய அமைதியைக் கண்டு பதட்டமாக இருந்தது. “கடவுளே இவ இப்ப எதை மனசுல போட்டு வருத்தப் படுறான்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டார் குணசேகரன்.

Advertisement

அன்று இரவு உணவின் போது கிரியும் அஞ்சலியைப் பற்றி எண்ணிய படி அமைதியாக இருந்தான். பேரன் பேத்தியின் அமைதி அந்த தாத்தாவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

Advertisement

அப்போது “உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லணும். அதுக்கு நீங்க ரெண்டு பேரும் சரின்னு சொல்லணும்”, என்று பேச்சை ஆரம்பித்தாள் இந்து.

Advertisement

அவள் அப்படிச் சொன்னதும் குணசேகரனுக்கு பக்கென்று இருந்தது. “ஏதோ பிடிக்காத விஷயத்தை சொல்லப் போகிறாள்”, என்று அவருடைய அனுபவ அறிவு அவருக்கு உணர்த்தியது.

“என்னக்கா சொல்லு”, என்றான் கிரி.

“நீ அஞ்சலியைக் கல்யாணம் பண்ணிக்கணும் கிரி”

“அக்கா” “இந்து”, என்று இருவரும் அதிர்ந்தார்கள். “எனக்கு அந்த பொண்ணை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு கிரி. விரக்தியா இங்க இருந்து போனா. ஏதாவது ஏடாகூடமா முடிவு பண்ணிட்டா என்ன செய்றது?”, என்று கிரியைப் பார்த்த படியே கேட்டாள் இந்து.

“ஏற்கனவே அவ அப்படி பண்ணிட்டா”, என்று கிரி உளறியதும் அப்போது தான் விஷயம் தெரிந்ததாக காட்டிக் கொண்டு “என்ன டா சொல்ற? அஞ்சலி என்ன பண்ணினா?”, என்று கேட்டாள்.

அதன் பின் இன்பன் வந்து பேசியதையும் அஞ்சலி செய்த காரியத்தையும் சொன்னான் கிரி. குணசேகரனுக்கே அஞ்சலியின் செயல் அதிர்ச்சியாக இருந்தது.

“ஒரு பொண்ணோட பாவம் நமக்கு வேண்டாம் கிரி. அவன் அண்ணன் பண்ணினதுக்கு கடவுள் அவனைப் பாத்துக்கட்டும். அஞ்சலி என்ன பண்ணினா சொல்லு. உனக்காக உயிரையே கொடுக்க நினைக்கிற ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் டா. நாளான்னைக்கு நாம அவங்க வீட்டுக்கு வரோம்னு அவளுக்கு தகவல் கொடுத்துரு. தாத்தா நான் சொல்றது சரி தானே?“, என்று கேட்டாள் இந்து.

“அந்த பொண்ணு பாவம் தான். ஆனா இந்து மா….”, என்று தயங்கினார் குணசேகரன்.

“இது தான் தாத்தா சரி. பிளீஸ் வேற எதைப் பத்தியும் யோசிக்காம அஞ்சலியை மட்டும் பாருங்க”, என்று அவள் சொன்னதும் அவர் சரி என்று தலை அசைத்தார்.

“அக்கா இது வேண்டாமே. நான் சொல்றதைக் கேளு”, என்றான் கிரி.

“எதுவும் பேசக் கூடாது. நாளான்னைக்கு அவங்க வீட்டுக்கு போறோம் அவ்வளவு தான்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் இந்து.

அன்று இரவு தூங்குவதற்கு முன் “அவன் உன்னை விட நாலு வயசு சின்னவன் மா. அவன் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? முதல்ல உனக்கு முடியட்டும். இப்ப வேணும்னா அவனுக்கு நிச்சயம் மட்டும் பண்ணுவோம்”, என்றார் குணசேகரன். தாத்தாவுக்காக அவள் சரி என்று சொன்னாலும் உள்ளுக்குள் அந்த இன்பன் என்ன சொல்வானோ என்று இருந்தது இந்துவுக்கு.

அவனிடம் போய் “முதல்ல நான் தான் கல்யாணம் பண்ணுவேன். அப்புறம் தான் என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்னு சொன்னா அவன் கேப்பானா? இதெல்லாம் அவனுக்கா தெரியணும். ஆனா அவன் எங்க இதையெல்லாம் யோசிப்பான்? சரியான சுயநலப் பிசாசு”, என்று எண்ணிக் கொண்டாள் இந்து.

குணசேகரன் அங்கிருந்து சென்றதும் அந்த சாத்தானே அவளை அழைத்தது. டெவில் என்று தான் அவன் நம்பரை சேவ் பண்ணியிருந்தாள். “இப்ப எதுக்கு இந்த இம்சை எனக்கு போன் பண்ணுது?”, என்று எண்ணிக் கொண்டு போனை எடுத்தவள் “அறிவு இருக்கா? இந்நேரம் கால் பண்ணிருக்க?”, என்று கத்தினாள்.

“ஏன் இந்நேரம் உன் பாய் ஃபிரண்ட் யாரும் உன் கிட்ட பேசுவாங்களா? அதை நான் போன் பண்ணிக் கெடுத்துட்டேனா?”, என்று நக்கலாக கேட்டான் இன்பன்.

“அது உனக்கு ஏன் கவலை? நான் யார் கிட்டயும் எப்பவும் பேசுவேன். நீ எதுக்கு எனக்கு கால் பண்ண? என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு”

“வீட்ல பேசிட்டியா? கிரி என்ன சொன்னான்?’

“பேசிட்டேன். நாளான்னைக்கு உங்க வீட்டுக்கு போறோம்னு சொன்னேன். பதில் இல்லை. ஆனா வருவான்”

“தேங்க்ஸ்”

“அதை நீயே வச்சிக்கோ. வை போனை”, என்று சொல்லி விட்டு போனை வைத்ததும் திமிர் பிடித்தவள் என்று எண்ணிக் கொண்டான் இன்பன்.

அடுத்த நாள் அஞ்சலி வேலைக்கு வராததால் அவளை போனில் அழைத்தான் கிரி. புன்னகையுடன் போனை எடுத்தவள் “சொல்லு கிரி”, என்றாள்.

“ஏன் இப்படி பண்ணின?”, என்று அக்கறையுடன் கேட்டான். அவன் அக்கறை அவள் மனதுக்கு இதமாக இருந்தது.

“எனக்கு வேற வழி தெரியலை. என்னால வேற யாரையும் அக்சப்ட் பண்ணிக்க முடியாது கிரி. உன்னை பிளாக்மெயில் பண்ணுறதுக்கு நான் இதை செய்யலை. ஆனா கண்டிப்பா என் காதலை உனக்கு உணர்த்த தான் இதை செஞ்சேன்”

“அந்த அளவுக்கு நான் உனக்கு என்ன பண்னினேன் டி?”

“நீ என்ன பண்ண நான் என்ன பண்ணினேன்னு பாத்து வரதுக்கு பேர் லவ் இல்லை கிரி. சரி இப்ப எதுக்கு கால் பண்ணின?”

“நாளைக்கு எங்க வீட்ல இருந்து உங்க வீட்டுக்கு வரோம். உங்க வீட்ல இன்பார்ம் பண்ணிரு. அதைச் சொல்லத் தான் கால் பண்னினேன். அக்கா உன் கிட்ட சொல்லச் சொன்னா”

“நிஜமாவா? ஆனா ஏன்? தற்கொலை பண்ணினதுக்கு பாக்க வரியா டா?”

“இல்லை என் பொண்டாட்டியை பொண்ணு பாக்க வரோம் போதுமா?”

“ஏய் நிஜமாவா?”, என்று கண்களை விரித்து சந்தோஷப் பட்டாள் அஞ்சலி.

“ஆமாடி சூப்பரா கிளம்பியிருக்கணும் என்ன?”

“எப்படி கிளம்பி இருந்தா என்ன? உனக்கு தான் என்னைப் பிடிக்காதே”

“பிடிக்கும் டி”

“நம்பிட்டேன் நம்பிட்டேன்”

“கல்யாணம் முடியட்டும் என் காதலை புருவ் பண்ணுறேன். நாளைக்கு பாக்கலாம் பை”

“ஏய் இரு இரு அதுக்குள்ள போனை வைக்கணுமா? கொஞ்ச நேரம் பேசினா தான் என்னவாம்?”

“என்ன பேச? சொல்லு பேசிறலாம்”

“பேச ஒண்ணும் இல்லை. ஆனா பேசணும் போல இருக்கு”, என்று அவள் சொல்ல அவளின் மனது புரிந்தவன் “இப்ப வொர்க் இருக்கு. லஞ்ச் டைம்ல கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

“வா டா வா மாட்டினியா? கல்யாணம் முடியட்டும் உனக்கு இருக்கு”, என்று புன்னகையுடன் எண்ணிக் கொண்ட அஞ்சலி சந்தோசத்துடன் அவர்கள் வரப் போகும் செய்தியை வீட்டினரிடம் சொன்னாள். அவர்களுக்கும் சந்தோசமே. தங்கையின் சந்தோசத்தில் இன்பனும் புன்னகைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது. குணசேகரன், கிரி, இந்து மூவருக்கும் அஞ்சலி வீட்டுக்கு செல்ல பிடிக்க வில்லை தான். ஆனால் அஞ்சலிக்காக தான் என்று சொல்லி குணசேகரனையும் கிரியையும் கிளம்ப வைத்த இந்து அவளும் கிளம்பி தயாராக இருந்தாள்.

இங்கிருந்து அவர்கள் வீடு கொஞ்சம் தூரம் என்பதால் வாடகைக் காரை புக் செய்தான் கிரி. அது வந்ததும் மூவரும் அதில் ஏறிச் சென்றார்கள்.

அஞ்சலி வீட்டுக்கு சென்றதும் அம்பிகாவும் சீனிவாசனும் அவர்களை அன்புடன் வரவேற்றார்கள். அவர்களின் வீட்டைக் கண்டு மூவருக்கும் திகைப்பு தான். அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது.

இவர்கள் மூவரும் புன்னகையுடன் உள்ளே சென்று அமர்ந்தார்கள். அப்போது வாங்க வாங்க என்று சொல்லிக் கொண்டு வந்த இன்பனைக் கண்டதும் மூவர் முகமும் கருத்தது.

மகனைக் கண்டதும் அவர்கள் முகத்தில் வந்த மாற்றத்தை அம்பிகாவும் சீனிவாசனும் கூட கவனித்தார்கள். “அவன் ஏதோ தெரியாம உங்களைப் பகைச்சு கிட்டான்.  ஏதோ நிலத் தகறாராமே. இன்பா சொன்னான். அஞ்சலி பிறந்தப்ப ரொம்ப கஷ்டப் படுத்திட்டா. டக்குன்னு அவளுக்கு வியாதி வந்துரும். அதனால மூத்தவனை என் மாமியார் கிட்ட விட்டுருந்தேன். அவங்க எப்பவும் கொஞ்சம் கறாரா கம்பீரமா இருப்பாங்க. அவங்க கிட்ட வளந்ததுனால அவனும் கொஞ்சம் பிடிவாதகாரனா மாறிட்டான். மத்த படி ரொம்ப நல்லவன். அவன் பண்ணினதை பெருசா எடுத்துக்காதீங்க”, என்றாள் அம்பிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!