Skip to content
Post Views: 4,737
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 7
கயல்விழி தனியாக இருந்தால், இப்படித்தான் எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்வாள் என நினைத்த பத்மா, அருகில் இருந்த தன் தங்கையின் குடும்பத்தை உடனே வர சொல்லிவிட்டார்.
Advertisement
அவரது தங்கைக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். அக்காவிற்குக் கல்யாணம் என்றதும், தங்கைகள் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு, அப்போதே தங்கள் பெற்றோருடன் வர, வீட்டிற்கே கல்யாணக் களை வந்தது.
அவர்கள் பொறுப்பில் கயல்விழியை விட்டுவிட்டு பத்மா அவரது வேலைகளைப் பார்க்க சென்றார்.
“அக்கா, நாங்க மாமாவை பார்த்தோம். வெளிய இருக்காரே அவர்தானே? செமையா இருக்காரு கா… போலீஸ்காரர் வேற, நீ ரொம்ப அதிர்ஷ்ட்டகாரி.”
Advertisement
“அவர் பேரு நந்தகுமார் தானே? நம்ம ஊரே இப்ப அவரைப் பத்திதான் பேசுது.”
Advertisement
“கல்யாணத்தை ஏன் மண்டபத்தில வைக்காம கோவில்ல வைக்கிறாங்க.”
“எதாவது வேண்டுதலா இருக்கும்.”
அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த மருதாணியை, கயலுக்கு ஆளுக்கொரு கையில் வைத்துவிட்டபடி, தங்கைகள் இருவரும் கதை பேசினர்.
Advertisement
அப்போது புடவைக்காரர் புடவைகளைக் கொண்டு வந்தார். அந்த இரவு நேரத்தில் பட்டு புடவைகளை வீட்டிற்கே வரவழைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தனர். பணம் இருந்தால் எல்லாமே சாத்தியம்தான்.
அப்போது போன் அடிக்க, பத்மாதான் எழுந்து சென்று எடுத்தார். அந்தப் பக்கம் பேசியது வருண். ஏற்கனவே நந்தா இந்த வீட்டின் தொலைபேசி எண்ணை கொடுத்து இருந்தான்.
“இருங்க மாப்பிளையைக் கூப்பிடுறேன்.” என்றவர்,
“மாலா, சீதா யாராவது ஒருத்தர் போய் மாப்பிள்ளைக்குப் போன் வந்திருக்குன்னு சொல்லுங்க.” என அவர் தன் தங்கை மகள்களிடம் சொல்ல…
“நான்தான் போய்ச் சொல்வேன்.” என இருவரும் அடித்துக் கொண்டனர். அதற்கு முன் அவர்கள் தம்பி முருகன் ஓடி இருந்தான்.
“மாமா, மெட்ராஸில் இருந்து உங்களுக்குப் போன்.” அவன் மூச்சிரைக்க ஓடி வந்து சொல்ல.
தன் நண்பர்களிடம், “இருங்க வந்துவிடுகிறேன்.” எனச் சொல்லிவிட்டு நந்தா வீட்டிற்குள் விரைந்து சென்று போன்னை எடுத்தான்.
“ஹலோ…”
“நான்தான் டா”
“சொல்லு வருண்.”
“இப்பத்தான் இங்கிருந்து நாங்க எல்லாம் வேன்ல கிளம்புறோம்.”
“இப்பத்தான் கிளம்புறீங்களா?”
“நீ அங்க இருந்திட்டு நல்லா பேசு. இங்க இருந்து ஒவ்வொரு டிக்கெட்டையும் கிளப்பிப் பாரு தெரியும்.”
“என்னமா கேள்வி கேட்குதுங்க. பதில் சொல்லி முடியலை. எதுக்கு இப்படித் திடீர் கல்யாணம்ன்னு கேட்டு உயிரை எடுக்குதுங்க.”
“நீ என்ன சொன்ன?”
“நீ லவ் பண்ற பொண்ணு வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கலை, அதனால திருட்டுக் கல்யாணம் பன்றோம்ன்னு சொல்லி வச்சிருக்கேன்.”
“டேய் நான் போலீஸ் டா.”
“போலீஸ் திருட்டுக் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு எந்தச் சட்டத்திலாவது இருக்கா?”
“கயலை பத்தி வேற யார்கிட்டயும் சொல்லலையே?”
“அம்மாவை தவிர வேற யாருக்கும், ஏன் உன் தங்கச்சிக்கு கூடத் தெரியாது.”
“சரி.”
“பெண்ணுக்கு கல்யாணப் புடவையும், தாலியும் நாமதான் வாங்கனுமாம். அம்மா சொல்ல சொன்னாங்க.”
“ஏன் அவங்க என்னோட பேச மாட்டாங்களா?”
“கோவமா இருக்காங்களாம். அதையும் சொல்ல சொன்னாங்க.”
வருண் சொன்னதற்கு நந்தா பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க.
“டேய் ஒரு கல்யாணம்னா இந்தச் சலசலப்பு கூட இல்லைனா எப்படி டா? அதுவும் உன் அத்தையை வழியில் திருச்சியில போய்க் கூடிட்டு வரணும். அவங்க உன் மேல ரொம்பக் கோபத்துல இருக்காங்க.”
“முதல்ல வரலைன்னு சொன்னாங்க. அப்புறம் திரும்பப் போன் பண்ணி வரேன்னு சொல்லி இருக்காங்க. என்ன கலாட்டா நடக்குமோ.”
ராதிகாவும் வருவாளா, அவளையும் வேறு சமாளிக்க வேண்டுமா என்றிருந்தது.
“வேற யாரெல்லாம் வராங்க?”
“உன் சித்தப்பா குடும்பம், உன் பெரியம்மா குடும்பம். அப்புறம் என்னோட அப்பா அம்மா இவங்கதான் மெட்ராஸ்ல இருந்து. வர்ற வழியில் திருச்சியில உன் அத்தை குடும்பம், மதுரையில இருக்க உன் தாய்மாமா, காலையில நேரா அங்க வர்றேன்னு சொல்லிட்டார்.”
“இதே ஒரு இருபது பேர் ஆகுமேடா… ஒரு கல்யாணத்துக்கு இவ்வளவு பேர் போதாது. இதுல இன்னும் கயல் பக்கமும் வருவாங்க.”
“போதும் டா… கலக்கிடலாம்.”
“சரிடா சீக்கிரம் வந்து சேருங்க.” எனப் போன்னை வைத்துவிட்டு வெளியே வந்த நந்தா, பத்மா புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான்.
“அத்தை, நாங்கதான் கயல்விழிக்கு முஹுர்த்த புடவை வாங்கணும். இதுலையே ஒன்னு எடுத்திடலாமா?” அவன் கேட்க, பத்மா சரி என்றார்.
நந்தா நின்றபடி மேலோட்டமாகத்தான் புடவைகளைப் பார்த்தான். குங்கும நிறத்தில் தங்க நிற சரிகையால் மெல்லிய கட்டமும், அங்கங்கே உடலில் கொடி போல ஜரிகை ஓட இருந்த புடவையைக் காட்டி, விரிக்கச் சொல்லி பார்த்தவன், அந்தப் புடவை கயல்விழிக்கு மிகவும் நன்றாக இருக்கும் என அதையே முஹுர்த்ததுக்கு எடுத்தான்.
அதே குங்கும நிறத்தில் ரெடிமேட் ரவிக்கையைப் பத்மா எடுத்து கொடுத்தார். புடவையின் விலை பதினோராயிரம் என்று இருந்தது.
அவ்வளவு பணம் இப்போது கையில் இல்லை. பிறகு பணம் கொடுத்து விடலாம் என நினைத்தான். திரும்ப அவன் வெளியே சென்று நண்பர்களோடு பேச…. அப்போது வெளியே சென்றிருந்த அன்பரசு வந்தார்.
தன் ஆட்களை அழைத்து வீட்டின் முன்பு பிளாஸ்டிக் சேர்களைக் கொண்டு வந்து போட வைத்தார். அதில் நந்தாவும் அவன் நண்பர்களும் உட்கார்ந்து கொண்டனர்.
உள்ளே சென்றவர், “அவங்களுக்குக் குடிக்க டீ எதுவும் போட்டுக் கொடுத்தியா?” எனப் பத்மாவிடம் கேட்க, அவர் இல்லை என்றார்.
“இன்னைக்கு நைட் புல்லா புடவையே எடுத்திட்டு இருக்கப் போறியா?” என அவர் எரிந்து விழ,
“இல்லை கயலுக்கு அப்புறம் வேற யாருக்கும் எடுக்கணுமா?” எனப் பத்மா கேட்டார்.
“வாசு கல்யாணத்துக்கு எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்துக்கலாம். இப்ப கயலுக்கு மட்டும் எடுத்தா போதும்.”
கணவர் சொன்னபடி மகளுக்கு மட்டும் நான்கு புடவைகளை எடுத்தவர், சமையல் அறைக்கு விரைந்து சென்று டீ வைத்தார்.
திரும்ப அதை யார் கொண்டு போய் நந்தாவிடம் கொடுப்பது என மாலாவுக்கும், சீதாவுக்கும் இடையே போட்டி. இருவருமே தாங்கள் வைத்திருந்த டீயை நந்தாவிடம் சென்று நீட்ட, பார்த்த அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“முதல்ல நீங்க யாரு சொல்லுங்க?”
“நான் மாலா, இவ சீதா.” மாலா சொல்ல,
“நாங்க கயல் அக்காவோட சித்தி பொண்ணுங்க.” என்றாள் சீதா.
அவனைப் பார்க்கும் ஆர்வத்தில் வந்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டவன், இருவரிடமுமிருந்து டீயை வாங்கி, தன் நண்பர்களிடம் கொடுத்தான்.
வேகமாக வந்த முருகன். அவன் கையில் இருந்த டீயை நந்தாவிடம் கொடுத்துவிட்டு, “நான் கொடுத்த டீயைதான் மாமா குடிக்கிறாங்க.” எனச் சகோதரிகள் இருவரையும் வெறுப்பேற்றினான்.
உள்ளே வந்த அவர்களைப் பார்த்த பத்மா. “டீ கொடுக்க இத்தனை பேரா? போய் அக்காவோட இருங்க.” என்றார்.
தந்தை சொன்ன வேலைகளை முடித்து விட்டு வந்த நவநீத கிருஷ்ணன், “சமையல்காரர் காலை அஞ்சு மணிக்கு எல்லாம் கோவில்ல இருப்பார். தேவையான மளிகை சாமான்களை, வெள்ளன கடை திறந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லி இருக்கேன்.” என்றான்.
“சரி நீ போய்ப் படு. காலையில சீக்கிரம் எழுந்து கோவிலுக்குப் போய் வேலை ஒழுங்கா நடக்குதான்னு பாரு.”
“சரிங்கப்பா…” என்றவன், மாடியில் இருந்த அவர்கள் அறைக்குச் செல்ல, அங்கே அவன் மனைவி அவனைப் பிடித்துக் கொண்டாள்.
“உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு எல்லா வேலையும் பண்ணியாச்சா?” அவள் நக்கலாகக் கேட்க,
“வேற வழி, அப்பா சொல்றார் செஞ்சுதான ஆகணும்.” என்றான் அலுப்பாக.
“ஓடிப்போனவளுக்கு இன்னொரு கல்யாணமா… கேவலமா இருக்கு. இவளை எல்லாம் கொன்னு போட்டிருக்கணும். அப்பத்தான் இனி யாருக்கும் இப்படிச் செய்யத் தைரியம் வராது. அதைவிட்டுட்டு வெட்கமே இல்லாம இன்னொரு கல்யாணம் பண்றாங்க.”
“அம்மாவுக்காகத்தான் கீதா.”
“ஏன் அவங்களும் சேர்ந்து சாவாங்களா? அப்படிச் செத்தா செத்து போகட்டுமே.” கீதா ஆத்திரமாகச் சொல்ல,
இவள் அவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆக மாட்டாள் என்பதை உணர்ந்த கிருஷ்ணன், “நாளைக்குக் கல்யாணத்தைப் பண்ணி துரத்தி விடப் போறோம். நீ எதுக்கு வீணா அந்தக் கழுதையைப் பத்தி பேசி உன் ஜீவனைக் குறைச்சிக்கிற.” என்றான்.
“அந்தப் போலீஸ்காரன் ஏன் இன்னும் வீட்டுக்கு போகாம இருக்கான்?”
“அது அவனைத்தான் கேட்கணும்.”
கொலைக்கும் அஞ்சாத கும்பல் என்று தெரிந்துதான் நந்தா வீட்டிற்குச் செல்லாமல், அங்கேயே இருந்தான். இவர்களே விஷம் கொடுத்துவிட்டு, கயல்விழி மேல் பழியைப் போட்டாலும் போடுவார்கள்.
அதே பயம் பத்மாவுக்கும் இருந்ததால்… உறங்காமல் அடிக்கடி மகளின் மீது ஒரு பார்வையை வைத்துக் கொண்டே, வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
காலையில் வீட்டினர் பார்த்த போது, நந்தா குளித்துத் தயாராகி வந்திருந்தான். அவன் எப்போது வீட்டிற்குப் போனான், திரும்ப எப்போது வந்தான், என யாருக்குமே தெரியவில்லை.
வீட்டில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வந்திருப்பான் போல, பத்மாவை அழைத்துப் புடவைக்கான பணத்தைக் கொடுத்து விட்டான்.
எட்டு மணி போலத்தான் நந்தாவின் வீட்டினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த தகவல் வந்ததும், உடன் இருந்த நண்பர்களையும் குடும்பத்துடன் திருமணதிற்கு வர சொல்லி அனுப்பி விட்டு, அவனும் கிளம்பி அவர்கள் இருந்த விடுதிக்குச் சென்றான்.
அப்போதும் இரு காவலர்களை அங்கே காவல் வைத்துவிட்டே சென்றான்.
அவனைப் பார்த்ததும், தாரணியும், பரணியும் “அண்ணா…” என அழைத்தபடி விரைந்து வர, தன் தம்பி தங்கையைப் பார்த்ததும் நந்தாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.
“ஏன் அண்ணா திடீர் கல்யாணம்?” தாரணி கேட்க,
“உங்க அண்ணியைப் பார்த்ததும் பிடிச்சிடுச்சா, இப்ப விட்டா வேற யாரும் தட்டிட்டு போயிடுவாங்க. அதனாலதான் சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு.”
அண்ணன் சொன்ன காரணத்தைக் கேட்ட தாரணியும் பரணியும் சிரிக்க, அப்போது அங்கே குழலி வந்தார்.
அவரைப் பார்த்ததும் அவரிடம் சென்றவன், “அம்மா…” என அழைக்க…. அவர் அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்.
error: Content is protected !!