Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vaazhkai Vaazha Thaanae

வாழ்கை வாழ தானே… epi 1

 

EPISODE O1

 



Advertisement

“வாழ்கைல காதல் எப்போ வேணாலும் வரும்ங்க… எத்தனை தடவ வேணா வரும்… எப்படி வேணாலும் வரும்… யார் மேல வேணாலும் வரும்… எந்த வயசுல வேணாலும் வரும்…

 

அப்படி வர ரிலேஷன்ஷிப் நம்ம ‘மொபைல் நெட்வர்க்’ மாதிரி! ‘பேக்கேஜ்’ போட்ட புதுசுல, அதாவது காதல் ஆரம்பிக்குற புதுசுல செம்ம ஜாலியா இருக்கும்!

Advertisement

 

Advertisement

ஆனா, எல்லாத்துக்கும் ஒரு ‘வேலிடிட்டி’ இருக்கே! ‘டியூ டேட்’ முடியுறதுக்குள்ள ரீசார்ஜ் பண்ணிட்டா… அதாங்க, நம்ம அன்பை கொட்டி குளிப்பாட்டிட்டா எந்த பிரச்சனையும் இல்லை!

 

ஆனா, அதே… நம்ம ‘நெட்வொர்க்’ தானே… எங்க போய்டப்போதுன்னு அசால்ட்டா மட்டும் இருந்தீங்க? அவ்ளோதான்… ‘டிஸ்கனெக்ட்’ ஆகிட்டு போயிட்டே இருக்கும்!!!

Advertisement

 

ஹாஹஹா!!!

 

இந்த ரிலேஷன்ஷிப்’ அளவுக்கு நம்ம நெட்வொர்க் ஒன்னும் அவ்ளோ காம்ப்ளிகேடட் இல்லங்க! வேலிடிட்டி முடிஞ்சா கூட முழுசா நாற்பத்தி எட்டு மணி நேரத்துக்கு ‘அன்லிமிடட் டேட்டா, அன்லிமிடட் காலிங்’

 

இனிமே, ரீசார்ஜ் பண்ண மறந்துட்டா எப்போ டிஸ்கனெக்ட் ஆகுமோன்னு பயமே வேணாம்! ‘ஹேப்பி 5G க்கு மாறுங்க! தடையில்லா சேவைகளை தங்குதடையில்லாம என்ஜாய் பண்ணுங்க!!!”

 

“கட்…..கட்……கட்…….”

 

மானிட்டரின் முன்னிருந்து கையில் ஏந்திய மைக்’குடன் எட்டிப்பார்த்தான் அஜய்.

 

“எக்சலேன்ட் சார்! ‘ப்ராம்ட்’ கூட இல்லாம ஒரே டேக்’குல பக்காவா நடிக்க, உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல!” அஜய் சொன்னதற்கு கேமரா முன்னே நடித்துக்கொண்டிருந்தவன், இதமாய் சிரித்து வைத்தான்.

 

பின், “டேக் ஓகே’ன்னா, ஷால் ஐ கோ அஜய்? இட்ஸ் கெட்டிங் லேட் போர் மை ஷூட்டிங்!”  நடிகன் என்ற பந்தா இன்றி தன்மையாய் கேட்டவனிடம்,

 

“ஷுர் சார்! யூ கேன்!” என்று அஜய் சொல்ல, நட்பாய் அவன் கரம் குலுக்கியவன், தன் ஆட்களோடு அங்கிருந்து சென்றான்.

 

அங்கிருந்த கும்பலில் பாதி ஆட்கள் குறைந்ததை போல இருந்தது.

 

“பேக் அப்!!!” அஜய் இந்த ஒற்றை சொல்லை உதிர்க்கவென காத்திருந்ததை போல, போட்டிருந்த ‘செட்டை’ வேகவேகமாய் பிரிக்க ஆரம்பித்தனர் ஊழியர்கள்.

 

‘உப்ப்ப்’ என்ற நிம்மதி மூச்சுடன், காலை தளர்த்திவிட்டு அந்த ‘டிரெக்டர்’ சேரில் அப்படியே சரிந்து அமர்ந்தான் அஜய்.

 

விவேக், ‘கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்’

 

ரீனா, ‘பத்துப்பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்’

 

குரு, ‘அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய் காட்டும் ஆணழகன்…’

 

சுவாதி, ‘பெண்ணின் பின்னே சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்…’

 

கோரஸாய், ” எவனோ…ஓஓஓ…. அவனே… ‘காதல் மன்னன்’… அவனே ‘காதல் மன்னன்'” என்று அங்கிருந்த அத்தனை பேரின் கவனத்தையும் கவரும்படி காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டு அஜய்யை சூழ்ந்து அமர்ந்த நால்வரை, ஒரு புல் பூண்டாய் கூட ஏறிட்டுப்பார்க்கவில்லை அவன்.

 

கண்ணை மூடியிருந்தவன் தனக்கு காதே கேட்கவில்லை என்பதை போல அசையாமல் அமர்ந்திருக்க, அதையெல்லாம் அந்த நால்வர் கூட்டணி கண்டுக்கொள்ளவில்லை.

 

இந்த பாடலும், அதை பாடுவதாய் சொல்லி இவர்கள் காது ஜவ்வு கிழியும்படி கத்துவதும் இன்று நேற்று நடப்பதல்ல… சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக நடப்பது தான்!

 

‘ஏன்டா உங்களுக்கெல்லாம் ‘போர்’ஏ அடிக்காதா?’ என்று அஜய் நொந்துப்போய் கேட்டாலும் கூட சளைக்காமல் கோரஸ் பாடுவர்.

 

விவேக், ரீனா, குரு, சுவாதி மற்றும் நம் நாயகன் ஐவரும் ஒரே கல்லூரியில் பழகி, படிப்பு முடிந்ததும் சொந்த முதலீட்டில் சிறிதாய் ‘விளம்பர கம்பெனி’ ஒன்றை துவங்கி, இப்போது அது பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் வரை, இணைபிரியாமல் திரிபவர்கள்.

 

அனைவரும் குழந்தை, குட்டி, புருஷன், பொண்டாட்டி என செட்டில் ஆன போதிலும் இவர்கள் நட்பிற்கும், தொழிலிற்கும் இன்றுவரை எந்த பங்கமும் வந்துவிடவில்லை.

 

‘க்ரூப்புல டூப்பு’ என்பதை போல அஜய் மட்டுமே இவர்கள் மத்தியில் முப்பத்தைந்து வயதிலும் முரட்டு சிங்குளாய் உலாற்றுவது.

 

அஜய், பார்த்தவுடன் அவன் அழகில் மயங்கி பெண்கள் வழுக்கி விழுகும் ‘ஓஹோ’ ரகம் அல்ல…

‘பார்க்க பார்க்க பிடிக்கும்’ என சொல்லும் அளவு சுமாரும் அல்ல… இரண்டுக்கும் மத்தியில் சற்று வசீகரிக்கும் தோற்றம்.

 

வயது முப்பதை தாண்டி போனாலும் ஆள் என்னவோ பார்க்க இருபதுகளின் முடிவில் முட்டிக்கொண்டு நிற்பதை போல தான் தோன்றும்.

 

பெண்களிடம் பேச கொஞ்சமும் கூச்சம் பார்க்காதவன், கல்லூரி நாட்களில் இருந்தே ‘காதல்’ என்றால் மட்டும் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவதை கவனித்து அவனிடம் விளையாட்டாய் இப்படி பாட ஆரம்பித்தது நாலு கழுதை வயதாகியும் தொடர்கிறது.

 

அதிலும் அஜய் எடுக்கும் விளம்பரங்களின் கான்செப்ட்களில் காதலோ, அது சார்ந்த ரசமோ சாம்பாரோ சிறிதேனும் தென்பட்டால் கூட, அவ்வளவுதான்… அன்று முழுவதும் வச்சு வச்சு செய்வார்கள் அவனை!

 

இன்றும் அதே நோக்குடன் அவனை சூழ்ந்திருந்தது நால்வர் படை.

 

“டைலாக் எல்லாம் பலவருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல பேசுறமாறியே இருக்கே! நம்ம கூடவே தானேடா இருந்தான்? எப்போ அந்த மாதிரி எல்லாம் நடந்துருக்கும்?” வேண்டுமென்றே அவன் காதருகில் சத்தமாய் பேசினாள் ரீனா.

 

அசைவேனா என்றிருந்தான் அவன்!

 

“லவ்’வ்வே இல்லன்னாலும் பத்து லவ் பண்ணி கழட்டி விட்டவன் மாதிரி பேசுறான் பாரு… கத்துக்கோங்க டா அவன்க்கிட்ட!” அஜய்யை காட்டி, குரு, விவேக்கை ரீனா வம்பிழுக்க, சுவாதி நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தாள்.

 

அஜய் இதற்கு எதாவது சொல்லுவான் என அவள் காத்திருக்க,

“வீட்ல கேஷுவலா கபே குடிச்சுட்டே பேசுற சீனுக்கு, எவனாவது ப்ளேசரும், ஷூவும் டிசைன் பண்ணுவானா?” என்றான் அவன் கண்களை திறவாமலே!

 

பேச்சு தொழிலை பற்றி சென்றதும் ரீனா திருதிருவென விழித்தாள். ஓரக்கண்ணில் தன் கணவன் குருவை பார்க்க, அவன் ‘நீயே சமாளி’ என கண்டுக்கொள்ளாததை போல திரும்பியதும், “குரு தான் சொன்னான், ‘ஆட்’ நல்லா ‘ஹை ஃபை’யா இருக்கனும்ன்னு…” என்று போட்டுக்கொடுத்துவிட,

 

“ஹை ஃபை’ன்னா குளிக்குறப்போ கூட கோட் சூட்டோட தான் போவீங்களோ?” என்றான் அஜய்.

 

விவேக் அருகே இருந்த சுவாதியிடம், “எங்க நம்ம கலாய்க்க ஆரம்பிச்சுடுவோம்ன்னு டாபிக் மாத்துறான் பாத்தியா?” என்று முனக, அவளும் அதை ஆமோதித்தாள்.

 

அஜய், “இந்த ஹிந்தி சீரியல் எப்பெக்ட்ல இருந்து வெளில வாங்கடா யப்பா!” என்று சொல்லிவிட்டு அவன் சேரில் இருந்து எழுந்துக்கொள்ள, இரண்டு நாட்கள் முன்னே அவனிடம் வேலைக்கு சேர்ந்திருந்த பெண்ணொருத்தி,

 

“சார், நெக்ஸ்க்ட் வீக் எடுக்க போற டெக்ஸ்டைல் ஆட்’க்கு அந்த ஹீரோயின் ஓகே சொல்லிட்டாங்க… அவங்க மேனேஜர் கிட்ட மத்த விஷயம் பேசிக்க சொன்னாங்க! அக்ரீமென்ட் ரெடி ஆனதும் சொன்னா சைன் பண்ண வரேன்னு சொன்னாங்க!” என்று ஒப்பித்தாள்.

 

அஜய் விவேக்கை ஒரு பார்வை பார்த்தான்.

 

விவேக், “டன் மச்சி! நான் பேசிக்குறேன்!” என்றான். விஷயம் முடிந்தது.

 

ஐவராய் சேர்ந்து ஆரம்பித்த தொழிலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை. ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிட மாட்டார்கள்.

 

குரு எடிட்டிங் வேலையிலும், ரீனா காஸ்டியூம் டிசைனிலும் இருந்தார்கள்.

 

சுவாதி கான்செப்ட் வொர்க் மற்றும் லொகேஷன் செட்டிங்கில் இருக்க, விவேக் வெளிப்புற தொடர்புகளில் இருந்தான்.

 

மற்ற வேலைகளுக்கு எல்லாம் ஆட்கள் இருக்க, கடந்த ஐந்து வருடங்களாய் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டப்படும் பல விளம்பரங்கள் இவன் ‘பேனரில்’ உருவானதாக தான் இருந்தது.

 

லாகிக் இடிக்காத கான்செப்ட், கொடுக்கும் காசுக்கு மேல் கூவாத நடிப்பு, ரத்தின சுருக்கமான வசனங்கள்… இதெல்லாம் அஜய் எடுக்கும் விளம்பரங்களின் ஸ்பெஷல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!