Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vaazhkai Vaazha Thaanae

SECOND LINK வாழ்கையே வாழ தானே

சேரை விட்டு எழுந்தவன் அங்கும் இங்கும் உடலை வளைத்து நெட்டிமுறித்தபடி நான்கெட்டுகள் எடுத்து வைக்க, “பாரு, இப்படி வயசான காலத்துல தனிமரமா நீ கஷ்டப்படுறதை பார்த்து சுவாதி கண்ணுல இருந்து ரத்தமே கொட்டுது!” அந்த குழுவிலேயே சற்று சாந்தமான சுவாதியை எப்போதும் போல ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு அஜய்யை சீண்டினான் குரு.

 

“ரொம்ப அக்கறைப்பட்டு செவுத்துல முட்டிக்காதீங்க டா! சிங்கிளா இருந்தாலும் நான் ஹேப்பியா இருக்கேன்! கமிட்டட்’ஆ இருந்தாலும் நீங்க நிம்மதியா இல்ல…” அஜய் அப்படி சொல்ல,

 



Advertisement

“எல்லா சிங்கிளும் இதை ஒன்னையே தான் டா சொல்றானுங்க!” என்றான் விவேக். குரு அவனுக்கு ‘ஹை ஃபை’ கொடுக்க,

 

“சும்மா இருங்கடா!” என்று அவர்களை அதட்டிய சுவாதி, “அஜய், அம்மா காலைல கூட கால் பண்ணாங்க! அவங்களுக்கும் வயசாகுது! உன் அண்ணன், அக்கா எல்லாம் செட்டில் ஆகிட்டாங்க! நீ மட்டும் இப்படியே இருக்கிறது அவங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்றாள்.

Advertisement

 

Advertisement

“அதான் அண்ணன், அக்கா அவங்க விருப்பப்படி இருக்காங்கல்ல? என்னை என் இஷ்டப்படி விடாம எதுக்கு இப்படி இம்சை பண்ணணும்?” குரலில் எரிச்சலோ, கோபமோ இன்றி விட்டேத்தியாய் பேசினான் அஜய்.

 

நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

Advertisement

 

குரு, “ஏன்டா? உனக்கு இந்த பொண்ணுங்க மேல எல்லாம் ஆசையே வந்தது இல்லையா?” அஜய்யை குறுகுறுவென பார்த்துக்கொண்டே அவன் கேட்க, அருகே கிடந்த தெர்மாக்கோல் அட்டையை தூக்கி அவன்மீது வீசிய அஜய்,

“தெரியும் நாயே, நீ எங்க சுத்தி எங்க வரன்னு!!!” என்றான் லேசான கடுப்புடன்.

 

அவன் அடியில் இருந்து விலகி குதித்த குரு, “பின்ன, எட்டு கழுதை வயசாகியும் கல்யாணம் வேண்டான்னா, உனக்கு ஏதோ கோக்குமாக்கா கோளாறு இருக்குன்னு தான் நினைக்க தோணும்” என்றான்.

 

“அரே பக்வான்! இன்னைக்கு ஏன்டா சுத்தி உட்காந்து எனக்கு எப்போ நலுங்கு வைக்குறதுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க?” அஜய் அலுத்துப்போனவன் போல கேட்க, நால்வருக்கும் மாற்றி மாற்றி அழைப்பு விடுத்து, ‘நீங்கள்லாம் குடியும் குடித்தனமுமா இருந்துக்கிட்டு என் புள்ளையை ஒத்தையில விட்டுட்டீங்களே!’ என்று அஜய்யின் அன்னை பேசிய பேச்சு தான் காரணம் என சொல்ல முடியாது நின்றனர்.   

 

அப்படியே சொன்னாலும் அவனிடம் எந்தவித பிரதிபலிப்பும் இருக்கப்போவது இல்லை!

 

அதற்காக அவன் உணர்ச்சிகள் மரத்துப்போன ரோபோ என்றெல்லாம் இல்லை. அவனது இருபத்தி எட்டு வயதில் குருபலன் கூடிவிட்டதாய் சொல்லி ஜாதகத்தை கையில் எடுத்ததும், அடுத்த ரெண்டே மாதத்தில் தந்தை தவறிவிட்டிருந்தார்.

 

அதன்பிறகு ஒருவருடம் சென்று திருமண பேச்சு ஆரம்பித்தபோது தோழன் போல உடனிருந்த தாய்மாமனின் மரணம்!

 

வருடம்கழித்து மீண்டும் திருமண பேச்சு வந்தபோது, ‘கொஞ்சம் கேப் விடுங்க!’ என்றிருந்தான் இவன்.

 

அப்போது விட்ட ‘கேப்’ பெரிய ‘கேப்’பாகி அவன் முப்பத்தி ஐந்தை தொடும்வரை வந்துவிட்டது.

 

முதலில் திருமண பேச்சு எடுக்கும்போதெல்லாம் ஆர்வமாக தான் இருந்தான். ஆனால், வருடம் போக போக, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்ற மனநிலை, அவனறியாமலே!

 

அந்த நால்வரை விட்டு சற்றே தள்ளி ‘செட்டை’ கழட்டிக்கொண்டிருந்தவர்களிடம் சென்றவன், வேலை தொடர்பாய் பேச, அதுவரை இவர்கள் சம்பாஷணையை கேட்டும் கேளாமல் கேட்டுக்கொண்டிருந்த ‘நியூ ஜாய்னி’ ஆர்வ மிகுதியில்,

 

“சார்’க்கு லவ் பெய்லியரோ?” என்று கேட்டு வைத்தாள். (artignition.com)

 

ஒருநொடி நால்வர் கண்களும் அஜய்யை நோக்க, மறுநொடி ‘குபீர்’ரென்ற சிரிப்பு!

 

அவள் கேட்ட கேள்வி அஜய் செவிகளையும் அடைந்து தான் இருந்தது.  

 

‘ஐயோ…போச்சே!!!’ என அவன் நினைத்த நேரம் ஆரவாரமாய் கேட்டது அவர்களின் சிரிப்பொலி.

 

கேள்வி கேட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

‘நம்ம தப்பா கேட்டுட்டோமா?’ என நினைக்கும் அளவுக்கு இருந்தது அவர்களின் நடவடிக்கை.

 

சிரித்து ஓய்ந்த கும்பல், “லவ் பெய்லியர்? ஹாஹா!” என மீண்டும் கிண்டலடிக்க,

 

“வந்தேன்னு வையு! அடுத்த முறை காட்ட பல்லு இருக்காது பாத்துக்க!” என மிரட்டினான் அஜய் அங்கிருந்தே! அதற்கும் சிரிப்பே!

 

அஜய்க்கு தன் கேள்வியில் கோபம் வந்துவிட்டதோ என லேசாக பதறி போனாள் அவள். என்ன இருந்தாலும் ‘பாஸ்’ ஆய்ற்றே! ஒரு வேளை ‘வேலை’ போய்விட்டால், திரும்ப இப்படியொரு பெரிய ‘பேனர்’ கிடைக்குமா என்பதே குதிரை கொம்பு எனும்போது அவள் மிரளவே செய்தாள்.

 

அவள் பயத்தை உணர்ந்தானோ என்னவோ, “அவங்க சும்மா என்னை ‘டீஸ்’ பண்றாங்க! யூ ஜஸ்ட் பி கால்ம்!” என்றான் அஜய்.

 

அதற்கும் ரீனா, “பொண்ணுங்க மனசை படிக்குறானாமா…!” என்று வாற, “அதான் ஏற்கனவே ஒருக்க நல்லா படிச்சுட்டு போய் வாங்கிக்கட்டுனானே!?” என்றான் குரு. மீண்டும் ஒரு ‘ஹை ஃபை’ ஆண்களுக்குள்.

 

அஜய் கோபமின்றி பேசவும் பயம் தொலைத்த அப்பெண், இப்போது ‘பாஸ்’ஸின் கதை அறிய ஆர்வமானாள்.

 

“டேய் அடங்குங்கடா!” என அஜய் அடக்கியும்  அடங்காத ஆண்கள்,

 

“அவன் சுமார் பத்து வருஷத்துக்கு முன்ன…” என்று துவங்க,

 

“ஒன் ‘டிகேட்’ முன்னாடியா?” என அதற்கே வாயை பிளந்தாள் பெண்.

 

“ஆமா, அப்போ உங்க ‘சார்’க்கு சுமார் இருபத்தி அஞ்சு வயசு இருக்கும்! கம்பெனி ஆரம்பிச்ச புதுசு! வில்லேஜ் ஸ்டைல்ல ஒரு ‘ஆட்’ பண்ணனும்ன்னு ‘லைவ் லொகேஷன்’ பார்க்க ஒரு ஊருக்கு போனான்…” குரு நிறுத்த,

 

“போனவன், என்ன பண்ணிருக்கணும்? லொகேஷன் மட்டும் பார்த்துருக்கணும்! அதவிட்டுட்டு ஒரு பொண்ணை பாத்தேன், அவ கண்ணை பாத்தேன்… கண்ணுல ரெண்டு வெங்காயாத்தை பாத்தேன்னு அவ பின்னாடி சுத்துனா… சும்மா விடுவானுங்களா?” என்றான் விவேக்.

 

“அச்சச்சோ… அப்புறம் என்னாச்சு!?”

 

அஜய், “டேய்…..ஈஈஈ” பல்லை கடித்தான்.

 

அஜய்க்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தால் பார்க்கும் பத்து பேரில் ஏழு பேர் இதே கேள்வியை தான் கேட்பர், ‘லவ் பெய்லியரோ?’ என்று!

 

இதை அஜயிடம் மட்டும் கேட்டால் பிரச்சனையில்லை. ஆனால், இவன் கூட்டாளிகளுடன் இருக்கையில் யாரேனும் கேட்டால்….. அவ்வளவுதான்!   

 

இதோ இப்போது போல, இவனை கோமாளியாக்கி படம் ஓட்ட ஆரம்பித்து விடுவர்.

 

“அப்பறம் என்ன ஆச்சா? அந்த பொண்ணு பின்னாடியே ப்ரொபோஸ் பண்ணலாம்ன்னு  போயிருக்கான்! பொண்ணை பார்த்த ஆர்வத்துல இவன் பின்னாடி வந்த அவ அண்ணங்காரனை பார்க்கல இந்த ரோமியோ!

 

அந்த பொண்ணு கிட்டப்போய் இவன் ‘ஹாய்’ சொன்னது மட்டும் தான் தெரியும்! அடுத்து அரைமணி நேரத்துல இவனை அக்கக்கா பிரிச்சு தோரணம் கட்டி பஞ்சாயத்துல நிப்பாட்டிட்டானுங்க!” என்று சொல்லிவிட்டு அடக்கமாட்டாமல் சிரித்தான் விவேக்.

 

கூடவே மூவரும் சிரிக்க, திரும்பி பார்த்தால் அஜய்யும் தன் சிரிப்பை மறைத்துக்கொண்டிருந்தான்.

 

‘இவர் அடி வாங்குனது என்ன அவ்ளோ பெரிய காமெடியா இவங்களுக்கு?’ என்று பேந்த பேந்த அந்த பெண் முழிக்க,

 

“பஞ்சாயத்துல மூஞ்சி முகரை வீங்கிப்போய் நின்னவனை பார்த்து சொன்னா பாரு அந்த பொண்ணு ஒரு வார்த்தை…..” குரு குலுங்கி குலுங்கி சிரித்தான்.

 

“என்ன சொன்னாங்க!?”

 

மூவரும் தீவிரமாய் சிரிக்க, “அடிக்காதீங்க… பாவம் அந்த அங்கிள்… விட்டுடுங்க!’ன்னு சொல்லுச்சு அந்த பொண்ணு” என்றாள் சுவாதி.

 

இப்போது கேள்வி கேட்ட பெண்ணுக்கே சிரிப்பு உதடு தாண்டி குதித்தது.

 

“அவ்ளோ சின்ன பொண்ணா அது!?”

 

ரீனா, “பன்னெண்டாம் கிளாஸ் லீவுக்கு பாட்டி ஊருக்கு வந்த புள்ள அது!” 

 

“இருந்தாலும் ‘அங்கிள்’ கொஞ்சம் ஓவர்! அட்லீஸ்ட் ‘அண்ணன்’ன்னு சொல்லிருக்கலாம்!” என்றவள் சொல்ல, அஜய் உர்ரென, “ஏன்……?” என்றான் பாவமாய்.

 

இப்போது அந்த நால்வர் கூட்டணியோடு அந்த பெண்ணுமே சேர்த்து சிரிக்க,

 

“இப்போ குளுகுளுன்னு இருக்குமே நாலு பேருக்கும்!” என்றான்.

 

“டப்பா குள்ள இட்லி… டப்பா குள்ள இட்லி” என்றான் குரு.

 

புதியவள், “என்ன?” என்று வினவ, “டெஃப்பனைட்லி’ய தான் அந்த பரதேசி அப்படி சொல்லுது” என்றான் அஜய்.

 

“உங்கக்கூட இருந்தா செம்ம ஜாலியா இருக்கும் போலருக்கு! உங்ககிட்ட ‘பாஸ்’ ஃபீலே வரல!” என்று புதியவள் சொல்ல,

 

“இவ்ளோ நேரமா பேசியும் பேர் என்னன்னு கேட்கல பாரேன்!” என்ற சுவாதி, அவளது பெயரை கேட்க, “மீரா!” என அறிமுகமாகினாள் அவள்.

 

அவளை வேலைக்கு எடுத்தது அவர்கள் தான் ஆயினும், பெயர் நினைவுக்கொள்ளும் அளவுக்கு நியாபகத்திறன் அல்ல அவர்களுக்கு.

 

மீரா பதிலுக்கு, “அப்பறம் என்னாச்சு?” என்றாள் விட்டதில் இருந்து துவங்க.

 

“அப்பறம் என்னம்மா ஆகிருக்கும்?” என்ற விவேக் தன்  குழுவை பார்க்க,

 

நால்வரும் கோரஸாய்,

“ஊருவிட்டு ஊரு வந்து…

காதல் கீதல் பண்ணாதீங்க…

பேரு கெட்டு போச்சுதுன்னா…

நம்ம பொழப்பு என்னாகுங்க…?” என்று பாட, இம்முறை தன் பல்வரிசை தெரிய சிரித்தான் அஜய்.

 

“நாங்க இப்படி பாடிக்கிட்டே இவனை கைத்தாங்களா சென்னை கூட்டிட்டு வர,

‘சட்டை கிழிஞ்சுருந்தா…

தைச்சு முடிச்சுக்கலாம்…

நெஞ்சு கிழிஞ்சுடுச்சே…

எங்கே முறையிடலாம்…?’ ன்னு அழுதுட்டே வந்து சேர்ந்தான் இவன்” என்றான் குரு.

 

மீராவுக்கு அப்படி ஒரு சிரிப்பு… கற்பனையில் அந்த காட்சியை நினைத்து பார்த்து, நினைத்து பார்த்து சிரித்தாள்.

 

இந்த கதையை நால்வரும் சொன்ன விதத்திலேயே அவளுக்கு தெரிந்தது, வார்த்தை மாறாமல் இதை பலரிடம் பலமுறை ஒப்பித்திருக்கிறார்கள் என்று…!!

 

அதையும் எண்ணி சிரித்தவள், “ஆமா, அந்த பொண்ணு பேரு என்ன?” என்று கேட்க,

     

“ஆஹா, இந்த கேள்வியை கதை கேட்ட ஒருத்தன் கூட எங்கக்கிட்ட கேட்டதில்லையேம்மா!” என்று கைவிரித்தான் விவேக்.

 

அதற்கும் சிரிப்பு…!

 

சுவாதி, “எங்களுக்கே தெரியாது அவ பேரு!!” என்று சொன்னபோது,

 

“மாதங்கவதனா…” என்றிருந்தான் அஜய்.

 

‘அட… பார்ரா!’ என்றபடி எல்லோரும் அவனை பார்க்க,

 

குரு, “மவராசி, எந்த அங்கிளை கட்டிக்கிட்டு எத்தனை புள்ளைக்குட்டிய ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இருக்காளோ?” என்று நக்கலடிக்க, இத்தனை வருடங்கள் இல்லாமல் அஜய்யின் சிந்தையில் ‘அவள் எங்க இருப்பா?’ என்ற எண்ணம் உதயமானது.

 

அவன் சிந்தையின் அரசி… அதே நாள்… அதே நேரம்… குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்னே, இறுகிய முகத்துடன், கோபத்தை அடக்கிக்கொண்டு,

 

“எனக்கு இந்த விவாகரத்துல விருப்பமில்லை!” என்று ஸ்திரமாய் சொல்லிக்கொண்டிருந்தாள். 

 

=வாழலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!